புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​இணையதளத்தில் உள்ள மாற்றங்கள்: மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம், பணம் எடுப்பதற்கான தொகையைக் காணும் வசதி மற்றும் பல. -ஆஞ்சல் மேகஸைன், ரவி தத்தா மிஸ்ரா

 இந்தப் புதிய இணையதளம், வட்டி வரவு வைப்பு, கோரிக்கை சரிபார்ப்புக்கான இணையவழிச் செயல்முறைகள் மற்றும் பல்வேறு கோரிக்கை வகைகளின்கீழ் திரும்பப் பெறுவதற்குத் தகுதியான தொகையைப் பார்வையிடும் வசதி உள்ளிட்ட தானியங்கிச் செயல்முறைகளைச் சாத்தியமாக்குகிறது.

இந்தியாவின் ஓய்வூதிய நிதிய அமைப்பான 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு' (Employees’ Provident Fund Organisation (EPFO)) மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்த இருப்பதால், ஜூலை 15-க்குள் உறுப்பினர்கள் தங்கள் அனைத்து விவரங்களையும் ஒரே இணையதளத்தில் பெறுவதோடு, வட்டித் தொகை தானாகவே விரைவாக வரவு வைக்கப்படும் வசதியையும் பெறுவார்கள்.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO 2.01) முன்முயற்சியின்கீழ் உள்ள மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (Centralised IT Enabled Services (CITES)) திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை நோக்கிய நகர்வு ஆகும். இது அனைத்து மண்டலங்களிலிருந்தும் தகவல்களை ஒன்றிணைப்பதைத் தொடர்ந்து வருகிறது. இதன் விளைவாக, உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) பிடித்தம் செய்யப்பட்ட பணிபுரியும் நகரத்தில்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், எந்தவொரு மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்திலும் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர் பதிவுகள் அடங்கிய முழுமையான தரவுத்தளத்தை புதிய மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்திற்கு மாற்றும் செயல்முறையை நிறைவு செய்துள்ளது. முன்னதாக, இந்தச் சேவைகள் ஒரு குறிப்பிட்ட மண்டல அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. இப்போது, ​​ஒரு உறுப்பினரின் சேவைக் கோரிக்கையை நாடுமுழுவதும் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட இடத்திலிருந்தும் செயல்படுத்த முடியும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் மற்றும் தானியங்கி வட்டி வரவு


இந்தப் புதிய இணையதளம், வட்டி வரவு வைத்தல், கோரிக்கை சரிபார்ப்பை இணையவழியில் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு வகைகளின்கீழ் பணம் எடுப்பதற்கான தகுதியான தொகையைப் பார்க்கும் வசதி உள்ளிட்ட தானியங்கி செயல்முறைகளைச் சாத்தியமாக்குகிறது.


ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் என்பது, வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும், கடந்த காலங்களில் நிகழ்ந்ததுபோல ஒரு குறிப்பிட்ட மண்டல அலுவலகத்தில் தீர்வுகளைக் கண்டறிய சிரமப்படும் வருங்கால வைப்பு நிதி (PF) உறுப்பினர்களுக்கும் உதவும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். உதாரணமாக, ஒரு ஊழியர் சென்னையில் பணியாற்றிய பிறகு தனது சொந்த ஊரான மேற்கு வங்காளத்திற்குத் திரும்பினால், தனது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தொடர்பான பதிவுகளை அங்குள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகத்திலேயே பெற்று, ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்த்துக்கொள்ளலாம். இதற்காக அவர் மீண்டும் சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய அவசியமில்லை.



புதிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இணையதளத்தை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், ஆண்டு வட்டி (Annual Interest) வரவு வைக்கும் செயல்முறை வேகமாக நடைபெறும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமையன்று, 2025-26 நிதியாண்டிற்கான ரூ.1.44 லட்சம் கோடி வட்டித் தொகை புதிய இணையதளத்தில் தானியங்கி முறையில் செயலாக்கப்பட்டு, கள அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஜூலை 15-க்குள் 34 கோடி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை  8 கோடியாக உள்ளது என்று கூறினார்.


மேலும், திருத்தப்பட்ட நடைமுறையின்கீழ், வைப்பு நிதி தொடர்பான இறுதித் தீர்வுத் தொகைக்கான வட்டி இனி பணம் செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் தேதி வரை கணக்கிடப்படும். முன்னதாக, முந்தைய மாதத்தின் கடைசி நாள் வரை மட்டுமே வட்டி கணக்கிடப்பட்டு வந்தது. இதன் மூலம், இடைப்பட்ட காலத்திற்கான கூடுதல் வட்டியின் பலனை உறுப்பினர்கள் பெறுவது உறுதி செய்யப்படுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கோரிக்கைகள் (Claims) முன்கூட்டிய சரிபார்ப்பு 


அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​அலுவலகங்களில் கோரிக்கைகள் (claims) பரிசீலிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அவை தானியங்கி முறையில் முன்கூட்டியே சரிபார்க்கப்படும். இந்தப்புதிய நடைமுறையின் ஒரு பகுதியாக, ஏதேனும் குறைபாடுகள் அல்லது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், அது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் மூலமாகத் தெரிவிக்கப்படும்.


கோரிக்கை செயலாக்கத்தின்போது கூடுதல் தகவல் அல்லது விளக்கம் தேவைப்படும் இடங்களில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ​​அலுவலகங்கள் இந்த அமைப்புமுறை மூலம் இணைய வழியில் கேள்விகளை எழுப்ப முடியும். உறுப்பினர்கள் இணைய வழியில் பதிலளிக்க முடியும் என்பதால், விரைவான தீர்வு கிடைப்பதுடன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​அலுவலகங்களுக்கு நேரில் செல்வது வெகுவாக குறையும், கோரிக்கை நிராகரிப்புகளும் மேலும் குறையும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மற்றொரு புதிய அம்சமாக, உறுப்பினர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து பல்வேறு கோரிக்கைகளின்கீழ் பணம் எடுக்கத் தகுதியான தொகையைப் பெற முடியும். கடந்த சில ஆண்டுகளாக அதிக கோரிக்கை நிராகரிப்பு விகிதங்கள் ஒரு முக்கிய கவலையாக இருந்து வருவதால், முதல் முறையிலேயே கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் விகிதங்களை மேம்படுத்துவதையும், கோரிக்கை நிராகரிப்புகளைக் குறைப்பதையும் இது போன்ற நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.


முன்னர், வெவ்வேறு பணம் எடுக்கும் பிரிவுகளின்கீழ் தாங்கள் எடுக்கத் தகுதியான தொகை எவ்வளவு என்பது உறுப்பினர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இதன் விளைவாக, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட (Permissible Limit) அதிகத் தொகைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் அடிக்கடி நிராகரிக்கப்பட்டன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த இணையதளம், நெறிப்படுத்தப்பட்ட கோரிக்கைகள்


உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் விவரங்கள், வருங்கால வைப்பு நிதி இருப்பு, கோரிக்கையின் நிலை, ஓய்வூதியத்திற்குரிய சேவைப்பதிவுகள் மற்றும் பெறப்பட்ட பலன்கள் போன்றவற்றைக் பற்றி தெரிந்து கொள்வதற்க்கு ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் இடைமுகத்தை அணுகலாம். இது, அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு மற்றும் கோரிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பான தகவல்களுக்கான வெளிப்படைத்தன்மை மற்றும் அணுகலை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முழுமையாக உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC) என்பது சரிபார்க்கப்பட்டு, சரிபார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் வரையிலான முன்பணத்திற்கான உறுப்பினர் கோரிக்கைகள், தானியங்கித் தீர்வு முறை மூலம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்தது.


2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு அமைப்பு ​​தனது பணம் எடுக்கும் விதிமுறைகளில் பல மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, பணம் எடுக்கும் பிரிவுகளை 13-லிருந்து முக்கியத் தேவைகள் (நோய், கல்வி, திருமணம்), வீட்டு வசதித் தேவைகள் மற்றும் சிறப்புச் சூழ்நிலைகள் என்று மூன்றாக முறைப்படுத்தியதுடன், குறைந்தபட்சம் 25% இருப்புத் தொகையையும் அறிமுகப்படுத்தியது.


மொத்த உறுப்பினர் காலம் 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, உறுப்பினர்களுக்கு நோய் ஏற்பட்டால், அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், தகுதியுள்ள உறுப்பினர் அவர்களின் இருப்பு 100% வரை நிதியைத் திரும்பப் பெறலாம்.


100% தகுதியுள்ள உறுப்பினர் இருப்பு என்பது மொத்த நிதியில் 75%-ஐ திரும்பப் பெறுவதாகும். ஏனெனில், 25% தொகையை குறைந்தபட்ச இருப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாய நடைமுறையாகும். ஓராண்டு காலம் வேலை இல்லாமல் இருந்த பிறகு, அந்த முழுமையான 100% தொகையையும் திரும்பப் பெறலாம்.


உறுப்பினர் ஆன 12 மாதங்களுக்குப் பிறகு, உறுப்பினர்கள் தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கல்விக்காகப் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், உறுப்பினர் காலத்தில் அதிகபட்சமாக 10 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும். உறுப்பினர்கள் தங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் திருமணத்திற்காக, உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் காலத்தில் அதிகபட்சமாக ஐந்து முறை வரை, தகுதியான உறுப்பினர் தங்களது இருப்பில் 100% வரை பணத்தை எடுக்கலாம்.


வீட்டுவசதி தொடர்பான தேவைகளுக்காக, ஒரு உறுப்பினர் பின்வரும் காரணங்களுக்காகப் பகுதித் தொகையை எடுக்க அனுமதிக்கப்படலாம்: ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டை வாங்குதல்; வீடு கட்டுவதற்கான மனை; ஒரு வீட்டைக் கட்டுதல்; ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டை வாங்குவதற்கோ அல்லது கட்டுவதற்கோ அல்லது ஒரு மனையைக் கையகப்படுத்துவதற்கோ பெறப்பட்ட வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள வீடு அல்லது குடியிருப்பில் கூடுதல் கட்டுமானங்கள், மாற்றங்கள், புதுப்பித்தல்கள் அல்லது மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளலாம்.


முழு நேர உறுப்பினர் காலம் 12 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, மொத்த நிதியில் 75% வரை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். மேலும், பகுதியளவு பணம் எடுக்கும் (Partial Withdrawal) வசதியை உறுப்பினர் காலம் முழுவதும் அதிகபட்சம் 5 முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே இதற்கான நிபந்தனைகள் ஆகும்.


Original article : What changes with new EPFO portal: Centralised database, facility to see amount for withdrawal, and more. -Aanchal Magazine, Ravi Dutta Mishra

Share: