உத்தரப்பிரதேச மதரஸா சட்டத்தை உச்சநீதிமன்றம் ஏன் உறுதி செய்தது? -ஆர்த்ரிகா பௌமிக்

 மதரஸாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அலகாபாத் உயர்நீதிமன்றம் சட்டத்தை ஏன் ரத்து செய்தது? உச்ச நீதிமன்றம் இந்த சட்டம் குறித்து என்ன சொன்னது?


நவம்பர் 5, 2024 அன்று, கமில் (இளங்கலை) மற்றும் ஃபாசில் (முதுகலை) போன்ற உயர் பட்டங்களை வழங்க வாரியத்தை அனுமதிக்கும் பிரிவுகளைத் தவிர, 2004-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உத்தரபிரதேச மதரசா கல்வி வாரிய கல்விச் சட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், இந்தப் பட்டங்களை வழங்குவது பல்கலைக்கழக மானியக் குழுச் சட்டம் (University Grants Commission Act, 1956 (UGC Act)), 1956-க்கு எதிரானது என்றும், அது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தீர்ப்பளித்தார். இதன் விளைவாக, 2004 சட்டம் மதச்சார்பின்மை கொள்கைகளை (principles of secularism) மீறுவதாகக் கூறிய அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.


மதரஸாக்கள் எவ்வாறு செயல்படுகின்றன? 


மதர்சா (madarsa) என்ற சொல்லுக்கு அரபு மொழியில் கல்வி நிறுவனம் என்று பொருள். கில்ஜி மற்றும் துக்ளக் வம்சங்களின் ஆதரவுடன் டெல்லி சுல்தானகத்தின் காலத்திலிருந்தே மதரஸாக்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, மதரஸா அமைப்பு ஒரு தனித்துவமான கல்வி வடிவமைப்பை கொண்டிருந்தது இது மத மற்றும் மதச்சார்பற்ற கற்றலை வழங்குகிறது. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை (father of the Indian Renaissance) என்று அழைக்கப்படும்  ராஜா ராம்மோகன் ராய், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் மற்றும் எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் போன்ற பிரபலமானவர்கள் மவுல்விகள் (maulvis) எனப்படும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மதரஸாக்களில் தங்கள் ஆரம்பக் கல்வியைக் கற்றதாக நம்பப்படுகிறது.


மதரஸாக்களுக்கு பெரும்பாலான நிதி மாநில அரசுகளிடமிருந்து வருகிறது. 1993-ல், பி.வி. நரசிம்மராவ் அரசு மதரஸாக்களில் நவீன கல்வியை சேர்க்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தது. 2009-ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த  திட்டம் மதரஸாக்களுக்கு தரமான கல்வி வழங்குவதற்கு (Scheme for Providing Quality Education in Madrasas (SPQEM)) அறிமுகப்படுத்தப்பட்டது.


பிப்ரவரி 3, 2020 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 24,010 மதரஸாக்கள் இருப்பதாகவும், அதில் 60% சுமார் 14,400 மதரஸாக்கள் உத்திரப் பிரதேசத்தில் இருப்பதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 11,621 மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,907 மதரஸாக்கள் உள்ளன. 2004-ஆம் ஆண்டு சட்டம் மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. பாடத்திட்டம், கல்வித் தரங்கள், தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதிகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இது உத்தரப்பிரதேச மதர்சா கல்வி வாரியத்தையும் அமைத்தது, இதில் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். சட்டத்தின் 9-வது பிரிவின்படி, பாடப் பொருட்களை தயாரித்தல், பட்டங்களை வழங்குதல் மற்றும் தேர்வுகளை நடத்துதல் ஆகியவை வாரியத்தின் பொறுப்பாகும்.

 

வழக்கு என்ன? 


அக்டோபர் 23, 2019 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர்  அமர்வு  நீதிபதியிடம் முகமது ஜாவேத் தாக்கல் செய்த மனுவை விசாரித்தார். அவர் 2004 சட்டத்தின் தன்மை குறித்து கேள்விகளை எழுப்பினார். திரு. ஜாவேத் 2011-ஆம் ஆண்டு முதல் அம்பேத்கர் நகர் மாவட்டம் அக்பர்பூரில் உள்ள மதர்சா நிஸாருல் உலூமில் பகுதி நேர உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவருக்கு 8% வருடாந்திர ஊதியத்துடன் மாதம் ₹4,000 நிலையான சம்பளம் வழங்கப்பட்டது. வழக்கமான ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மதர்சா நியமனங்களை மாநில அரசு, மதர்சா ஷிக்ஷா பரிஷத் மற்றும் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் ஆகியோர் முறைப்படுத்த வேண்டும் என்றும் ஜாவேத் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 

“இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை கல்வி வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்கலாமா அல்லது அந்தக் குழுவில் எந்த மதத்தைச் சேர்ந்த நிபுணர்களையும் சேர்க்கலாமா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.   


இதற்கிடையில், வழக்கறிஞர் அன்ஷுமன் சிங் ரத்தோர் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு (Public Interest Litigation (PIL)) தாக்கல் செய்தார்.


 2004-ஆம் ஆண்டு சட்டம் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு  14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்  (equality before law), சட்டப்பிரிவு 15 பாகுபாடு தடை (which forbids discrimination)  மற்றும் சட்டப்பிரிவு 21-அ கல்வி உரிமை (right to education) ஆகியவற்றை மீறுவதாக வாதிட்டார்.  இதற்கு பதிலளிக்கும் விதமாக, பெரிய அமர்வு முக்கிய கேள்வியை எழுப்பியது: "மதர்சா சட்டத்தின் விதிகள் அரசியலமைப்பின் முக்கிய பகுதியாக இருக்கும் மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்றுகிறதா?" இது தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும்  இறுதித் தீர்ப்பு ஒன்றாக வழங்கப்பட்டது.

 

உயர்நீதிமன்றத்தால் சட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது ? 


மதரஸாக்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை மதிப்பாய்வு செய்த நீதிபதிகள் சுபாஷ் வித்யார்த்தி மற்றும் விவேக் சவுத்ரி ஆகியோர், இந்த நிறுவனங்களில் கல்வி தரமானதாகவோ அல்லது பரவலாக அணுகக்கூடியதாகவோ இல்லை என்று குறிப்பிட்டனர். மதக் கல்விக்கான வாரியத்தை உருவாக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது அதன் நம்பிக்கைகளை மையமாகக் கொண்ட கல்வி வாரியத்தை நிறுவவோ அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 2004-ஆம் ஆண்டு சட்டம் மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக நீதிபதிகள் முடிவு செய்தனர். 


2004 சட்டத்தின் கீழ் மதரஸாக்களில் "இஸ்லாமிய ஆய்வுகள்" கட்டாயம் என்றாலும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக ஆய்வுகள் போன்ற முக்கியமான நவீன பாடங்கள் விடுபட்டுள்ளன அல்லது விருப்பத்திற்குரியதாக உள்ளன என்றும் நீதிபதிகள் எடுத்துரைத்தனர். 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் (education for all children) தரமான கல்வி வழங்குவதற்கான அரசமைப்புச் சட்டப் பிரிவு 21A-ன் கீழ் அரசாங்கத்தின் கடமையை இது குறைப்பதாக என்று அவர்கள் வாதிட்டனர். குறைந்த கட்டணத்தில் பாரம்பரியக் கல்வியை வழங்குவதன் மூலம் அரசு தனது வேலையைச் செய்கிறது என்றும் தேவையற்ற காரணத்தை இனி தெரிவிக்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


கூடுதலாக, "உயர் கல்வி" என்பது அரசியலமைப்பில் உள்ள பொதுபட்டியலில் ஏழாவது அட்டவணையின், உள்ள நுழைவு 66-ன் படி  ஒன்றிய அரசின் பொறுப்பின் கீழ் வருகிறது. மேலும், இந்த பகுதியில் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (National Commission for Protection of Child Rights (NCPCR)) பதில் என்ன? 


குழந்தைகள் சரியான கல்வியைப் பெறுவதற்கு மதரஸாக்கள் பொருத்தமான இடங்கள் அல்ல என்று நாட்டின் தலைசிறந்த குழந்தைகள் உரிமை அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது பாடத்திட்டம், ஆசிரியர் தகுதிகள், தெளிவற்ற நிதி மற்றும் நிலச் சட்டங்களை மீறுவது பற்றிய கவலைகளை எழுப்பியது. மதரஸாக்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்கத் தவறிவிட்டன என்று ஆணையம் கூறியது.


மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்கள் முக்கியமாக குர்ஆன் மற்றும் பிற மத நூல்களைக் கற்பிப்பதில் கவனம் செலுத்தும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்றும் NCPCR சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கமான கற்பித்தல் முறைகள் இல்லாததால், பெரும்பாலும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குகிறது என்று தனது கருத்தை தெரிவித்தது.


அக்டோபர் 2024-ல், NCPCR அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மதரஸா வாரியங்களை மூடவும், இந்த வாரியங்களுக்கு மாநில நிதியுதவியை நிறுத்தவும் கோரிக்கை விடுத்தது. இது போராட்டங்களுக்கு வழிவகுத்தது, குறிப்பாக கேரளாவில், அரசியல் தலைவர்கள் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர். இது ஒன்றிய அரசின் "வகுப்புவாத செயல்திட்டத்தின்" ஒரு பகுதி என்று கூறினர். பின்னர் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.


உச்ச நீதிமன்றம் இறுதியாக என்ன முடிவு செய்தது? 


2004 சட்டம் மதச்சார்பின்மையை மீறுவதாக (violated secularism) உயர் நீதிமன்றத்தின் கருத்தை தலைமை நீதிபதி ஏற்கவில்லை. எந்தவொரு மீறல் உரிமைகோரலும் அரசியலமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட விதியின் அடிப்படையில் இருக்க வேண்டும், அது அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது என்ற அறிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்ப்பு வழங்க கூடாது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை போன்ற கருத்துக்கள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மேலும், இதுபோன்ற தெளிவற்ற கருத்துகளின் அடிப்படையில் சட்டங்களை ரத்து செய்ய நீதிமன்றங்களை அனுமதிப்பது அரசியலமைப்பு எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று தலைமை நீதிபதி கூறினார்.


அரசியலமைப்பின் 30-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, சிறுபான்மையினர் தங்கள் சொந்த பள்ளிகளை நடத்துவதற்கான உரிமைகளைப் (safeguarding the rights of minorities) பாதுகாப்பதோடு, கல்வித் தரத்தைப் பாதுகாப்பதை அரசு சமநிலைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 2004-ஆம் ஆண்டு சட்டம், மத சிறுபான்மை பள்ளிகள் தங்கள் சிறுபான்மை தன்மையை இழக்காமல் தரமான மதச்சார்பற்ற கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக பிரிவு 21-A கல்விக்கான உரிமை (right to education) உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பிரிவு 28(3)-ன் கீழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களையோ அல்லது பொது நிதியைப் பெறுபவர்களையோ மத போதனை (receiving aid out of public funds) அல்லது வழிபாடுகளில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது என்றும் தலைமை நீதிபதி நினைவூட்டினார்.


அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக சட்டத்தை சவால் செய்ய முடியாது என்று  உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.


மதரஸாக்கள் மதத்தைப் போதித்தாலும் அவற்றின் முக்கிய நோக்கம் கல்வியே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது அவர்களை அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் "கல்வி" நுழைவு 25-ன் கீழ் வைக்கிறது . மதரஸாக்களில் சில மத போதனைகள் உள்ளதால், சட்டம் ஒழுங்குபடுத்துவதற்கு அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று அர்த்தமல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மதரஸாக்கள் உயர்கல்வி பட்டங்களை வழங்க அனுமதிக்கும் 2024 சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 22-வது பிரிவுக்கு எதிரானது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இது சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பட்டங்களை வழங்க அனுமதிக்கும். இருந்தபோதிலும், முழு சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை இது குறிக்கவில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. முழு சட்டத்தையும் ரத்து செய்வது "குழந்தையை குளியலுடன் தூக்கி எறிவது போன்றது” என்று நீதிமன்றம் கூறியது.




Original article:

Share: