பணப் பரிமாற்றத் திட்டங்கள் சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதிலும் எவ்வாறு உதவுகின்றன? -ரோஷ்னி யாதவ்

 முக்கியக் குறிப்புகள்:


—"பணம் மற்றும் பொருள்" பரிமாற்றங்களுக்குப் பல நேர்மறையான விளைவுகள் உள்ளன. இலவச உணவுத் திட்டம் பல குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க உதவியது என்பதையும், நேரடித் தலையீடுகள் பலனளிக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வேளாண் தொழிலாளர்ளுக்கு நேரடியாகப் பணம் மூலமாகவோ அல்லது மானியங்கள் மூலமாகவோ வழங்கப்படும் உதவிகளுக்கும் இது பொருந்தும்.


— மூன்று பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒன்று, இத்தகைய பரிமாற்றங்கள் நேரடிப் பொருளாதார மற்றும் சமூகப் பலனை வழங்குகின்றனவா; இரண்டு, அவை நிதிச் சமன்பாட்டைப் பாதிக்கின்றனவா; மற்றும் மூன்று, அரசின் பங்களிப்பு பற்றிய சித்தாந்தம்.


— இந்தப் பணப் பரிமாற்றத் திட்டங்கள் கிட்டத்தட்ட 10 கோடி (100 மில்லியன்) பெண்களை உள்ளடக்கியுள்ளன. இது அவர்களைத் தங்கள் கணவர்களைக் குறைவாகச் சார்ந்திருக்கச் செய்து அதிகாரமளித்துள்ளது. இது அவர்கள் பணத்தை அர்த்தமுள்ளதாகச் செலவிட உதவுகிறது. மேலும், இது குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.”


— “இலவசப் பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் மூலம்  பெண்களுக்கென்று பாதுகாப்பான போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுவதால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகுவது எளிதாகிறது. மடிக்கணினிகள், மிதிவண்டிகள் அல்லது தையல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டங்கள் சிறந்த கல்வி அல்லது வேலைவாய்ப்புக்கான வழிகளை வழங்குவதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. எனவே, 'பணம் மற்றும் பொருள்' பரிமாற்றங்கள், அவை சரியாக வழிநடத்தப்பட்டால் இந்தத் திட்டங்கள் சரியானவையே.”


— "அரசாங்கங்கள் இத்தகைய வழிகளில் அதிகமாகச் செலவழித்து, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்குக் குறைவாகச் செலவழிக்கும்போது, இந்த செயல்முறையைத் தக்கவைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. இங்கே, நிதிப் பொறுப்பு மற்றும் வரவுசெலவுத் திட்ட மேலாண்மைச் சட்டம், நிதி ஒழுக்கத்தை உறுதி செய்கிறது. ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதற்கான விதிகள் உள்ளன. பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது செலவு மற்றும் வளர்ச்சிக்கான செலவீனங்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், இத்தகைய நிபந்தனையற்ற பண அல்லது பொருள் பரிமாற்றங்கள், ஒரு உள்கட்டமைப்புத் திட்டத்தை விடச் சிறந்ததா என்பதே இங்குப் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது."


— "இது நம்மை அரசின் பங்கிற்கு இட்டுச் செல்கிறது. அதன் பங்கு நியாயமான விநியோகத்தை உறுதி செய்வதாகும். மேலும், இலவச உணவுத் திட்டம் ஒட்டுமொத்த சமூகத்திற்கு எவ்வாறு பயனளித்ததோ, அதுபோலவே பணம் வழங்குவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நேரடி வழியாகவே கருதப்படுகிறது. மாநிலங்களும் மூலதனச் செலவினங்களுக்காக (capex) நிதிகளை ஒதுக்கி வருகின்றன. ஆனால், சில சமயங்களில், நிதி இலக்குகளை அடைய இவை குறைக்கப்பட்டுள்ளன. இது, சமூகத்தில் குறைந்த சலுகை பெற்றவர்களை வறுமை நிலைக்கு மேலே வைத்திருப்பதற்கான செலவாகக் கருதப்படுகிறது."


— “நிபந்தனையற்ற பணப் பரிமாற்றங்களை உள்ளடக்கிய திட்டங்கள் பொது நன்மைக்குப் பங்களிக்கின்றன. இருப்பினும், நீண்டகாலத்திற்கு, அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை." 


உங்களுக்குத் தெரியுமா?


— அகராதியில் ‘இலவசம்’ (freebie) என்ற சொல், எந்தச் செலவும் இன்றி வழங்கப்படும் அல்லது விநியோகிக்கப்படும் ஒரு பொருள் அல்லது சேவையைக் குறிக்கிறது. ஜூன் மாதம் 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், 'இலவசங்கள்' என்ற சொல்லுக்கு எந்தச் செலவும் இல்லாமல் வழங்கப்படும் ஒரு பொது நலத் திட்டமென்கிற  வரையறையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


— இலவசங்களை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொது அல்லது தகுதிவாய்ந்த பொருட்களிலிருந்தும், பரந்த மற்றும் நீடித்த நன்மைகளைத் தரும் பிற அரசுச் செலவினங்களிலிருந்தும் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்துகிறது. இருப்பினும்கூட, பெரும்பாலும் 'தகுதிவாய்ந்த' பொருட்கள் என்று குறிப்பிடப்படும் நலத்திட்டப் பொருட்களுக்கும், இலவசங்கள் அல்லது 'தகுதியற்ற' தயாரிப்புகளுக்கும் இடையில் வேறுபாடு காண்பது ஒரு குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.


— இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்கப்படும் உணவு, கல்வி, தங்குமிடம் மற்றும் மருத்துவம், சுகாதாரம் போன்ற தகுதிவாய்ந்த பொருட்களின் முக்கியத்துவத்தை அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். இவை மனித மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதிலும், அதன்மூலம் தேசியப் பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.



Original article:

Share: