தற்போதைய செய்தி:
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் தங்களுக்குள் குழுப்பணி மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வடக்கு பசிபிக் பகுதியில் திங்கள்கிழமை வருடாந்திர மலபார் கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது. இந்த சூழலில், மலபார் கடற்படைப் பயிற்சி மற்றும் குவாட் (QUAD) பற்றி அறிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள் :
1. மலபார் கடற்படைப் பயிற்சி என்பது 1992-ல் தொடங்கப்பட்ட ஒரு பலதரப்பு போர்நடத்தல் கடற்படைப் பயிற்சியாகும் (war-gaming naval exercise). இது இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியாகத் தொடங்கியது. இந்தப் பயிற்சியின் மேலும் இரண்டு பதிப்புகள் 1995 மற்றும் 1996-ல் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இந்தியாவின் அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு 2002 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
2. 2002 முதல், இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் முதன்முதலில் 2007-ல் பங்கேற்றன. ஜப்பான் 2015-ல் கடற்படைப் பயிற்சியில் நிரந்தர உறுப்பினராக இணைந்தது. மேலும், மலபார் கடற்படைப் பயிற்சி முத்தரப்புப் பயிற்சியாக மாறியது.
3. 2020ஆம் ஆண்டில், பத்தாண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக, இந்தப் பயிற்சியில் நான்கு (Quad) உறுப்பினர்களும் பங்கேற்றனர். மலபார் கடற்படைப் பயிற்சிகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக பங்கேற்றது.
4. இந்த ஆண்டு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் தொடர்பாக சில பதட்டங்கள் இருந்தபோதிலும், வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
குவாட் (QUAD)
1. நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue (Quad)) என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முறைசாரா ராஜதந்திர உரையாடலாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும், திறந்ததாகவும், வளமாகவும் வைத்திருப்பது நான்கு நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோளாகும்.
2. குறிப்பாக, டிசம்பர் 2004-ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகியவை பேரிடர் நிவாரண முயற்சிகளில் ஒத்துழைக்க ஒரு முறைசாரா கூட்டணியை உருவாக்கின. 2007-ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, இந்த கூட்டணியை நாற்கர பாதுகாப்பு உரையாடல் அல்லது Quad என முறைப்படுத்தினார்.
3. இருப்பினும், உறுப்பினர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் குவாட் என்பது சீன எதிர்ப்பு கூட்டணி என்பதைத் தவிர வேறில்லை என்ற குற்றச்சாட்டுகளால் இக்குழு தடைபட்டது. இதனால், கடல்சார் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட குவாடின் ஆரம்பகால பதிப்பு இறுதியில் மறைந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில், சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கால், நான்கு நாடுகளும் குவாடை மீண்டும் புதுப்பித்து அதன் இலக்குகளை விரிவுபடுத்தின.
4. குவாட் ஒரு பொதுவான பலதரப்பு அமைப்பைப் போல கட்டமைக்கப்படவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு செயலகம் மற்றும் நிரந்தர முடிவெடுக்கும் அமைப்பாக குவாட் உருவாக்கப்படவில்லை. கூடுதலாக, வட ஆட்ட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பை (North Atlantic Treaty Organization (NATO)) போல் இல்லாமல், குவாட் கூட்டுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளை உள்ளடக்குவதில்லை. அதற்கு, பதிலாக ஒற்றுமை மற்றும் இராஜதந்திர ஒற்றுமையின் வெளிப்பாடாக கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தத் தேர்வு செய்கிறது.
5. 2020-ஆம் ஆண்டில், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற மலபார் கடற்படைப் பயிற்சிகள், முதன்முறையாக ஆஸ்திரேலியாவையும் சேர்த்தன. இது 2017-க்குப் பிறகு முதல் அதிகாரப்பூர்வ QUAD சந்திப்பு மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு நாடுகளுக்கு இடையேயான முதல் கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
6. மார்ச் 2021 -ல், QUAD தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு செய்து, பின்னர் 'The Spirit of the Quad' என்ற தலைப்பில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். இது குழுவின் அணுகுமுறை மற்றும் நோக்கங்களை கோடிட்டுக் காட்டியது.
குவாடின் சமீபத்திய முக்கிய முயற்சிகள்
1. குவாட் புற்றுநோய் தடுப்பு முயற்சி : இந்தோ-பசிபிக் பகுதியில் புற்றுநோயிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற பொது மற்றும் தனியார் வளங்களைப் பயன்படுத்துவதற்காக குவாட் இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் (cervical cancer) கவனம் செலுத்துகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு $7.5 மில்லியன் மதிப்புள்ள மனித பாப்பிலோமா வைரஸ் (Human Papillomavirus (HPV)) சோதனை கருவிகள், கண்டறிதல் கருவிகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசிகளை வழங்கும்.
2. குவாட் முக்கியமான தனிமங்கள் முன்முயற்சி : வாஷிங்டனில் நடந்த இரண்டாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, முக்கியமான தனிமங்களுக்கான மாறுபட்ட மற்றும் நம்பகமான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தனிமங்களுக்கு ஒரு நாட்டைச் சார்ந்திருப்பது பொருளாதார அழுத்தம், விலை மாற்றங்கள் மற்றும் விநியோக சிக்கல்கள் மூலம் தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், இது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும் என்றும் கூட்டு அறிக்கை கூறியது.