குடிநீர் வசதி, சுகாதாரம், நதிப் பாதுகாப்பு, நிலத்தடி நீர் மறுநிரப்புதல், கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய ஒரு சூழல் அமைப்பின் (ecosystem) பகுதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
'ஜல் ஜீவன் மிஷன்' (Jal Jeevan Mission) என்பது உலகின் மிகப்பெரிய கிராமப்புற குடிநீர் விநியோகத் திட்டம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது 'தூய்மை இந்தியா திட்டம்' (Swachh Bharat Mission (SBM)) என்பது உலகின் மிக முக்கியமான கிராமப்புற சுகாதார இயக்கம் என்பது தெரியுமா? இந்த முன்னெடுப்புகள் வெறும் அரசாங்கத் திட்டங்கள் மட்டுமல்ல, 145 கோடி மக்கள் கொண்ட ஒரு தேசம், நீர் பாதுகாப்பான எதிர்காலத்தை எவ்வாறு கட்டமைக்கிறது என்பதன் புதிய பரிமாணமாகவும் இவை திகழ்கின்றன.
மனித கண்ணியம், பொருளாதார வளர்ச்சி, பொது சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை நீர் செலுத்தும் தாக்கத்திற்கு இணையான தாக்கம் கொண்ட துறைகள் மிகக் குறைவு. இருப்பினும், பல ஆண்டுகளாக இந்தியாவின் நீர் தொடர்பான சவால்கள் சிதறிய அல்லது ஒருங்கிணைப்பற்ற முறையிலேயே கையாளப்பட்டு வந்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள ஒருங்கிணைந்த அணுகுமுறையும், அதற்கான முக்கியத்துவமும் சமீபத்திய ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் நீர் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் அளவு இணையற்றது. பல்வேறு துறைகள், மாநிலங்கள் மற்றும் சமூகங்களைக் கடந்து, நீர் இப்போது ஒரு கூட்டுத் தேசிய முன்னுரிமையாகக் கருதப்படுகிறது. முன்னதாக, நீர் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குறைந்த அளவே கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதமர் மோடியின் ஆட்சியில், நீர் துறையில் திட்டமிடல், மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் நீண்டகாலமாக இருந்த பற்றாக்குறைகளை நிரப்பும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுள்ளது.
ஒரு முழுமையான மாற்றம்
இந்த மாற்றத்திற்கு மிகச் சிறந்த உதாரணம் 'ஜல் ஜீவன் திட்டம்' (Jal Jeevan Mission) ஆகும். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, சுமார் 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு மட்டுமே, அதாவது இந்தியாவின் கிராமப்புறக் குடும்பங்களில் 17% பேருக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு இருந்தது. இன்று, 15.8 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்கள், அதாவது இந்தியாவின் கிராமப்புறங்களில் 81% க்கும் அதிகமானோர், தங்கள் வீடுகளிலேயே குழாய் வழி குடிநீர் வசதியைப் பெற்றுள்ளனர். 2028-க்குள் 100% இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களைப் பொறுத்தவரை, இது வெறும் பயன்பாட்டுச் சேவை மட்டுமல்ல, இது அவர்களின் வாழ்க்கை முறையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
முன்பு, இந்தியாவில் கிராமப்புறப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மணிநேரங்களை நீர் சேகரிப்பதிலேயே செலவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீடுகளுக்குக் குழாய் வழி குடிநீர் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், தினமும் 5.5 கோடிக்கும் அதிகமான மனித-மணிநேரங்கள் (person-hours) மிச்சப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நேரம் இப்போது கல்வி, வாழ்வாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் செலவிடப்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைத்ததன் மூலம், நீர் மூலம் பரவும் நோய்களுக்கான மருத்துவச் செலவுகள் குடும்பங்களுக்குக் குறைந்துள்ளன.
இதேபோன்று, 'தூய்மை இந்தியா திட்டம்' (SBM) இதேபோன்றதொரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் மாற்றம், பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் அரசியல் உறுதிப்பாடு ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டால் பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை இந்தியாவின் இந்தச் சுகாதாரத் திட்டம் நிரூபித்தது. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2014 முதல் அக்டோபர் 2019 வரையிலான காலத்தில், 'தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம்' (SBM-Grameen) மூலம் வயிற்றுப்போக்கால் ஏற்படும் 3 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டதன் மூலம் லட்சக்கணக்கான கிராமப்புறப் பெண்களுக்கு கண்ணியம், தனிநபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவை கிடைத்தன. கிராமங்களை 'திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத' நிலைக்கு உயர்த்தியதைத் தாண்டி, 'தூய்மை இந்தியா திட்டம் - கிராமப்புறம் 2.0'-ன் கீழ் திட மற்றும் திரவக் கழிவுகளை நிலையான முறையில் நிர்வகிக்கும் திசையை நோக்கி நாடு நகர்ந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுநிரப்புதல் (groundwater recharge) முயற்சிகளில் ஒன்றையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. 'ஜல் சஞ்சய் ஜன் பாகிதாரி' (Jal Sanchay Jan Bhagidari) திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுநிரப்புதலுக்கான 1.55 கோடிக்கும் அதிகமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளின் தாக்கம் நிலத்தடி நீர் நிலவரத்திலும் காணப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மறுநிரப்புதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையும், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் சமீபத்திய மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. சமூகப் பங்களிப்புடன் கூடிய தொடர்ச்சியான பாதுகாப்பு முயற்சிகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைத் தணிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.
அதே வேளையில், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல தேசிய நீர் திட்டங்களில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. வறண்ட பந்தேல்கண்ட் (Bundelkhand) பகுதிக்கு நீரை கொண்டு வருவதற்கான நாட்டின் முதல் பெரிய நதிநீர் இணைப்புத் திட்டமான 'கென்-பெட்வா' (Ken-Betwa) திட்டம் மிக வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்கீழ், 'நமாமி கங்கை' (Namami Gange) திட்டம், சுற்றுச்சூழல் மீட்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், அரசு நாளொன்றுக்கு 4,260 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. உயிரியல் ஆக்சிஜன் தேவையை (Biochemical Oxygen Demand(BOD)) 2017-ல் இருந்த நாளொன்றுக்கு 26 டன்களிலிருந்து (TPD) 2024-ல் 10.75 டன்களாகக் குறைத்துள்ளது. மேலும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றத்தை 349 மில்லியன் லிட்டரிலிருந்து (MLD) 265.56 மில்லியம் லிட்டராகக் (MLD) குறைத்துள்ளது. இன்று மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளின்படி, கங்கை நதியின் pH அளவு மற்றும் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை, கண்காணிக்கப்படும் அனைத்து இடங்களிலும் குளிப்பதற்கு ஏற்ற தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன.
இக்காலகட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் இந்தியா பெற்றுள்ள அனுபவம் உலகிற்கு ஒரு முக்கியப் பாடத்தை வழங்குகிறது. 21-ம் நூற்றாண்டின் நீர் தொடர்பான சவால்களைத் தனித்தனி நடவடிக்கைகளின் மூலம் மட்டும் தீர்க்க முடியாது. குடிநீர் விநியோகம், சுகாதாரம், நதிப் பாதுகாப்பு, நீர்ப்பாசனத் திறன், நிலத்தடி நீர் மறுநிரப்புதல், கழிவுநீர் மறுபயன்பாடு மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு சூழல் அமைப்பின் பகுதிகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
எதிர்காலப் பாதை
பருவநிலை மாற்றத்தைச் சந்திக்கும் சூழலில், இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா ஒரு தனித்துவமான சவாலை எதிர்கொள்கிறது. உலகின் மக்கள்தொகையில் சுமார் 18 சதவீதத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், உலகளாவிய நன்னீர் வளங்களில் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல் மற்றும் மாறிவரும் வானிலை முறைகள் ஆகியவை வரும் காலகட்டங்களில் இந்த நீர் வளங்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே, இன்று மேற்கொள்ளப்படும் முதலீடுகள் வெறும் மேம்பாட்டுச் செலவுகள் மட்டுமல்ல, அவை நாட்டின் மீள்திறனை (resilience) உறுதி செய்வதற்கான நீண்டகால முதலீடுகளாகும். ஒரு பொதுவான தேசிய நோக்கத்தை அடைவதற்காகத் தன்னலமற்ற தலைமைத்துவம், பொறுப்புள்ள நிர்வாகம் மற்றும் மக்களின் தீவிரப் பங்கேற்பு ஆகியவை ஒன்றிணையும்போது எத்தகைய மகத்தான ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட முன்னேற்றம் நிரூபிக்கிறது.
எதிர்காலப் பயணத்திற்குத் தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், மறுசுழற்சியை ஊக்குவித்தல், நீர் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் ஆகியவற்றில் அரசு தொடர்ந்து பாடுபடும்.
சி. ஆர். பாட்டீல், மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சராக உள்ளார்.
Original article : Water security is central for a Viksit Bharat -C. R. Patil