அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு POSH சட்டப் பாதுகாப்பு தேவை. உச்ச நீதிமன்றம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். -ரோஹினி நாராயணன் & சம்ராட் பாஸ்ரிச்சா

 'பணியிடம்' என்ற வரையறையிலிருந்து அரசியல் கட்சிகளை விலக்குவதன் மூலம், நீதித்துறை பெண்களின் அரசியல் பங்கேற்பு ஏற்கனவே முறையான தடைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கான பாதுகாப்புகளைக் குறைத்துவிட்டது.


பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், 2,357 ஆண்களுக்கு எதிராக 258 பெண்கள் போட்டியிடுகிறார்கள். இந்த எண்ணிக்கைகள் ஒரு கதையைச் சொல்கின்றன. ஜனநாயகம் பிரதிநிதித்துவத்தில் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் இந்திய அரசியலில் ஒரு சிறு பகுதியாகவே இருக்கிறார்கள் என்பதே அது. பஞ்சாயத்துகள் முதல் கட்சி அலுவலகங்கள் வரை, அவர்களின் பங்கேற்பு பெரும்பாலும் அடையாளப் பிரதிநிதித்துவத்தின் வடிவத்தை எடுக்கிறது. பலர் சுதந்திரமான மற்றும் செயல்திறனுள்ள அரசியல் செயல்பாட்டாளர்களாக இல்லாமல் ஆண் உறவினர்களுக்கு மாற்றாக நிறுத்தப்படுகிறார்கள்.


இந்தப் பின்னணியில், யோகமாயா எம்ஜி vs கேரளா மாநிலம் மற்றும் பிறர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கவலையை ஏற்படுத்துகிறது. செப்டம்பர் மாதம், அரசியல் கட்சிகளை பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) 2013-ன் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை நாங்கள் மாற்ற மாட்டோம் என்றும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த வார்த்தைகளுடன், பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள அரசியல் கட்சிகளுக்கு உள் குழுக்கள் இருக்க வேண்டுமா என்ற முக்கியமான பிரச்சினையை ஆராய வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்தது. இந்த முடிவு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பணியிடத்தையும் நிர்வகிக்கும் ஒரு கட்டமைப்பிலிருந்து அரசியல் கட்சிகளை  தனிமைப்படுத்தியது.


1997-ல், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாகா குழு வழிகாட்டுதல்களை (Vishaka guidelines) வகுத்தது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கவும் நிவர்த்தி செய்யவும் வழிமுறைகளை கட்டாயமாக்கியது. நாடாளுமன்றம் 2013-ல் பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தக் கொள்கைகளை சட்டமாக மாற்றியது. இருப்பினும், யோகமாயா வழக்கில், கேரள உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள் சட்டத்தின் கீழ் "பணியிடங்களாக" கருதப்படுவதில்லை என்றும், உள் புகார் குழுக்களை அமைக்க சட்டப்பூர்வமாக கட்டாயமில்லை என்றும் தீர்ப்பளித்தது.


அரசியல் கட்சியில் சேருவது தன்னார்வமானது மற்றும் சம்பளம் இல்லாதது என்றும், எனவே வேலைவாய்ப்புக்கு சமமானது அல்ல என்றும் கூறப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது அச்சுறுத்தல் அல்லது தவறாகப் பயன்படுத்துதல் போன்ற "பல சிக்கல்களை உருவாக்கக்கூடும்" என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், இத்தகைய பகுத்தறிவு, வெளிப்படையாக எச்சரிக்கையாக இருந்தாலும், சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது. இது சட்டப்பூர்வ வாசகத்தையும் சமூக உண்மைகளையும் புறக்கணிக்கிறது. சமூகத்தில் அரசியல் ஈடுபாடு பெரும்பாலும் நீடித்த, கட்டமைக்கப்பட்ட உழைப்பைக் குறிக்கிறது.


POSH சட்டத்தின் பிரிவு 2(f) ஒரு "பணியாளர்" என்பவர் தன்னார்வமாக வேலை செய்யும், ஊதியம் பெறும் அல்லது ஊதியம் பெறாத எவராகவும் இருக்கலாம் என்றும், "பணியிடத்தில்" வேலைக்காகச் செல்லும் எந்த இடமும் அடங்கும் என்றும் கூறுகிறது. சட்டமியற்றும் நோக்கம் தெளிவானதாகவும் எளிமையாகவும் இருந்தது; இருப்பினும், நீதிமன்றம் தனது தீர்ப்பை சட்டத்தின் அடிப்படையில் வழங்கத் தவறியது.


நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் அரசியல் கட்சிகளில் ஆராய்ச்சியாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிரச்சாரப் பணியாளர்களாகப் பணியாற்றுகிறார்கள். சம்பளச் சீட்டு இல்லாததால் அவர்களின் பாதிப்பு அழிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பை மறுப்பது உண்மையான பிரச்சினையைவிட தொழில்நுட்ப விவகாரங்களில் கவனம் செலுத்துகிறது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் நெகிழ்வான பணி சூழ்நிலைகளை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், யோகமாயா வழக்கு நவீன பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றுவதற்கான ஒரு சட்டத்தை கட்டுப்படுத்துகிறது.


பிரிவு 14 — தவறான நடவடிக்கைகளுக்கு எதிரான உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு (inbuilt protection against abuse)


தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த நீதிமன்றத்தின் அச்சமும் அதே அளவுக்கு தவறானது. பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் ஏற்கனவே பிரிவு 14-ன் கீழ் பாதுகாப்புகளை வழங்குகிறது. முறையான விசாரணைக்குப் பிறகு தவறான அல்லது தீங்கிழைக்கும் புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கிறது. பாதுகாப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை சட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அச்சத்தின் அடிப்படையில் முழு அமைப்பையும் விலக்குவது அவற்றின் இயல்பான கட்டமைப்பைப் பலவீனப்படுத்துகிறது.


வரலாற்றுரீதியாக, ஆழமான அடுக்குகளைக் கொண்ட படிநிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போதெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படும் என்ற அச்சம் உள்ளது. நீதிமன்றங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகள் POSH சட்டத்தின்கீழ் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் விதிவிலக்கான பலவீனத்தை உரிமை கோர முடியாது. தவறான செயல்கள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம்; நடைமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.


அரசியல் கட்சிகளுக்குள் உள்நிலை புகார் குழுக்கான (Internal Complaints Committee (ICC)) வழக்கு


ஒவ்வொரு குடிமகனும் தலைமைத்துவத்தை எட்டமுடியும் என்ற ஜனநாயக வாக்குறுதி பகுதியளவு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. 18வது மக்களவையில் பெண்கள் 13.6 சதவீதமும், மாநிலங்களவையில் சிறிதளவு அதிகமான பங்களிப்பாராக மட்டுமே உள்ளனர். 2029-ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வரவிருக்கும் ஒரு முன்னோக்கிய நடவடிக்கையாகும். ஆனால், அது போதுமானதாக இருக்காது. பிரதிநிதித்துவம் என்பது பெண்கள் அவையில் 33% இடங்களை வைத்திருப்பது மட்டுமல்ல. இது பெண்கள் பங்கேற்கவும், முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவும், தலைமைத்துவத்தில் தீவிரமாக இருக்கவும் கட்சிகளுக்குள் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வாய்ப்புகளையும் வழங்குவதன் மூலம் தொடங்குகிறது.


சரியான பாதுகாப்பு மற்றும் ஆதரவான சூழ்நிலைகள் இல்லாமல், பெண்கள் அரசியலில் பங்கேற்க போராடுகிறார்கள். இது நமது அரசியல் விவாதங்களை பலவீனப்படுத்துகிறது. முறையான ஆதரவு இல்லாமல், அவர்கள் பெரும்பாலும் அமைதியாக துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் அல்லது அமைதியாக வெளியேறுகிறார்கள். புகார்கள் எழுப்பப்படும்போது, ​​அவை தொடர்புகள் மற்றும் அதிகாரத்தால் பாதிக்கப்படும் தெளிவற்ற வழிகளில் கையாளப்படுகின்றன.


உள்நிலை பொறுப்புத்தன்மை (Internal accountability) அரசியல் அமைப்புகளுக்கு புதியது அல்ல. தொழிலாளர் மற்றும் பழமைவாத கட்சிகள் விரிவான நடத்தை விதிகளையும் தன்னிச்சையான ஒழுங்குமுறை வழிமுறைகளையும்  வைத்திருக்கின்றன. கனடாவில், பிரச்சாரங்களின்போது துன்புறுத்தல் புகார்களைக் கையாள லிபரல் கட்சிக்கு ஒரு அதிகாரப்பூர்வமான தனி அலுவலகம் (Ombudsman’s) அலுவலகம் உள்ளது. அரசியல் கட்சிகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் இயங்க முடியும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. நீதிமன்றங்கள் வரம்புகளை நிர்ணயித்திருந்தால், அவற்றை சரிசெய்ய சட்டங்களும் அமைப்புகளும் மாற்றப்பட வேண்டும்.




சிந்தனைக்கான தேவை


விசாகா வழிகாட்டுதல்கள் பணியிடத்தில், மரியாதை மற்றும் சமத்துவம் சுதந்திரத்திற்கு அவசியம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் விளக்கமும், அதை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தின் மறுப்பும், அந்தக் கொள்கையின் வரம்பைக் குறைக்கின்றன. விசாகா வழிகாட்டுதல்களைவிட பணியிடத்தில் பாலியல் வன்முறை தடுப்புச் (Prevention of Sexual Harassment at Workplace (POSH) Act) சட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தி விளக்குவது சட்டப்பூர்வ அர்த்தமுள்ளதாக இருக்காது.


உரிமைகளைப் பறிப்பது அனுமதிக்கப்படாது என்று நீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. இருந்தபோதிலும், யோகமாயா வழக்கில், பாதுகாப்புகள் அமைதியாக பலவீனப்படுத்தப்பட்டன. இது பரபரப்பான நீதிமன்றம், நேரமின்மை அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக நடந்தாலும் பரவாயில்லை.- நீதிமன்றம் அதைப் புறக்கணிக்க முடியாது.


எழுத்தாளர்கள் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள்.



Original article:

Share: