இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) தீர்ப்பாயங்களின் முன்னால் நடத்தப்படும் மறைமுகமான வழக்குகளைவிட கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய தடைகளுக்கு எதிராக சட்டப்பூர்வமாக முறையிடுவதை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு வலுவான அமைப்பும் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சையத் இப்திகார் அண்ட்ராபி எதிர். தேசிய புலனாய்வு முகமை (Syed Iftikhar Andrabi vs National Investigation Agency (2026) வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளது. அது என்னவென்றால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (1967) பதியப்படும் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்வீதம் மிக மிகக் குறைவாக உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் இந்தத் தண்டனை வீதம் ஒற்றை இலக்க விழுக்காட்டில் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் இது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது.
தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பில் உறுப்பினராக மட்டுமே இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு, இந்தச் சட்டம் எந்தவொரு உண்மையான பாதுகாப்பையும் வழங்குவதில்லை. வெறுமனே உறுப்பினராக இருப்பது மட்டுமே ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்பட்சத்தில், அந்த நடவடிக்கையையே அவர்கள் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாகவும் பயன்படுத்தக்கூடும். இந்தச் சட்டத்தின் பிரிவு 43D(5)-ன்கீழ் உள்ள கடுமையான பிணை (Bail) விதிமுறைகள் காரணமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுகளுக்கு இடையிலேயே முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகியுள்ளன. இந்த முரண்பாடுகள் காரணமாக, கடந்த மே மாதம் 22-ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் பெரிய நீதிபதிகள் அமர்வின் பரிசீலனைக்கு மாற்றியது.
கடந்த பத்து ஆண்டுகளில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. இது 649 வழக்குகள் (தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) 2024 தரவு) முதல் 1,226 வழக்குகள் (NCRB 2019 தரவு) வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில், நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த தரவுகளின்படி, மொத்தம் கைது செய்யப்பட்ட 10,440 நபர்களில் 335 பேருக்கு மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் தண்டனை வீதம் வெறும் 3.2 விழுக்காடு மட்டுமே ஆகும்.
2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கர்நாடகா மாநிலம் குறித்த சட்டப்பிரிவு 14 (Article 14) அமைப்பின் மூன்று ஆண்டுகால (2005-2025) ஆய்வும் இத்தகைய போக்கையே உறுதிப்படுத்துகிறது. அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) குற்றம்சாட்டப்பட்ட 925 பேரில், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான வழக்குகளில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. மேலும், இந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களைவிட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அதிகக் கைதுகள், மிகக் குறைந்த தண்டனைகள் மற்றும் நீண்டகால சிறைவாசம் ஆகிய இந்தத் தற்போதைய போக்கு, இச்சட்டத்தின் கடுமையான மற்றும் கொடூரமான தன்மையைக் காட்டுகிறது.
தொடக்கத்தில், பிரிவினைவாத நடவடிக்கைகளைக் கையாள்வதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பின்னர் பல சட்டத்திருத்தங்கள், குறிப்பாக 2019-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் இச்சட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த மாற்றங்கள், நீதிமன்றக் கண்காணிப்பு ஏதுமின்றி, ஒரு தனிநபரைத் பயங்கரவாதி என்றும், ஓர் அமைப்பைச் சட்டவிரோத அல்லது பயங்கரவாத அமைப்பு என்றும் அறிவிப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்கின. அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான பயனுள்ள வழிகளும் இதில் இல்லை.
அருப் புயான் vs அசாம் அரசு (Arup Bhuyan vs State of Assam (2023)) வழக்கில், எந்தவொரு அமைப்பையும் சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்கு முன்னால், முறையான சட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பொதுமக்களுக்குப் பரவலான அறிவிப்பு வழங்குவதும், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தீர்ப்பாயத்தின் முன்னால் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிப்பதும் அடங்கும். இருப்பினும், இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students' Islamic Movement of India (SIMI)) என்கிற அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தீர்ப்பாயத்தின் முன் ஆஜரானபோது, அவர் அங்கு வந்ததே அந்த அமைப்பு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தங்களது தரப்பு நியாயத்தைக் கூறுவதற்கான உரிமை, ஒரு பாதுகாப்பாக அமைவதற்குப் பதிலாக அவர்களுக்கே ஒரு பொறியாக மாறிப்போனது.
இதேபோல், அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India (PFI)) வழக்கில் தடையை உறுதிசெய்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை (Writ petition) டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது ஒரு சாதகமான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. அப்படி இருந்தபோதிலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் இந்த ஒட்டுமொத்த முறையானது தொடர்ந்து பல்வேறு கவலைகளை எழுப்பி வருகிறது.
மேலும், ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 35 மற்றும் 36 ஆகிய பிரிவுகளின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில், இதேபோன்ற மனுக்கள் நிலுவையில் உள்ள பல உயர்நீதிமன்றங்களுக்கு, இந்த வழக்குகளை அவற்றின் தகுதி அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சட்டப்பிரிவுகள், ஒன்றிய அரசு எந்தவொரு தனிநபரையும் நீதிமன்ற விசாரணை இல்லாமலும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளிப்படுத்தாமலும், அவர்கள் தரப்பு வாதத்தை வாய்மொழியாகக் கூறுவதற்குக்கூட வாய்ப்பளிக்காமலும் பயங்கரவாதி என்று அறிவிக்க அனுமதிக்கின்றன. இதுவரை, எந்தவொரு நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை.
சர்வதேச அளவில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு முறையான நீதித்துறை மறுஆய்வு வாய்ப்பை வழங்குவது என்பது ஒன்றும் புதிய சவால் அல்ல. பிரிட்டனில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் (Proscribed Organisations Appeal Commission (POAC)) ரகசியமாக விசாரணைகளை நடத்தவும், ரகசிய ஆதாரங்களை ஆய்வு செய்யச் சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கவும் முடியும். இதன் முடிவுகளை எதிர்த்து, சட்டரீதியான கேள்விகளின் அடிப்படையில் அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியும்.
2025-ஆம் ஆண்டில் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் (2000) (Terrorism Act 2000) 'Palestine Action' என்ற அமைப்பு தடை செய்யப்பட்டபோது, இந்தத் தடையை விரைவாக மறுஆய்வு செய்யாவிட்டால் அது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதி சேம்பர்லெய்ன் எச்சரித்தார். தம்மீதான வழக்குகள் நியாயமற்றவை என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட வழிவகுக்கும் என்றும் கூறினார். இதற்குத் தீர்வாக, பிரிட்டன் ஒரு தெளிவான நீதிமன்ற மறுஆய்வு நடைமுறையை வழங்கியது. ஆனால், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) தற்போதைக்கு இத்தகையதொரு மறுஆய்வு வழிமுறை இல்லை.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (UAPA) தீர்ப்பாயங்களின் முன்பாக, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக யாரோ ஒருவர் போலிப் பிரதிநிதியாக நின்று வழக்கு நடத்தும் தற்போதைய முறையைவிட இந்தியாவுக்கு மேம்பட்ட ஒன்று தேவைப்படுகிறது. அதாவது, ஒரு நியாயமான மற்றும் அர்த்தமுள்ள சட்ட நடைமுறை தேவைப்படுகிறது. ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டவுடன், தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞருக்குப் பதிலாக, நீதிமன்றத்தால் அல்லது சட்ட உதவி மையத்தால் நியமிக்கப்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் (Amicus Curiae) அந்த அமைப்பின் சட்டபூர்வ உரிமைகளுக்காக ஆஜராக வேண்டும். இந்த வழக்கறிஞருக்கு, ரகசியத் தனியுரிமை விதிகளைப் பின்பற்றி, அரசாங்கம் தாக்கல் செய்யும் மூடிமுத்திரையிட்ட ஆதாரங்கள் (Sealed-cover material) உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
ஒரு வழக்கு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும்போதே, இத்தகைய மாற்று வழக்கறிஞர்கள் தானாகவே நியமிக்கப்பட வேண்டும். ரகசியமான ஆதாரங்களை அணுகுவது முறையான பாதுகாப்பு அனுமதிச் செயல்முறையின்படி இருக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு அந்த வழக்கறிஞரின் வாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், சட்டரீதியான கேள்விகள் எழும்போது, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.
இந்தச் சீர்திருத்தங்கள், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்கப்படும் விளக்கம் கோரும் அறிவிப்பாணை செயல்முறையை அர்த்தமுள்ளதாக மாற்றும்; அதோடு, சட்டம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் மற்றும் அரசியலமைப்புத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ப சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் ஒரு சுதந்திரமான பாதுகாப்பு அரணாக இத்தீர்ப்பாயம் செயல்படவும் வழிவகுக்கும்.
பிரியான்ஷி சிங், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கே. எல். அரோரா குற்றவியல் சட்டத் துறைக்கான கல்விசார் ஆய்வாளர் ஆவார்.
Original article : Can a UK-style judicial review mechanism make the UAPA fairer? -Priyanshi Singh