இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவரது பதவிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் இறுதி நாட்கள் இந்த வாரம் என்பதால், இவர் மே 2016-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று முக்கியப் பங்காற்றியபோது, ஏற்பட்ட சில முக்கியமான தீர்ப்புகள் மற்றும் முன்னேற்றங்களைப் பற்றி சிந்திப்போம்.
தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை அங்கீகரிப்பது, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்குவது மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தைத் தடுப்பது முதல், அவரது புலமையையும், நீதித்துறையும் கலந்த தீர்ப்புகள், அவர் ஓய்வுபெற்ற நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு, நீதிமன்றத்தின் எதிர்கால தீர்ப்புகள் மற்றும் சட்டத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை எதிர்நோக்கியுள்ளோம்.
நீதிபதி கே.எஸ். புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (தனியுரிமைக்கான உரிமை வழக்கு-Right to Privacy Case)
ஆகஸ்ட், 2017-ம் ஆண்டில், நீதிபதி கே. புட்டசாமி vs இந்திய ஒன்றியம் (K. Puttaswamy vs Union of India) வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், "தனிமனித உரிமையானது, பிரிவு 21-ன் கீழ் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் முக்கியமான பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. மற்றும் அரசியலமைப்பின் பகுதி III ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த தீர்ப்பில் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமர்வில் மற்ற அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து, ஏப்ரல் 28, 1976-ம் ஆண்டு, ADM ஜபல்பூர் vs ஷிவ்காந்த் சுக்லா (ADM Jabalpur vs Shivkant Shukla) வழக்கில் அவசரகாலத் தீர்ப்பை வெளிப்படையாக நிராகரித்தார். நீதிபதி சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட், வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியலமைப்பின் கொடை என்றும், இது அவசரநிலையின் போது இடைநீக்கம் செய்யப்படலாம் என்றும் தீர்ப்பளித்த அமர்வில் பெரும்பான்மையானவர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷபின் ஜஹான் vs இந்திய ஒன்றியம் (ஹாதியா வழக்கு-Hadiya case)
புகழ்பெற்ற ஹாதியா வழக்கில், உச்சநீதிமன்றம், “தனக்கு விருப்பமான நபரை திருமணம் செய்யும் உரிமையானது அரசியலமைப்பின் பிரிவு 21 (உயிர் மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) உடன் ஒருங்கிணைந்ததாகும்” என்று கூறியது. மேலும், கேரள முஸ்லிம் மதம் மாறிய பெண் ஹதியா மற்றும் ஷெபின் ஜஹான் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர்நீதிமன்றத்தின் 2017 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்தது.
இந்த வழக்கில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் இரண்டு விரிவான ஒருங்கிணைந்த தீர்ப்புகளை வழங்கியது.
ஒருவர் தனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது, திருமணத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலேயோ, ஒவ்வொரு தனிநபரையும் சார்ந்தது. திருமணம் என்பது தனிப்பட்ட விஷயம், அதை மீறக்கூடாது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபரின் உரிமை மத நம்பிக்கைகளால் பாதிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும், பரப்பவும் உரிமையை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. அதேபோல், மதம் மற்றும் திருமணத் தேர்வுகள் தனிப்பட்ட முடிவுகளாகும். அங்கு தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானது. ஒரு நபரின் இணையைத் தேர்ந்தெடுப்பதை மாநிலமோ அல்லது சட்டமோ கட்டுப்படுத்த முடியாது அல்லது அத்தகைய முடிவுகளை தேர்ந்தெடுப்பதைக் கட்டுப்படுத்த முடியாது. நீதிபதி சந்திரசூட் கூறியது போல் இந்த தேர்வுகள் அரசியலமைப்பின் கீழ் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மைய கருத்தாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு vs இந்திய ஒன்றியம்
இந்த வழக்கில், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட துணைநிலை கவர்னருக்கும் (Lieutenant Governor (LG)) இடையிலான ஒட்டுமொத்த சர்ச்சையின் முக்கிய பகுதியாக சேவைகளை ஒழுங்குபடுத்துவது பற்றிய கேள்வி இருந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. சேவை நிர்வாகத்தில் அதிகாரத்துவத்தை சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது என்று அமர்வு தீர்ப்பளித்தது. இருப்பினும், தேசிய தலைநகர் பிரதேசத்தின் (National Capital Territory (NCT)) சட்டமன்ற அதிகாரங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு இது பொருந்தாது. டெல்லி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மூன்று பகுதிகள் உள்ளன. அவை பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகியவை ஆகும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாவது, “தேசிய தலைநகர் டெல்லியின் அரசாங்கத்தின் (National Capital Territory of Delhi (GNCTD)) பிரிவு 41 மீதான சட்டமியற்றும் மற்றும் நிர்வாக அதிகாரம் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான சேவைகளுக்கு நீட்டிக்கப்படாது. எவ்வாறாயினும், பிராந்தியத்தின் அன்றாட நிர்வாகத்தின் அடிப்படையில் NCTD-ன் கொள்கைகள் மற்றும் பார்வையை செயல்படுத்துவதற்குப் பொருத்தமான இந்திய ஆட்சிப் பணி (IAS) அல்லது கூட்டுப் பணியாளர் சேவைகள் (joint cadre services) போன்ற சேவைகள் மீதான சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரம் டெல்லிக்கு இருக்கும்.
