பசுமை உற்பத்தி மற்றும் மின்கலம் (Battery) விலையில் ஏற்பட்ட பெரும் சரிவு காரணமாக, ஜி20-ல் உள்ள வளரும் நாடுகள் அதிக மூலதனத்தை நம்பி இருக்க வேண்டியதில்லை.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரும்பாலும், ஆற்றல் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதிலிருந்து மாறுவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றன. இதன் விளைவாக, பெரும்பாலான காலநிலை நிதி மதிப்பீடுகள் (climate-finance assessments) இத்தகைய மாற்றத்திற்கான செலவுகளை ஆய்வு செய்து, தூய்மையான மின் உற்பத்தி மூலங்களைப் பயன்படுத்த பெரிய முதலீடுகள் தேவை என்று தீர்மானித்துள்ளன.
ஆனால், ஒரு புதிய ஆய்வுக் கட்டுரையில், G20 அமைப்பில் உள்ள வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களுக்கு (EMEs - emerging-market economies) எரிசக்தித் துறையைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற்றுவது ஒப்பீட்டளவில் கட்டுபடியாகக்கூடியது என்று நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் (அர்ஜென்டினா, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி) உள்ள மின்சாரம், சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு (steel) துறைகளில் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க 2022 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலநிலை நிதித் தேவைகள் ஒரு ஆய்வின் மூலம் அளவிடப்படுகிறது. இந்த நான்கு துறைகளும் ஒட்டுமொத்த உமிழ்வுகளில் சுமார் பாதி அளவையே கொண்டுள்ளன.
தொடக்கத்தில், தூய்மையான எரிசக்தி மாற்றம் நிலையான வேகத்தில் முன்னேறி வந்தது. இந்த ஒன்பது வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களிலும் (EMEs - emerging-market economies) கார்பன்-டை-ஆக்ஸைட் உமிழ்வில் மின் உற்பத்தித் துறை சுமார் 27 சதவீதம் ஆகும். இந்த நாடுகள் உலகளாவிய மின் உற்பத்தித் துறை உமிழ்வில் ஒட்டுமொத்தமாக 44 சதவீதத்தைக் கொண்டுள்ளன. அதிகரித்து வரும் எரிசக்தி தேவை மற்றும் காலநிலை இலக்குகளைப் பூர்த்தி செய்ய, இந்த நாடுகள் மின் உற்பத்தியில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதிலும், அவற்றைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலங்கள் மூலம் மாற்றுவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.
2023 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட திறனில் தூய்மையான எரிசக்தியின் பங்கு 54 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவற்றின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் இரு மடங்காக, அதாவது, 2,150 ஜிகாவாட்டிலிருந்து (gigawatts) 4,220 ஜிகாவாட்டாக (gigawatts) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அங்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு முறையே 45 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாகவும் 25 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாகவும் உயரும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதன் பங்கு 55 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் (இந்தோனேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தவிர) ஏழு நாடுகளில், 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த நிறுவப்பட்ட மின் திறனில் பாதிக்கும் மேலானவை புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து பெறப்படும் என்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் விரைவான தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் பசுமை உற்பத்தியில் சீனாவின் பெரிய அளவிலான முயற்சி ஆகியவை சூரிய மற்றும் காற்றாலைப் பண்ணைகளை நிறுவுவதற்கான செலவைக் கணிசமாகக் குறைத்ததால் இது சாத்தியமானது. உலக அளவில், 2010 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் நிறுவப்பட்ட சூரிய PV (Photovoltaic) மற்றும் நிலப்பரப்பு காற்றாலைகளின் செலவு முறையே 83 சதவீதம் மற்றும் 42 சதவீதம் குறைந்துள்ளது.
கூடுதலாக, புதுமை மற்றும் குறைந்த மூலப்பொருட்களின் விலையால் உந்தப்பட்டு, மின்கலங்களின் (Battery) விலையும் குறைந்துள்ளது. 2010 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கு இடையில் சுமார் 90 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்களும் இப்போது மிகவும் மலிவாக உள்ளன என்றும் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில், இதற்குச் சாதகமான நிலப்பரப்பு நிலைமைகள், குறைந்த உழைப்பு மற்றும் பொருள் செலவுகள், மற்றும் ஒப்பீட்டளவில் சீராக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் அனுமதி செயல்முறைகள் ஆகியவை காரணமாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைந்து வருவதால், G20-ன் வளர்ந்துவரும் பொருளாதாரங்களுக்கு மின் உற்பத்திக்கு 2024 மற்றும் 2030-ஆம் ஆண்டுக்கு இடையில் காலநிலை நிதியாக $121 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்கின்றனர். இது வழக்கமான வணிகச் சூழ்நிலையில் தேவையான முதலீட்டிற்கு அதிகமானது என்றும் கூறுகின்றனர். குறிப்பிட்ட மதிப்பீடுகளின்படி, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் நிலையங்களுக்கான மூலதனச் செலவு இந்தக் காலகட்டத்தில் $156 பில்லியன் குறையும் என்றும் அதே சமயம் தூய்மையான மின்சாரத்திற்கான செலவு $277 பில்லியன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான மின் மூலதனச் செலவினத்தில் இந்தியாவும் சீனாவும் முறையே $43 பில்லியன் மற்றும் $52 பில்லியன் சேமிக்கும். ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அத்தகைய செலவினங்களை முறையே $90 பில்லியன் மற்றும் $102 பில்லியன் அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
சேமிப்புக்கான செலவுகள்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்புச் செலவுகள் (மின்கலம் மற்றும் உந்தப்பட்ட சேமிப்பு இரண்டும்) இந்த வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்குக் கூடுதலாக $28 பில்லியன் மூலதனச் செலவை ஏற்படுத்தும். இதனால் 2024-30-ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த காலநிலை நிதித் தேவை $149 பில்லியனாக, அதாவது ஆண்டுக்கு $21 பில்லியனாக அதிகரிக்கும் என்கின்றனர். சீனாவைத் தவிர்த்து, மீதமுள்ள எட்டு வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களுக்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதற்கு ஒட்டுமொத்தமாக (சேமிப்புச் செலவுகள் உட்பட) $94 பில்லியன், அதாவது, ஆண்டுக்கு $13 பில்லியன் காலநிலை நிதி தேவைப்படும் என்று கணக்கிடப்படுகிறது.
இந்த மதிப்பீடுகள், மின்சாரக் கட்டமைப்புகளைத் தூய்மையான எரிசக்தி மூலங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான கூடுதல் செலவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் பெரிய அளவிலான வளர்ச்சியும், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக ஆற்றல் தேவையை அதிகரிக்கக்கூடும் என்கின்றனர்.
வளர்ந்துவரும் ஒன்பது நாடுகளின் சந்தை பொருளாதாரங்களில் (EMEs), மின் துறையைத் தொடர்ந்து கார்பன் அற்றதாக்க அதிகபட்ச காலநிலை நிதி – மொத்த மதிப்பீட்டில் 38 சதவீதம் அல்லது $57 பில்லியன், இந்தியாவுக்குத் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதேநேரத்தில், சீனாவுக்கு இதைவிடச் சற்றுக் குறைவாக, சுமார் $55 பில்லியன் தேவைப்படும் என்கின்றனர். ஏனெனில், நிறுவப்பட்ட கொள்ளளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு அதிகரிப்பு சீனாவைவிட இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காலநிலை நிதியின் சதவீதமானது தென் ஆப்பிரிக்காவில் 0.25 சதவீதத்துடன் அதிகபட்சமாக இருக்கும், அதைத் தொடர்ந்து இந்தியா (0.13 சதவீதம்) மற்றும் மெக்சிகோ (0.09 சதவீதம்) இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எரிசக்தி மாற்றத்திற்கு நிதியளிக்க அதிக மூலதனம் தேவைப்படும் என்ற ஒருமித்த கருத்து எழுந்தது. ஆனால், இடைப்பட்ட ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை வியத்தகு முறையில் குறைந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளபட்ட ஒன்பது வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் சாலைப் போக்குவரத்து, சிமென்ட் மற்றும் எஃகு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், மின் துறையானது, சேமிப்புச் செலவுகள் மற்றும் குறைந்த புதுப்பிக்கத்தக்கச் சுமை காரணிகளைக் கணக்கில் கொண்டபிறகும்கூட, எதிர்காலத்தில் மிகக் குறைந்த அளவு காலநிலை நிதி தேவைப்படும் என்கின்றனர். இப்போது, வளர்ந்துவரும் சந்தை பொருளாதாரங்களில் ஆற்றல் அமைப்பைக் கார்பன் அற்றதாக்குவது மிகவும் மலிவானதாகிவிட்டதால், அவ்வாறு செய்யாமல் இருக்க எந்த காரணமும் இல்லை என்று ஆய்வின் மூலம் தெரிவிக்கின்றனர்.
மோகன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் கெளரவத் தலைவர் மற்றும் சிறந்த ஆய்வாளர்,. ராஜ், மூத்த ஆய்வாளராக உள்ளார்.