இந்திய வானிலை ஆய்வுத் துறை வெப்ப அலைகளை (heatwaves) எவ்வாறு வரையறுக்கிறது? வெப்ப அலையின் போது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு சிறப்பு தலையீடுகள் தேவையா? பிராந்திய வேறுபாடுகள் மற்றும் சமூக-பொருளாதார வேறுபாடுகள் பற்றி என்ன?
கோடை வெப்பம் இந்தாண்டு அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department (IMD)) சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெப்ப அலை (இயல்பை விட 3.1-5 டிகிரி செல்சியஸ்) கடுமையாக உள்ளது. கிழக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு வரவிருக்கும் நாட்களில் அதிக அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அடிக்கடி வெப்ப அலைகள் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரவிற்கும் ஆபத்தை எதிர்கொள்வதற்கு இந்தியா தயாராக இருக்கவேண்டும்.
வெப்ப அலை (heatwave) என்றால் என்ன?
இந்திய வானிலை ஆய்வு மையம் இருக்கும் இடத்தின் அடிப்படையில் வெப்ப அலையை வரையறுக்கிறது. வெப்பநிலை சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை, கடற்கரையில் 37 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை அல்லது மலைகளில் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேற்பட்டதை எட்டினால், அது வெப்ப அலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
வெப்ப அலை எவ்வளவு தீவிரமானது என்பது வழக்கத்தை விட எவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. இது இயல்பை விட 4.5-6.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருந்தால், அது சாதாரண வெப்ப அலை. அதை விட வெப்பம் அதிகமாக இருந்தால், அது கடுமையான வெப்ப அலை.
அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் வெப்ப அலை (heatwave) எனவும், 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தால் அது கடுமையான வெப்ப அலை (severe heatwave) என்று அறிவிக்கப்படும். ஆனால் ஒரு பகுதியில் குறைந்தது இரண்டு இடங்களில் இது போன்ற அதிக வெப்பநிலையைப் பதிவானால் அல்லது ஒரு நிலையம் தொடர்ச்சியாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலையைப் பதிவானால் மட்டுமே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையிடும்.
வெப்ப அலைகளை நாம் எவ்வாறு சமாளிக்கிறோம்?
இந்தியாவில் வெப்ப அலைகள் மிகவும் கடுமையானதாகவும் அடிக்கடி வருவதாகவும் மாறி வருகின்றன. மாநிலம், மாவட்டம் மற்றும் நகரம் என பல்வேறு மட்டங்களில் உள்ள அரசாங்கங்கள் வெப்ப செயல் திட்டங்களை (heat action plans (HAPs)) உருவாக்கியுள்ளன. வெப்ப செயல் திட்டங்கள், வெப்பத்தின் மோசமான விளைவுகளுக்குத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெப்ப அலைகளை சமாளிக்க பல்வேறு புதிய உத்திகளை உருவாக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை 23 மாநிலங்களுக்கு வெப்ப செயல் திட்டங்களை உருவாக்க உதவுகின்றன. ஒன்றிய தரவுத்தளம் இல்லை என்றாலும், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாவட்ட அளவில் குறைந்தது 23 வெப்ப செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், வெப்ப செயல் திட்டங்கள் பொதுவாக ஒரு கட்டமைப்பை கொண்டுள்ளன. இதற்கு முன் எத்தனை வெப்ப அலைகள் ஏற்பட்டன மற்றும் கோடை வெப்பநிலையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலையைக் காட்டுவதன் மூலம் அவை தொடங்குகின்றன. நிலப்பரப்பு வெப்பநிலை போன்றவற்றையும் பார்க்கிறார்கள். பின்னர், எந்தெந்தப் பகுதிகள் மிகவும் ஆபத்தில் உள்ளன என்பதையும் உடனடியாக உதவி தேவைப்படுவதையும் மதிப்பிடுகிறார்கள். அதன் பிறகு, அவர்கள் வெப்ப அலைகளை சமாளிக்க ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள். இந்த திட்டம் வெப்ப அலைகளின் தாக்கத்தை குறைக்க பல்வேறு வழிகளை பரிந்துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை, தொழிலாளர், காவல் துறை என பல்வேறு துறைகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறது.
வெப்ப செயல் திட்டங்கள் என்ன பரிந்துரைக்கின்றன?
வெப்ப செயல் திட்டங்கள், வெப்ப அலைகளை திறம்பட நிர்வகிக்க பல்வேறு உத்திகளை பரிந்துரைக்கின்றன. வரவிருக்கும் வெப்ப அலைகள் குறித்து பொதுமக்களையும் அதிகாரிகளையும் எச்சரிக்க முன்னறிவிப்புகள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளைப் பயன்படுத்துவது அவற்றில் அடங்கும். வெப்ப அலைகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வெப்ப செயல் திட்டங்கள் பொதுக் கல்வி பிரச்சாரங்களையும் உள்ளடக்குகின்றன. கூடுதலாக, வெப்ப தங்குமிடங்கள் மற்றும் குளிரூட்டும் மையங்களை உருவாக்கவும், நீரிழப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த திட்டத்தை பரிந்துரைக்கின்றனர்.
போதுமான பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்களுடன் மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வெப்ப செயல் திட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு உதவ அவர்களுக்கு போதுமான பொருட்கள் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. நகரங்களில் மரங்களை நடுதல், குளிர்ச்சியாக இருக்க சிறப்பு கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் உட்புற வெப்பநிலையைக் குறைக்க குளிர்ந்த கூரைகளைப் பயன்படுத்துதல் போன்ற நீண்ட கால யோசனைகளையும் வெப்ப செயல் திட்டங்கள் பரிந்துரைக்கின்றன. மேலும், அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகக் குழுக்கள் மற்றும் அவசரகாலச் சேவைகள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் நன்றாகச் செயல்பட வேண்டும் என்று வெப்ப செயல் திட்டங்கள் பரிந்துரைக்கின்றன.
சிக்கலை திறம்பட நிவர்த்தி செய்வதிலிருந்து வெப்ப செயல் திட்டங்களை பலவீனப்படுத்துவது எது?
வெப்ப செயல் திட்டங்கள் நல்ல வழிகாட்டுதல்கள். ஆனால், நாட்டின் வெவ்வேறு வானிலை மற்றும் சமூக-பொருளாதார சூழ்நிலைகளைப் பொருத்துவதற்கு இன்னும் நிறைய மேம்பட்ட திட்டங்கள் தேவைப்படுகின்றன.
உள்ளூர் சூழல்: தற்போது, வெப்ப அலை எப்போது ஏற்படும் என்பதை ஒரு தேசிய அளவிலான விதி தீர்மானிக்கிறது. ஆனால், மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகரங்கள் போன்ற சிறிய பகுதிகளில் ஏற்படும் வானிலை மாற்றத்தை பற்றி நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். சில நகரங்களில் அதிக வெப்பம் இருந்தபோதிலும், அதிகாரப்பூர்வமாக வெப்ப அலைகள் இல்லை. கட்டிடங்கள், நீர் அல்லது மரங்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள், எவ்வளவு ஈரப்பதம் உள்ளது போன்ற விஷயங்கள் அனைத்தும் அது எவ்வளவு வெப்பமாக உணர்கிறது என்பதைப் பாதிக்கிறது. அது எப்படி உணர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இங்கு வாழும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். எனவே, ஈரப்பதமான வெப்பம் மற்றும் வறண்ட வெப்பம் மட்டுமல்ல, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்ட இரவுகளையும் உள்ளடக்கும் வகையில் வெப்ப அலை என்பதன் அர்த்தத்தை விரிவுபடுத்த வேண்டும். அதைச் செய்ய, வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும் வெப்பத்தை அளவிட ஒரு வழி தேவை. வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு வானிலை, மக்கள் மற்றும் கட்டிடங்கள் எவ்வாறு உள்ளன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எனவே இடத்திற்கு ஏற்றவாறு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சீரற்ற முறைகள்: பெரும்பாலான வெப்ப செயல் திட்டங்கள் திட்ட வளர்ச்சியின் போது பாதிப்புகள் மதிப்பீடு செய்யபடுகின்றன. ஆனால், பயன்படுத்தப்படும் முறைகள் மாறுபட்டன. வெப்ப அலைகளை கணிக்கக்கூடிய மற்றும் மக்கள் மற்றும் சொத்துக்களின் வெளிப்பாட்டை மதிப்பிடக்கூடிய வலுவான காலநிலை ஆபத்து மதிப்பீட்டிற்கு மாற வேண்டிய நேரம் இது. முன்னுரிமை மற்றும் இலக்கு திட்டங்களை உருவாக்க மீவெப்பப்பகுதி படமிடல் (hotspot mapping) தேவை. இது சாத்தியமானது, ஏனென்றால் இப்போது புவிசார் தரவுகளை (geospatial data) எளிதாக அணுக முடியும்.
பாதிக்கப்படக்கூடிய மக்கள்: குறைந்த வருமானம் கொண்ட சமூகங்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், உள்ளூர் சமூக காரணிகள் மற்றும் வெப்பத்தை மோசமாக்கும் உள்கட்டமைப்பு சிக்கல்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட திட்டங்களில் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவின் முறைசாரா பொருளாதாரம், தள்ளுவண்டி விற்பனையாளர்கள், சாய்வாலாக்கள், வீட்டு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற வேலைகளை உள்ளடக்கியது, அதன் பொருளாதாரத்தில் 90% க்கும் மேல் பிரதிநிதித்துவம் செய்கிறது. வெப்ப அலைகளை பொது சுகாதாரப் பிரச்சினையாகக் கையாள, வெவ்வேறு சமூக-பொருளாதார சூழ்நிலைகளை அங்கீகரிக்கும் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
வெப்ப செயல் திட்டங்களுக்கான வள ஒதுக்கீடு உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களைப் பொறுத்து மாறுபடும். வெப்ப செயல் திட்டங்களுக்கு குறிப்பிட்ட வரவு செலவுத் திட்டங்களை மற்றும் நிதி வழிமுறைகளை உருவாக்க அரசாங்கங்கள், குடிமை சமூக குழுக்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே விவாதங்களை எளிதாக்குவது முக்கியம். இந்த வழிமுறைகள் முறைசாரா தொழிலாளர்களின் வருமானத்தை பாதிக்காமல் அவர்களை வெப்ப அலைகளின் போது பாதுகாக்க வேண்டும்.
தற்போது, வெப்ப செயல் திட்டங்கள் வரையறுக்கப்பட்ட நிதியுடன் சுயமாக செயல்படுகின்றன. நகர்ப்புற பின்னடைவு மற்றும் காலநிலை தழுவல் ஆகியவற்றிற்கான பரந்த திட்டங்களில் அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் வளங்களை இணைப்பது நிகழலாம். இந்த ஒருங்கிணைப்பு வெப்ப செயல் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்தலாம், தரவு சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தலாம் மற்றும் காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும்.
இறுதியாக, வெப்ப செயல் திட்டங்கள் (heat action plans (HAPs)) நீண்ட கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலும், அவை முக்கியமாக குளிர்ந்த கூரைகள் போன்ற கட்டிட உள்கட்டமைப்பை பயன்படுத்த வலியுறுத்துகின்றன. பச்சை மற்றும் நீல இடங்களைப் பற்றி பேசுகிறார்கள். வெப்ப செயல் திட்டங்களின் செயல்திறனை மேம்படுத்த, வெப்பமான பகுதிகளில் வெப்ப அலைகளை தடுப்பதற்கு இயற்கையை அடிப்படையாக கொண்ட திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இந்து கே.மூர்த்தி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தில் காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறைக்கு தலைமை தாங்கும் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார்.
சாஹில் மேத்யூ Center for Study of Science, Technology and Policy (CSTEP) இல் காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை துறையில் ஆய்வாளராக உள்ளார்.