இந்திய ஒன்றியத்தில் நவ்தேஜ் ஜோஹர்
ஜூன் 2016-ம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் நவ்தேஜ் சிங் ஜோஹர் மேலும் நான்கு பேருடன் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ஐந்து பேரும் LGBTQI சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ சவால் செய்தனர். (நாஸ் அறக்கட்டளை வழக்கு ஒரு பொது நல வழக்காகும்)
ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் அளவிற்கு இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377-ஐ ரத்து செய்தது. 'நவ்தேஜ்' தீர்ப்பின் அடிப்படையில் LGBTQ சமூகம் சமமான குடிமக்கள் என்று கூறியது மற்றும் பாலியல் நோக்குநிலை மற்றும் பாலினத்தின் அடிப்படையில் சட்டத்தில் பாகுபாடு இருக்க முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
டி.ஒய்.சந்திரசூட், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப் நாரிமன், ஏ.எம்.கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோருடன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வில் ஒரு பகுதியாக இருந்தார்.
சொத்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிறர் vs மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் பிறர்
இந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் 39 (பி) பிரிவில் மறுபங்கீடு செய்வதற்கு அனைத்து தனியார் சொத்துக்களையும் "சமூகத்திற்கு சொந்தமான வளங்களாக" கருத முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் பெரும்பான்மை தீர்ப்புக்காக எழுதினார். இவருடன் நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஷ் பிண்டல், சதீஷ் சந்திர சர்மா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், நீதிபதி பி.வி. நாகரத்னா ஒருமித்த கருத்தை எழுதினர். நீதிபதி சுதன்ஷு துலியா இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
தேர்தல் பத்திர வழக்கு (Electoral Bonds Case)
பிப்ரவரி 2024-ம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அரசியல் நிதியுதவிக்கான ஒன்றிய அரசின் தேர்தல் பத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில், வருமான வரிச் சட்டம் (Income Tax Act) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of Peoples Act) 29C பிரிவுகளில் திருத்தங்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிமன்றம் அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) "தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றும், இதுவரை பத்திரங்களை பணமாக்கியவர்களின் அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
எம் சித்திக் (D) Thr Lrs vs மஹந்த் சுரேஷ் தாஸ் & பிறர்
இந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒருமனதாக தீர்ப்பளித்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்படும் எனவும், இதை அறக்கட்டளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும், முஸ்லிம்களின் பெயரில் "பங்கு” (equity), மசூதி கட்டுவதற்கு அந்த இடத்திற்கு அருகில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அல்லது “அயோத்தியில் பொருத்தமான முக்கிய இடத்தில்” ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.நசீர் ஆகியோருடன் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பு இடம்பெற்றது. இந்த தீர்ப்பின் மூலம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா பிரிவினர், ராம்லல்லா விராஜ்மான் தெய்வம் மற்றும் உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியம் இடையே மும்முனையாகப் பிரித்து வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் செப்டம்பர் 30, 2010 தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.