இந்திய மொழிகளே, இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான அடித்தளம். -டிவி ராமச்சந்திரன், கேவி சேஷசாயி

 இந்திய மொழிகளில் உள்ள ஏராளமான ஆவணங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களைப் பயன்படுத்துவதற்கு, இந்திய செயற்கை நுண்ணறிவுக்கான (Indic AI) ஒரு தேசிய அறிவுசார் உள்கட்டமைப்பு மிகவும் அவசியமாகும்.


செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) துறையில் இந்தியாவின் இலக்குகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அரசாங்கங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் முதலீடு செய்கின்றன, புதிய தொழில்முனைவோர் மூலதனத்தை ஈர்க்கின்றனர், மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிகத் திறன் கொண்ட மொழி மாதிரிகளை (Language models) உருவாக்கி வருகின்றன. இருப்பினும், ஒரு முக்கியமான சவால் இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது: இந்தியாவின் சொந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப இலக்கை அடைய வேண்டுமானால், அதன் சொந்த மொழிகளுக்கான வலுவான அறிவுசார் உள்கட்டமைப்பு இல்லாமல் அதைச் சாதிக்க முடியாது என்கின்றனர்.


இன்றைய சூழலில், அதிக அளவிலான மற்றும் உயர்தரமான டிஜிட்டல் உள்ளடக்கங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்போதுதான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அமைப்புகள் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆங்கில மொழிக்கு, இத்தகைய உள்ளடக்கங்கள் ஏராளமாக உள்ளன.         ஆனால், பெரும்பாலான இந்திய மொழிகளுக்கு அப்படி இல்லை.        உண்மையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள இந்திய மொழி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் இதுவே மிகப்பெரிய தடையாகத் தற்போது  உருவெடுத்து வருகிறது.


இந்தி மொழிக்கு ஒப்பீட்டளவில் வளமான டிஜிட்டல் உள்ளடக்கம் இருந்தாலும், தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளுக்கு மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன. இன்னும் பல மொழிகளுக்கோ டிஜிட்டல் தளங்களில் இடமே இல்லாத நிலைதான் உள்ளது. இதன் விளைவாக,செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப அமைப்புகள் இந்த மொழிகளில் துல்லியமாக வேலை செய்ய, பகுத்தறிய, சுருக்கி எழுத மற்றும் மொழிபெயர்க்கப் பெரிதும் தடுமாறுகின்றன. இந்தப் பிரச்சனைக்கு கணினித் திறனோ அல்லது செயற்கை நுண்ணறிவு மாதிரியின் வடிவமைப்போ முதன்மைக் காரணம் அல்ல. இந்தியாவின் மொழியியல் மற்றும் கலாச்சார வளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான மாறுபட்ட மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உரைகள் இல்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்பத்தைக் கடந்து 


இதன் விளைவுகள் வெறும் தொழில்நுட்பத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. நவீன நிர்வாகம், கல்வி, சட்ட அமைப்புகள் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் மயமாக்கல் (Digitisation) இன்றியமையாததாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மக்களுக்குப் பயனுள்ள நன்மைகளை உருவாக்க வேண்டும் என்றால், அரசாங்கப் பதிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், நில ஆவணங்கள், பாடப்புத்தகங்கள், ஆராய்ச்சித் தாள்கள் மற்றும் வரலாற்று ஆவணக் காப்பகங்கள் ஆகியவற்றை கணினியால் படிக்கக்கூடிய வடிவங்களாக (Machine-readable formats) மாற்ற வேண்டும்.


இந்த முயற்சியின் மிக முக்கியமான பகுதி ‘ஒளியியல் எழுத்துணரி’ (Optical Character Recognition (OCR)) தொழில்நுட்பம் ஆகும். இது ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை, கணினியில் தேடக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய உரையாக மாற்றும் ஒரு தொழில்நுட்பமாகும். இந்த  ஒளியியல் எழுத்துணரி (OCR) தொழில்நுட்பம் ஆங்கில மொழிக்கு ஏற்றதாக இருந்தாலும், பல இந்திய மொழிகளுக்கு இது இன்னும் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.


அச்சிடப்பட்ட ஆவணங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பம் மூலம் செயலாக்குவது கடினமாக உள்ளது. பல அரசு ஆவணங்கள் தரம் குறைந்த, ஸ்கேன் செய்யப்பட்ட மின்னணு ஆவண வடிவக் (Portable Document Format (PDF)) கோப்புகளாக மட்டுமே உள்ளன. செய்தித்தாள்களும் புத்தகங்களும் பெரும்பாலும் பொதுவான தரம் இல்லாத எழுத்துருக்களைப் பயன்படுத்துகின்றன. மேலும், பல பத்திகள், அட்டவணைகள் மற்றும் வெவ்வேறு எழுத்து வடிவங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்புகள் இதன் துல்லியத்தைக் குறைக்கின்றன. தமிழ், மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளுக்கு ஒளியியல் எழுத்துணரி தொழில்நுட்பத்தின் செயல்பாடு இன்னும் சீரானதாக இல்லை. 


கையெழுத்துப் பிரதிகளாக இருக்கும் ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது இன்னும் பெரிய சவாலாக உள்ளது. கோடிக்கணக்கான அரசுப் பதிவுகள், வரலாற்று ஆவணக் காப்பகங்கள் மற்றும் நிறுவன ஆவணங்கள் இன்றளவும் கையெழுத்திலேயே உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ப மாறும் கையெழுத்து முறைகள், கணினிக்குக் கற்றுக்கொடுக்கத் தேவையான போதிய தரவுகள் இல்லாதது மற்றும் பழங்கால எழுத்து வடிவங்கள் போன்ற காரணங்களால், கணினிகள் மூலம் அவற்றை தானாகவே கண்டறிந்து படிப்பது மிகவும் கடினமாக உள்ளது.


இந்தியாவின் பலதரப்பட்ட, ஏராளமான ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் இந்தப் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றன. ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் மற்றும் பழங்கால நூல்களில் கணிதம், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவம் போன்ற துறைகள் சார்ந்த பல நூற்றாண்டு கால அறிவு பொதிந்துள்ளது. இந்தத் தகவல்களை மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கு, வெறும் ஒளியியல் எழுத்துணரி (OCR) தொழில்நுட்பம் மட்டும் போதாது. சிதைந்த படங்களைச் சீரமைப்பது, எழுத்து வடிவங்களை அடையாளம் காண்பது மற்றும் மொழியியல் நிபுணத்துவம் ஆகியவையும் தேவைப்படுகின்றன. இதனால், இந்த முயற்சி வெறும் தொழில்நுட்பத் திட்டம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அறிவைப் பாதுகாத்து வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு பணியாக மாறுகிறது.


இந்திய முயற்சிகள் 


நல்வாய்ப்பாக, இதற்கான மிக முக்கியமான அடித்தளங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே உள்ளன.


சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras (IIT Madras)) உள்ள ‘AI4Bharat’ அமைப்பு, இந்திய மொழிகளுக்கான பன்மொழித் தரவுத்தொகுப்புகள், மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் மொழி மாதிரிகளை வழங்கி, இந்தியாவின் மிக முக்கியமான இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய (Open-source) தொழில்நுட்பமா சார்ந்த முயற்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஹைதராபாத் சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கழகம் (International Institute of Information Technology Hyderabad), ஒளியியல் எழுத்துணரி (OCR) மற்றும் ஆவணப் பகுப்பாய்வு ஆகியவற்றில் முக்கியமான பணிகளை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், ‘Sarvam AI’, ‘BharatGPT’, ‘Microsoft’, ‘Google’ மற்றும் ‘Meta’ போன்ற நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் முதலீடு செய்து வருகின்றன.


அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளும் இதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளன. உதாரணமாக, பாஷினி (Bhashini) திட்டம், பேச்சு மற்றும் மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தேசிய கையெழுத்துப் பிரதிகள் இயக்கம் (National Manuscripts Mission (NMM)) பல மில்லியன் கணக்கான பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது. தேசிய டிஜிட்டல் நூலகம் (National Digital Library of India (NDLI)) டிஜிட்டல் வடிவிலான மிகப்பெரிய தகவல் சேமிப்பை உருவாக்கியுள்ளது. இதுமட்டுமன்றி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்களுக்குரிய மதிப்புமிக்க டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களைத் தொடங்கியுள்ளன.


இருப்பினும், இந்த முயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படாமல் ஆங்காங்கே தனித்தனியாகவே நடக்கின்றன. இந்தியாவிற்குள் இன்னும் பொதுவான தரநிலைகளோ, ஒன்றுடன் ஒன்று எளிதாக இணையும் தரவுத்தொகுப்புகளோ, செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ற தகவல் வழிமுறைகளோ மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தேசிய உத்தியோ இன்னும் உருவாக்கப்படவில்லை.                  இதன் விளைவாக, ஒரே வேலையை பலரும் மீண்டும் மீண்டும் செய்யும் நிலை ஏற்படுவதுடன், நாட்டின் தேவைக்கேற்ற வேகத்தில் முன்னேற முடியாமல் வேகம் குறைகிறது.


இந்தியாவுக்கு இப்போது தேவை என்னவென்றால், இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவை (Indic AI) மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய அறிவு உள்கட்டமைப்பு ஆகும்.


முதலாவதாக, இந்திய மொழிகளுக்கான எழுத்துருக்களை அடையாளம் காணும் ஒளியியல் எழுத்துணரி (OCR) அமைப்புகள், கையெழுத்தை அங்கீகரிக்கும் கருவிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் இந்திய எழுத்து வடிவங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட பார்வை-மொழி மாதிரிகளை (Vision-language models) உருவாக்குவதை வேகப்படுத்த ஒரு தேசிய உரை அங்கீகார இயக்கம் (National Text Recognition Mission) தொடங்கப்பட வேண்டும்.


இரண்டாவதாக, ஒரு தேசிய தரவுத் தொகுப்பு ஆணையம் (National Corpus Authority) தரவு பற்றிய விபரங்கள் (Metadata), தரவின் தரம், சேமிப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே தரவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதி ஆகியவற்றுக்கான தரநிலைகளை வகுக்க வேண்டும். அதேநேரத்தில் அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் பங்களிப்புகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


மூன்றாவதாக, பொதுமக்களுக்கான அணுகல், அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights (IPR)) மற்றும் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கான (Content creators) நியாயமான இழப்பீடு ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு நவீன உரிமக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டும்.


இறுதியாக, அரசாங்கம், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் சமூக அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியமாகிறது. இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை உலகிலேயே ஒப்பிட முடியாத ஒன்றாகும். எந்தவொரு தனி நிறுவனத்தாலும் இந்த சவாலை தனியாக எதிர்கொண்டு தீர்வுகாண முடியாது.


சமீபத்தில், நந்தன் நிலேகனி கூறியது போல, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள் (Digital Public Infrastructure (DPI)) மூலம், இலவச அணுகல் மற்றும் அனைவரும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பொதுவான தளங்கள் எவ்வாறு தேசிய அளவில் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே நிரூபித்துக் காட்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் இதே போன்ற ஒரு வழிமுறையைப் பின்பற்றலாம் என்கின்றனர்.


செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் உண்மையான போட்டி என்பது, வெறும் பெரிய தொழில்நுட்ப மாதிரிகளை உருவாக்குவதிலோ அல்லது அதிகப்படியான அதிவேகத் தரவுச் செயலாக்கக் கருவிகளை (Graphics Processing Units (GPUs)) வாங்குவதிலோ மட்டும் இல்லை. அந்த மாடல்கள் கற்றுக்கொள்வதற்கான அறிவுசார் அடித்தளங்களை உருவாக்குவதில்தான் அடங்கியுள்ளது. இந்தியா தனது மொழியியல் வளங்களை டிஜிட்டல் மயமாக்கி, ஒழுங்குபடுத்தி, அனைவரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றிக் காட்டினால், ஆங்கிலம் பேசும் மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் இந்திய மொழிகளில் பேசும் கோடிக்கணக்கான மக்களுக்கும் பயன்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளை உருவாக்க முடியும்.


இந்திய செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்காலமானது, இந்தியாவின் அறிவுப் புதையலை நாம் எவ்வளவு திறம்பட வெளிக்கொண்டு வந்து, அதை நவீன தொழில்நுட்பங்கள் வழியாக மக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


சேஷசாயி, முதன்மை ஆலோசகராகவும், ராமச்சந்திரன், ‘Broadband India Forum’ அமைப்பின்  தலைவராகவும் உள்ளனர்.


Original article : Indian languages, the foundation of India’s AI. -TV Ramachandran KV Seshasayee

Share:

ராணி லட்சுமிபாயின் நினைவுநாள் : ஜான்சியின் ராணி எவ்வாறு இந்திய தேசியவாதத்தின் என்றும் அழியாத ஒரு அடையாளமாக மாறினார்? -அத்ரிஜா ராய்சௌத்ரி

 ராணி லட்சுமிபாய், இந்திய தேசியவாதத்தின் மிக முக்கியமான மற்றும் அனைவராலும் அறியப்பட்ட ஒரு அடையாளமாக மாறியது உடனடியாக நடந்துவிடவில்லை. அது எப்படி சாத்தியமானது மற்றும் அவர் எவ்வாறு வரலாற்றில் அத்தகைய இடத்தை அடைந்தார் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

1857-ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்தின்போது, ஜான்சி ராணி லட்சுமிபாய் ஜூன் மாதம் 18-ஆம் தேதி, 1858-ஆம் ஆண்டு குவாலியர் அருகே ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டு வீர மரணம் அடைந்தார். 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவின் நினைவுகளில் காலனித்துவ எதிர்ப்பின் மிக முக்கியமான மற்றும் அழியாத அடையாளங்களில் ஒருவராக ஜான்சி ராணி லட்சுமிபாய் திகழ்கிறார்.              அவரது வீரத்தைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் சிலைகள் நிறுவப்பட்டு, வீதிகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் அவரது வீரக் கதைகளை பாடப்புத்தகத்தின் வழியே அறிந்து கொள்கின்றனர். மேலும், அனைத்து அரசியல் கோட்பாடுகளைக் கொண்ட அரசியல் தலைவர்களும் அவரது பாரம்பரியத்தையும் பெருமையையும் இன்றும் நினைவுகூருகின்றனர்.


ராணி லட்சுமிபாய், இந்திய தேசியவாதத்தின் மிக முக்கியமான மற்றும் அனைவராலும் அறியப்பட்ட ஒரு அடையாளமாக மாறியது என்பது, உடனடியாகவோ அல்லது தானாகவோ நடந்துவிட்ட ஒரு விஷயம் அல்ல. பல ஆண்டுகளாக நாட்டுப்புறக் கதைகள், மக்களிடையே புகழ்பெற்ற இலக்கியங்கள், சுயசரிதைகள் மற்றும் தேசியவாத எழுத்துக்கள் மூலமாகவே சாத்தியமானது என்கின்றனர்.


ராணி லட்சுமிபாய் மற்றும் 1857 பெரும் புரட்சியின் கதை


ராணி லட்சுமிபாய் ‘ஜான்சி’ (Jhansi) என்ற சமஸ்தானத்தின் (Princely state) மகாராணியாக இருந்தார். அந்த நாட்டின் மன்னரான கங்காதர ராவ் மறைந்த பிறகு, அரியணைக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. இதனால், ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி (East India Company), அவர்கள் தத்தெடுத்த இளவரசரை வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதோடு 'வாரிசுரிமை இழப்புக் கொள்கை' (Doctrine of Lapse) என்ற சட்டத்தின் மூலம், ஜான்சி சமஸ்தானப் பகுதியை ஆங்கிலேயர் ஆதிக்கத்தின்கீழ் இணைத்துக் கொண்டது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்கீழ் உள்ள ஒரு சுதேச சமஸ்தானத்தின் ஆட்சியாளர், தனக்குப் பின் ஒரு மகனை வாரிசாக விட்டுச் செல்லாமல் இறந்துவிட்டால், அந்த நாடு ஆங்கிலேய இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்பதே இந்த வாரிசுரிமை இழப்புக் கொள்கையாகும்.

இதன் விளைவாக, ஜான்சி ராணி லட்சுமிபாய் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது படைகளை மறுசீரமைப்பு செய்து ஆங்கிலேயக் காலனித்துவவாதிகளுக்கு (Colonialists) எதிராகப் போரிட்டார். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர் தீவிரமாகப் போராடிய போதிலும், அந்தப் போரில் தோல்வியடைந்து தனது உயிரையும் இழந்தார். வரலாற்றாசிரியர் ஹர்லீன் சிங் தனது ‘The Rani of Jhansi: Gender, History and Fable in India’ (2014) என்ற புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்: "ராணி லட்சுமிபாய் எல்லாவற்றையும் இழந்த ஒரு நபராக இருக்கலாம், ஆனால் அவர் ஒருபோதும் வீழ்ந்தவர் அல்ல. அவர் தனது குடும்பத்தையும், ராஜ்யத்தையும் இழந்து போர்க்களத்தில் வீரமரணமடைந்தார், ஆனால் இந்திய வரலாற்றில் அவர் ஒரு புகழ்பெற்ற காவிய நாயகியாக மாறிவிட்டார்."


ஜான்சி ராணியின் தேசியவாத மறுவடிவமைப்பு


ஜான்சி ராணியின் மறைவுக்குப் பிறகு, அவர் மாபெரும் அடையாள ஆளுமையாகவும், ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற நாயகியாகவும் மாறினார். எழுத்தாளர் சிங் தனது புத்தகத்தில், ராணி லக்ஷமிபாயை "இந்தியாவின் மிகச்சிறந்த வீராங்கனை" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் வீரம் செறிந்த மரணமும் நாட்டுப்புறக் கதைகளாகவும் புராணக் கதைகளாகவும் மாறின.


19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ராணி லட்சுமிபாயின் பெயர் இந்திய தேசியவாதத்துடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில், இந்திய விடுதலைக்கான தேசியவாத இயக்கம் வலுவடைந்து கொண்டிருந்தது.  அதன் தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பைக் வெளிப்படுத்தும் வரலாற்று நாயகர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். அதற்கு லட்சுமிபாய் ஒரு மிகச்சிறந்த தேர்வாக அமைந்தார். ஏனெனில், ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து ஒத்துழைத்த பல சமஸ்தான மன்னர்களைப் போலல்லாமல், அவர் எதிர்ப்பிற்கும் தியாகத்திற்கும் ஒரு அடையாளமாக மாறியிருந்தார்.


1857-ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்ட பதிவுகளை ஆங்கிலேய அதிகாரிகள் தடுத்து, தணிக்கை செய்த அந்தக் காலகட்டத்தில், ஜான்சி ராணியைப் பற்றிய ஆரம்பகால தேசியவாதச் சித்தரிப்புகள் வாய்மொழி மரபுகள், கதைகள் மற்றும் பாடல்கள் மூலமாகவே மக்களிடையே சென்று சேர்ந்தன. அவரைப் பற்றிய முதல் இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக,       1877-ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 'Jhansir Rani' கட்டுரை அமைந்தது.


ஜான்சி ராணியைப் பற்றிய இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது 1930-ஆம் ஆண்டில் சுபத்ரா குமாரி சவுகான் எழுதிய 'Jhansi ki Rani'  என்ற கவிதை ஆகும். இக்கவிதை, பின்னர் மே மாதம் 2007-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 1857 புரட்சியின் 150-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது சுபா முத்கல் என்பவரால் பாடப்பட்டது.                குறிப்பாக, இக்கவிதையில் வரும் வரிகள் இன்றும் மக்களால் பெரிதும் நினைவுகூரப்படுகின்றன: "பந்தேலா இன மக்களின் வாயிலாக நாங்கள் இந்த கதையைக் கேட்டோம் / ஆண்களைப் போல துணிச்சலுடன் போரிட்டவள் அந்த ஜான்சி ராணி" என்பதே அவ்வரிகளின் பொருளாகும்.


ராணி லட்சுமிபாயை ஒரு தேசியவாத வீராங்கனையாக மக்களிடையே நிலைநிறுத்துவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு படைப்பு, பிருந்தாவன் லால் வர்மா 1946-ஆம் ஆண்டில் எழுதிய 'Jhansi ki Rani Lakshmibai' என்ற நாவலாகும். வரலாற்று ஆய்வாளர் பிராச்சி தேஷ்பாண்டே, தனது 2008-ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையான 'The making of an Indian nationalist archive: Lakshmibai, Jhansi, and 1857' என்பதில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்: வர்மாவின் நாவலில், ராணி லட்சுமிபாய் "பாரம்பரியத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட, அதேநேரத்தில் முற்போக்கான இந்திய நவீனத்துவத்தின் அடையாளமாகவும், "ஓர் இலட்சிய இந்தியப் பெண்மையின்" வடிவமாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார்.


20-ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு, 1956-ஆம் ஆண்டில் மகாஸ்வேதா தேவி எழுதிய ‘Jhansi Rani’  ஆகும். இந்த நூல், சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாய்மொழி சாட்சியங்கள், கதைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளுக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம், ராணி லட்சுமிபாயைப் பற்றிய வரலாற்றுப் பார்வையை ஒரு புதிய கோணத்திற்குக் கொண்டு சென்றது.



ராணி லட்சுமிபாயை சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பெரும் வீராங்கனையாக வரலாற்றில் நிலைநிறுத்துவதற்கான மற்ற முயற்சிகளில் ஒன்றாக, சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (Indian National Army (INA)) இருந்த பெண்களின் படைப்பிரிவிற்கு 'ஜான்சி ராணி படைப்பிரிவு' (Rani of Jhansi Regiment) என்று பெயரிடப்பட்டது.


ராணி லட்சுமிபாய் அவர்கள் மறைந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், அவரது புகழும் பெருமையும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும், துணிச்சலான முன்னோடிப் பெண் தலைவராகவும், வரலாற்றுச் சின்னமாகவும் கொண்டாடப்படுகிறார்.     மேலும், சத்ரபதி சிவாஜி மற்றும் மகாராணா பிரதாப் போன்ற மாவீரர்களுடன் இணையாக, எதிர்ப்பின் மற்றும் வீரத்தின் அடையாளமாக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.


Original article : On Rani Lakshmibai’s death anniversary: How the queen of Jhansi became an enduring nationalist icon. -Adrija Roychowdhury

Share:

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குத் தடை: அரசாங்கத்தால் எவ்வாறு செயலிகளையும் சமூக ஊடகத் தளங்களையும் முடக்க முடியும்? -ரோஷ்னி யாதவ்

 இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலி ஏன் முடக்கப்பட்டுள்ளது? அரசாங்கத்தால் ஒரு செயலியை எவ்வாறு தடை செய்ய முடியும்? இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன? 


ஏன் செய்திகளில் இடம்பெற்றது?


மே மாதம் 3-ஆம் தேதி நடந்த நீட் (National Eligibility cum Entrance Test (NEET)) தேர்வுத் தாள் கசிவு குறித்த விசாரணைக்கு டெலிகிராம் நிறுவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், ஜூன் மாதம் 21-ஆம் தேதி நடக்கவிருக்கும் மறுதேர்வு வினாத்தாள் தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக யாரும் தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology (MeitY)) டெலிகிராம் செயலியை ஜூன் மாதம் 22-ஆம் தேதி வரை முடக்கியது. இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்ட அடுத்த நாளே, தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த வழக்கு, ஜூன் மாதம் 17-ஆம் தேதி புதன்கிழமையன்று நீதிபதி தேஜஸ் காரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய அரசாங்கத்தால் எவ்வாறு செயலிகளை முடக்க முடியும் மற்றும் இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் தனிநபர் குறுஞ்செய்தி செயலிகளில் டெலிகிராமும் (Telegram) ஒன்றாகும். சுமார் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு முதலிடத்தில் இருக்கும் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு (WhatsApp) அடுத்தபடியாக, டெலிகிராம் சுமார் 150 மில்லியன் பயனர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.


2. தேசிய தேர்வு முகமையின் (NTA) கோரிக்கையை ஏற்று, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (Information Technology Act) பிரிவு 69A-ன்கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், "தேசிய அளவிலான தேர்வுகளில், வினாத்தாள் கசிந்த பிறகு, அது முன்கூட்டியே கசிந்தது போன்ற போலி ஆதாரங்களை உருவாக்குவதற்கு டெலிகிராமின் ஒரு குறிப்பிட்ட அம்சம் பயன்படுத்தப்படுகிறது" என்ற புகாரைத் தீர்க்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, டெலிகிராம் தளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்ட செய்திகளை மாற்றியமைக்கும் வசதியை, இந்தியாவில் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை முடக்கி வைக்குமாறு அந்த நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


3. டெலிகிராம் செயலிக்கு எதிராக மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என்பது குறித்து, தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைமை இயக்குனர் அபிஷேக் சிங், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு விளக்கம் அளித்துள்ளார். தேர்வுக்கு முன்பே வினாத்தாள்களைத் தருவதாகக் கூறும் டெலிகிராம் சேனல்களுக்கு எதிராக அந்த நிறுவனம் எந்தவொரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


ஆனால், இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு முறைப்படுத்தப்படுகின்றன?

சமூக ஊடகத் தளங்களைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.


இந்தியாவில் உள்ளடக்கங்களைத் தடுக்கும் வழிமுறைகள்


1. தற்போதைய நிலையில், இந்தியாவில் இணைய உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கு அல்லது நீக்குவதற்கு இரண்டு இணையான வழிமுறைகள் உள்ளன. முதலாவது வழிமுறை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69 (A)-ன்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உள்ளடக்கங்கள் இணையத்திலிருந்து நீக்கப்படுகின்றன.


பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளில் இதற்கென பொறுப்பு அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டறிந்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். இந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கான இறுதி உத்தரவை பிறப்பிக்கும் முதன்மை அமைப்பாகும்.



2. இரண்டாவது வழிமுறை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு-79 (3)(b)-ன்கீழ் செயல்படுகிறது. இதன் மூலம், பல்வேறு அரசு அமைச்சகங்கள் இணையதளங்களுக்கு நேரடியாகவே உள்ளடக்கத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிகாரம் பெற்றுள்ளன. இது பெரும்பாலும் மத்திய உள்துறை அமைச்சகம் வழிநடத்தும் 'சஹ்யோக்' (Sahyog) போர்டல் மூலமாகச் செய்யப்படுகிறது.


தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021


1. பொதுமக்களுடனும், இந்தத் துறையோடு தொடர்புடையவர்களுடனும் விரிவான ஆலோசனைகள் நடத்திய பிறகு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (IT Act, 2000) பிரிவு-87(2)-ன்கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) விதிகள், 2021 இயற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், இதற்கு முன்பு இருந்த 2011-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் நீக்கப்பட்டு, புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.


2. இந்தப் புதிய விதிகளின்படி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் பயனர்களின் புகார்களைத் தீர்ப்பதற்கும், சட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றுவதற்கும் ஒரு குறைதீர்க்கும் அமைப்பை உருவாக்க வேண்டும். இதற்காக, இந்தியாவில் வசிக்கும் ஒரு குறைதீர்ப்பு அதிகாரி, தலைமை அதிகாரி மற்றும் ஒரு முதன்மைப்  பொறுப்பு நபர் ஆகியோரை அந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும்.


3. மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), பயனர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு சமூக ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் போன்ற உடனடி செய்தி அனுப்பும் செயலிகளுக்கான மூன்றாவது நிபந்தனை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட செய்தி முதன்முதலில் யாரால் உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டறியும் வசதியை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்.


4. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை ஒரு சமூக ஊடக நிறுவனம் பின்பற்றத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு-79-ன்கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்படும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு-79 


1.  தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு-79-ன்படி: சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்கள் போன்ற இடைநிலை அமைப்புகள், தங்களது தளத்தில் பிற நபரால் பகிரப்படும் எந்தவொரு தகவல், தரவு அல்லது செய்தித் தொடர்புகளுக்கு சட்டப்படியோ அல்லது வேறு எந்த வகையிலோ பொறுப்பாகாது (Safe Harbour Protection). இந்தச் சட்டப்பூர்வப் பாதுகாப்பு அந்த அமைப்புகளுக்குக் கிடைக்க வேண்டுமானால், அவர்கள் சம்பந்தப்பட்ட அந்தச் செய்தியைத் தாங்களாகவே அனுப்பியிருக்கக் கூடாது, அதை யார் பெற வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்திருக்கக் கூடாது, மற்றும் அந்தச் செய்தியில் உள்ள எந்தவொரு தகவலையும் அவர்கள் மாற்றியமைத்திருக்கக் கூடாது.


2. இருப்பினும், அரசாங்கமோ அல்லது அதன் முகமைகளோ ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது தளம் பற்றி முறைப்படி தகவல் தெரிவித்தும், அந்த இடைநிலை அமைப்பு உடனே அந்தப் பதிவிற்கான அணுகலை முடக்கவில்லை என்றால், பிரிவு 79-ன்கீழ் வழங்கப்படும் இந்தச் சட்டப் பாதுகாப்பு அவர்களுக்குக் கிடைக்காது. மேலும், அவர்கள் தங்களது தளத்தில் உள்ள அந்தச் செய்திகள் அல்லது பதிவுகள் தொடர்பான எந்தவொரு ஆதாரங்களையும் அழிக்கவோ அல்லது மாற்றவோ கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் இந்தச் சட்டத்தின்கீழ் தங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


3. குறிப்பாக, ஏப்ரல் மாதம் 2023-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்கள், எந்தத் தகவல் தவறானது என்பதைத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன. இதன் விளைவாக, அரசாங்கம் 'பொய்யானது' அல்லது 'தவறாக வழிநடத்துவது' என்று கண்டறியும் பதிவுகளை நீக்குமாறு இந்த இணையதள அமைப்புகளைக் கோர முடியும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு இணையப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் பரந்த அதிகாரம் கிடைக்கிறது.


வயது அடிப்படையிலான சமூக ஊடகத் தடை


1. கடந்த ஆண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயதை நிர்ணயித்து அதைக் கட்டாயமாக்கிய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியது. இன்ஸ்டாகிராம் (Instagram), யூடியூப் (YouTube) மற்றும் ஸ்னப்சாட் (Snapchat) போன்ற தளங்கள் 16 வயதிற்குட்பட்ட பயனர்களின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


2. சமீபத்தில், குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பை பலப்படுத்திய நாடுகளின் வரிசையில் இங்கிலாந்தும் இணைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று, இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், 2027 வசந்த காலத்திற்குள் (Spring 2027) 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.


3. அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஆஸ்திரேலியா பின்பற்றிய அதே முறையைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க இங்கிலாந்தும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நடவடிக்கை ஸ்னப்சாட் (Snapchat), டிக்டாக் (TikTok), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் எக்ஸ் (X) போன்ற பயனர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் (User-to-user) தளங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதற்கும், குறிப்பிட்ட வழிமுறைகளின் (Algorithms) உதவியோடு தங்களின் கருத்துக்கள்/பதிவுகளைப் பகிர்வதற்கும் வழிவகை செய்யும் தளங்களாகும். மேலும், "வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் சிக்னல் (Signal) போன்ற செய்தி அனுப்பும் செயலிகளை இந்தச் சமூக ஊடகத் தடை நடவடிக்கையில் உட்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வயது அடிப்படையிலான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கான மாநில அரசுகளின் முன்மொழிவுகள்


1. இந்தியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயதுக் கட்டுப்பாடுகள் குறித்து இதுவரை ஒன்றிய அரசு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றாலும், இது குறித்த ஆரம்பகட்ட விவாதங்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2025–26-ஆம் ஆண்டிற்கான பொருளாதாரக் கணக்கெடுப்பு (Economic Survey 2025–26), குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும், அவர்களைக் குறிவைத்து இணையதளங்களில் காட்டப்படும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கும் வயது சார்ந்த கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.              இளம்வயது பயனர்களிடையே அதிகரித்துவரும் "டிஜிட்டல் அடிமைத்தனம்" (Digital addiction) குறித்த பரவலான கவலைகளே, இந்தப் பரிந்துரைக்கு முக்கியக் காரணமாகும்.


3. கர்நாடகா அரசு தனது சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்,                          16-வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஆந்திரப் பிரதேச அரசு                    13-வயதிற்குட்பட்ட குழந்தைகள் இத்தகைய இணையதள சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய விதியைக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சமூக ஊடகத் தளங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க இந்தியாவில் அதிகரித்துவரும் தீவிர முயற்சியைக் காட்டுகின்றன.

Original article : Telegram app Banned in India: How Government can block apps and social media platforms? -Roshni Yadav

Share:

இருமல் மருந்துகள் குறித்து, நீண்டகால தாமதமாக ஒரு பரிந்துரை.

 மருந்துப் பரிந்துரை விதிமுறையானது (prescription rule) கடுமையான அமலாக்கம், மருந்துகளின் பாதகமான விளைவுகளைப் புகாரளிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் கிராமப்புற சுகாதாரப் பராமரிப்பில் முதலீடு ஆகியவற்க்கு ஏற்ப வேண்டும். நெருக்கடி மேலாண்மையைவிட நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பின்மீது நமது அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மருந்து விதிகளின், (Drugs Rules, 1945) அட்டவணை K-ல் இருந்து இருமல் மருந்துகளை நீக்க ஒன்றிய அரசு செய்துள்ளது. இது, நீண்டகாலமாக நிலவி வந்த மருந்து கட்டுப்பாட்டு குறைபாட்டை தாமதமாக இருந்தாலும் சரிசெய்யும் முக்கிய நடவடிக்கையாகும். இந்த ஒழுங்குமுறை தோல்வி பல துயரமான சம்பவங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற முழுவதும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஜம்முவிலும் இதேபோன்ற உயிரிழப்புகள் நிகழ்ந்தன. சர்வதேச அளவிலான களங்கமான பதிவுகளுக்கு மேலாக, நாட்டிற்குள் ஏற்பட்ட பேரிடர்களும் கூடுதலாகச் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. 2022-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளன.

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் இருமல் மருந்துகள் ஒரு முரண்பாடான இடத்தைப் (anomalous position) பிடித்துள்ளன. அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பல மருந்துக் கலவைகள் குறிப்பாக அட்டவணை K-ன் 13-வது பிரிவின்கீழ் இருப்பவை, உரிமம் பெற்ற மருந்தகங்களைவிடக் குறைவான மேற்பார்வைக்கு உட்பட்ட வழிகள் மூலம் விற்பனை செய்ய உதவும் விலக்குகளைப் பெற்றன. இது தானாக மருந்து எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம், மருத்துவர் பரிந்துரைகளை முறையாகப் பின்பற்றாத நடைமுறை மற்றும் மருந்து விநியோகச் சங்கிலியில் நிலவிவரும் பிளவுபட்டு இருக்கும் பொறுப்பின்மை (fragmented accountability) போன்ற பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நலிவடைந்த சமூகங்கள், 1,000-க்கும் குறைவான மக்கள்தொகைக் கொண்ட கிராமங்களில் மருந்தின் விற்பனை அனுமதிக்கப்பட்டதால், கிராமங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தது வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில், கேள்விக்குட்பட்ட கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தில், அனுமதிக்கப்பட்ட வரம்புகளைவிட மிக அதிகமாக டையெத்திலீன் கிளைக்கால் (diethylene glycol) இருப்பது கண்டறியப்பட்டது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், மருந்துகளைப் பெறுவதற்கான அனைத்து வழிகளிலும் ஒரு மாற்றத்தை  கொண்டு வருகிறது. கோடீன் போன்ற வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மருந்துகளைக் (opioids) கொண்ட இருமல் மருந்துகள் உட்பட, சிரப் வடிவில் உள்ள அனைத்து மருந்துகளையும் இனி மருந்துச்சீட்டு இல்லாமல் நேரடியாக வாங்க முடியாது.


Opioids என்றால் என்ன?


Opioids என்பது வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மருந்துகள் ஆகும். இவை இயற்கையாக ஓபியம் (Opium) செடியிலிருந்து பெறப்படலாம் அல்லது செயற்கையாக தயாரிக்கப்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் புற்றுநோய் வலி போன்றவற்றைக் குறைக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.


இருப்பினும், மருந்துச் சீட்டுக் கட்டாயம் என்பது மட்டுமே போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறையானது, ஒன்றிய-மாநில ஒருங்கிணைப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், துயரச் சம்பவங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் விசாரணைகள், தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளன. இது, வேகமாக விரிவடைந்து வரும் மருந்துத் துறையைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் திறன் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவின்  கிராமப்புற பகுதிகள் குறித்தும் கவலைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. கிராமப்புற பகுதிகளில் சுகாதார வசதிகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், மக்களை உரிமம் இல்லாத விற்பனையாளர்களை நோக்கி செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, புதிய விதிமுறை கடுமையான அமலாக்கம், பாதகமான  நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் இந்தியாவின்  கிராமப்புற சுகாதார வசதிகளில் முதலீடு போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். நமது அரசு நெருக்கடி ஏற்பட்டபிறகு அதை சமாளிப்பதைவிட, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஒழுங்குமுறை கலாச்சாரத்தை (regulatory culture) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


Original article : On cough syrups, a long overdue prescription.

Share:

ஒரு முன்னேற்றப் படி: ஷிஷுபால் தீர்ப்பு குறித்து…

 உச்சநீதிமன்றம் ஊதியம் பெறாத (domestic work) வீட்டு வேலைக்கு ஒரு பொருளாதார மதிப்பை வழங்கியுள்ளது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய 'சிசுபால் என்கிற சிசு ராம் vs சுர்ஜீத்' வழக்கின் தீர்ப்பு, ஒரு முக்கிய சாதனையாக அமையக்கூடும். 2001-ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்து ஒன்றிற்காக 'மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம்' (Motor Accident Claims Tribunal (MACT)) வழங்கிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் மாற்றியமைத்ததன் பின்னர் இந்தத் தீர்ப்பு வந்தது. விபத்தில் உயிரிழந்த ரேஷ்மாவின் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் முதலில் ₹2.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. இழப்பீட்டுத் தொகையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டில் ₹8.43 லட்சமாக உயர்த்தியது. இருப்பினும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், ஒரு இல்லத்தரசியாக ரேஷ்மா ஆற்றிய பணிக்கான 'பொருளாதார மதிப்பாக' (economic value) மாதம் ₹30,000-ஐக் கணக்கில் கொண்டு, மொத்த இழப்பீட்டுத் தொகையை ₹62.78 லட்சமாக உயர்த்தியது. இந்தத் தீர்ப்பு ஆச்சரியமானதாக பார்க்கப்படவில்லை. 2001-ஆம் ஆண்டு 'லதா வாத்வா' வழக்கில், இல்லத்தரசியின் பணிகளுக்கு நீதிமன்றம் ₹3,000 என்ற குறைந்தபட்ச மதிப்பையே நிர்ணயித்திருந்தது. 2021-ஆம் ஆண்டு 'கீர்த்தி vs ஓரியண்டல் இன்சூரன்ஸ்' வழக்கில், ஊதியம் பெறாத பணி என்பதாலோ அல்லது பெண்களால் செய்யப்படும் பணி என்பதாலோ இல்லத்தரசியின் பணியின் பொருளாதார மதிப்பைக்குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பணிக்கான 'அதிகாரப்பூர்வ' மதிப்பை நிர்ணயிப்பதில் வெளிப்படையான தன்மை இல்லாமல் இருந்தது. அமர்வு நிர்ணயித்த மாதம் ₹30,000 என்பது ஒரு தோராயமான மற்றும் குறைந்தபட்ச அளவீடாகும். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த அடிப்படை அளவீடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 10% உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒரு பெண் பணிபுரிபவராக இருந்தால் அவரது ஊதியத்தையும் இந்த அடிப்படைத் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, இல்லத்தரசிகளுக்கு தனியாக சம்பளம், ஊதியம், ஓய்வூதியத் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு உரிமை வழங்குவதில்லை. இது மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் வழக்குகளில் இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், பெண்களின் பணிகளைச் சாதாரணமாக மதிப்பிழக்கச் செய்யும் தற்போதைய சமூகப் போக்கைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது. இது நிச்சயமாக நல்ல தாக்கங்களை  ஏற்படுத்தும்.


ஊதியம் பெறாத வீட்டுப் பணிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண் தொழிலாளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்பு, சமகால இந்தியத் தொழிலாளர் பொருளாதாரத்தில் ஒரு முக்கியக் கருப்பொருளாகும். உதாரணமாக, இந்து திருமணச் (Hindu Marriage Act) சட்டத்தின்கீழ் ஜீவனாம்சம் தொகை கோரும் இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளுக்கு உள்ள பொருளாதார மதிப்பை ஆதரிக்கும் வகையிலான சட்டரீதியான காரணங்கள் இப்போது தெளிவாக உள்ளன. நீதிமன்றம் குறிப்பிட்டதுபோல, "விதைத்தல், அறுவடை செய்தல் மற்றும் கால்நடைகளைப் பராமரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் கிராமப்புறப் பெண்கள், பெரும்பாலும் வீட்டு வேலைக்குத் துணை வேலையாகக் கருதப்படும் தங்களின் உழைப்பிற்கு அதிக மதிப்பு அளிக்கக் கோரி, நீதிமன்றத்திடம் எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டலாம். இந்த “கூட்டல் விதி” (additive rule), வீட்டிலிருந்தே வேலை செய்வோர் மற்றும் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோர் தொடர்பான வேலைவாய்ப்பு தகராறுகளிலும் இதேபோன்ற வாதங்களை முன்வைக்க வழிவகுக்கும். எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், வீட்டுப் பொறுப்புகளை மேற்கொள்ளும் ஆண்களும் இதேபோன்ற சமமான அங்கீகாரத்தை கோர முடியுமா என்பதும் சோதிக்கப்படலாம். ஏற்கனவே மோட்டார் காப்பீட்டுத் துறை பல காப்பீட்டு நிறுவனங்களுக்கு குறைந்த லாபம் தரும் பிரிவாக உள்ளது. இந்நிலையில், இழப்பீட்டுத் தொகையின் சராசரி அளவு அதிகரிப்பதும், அது கடந்தகால வழக்குகளுக்கும் (retrospective effect) பொருந்தக்கூடிய வாய்ப்பு இருப்பதும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் ஆபத்து மதிப்பீட்டு முறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, நீண்டகால நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்கும் வகையில், லோக் அதாலத் (Lok Adalat) போன்ற மாற்று தீர்வு அமைப்புகளில் இழப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக சமரசம் செய்து முடிக்க காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும். “ஷிஷுபால் தீர்ப்பு” (Shishupal Judgment) என்பது, பல ஆண்டுகளாக பெண்களின் உழைப்பிற்கு பொருளாதார மதிப்பு அளிக்காமல் புறக்கணித்து வந்த நிலையைச் சரி செய்யும் ஒரு முக்கியமான திருத்தமாகும். இந்த தீர்ப்பு, குறிப்பாக வீட்டு மற்றும் கிராமப்புற பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பொருளாதார மதிப்பும் வழங்குவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


Original article : ​Step forward: On the Shishupal judgment.

