இந்தியாவின் முறைசாராத் தொழிலாளர்வளம் ஏன் பிழைப்புக்கும் வளர்ச்சியின்மைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது? — புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பொதுவாகப் பெரிய நிறுவனங்கள், விரிவடைந்து வரும் சந்தைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களைச் சுற்றியே உள்ளது. ஆனால், இந்த வளர்ச்சியின்  முக்கியபகுதி, எந்தவிதமான மாற்றமின்றி இருக்கும் ஒரு துறையான, பதிவு செய்யப்படாத வேளாண்மை அல்லாத துறையையும் சார்ந்துள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை  மேம்படுத்தி, உள்ளூர் தேவையை ஆதரிக்கிறது.


ஆனால், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: இந்தத் துறையின் விரிவாக்கம் முன்னேற்றத்தைக் குறிக்கிறதா அல்லது முறைசாராத் தன்மை நீடிப்பதை மறைக்கிறதா?


புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation’s (MoSPI)) பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) 2025-ன் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இதை வெளிக் கொண்டுவருகின்றன. வெளிப்படையாகத் தெரியும் பொருளாதாரத்தின் அடிப்படையில், பதிவு செய்யப்படாத, வேளாண்மை அல்லாத சிறு உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் வர்த்தக அலகுகள் போன்ற பெரிய வலையமைப்பு ஒன்று உள்ளது.


இந்தத் துறை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் உள்ளூர் தேவையை நிலைநிறுத்துகிறது. பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களுக்கான வருடாந்திர கணக்கெடுப்பின்படி, இந்தத் துறையானது 7.92 கோடி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 12.81 கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இது நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆதாரங்களில் ஒன்றாக அமைகிறது.

அளவு மற்றும் வேலைவாய்ப்பு விரிவாக்கத்தின் கணக்கீடு


முறைசாரா நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-24-ஆம் ஆண்டில் 7.34 கோடியிலிருந்து, 2025-ஆம் ஆண்டில் 7.92 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஏறக்குறைய 8 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த வளர்ச்சி, சிறிய பொருளாதார அலகுகள் தொடர்ந்து புதிதாக உருவாகி நிலைத்து நிற்பதை காட்டுகிறது. இந்த எண்ணிக்கைகளைப் பார்ப்பதால், துறைகளுக்கிடையில் இந்த வளர்ச்சியின் பகிர்வு பெரும்பாலும் மாற்றமின்றி இருப்பது தெரிகிறது: உற்பத்தித் துறையில் 27 சதவீதம், வர்த்தகத் துறையில் 31 சதவீதம், மற்றும் ‘சேவைத்’ துறையில் 42 சதவீதம் உள்ளது.


மேலும், வேலைவாய்ப்பும் விரிவடைந்து, தொழிலாளர்களின் எண்ணிக்கை 12.81 கோடியாக  அதிகரித்துள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை  மேம்படுத்தி, உள்ளூர் தேவையை ஆதரிக்கிறது. ஆனால், இந்த வேலைவாய்ப்பின் தன்மை மாற்றமின்றி உள்ளது. 62 சதவீத தொழிலாளர்கள் உரிமையாளர்-இயக்குநர்களாக (owner-operators) உள்ளனர். அதே, சமயம் 24 சதவீதம் மட்டுமே ஊதியம் பெறும் பணியாளர்களாக உள்ளனர். இது  துறையின் வளர்ச்சியை  வெளிக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு அதிகரித்தாலும், அது பெரும்பாலும் சுயதொழில் மூலமும் குடும்ப தொழிலாளர்களும் மூலமும்  நடைபெறுகிறது. இந்தத் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. ஆனால், நிலையான மற்றும் ஊதியம் அடிப்படையிலான வேலைகளை அதிகமாக உருவாக்கவில்லை.


படம் 1: 2023-24 முதல் 2025 வரை இந்தியாவின் பதிவுசெய்யப்படாத துறையின் விரிவாக்கம்: நிறுவனங்கள், மொத்த மதிப்பு கூட்டல் மற்றும் வேலைவாய்ப்பு 






நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் அதிகரிப்புடன் சேர்த்து, இந்தத்துறையின் உற்பத்தியிலும் ஒரு உயர்வைப் பதிவு செய்துள்ளது. 2023-24 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 10.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) சேவைகள் துறை 42%  பங்கு வகிக்கிறது; இதனைத் தொடர்ந்து வர்த்தகம் (37%) மற்றும் உற்பத்தித் துறை (21%) பங்கு வகிக்கின்றன. இது பொருட்களை குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமலேயே வாங்கி விற்பனை செய்வதில் அதிகரிக்கும் மாற்றதைக் காட்டுகிறது.


உற்பத்தித் துறை இன்னும் முக்கியமானதாக இருந்தாலும், அது ஒப்பீட்டளவில் மிதமான வளர்ச்சியைக் காட்டுகிறது. குறைந்த மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறு அளவிலான உற்பத்தி அலகுகளின் தாக்கத்தை வெளிக்காட்டுகிறது. சேவைகள் மற்றும் வர்த்தகத்தை நோக்கிய இந்த மாற்றம், முறைசாராப் பொருளாதாரத்திற்குள் ஒரு மாறுபட்ட கட்டமைப்பு உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், இது பொருளாதாரச் செயல்பாடுகளை வடிவமைப்பதில், தேவை சார்ந்த மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட சேவைகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.


படம் 2: 2023-24 முதல் 2025 வரை இந்தியாவின் பதிவுசெய்யப்படாத பொருளாதாரத்தில் துறைசார் வளர்ச்சி: நிறுவனங்கள், GVA மற்றும் வேலைவாய்ப்பு 



ஆதாரம்: 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) 


உற்பத்தித்திறன், ஊதியங்கள் மற்றும் வருவாய்கள் பற்றி 


பொருளாதார முன்னேற்றத்தின் முக்கியக் குறியீடுகளில் ஒன்று உற்பத்தித்திறன் ஆகும். 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு தரவுகளின்படி, ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டல் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகளின் மதிப்புக்கும் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீட்டின் மதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் 1.49 லட்சத்திலிருந்து 1.56 லட்சமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி 4.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், 2023-24-ஆம் ஆண்டில் இருந்த 5.6 சதவீதத்திலிருந்து இது குறைந்துள்ளது.


மேலும், மேம்பாட்டின் அளவு மிதமானதாகவே உள்ளது. தொழில்நுட்பம், திறன்கள் அல்லது செயல்பாடுகளின் அளவு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த மூலதனத்துடன் செயல்படுகின்றன, பாரம்பரிய முறைகளில் நம்பிக்கை வைக்கின்றன. மேலும், உற்பத்தித்திறனில் மாற்றங்களை செய்யாமல்  உள்ளூர் சந்தைகளுக்கு ஏற்ப  சேவை செய்கின்றன.

முடிவுகள், பதிவு செய்யப்படாத (unincorporated) வேளாண்மை அல்லாத துறையில் ஊதியங்கள் அதிகரித்துள்ளதை காட்டுகின்றன. பணி செய்துவரும் தொழிலாளரின் சராசரி ஆண்டு ஊதியம் 3.88 சதவீதம் அதிகரித்து, 2023–24-ல் 1,41,071-லிருந்து 2025-ல் 1,46,550-ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த உயர்வு மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. இது, அதிகமான உற்பத்தி மூலம் கிடைக்கும் பலன்கள் தொழிலாளர்களின் வருமானமாக மாற்றப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், இது முறைசாராச் சூழல்களில் தொழிலாளர்களின் பேரம் பேசும் திறனை வெளிக் காட்டுகிறது.


பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் முன்னேற்றம்


2025-ஆம் ஆண்டு  பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கையின் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, பெண்களை உரிமையாளர்களாகக் கொண்ட தனி உரிமையாளர் நிறுவனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இவற்றின் பங்கு 26 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்பட்டாலும், சில கட்டமைப்புரீதியான தடைகள் தொடர்ந்து நிலவி வருவதன் காரணமாக, மாற்றம் குறைவான அளவே உள்ளது.


குறிப்பாக, பிணையச் சொத்துக்கள் (நிலம், தங்கம் போன்றவை) அல்லது முறையான நிதிசார் வரலாற்றுக் குறிப்புகள் (முந்தைய கடன்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவை) இல்லாத பெண் தொழில்முனைவோருக்கு, கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் போதுமான அளவு இல்லை. சந்தையுடனான இணைப்புகள் பெரும்பாலும் வலுவற்ற நிலையில் இருப்பதால், அத்தகைய நிறுவனங்களின் செயல் எல்லை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன. இதன் விளைவாக, பெண்களால் முன்னெடுக்கப்படும் பல தொழில்முயற்சிகள் குறைவாகவும், வீட்டிலிருந்தே இயங்குபவையாகவும், குறைந்த மதிப்புடைய செயல்பாடுகளிலேயே குவிந்திருப்பவையாகவும் நீடிக்கின்றன.




மேற்கு ஆசியப் போர் முறைசாரா துறைக்கு எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது


 இது போன்ற  கட்டமைப்பு காரணிகள் அமைப்புசாரா துறையை எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றுகின்றன. மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர், நன்கு அறியப்பட்ட பரிமாற்ற வழிகள் (transmission channels) மூலம் இந்தத் துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.


இந்தியா தனது கச்சா எண்ணெயில் 80 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது. இதில் கணிசமான பகுதி மேற்கு ஆசியாவிலிருந்து, குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக வருகிறது. இந்தப் போர் எரிபொருள் விலைகளில் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் உள்ளீட்டு செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறைந்த லாப நோக்கத்தோடு செயல்படும் சிறிய, பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தும்.


முறைசாரா துறையின் மூலம் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 80 சதவீதம் வர்த்தகம் மற்றும் சேவைகள் மூலம் கிடைக்கிறது என்றும், இவை இரண்டும் தளவாட மற்றும் எரிசக்தி செலவுகளால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவை என்று  2025-ஆம் ஆண்டு  பதிவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கை காட்டுகிறது. அதேநேரத்தில், மேற்கு ஆசியாவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் பல பிராந்தியங்களில் உள்ள குடும்பங்களின் தேவையை ஆதரிக்கின்றன. இந்தப் பணப் பரிமாற்றங்கள் பலவீனமடைந்தால், உள்ளூர் நுகர்வு குறைகிறது. முறைசாரா துறையைப் பொறுத்தவரை, இத்தகைய அதிர்ச்சிகள் வெளிப்புறமானவை அல்ல, அவை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


நிறுவனங்களைக் கணக்கிடுவதிலிருந்து அவற்றை வலுப்படுத்துவது வரை


பதிவு செய்யப்படாத துறையின் மிக முக்கியமான  ஒன்று  அதன் முறைசாராத் தன்மையே ஆகும். திவு செய்யப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு அறிக்கை தரவுகளின்படி, ஏறக்குறைய 95 சதவீத நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமான அல்லது கூட்டாண்மை அலகுகளாகச் செயல்படுகின்றன. இந்தக் கட்டமைப்பிற்கு  வரம்புகள்  உள்ளன.


ஒருபுறம், இது நெகிழ்வுத்தன்மை, குறைந்த நுழைவுத் தடைகள் மற்றும் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப விரைவாகத் தகவமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மறுபுறம், இது முறையான நிதியைப் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது. விரிவாக்கத் திறனைக் குறைக்கிறது மற்றும் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் தன்மையைக் குறைக்கிறது.


 முறை சாராத்துறை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. ஏறக்குறைய 8 கோடி நிறுவனங்களும் 12.8 கோடி தொழிலாளர்களும் வலிமையை அல்ல, அளவையே பிரதிபலிக்கின்றனர். உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆனால், வேலைகள் முறைசாராத் தன்மையுடனே இருக்கின்றன. உற்பத்தித்திறன் மேம்பட்டு வருகிறது. ஆனால், அது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. பெண்கள் முறைசாராத்துறையில் நுழைகிறார்கள். ஆனால், முன்னேறவில்லை. இது ஒரு மாற்றத்தின் கதை அல்ல. இது ஒரு விடாமுயற்சியின்  கதையாக உள்ளது


 இந்தத்துறை வளர்ந்து வருகிறதா என்பது இனி கேள்வியல்ல. அது மாறி வருகிறதா என்பதே முக்கிய கேள்வியாகும். நிறுவனங்களைக் கணக்கிடுவதிலிருந்து அவற்றை வலுப்படுத்துவதை நோக்கி கொள்கை மாற்றம் பெறும்வரை, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் வளமானது, உயிர்வாழ்விற்கும் தேக்கநிலைக்கும் இடையில் சிக்கிக்கொண்டே இருக்கும்.


புஷ்பேந்திர சிங், மும்பையில் உள்ள சோமையா வித்யாவிகார் பல்கலைக்கழகத்தில் பொருளாதார உதவிப் பேராசிரியராகவும், அர்ச்சனா சிங், மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தில் பாலினம் மற்றும் பொருளாதார உதவிப் பேராசிரியராகவும் உள்ளனர்.


Original article : Why India’s informal workforce is trapped between survival and stagnation —  Pushpendra Singh and Archana Singh

Share:

இந்தியாவின் பிராந்தியங்களுக்கு இடையே மகப்பேறு இறப்பு விகிதம் எவ்வாறு வேறுபடுகிறது? - ரோஷ்னி யாதவ், குஷ்பூ குமாரி

 தற்போதைய நிகழ்வு : தி லான்செட் மகப்பேறியல், பெண்நோயியல் மற்றும் பெண்கள் நலம் எனும் மருத்துவ இதழில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வானது, இந்தியா எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலைச் சுட்டிக்காட்டுகிறது. 2030-ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு 1 லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கும் ஏற்படும் மகப்பேறு இறப்பு விகிதத்தை (Maternal Mortality Ratio (MMR)) 70-க்கும் குறைவாகக் குறைப்பது என்ற 'நிலையான வளர்ச்சி இலக்கை' (Sustainable Development Goal (SDG)) அடைவதில் இந்தியாவுக்குப் பெரும் சவால் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

முக்கிய அம்சங்கள் : 


இந்தியாவில் மகப்பேறு இறப்பு எண்ணிக்கையை 1990-ல் இருந்த 1.19 லட்சத்திலிருந்து, 2015-ல் 36,900 ஆகவும், 2023-ல் 24,700 ஆகவும் வெற்றிகரமாகக் குறைத்திருந்தாலும், இந்த முன்னேற்றத்தின் வேகம் தற்போது குறைந்துள்ளது. 'நோய்கள், காயங்கள் மற்றும் இடர் காரணிகளின் உலகளாவிய சுமை' (Global Burden of Diseases, Injuries and Risk Factors) குறித்த ஆய்வின்படி, 1990-ல் இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) 508 ஆக இருந்தது. இது 2023-ல் ஒவ்வொரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கும் 116 இறப்புகள் என்ற நிலைக்குக் குறைந்துள்ளது.


2023-ம் ஆண்டில் உலகளவில் பதிவான மொத்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கையான 2.4 லட்சத்தில், பத்தில் ஒரு பங்கு இறப்புகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.


இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்ட 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், 100 நாடுகள் 2030-ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கான (SDG) மகப்பேறு இறப்பு விகிதத்தை 70-க்கும் குறைவாகக் குறைக்கும் இலக்கை, 2023-ஆம் ஆண்டிலேயே எட்டிவிட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த இலக்கை இன்னும் எட்டாத 104 நாடுகளில், 15 நாடுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் 70 முதல் 100 வரையிலும், 16 நாடுகளில் 100 முதல் 140 வரையிலும் (இதில் இந்தியாவும் அடங்கும்), மற்றும் 73 நாடுகளில் 140-க்கும் அதிகமாகவும் உள்ளதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது.


இந்தியாவைத் தவிர, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 2030 இலக்கை அடைவதில் சிரமப்படுகின்றன.


இந்தியாவின் புள்ளிவிவரம் குறைந்த தொடக்கப் புள்ளியைக் கருத்தில் கொண்டாலும், 1990-க்குப் பிறகு மகப்பேறு இறப்பு விகிதத்தில் (MMR) மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். வங்காளதேசம், எத்தியோப்பியா, மொராக்கோ, நேபாளம் மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளும் இதில் அடங்கும்.


மக்கள்தொகையியல் நிபுணரும், கோகலே அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தின் சமூக உள்ளடக்க ஆய்வு மையத்தின் முன்னாள் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் அஞ்சலி ராட்கர் கூறுகையில், இந்தியாவிற்குள், தென்னிந்தியாவும் சில மாநிலங்களும் 2030-க்குள் நிலையான வளர்ச்சி இலக்கை (SDG) அடையும் பாதையில் இருந்தாலும், அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால், தேசிய சராசரி மகப்பேறு இறப்பு விகிதம் பாதிக்கப்படுகிறது.


இந்தியாவில் கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் குறித்த தரவுகளின் முதன்மை ஆதாரமாகத் திகழும் 'மாதிரிப் பதிவு அமைப்பின்' (SRS) படி, தேசிய அளவில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) 2015-17ல் ஒரு லட்சம் உயிருள்ள பிறப்புகளுக்கு 122-ஆக இருந்து, 2021-2023ல் 88 ஆகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், அசாமில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) 215-லிருந்து 110 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் 197-லிருந்து 141-ஆகவும் குறைந்துள்ளது என்று ராட்கர் சுட்டிக்காட்டினார்.


தாய் மற்றும் குழந்தை நலனில் கவனம் செலுத்தி, ஆரம்ப சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மக்கள்தொகையியல் நிபுணர் (demographer advised) அறிவுறுத்தினார். “குழந்தை இறப்பு விகிதம் குறையும்போது, கருவுறுதல் விகிதங்களும் குறைய வாய்ப்புள்ளது. மேலும், குறைந்த கருவுறுதல் விகிதம், மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்,” என்று அவர் கூறினார். மேலும், மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்படாவிட்டால், மகப்பேறு நலனுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளும் (SDG) எட்ட முடியாதவையாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



லான்செட் ஆய்வின்படி, எளிதில் தடுக்கக்கூடிய இரத்தப்போக்கு மற்றும் உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள், 2023-ம் ஆண்டில் நிகழ்ந்த மகப்பேறு மரணங்களில் கிட்டத்தட்ட பாதிக்கு (40%-க்கும் மேல்) காரணமாக அமைந்தன. கோவிட் காலத்தில் பொது சுகாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், 2020-21-ல் காணப்பட்ட சரிவுக்கு ஒரு காரணமாக இருந்ததாக நம்பப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? :


மகப்பேறு இறப்பு (Maternal mortality) என்பது மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களால் ஒரு பெண் இறப்பதைக் குறிக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மோசமடையும் மற்ற உடல்நலக் குறைபாடுகளால் ஏற்படும் இறப்புகளும் இதில் அடங்கும். இந்த இறப்புகள், கர்ப்பம் முடிந்த ஒரு வருடம் வரை கணக்கிடப்படுகின்றன. இதில், கர்ப்பமானது எந்த முறையில் முடிந்தது என்பது ஒரு பொருட்டாகப் பார்க்கப்படுவதில்லை.


Original article : What are the regional disparities in maternal mortality in India? -Roshni Yadav, Khushboo Kumari

Share:

ரூபாயின் மீதான அழுத்தங்களுக்கு நடுவில், NDD மூலம் நடைபெறும் ரூபாய் மீதான ஊக வர்த்தகத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் தடை -ஜார்ஜ் மேத்யூ

 ஊக வணிக நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய வழியை அகற்றுவதன் மூலம், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மூலதன வெளியேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாணய நகர்வுகளை நிலைப்படுத்த மத்திய வங்கி முயற்சிக்கிறது.


பெரிய நாணய வர்த்தகர்களால் அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டு, கையாளப்படும் ரூபாயின் மீதான வழங்க முடியாத நிதி வகையீடு (Non-Deliverable Derivative(NDD)) ஒப்பந்தங்களில் இருந்து வங்கிகளைத் தடைசெய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய உத்தரவு, அந்நிய செலாவணி சந்தையில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்த நடவடிக்கை, டாலருக்கு எதிராக 95 என்ற நிலைக்குக் கீழே சரிந்திருந்த ரூபாயை, ஏப்ரல் 2 வியாழக்கிழமை அன்று ரூ. 1.73 என்ற கடுமையான ஏற்றத்துடன் 93.10 ஆக உயர்த்தியது.


ஊக வணிக நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய வழியை அகற்றுவதன் மூலம், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் மற்றும் மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட மூலதன வெளியேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாணய நகர்வுகளை நிலைப்படுத்தவும், நாட்டில் உள்நாட்டுச் சந்தையின் முதன்மையை வலுப்படுத்தவும் மத்திய வங்கி முயற்சிக்கிறது.


வழங்க முடியாத நிதி வகையீடு (Non-Deliverable Derivative(NDD)) சந்தை என்றால் என்ன?


பொதுவாக சிங்கப்பூர், ஹாங்காங், லண்டன் அல்லது துபாய் போன்ற நிதி மையங்களில் இந்தியாவிற்கு வெளியே வர்த்தகம் செய்யப்படும் வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தங்கள், நாணயத்தை நேரடியாகப் பெறாமலேயே ரூபாயின் போக்கின் மீது பந்தயம் கட்ட வர்த்தகர்களை அனுமதிக்கின்றன.


வழங்க முடியாத நிதி வகையீடு  (NDD) ஒப்பந்தம் என்பது ஒரு வழித்தோன்றல் ஒப்பந்தமாகும். இதில் இரண்டு தரப்பினரும் ரூபாயின் எதிர்கால மாற்று விகிதத்தை ஒப்புக்கொள்கிறார்கள். ஒப்பந்தம் முடிவடையும் போது, அவர்கள் உண்மையான நாணயத்தைப் பரிமாறிக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் வித்தியாசத் தொகையைப் பணமாகச் செலுத்துகிறார்கள். இந்தப் பணம் பொதுவாக அமெரிக்க டாலர்களில் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் மூலதனக் கட்டுப்பாடுகள் இருப்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூபாயை உண்மையான வடிவில் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியாது. இதுவே ரூபாயில் வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தச் சந்தைகள் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இத்தகைய வெளிநாட்டு உணர்வு உள்நாட்டு அடிப்படைகள் மற்றும் நகர்வுகளிலிருந்து கடுமையாக வேறுபடக்கூடும் என்பதால், விலை நிர்ணயத்தைச் சிதைக்கின்றன மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுக்கின்றன. இந்த நிலைகள் நீண்ட காலமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.


இந்திய ரூபாய் சந்தையில் சுதந்திரமாக நுழைந்து வர்த்தகம் செய்ய முடியாத வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஹெட்ஜ் நிதிகள் (hedge funds) மற்றும் உலகளாவிய வங்கிகள், அத்துடன் நாணய அபாயத்தைக் குறைக்க விரும்பும் நிறுவனங்களாலும் வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தச் சந்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வர்த்தகங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, வெளிநாடுகளில் நடைபெறுகின்றன. இது பெரும்பாலும் ரூபாய்க்கான விலை கண்டறியும் ஒரு வழிமுறையாகச் செயல்படுகிறது. மேலும், இந்திய சந்தைகள் திறப்பதற்கு முன்பே எதிர்பார்ப்புகளைப் பாதிக்கிறது. வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தம் மீதான தடையானது, பெரும்பாலும் ரூபாய் ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கும் வெளிநாட்டு ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது


வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தச் சந்தையின் தவறான பயன்பாடு


வழங்க முடியாத நிதி வகையீடு (NDD) ஒப்பந்தச் சந்தை சில சந்தைப் பங்கேற்பாளர்களால் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக, சில பங்கேற்பாளர்கள் சாதகமான நகர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்து மீண்டும் நுழைவார்கள். இதன் மூலம், இடர் காப்பீட்டிற்காக உருவாக்கப்பட்ட கருவிகள், ஊக வணிகத்திற்கான கருவிகளாக மாற்றப்பட்டன.

புவிசார் அரசியல் மற்றும் வர்த்தகப் பதட்டங்களைப் பயன்படுத்தி, பெரிய வெளிநாட்டு வர்த்தகர்கள் சில சமயங்களில் ரூபாய் வீழ்ச்சியடையும் என்று அவர்கள் பந்தயம் கட்டி பெரிய அளவிலான வர்த்தகங்களை மேற்கொள்கின்றனர். இது இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ரூபாயைப் பாதிக்கும்.


"பிப்ரவரி மாத இறுதியில் மேற்கு ஆசிய மோதல் தொடங்கியபோது இது நிகழ்ந்தது. இந்த நடைமுறையைத் தடை செய்வதன் மூலம், ஒழுங்குமுறை நடுவர் வர்த்தகத்திற்கு வழிவகுத்த ஒரு குறைபாட்டை ரிசர்வ் வங்கி சரிசெய்கிறது," என்று ஒரு ஆய்வாளர் கூறினார்.


இது தொடர்புடைய தரப்பினருடனான பரிவர்த்தனைகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த நடவடிக்கை, உண்மையான இடர் வெளிப்பாட்டை மறைக்கக்கூடிய அல்லது அதிகார வரம்புகளுக்கு இடையே இலாபங்களையும் இடர்களையும் மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய குழுவிற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்கிறது. உலகளாவிய கணக்கியல் தரங்களுடன் வரையறைகளை சீரமைப்பதன் மூலம், இந்திய அந்நிய செலாவணி நடைமுறைகளை சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணையாகக் கொண்டு வருவதற்கான தனது நோக்கத்தை ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிடுகிறது. இதன் விளைவாக, முதலீட்டாளர் நம்பிக்கை மேம்பட வாய்ப்புள்ளது.


குறுகிய காலத்தில், ரூபாயின் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊக வணிக நடவடிக்கைகள் (speculative trades) குறையும்போது இது நிகழும்.


Original article : RBI’s ban on speculative games in rupee through NDD, amid pressures on rupee -George Mathew

Share:

பதவி உயர்வுக்கான அடிப்படை உரிமையாக கருதப்படும் உரிமை -வினீத் பல்லா

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில், பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்படும் உரிமை என்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளிலிருந்தே உருவாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமை என்று குறிப்பிடுகிறது. இது இந்தியாவில் அரசு வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு முக்கியமான சட்டக் கொள்கையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.


அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு என்பது ஒரு உறுதி அளிக்கப்பட்ட உரிமை இல்லை என்றாலும், அவர்கள் தகுதிக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்திருந்தால், அவர்களை நியாயமான முறையில் பரிசீலனை செய்வதை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு எடுக்கபட்ட ஒரு வழக்கு, நடைமுறையில் இந்த உரிமை எவ்வாறு பெரும்பாலும் மீறப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.


இது எந்த வழக்கைக் குறிக்கிறது?


இளநிலை பொறியாளரான குல்வந்த் சிங், ஊழியர்களின் பதவி உயர்வுகளை மதிப்பீடு செய்யும் துறை சார்ந்த பதவி உயர்வுக் குழு (Departmental Promotion Committee (DPC)) கூட்டத்தில் தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்டதால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


அவர் தனது கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பைத் தொலைதூரக் கல்வி (Distance Learning) வழியாகப் பெற்றதால், அவர் இந்தப் பணிக்குத் தகுதியற்றவர் என்று மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


இருப்பினும், அரசு தனது திருத்தப்பட்ட பணி விதிகளை தவறாகப் புரிந்துகொண்டதை உயர்நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த விதிகளின்படி, சிங் போன்ற ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்தத் தேவையிலிருந்து (Requirement) தெளிவான விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்தத் தவறின் காரணமாக, அவருடைய பதவி உயர்வு பரிசீலனைக் குழுவின் முன் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


அவருக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுக்கான வாய்ப்பு அநீதியான முறையில் மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அவருக்குக் முன்தேதியிட்ட தற்காலிகப் பதவி உயர்வை (Notional Promotion with Retrospective Effect) வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், துறைசார் பதவி உயர்வுக் குழு (DPC) கூட்டங்களை முறையாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்விற்காகப் பரிசீலிக்கப்படும் உரிமை என்பதன் பொருள் என்ன?


உச்சநீதிமன்றத்தால் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு உரிமையின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு-14 (Article 14) மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(1) [Article 16(1)] ஆகியவற்றில் இருந்து உருவானதாகும். காலப்போக்கில், நீதிமன்றங்கள் "வேலைவாய்ப்பு" என்ற சொல்லிற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளன. இது ஒரு நபரின் ஒட்டுமொத்தப் பணி வாழ்க்கையையும் உள்ளடக்கியது என்பதால், சமவாய்ப்பு என்பது பதவி உயர்வு போன்ற தொழில் வளர்ச்சிக்கும் பொருந்தும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன.


1991-ஆம் ஆண்டில், பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி அல்லது வாய்ப்பு மற்றும் ஒரு பதவியை நிச்சயமாகப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஒடிசாவைச் சேர்ந்த ‘Lift Irrigation Corporation’ தொடர்பான ஒரு வழக்கில், "பதவி உயர்வு பெறுவது என்பது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்றும் ஆனால், விதிகளின்படி பதவி உயர்வுக்காக ஒரு ஊழியரின் பெயர் பரிசீலிக்கப்படுவது அவரது உரிமை" என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இந்தக் கருத்து 1999-ஆம் ஆண்டு அஜித் சிங் vs பஞ்சாப் மாநில அரசு (Ajit Singh vs State of Punjab) இடையிலான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(1)-ன்படி (Article 16(1)), தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படுவது ஒரு அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் தெரிவித்தது.


இதற்கிடையில், ஒரு நபர் பதவி உயர்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்து, அதற்கான முன்னுரிமைப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் போனால், அது அந்த நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் நீதிமன்றம்  விளக்கியுள்ளது.


இதன் பயன்பாடு நடைமுறையில் எவ்வாறு செயல்பட்டுள்ளது?


ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில், பீகார் மாநில மின்சார வாரியம் vs தரம்தியோ தாஸ் (Bihar State Electricity Board vs Dharamdeo Das) இடையிலான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்த வழக்கில், அரசு அதிகாரி ஒருவர் தனக்கு 2003-ஆம் ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்ட போதிலும், 1997-ஆம் ஆண்டில் காலிப்பணியிடம் உருவான காலத்திலிருந்தே முன்தேதியிட்டு (Backdated) அந்தப் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஒருவர் பதவி உயர்வுக்குத் தகுதி உள்ளவரா என்று பரிசீலிக்கப்படுவது அடிப்படை உரிமை என்றாலும், ஒருவருக்குக் கட்டாயம் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ஒரு காலிப் பணியிடம் உருவான அதே தேதியிலிருந்து தனக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு ஊழியரும் உரிமை கோர முடியாது என்றும், குறிப்பாக நிர்வாகக் காரணங்களால் தாமதம் ஏற்படும்போது பதவி உயர்வு தள்ளிப்போகக்கூடும் என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.


நிர்வாகரீதியான தாமதங்களால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு உதவ, உயர்நீதிமன்றங்கள் தற்போது ஒரு முக்கியக் கொள்கையைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, துறைசார் பதவி உயர்வு குழு (DPC) கூட்டங்கள் முறையாக நடத்தப்படாமல் தாமதம் ஏற்படுவதால், ஊழியர்கள் பதவி உயர்வு வாய்ப்புகளின்றி ஒரே பதவியில் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் அவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்கள் இக்கொள்கையைப் பயன்படுத்துகின்றன.


டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் 57-வயதிற்கு மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது. அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் தங்களுக்குப் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க, துறைசார் பதவி உயர்வுக் குழு (DPC) தங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதவி உயர்விற்காகப் பரிசீலிக்கப்படுவது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்றும், தேவையற்ற காலதாமதத்தால் அந்த உரிமையை மறுக்க முடியாது என்றும் கூறி, இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


அதேபோல், 2022-ஆம் ஆண்டில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் சில மூத்த போலீஸ் ஆய்வாளர்களுக்கு சாதகமானத் தீர்ப்பை வழங்கியது. இவர்கள் 2007-ஆம் ஆண்டிலேயே பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருந்தும், 2021-ஆம் ஆண்டில்தான் மதிப்பீடு செய்யப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மாநில அரசின் இந்தத் தாமதம் அவர்களின் பல ஆண்டுக்கால பணி வளர்ச்சியைப் பாதித்துள்ளதைக் கவனித்த நீதிமன்றம், அவர்களுக்கு அந்தப் பதவிக் காலியிடங்கள் உருவான தேதியிலிருந்தே  முன்தேதியிட்ட பதவி உயர்வை வழங்க உத்தரவிட்டது.


டெல்லி உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், இது போன்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தியது. அதில், தகுதியுள்ள ஊழியர்கள் பதவி உயர்வுக்காக காத்திருப்பதைத் தவிர்க்கவும், அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், துறைசார் பதவி உயர்வுக் குழு (Departmental Promotion Committee (DPC)) கூட்டங்களை முறையாகவும் வழக்கமாகவும் நடத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.

Original article :  Right to be considered for promotion as a fundamental right -Vineet Bhalla

Share:

தாமிரத்தின் கதை: தாமிரம் என்பது என்ன மற்றும் அது ஏன் உலகப் பொருளாதார நலனை பிரதிபலிக்கிறது? - ரோஷ்னி யாதவ்

 இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய உச்சத்தை எட்டிய லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange (LME)) தாமிரத்தின் (Copper) விலையானது, மேற்கு ஆசியப் போர் பதற்றத்தால் ஏற்பட்ட தேவை குறைவின் காரணமாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஜனவரி மாத இறுதியில் ஒரு டன் 14,527.50 டாலராக இருந்த தாமிரத்தின் விலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குச் சற்று முன்பாக, பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியன்று 13,343.5 டாலராகக் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, மூன்று மாத கால எதிர்கால ஒப்பந்த விலையானது மேலும் சரிந்து தற்போது சுமார் 12,147 டாலர் என்கிற அளவில் உள்ளது.


இந்தச் சூழலில், தாமிரம் (Copper) ஏன் ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தின் அளவுகோலாகக் கருதப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதன் பண்புகள், பயன்பாடுகள் மற்றும் பரவல் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. தாமிரம் (Copper) என்பது எளிதில் வளைக்கக்கூடிய மற்றும் நீட்டக்கூடிய ஒரு மென்மையான உலோகமாகும். இது மிக உயர்ந்த வெப்பக் கடத்துத்திறன் மற்றும் மின் கடத்துத்திறனைக் கொண்டுள்ளது. இயற்கையிலேயே சுத்தமான மற்றும் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய நிலையில் கிடைக்கக்கூடிய ஒரு சில உலோகங்களில் இதுவும் ஒன்றாகும்.


2. தாமிரம் ஒரு மிக முக்கியமான இரும்பு சாரா உலோகம் (Non-Ferrous Metal) ஆகும். இது பல்வேறு தொழில்துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நவீனப் பொருளாதாரத்தில் தாமிரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வீட்டுவசதி, உற்பத்தித் துறை, மின்சார அமைப்புகள், தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே, ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தைக் கண்டறியும் முக்கியக் குறியீடாக தாமிரம் பெரும்பாலும் கருதப்படுகிறது.


3. தாமிரத்தின் விலை உயரும்போது, அது பொதுவாக வலுவான பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கிறது. அதேசமயம், அதன் விலை குறையும்போது, அது பொருளாதார மந்தநிலையைக் குறிக்கும் என்கின்றனர்.


4. மேற்கு ஆசியப் போரின் காரணமாக எரிசக்தி செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது பொருளாதார வளர்ச்சியை குறைக்கக்கூடும் என்றும் கவலைகள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, தாமிரத்திற்கான தேவை குறைந்துள்ளதை சமீபத்திய அதன் விலை வீழ்ச்சி காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


5. 2022-ஆம் ஆண்டு இந்திய கனிமங்கள் ஆண்டு புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook 2022 (IMY)), இந்தியா தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் போதுமான தாமிர உலோகத் தாதுவை (Copper ore) உற்பத்தி செய்வதில்லை என்றும் உள்நாட்டு உற்பத்தியுடன் சேர்த்து, தனது உருக்காலைகளின் (Smelters) செயல்பாட்டிற்காக இந்தியா செறிவூட்டப்பட்ட தாமிர தாதுக்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

6. இந்தியாவில் தாமிரம் மற்றும் அதன் உலோகக் கலவைகளுக்கானத் தேவை, உள்நாட்டு உற்பத்தி, பழைய உலோகங்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஒரு பொதுத்துறை நிறுவனமான ‘Hindustan Copper Limited’ மட்டுமே, இந்தியாவில் தாமிரச் சுரங்கம், தாது பதப்படுத்துதல், உருக்குதல், சுத்திகரித்தல் மற்றும் வார்ப்பு போன்ற அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒரே நிறுவனமாக உள்ளது.


7. தாமிரம் உலகிலேயே மிக அதிக அளவில் மறுசுழற்சி செய்யப்படும் உலோகங்களில் ஒன்றாகும். கனிமத் தாதுக்களில் இருந்து புதிய தாமிரத்தை உற்பத்தி செய்வதைவிட, பழைய தாமிரக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படுவதால், உலகம் முழுவதும் தாமிர மறுசுழற்சி (Copper Recycling) அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மேலும், இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுவதாகவும் கூறப்படுகிறது.


தாமிர விநியோகம்


1. 2022-ஆம் ஆண்டு இந்திய கனிமங்கள் ஆண்டு புத்தகத்தின்படி (Indian Minerals Yearbook (IMYB)), இந்தியாவில் தாமிரத் தாது (Copper ore) இருப்புகளில் முதலிடத்தில் ராஜஸ்தான் மாநிலம் (52.25%) உள்ளது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (23.28%) மற்றும் ஜார்கண்ட் (15.14%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


2. ஆந்திரப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்தியாவின் தாமிர உலோக வளங்கள், மீதமுள்ள 9.33% பங்கைக் கொண்டுள்ளன. 


3. 2022-ஆம் ஆண்டின் இந்தியக் கனிமங்கள் ஆண்டுப் புத்தகத்தின்படி, உலகளாவிய தாமிர உலோக இருப்பு சுமார் 890 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிலி நாடு சுமார் 21% பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா (11%), பெரு (9%), ரஷ்யா (7%), மெக்சிகோ (6%) மற்றும் அமெரிக்கா 5% பங்கையும் கொண்டுள்ளன. காங்கோ (கின்ஷாசா), போலந்து, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் தலா 3% பங்கையும், கஜகஸ்தான் மற்றும் ஜாம்பியா தலா 2% பங்கையும், கனடா 1% பங்கையும் கொண்டுள்ளன. மீதமுள்ள 24% இருப்பு உலகின் பிற நாடுகளிடம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


தாமிரத்தின் பயன்கள்


1. 2022-ஆம் ஆண்டின் இந்திய கனிமங்கள் ஆண்டு அறிக்கையின்படி, தாமிரத்தை அதிகளவில் பயன்படுத்தும் துறையாக மின்னணுத் துறை விளங்குகிறது. மின்சாரத்தைக் கடத்துவதில் விலை உயர்ந்த உலோகங்களுக்கு அடுத்தபடியாக இதுவே மிகச்சிறந்த மின்கடத்தியாக இருப்பதால், இது மின்சாரக் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மின்கடத்தலின் போது மிகக் குறைந்த மின் தடையை அளிப்பதோடு, உயர்அழுத்த மின்சாரக் கம்பிகள் முதல் நுண்ணிய மின்சுற்றுகள் வரை அனைத்து மின் அமைப்புகளிலும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல பொருட்களுடன் ஒப்பிடுகையில், தாமிரம் அதிக வெப்பம் அல்லது அழுத்தத்திலும் அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


2. அதேவேளையில், கட்டுமானத் துறையில் குழாய் பதிப்பு, குழாய்கள், அடைப்பான்கள் (Valves) மற்றும் இணைப்புகளுக்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்துத் துறையில், இது பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.


3. தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் தாமிரம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது நாணயங்கள், பாத்திரங்கள் மற்றும் பிட்டிங்குகள் (Fixtures) போன்ற நுகர்வோர் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பித்தளை (Brass) மற்றும் வெண்கலம் (Bronze) போன்ற உலோகக் கலவைகளை உருவாக்கவும் தாமிரம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.


தாமிரத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் பொருட்கள்


1. சிறந்த செயல்திறன், குறைந்த விலை அல்லது குறைந்த எடை போன்ற காரணங்களுக்காக தாமிரத்திற்கு மாற்றாக மற்ற உலோகங்களைப் பயன்படுத்த முடியும். குறிப்பாக மின்சாரக் கம்பிகள், மின் சாதனங்கள், வாகன ரேடியேட்டர்கள் (Automobile radiators) மற்றும் குளிர்சாதனக் குழாய்கள் போன்றவற்றில் தாமிரத்திற்குப் பதிலாக பெரும்பாலும் அலுமினியம் (Aluminium) பயன்படுத்தப்படுகிறது.


2. சில தொலைத்தொடர்பு பயன்பாடுகளில், ஒளி இழை (Optical Fibre) தாமிரத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், குடிநீர்க் குழாய்கள், குழாய் இணைப்பு வேலைகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பல கட்டமைப்பு சார்ந்த பயன்பாடுகளில் தாமிரத்திற்குப் பதிலாகப் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன.


Original article : The story of Copper: what is this metal and why it reflects global economic health -Roshni Yadav

Share:

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், மெட்ராஸில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு 'உச்சநீதிமன்றம்' செயல்பட்டு வந்தது. - முகமது இம்ரானுல்லா S.

 1687-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு சாசனம், மேயருக்கும், நகர மன்றத்தின் (Aldermen) மிக மூத்த உறுப்பினர்கள் மூவருக்கும், இணைந்து ஒரு 'பதிவு நீதிமன்றத்தை' (Court of Record) அமைக்கும் அதிகாரத்தை வழங்கியது. மேயர் நீதிமன்றத்திற்கு மாற்றாக, 'மெட்ராஸ் ரெக்கார்டர் நீதிமன்றத்தை' (Court of the Recorder of Madras) அமைப்பதற்காக, மூன்றாம் ஜார்ஜ் மன்னர் 1798-ம் ஆண்டில் மற்றொரு சாசனத்தை வெளியிட்டார். 1800-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வேறொரு சாசனம், இந்த நீதிமன்றத்தை ரத்து செய்துவிட்டு, சென்னையில் 'உச்ச நீதிமன்றம்' (Supreme Court of Judicature) நிறுவியது.


கடந்த சில காலமாகவே, தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அரசியல்வாதிகளும் சென்னையில் உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையை (Bench) நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், தற்போதைய 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' (High Court of Judicature) நடைமுறைக்கு வரும் வரை, சென்னையில் 'உச்ச நீதிமன்றம்' ஒன்று 60 ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையில் செயல்பட்டு வந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இம்மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள நீதி வழங்கும் முறை, அதன் தொன்மையான காலனித்துவ வரலாற்றைப் போலவே பழைமையானதாகும். 1640-களில், பிரிட்டிஷார் சென்னையில் தங்கள் அதிகார மையமாகத் திகழும் 'புனித ஜார்ஜ் கோட்டையை' (Fort St. George) கட்டியெழுப்பினர். மேலும், தங்கள் வர்த்தக நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் குடியேறுவதை அவர்கள் ஊக்குவிக்கத் தொடங்கினர். காலப்போக்கில் மக்கள்தொகை பெருகியதோடு, உரிமையியல் மற்றும் குற்றவியல் சார்ந்த தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு நீதிமுறை அமைப்பின் தேவையும் அதிகரித்தது.


ஒரு நகரம் 'மாநகராட்சி'யாக உருவெடுத்தல்


சிறிய அல்லது அற்பமான விவகாரங்களுக்குத் தீர்வு ண, இராணுவச் சட்டத்தைப் (Martial Law) பயன்படுத்த இயலாது என்பதை உணர்ந்த 'கிழக்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் லண்டன் வணிகர்களின் ஆளுநர் மற்றும் நிறுவனம்' (The Governor and Company of Merchants of London Trading to the East Indies), இரண்டாம் ஜேம்ஸ் மன்னரின் ஒப்புதலோடு, 1687-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியன்று ஒரு சாசனத்தை வெளியிட்டது. அச்சாசனத்தின் வாயிலாக, "கிழக்கு இந்தியத் தீவுகளின் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள, பொதுவாக 'கிறிஸ்தவ நகரம்' (Christian Town) என்றும் 'மதராசப்பட்டினம்' (Madrassapatam) என்றும் அழைக்கப்படும் 'புனித ஜார்ஜ் கோட்டை நகரமும்' மற்றும் அக்கோட்டையிலிருந்து 10 மைல் தொலைவிற்குள் அமைந்திருக்கும் அதற்குரிய அனைத்துப் பகுதிகளும் ஒரு 'மாநகராட்சி'யாக (Corporation) அறிவிக்கப்படுகின்றன" என்று பிரகடனப்படுத்தப்பட்டது.


இச்சாசனம், அந்நகரத்தின் குடியிருப்பாளர்களிலிருந்து ஒரு மேயர், 12 மன்ற உறுப்பினர்கள் (Aldermen) மற்றும் 60 நகரப் பிரதிநிதிகளை (Burgesses) தொடர்ச்சியாக வாரிசுரிமை அடிப்படையில், தேர்ந்தெடுப்பதற்கும் நியமிப்பதற்கும் வழிவகை செய்தது. இவர்களுக்கு, வரிகளை விதித்து வசூலிக்கும் அதிகாரம் பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல், மேயரும் மூன்று மூத்த மன்ற உறுப்பினர்களும் (Aldermen) 'சமாதான நீதிபதிகளாக' (Justices of the Peace) அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இணைந்து ஒரு 'பதிவு நீதிமன்றத்தை' (Court of Record) அமைத்து, சமத்துவம், நல்ல மனசாட்சி மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஏற்றனர்.


இவ்வாறாகவே தமிழ்நாட்டில் 'மேயர் நீதிமன்றத்தின்' (Mayor’s Court) வரலாறு தொடங்கியது. மேலும், 1687-ம் ஆண்டின் இந்தச் சாசனமே, மாநிலத்தின் குறிப்பாக, சென்னையில் மேயர்களும் நீதிபதிகளும் சிறப்பு அங்கிகள் (robes) அணியும் வழக்கத்திற்கும், "பொதுமக்களிடமிருந்து மதிப்பையும் மரியாதையையும் ஈர்க்கும் பொருட்டும், "அதிக கம்பீரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மூன்றரை அடி நீளமுள்ள வெள்ளிச் செங்கோல்களைச் சுமந்து செல்லும் பணியாளர்கள் அவர்களுக்கு முன்னால் செல்லும் வழக்கத்திற்கும் வழிவகுத்தது.


கடற்கொள்ளையர்களை விசாரிப்பதற்கான ஆணையம்


1726-ம் ஆண்டில், மும்பை (அப்போதைய பம்பாய்) மற்றும் கொல்கத்தா (அப்போதைய கல்கத்தா) ஆகிய இடங்களிலும் பிரிட்டிஷார் மேயர் நீதிமன்றங்களை நிறுவினர். 1753-ம் ஆண்டில், இந்த மேயர் நீதிமன்றங்கள் தொடர்பாக ஒரு திருத்தப்பட்ட சாசனம் வெளியிடப்பட்டது. பின்னர், 1761-ம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியன்று, புனித ஜார்ஜ் கோட்டையில் (Fort St. George) கடற்கொள்ளையர்களை விசாரிப்பதற்காக ஒரு ஆணையத்தை நிறுவுவதற்கான மற்றொரு சாசனம் வெளியிடப்பட்டது. இருப்பினும், மாநிலத்தின் நீதி நிர்வாகத்தில் ஏற்பட்ட அடுத்த முக்கிய மாற்றம் 1798-ம் ஆண்டில்தான் நிகழ்ந்தது.


1798-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதியன்று, மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு சாசனத்தை வெளியிட்டார். இதன் மூலம் 'சென்னை பதிவாளர் நீதிமன்றம்' (Court of the Recorder of Madras) உருவாக்கப்பட்டது. இது மேயர் நீதிமன்றத்திற்கு மாற்றாக அமைந்தது. இந்த புதிய நீதிமன்றத்திற்கு 'சென்னை பதிவாளர்' (Recorder of Madras) என்று அழைக்கப்பட்ட ஒரு முதன்மை நீதிபதி தலைமை தாங்கினார். இவர் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தைச் சேர்ந்த, குறைந்தது ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞர் பணி அனுபவம் கொண்ட ஒரு 'பாரிஸ்டராக' (Barrister) இருக்க வேண்டும் என்பது விதியாகும். இவரைத் தவிர, பதிவாளர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாகச் செயல்பட மூன்று மூத்த மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

பதிவாளர் (Recorder) என்பவர், மேயருடனோ அல்லது மன்ற உறுப்பினர்களில் (Aldermen) ஒருவருடனோ இணைந்து நீதிமன்றங்களை நடத்தும் அதிகாரம் பெற்றிருந்தார். மேலும், அவரது நீதிமன்றத்திற்கு, இங்கிலாந்தில் இயங்கி வந்த 'கிங்ஸ் அமர்வு நீதிமன்றத்திற்கு' (Court of King’s Bench) இணையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. பதிவாளரின் ஆண்டு ஊதியம் 5,000 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இந்தச் சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்ததாவது, "மேற்கூறிய ஊதியத்தைத் தவிர, வேறு எவ்விதமான அலுவலகக் கட்டணங்களையோ, சலுகைகளையோ, வருவாய்களையோ அல்லது ஆதாயங்களையோ எத்தகையதாக இருப்பினும் அந்தப் பதிவாளர் எந்த வகையிலும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அல்லது எந்தப் பின்புலத்தை ஏற்றுக்கொள்ளவோ, பெறவோ அல்லது எடுத்துக்கொள்ளவோ ​​கூடாது."


சென்னையின் குடியிருப்பாளர்களுக்கு எதிராகத் தொடரப்படும் அனைத்து வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் பதிவாளர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. "இருப்பினும், முகமதியர்கள் அல்லது 'ஜென்டூக்கள் (Gentus)' (இந்துக்கள்) தொடர்பான வழக்குகளில், இவர்களின் வாரிசுரிமை, நிலங்கள், வாடகை வருவாய் மற்றும் உடைமைகள் மீதான உரிமை மாற்றம், அத்துடன் இரு தரப்பினருக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள் சார்ந்த அனைத்து விவகாரங்களும், குறிப்பாக முகமதியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் சட்டங்கள் மற்றும் மரபுகளின்படியும், இரு தரப்பினரும் ஜென்டூக்களாக (இந்துக்களாக) இருக்கும் பட்சத்தில், ஜென்டூக்களின் சட்டங்கள் மற்றும் மரபுகளின்படியும் தீர்மானிக்கப்பட வேண்டும்," என்று அந்தச் சாசனம் குறிப்பிட்டிருந்தது. தாமஸ் ஆண்ட்ரூ லுமிஸ்டன் ஸ்ட்ரேஞ்ச் (Thomas Andrew Lumisden Strange) என்பவர் சென்னையின் முதல் பதிவாளராக நியமிக்கப்பட்டார். அவரது பிரம்மாண்டமான உருவப்படத்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள கம்பீரமான தலைமை நீதிபதி நீதிமன்ற அறையில் இன்றும் காணலாம்.


ஆளுநருக்கான சட்ட விலக்குரிமை (Immunity)


மூன்று ஆண்டுகளுக்குள், கிங் ஜார்ஜ் III டிசம்பர் 26, 1800 அன்று மற்றொரு சாசனத்தை வெளியிட்டார். இச்சாசனம் 'பதிவாளர் நீதிமன்றத்தின்' செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதற்குப் பதிலாக, சென்னையில் 'உச்சநீதிமன்றத்தை' இது நிறுவியது. இந்தப் புதிய நீதிமன்றத்திற்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக சிவில், குற்றவியல், கடல்சார் மற்றும் திருச்சபை சார்ந்த அதிகார வரம்புகளைச் செயல்படுத்தும் அதிகாரம் இதற்கு இருந்தது. இந்தச் சாசனம், சென்னையின் ஆளுநருக்கும் அவரது மன்றத்திற்கும் (Council) உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து விலக்கு அளித்து, அவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு (Immunity) வழங்கியது.


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கான ஆண்டு ஊதியம் 6,000 பவுண்டுகளாகவும், அந்த நீதிமன்றத்தின் இரண்டு துணை நீதிபதிகளுக்கான (Puisne Judges) ஆண்டு ஊதியம் தலா 5,000 பவுண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது. முன்னதாகப் பதிவாளராகப் பணியாற்றிய ஸ்ட்ரேஞ்ச் (Strange) என்பவர், 1801-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று, 1816-ம் ஆண்டு வரை அப்பதவியில் தொடர்ந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஹென்றி கில்லிம் (Henry Gwillim) மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரான பெஞ்சமின் சல்லிவன் (Benjamin Sullivan) ஆகியோர், அந்த நீதிமன்றத்தின் முதல் இரண்டு துணை நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். மெட்ராஸ் உச்சநீதிமன்றம், சுமார் 61 ஆண்டுகள் செயல்பட்ட காலத்தில் ஒன்பது வெவ்வேறு தலைமை நீதிபதிகளால் வழிநடத்தப்பட்டது. ஒன்பதாவது தலைமை நீதிபதியான கோலி ஹார்மன் ஸ்காட்லாண்ட்-ன் பதவிக்காலத்தில், 1862-ல், விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட ஒரு அரசாணை மூலம் உச்சநீதிமன்றமும், சுதர் அதாவ்லட் மற்றும் ஃபௌஜ்தாரி அதாவ்லட் நீதிமன்றங்களும் கலைக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.


கலைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹார்மன் ஸ்காட்லாண்ட், உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், சுவாரஸ்யமாக, மெட்ராஸ் உயர்நீதிமன்ற நிர்வாகம், தலைமை நீதிபதி ஹார்மன் ஸ்காட்லாண்ட்-ன் பதவிக்காலத்திலிருந்து கணக்கிடாமல், 1801-ல் இருந்த தலைமை நீதிபதி ஸ்ட்ரேஞ்ச் காலத்திலிருந்து தனது தலைமை நீதிபதிகளின் பதவிக்காலத்தைக் கணக்கிடுகிறது. அதே சமயத்தில், 1862-ம் ஆண்டையே அது தனது அதிகாரப்பூர்வமான நிறுவன ஆண்டாகக் கருதுகிறது.


Original article : https://www.thehindu.com/news/national/tamil-nadu/a-supreme-court-of-judicature-functioned-for-over-60-years-at-madras-during-british-rule/article70806176.ece

Share:

இந்தியாவின் குடிநீர் எதிர்காலத்திற்காக ஒரு வலுவான தகவல் அமைப்பை உருவாக்குதல் -அனுஜ் ஷர்மா, மனு ஸ்ரீவஸ்தவா

 குழாய்களும் விசைக்குழாய்களும் தண்ணீரை வழங்கும். ஆனால், டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆதரவளிக்கும்போது, நம்பகமான பகிரப்பட்ட தகவல்களே அவற்றை பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட வைக்கும். 


தரவும், முறையான தரவு மேலாண்மையுமே எந்தவொரு அமைப்பின் முதுகெலும்பாகும். அதில் உள்ள வேறுபாடுகள் தொழில்நுட்பரீதியாகத் தோன்றினாலும், அவை உண்மையான விளைவுகளைக் கொண்டுள்ளன. இதில் வரையறைகள் வேறுபடும்போதும், தரவு மூலங்கள் முரண்படும்போதும், மாநிலங்கள் களத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வெறும் அறிக்கைகளை சரிசெய்து வெளியிடுவதில் மதிப்புமிக்க நேரத்தைச் செலவிடுகின்றன. இதனால், பழுதுபார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது பொறியாளர்களுக்குச் சிரமமாகிறது. இதன் விளைவாக, முன்னேற்றம் குறைகிறது. இது முயற்சியின்மையால் நடப்பதில்லை. ஒரு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த கண்ணோட்டம் இல்லாததாலேயே இதற்கு காரணமாக அமைகிறது.


இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய கிராமப்புற நீர் விநியோக மாற்றங்களில் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இந்தச் சவாலுக்கு அவசர கவனம் தேவை. 2019-ல் ஜல் ஜீவன் இயக்கம் (Jal Jeevan Mission) தொடங்கப்பட்டதிலிருந்து, கிராமப்புற இந்தியாவில் வீட்டுக் குழாய் நீர் இணைப்பு 16.72%-லிருந்து 81%-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தச் சாதனை என்பது வெறும் குழாய்களைப் பதித்து இணைப்புகளை வழங்குவது மட்டுமல்ல. இது வாழ்க்கையை மேம்படுத்துவதாகும். இது, குறிப்பாகப் பெண்களுக்கு, 5.5 கோடிக்கும் அதிகமான தினசரி கடின உழைப்பைச் சேமித்துள்ளது. வயிற்றுப்போக்கு நோய்களால் ஏற்படும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் இறப்புகளைத் தடுக்கவும் இது உதவியுள்ளது.

ஆனால், குழாய்களையும் பம்புகளையும் அமைப்பது இந்தச் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே. அது மட்டும் போதுமானதல்ல. வரும் ஆண்டுகளில் தண்ணீர் சீராகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் பாய்வதை உறுதி செய்வதே உண்மையான சவாலாகும். இதை அடைவதற்கு, உள்கட்டமைப்பைத் தொடர்ந்து கண்காணிப்பது, பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிவது, மற்றும் பல நிறுவனங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.


இந்தியா, குடிநீர் துறைக்காக ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, நீர் அமைப்புகளைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கான அடித்தளத்தை அமைக்கிறது. இது, சுஜலாம் பாரத் ஐடிகள் (Sujalam Bharat IDs) மற்றும் சுஜல் கௌன் ஐடிகள் (Sujal Gaon IDs) மூலம் ஒவ்வொரு குடிநீர் திட்டத்திற்கும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தை வழங்குவதாகும்.


ஒரு சுஜலம் பாரத் ஐடி (Sujalam Bharat ID), என்பது நீர் மூலத்திலிருந்து தொடங்கி குழாய் வரை, நீரியல் ரீதியாக இணைக்கப்பட்ட அனைத்து வளங்களின் முழுமையான டிஜிட்டல் பதிவை உருவாக்குகிறது. சுஜலம் பாரத் செயலி (Sujalam Bharat App) போன்ற தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, இது சுஜல் காவ்ன் ஐடிகளை (Sujal Gaon IDs) உருவாக்க உதவுகிறது மற்றும் நீர் அமைப்புகள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தெளிவான பார்வையை வழங்குகிறது. இந்த அமைப்பு கண்காணிப்பை மேம்படுத்துகிறது, வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், தொழில்நுட்பரீதியாக வலுவூட்டப்பட்ட வளர்ந்த இந்தியா 2047-ஐ (Viksit Bharat @2047) உருவாக்குவதற்குப் பங்களிக்கிறது.


திட்டச் செயல்திறன்


உள்கட்டமைப்புத் தரவுகள் (Infrastructure data) மட்டும் போதாது. குடிநீர் அமைப்புகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதற்கு, காலப்போக்கில் இந்தத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் டிஜிட்டல் அமைப்புகள் பதிவு செய்ய வேண்டும். நீர் விநியோகத்தின் சீரான தன்மை, நீர்மூலங்களில் உள்ள நீர் மட்டங்கள், நீரின் தரக் குறிகாட்டிகள் மற்றும் திட்டங்களின் நிதி நிலைத்தன்மை குறித்த தரவுகளும் சம முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகைய தகவல்கள் டிஜிட்டல் அமைப்புகளுக்குள் சீராகப் பாயும்போது, திட்டங்கள் திட்டமிட்டபடி செயல்படுகின்றனவா என்பதையும், எங்கு கவனம் தேவை என்பதையும் அரசாங்கங்களும் சமூகங்களும் நன்கு புரிந்துகொள்ள முடியும்.


நம்பகமான செயல்பாட்டுத் தரவுகள் (Reliable operational data), இத்துறை சார்ந்த சவால்களுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை மாற்றும் ஆற்றல் கொண்டவை. குறைந்துவரும் நீர்வள மட்டங்கள் மற்றும் சீரற்ற விநியோக முறைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். நீரின் தர அபாயங்கள் பொது சுகாதாரக் கவலைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றை சுட்டிக்காட்ட முடியும். செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கான சரியான நேர நிதித் திட்டமிடல், அமைப்புகள் அவற்றின் நோக்கம் கொண்ட பலன்களைத் தொடர்ந்து வழங்குவதை உறுதி உதவுகிறது.


அதேபோல் முக்கியமாக, இந்த வெளிப்படைத்தன்மை சமூக நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது. கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள், உள்ளூர் தேவைகள் மற்றும் பருவகால நீர் நிலவரங்கள் குறித்த ஆழ்ந்த புரிதலுடன், கிராமப்புற குடிநீர் அமைப்புகளை நிர்வகிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


உள்ளூர் அமைப்புகள், உண்மையான உள்கட்டமைப்பையும் அதன் செயல்பாட்டையும் காணும்போது, தங்களின் நீர் விநியோக அமைப்புகள் குறித்து தெளிவான புரிதலைப் பெறுகின்றன. அவர்களால் குழாய்கள், பம்புகள் மற்றும் தொட்டிகள் குறித்த தகவல்கள், விநியோகத்தின் சீரான தன்மை, நீர் மட்டங்கள், நீரின் தரம் மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்த தரவுகளுடன் இணைந்து, கிராம அமைப்புகளுக்கு அவற்றின் அமைப்புகள் குறித்த எளிமையான ஆனால் சக்திவாய்ந்த ஒரு தெளிவான பார்வையை வழங்குகின்றன. இந்தத் தரவுகளின் மூலம், சமூகங்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து, பொறியாளர்களுடன் இணைந்து அவற்றைத் தீர்க்க முடியும். கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்களுக்கு, இந்த வெளிப்படைத்தன்மை உள்ளூர் நீர் மேலாண்மை மற்றும் மக்கள் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.


இந்த உள்கட்டமைப்பு வளரும்போது, மாநிலங்கள் பொதுவான தங்களின் நீர் வடிவங்களைப் பயன்படுத்தி தகவல்களை எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும். எது சிறப்பாகச் செயல்படுகிறது?, எங்கு மேம்பாடு தேவை? என்பது குறித்த ஒருங்கிணைந்த கற்றலை செயல்படுத்தும் அதே வேளையில், அவை தங்கள் அமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டையும் தக்கவைத்துக் கொள்கின்றன.

இந்த அடிப்படை அமைப்புகள் தரவு சார்ந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புத்தாக்கங்களை ஆதரிக்க முடியும். களப்பணியாளர்கள் பம்புகள் மற்றும் குழாய்களின் உள்கட்டமைப்பு படங்களை எடுக்க முடியும். மேலும், செயற்கை நுண்ணறிவு விநியோகத்தை மதிப்பிடவும், சேதத்தைக் கண்டறியவும், பராமரிப்புத் தேவைகளைக் குறிக்கவும் முடியும். தரவுப் பகுப்பாய்வுகள் மூலம் கவனம் தேவைப்படும் அபாயங்களையும் வடிவங்களையும் அடையாளம் காண முடியும். இந்த மேம்பாடுகள் அனைத்தும் ஒரு இன்றியமையாத காரணியைச் சார்ந்திருக்கின்றன. இவை இம்முறையின் ஊடாக, நம்பகமான மற்றும் சார்ந்திருக்கக்கூடிய தகவல்கள் தடையின்றிப் பெறுவது அவசியமாகும்.


குழாய்களும் விசைக்குழாய்களும் தண்ணீரை வழங்குகின்றன. ஆனால், நம்பகமான மற்றும் பகிரப்பட்ட தகவல்கள் இந்த அமைப்புகளைப் பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன. சமூகங்கள் தங்கள் நீர் அமைப்புகளைப் புரிந்து கொள்ளும்போது, அவை அவற்றைப் பேணுகின்றன. உள்ளூர் அமைப்புகளிடம் சரியான தகவல்களும் முறையான கருவிகளும் இருக்கும்போது, அவர்களால் இந்த அமைப்புகளை நம்பிக்கையுடன் நிர்வகிக்க முடியும். அவர்களால் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களை விரைவாகத் தீர்க்கவும் முடியும். மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும்போது, ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நீடித்த குடிநீரை உறுதி செய்யப்படலாம்.


சமூகங்கள் தங்கள் நீர் அமைப்புகளைப் புரிந்து கொள்ளும்போது, அவற்றைப் பேணிப் பாதுகாக்கத் தொடங்குகின்றன. உள்ளூர் நிறுவனங்கள் சரியான தகவல்களையும் கருவிகளையும் கொண்டிருக்கும்போது, அவை நம்பிக்கையுடன் அவற்றை நிர்வகிக்கின்றன. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு களத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும்போது, ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நீடித்த குடிநீர் தொடர்ந்து கிடைக்க முடியும். ஜல் ஜீவன் இயக்கம், லட்சக்கணக்கான கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் நீரை வழங்கியுள்ளது. இந்த அமைப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். சமீபத்தில் நிறைவடைந்த ஜல் மஹோத்சவ்-2026 (Jal Mahotsav), இந்த மாற்றத்தைப் பிரதிபலித்தது. குடிநீர் வளங்களை நிர்வகிப்பதில் நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் பங்களிப்பை அங்கீகரித்ததன் மூலம், இந்த உணர்வு ஏற்கனவே அடிமட்ட நிலையில் வேரூன்றி வருவதையும், அமைப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய இப்போது அது வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இது காட்டியது.


அனுஜ் ஷர்மா, அர்க்யம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், மனு ஸ்ரீவஸ்தவா அதன் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் உள்ளனர்.


Original article : Building the information backbone for India’s drinking water future -Anuj Sharma, Manu Srivastava

Share: