பொதுத்துறை ஊதிய முறைகள் பல ஆண்டுகளாக எவ்வாறு பரிணமித்துள்ளன? முதல் மத்திய ஊதியக் குழு எப்போது அமைக்கப்பட்டது? பல்வேறு விதிமுறைகள் என்னென்ன? சர்வதேச நடைமுறைகள் என்னென்ன? அரசு எவ்வாறு திறமையானவர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முடியும்?
ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களைத் தலைவராகக் கொண்டு, மத்திய அரசு 8-வது மத்திய ஊதியக் குழுவை (Central Pay Commission (CPC)) அமைத்துள்ளது. இதில், IIM பெங்களூருவில் உள்ள பேராசிரியர் புலக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், இந்திய அரசின் செயலாளரான பங்கஜ் ஜெயின் இந்திய ஆட்சிப் பணி உறுப்பினர்-செயலராகவும் உள்ளனர். இந்தக் குழு 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியக் குழு என்றால் என்ன?
மத்திய அமைச்சரவையின் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவின் மூலம் இந்தியாவில் ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட, அவர்களின் பல்வேறு ஊதியக் கட்டமைப்புகள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் பிற சேவை நிபந்தனைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதும், தேவையான மாற்றங்கள் குறித்து பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதும் இந்த ஊதியக் குழுவின் (CPC - Central Pay Commission) பணியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் முதல் ஊதியக் குழு 1946-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அதன் பணி வரம்புகள் என்னென்ன?
ஊதியக் குழுக்களின் பணி வரம்புகள் (Terms of Reference - TOR) மத்திய அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகின்றன. 8-வது மத்திய ஊதியக் குழுவின் பணி வரம்புகள், தனது பரிந்துரைகளை அளிக்கும்போது சில காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிதிச் சிக்கனம் (fiscal prudence) தேவை. வளர்ச்சிச் செலவினங்கள் மற்றும் நலத்திட்ட நடவடிக்கைகளுக்கான போதுமான வளங்களை உறுதி செய்ய வேண்டிய தேவை. பங்களிப்பற்ற ஓய்வூதியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாத செலவு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை வழக்கமாக ஏற்கும் மாநில அரசாங்கங்களின் நிதியில் அதன் தாக்கங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கும் தற்போதைய ஊதிய அமைப்பு மற்றும் பணி நிலைமைகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டியன என்று தெரிவிக்கின்றனர்.
சர்வதேச நடைமுறைகள் என்ன?
உலகளவில் 1970-ஆம் ஆண்டு வரை, பொதுத்துறைக்கான ஊதிய அமைப்பு, தனியார் வேலைவாய்ப்புச் சந்தையில் உள்ள இதே போன்ற பணிகளுக்கு அளவுகோல் நிர்ணயிப்பதன் மூலம் சமத்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1980-ஆம் ஆண்டுகளில், ஊதியத்தைத் தீர்மானிப்பதில் சமத்துவத்திற்குப் பதிலாக திறன் முக்கியக் கொள்கையாக மாறியிருந்தது. 1990-ஆம் ஆண்டு முதல், செயல்திறனும் ஊக்கத்தொகைகளும், அவற்றின் பெறக்கூடிய தன்மையுடன் சமநிலைப்படுத்துவதோடு, முக்கியக் கொள்கையாகின. தற்போது, பொதுத்துறை ஊதிய அமைப்புகள், பொருத்தமான திறமைகளும் நிபுணத்துவமும் கொண்ட தனிநபர்களைப் பணியமர்த்தவும் தக்கவைக்கவும் பரிணாமம் அடைந்து வருகின்றன, அதே சமயம் பொதுக் கருவூலத்திற்கான மொத்தச் செலவைக் கட்டுப்படுத்தவும் முயற்சித்து வருகின்றன.
உலகளாவிய தரநிலைகளின்படி, பொதுத்துறையில் நியாயமான ஊதியத்தின் முக்கியப் பண்புகள் தெளிவான தத்துவம், திறமையாளர்களை ஈர்க்கும் திறன், உள் சமத்துவம், வெளிப் போட்டித்திறன் மற்றும் தெளிவு ஆகியவை ஆகும். இந்தியாவில், உள்சமத்துவத்திற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், உயர் பதவிகளுக்கான ஊதியத்தைப் பொறுத்தவரை வெளிப் போட்டித்திறன் பின்தங்கியுள்ளது என்கின்றனர்.
பெரிய ஜனநாயக நாடுகளில் பொதுத்துறை வேலைவாய்ப்பின் சில அளவுகோல்களின் ஒப்பீட்டுத் தரவுகள் அட்டவணை 1-ல் சுருக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்வது முக்கியமானது. நம் நாட்டில் பொதுத்துறை வேலைவாய்ப்பும், ஊதியங்களும் வரையறுக்கப்பட்ட திறனுடன் கூடிய மிகப்பெரியவை (gargantuan) என்ற பொதுவான கருத்து நிலவுகிறது என்றாலும், மற்ற முக்கிய ஜனநாயக நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏறக்குறைய அனைத்து அளவுகோல்களிலும் குறைவாக உள்ளதைக் காணலாம்.
அடுத்தது என்ன?
ஊதியக் குழுக்களின் பணி வரம்புகளில் (Terms of Reference - TOR) சில முக்கிய அம்சங்களுக்கு கவனம் தேவைப்படுகிறது. முதலாவதாக, பொதுத் துறையின் ஊதிய அமைப்பை தனியார் துறையுடன் ஒப்பிட மத்திய ஊதியக் குழு தேவைப்படுகிறது. இது முந்தைய ஊதியக் குழுக்களிலும்கூட கவனிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறையில் உள்ள ஆரம்ப நிலை பதவிகளுக்கு, அவற்றின் தனியார் துறை ஊழியர்களைவிட கணிசமாக அதிக ஊதியம் உள்ளது, அதே சமயம் உயர் பதவிகள் மற்றும் நிபுணர் பணிகளுடன் ஒப்பிடுகையில் இது நேர்மாறாக உள்ளது. மத்திய அரசில் மிகக் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளத்திற்கான விகிதத்தை (சுருக்க விகிதம்) ஏழாவது மத்திய ஊதியக் குழுவில் 1:12.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் அரசுப் பதவிகளில் குறைந்த ஊதியத் தொகுப்பை ஈடுசெய்யும் வகையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இருப்பினும், திறமையானவர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும், சில உயர் பதவிகள் மற்றும் நிபுணர் பணிகளைப் பொறுத்தவரை இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, கற்றல் மற்றும் மேம்பாடு, பயிற்சி, மற்றும் நெகிழ்வான வேலை மற்றும் சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பணிச் சூழல் போன்ற காணப்படாத அம்சங்கள் பணி வரம்புகளின் ஒரு பகுதியாக இல்லை. ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையில் இந்த சிக்கல்களை கவனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இறுதியாக, பொருளாதார நிலைமைகள், நலனுக்காக போதுமான வளங்களை உறுதி செய்ய வேண்டிய தேவை, மற்றும் பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியளிக்கப்படாத செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்படி 8வது மத்திய ஊதியக் குழுவுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. 2025-26-ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய மசோதா, மத்திய அரசின் மொத்த வருவாய் செலவினமான ₹39.44 லட்சம் கோடியில் ₹2.76 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பரிந்துரைகளை செய்யும் போது பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் தாக்கம் அரசு கருவூலத்தில் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், நலத்திட்ட நடவடிக்கைகள் என்பவை காலப்போக்கில் உருவாகும் அரசியல் முடிவுகள் என்பதால் அவ்வப்போது புதிய திட்டங்கள் ஒன்றிய அரசால் அறிவிக்கப்படுகின்றன. இந்தக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, நீதித்துறை, கல்வித்துறை மற்றும் அதிகாரத்துவத்தில் இருந்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆணையம் இந்த தாக்கத்தை மதிப்பிடுவதற்கு பொருத்தமானதாக இருக்காது என்பதால் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுவர, நிதி மற்றும் மனிதவள நிபுணர்களுடன் ஆணையத்தை விரிவுபடுத்துவதற்கான அவசியம் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
ரங்கராஜன் ஆர், ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் தற்போது Officers IAS அகாடமியில் பயிற்சி அளித்து வருகிறார்.