Share:

தாங்கிக் கொள்ளவும் வெற்றி பெறவும் உறுதிபூண்ட ஒரு நாடு - ஹமீத் அன்சாரி

 1970-களில், ஈரானின் எண்ணெய் வளம் காலப்போக்கில் தீர்ந்துவிடும் என்று வாதிட்ட அமெரிக்கா, உண்மையில் ஈரான் அணுசக்தித் திறனை வளர்த்துக்கொள்ள ஊக்கமளித்தது.


ஈரானின் வரலாறு முரண்பாடுகளும் விதிவிலக்குகளும் நிறைந்தது. காலநிலை மற்றும் புவியியல்ரீதியாகப் பெரும் வேறுபாடுகளைக் கொண்ட நிலப்பரப்பு இது. பண்டைய வரலாற்றாசிரியர் ஒருவரின் வார்த்தைகளில் சொல்வதானால், "பெருமித உணர்வு கொண்ட ஏழை மக்கள்" (a poor people with a proud spirit) இங்கு வசிக்கின்றனர். அதன் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தின் காரணமாக, ஈரானிய மக்களும் ஆட்சியாளர்களும் வரலாறு முழுவதும் அண்டை நாடுகளுடன் ஒடுக்குமுறையாளர்களாகவும் அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களாகவும் பல்வேறு விதமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.


கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, மேற்கத்திய பாணியிலான நவீனத்துவத்தால் எழுந்த பல சவால்களுக்கு ஒரு பயனுள்ள பதிலைத்தேடும் முயற்சியில் ஈரான் பல்வேறு தீவிர நிலைகளுக்கு இடையே ஊசலாடியுள்ளது. கஜார் (Qajar) மற்றும் பஹ்லவி (Pahlavi) வம்சங்களின் ஆட்சிக்காலத்தில், மேற்கத்திய அம்சங்களைப் பின்பற்றுவதிலேயே அது கவனம் செலுத்தியது. ஆனால், 1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அந்தப் போக்கை மாற்றி, ஒரு புதிய மாதிரியை உருவாக்கியது.

தாங்கள் அணு ஆயுதத்தைத் தயாரிக்கப்போவதில்லை என்று ஈரான் உறுதியளிக்கிறது. அதேவேளையில், பொருளாதாரத் தடைகளை நீக்குவதாகவும் 300 பில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளிக்கிறது. கசிந்த ஒப்பந்த ஆவணம் இந்த உறுதிமொழிகளை வெளிப்படுத்துகிறது.


ஷாவின் (Shah) வீழ்ச்சி


1901-ல் ஈரானில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 'ஆங்கிலோ-ஈரானியன் எண்ணெய் நிறுவனம்' (Anglo-Iranian Oil Company(AIOC)) உருவாக்கப்பட்டது. இதில் பிரிட்டிஷ் அரசாங்கம் கிட்டத்தட்ட பாதிப் பங்குகளைத் தன்வசம் வைத்திருந்தது. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1953-ல் அந்த நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்திற்கு வழிவகுத்தது. இது அப்போதைய மொசாதெக் (Mosaddeq) அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவின் உளவு அமைப்பான மத்திய உளவு முகமையின் (Central Intelligence Agency(CIA)) தீவிர ஈடுபாட்டிற்கு இட்டுச் சென்றது. பின்னர், ஆங்கிலோ-ஈரானிய தேசியமயமாக்கல் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதில் அமெரிக்கா ஒரு முக்கிய சக்தியாக மாறியது.


உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களால், 1974-ல் ஈரானின் எண்ணெய் வருவாய் 2 பில்லியன் டாலரிலிருந்து 20 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் விளைவாக, ஷா (ஈரானின் மன்னர்) பெரிய அளவிலான சமூக-பொருளாதார மற்றும் இராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களை மேற்கொள்ளத் தூண்டியது. இருப்பினும், இத்திட்டங்கள் மோசமாகத் திட்டமிடப்பட்டு, தவறான முறையில் செயல்படுத்தப்பட்டன. ஈரானை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் தொகுப்பான அவரது 'வெள்ளைப்புரட்சி' (White Revolution), அதன் இலக்குகளை அடையத் தவறியது. ஈரானிய முடியாட்சியின் 2,500-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரது "மகா நாகரிகம்" (Great Civilisation) சார்ந்த திட்டங்களும் தோல்வியடைந்தன. இம்முயற்சிகள் ஈரானுக்குள் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தின. இடது மற்றும் வலதுசாரி அரசியல் அமைப்புகள், ஜனநாயக ஆதரவு சீர்திருத்தவாதிகள், வணிகர்கள் மற்றும் சந்தை வணிகர்கள் ('பஜாரி'கள்), மற்றும் உலமாக்கள் (இஸ்லாமிய அறிஞர்கள்) ஆகியோர் இத்திட்டங்களுக்கு எதிரான முக்கியவர்களாகத் திகழ்ந்தனர். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே "நலன்களில் ஒருமித்த போக்கு" (parallelism of interests) இருந்தபோதிலும், ஈரானிய மக்கள் மத்தியில் அமெரிக்கர்களின் பரவலான இருப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜேம்ஸ் பில் தனது 'தி ஈகிள் அண்ட் தி லயன்' (The Eagle and the Lion) என்ற நூலில் குறிப்பிட்டது போல, "அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான அம்சங்கள் ஈரானின் நகரங்களில் வெளிப்பட்டன." 1970-களில், அக்காலகட்டத்தை உற்றுநோக்கிய ஒருவரின் கூற்றுப்படி, "ஷாவின் ஆட்சியின் அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் அதிக அடக்குமுறை கொண்டதாகவும் கடினமானதாகவும் மாறியது. மறுபுறம், அது மக்களிடமிருந்து விலகிச் சென்றும் பலவீனமடைந்தும் காணப்பட்டது." அமெரிக்கா-ஈரான் உறவுகளில் பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் தவறான கொள்கைகள், தவறான புரிதல்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த தவறான கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் விளைவாகவே அமைந்தன. இவை அனைத்தும் இணைந்து, ஈரானியர்களின் பார்வையில் அமெரிக்காவை 'பெரும் சாத்தான்' (Great Satan) என்ற பிம்பத்திற்கு இட்டுச் சென்றன.


மேலும் 1970-களில், எதிர்காலத்தில் எண்ணெய் வளம் தீர்ந்துவிடும் என்ற வாதத்தை முன்வைத்து, அணுசக்தித் திறனை வளர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா ஈரானை ஊக்குவித்தது. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்று ஷா அவ்வப்போது விருப்பம் தெரிவித்ததோடு, அதிகாரப்பூர்வ மறுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, "அவற்றைச் சொந்தமாக்கிக்கொள்ளும் எண்ணம் ஈரானுக்கு இல்லை. ஆனால், சிறிய நாடுகள் அவற்றை உருவாக்கத் தொடங்கினால், ஈரான் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்யக்கூடும்" என்றும் கூறினார். பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு வகையிலும் ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்ததாகவே இருந்தது என்பதை அக்காலகட்டத்து அமெரிக்க ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


இருப்பினும், 1977-ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஷா மத அறிஞர்களை (உலமா) அந்நியப்படுத்தினார், வணிகர்களைத் தமக்கு எதிரானவர்களாக மாற்றினார். அதுமட்டுமின்றி, அவரது கொள்கைகள் தெஹ்ரானில் ஒரு ஏழை மற்றும் வேரறுக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் உருவாவதற்கு வழிவகுத்தன. தனது அடக்குமுறை கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தினரில் பலரையும் அவர் தமக்கு எதிரானவர்களாக மாற்றிக்கொண்டார். ஷாவின் ஆட்சிக்கு மாற்றாக, அலி ஷரியதி போன்ற தீவிர சிந்தனையாளர்கள் 'சிவப்பு ஷியா' (Red Shiism) என்ற சித்தாந்தத்தைப் பரப்பினர். இந்தச் சித்தாந்தம், ஷியா இஸ்லாத்தை சமூகநீதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயல்திறன் மிக்க மற்றும் வர்க்க பேதமற்ற இயக்கமாக மறுவிளக்கம் செய்தது. மார்க்சியக் குழுக்களும், குறிப்பாக தூதே கட்சியும், அவை ஒடுக்கப்படுவதற்கு முன்பு தீவிரமாகச் செயல்பட்டன. அதேநேரத்தில், இன்னும் அதிக செல்வாக்குடன், அயதுல்லா கொமேனி விலாயத்-இ-ஃபகீஹ் அல்லது இஸ்லாமிய சட்ட வல்லுநரின் ஆட்சி என்ற கோட்பாட்டை ஆதரித்து வந்தார்.


1979-ம் ஆண்டு புரட்சி, ஷியா இஸ்லாமிய வடிவத்திலிருந்து வலிமையைப் பெற்றிருந்தாலும், அது அடிப்படையில் ஒரு மதரீதியான நிகழ்வு அல்ல. ஊழல் மற்றும் பொருளாதாரத் தேக்கம் குறித்த நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியே அப்புரட்சியைத் தக்கவைத்தது. அரசு மற்றும் சமூகத்தை இஸ்லாமியமயமாக்கும் செயல்முறை 1979 மார்ச் மாதம் நடைபெற்ற தேசிய வாக்கெடுப்புடன் தொடங்கியது. பின்னர், அது படிப்படியாக அரசின் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளுக்கும் பரவியது.


புரட்சிக்குப் பிந்தைய சூழல்


முன்னாள் ஷா-விற்கு (ஈரானின் மன்னருக்கு) அமெரிக்கா அடைக்கலம் அளிக்கிறது என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, 1979 நவம்பரில் மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த தூதரக அதிகாரிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்த ஒரு பாராட்டுக்குரிய விளக்கத்தை, அதில் பங்கேற்ற பெண் மாணவர் தலைவர்களில் ஒருவரான மசூமே எப்தேகர் (Massoumeh Ebtekar) எழுதியிருந்தார். பிணைக் கைதிகள் விவகாரம் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரிடம் பேசிய எப்தேகர், "ஐம்பது ஆண்டுகால அந்நிய ஆதிக்கத்தின்போது ஈரானிய தேசம் அனுபவித்த துயரத்தையும், இந்த 444 நாட்களில் அவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய துயரம் அல்லது வலியை ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் கடினம்," என்று கூறினார்.


அமெரிக்கா-ஈரான் உறவுகளில் ஏற்பட்ட இந்தத் திடீர் மற்றும் கடுமையான சரிவு, வாஷிங்டனின் பார்வையில் உலகளாவிய சூழலையே மாற்றியமைத்தது. 1975-ம் ஆண்டு கையெழுத்தான அல்ஜியர்ஸ் ஒப்பந்தத்தை (Algiers Agreement) ஈராக் நிராகரித்து, 1980-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான எல்லையின் பல்வேறு பகுதிகளில் ஈரானின் மீது படையெடுத்தபோது பிராந்திய அமைதி மேலும் சீர்குலைந்தது. ஈராக் தொடங்கிய இந்த ஏழு ஆண்டு காலப் போர் (1980-1987), ஈரானைப் பொறுத்தவரை தனது தேசிய நிலப்பரப்பைப் பாதுகாக்கும் போராட்டமாக மாறியது. ஆரம்பத்தில் ஈரானின் மேற்கு எல்லைகளில் நடைபெற்ற எல்லைப் போராகத் தொடங்கிய இது, பின்னர் நாட்டின் உட்புற நகரங்கள் வரை பரவிய முழு அளவிலான போராக உருவெடுத்தது. இது ஈரானில் தவிர்க்க முடியாத ஒரு வாழ்வியல் யதார்த்தமாக மாறி, மக்களின் மன உணர்வுகளோடு ஒன்றிப்போனது.


இப்போரில் ஈராக் பெரும்பாலான அரபு நாடுகளிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் ஆதரவைப் பெற்றது. ஈரானின் புரட்சிகரமான கொள்கை மற்றும் நோக்கங்களைக் கண்டு அஞ்சுவதற்கு இந்த ஒவ்வொரு நாட்டிற்கும் அதனதன் காரணங்கள் இருந்தன. "இந்தப் புரட்சியைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது புரட்சியை விரைவாகப் பிற நாடுகளுக்குக் கொண்டு செல்வதும், உலக முஸ்லிம்களையும், பின்னர் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசாங்கங்களுக்கு எதிராகத் திரட்டுவதும் ஆகும்."


இஸ்ரேலின் பங்கு


ஈராக் அதிபர் சதாம் உசேனை ஒரு பெரிய மற்றும் உடனடி அச்சுறுத்தலாகக் கருதியதால், இஸ்ரேல் ஈரானுக்கு ரகசியமாக உதவியது. இந்த நடைமுறைவாதம், புதிதாக நிறுவப்பட்ட இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான சித்தாந்த விரோதப் போக்கை மீறி, இஸ்ரேலுக்கு ஒரு முக்கியமான, பன்முகப் பங்களிப்பை வழங்கியது. அந்நாடு, ஈரானுக்கு மிகவும் தேவைப்பட்ட உதிரி பாகங்கள், வெடிமருந்துகள் மற்றும் கனரக ஆயுதங்களை இரகசியமாக வழங்கி, அதன் இராணுவ உபகரணங்களுக்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்றாக மாறியது. 1980-ல், தரையிறக்கப்பட்டிருந்த அமெரிக்கத் தயாரிப்பான F-4 ஃபேன்டம் போர் விமானங்களை (F-4 Phantom fighter jets) இயக்கத்தில் வைத்திருக்க, ஈரானுக்கு நூற்றுக்கணக்கான உதிரி டயர்களை அது இரகசியமாக வழங்கியது. இந்த இரகசிய ஆயுத விற்பனைக்கு ஈடாக, இஸ்ரேல் ஈரானிய கச்சா எண்ணெயைப் பெற்றது. இது, 1979-ம் ஆண்டு எண்ணெய் நெருக்கடியால் ஏற்பட்ட கடுமையான எரிசக்தி பற்றாக்குறையை இஸ்ரேல் சமாளிக்க உதவியதுடன், ஈரான் தனது போர் முயற்சிகளைத் தொடரவும் வழிவகுத்தது. மேலும், இது இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அதன் ஆயுதங்களுக்கான மதிப்புமிக்க போர்க்காலச் சோதனைத் தரவுகளையும் வழங்கியது.

வலுவான மற்றும் நன்கு விநியோகிக்கப்பட்ட ஈரான், சதாம் ஹுசைனின் இராணுவத்தை வெற்றிகரமாக முடக்கி, ஈராக் அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுக்கும் என்று இஸ்ரேலியக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினர். பிராந்தியத்தின் மிகவும் விரோதமான இரு சக்திகளும் எட்டு ஆண்டுகளாகத் தங்கள் இராணுவ, பொருளாதார மற்றும் மனித வளங்களை மற்றொன்று அழித்துக்கொள்ள வழிவகுத்ததன் மூலம், இந்த மோதல் இஸ்ரேலுக்கு மிகவும் மதிப்புமிக்க ஒரு "இராஜதந்திர இடைவெளியை" (strategic breather) வழங்கியது. மேலும், இது சில சமயங்களில், பாரசீக யூத சமூகம் ஈரானிலிருந்து பாதுகாப்பாகவும் தடையின்றியும் வெளியேறுவதற்கு உதவியது.


ஈரான்-ஈராக் போர், ஷாவின் ஆட்சியின் கீழ் இருந்த தேசிய இராணுவத்தை பலவீனப்படுத்த ஈரானின் புரட்சிகர அதிகாரிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அதற்குப் பதிலாக 'செபாஹே-இ-பாஸ்தரன்' (Sepahe-e-Pasdaran) அல்லது இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையை உருவாக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியது. போரின் போது இது மேலும் மேலும் வலுப்பெற்றது. வழக்கமான ஆயுதப் படைகளின் எண்ணிக்கை சுமார் 3,55,000-ஆக இருந்தபோது, இதன் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தை (1 மில்லியன்) எட்டியது.


ஈரானின் உறுதிப்பாடு


ஈராக்-ஈரான் போரின் சவாலை எதிர்கொள்வதில் ஈரான் குறிப்பிடத்தக்க சாமர்த்தியத்தை வெளிப்படுத்தியது. அது அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, அவ்வப்போது நடந்த வான்வழித் தாக்குதல்களையும் மீறி தனது எண்ணெய் விநியோகத்தைத் தொடரச் செய்தது. அது ஆயுத விநியோக ஆதாரங்களைப் பன்முகப்படுத்தியதுடன், வசதி படைத்தவர்களையும் சந்தை வியாபாரிகளையும் நெருக்கியடித்தவாறே, போருக்கான மக்கள் ஆதரவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. இஸ்லாமியக் குடியரசை மதிப்பிடுவதற்கான ஒரே அளவுகோலாக இந்தப் போர் எல்லா வகையிலும் மாறியது.



முன்னாள் பிரதமர் மெஹ்தி பஸர்கனால் இணைந்து நிறுவப்பட்ட இஸ்லாமிய விடுதலை இயக்கம் (Islamic Liberation Movement) போன்ற அமைப்புகளிடமிருந்து போரின் நடத்தைக்கு சில பொது எதிர்ப்புகள் இருந்தன. அது போரின் தொடர்ச்சியை 'இஸ்லாமிய விரோதமானது' என்று முத்திரை குத்தியது. இதற்கிடையில், ஆளும் வர்க்கத்திற்கு நெருக்கமான வெளியீடுகளில் 'நிரந்தரமான நிர்வாகக் குழப்பம்' நிலவுவதைக் குறிக்கும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவை முடிவெடுப்பதில் 'நீண்டகால தெளிவின்மை' நிலவுவதையும் சுட்டிக்காட்டுகின்றன.


ஈராக் போரின்போதும், தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க-இஸ்ரேல் மோதலின்போதும் ஈரான் காட்டிய மனவுறுதியானது, இடர்பாடுகளைத் தாங்கி நின்று அவற்றை வென்றெடுக்கும் அதன் திறனுக்கும் உறுதிக்கும் போதுமான சான்றாகும். ஈரான் இப்பிராந்தியத்தில் தனது இடத்தை நிலைநாட்டியுள்ளதுடன், நாளைய உலகில் அது தனது நிலையை மறந்திருக்கவில்லை.


ஹமீத் அன்சாரி இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி ஆவார்.


Original article : A nation determined to endure and overcome -Hamid Ansari

Share:

'வளர்ந்த இந்தியா' (Viksit Bharat) இலக்கை அடைய, நீர் பாதுகாப்பு மிக முக்கியமானது - சி. ஆர். பாட்டீல்

 குடிநீர் வசதி, சுகாதாரம், நதிப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மறுநிரப்புதல், கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒரு சூழல் அமைப்பின் (ecosystem) பகுதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

'ஜல் ஜீவன் மிஷன்' (Jal Jeevan Mission) என்பது உலகின் மிகப்பெரிய கிராமப்புற குடிநீர் விநியோகத் திட்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது 'தூய்மை இந்தியா திட்டம்' (Swachh Bharat Mission (SBM)) என்பது உலகின் மிக முக்கியமான கிராமப்புற சுகாதார இயக்கம் என்பது தெரியுமா? இந்த முன்னெடுப்புகள் வெறும் அரசாங்கத் திட்டங்கள் மட்டுமல்ல, 145 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசம், நீர் பாதுகாப்பான எதிர்காலத்தை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதன் புதிய பரிமாணமாகவும் இவை திகழ்கின்றன.


மனித கண்ணியம், பொருளாதார வளர்ச்சி, பொது சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை நீர் செலுத்தும் தாக்கத்திற்கு இணையான தாக்கம் கொண்ட துறைகள் மிகக் குறைவு. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்தியாவின் நீர் தொடர்பான சவால்கள் சிதறிய அல்லது ஒருங்கிணைப்பற்ற முறையிலேயே கையாளப்பட்டு வந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறையும், அதற்கான முக்கியத்துவமும் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.


கடந்த 12 ஆண்டுகளில் நீர் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அளவு இணையற்றது. பல்வேறு துறைகள், மாநிலங்கள் மற்றும் சமூகங்களைக் கடந்து, நீர் இப்போது ஒரு கூட்டுத் தேசிய முன்னுரிமையாகக் கருதப்படுகிறது. முன்னதாக, நீர் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குறைந்த அளவே கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சியில், நீர் துறையில் திட்டமிடல், மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் நீண்டகாலமாக இருந்த பற்றாக்குறைகளை நிரப்பும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுள்ளது.


ஒரு முழுமையான மாற்றம்


இந்த மாற்றத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் 'ஜல் ஜீவன் திட்டம்' (Jal Jeevan Mission) ஆகும். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, ​​சுமார் 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே, அதாவது இந்தியாவின் கிராமப்புறக் குடும்பங்களில் 17% பேருக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு இருந்தது. இன்று, 15.8 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்கள், அதாவது இந்தியாவின் கிராமப்புறங்களில் 81% க்கும் அதிகமானோர், தங்கள் வீடுகளிலேயே குழாய் வழி குடிநீர் வசதியைப் பெற்றுள்ளனர். 2028-க்குள் 100% இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களைப் பொறுத்தவரை, இது வெறும் பயன்பாட்டுச் சேவை மட்டுமல்ல, இது அவர்களின் வாழ்க்கை முறையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.


முன்பு, இந்தியாவில் கிராமப்புறப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மணிநேரங்களை நீர் சேகரிப்பதிலேயே செலவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீடுகளுக்குக் குழாய் வழி குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், தினமும் 5.5 கோடிக்கும் அதிகமான மனித-மணிநேரங்கள் (person-hours) மிச்சப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நேரம் இப்போது கல்வி, வாழ்வாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் செலவிடப்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைத்ததன் மூலம், நீர் மூலம் பரவும் நோய்களுக்கான மருத்துவச் செலவுகள் குடும்பங்களுக்குக் குறைந்துள்ளன.


இதேபோன்று, 'தூய்மை இந்தியா திட்டம்' (SBM) இதேபோன்றதொரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் மாற்றம், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் அரசியல் உறுதிப்பாடு ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டால் பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இந்தியாவின் இந்தச் சுகாதாரத் திட்டம் நிரூபித்தது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2014 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலத்தில், 'தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம்' (SBM-Grameen) மூலம் வயிற்றுப்போக்கால் ஏற்படும் 3 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புறப் பெண்களுக்கு கண்ணியம், தனிநபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவை கிடைத்தன. கிராமங்களை 'திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத' நிலைக்கு உயர்த்தியதைத் தாண்டி, 'தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம் 2.0'-ன் கீழ் திட மற்றும் திரவக் கழிவுகளை நிலையான முறையில் நிர்வகிக்கும் திசையை நோக்கி நாடு நகர்ந்துள்ளது.



உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுநிரப்புதல் (groundwater recharge) முயற்சிகளில் ஒன்றையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. 'ஜல் சஞ்சய் ஜன் பாகிதாரி' (Jal Sanchay Jan Bhagidari) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுநிரப்புதலுக்கான 1.55 கோடிக்கும் அதிகமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளின் தாக்கம் நிலத்தடி நீர் நிலவரத்திலும் காணப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மறுநிரப்புதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் சமீபத்திய மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. சமூகப் பங்களிப்புடன் கூடிய தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சிகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைத் தணிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.


அதே வேளையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல தேசிய நீர் திட்டங்களில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. வறண்ட பந்தேல்கண்ட் (Bundelkhand) பகுதிக்கு நீரை கொண்டு வருவதற்கான நாட்டின் முதல் பெரிய நதிநீர் இணைப்புத் திட்டமான 'கென்-பெட்வா' (Ken-Betwa) திட்டம் மிக வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்கீழ், 'நமாமி கங்கை' (Namami Gange) திட்டம், சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், அரசு நாளொன்றுக்கு 4,260 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உயிரியல் ஆக்சிஜன் தேவையை (Biochemical Oxygen Demand(BOD)) 2017-ல் இருந்த நாளொன்றுக்கு 26 டன்களிலிருந்து (TPD) 2024-ல் 10.75 டன்களாகக் குறைத்துள்ளது. மேலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றத்தை 349 மில்லியன் லிட்டரிலிருந்து (MLD) 265.56 மில்லியம் லிட்டராகக் (MLD) குறைத்துள்ளது. இன்று மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளின்படி, கங்கை நதியின் pH அளவு மற்றும் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை, கண்காணிக்கப்படும் அனைத்து இடங்களிலும் குளிப்பதற்கு ஏற்ற தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன.


இக்காலகட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் இந்தியா பெற்றுள்ள அனுபவம் உலகிற்கு ஒரு முக்கியப் பாடத்தை வழங்குகிறது. 21-ம் நூற்றாண்டின் நீர் தொடர்பான சவால்களைத் தனித்தனி நடவடிக்கைகளின் மூலம் மட்டும் தீர்க்க முடியாது. குடிநீர் விநியோகம், சுகாதாரம், நதிப் பாதுகாப்பு, நீர்ப்பாசனத் திறன், நிலத்தடி நீர் மறுநிரப்புதல், கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு சூழல் அமைப்பின் பகுதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.


எதிர்காலப் பாதை


பருவநிலை மாற்றத்தைச் சந்திக்கும் சூழலில், இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா ஒரு தனித்துவமான சவாலை எதிர்கொள்கிறது. உலகின் மக்கள்தொகையில் சுமார் 18 சதவீதத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், உலகளாவிய நன்னீர் வளங்களில் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் வானிலை முறைகள் ஆகியவை வரும் காலகட்டங்களில் இந்த நீர் வளங்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.


எனவே, இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெறும் மேம்பாட்டுச் செலவுகள் மட்டுமல்ல, அவை நாட்டின் மீள்திறனை (resilience) உறுதி செய்வதற்கான நீண்டகால முதலீடுகளாகும். ஒரு பொதுவான தேசிய நோக்கத்தை அடைவதற்காகத் தன்னலமற்ற தலைமைத்துவம், பொறுப்புள்ள நிர்வாகம் மற்றும் மக்களின் தீவிரப் பங்கேற்பு ஆகியவை ஒன்றிணையும்போது எத்தகைய மகத்தான ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட முன்னேற்றம் நிரூபிக்கிறது.


எதிர்காலப் பயணத்திற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், மறுசுழற்சியை ஊக்குவித்தல், நீர் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அரசு தொடர்ந்து பாடுபடும்.


சி. ஆர். பாட்டீல், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சராக உள்ளார்.


Original article : Water security is central for a Viksit Bharat -C. R. Patil

Share:

சுகாதாரத் தரவுகள் (Health data) வெறும் தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும் - சந்திரகாந்த் லஹாரியா

 சுகாதாரத் தரவுகள் (Health data) பொறுப்புணர்வுத் தன்மை, நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக அமைய வேண்டும்.


இந்தியாவில் சுகாதாரக் கணக்கெடுப்புத் தரவுகள் (health survey data) வெளியிடப்படுவதில் ஒரு கவலைக்குரிய முரண்பாடு உள்ளது. இக்கணக்கெடுப்புகளின் முடிவுகள் பெரும்பாலும், அவை நடைமுறைப்படுத்த வேண்டிய பணிக்கு நேர்மாறான விளைவையே ஏற்படுத்துகின்றன. அவை பெரும்பாலும் நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையே முன்னிலைப்படுத்துகின்றன. சில துறைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையை அவை போதுமான தீவிரத்துடன் அணுகுவதில்லை. மேலும், சுகாதாரத் திட்டங்களில் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவை அரிதாகவே வழிவகுக்கின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களும் பெரும்பாலும் வழக்கமான நடைமுறையாகவே அமைகின்றன. அரசு தனது சாதனைகளை முன்னிலைப்படுத்துகிறது, செய்தித்தாள்கள் புள்ளிவிவரங்களை விரிவாக வெளியிடுகின்றன, கல்வியாளர்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய மூலத் தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்தை வாய்ப்புகளை ஆய்வு செய்கின்றன.


சமீபத்தில் வெளியிடப்பட்ட சுகாதாரத் தொடர்புடைய மூன்று கணக்கெடுப்புகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதில், தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey(NFHS)), தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) 80-வது சுற்று 'குடும்பங்களின் சுகாதாரச் செலவினம்' குறித்த அறிக்கை மற்றும் இந்தியாவின் தேசிய சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகள் (2022-23) (Household Consumption on Health and the National Health Accounts Estimates for India) ஆகியவை அடங்கும். 



இம்மூன்றுமே நாட்டின் தற்போதைய நிலையைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சுகாதாரச் செலவினங்கள் குறித்த இரண்டு அறிக்கைகளும் பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை. அதேவேளையில், மூன்றாவது அறிக்கையான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS)-ஐ முக்கியத் தரப்பினர் கையாண்ட விதம் ஆகியவை வழக்கமான ஒரு நடைமுறையையே பின்பற்றுகின்றன. அரசின் தகவல்தொடர்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில முன்னேற்றங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றன. சாதனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட வேண்டியவைதான். இருப்பினும், இத்தகைய கணக்கெடுப்புகளின் உண்மையான மதிப்பு, எவை சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துவதில் இல்லை. மாறாக, மாறாக, எந்தெந்தத் திட்டங்கள் இன்னும் பலவீனமாக உள்ளன என்பதைக் கண்டறிவதில்தான் உள்ளன என்பதையும், பழைய உத்திகள் இனி போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதில்தான் அவற்றின் உண்மையான மதிப்பு அடங்கியுள்ளது.


நோயை மையமாகக் கொண்ட வணிகம்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS)-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வளர்ந்துவரும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தொழில் மற்றும் வணிகக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளன. உடல் பருமன் அதிகரிப்பு என்பது உடல் எடையைக் குறைக்கும் தயாரிப்புகள், மொபைல் செயலிகள் (apps), உடற்பயிற்சி நிலையங்கள், பரிசோதனைச் சேவைகள் மற்றும் மருந்துகளுக்கான ஒரு வணிக விற்பனை நிலையமாக மாறுகிறது. நீரிழிவு நோய் (diabetes) அதிகரிப்பு என்பது கண்காணிப்புக் கருவிகள், பரிசோதனைத் தொகுப்புகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான வாய்ப்பாக அமைகிறது. தொற்றா நோய்களின் (non-communicable diseases (NCD)) அதிகரிப்பு என்பது கூடுதல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான சந்தை வாய்ப்பாக மாறுகிறது. பொது சுகாதார விழிப்புணர்வு பலவீனமாகவும், தனியார் சுகாதாரச் சந்தைகள் தீவிரமாகவும் இருக்கும் சூழலில், ஒவ்வொரு கணக்கெடுப்பு முடிவும் ஒரு வணிக வாய்ப்பாக மாறக்கூடும்.



இதுவரை ஏற்பட்டுள்ள ஒரே நேர்மறையான விஷயம் என்னவென்றால், அச்சு ஊடகங்களில் வெளியான விரிவான செய்திகள்தான். இவை குடிமக்களுக்கு முக்கியமான விஷயங்களை, குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தொற்றா நோய்களின் (NCD) அதிகரிப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இதில் பல விஷயங்கள் ஏற்கனவே அறியப்பட்டவையே. உடல் பருமன் மற்றும் பிற தொற்றா நோய்கள் நகர்ப்புற மற்றும் வசதி படைத்த பிரிவினரிடமிருந்து அனைத்து சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவினருக்கும் பரவியுள்ளன. நீண்டகாலமாக அறியப்பட்ட ஒரு பிரச்சினைக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மட்டுமே இந்த புதிய தரவுகள் வழங்குகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த முடிவுகள் ஆழமான விமர்சனங்களும் கொள்கைரீதியான விவாதங்களும் இல்லாதது ஒரு பெரும் குறையாகும். இது நம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டும். ஒரு சுகாதாரக் கணக்கெடுப்பு என்பது, நன்கு அறியப்பட்ட பிரச்சனைகளைத் தேசிய அளவில் நினைவூட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக, கொள்கைகளைச் சரிசெய்யவும், சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் அது உதவுகிறது. இரத்த சோகை விகிதங்களில் முன்னேற்றம் இல்லையென்றால், அதற்கான எதிர்வினை ஒரு அறிக்கையில் உள்ள பத்தியுடன் நின்றுவிடக் கூடாது. சொந்தப் பணச் செலவு அதிகமாகவே இருந்தால் (out-of-pocket expenditure), குறைந்துவரும் சதவீதப் பங்கு குறித்த ஒரு தலைப்புச் செய்தியாக மட்டும் பதில் இருக்க முடியாது. குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்தால், சில செய்தித் தாள்களில் அது குறித்த செய்திகள் வெளியான பிறகு அமைதி காப்பது தீர்வாகாது.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS) இலும் காலதாமதம் தொடர்பான ஒரு சிக்கலும் உள்ளது. இதற்கான தரவுகள் 2023-24-ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்டன. ஆனால், அதன் கண்டுபிடிப்புகள் 2026-ம் ஆண்டின் மத்தியில்தான் பொது விவாதத்திற்கு வந்தன. பெருமைகளைத் தமதாக்கிக்கொள்வதிலும், பொறுப்பிலிருந்து நழுவுவதிலும் வல்லமை பெற்ற ஒரு அரசியல் சூழலில், இத்தகைய காலதாமதம் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக அமைகிறது. ஒரு அரசாங்கம் சாதகமான குறியீடுகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை தனது தற்போதைய கொள்கைகளின் வெற்றிக்கான சான்றாக முன்வைக்க முடியும். அதே வேளையில், சங்கடமான முடிவுகளை "பழைய தரவுகள்" என்று கூறிப் புறக்கணிக்கவும் முடியும். கோவிட்-19 பெருந்தொற்று, கடந்தகால நிர்வாகச் சீர்குலைவுகள் அல்லது தற்போது மேம்பட்டுள்ள சூழல்கள் ஆகியவற்றால் இந்த முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வாதிடவும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, இந்தக் கணக்கெடுப்பு ஒரு வழிகாட்டியாக இருப்பதை விட, ஒரு அரசியல் ஆயுதமாக மாறுகிறது. இது கணக்கெடுப்பிற்கு இழைக்கப்படும் அநீதியாகும். மேலும், இது பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு உதவாது.


அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, பெரிய அளவிலான கணக்கெடுப்புத் தரவுகளைப் புரிந்துகொள்வதில் கல்வியாளர்களும் பொது சுகாதார ஆராய்ச்சியாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், இந்தியாவில், மூலத் தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதால், அத்தகைய தரவுப் பகுப்பாய்வு பெரும்பாலும் தாமதமாகிறது. சக ஆய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள் (peer-reviewed studies) வெளிவரும் நேரத்தில், தரவுகள் சேகரிக்கப்பட்டு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கலாம். அப்போது கொள்கை வகுப்பாளர்கள், முக்கியமான கண்டுபிடிப்புகளைக் காலாவதியானவை என்றும் இனி பொருத்தமற்றவை என்றும் கூறி நிராகரிக்கக்கூடும். இதன் விளைவாக, அந்தத் தரவுகள் தங்கள் தாக்கத்தின் பெரும்பகுதியை இழக்கின்றன. ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்படும்போது, ​​சுதந்திரமான ஆய்வுக்குத் தேவையான மூலத் தரவுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. விரிவான பகுப்பாய்வு முடிவுகள் இறுதியாகக் கிடைக்கும்போது, ​​சரியான நேரத்தில் கொள்கைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் நழுவிப்போயிருக்கும்.


தரவுகளிலிருந்து செயல் வரை


இந்தியா ஏன் இத்தகைய வாய்ப்புகளைத் தொடர்ந்து தவறவிடுகிறது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். சுகாதாரத் தரவுகள், சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான கொள்கை முடிவுகளுடன் இணைக்கப்படும்போது மட்டுமே சுகாதார விளைவுகளை மேம்படுத்துகின்றன. சுகாதாரத் தரவுகளைத் திறம்படப் பயன்படுத்தும் நாடுகள், சரியான கல்விசார் கட்டுரைகளுக்காகவோ அல்லது திட்டவட்டமான தீர்வுகளுக்காகவோ பல ஆண்டுகள் காத்திருப்பதில்லை. மாறாக, அவை வலுவான அமைப்புகளையும், அதிகாரம் பெற்ற நிறுவனங்களையும் கொண்டுள்ளன. அவை விரைவான கொள்கை விளக்கக் குறிப்புகளை (policy briefs) உருவாக்குகின்றன. பின்தங்கிய மாவட்டங்களையும், பிராந்தியங்களையும் அடையாளம் காண்கின்றன, வழக்கமான ஆய்வுகளை நடத்துகின்றன, பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை ஒப்பிடுகின்றன, வளங்களைத் திறமையாக ஒதுக்குகின்றன மற்றும் தேவைக்கேற்ப திட்டங்களை மாற்றியமைக்கின்றன. தரவைச் செயல்வடிவமாக்குவது என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு செயல்முறையாகும். இந்தியா, தான் சேகரிக்கும் பெருமளவிலான சுகாதாரத் தரவுகளின் முழு பலனையும் அடைய விரும்பினால், இத்தகைய செயல்முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


முதலில், ஒவ்வொரு பெரிய தேசிய சுகாதார கணக்கெடுப்பைத் தொடர்ந்தும், 30 முதல் 45 நாட்களுக்குள், அரசாங்கமும் சுதந்திரமான கல்வி நிறுவனங்களும் இணைந்து ஒரு தேசிய மற்றும் மாநில அளவிலான செயல்வடிவக் குறிப்பை (action note) வெளியிட வேண்டும். அந்தக் குறிப்பு, எது மேம்பட்டுள்ளது?, எது தேக்கமடைந்துள்ளது? மற்றும் எது மோசமடைந்துள்ளது? என்பதை வெளிப்படையாக அடையாளம் காட்ட வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துடனும், தெளிவாகப் பொறுப்புணர்வுரீதியான ஒரு அதிகார அமைப்புடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து தேக்கமடைந்திருந்தால், ஊட்டச்சத்துத் திட்டம் அதற்குப் பதிலளிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிதல் போதுமானதாக இல்லை என்றால், ஆரம்ப சுகாதார அமைப்பு அதற்குப் பதிலளிக்க வேண்டும். மருந்துகளுக்கான நேரடிச் செலவு அதிகமாக இருந்தால், மருந்து கொள்முதல் அமைப்பு அதற்குப் பதிலளிக்க வேண்டும். தரவுகள் பிரச்சனைகளை வெறுமனே விவரிக்கக் கூடாது. அவை பொறுப்புணர்வையும் திருத்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கவும் வேண்டும்.


இரண்டாவதாக, மாநில அளவிலான சுகாதாரத் தரவு மறுஆய்வுக் கூட்டங்கள், வழக்கமான நடைமுறை நிகழ்வுகளாக இல்லாமல், தீர்வுகளை மையமாகக் கொண்ட ஆக்கபூர்வமான கூட்டங்களாக இருக்க வேண்டும். சுகாதாரத் துறை செயலாளர்கள், நிதித் துறைகள், மாவட்ட அதிகாரிகள், பொது சுகாதார வல்லுநர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள், பிற முக்கியப் பங்குதாரர்கள் மற்றும் சுதந்திரமான துறை வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். கேள்வி, “நாம் எதை முன்னிலைப்படுத்தலாம்?” என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, "நாம் எதை மாற்ற வேண்டும்?" என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.



மூன்றாவதாக, கணக்கெடுப்புத் தரவுகளை உகந்த முறையிலும் சரியான நேரத்திலும் பயன்படுத்துவதற்கான அமைப்புகள் இந்தியாவிற்குத் தேவை. இந்தியா, ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தை (Integrated Health Information Platform (IHIP)) உருவாக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அது முதன்மையாக நேரடித் தரவுகளுக்கானது. பகுப்பாய்வுத் தகவல்களை உருவாக்க, கணக்கெடுப்புத் தரவுகள், சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) தரவுகள் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் (IHIP) தொடர்பான தரவுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும். பகுதியளவான தரவுகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குகின்றன.


நான்காவதாக, கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்படும் முதன்மைத் தரவுகளும் மூலக் கோப்புகளும் முன்கூட்டியே கிடைக்கச் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சுதந்திரமான ஆய்வாளர்களும் பொது நிறுவனங்களும் விரைவான பகுப்பாய்வை உருவாக்க முடியும். தீவிரமான விளக்கம் அளிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தரவுகள் ஒரு பாதுகாக்கப்பட்ட கோப்பு போல முடங்கிக் கிடக்கக் கூடாது. அவை ஒரு பொது நன்மையாகக் கிடைக்க வேண்டும்.


ஐந்தாவதாக, கணக்கெடுப்பு முடிவுகள் நிதி ஒதுக்கீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு கணக்கெடுப்பு, தொற்றா நோய்கள் (NCDs) அதிகரித்து வருவதைக் காட்டினால், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உள்ள தேவையை முதன்மை மருத்துவப் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் பிரதிபலிக்க வேண்டும். குடும்பங்கள் மருந்துகளுக்காக அதிக செலவு செய்தால், பொது மருத்துவ வசதிகள் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்தால், பள்ளி சுகாதாரம், உணவு ஒழுங்குமுறை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவை அதற்குப் பதிலளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாத தரவுகள் வெறும் தகவல்களாகவே இருக்கின்றன.


எதிர்காலத்தை நோக்குதல்


பொருளாதார நிபுணர் ஆரோன் லெவன்ஸ்டைன் 1951-ல், “புள்ளிவிவரங்கள் நீச்சலுடைகளைப் போன்றவை. அவை வெளிப்படுத்துவது தூண்டுதலாக இருக்கலாம், ஆனால் அவை மறைப்பது மிக முக்கியமானது” என்று கூறினார். மாறாக, சுகாதாரத் தரவுகள் ஒரு எக்ஸ்-ரே போல இருக்க வேண்டும். அவை சரியாக விளக்கப்பட்டு, நேர்மையாக விவாதிக்கப்பட்டு, கொள்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தரவுகளும் புள்ளிவிவரங்களும் அவற்றின் விளக்கத்தைப் பொறுத்தே பயனுள்ளதாக அமைகின்றன. ஒரு விளக்கம் அது வழிவகுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தே பயனுள்ளதாக அமைகிறது. அடுத்த முறை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும்போது, ​​எண்கள் என்ன காட்டுகின்றன என்பது உண்மையான கேள்வியாக இருக்கக்கூடாது. அதாவது ஒரு மாதம், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு திட்டங்களில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதே உண்மையான கேள்வியாக இருக்க வேண்டும். இதனுடன், இந்தியாவிற்கு நிச்சயமாக மேலும் சரியான நேரத்தில் சுகாதாரத் தரவுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், நமக்கு இதைவிட அதிகமாகத் தேவைப்படுவது பொறுப்புணர்வு ஆகும்.


டாக்டர் சந்திரகாந்த் லஹரியா, தடுப்பு மற்றும் இருதய-வளர்சிதை மாற்ற மருத்துவத்தில் பயிற்சி பெறும் மருத்துவர் மற்றும் சுகாதாரக் கொள்கை நிபுணர் ஆவார். அவர் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐ.நா. அமைப்புடன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.


Original article : Health data must drive action, not just headlines -Chandrakant Lahariya

Share: