இன்று 70 வயதை எட்டிய ஜிக்மே சிங்யே வாங்சுக், மலை இராச்சியத்தின் நவீனமயமாக்கலையும், இந்தியாவுடனான அதன் உறவுகளையும் வளர்க்க உதவியுள்ளார்.
பூட்டானின் முன்னாள் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக், 2025 நவம்பர் 11 அன்று 70 வயதை எட்டுகிறார். தற்போதைய பூட்டான் அரசரின் தந்தையான இவர் பிரபலமாக K4 (வாங்சுக் வம்சத்தின் நான்காவது அரசர்) என அழைக்கப்படுகிறார், அதேநேரம் தற்போது அரியணையில் அமர்ந்துள்ள அவரது மகன் ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்சுக், K5 எனக் குறிப்பிடப்படுகிறார்.
ஜிக்மே சிங்கியே வாங்சுக் தனது மக்களால் மிகுந்த மதிப்பு, வியப்பு, பெருமை மற்றும் பக்தியுடன் போற்றப்படுகிறார், அவர்கள் அவரை போதிசத்துவ அரசர் என்று அழைக்கின்றனர். அவர் 17 வயதிலிருந்து 2006-ஆம் ஆண்டு தனது மகனுக்கு ஆதரவாக விலகும் வரை பூட்டானை ஆட்சி செய்தார்.
அவர் புத்திசாலித்தனமாகவும், நேர்மையாகவும் ஆட்சி செய்ததாலும், பூட்டானை 21-ம் நூற்றாண்டில் வழிநடத்திச் சென்றதாலும், பல வழிகளில் நவீனமயமாக்கியதாலும், அவர் கிட்டத்தட்ட ஒரு புத்தரைப் போலவே மதிக்கப்படுகிறார். இப்போது, அவரது 70-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நவம்பர் 11 அன்று திம்புவில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மலைப்பாங்கான அண்டை நாடான பூட்டானின் தலைநகர் திம்புவுக்கு (Thimphu) வருகை தருகிறார்.
இரு நாடுகள், அவற்றின் நெருங்கிய உறவுகள்
பிரதமர் மோடி அவர்கள் எப்போதும் பூட்டானுடனான இந்தியாவின் உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். 2014-ம் ஆண்டில், பிரதமரான உடனேயே, அவர் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றிப் பேசியது மட்டுமல்லாமல், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டானையும் தேர்ந்தெடுத்தார். இப்போதும் கூட, பூட்டான் மக்களுக்கு அவர்களின் மன்னர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன என்பதை பிரதமர் மோடி உணர்ந்து, இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அவர்களுடன் இருப்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். அவரது வருகை இந்திய மற்றும் பூட்டான் மக்களுக்கு இடையிலான வலுவான நட்பை தெளிவாகக் காட்டுகிறது.
மன்னராக இருந்த காலத்தில், பூட்டானின் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தியவர் கே4 என்றும் அழைக்கப்படும் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆவார். சுதந்திர இந்தியா தனது நாட்டின் நெருங்கிய நண்பர் என்பதை நன்கு புரிந்துகொண்டு, பூட்டானின் சுதந்திரம் மற்றும் வாழ்க்கை முறைக்கு உண்மையான அச்சுறுத்தல்கள் இந்தியாவிலிருந்து அல்ல, வடக்கிலிருந்து வந்தன என்பதையும் அவர் உணர்ந்தார். தனது நாட்டின் சாலை கட்டமைப்பை உருவாக்க, நிர்வகிக்க மற்றும் பராமரிக்க இந்தியாவின் எல்லை சாலைகள் அமைப்பை நியமித்தவர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆவார். இன்று, பூட்டான் நிறுவனங்கள் இந்தப் பணியைத் தாங்களாகவே கையாள முடியும், மேலும் அவர்கள் இந்தப் பொறுப்பை சரியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பூட்டானின் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் திறனை மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் அங்கீகரித்தார். இந்த யோசனை பூட்டானுக்கு நிலையான வருமானத்தை உயர்த்தியுள்ளது மட்டுமில்லாமல், அதன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது.
நீர்மின்சார இராஜதந்திரம்
இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான நீர்மின்சார ஒத்துழைப்பு, பல ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வலுவான மற்றும் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. எனவே, இந்த நட்புறவின் அடையாளமாகவும், குறிப்பிடத்தக்கதாகவும், பிரதமர் மோடி மற்றும் மன்னர் ஜிக்மே கேசர் (K5) ஆகியோரால் இந்தப் பயணத்தின்போது புனாட்சங்சு-II நீர்மின்சாரத் திட்டம் முறையாகத் தொடங்கி வைக்கப்படுவது பொருத்தமானது, அடையாளமானது மற்றும் முக்கியமானது. 1,020 மெகாவாட் திட்டம் சில மாதங்களாக மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. இது பூட்டானின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்த உதவுகிறது.
முந்தைய திட்டங்களைப் போலவே, புனாட்சங்சு-II (Punatsangchhu II) இந்திய அரசாங்கத்திற்கும், பூட்டான் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கான ஆரம்ப நிதியை இந்தியா வழங்கியது. இந்த திட்டம் இந்தியாவிற்கு மின்சாரம் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தி இந்த முதலீட்டை திருப்பிச் செலுத்துகிறது. மின்சார விகிதங்கள் போட்டித்தன்மை வாய்ந்தவை மற்றும் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு சில வருடங்களுக்கும் திருத்தப்படுகின்றன.
இந்த மாதிரி இதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் எதிர்காலத்தில், இரு நாடுகளும் இதுபோன்ற நீர்மின் திட்டங்களுக்கு மூலதனத்தின் பிற ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது தனியார் மூலதனம் இப்போது பெரிய அளவில் கிடைப்பதால், வரவிருக்கும் திட்டங்கள் பூட்டான் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய தனியார் நிறுவனங்களால் கையாளப்படும். குறிப்பிடத்தக்க வகையில், டாடா பவர் மற்றும் அதானி பவர் ஏற்கனவே பூட்டானில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக இருந்தாலும் சரி, உள்கட்டமைப்பு மேம்பாடு முதல் பழைய நிறுவனங்கள் மற்றும் மடாலயங்களை மேம்படுத்துவது (renovating monasteries) வரையிலான பெரிய திட்டங்களாக இருந்தாலும் சரி, நீர் மின்சக்திக்கு அப்பாற்பட்ட மேம்பாட்டு உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்
தேசியப் பாதுகாப்பு விஷயங்களில் மன்னர் K5 தனது தந்தை மன்னர் K4-ன் வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுகிறார். பூட்டானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ராயல் பூட்டான் இராணுவத்தின் (Royal Bhutan Army (RBA)) தயார்நிலை போன்ற விஷயங்களில் K4 உடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்தியா மற்றும் அதன் ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவருக்கு வலுவான புரிதல் உள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவையும் - அதன் உந்துதல்கள், குறிக்கோள்கள் மற்றும் பூட்டான்-சீன உறவுகளுக்கு இவை என்ன அர்த்தம் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார்.
டிசம்பர் 2003-ல் ஆபரேஷன் ஆல் கிளியரை (Operation All Clear) தனிப்பட்ட முறையில் வழிநடத்தியதற்காக K4-க்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும். இந்த நடவடிக்கையின்போது, இராயல் பூட்டான் இராணுவம் (RBA) இந்திய கிளர்ச்சிக் குழுக்களின் பல நூறு உறுப்பினர்களை அகற்றியது. இந்த குழுக்கள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு அருகிலுள்ள பூட்டானின் காடுகளில் தஞ்சம் புகுந்தன. இந்தியாவின் எல்லைப் பகுதியில், இந்திய இராணுவம் இந்த கிளர்ச்சியாளர்களை விரைவாகக் கைது செய்தது. பின்னர் இராணுவம் சட்டத்தின்படி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தது.
எனவே, நவம்பர் 11 என்பது பூட்டானின் ஞானி மற்றும் மரியாதைக்குரிய முன்னாள் மன்னரின் பிறந்தநாள் மட்டுமல்ல. திம்புவில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடியின் வருகை அந்த நாளை இந்தியா-பூட்டான் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாகவும் மாற்றுகிறது.
பூட்டானுக்கான முன்னாள் இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலே, இப்போது புனே சர்வதேச மையத்தில் ஒரு அறங்காவலராக உள்ளார்.