உயர் நீதிமன்றமும் குடும்ப நீதிமன்றமும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் “இந்துமயமாகிவிட்டதா” என்பதைக் குறித்து ஆலோசிக்கவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக் கொண்டன.
இந்தியாவில் உள்ள பட்டியல் பழங்குடி (Scheduled Tribe) சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையேயான திருமணம், இந்து சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி நடத்தப்பட்டால், அது 1955-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் (Hindu Marriage Act (HMA)) வரம்பிற்கு உட்பட்டது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நவம்பர் 4-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
"புனித நெருப்பை வணங்குதல், மாங்கல்யம் மற்றும் மெட்டி அணிதல், மற்றும் சப்தபதி (ஏழு அடிகள்) ஆகிய அத்தியாவசிய இந்து சடங்குகளை நடத்தியது, இந்தத் திருமணம் இந்து சடங்குகளின் அனைத்து அடையாளங்களையும் தாங்கி நிற்கிறது என்பதைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது" என்று நீதிபதிகள் அனில் க்ஷேதர்பால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.
இந்து திருமணச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் மூலம் இந்த வழக்கு எழுந்தது. பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் பழங்குடி வழக்கச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்குப் இந்து திருமணச் சட்டம் பொருந்தாது என்றும் கணவர் தரப்பில் இருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தக் கணவனும் மனைவியும் உண்மையில் இந்து வழக்கங்களின்படி திருமணம் செய்து கொண்டனர் என்ற குடும்ப நீதிமன்றத்தின் கருத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பழங்குடியினரை நிர்வகிக்கும் சட்டங்கள் யாவை?
இந்து, பௌத்த, சமண மற்றும் சீக்கியர்களுக்கான தனிப்பட்ட சட்டங்கள் இந்து வாரிசு சட்டம், 1956 மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டங்களில் குறியிடப்பட்டுள்ளன. ஆனால் சட்டத்தின் பிரிவு 2(2), “இந்த சட்டத்தில் எதுவும் எந்த அட்டவணை இனத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் பொருந்தாது…மத்திய அரசு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் அறிவித்தால் தவிர” ஒரு தெளிவான விதிவிலக்கை உருவாக்குகிறது. லம்பாடா (பஞ்சாரா) சமூகத்திற்கு இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதன் பொருள் என்னவென்றால், இந்தப் பழங்குடிச் சமூகத்தின் உறுப்பினர்கள் அவர்களின் சொந்த பழக்கவழக்கங்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அவை, உள்ளூர் சார்ந்தவை மற்றும் குறியிடப்படாதவை. இருப்பினும், இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 3-ஆனது "வழக்கம்" என்பதை, "நீண்ட காலமாகத் தொடர்ந்து மற்றும் ஒரே சீராகக் கடைப்பிடிக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட உள்ளூர் பகுதி, பழங்குடி, சமூகம், குழு அல்லது குடும்பத்தில் இந்துக்களிடையே சட்டத்தின் சக்தியைப் பெற்றுள்ள" ஒன்றாக அங்கீகரிக்கிறது. வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும், அது ஊகிக்கப்பட முடியாது என்பதால், தெளிவான சான்றுகளால் வழக்கம் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
இந்த வழக்கில் சான்றுகளை நிரூபிக்க வேண்டியதன் சுமை முக்கியமானது.
இந்த வழக்கின் முக்கியப் பிரச்சினை, இந்து திருமணச் சட்டத்தின்கீழ் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து மனுவின் நிலைத்தன்மையைச் சுற்றி வந்தாலும், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் திருமணம் இந்து திருமணச் சட்டத்தின்கீழ் முறைப்படி நடத்தப்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆலோசிக்க வேண்டியிருந்தது.
இந்துமுறைத் திருமணமாக எப்படிக் கருதப்படுகிறது?
ஒரு இந்து திருமணம் "ஏதாவது ஒரு தரப்பினரின் வழக்கமான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின்படி" நடத்தப்படலாம் என்பதை இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு-7 அங்கீகரிக்கிறது. அத்தகைய சடங்குகளில் "சப்தபதி" அல்லது புனித நெருப்பைச் சுற்றி ஏழு அடிகள் எடுத்து வைப்பது ஆகியவை அடங்கும். ஏழாவது அடி எடுத்து வைக்கப்பட்டவுடன் திருமணம் நிறைவுபெறுகிறது.
"இச்சட்டம் சப்தபதிக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்குகிறது, ஆனால் இது ஒவ்வொரு இந்து திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கும் கட்டாயமாக்கவில்லை" என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 7-ன் நோக்கம் "இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இந்து சமூகங்களிடையே கடைபிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பது, மதிப்பது மற்றும் பாதுகாப்பதாகும்" என்று கூறப்பட்டுள்ளது.
"அத்தகைய பழக்கவழக்கங்கள் பழமையானவை, உறுதியானவை, தொடர்ச்சியானவை மற்றும் சீரான முறையில் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் ஒரு திருமணத்தின் அத்தகைய செல்லுபடியாகும் தன்மை, சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளைப் பொறுத்தது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்றங்கள் குறிப்பட்டவை என்ன?
குடும்ப நீதிமன்றத்தின் கருத்துக்களை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இரு நீதிமன்றங்களும் ஒட்டுமொத்தமாக லம்பாடா (Lambada) சமூகம் "இந்துமாயமாகிவிட்டதா" (Hinduised) என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை. மாறாக, குறிப்பிட்ட அந்தத் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டதா இல்லையா என்பதற்குத் தங்கள் தீர்ப்புகளின் வரம்பைக் குறைத்துக்கொண்டன.
நீதிமன்றங்கள் தங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களையே பெரிதும் நம்பியிருந்தன. கணவர் தனது திருமணப் படங்கள் திருமணத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டவை என்று வாதிட்டாலும், புகைப்படங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அந்தக் கூற்றை ஆதரிக்கும்படியாக எந்த ஆதாரமும் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் "நிகழ்தகவுகளின் பெரும்பான்மையை" (preponderance of probabilities) அடிப்படையாகக் கொண்டு, புகைப்படங்கள் உண்மையான திருமண சடங்குகளைப் பிரதிபலிக்கின்றன என்றும் நீதிமன்றங்கள் குறிப்பிட்டன.
மனுதாரர்கள் இந்து மதத்திற்கு மாறவில்லை என்ற மேல்முறையீட்டாளரின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மேல்முறையீட்டாளர் லம்பாடா சமூகத்தின் பழக்கவழக்கங்களின்படி திருமணம் நடத்தப்பட்டதாக பிரமாணப் பத்திரத்திலோ அல்லது குறுக்கு விசாரணையிலோ கணிசமாகக் காட்டவில்லை அல்லது நிராகரிக்கவில்லை என்பது தெளிவாகிறது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியது.
இந்து திருமணச் சட்டத்தின் (பிரிவு 2(2)-ன் கீழ் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரை விலக்குவது அவர்களின் வழக்கமான சட்டங்களைப் பாதுகாப்பதற்காக மட்டுமே என்றும் அவர்கள் தாங்களாகவே இந்து நடைமுறைகளைப் பின்பற்றும்போது குறியிடப்பட்ட சட்டப் பாதுகாப்புகளை அணுகுவதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது அல்ல என்றும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்தத் தம்பதியினர் கல்வி கற்றவர்கள், பாரம்பரிய பழங்குடி குடியிருப்புகளுக்கு வெளியே வசித்தவர்கள், மற்றும் சமூகரீதியாக ஒருங்கிணைந்தவர்களாகத் தோன்றியவர்கள் என்றும் அமர்வு குறிப்பிட்டது. இந்தக் காரணிகள் அவர்களின் திருமணம் இந்து சடங்குகளின்படி நடத்தப்பட்டது என்ற முடிவை ஆதரிக்கும் வகையில் இருந்தன என்றும் குறிப்பிட்டது.
உச்சநீதிமன்றத்தின் முன்மாதிரி தீர்ப்பு
இரண்டு நீதிமன்றங்களும், லபீஷ்வர் மஞ்சி எதிர். பிரான் மஞ்சி (2000) வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டின. தாங்களாகவே முன்வந்து இந்து மதச்சடங்குகளைப் பின்பற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் இந்து சட்டத்தின் வரம்பிற்குள் வருவார்கள் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அந்த வழக்கு, ஒரு ‘சந்தால்’ இனத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்திலிருந்து எழுந்தது. இறந்து போன அந்த ஆணின் மனைவிக்கு வழங்கிய சொத்துக்களை எதிர்த்து, சந்தால் பழங்குடிச் சட்டத்தின்படி, பெண்கள் சொத்துரிமை பெற முடியாது என்று இறந்த ஆணின் உறவினர் ஒருவர் வாதிட்டார்.
அதற்குப் பிறகு, விசாரணை நீதிமன்றமும் முதல் மேல்முறையீட்டு நீதிமன்றமும், அக்குடும்பம் ஏற்கெனவே "சிரார்த்தம்" மற்றும் "பிண்டம்" போன்ற சடங்குகளைச் செய்தல், இந்துப் பெயர்களைப் பயன்படுத்துதல் மற்றும் கைம்பெண் கடைமைகளைக் கடைப்பிடித்தல் போன்ற இந்து நடைமுறைகளை ஏற்றுக்கொண்டதைக் கண்டறிந்தன. “இந்த வழக்கில் எழும் கேள்வி என்னவென்றால், சந்தால் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தரப்பினர் இன்னும் தங்கள் வழக்கமான மரபுகளைத் தொடர்கிறார்களா அல்லது இந்து மயமாக்கப்பட்ட பிறகு இந்துக்களால் பின்பற்றப்படும் வழக்கங்களுக்கு மாற்றிக்கொண்டார்களா…. இந்து வாரிசு சட்டத்தின் பிரிவு 2-இன் உட்பிரிவு 2 இந்தத் தரப்பினரை அந்தச் சட்டத்தின் பொருந்துதலில் இருந்து விலக்குவதாகக் கருத முடியாது.” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரிவு 14-ன் கீழ் அந்தக் கைம்பெண் முழுமையான உரிமையாளராவார் என்றும், அவரது சொத்துரிமை செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.