இருமல் மருந்துகள் குறித்து, நீண்டகால தாமதமாக ஒரு பரிந்துரை.

 மருந்துப் பரிந்துரை விதிமுறையானது (prescription rule) கடுமையான அமலாக்கம், மருந்துகளின் பாதகமான விளைவுகளைப் புகாரளிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் கிராமப்புற சுகாதாரப் பராமரிப்பில் முதலீடு ஆகியவற்க்கு ஏற்ப வேண்டும். நெருக்கடி மேலாண்மையைவிட நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஒழுங்குமுறை அமைப்பின்மீது நமது அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மருந்து விதிகளின், (Drugs Rules, 1945) அட்டவணை K-ல் இருந்து இருமல் மருந்துகளை நீக்க ஒன்றிய அரசு செய்துள்ளது. இது, நீண்டகாலமாக நிலவி வந்த மருந்து கட்டுப்பாட்டு குறைபாட்டை தாமதமாக இருந்தாலும் சரிசெய்யும் முக்கிய நடவடிக்கையாகும். இந்த ஒழுங்குமுறை தோல்வி பல துயரமான சம்பவங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற முழுவதும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஜம்முவிலும் இதேபோன்ற உயிரிழப்புகள் நிகழ்ந்தன. சர்வதேச அளவிலான களங்கமான பதிவுகளுக்கு மேலாக, நாட்டிற்குள் ஏற்பட்ட பேரிடர்களும் கூடுதலாகச் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. 2022-ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளன.

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் இருமல் மருந்துகள் ஒரு முரண்பாடான இடத்தைப் (anomalous position) பிடித்துள்ளன. அவை மருந்துகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், பல மருந்துக் கலவைகள் குறிப்பாக அட்டவணை K-ன் 13-வது பிரிவின்கீழ் இருப்பவை, உரிமம் பெற்ற மருந்தகங்களைவிடக் குறைவான மேற்பார்வைக்கு உட்பட்ட வழிகள் மூலம் விற்பனை செய்ய உதவும் விலக்குகளைப் பெற்றன. இது தானாக மருந்து எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம், மருத்துவர் பரிந்துரைகளை முறையாகப் பின்பற்றாத நடைமுறை மற்றும் மருந்து விநியோகச் சங்கிலியில் நிலவிவரும் பிளவுபட்டு இருக்கும் பொறுப்பின்மை (fragmented accountability) போன்ற பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நலிவடைந்த சமூகங்கள், 1,000-க்கும் குறைவான மக்கள்தொகைக் கொண்ட கிராமங்களில் மருந்தின் விற்பனை அனுமதிக்கப்பட்டதால், கிராமங்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தது வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில், கேள்விக்குட்பட்ட கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தில், அனுமதிக்கப்பட்ட வரம்புகளைவிட மிக அதிகமாக டையெத்திலீன் கிளைக்கால் (diethylene glycol) இருப்பது கண்டறியப்பட்டது. சட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், மருந்துகளைப் பெறுவதற்கான அனைத்து வழிகளிலும் ஒரு மாற்றத்தை  கொண்டு வருகிறது. கோடீன் போன்ற வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மருந்துகளைக் (opioids) கொண்ட இருமல் மருந்துகள் உட்பட, சிரப் வடிவில் உள்ள அனைத்து மருந்துகளையும் இனி மருந்துச்சீட்டு இல்லாமல் நேரடியாக வாங்க முடியாது.


Opioids என்றால் என்ன?


Opioids என்பது வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மருந்துகள் ஆகும். இவை இயற்கையாக ஓபியம் (Opium) செடியிலிருந்து பெறப்படலாம் அல்லது செயற்கையாக தயாரிக்கப்படலாம். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி மற்றும் புற்றுநோய் வலி போன்றவற்றைக் குறைக்க இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.


இருப்பினும், மருந்துச் சீட்டுக் கட்டாயம் என்பது மட்டுமே போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் மருந்து ஒழுங்குமுறையானது, ஒன்றிய-மாநில ஒருங்கிணைப்புக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், துயரச் சம்பவங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் விசாரணைகள், தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளன. இது, வேகமாக விரிவடைந்து வரும் மருந்துத் துறையைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளின் திறன் குறித்த முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவின்  கிராமப்புற பகுதிகள் குறித்தும் கவலைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. கிராமப்புற பகுதிகளில் சுகாதார வசதிகளுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல், மக்களை உரிமம் இல்லாத விற்பனையாளர்களை நோக்கி செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, புதிய விதிமுறை கடுமையான அமலாக்கம், பாதகமான  நிகழ்வுகள் தொடர்பான அறிக்கைகளில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் இந்தியாவின்  கிராமப்புற சுகாதார வசதிகளில் முதலீடு போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். நமது அரசு நெருக்கடி ஏற்பட்டபிறகு அதை சமாளிப்பதைவிட, நோயாளிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு ஒழுங்குமுறை கலாச்சாரத்தை (regulatory culture) உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


Original article : On cough syrups, a long overdue prescription.

Share: