ஒரு முன்னேற்றப் படி: ஷிஷுபால் தீர்ப்பு குறித்து…

 உச்சநீதிமன்றம் ஊதியம் பெறாத (domestic work) வீட்டு வேலைக்கு ஒரு பொருளாதார மதிப்பை வழங்கியுள்ளது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய 'சிசுபால் என்கிற சிசு ராம் vs சுர்ஜீத்' வழக்கின் தீர்ப்பு, ஒரு முக்கிய சாதனையாக அமையக்கூடும். 2001-ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்து ஒன்றிற்காக 'மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம்' (Motor Accident Claims Tribunal (MACT)) வழங்கிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் மாற்றியமைத்ததன் பின்னர் இந்தத் தீர்ப்பு வந்தது. விபத்தில் உயிரிழந்த ரேஷ்மாவின் குடும்பத்திற்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் முதலில் ₹2.42 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. இழப்பீட்டுத் தொகையை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டில் ₹8.43 லட்சமாக உயர்த்தியது. இருப்பினும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், ஒரு இல்லத்தரசியாக ரேஷ்மா ஆற்றிய பணிக்கான 'பொருளாதார மதிப்பாக' (economic value) மாதம் ₹30,000-ஐக் கணக்கில் கொண்டு, மொத்த இழப்பீட்டுத் தொகையை ₹62.78 லட்சமாக உயர்த்தியது. இந்தத் தீர்ப்பு ஆச்சரியமானதாக பார்க்கப்படவில்லை. 2001-ஆம் ஆண்டு 'லதா வாத்வா' வழக்கில், இல்லத்தரசியின் பணிகளுக்கு நீதிமன்றம் ₹3,000 என்ற குறைந்தபட்ச மதிப்பையே நிர்ணயித்திருந்தது. 2021-ஆம் ஆண்டு 'கீர்த்தி vs ஓரியண்டல் இன்சூரன்ஸ்' வழக்கில், ஊதியம் பெறாத பணி என்பதாலோ அல்லது பெண்களால் செய்யப்படும் பணி என்பதாலோ இல்லத்தரசியின் பணியின் பொருளாதார மதிப்பைக்குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பணிக்கான 'அதிகாரப்பூர்வ' மதிப்பை நிர்ணயிப்பதில் வெளிப்படையான தன்மை இல்லாமல் இருந்தது. அமர்வு நிர்ணயித்த மாதம் ₹30,000 என்பது ஒரு தோராயமான மற்றும் குறைந்தபட்ச அளவீடாகும். மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, இந்த அடிப்படை அளவீடு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 10% உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒரு பெண் பணிபுரிபவராக இருந்தால் அவரது ஊதியத்தையும் இந்த அடிப்படைத் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, இல்லத்தரசிகளுக்கு தனியாக சம்பளம், ஊதியம், ஓய்வூதியத் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு உரிமை வழங்குவதில்லை. இது மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயம் வழக்குகளில் இழப்பீட்டைக் கணக்கிடுவதற்கு மட்டுமே பொருந்தும். இருப்பினும், பெண்களின் பணிகளைச் சாதாரணமாக மதிப்பிழக்கச் செய்யும் தற்போதைய சமூகப் போக்கைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த முன்னெடுப்பு மிகவும் முக்கியமானது. இது நிச்சயமாக நல்ல தாக்கங்களை  ஏற்படுத்தும்.


ஊதியம் பெறாத வீட்டுப் பணிகளுக்கும், ஒடுக்கப்பட்ட பெண் தொழிலாளர் பங்கேற்புக்கும் இடையிலான தொடர்பு, சமகால இந்தியத் தொழிலாளர் பொருளாதாரத்தில் ஒரு முக்கியக் கருப்பொருளாகும். உதாரணமாக, இந்து திருமணச் (Hindu Marriage Act) சட்டத்தின்கீழ் ஜீவனாம்சம் தொகை கோரும் இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளுக்கு உள்ள பொருளாதார மதிப்பை ஆதரிக்கும் வகையிலான சட்டரீதியான காரணங்கள் இப்போது தெளிவாக உள்ளன. நீதிமன்றம் குறிப்பிட்டதுபோல, "விதைத்தல், அறுவடை செய்தல் மற்றும் கால்நடைகளைப் பராமரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் கிராமப்புறப் பெண்கள், பெரும்பாலும் வீட்டு வேலைக்குத் துணை வேலையாகக் கருதப்படும் தங்களின் உழைப்பிற்கு அதிக மதிப்பு அளிக்கக் கோரி, நீதிமன்றத்திடம் எடுத்துக்காட்டாக மேற்கோள் காட்டலாம். இந்த “கூட்டல் விதி” (additive rule), வீட்டிலிருந்தே வேலை செய்வோர் மற்றும் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வோர் தொடர்பான வேலைவாய்ப்பு தகராறுகளிலும் இதேபோன்ற வாதங்களை முன்வைக்க வழிவகுக்கும். எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில், வீட்டுப் பொறுப்புகளை மேற்கொள்ளும் ஆண்களும் இதேபோன்ற சமமான அங்கீகாரத்தை கோர முடியுமா என்பதும் சோதிக்கப்படலாம். ஏற்கனவே மோட்டார் காப்பீட்டுத் துறை பல காப்பீட்டு நிறுவனங்களுக்கு குறைந்த லாபம் தரும் பிரிவாக உள்ளது. இந்நிலையில், இழப்பீட்டுத் தொகையின் சராசரி அளவு அதிகரிப்பதும், அது கடந்தகால வழக்குகளுக்கும் (retrospective effect) பொருந்தக்கூடிய வாய்ப்பு இருப்பதும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் ஆபத்து மதிப்பீட்டு முறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, நீண்டகால நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்கும் வகையில், லோக் அதாலத் (Lok Adalat) போன்ற மாற்று தீர்வு அமைப்புகளில் இழப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக சமரசம் செய்து முடிக்க காப்பீட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும். “ஷிஷுபால் தீர்ப்பு” (Shishupal Judgment) என்பது, பல ஆண்டுகளாக பெண்களின் உழைப்பிற்கு பொருளாதார மதிப்பு அளிக்காமல் புறக்கணித்து வந்த நிலையைச் சரி செய்யும் ஒரு முக்கியமான திருத்தமாகும். இந்த தீர்ப்பு, குறிப்பாக வீட்டு மற்றும் கிராமப்புற பெண்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பொருளாதார மதிப்பும் வழங்குவதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.


Original article : ​Step forward: On the Shishupal judgment.

Share: