புற்றுநோய் குறித்த உலகளாவிய நிலை அறிக்கை 2026: உயர் வருவாய் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் மிகவும் அத்தியாவசியமான முதல் 20 புற்றுநோய் மருந்துகளின் இருப்பு வெறும் 9 விழுக்காட்டிலிருந்து 54 விழுக்காடு (9% - 54%) மட்டுமே உள்ளது. ஆனால், உயர் வருவாய் கொண்ட நாடுகளில் இது 68 விழுக்காட்டிலிருந்து 94 விழுக்காடு (68% - 94%) வரை கிடைக்கிறது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization (WHO)) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (International Agency for Research on Cancer (IARC)) ஆகியவை இணைந்து 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி வெளியிட்ட ‘Global Status Report on Cancer 2026’ அறிக்கையில், இதய நோய்களுக்கு அடுத்தபடியாக உலகளவில் மனிதர்களின் இறப்பிற்குப் புற்றுநோய் இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2.06 கோடி புதிய புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதோடு, ஏறக்குறைய 1 கோடி இறப்புகளும் நிகழ்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நடத்தப்பட்ட இந்த முதல் உலகளாவிய கணக்கெடுப்பு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கிறது.
அறிக்கையில் புதிதாக என்ன கூறப்பட்டுள்ளது?
உலகெங்கிலும் உள்ள குடும்பங்களுக்குப் புற்றுநோய் தொடர்ந்து மிகப்பெரிய நிதி மற்றும் சமூகச் சுமையாக இருந்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 45% பேர் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பாதிக்கும் மேற்பட்டோர் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மேலும், நோயாளிகளைப் பராமரிப்பவர்கள் அனைவருமே மனஅழுத்தம், ஊதியமில்லாப் பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் சமூகத் தனிமை ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
அத்தியாவசியப் புற்றுநோய் மருந்துப் பொருட்கள் கிடைப்பது இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளது. அதிக வருவாய் உள்ள வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, அங்கு 68% முதல் 94% வரை மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள ஏழை நாடுகளில், மிக முக்கியமான உயர்தர 20 புற்றுநோய் மருந்துகளில் வெறும் 9% முதல் 54% வரையிலான மருந்துகள் மட்டுமே கிடைக்கின்றன.
மேலும், புற்றுநோய் என்பது மிக இளம்வயதிலேயே ஏற்படும் மரணங்களுக்கும் ஒரு முக்கியக் காரணமாக மாறி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டில், 41 நாடுகளில் இளம்வயது மரணங்களுக்குப் புற்றுநோயே முதன்மைக் காரணமாக இருந்தது. 37 நாடுகளில் இரண்டாவது முக்கியக் காரணமாகவும், 47 நாடுகளில் மூன்றாவது முக்கியக் காரணமாகவும் புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.
புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் ஆதரவுப் பராமரிப்பு ஆகியவற்றைப் பெறுவதில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிக வருமானம் உள்ள நாடுகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 87 விழுக்காட்டினர் நோய் கண்டறியப்பட்ட பிறகு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது உயிர்வாழ்கின்றனர். ஆனால், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் சுமார் 42 விழுக்காட்டினர் மட்டுமே ஐந்து ஆண்டு காலம் வரை உயிர்வாழ்கின்றனர். மேலும், உலகளவில் மூன்று நாடுகளில் ஒரு நாட்டுக்கும் குறைவான நாடுகளே தங்களின் உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டுத் (Universal Health Coverage (UHC)) திட்டங்களில் புற்றுநோய் சிகிச்சையையும் சேர்த்துள்ளன.
உலகளவில் பதிவாகும் ஒவ்வொரு 10 புற்றுநோய் பாதிப்புகளிலும் ஏறக்குறைய நான்கு பாதிப்புகள், முன்னெச்சரிக்கையாகத் தடுத்திருக்கக்கூடிய சில ஆபத்தான காரணிகளோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. இவற்றில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus (HPV)), ஹெபடைடிஸ் பி மற்றும் சி (Hepatitis B and C), மற்றும் ஹெலிகோபாக்டர் பைலோரி (Helicobacter pylori) போன்ற கிருமித் தொற்றுகளும், மதுப்பழக்கம், புகையிலை பயன்பாடு, அதிக உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index (BMI)) மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்ற பழக்கவழக்கங்களும் அடங்கும். புற்றுநோயை வராமல் தடுப்பதன் முக்கியத்துவத்தை இது நமக்கு உணர்த்துகிறது.
உலகளவில் புற்றுநோயினால் ஏற்படும் மரணங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் முதன்மைக் காரணமாக இருந்து வருகிறது.
ஆண்களுக்கு நுரையீரல், சிறுநீர்ப்பை அருகே இருக்கும் சுரப்பி (Prostate) மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. அதேநேரத்தில் பெண்களுக்கு மார்பகம், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஒட்டுமொத்தப் பாதிப்பில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன.
வெவ்வேறு பிராந்தியங்களில் புற்றுநோய் எவ்வாறு வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது: உலக சுகாதார அமைப்பு (WHO) தனது அறிக்கையில், புற்றுநோயின் பாதிப்பு பிராந்தியங்களுக்கு இடையே கணிசமாக வேறுபடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில், ஆசியாவின் மிகப்பெரிய மக்கள்தொகையை எதிரொலிக்கும் விதமாக, உலகளவில் பதிவான மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் பாதியளவுக்கும் மேலாகவும் (50.7%) மற்றும் இறப்புகளில் பாதிக்கு மேலாகவும் (56.5%) ஆசியாவிலேயே பதிவாகியுள்ளன.
உலக மக்கள்தொகையில் சுமார் 9 விழுக்காடு மட்டுமே கொண்டுள்ள ஐரோப்பா, உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகளில் 21 விழுக்காட்டையும், அதனால் ஏற்படும் மரணங்களில் 20 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. அதாவது, அதன் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது அங்கு புற்றுநோயின் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் புற்றுநோய் பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
புற்றுநோய் பாதிப்பின் அடிப்படையில் இந்தியா மற்ற நாடுகளுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது, மேலும் இது ஏன் ஒரு முக்கிய கவலையாக மாறி வருகிறது?
இந்தியாவில் புற்றுநோய் என்பது அறிவிக்கப்பட வேண்டிய ஒரு நோய் (Notifiable disease) அல்ல; இதன் காரணமாக, இந்நோய் குறித்த துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினமாக உள்ளது. நாட்டின் இறப்புப் பதிவு முறையிலும் பல குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக, மரணத்திற்கான காரணங்கள் முழுமையற்றதாகவோ அல்லது தவறாகவோ பதிவு செய்யப்படுவதும் இதில் அடங்கும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் (Indian Council of Medical Research -National Cancer Registry Programme (ICMR-NCRP)) மற்றும் இந்திய புற்றுநோய் மரபணு வரைபடம் (Indian Cancer Genome Atlas (ICGA)) ஆகியவற்றின் சமீபத்திய தரவுகளின்படி, புற்றுநோய் என்பது இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
புதிய புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிதல், சிகிச்சைக்கான வசதிகளைப் பெறுதல் மற்றும் உயிர் பிழைப்பதற்கான விகிதம் ஆகியவற்றில் இன்னும் பெரிய சவால்கள் நீடிக்கவே செய்கின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15.6 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புகளும், ஏறக்குறைய 8.7 லட்சம் புற்றுநோய் மரணங்களும் பதிவாவதாக மத்திய சுகாதார அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக, மரணத்தை ஏற்படுத்தும் இரண்டாவது முக்கியக் காரணியாகப் புற்றுநோய் உருவெடுத்துள்ளது.
இந்தப் புற்றுநோயின் பாதிப்பு இந்தியா முழுவதும் ஒரே சீராக இல்லை. வடகிழக்கு மாநிலங்களில்—குறிப்பாக மிஸோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றில், உலகிலேயே மிக அதிகமான புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் உள்ளன. குறிப்பாக, புகையிலையினால் ஏற்படும் புற்றுநோய்கள் இங்கு மிக அதிகம். பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக உள்ளது. ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் மிகவும் பொதுவானதாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் புகையிலை பயன்பாடு ஆகும்.
இவை தவிர நுரையீரல், கர்ப்பப்பை வாய், உணவுப்பாதை, வயிறு மற்றும் குடல் புற்றுநோய்களும் மற்ற பொதுவான புற்றுநோய்களாக உள்ளன.
சுகாதார அமைச்சகத்தின்படி, அதிகரித்துவரும் இந்த புற்றுநோய் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணங்கள்: வயது முதிர்ந்த மக்கள் தொகை, புகையிலை மற்றும் மதுப் பயன்பாடு, உடல் பருமன், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், போதிய உடற்பயிற்சி இல்லாமை, ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மற்றும் ஹெபடைடிஸ் பி, சி (Hepatitis B & C) போன்ற தொற்றுநோய்கள் மற்றும் காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் ஆகும்.
மேம்பட்ட நோயறிதல் சோதனைகள் மற்றும் அது குறித்த தகவல்கள் வெளியாவது முன்பைவிட இப்போது அதிகரித்திருந்த போதிலும், புற்றுநோயாளிகளில் ஏறக்குறைய 60 முதல் 70 விழுக்காட்டினருக்கு நோய் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. அந்தச் சூழலில், அவர்களுக்குத் தரப்படும் சிகிச்சையின் பலன் குறைவாக இருப்பதோடு, அதற்கான செலவும் அதிகரிக்கிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான மாநிலங்களவையின் நாடாளுமன்ற நிலைக்குழு, 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'புற்றுநோய் பராமரிப்புத் திட்டம் மற்றும் மேலாண்மை: தடுப்பு, கண்டறிதல், ஆராய்ச்சி, கட்டுப்படியாகும் தன்மை மற்றும் புற்றுநோய் சிகிச்சை' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. இந்தியாவில் புற்றுநோயால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு, மருத்துவ வசதிகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்காதது, போதிய சிகிச்சைச் சேவைகள் இல்லாதது மற்றும் முறையான சிகிச்சைக்கான செலவுகளை ஏழை எளிய மக்களால் சமாளிக்க முடியாதது ஆகியவையே முக்கியக் காரணங்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
தகுதியான மருத்துவர்கள், மருத்துவமனைகள், முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் ஆகியவை சரியான நேரத்தில் கிடைப்பது பெரும்பாலும் பெருநகரங்களில் மட்டுமே சாத்தியமாக உள்ளது. இதனால் நாட்டின் பெரும்பகுதிகளில் தரமான புற்றுநோய் சிகிச்சை கிடைப்பதில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பிராந்தியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள், சமூக-பொருளாதார நிலைகள், விழிப்புணர்வு இல்லாமை, உடல்நலக் குறைபாடுகளை அலட்சியப்படுத்தும் போக்கு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவ வளங்களின் பற்றாக்குறை ஆகியவை திறம்படப் புற்றுநோய் சிகிச்சை அளிப்பதைக் கடினமாக்குகின்றன என்றும் அந்தக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளில் சுமார் 80 விழுக்காட்டினர் நோய் மிகவும் முற்றிய, தீவிரமான நிலையிலேயே மருத்துவ சிகிச்சையை நாடுகின்றனர். இதுவே நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இறப்போரின் விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது.
தேசிய தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (National Programme for Prevention and Control of Non-Communicable Diseases (NP-NCD)) அரசாங்கம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மேலும், புற்றுநோய் மையங்களை வலுப்படுத்துதல், ஜன் ஔஷதி (Jan Aushadhi) மற்றும் அம்ரித் (AMRIT) மருந்தகத் திட்டங்கள் மூலம் சில குறிப்பிட்ட புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைத்தல், ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தின்கீழ் மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் உயிர்காக்கும் பல புற்றுநோய் மருந்துகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும், நம் நாட்டில் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கும் நோயாளிகள் தங்களின் சொந்தப் பணத்திலிருந்து அதிக அளவில் செலவுசெய்ய வேண்டியிருப்பது இன்னும் ஒரு பெரிய கவலையாகவே நீடிக்கிறது.
Original article : Why Cancer cases are rising worldwide. -Bindu Shajan Perappadan