சுகாதாரத் தரவுகள் (Health data) வெறும் தலைப்புச் செய்திகளுக்கு மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும் - சந்திரகாந்த் லஹாரியா

 சுகாதாரத் தரவுகள் (Health data) பொறுப்புணர்வுத் தன்மை, நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதாக அமைய வேண்டும்.


இந்தியாவில் சுகாதாரக் கணக்கெடுப்புத் தரவுகள் (health survey data) வெளியிடப்படுவதில் ஒரு கவலைக்குரிய முரண்பாடு உள்ளது. இக்கணக்கெடுப்புகளின் முடிவுகள் பெரும்பாலும், அவை நடைமுறைப்படுத்த வேண்டிய பணிக்கு நேர்மாறான விளைவையே ஏற்படுத்துகின்றன. அவை பெரும்பாலும் நமக்கு ஏற்கனவே தெரிந்தவற்றையே முன்னிலைப்படுத்துகின்றன. சில துறைகளில் முன்னேற்றம் இல்லாத நிலையை அவை போதுமான தீவிரத்துடன் அணுகுவதில்லை. மேலும், சுகாதாரத் திட்டங்களில் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவை அரிதாகவே வழிவகுக்கின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் விவாதங்களும் பெரும்பாலும் வழக்கமான நடைமுறையாகவே அமைகின்றன. அரசு தனது சாதனைகளை முன்னிலைப்படுத்துகிறது, செய்தித்தாள்கள் புள்ளிவிவரங்களை விரிவாக வெளியிடுகின்றன, கல்வியாளர்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய மூலத் தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள் சந்தை வாய்ப்புகளை ஆய்வு செய்கின்றன.


சமீபத்தில் வெளியிடப்பட்ட சுகாதாரத் தொடர்புடைய மூன்று கணக்கெடுப்புகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இதில், தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey(NFHS)), தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) 80-வது சுற்று 'குடும்பங்களின் சுகாதாரச் செலவினம்' குறித்த அறிக்கை மற்றும் இந்தியாவின் தேசிய சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகள் (2022-23) (Household Consumption on Health and the National Health Accounts Estimates for India) ஆகியவை அடங்கும். 



இம்மூன்றுமே நாட்டின் தற்போதைய நிலையைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சுகாதாரச் செலவினங்கள் குறித்த இரண்டு அறிக்கைகளும் பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை. அதேவேளையில், மூன்றாவது அறிக்கையான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS)-ஐ முக்கியத் தரப்பினர் கையாண்ட விதம் ஆகியவை வழக்கமான ஒரு நடைமுறையையே பின்பற்றுகின்றன. அரசின் தகவல்தொடர்புகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில முன்னேற்றங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றன. சாதனைகள் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட வேண்டியவைதான். இருப்பினும், இத்தகைய கணக்கெடுப்புகளின் உண்மையான மதிப்பு, எவை சிறப்பாகச் செயல்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துவதில் இல்லை. மாறாக, மாறாக, எந்தெந்தத் திட்டங்கள் இன்னும் பலவீனமாக உள்ளன என்பதைக் கண்டறிவதில்தான் உள்ளன என்பதையும், பழைய உத்திகள் இனி போதுமானதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதில்தான் அவற்றின் உண்மையான மதிப்பு அடங்கியுள்ளது.


நோயை மையமாகக் கொண்ட வணிகம்


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS)-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வளர்ந்துவரும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தொழில் மற்றும் வணிகக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியுள்ளன. உடல் பருமன் அதிகரிப்பு என்பது உடல் எடையைக் குறைக்கும் தயாரிப்புகள், மொபைல் செயலிகள் (apps), உடற்பயிற்சி நிலையங்கள், பரிசோதனைச் சேவைகள் மற்றும் மருந்துகளுக்கான ஒரு வணிக விற்பனை நிலையமாக மாறுகிறது. நீரிழிவு நோய் (diabetes) அதிகரிப்பு என்பது கண்காணிப்புக் கருவிகள், பரிசோதனைத் தொகுப்புகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான வாய்ப்பாக அமைகிறது. தொற்றா நோய்களின் (non-communicable diseases (NCD)) அதிகரிப்பு என்பது கூடுதல் பரிசோதனைகள் மற்றும் மருத்துவச் சேவைகளுக்கான சந்தை வாய்ப்பாக மாறுகிறது. பொது சுகாதார விழிப்புணர்வு பலவீனமாகவும், தனியார் சுகாதாரச் சந்தைகள் தீவிரமாகவும் இருக்கும் சூழலில், ஒவ்வொரு கணக்கெடுப்பு முடிவும் ஒரு வணிக வாய்ப்பாக மாறக்கூடும்.



இதுவரை ஏற்பட்டுள்ள ஒரே நேர்மறையான விஷயம் என்னவென்றால், அச்சு ஊடகங்களில் வெளியான விரிவான செய்திகள்தான். இவை குடிமக்களுக்கு முக்கியமான விஷயங்களை, குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற தொற்றா நோய்களின் (NCD) அதிகரிப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளன. இருப்பினும், இதில் பல விஷயங்கள் ஏற்கனவே அறியப்பட்டவையே. உடல் பருமன் மற்றும் பிற தொற்றா நோய்கள் நகர்ப்புற மற்றும் வசதி படைத்த பிரிவினரிடமிருந்து அனைத்து சமூக மற்றும் பொருளாதாரப் பிரிவினருக்கும் பரவியுள்ளன. நீண்டகாலமாக அறியப்பட்ட ஒரு பிரச்சினைக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை மட்டுமே இந்த புதிய தரவுகள் வழங்குகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகள் குறித்த முடிவுகள் ஆழமான விமர்சனங்களும் கொள்கைரீதியான விவாதங்களும் இல்லாதது ஒரு பெரும் குறையாகும். இது நம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டும். ஒரு சுகாதாரக் கணக்கெடுப்பு என்பது, நன்கு அறியப்பட்ட பிரச்சனைகளைத் தேசிய அளவில் நினைவூட்டுவதற்காக மட்டும் நடத்தப்படுவதில்லை. மாறாக, கொள்கைகளைச் சரிசெய்யவும், சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும் அது உதவுகிறது. இரத்த சோகை விகிதங்களில் முன்னேற்றம் இல்லையென்றால், அதற்கான எதிர்வினை ஒரு அறிக்கையில் உள்ள பத்தியுடன் நின்றுவிடக் கூடாது. சொந்தப் பணச் செலவு அதிகமாகவே இருந்தால் (out-of-pocket expenditure), குறைந்துவரும் சதவீதப் பங்கு குறித்த ஒரு தலைப்புச் செய்தியாக மட்டும் பதில் இருக்க முடியாது. குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்தால், சில செய்தித் தாள்களில் அது குறித்த செய்திகள் வெளியான பிறகு அமைதி காப்பது தீர்வாகாது.


தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS) இலும் காலதாமதம் தொடர்பான ஒரு சிக்கலும் உள்ளது. இதற்கான தரவுகள் 2023-24-ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்டன. ஆனால், அதன் கண்டுபிடிப்புகள் 2026-ம் ஆண்டின் மத்தியில்தான் பொது விவாதத்திற்கு வந்தன. பெருமைகளைத் தமதாக்கிக்கொள்வதிலும், பொறுப்பிலிருந்து நழுவுவதிலும் வல்லமை பெற்ற ஒரு அரசியல் சூழலில், இத்தகைய காலதாமதம் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக அமைகிறது. ஒரு அரசாங்கம் சாதகமான குறியீடுகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை தனது தற்போதைய கொள்கைகளின் வெற்றிக்கான சான்றாக முன்வைக்க முடியும். அதே வேளையில், சங்கடமான முடிவுகளை "பழைய தரவுகள்" என்று கூறிப் புறக்கணிக்கவும் முடியும். கோவிட்-19 பெருந்தொற்று, கடந்தகால நிர்வாகச் சீர்குலைவுகள் அல்லது தற்போது மேம்பட்டுள்ள சூழல்கள் ஆகியவற்றால் இந்த முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வாதிடவும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, இந்தக் கணக்கெடுப்பு ஒரு வழிகாட்டியாக இருப்பதை விட, ஒரு அரசியல் ஆயுதமாக மாறுகிறது. இது கணக்கெடுப்பிற்கு இழைக்கப்படும் அநீதியாகும். மேலும், இது பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு உதவாது.


அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, பெரிய அளவிலான கணக்கெடுப்புத் தரவுகளைப் புரிந்துகொள்வதில் கல்வியாளர்களும் பொது சுகாதார ஆராய்ச்சியாளர்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், இந்தியாவில், மூலத் தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதால், அத்தகைய தரவுப் பகுப்பாய்வு பெரும்பாலும் தாமதமாகிறது. சக ஆய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுகள் (peer-reviewed studies) வெளிவரும் நேரத்தில், தரவுகள் சேகரிக்கப்பட்டு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கலாம். அப்போது கொள்கை வகுப்பாளர்கள், முக்கியமான கண்டுபிடிப்புகளைக் காலாவதியானவை என்றும் இனி பொருத்தமற்றவை என்றும் கூறி நிராகரிக்கக்கூடும். இதன் விளைவாக, அந்தத் தரவுகள் தங்கள் தாக்கத்தின் பெரும்பகுதியை இழக்கின்றன. ஆய்வு அறிக்கைகள் வெளியிடப்படும்போது, ​​சுதந்திரமான ஆய்வுக்குத் தேவையான மூலத் தரவுகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. விரிவான பகுப்பாய்வு முடிவுகள் இறுதியாகக் கிடைக்கும்போது, ​​சரியான நேரத்தில் கொள்கைரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் நழுவிப்போயிருக்கும்.


தரவுகளிலிருந்து செயல் வரை


இந்தியா ஏன் இத்தகைய வாய்ப்புகளைத் தொடர்ந்து தவறவிடுகிறது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். சுகாதாரத் தரவுகள், சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான கொள்கை முடிவுகளுடன் இணைக்கப்படும்போது மட்டுமே சுகாதார விளைவுகளை மேம்படுத்துகின்றன. சுகாதாரத் தரவுகளைத் திறம்படப் பயன்படுத்தும் நாடுகள், சரியான கல்விசார் கட்டுரைகளுக்காகவோ அல்லது திட்டவட்டமான தீர்வுகளுக்காகவோ பல ஆண்டுகள் காத்திருப்பதில்லை. மாறாக, அவை வலுவான அமைப்புகளையும், அதிகாரம் பெற்ற நிறுவனங்களையும் கொண்டுள்ளன. அவை விரைவான கொள்கை விளக்கக் குறிப்புகளை (policy briefs) உருவாக்குகின்றன. பின்தங்கிய மாவட்டங்களையும், பிராந்தியங்களையும் அடையாளம் காண்கின்றன, வழக்கமான ஆய்வுகளை நடத்துகின்றன, பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை ஒப்பிடுகின்றன, வளங்களைத் திறமையாக ஒதுக்குகின்றன மற்றும் தேவைக்கேற்ப திட்டங்களை மாற்றியமைக்கின்றன. தரவைச் செயல்வடிவமாக்குவது என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒரு செயல்முறையாகும். இந்தியா, தான் சேகரிக்கும் பெருமளவிலான சுகாதாரத் தரவுகளின் முழு பலனையும் அடைய விரும்பினால், இத்தகைய செயல்முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


முதலில், ஒவ்வொரு பெரிய தேசிய சுகாதார கணக்கெடுப்பைத் தொடர்ந்தும், 30 முதல் 45 நாட்களுக்குள், அரசாங்கமும் சுதந்திரமான கல்வி நிறுவனங்களும் இணைந்து ஒரு தேசிய மற்றும் மாநில அளவிலான செயல்வடிவக் குறிப்பை (action note) வெளியிட வேண்டும். அந்தக் குறிப்பு, எது மேம்பட்டுள்ளது?, எது தேக்கமடைந்துள்ளது? மற்றும் எது மோசமடைந்துள்ளது? என்பதை வெளிப்படையாக அடையாளம் காட்ட வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட திட்டத்துடனும், தெளிவாகப் பொறுப்புணர்வுரீதியான ஒரு அதிகார அமைப்புடனும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகளின் ஊட்டச்சத்து தேக்கமடைந்திருந்தால், ஊட்டச்சத்துத் திட்டம் அதற்குப் பதிலளிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிதல் போதுமானதாக இல்லை என்றால், ஆரம்ப சுகாதார அமைப்பு அதற்குப் பதிலளிக்க வேண்டும். மருந்துகளுக்கான நேரடிச் செலவு அதிகமாக இருந்தால், மருந்து கொள்முதல் அமைப்பு அதற்குப் பதிலளிக்க வேண்டும். தரவுகள் பிரச்சனைகளை வெறுமனே விவரிக்கக் கூடாது. அவை பொறுப்புணர்வையும் திருத்த நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கவும் வேண்டும்.


இரண்டாவதாக, மாநில அளவிலான சுகாதாரத் தரவு மறுஆய்வுக் கூட்டங்கள், வழக்கமான நடைமுறை நிகழ்வுகளாக இல்லாமல், தீர்வுகளை மையமாகக் கொண்ட ஆக்கபூர்வமான கூட்டங்களாக இருக்க வேண்டும். சுகாதாரத் துறை செயலாளர்கள், நிதித் துறைகள், மாவட்ட அதிகாரிகள், பொது சுகாதார வல்லுநர்கள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள், பிற முக்கியப் பங்குதாரர்கள் மற்றும் சுதந்திரமான துறை வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். கேள்வி, “நாம் எதை முன்னிலைப்படுத்தலாம்?” என்பதாக இருக்கக்கூடாது. மாறாக, "நாம் எதை மாற்ற வேண்டும்?" என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.



மூன்றாவதாக, கணக்கெடுப்புத் தரவுகளை உகந்த முறையிலும் சரியான நேரத்திலும் பயன்படுத்துவதற்கான அமைப்புகள் இந்தியாவிற்குத் தேவை. இந்தியா, ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தை (Integrated Health Information Platform (IHIP)) உருவாக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், அது முதன்மையாக நேரடித் தரவுகளுக்கானது. பகுப்பாய்வுத் தகவல்களை உருவாக்க, கணக்கெடுப்புத் தரவுகள், சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு (Health Management Information System (HMIS)) தரவுகள் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் (IHIP) தொடர்பான தரவுகள் ஆகியவற்றை ஒன்றிணைக்க வேண்டும். பகுதியளவான தரவுகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குகின்றன.


நான்காவதாக, கணக்கெடுப்புகளிலிருந்து பெறப்படும் முதன்மைத் தரவுகளும் மூலக் கோப்புகளும் முன்கூட்டியே கிடைக்கச் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சுதந்திரமான ஆய்வாளர்களும் பொது நிறுவனங்களும் விரைவான பகுப்பாய்வை உருவாக்க முடியும். தீவிரமான விளக்கம் அளிக்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தரவுகள் ஒரு பாதுகாக்கப்பட்ட கோப்பு போல முடங்கிக் கிடக்கக் கூடாது. அவை ஒரு பொது நன்மையாகக் கிடைக்க வேண்டும்.


ஐந்தாவதாக, கணக்கெடுப்பு முடிவுகள் நிதி ஒதுக்கீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு கணக்கெடுப்பு, தொற்றா நோய்கள் (NCDs) அதிகரித்து வருவதைக் காட்டினால், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் உள்ள தேவையை முதன்மை மருத்துவப் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் பிரதிபலிக்க வேண்டும். குடும்பங்கள் மருந்துகளுக்காக அதிக செலவு செய்தால், பொது மருத்துவ வசதிகள் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை வலுப்படுத்த வேண்டும். குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்தால், பள்ளி சுகாதாரம், உணவு ஒழுங்குமுறை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் ஆகியவை அதற்குப் பதிலளிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாத தரவுகள் வெறும் தகவல்களாகவே இருக்கின்றன.


எதிர்காலத்தை நோக்குதல்


பொருளாதார நிபுணர் ஆரோன் லெவன்ஸ்டைன் 1951-ல், “புள்ளிவிவரங்கள் நீச்சலுடைகளைப் போன்றவை. அவை வெளிப்படுத்துவது தூண்டுதலாக இருக்கலாம், ஆனால் அவை மறைப்பது மிக முக்கியமானது” என்று கூறினார். மாறாக, சுகாதாரத் தரவுகள் ஒரு எக்ஸ்-ரே போல இருக்க வேண்டும். அவை சரியாக விளக்கப்பட்டு, நேர்மையாக விவாதிக்கப்பட்டு, கொள்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும்போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். தரவுகளும் புள்ளிவிவரங்களும் அவற்றின் விளக்கத்தைப் பொறுத்தே பயனுள்ளதாக அமைகின்றன. ஒரு விளக்கம் அது வழிவகுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தே பயனுள்ளதாக அமைகிறது. அடுத்த முறை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படும்போது, ​​எண்கள் என்ன காட்டுகின்றன என்பது உண்மையான கேள்வியாக இருக்கக்கூடாது. அதாவது ஒரு மாதம், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு திட்டங்களில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதே உண்மையான கேள்வியாக இருக்க வேண்டும். இதனுடன், இந்தியாவிற்கு நிச்சயமாக மேலும் சரியான நேரத்தில் சுகாதாரத் தரவுகள் தேவைப்படுகின்றன. இருப்பினும், நமக்கு இதைவிட அதிகமாகத் தேவைப்படுவது பொறுப்புணர்வு ஆகும்.


டாக்டர் சந்திரகாந்த் லஹரியா, தடுப்பு மற்றும் இருதய-வளர்சிதை மாற்ற மருத்துவத்தில் பயிற்சி பெறும் மருத்துவர் மற்றும் சுகாதாரக் கொள்கை நிபுணர் ஆவார். அவர் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐ.நா. அமைப்புடன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.


Original article : Health data must drive action, not just headlines -Chandrakant Lahariya

Share: