பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில், பதவி உயர்வுக்காகப் பரிசீலிக்கப்படும் உரிமை என்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு ஆகிய அடிப்படை உரிமைகளிலிருந்தே உருவாகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 27-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு, இந்த உரிமையை ஒரு அடிப்படை உரிமை என்று குறிப்பிடுகிறது. இது இந்தியாவில் அரசு வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு முக்கியமான சட்டக் கொள்கையை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு என்பது ஒரு உறுதி அளிக்கப்பட்ட உரிமை இல்லை என்றாலும், அவர்கள் தகுதிக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்திருந்தால், அவர்களை நியாயமான முறையில் பரிசீலனை செய்வதை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது என்பதை இந்தத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு எடுக்கபட்ட ஒரு வழக்கு, நடைமுறையில் இந்த உரிமை எவ்வாறு பெரும்பாலும் மீறப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
இது எந்த வழக்கைக் குறிக்கிறது?
இளநிலை பொறியாளரான குல்வந்த் சிங், ஊழியர்களின் பதவி உயர்வுகளை மதிப்பீடு செய்யும் துறை சார்ந்த பதவி உயர்வுக் குழு (Departmental Promotion Committee (DPC)) கூட்டத்தில் தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்டதால், அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பைத் தொலைதூரக் கல்வி (Distance Learning) வழியாகப் பெற்றதால், அவர் இந்தப் பணிக்குத் தகுதியற்றவர் என்று மாநில அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், அரசு தனது திருத்தப்பட்ட பணி விதிகளை தவறாகப் புரிந்துகொண்டதை உயர்நீதிமன்றம் கண்டறிந்தது. அந்த விதிகளின்படி, சிங் போன்ற ஏற்கனவே பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இந்தத் தேவையிலிருந்து (Requirement) தெளிவான விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்தத் தவறின் காரணமாக, அவருடைய பதவி உயர்வு பரிசீலனைக் குழுவின் முன் ஒருபோதும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுக்கான வாய்ப்பு அநீதியான முறையில் மறுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, அவருக்குக் முன்தேதியிட்ட தற்காலிகப் பதவி உயர்வை (Notional Promotion with Retrospective Effect) வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், துறைசார் பதவி உயர்வுக் குழு (DPC) கூட்டங்களை முறையாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்விற்காகப் பரிசீலிக்கப்படும் உரிமை என்பதன் பொருள் என்ன?
உச்சநீதிமன்றத்தால் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஒரு உரிமையின் அடிப்படையிலேயே உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த உரிமை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு-14 (Article 14) மற்றும் பொது வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(1) [Article 16(1)] ஆகியவற்றில் இருந்து உருவானதாகும். காலப்போக்கில், நீதிமன்றங்கள் "வேலைவாய்ப்பு" என்ற சொல்லிற்கு விரிவான விளக்கம் அளித்துள்ளன. இது ஒரு நபரின் ஒட்டுமொத்தப் பணி வாழ்க்கையையும் உள்ளடக்கியது என்பதால், சமவாய்ப்பு என்பது பதவி உயர்வு போன்ற தொழில் வளர்ச்சிக்கும் பொருந்தும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன.
1991-ஆம் ஆண்டில், பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி அல்லது வாய்ப்பு மற்றும் ஒரு பதவியை நிச்சயமாகப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஒடிசாவைச் சேர்ந்த ‘Lift Irrigation Corporation’ தொடர்பான ஒரு வழக்கில், "பதவி உயர்வு பெறுவது என்பது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்றும் ஆனால், விதிகளின்படி பதவி உயர்வுக்காக ஒரு ஊழியரின் பெயர் பரிசீலிக்கப்படுவது அவரது உரிமை" என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தக் கருத்து 1999-ஆம் ஆண்டு அஜித் சிங் vs பஞ்சாப் மாநில அரசு (Ajit Singh vs State of Punjab) இடையிலான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(1)-ன்படி (Article 16(1)), தகுதியுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படுவது ஒரு அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையில், ஒரு நபர் பதவி உயர்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்து, அதற்கான முன்னுரிமைப் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்படாமல் போனால், அது அந்த நபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இதன் பயன்பாடு நடைமுறையில் எவ்வாறு செயல்பட்டுள்ளது?
ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில், பீகார் மாநில மின்சார வாரியம் vs தரம்தியோ தாஸ் (Bihar State Electricity Board vs Dharamdeo Das) இடையிலான வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்த வழக்கில், அரசு அதிகாரி ஒருவர் தனக்கு 2003-ஆம் ஆண்டில் பதவி உயர்வு வழங்கப்பட்ட போதிலும், 1997-ஆம் ஆண்டில் காலிப்பணியிடம் உருவான காலத்திலிருந்தே முன்தேதியிட்டு (Backdated) அந்தப் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. ஒருவர் பதவி உயர்வுக்குத் தகுதி உள்ளவரா என்று பரிசீலிக்கப்படுவது அடிப்படை உரிமை என்றாலும், ஒருவருக்குக் கட்டாயம் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், ஒரு காலிப் பணியிடம் உருவான அதே தேதியிலிருந்து தனக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு ஊழியரும் உரிமை கோர முடியாது என்றும், குறிப்பாக நிர்வாகக் காரணங்களால் தாமதம் ஏற்படும்போது பதவி உயர்வு தள்ளிப்போகக்கூடும் என்றும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
நிர்வாகரீதியான தாமதங்களால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு உதவ, உயர்நீதிமன்றங்கள் தற்போது ஒரு முக்கியக் கொள்கையைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, துறைசார் பதவி உயர்வு குழு (DPC) கூட்டங்கள் முறையாக நடத்தப்படாமல் தாமதம் ஏற்படுவதால், ஊழியர்கள் பதவி உயர்வு வாய்ப்புகளின்றி ஒரே பதவியில் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் அவர்களுக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்கள் இக்கொள்கையைப் பயன்படுத்துகின்றன.
டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் 57-வயதிற்கு மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்தது. அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் தங்களுக்குப் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு வழங்க, துறைசார் பதவி உயர்வுக் குழு (DPC) தங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதவி உயர்விற்காகப் பரிசீலிக்கப்படுவது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்றும், தேவையற்ற காலதாமதத்தால் அந்த உரிமையை மறுக்க முடியாது என்றும் கூறி, இந்தச் செயல்முறையை விரைவுபடுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
அதேபோல், 2022-ஆம் ஆண்டில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் சில மூத்த போலீஸ் ஆய்வாளர்களுக்கு சாதகமானத் தீர்ப்பை வழங்கியது. இவர்கள் 2007-ஆம் ஆண்டிலேயே பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருந்தும், 2021-ஆம் ஆண்டில்தான் மதிப்பீடு செய்யப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது. மாநில அரசின் இந்தத் தாமதம் அவர்களின் பல ஆண்டுக்கால பணி வளர்ச்சியைப் பாதித்துள்ளதைக் கவனித்த நீதிமன்றம், அவர்களுக்கு அந்தப் பதவிக் காலியிடங்கள் உருவான தேதியிலிருந்தே முன்தேதியிட்ட பதவி உயர்வை வழங்க உத்தரவிட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம் 2024-ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில், இது போன்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தியது. அதில், தகுதியுள்ள ஊழியர்கள் பதவி உயர்வுக்காக காத்திருப்பதைத் தவிர்க்கவும், அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், துறைசார் பதவி உயர்வுக் குழு (Departmental Promotion Committee (DPC)) கூட்டங்களை முறையாகவும் வழக்கமாகவும் நடத்த வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.
Original article : Right to be considered for promotion as a fundamental right -Vineet Bhalla