தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்பு (public authority) என்பது எதைக் குறிக்கிறது? - திலீப் பி. சந்திரன்

 2026-ஆம் ஆண்டு மே மாதத்தில் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI)) ஒரு "பொது அதிகார அமைப்பு" (public authority) அல்ல என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்தது. இருப்பினும், ஒரு நிறுவனம் பொதுப் பணிகளை அல்லது "பொது நடவடிக்கைகளை" மேற்கொள்வது அதனை அந்தச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருமா என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ஒரு "பொது அதிகார அமைப்பு" அல்ல என்றும், எனவே அந்தச்சட்டத்தின்கீழ் தகவல்களை வெளியிடுமாறு வாரியத்தை நிர்பந்திக்க முடியாது என்றும் மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission (CIC)) தீர்ப்பளித்தது.


2026-ஆம் ஆண்டு மே மாதம் வழங்கிய தீர்ப்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பது 'தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் (Tamil Nadu Societies Registration Act) சட்டம், 1975'-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம் என்பதை மத்திய தகவல் ஆணையம் (CIC) சுட்டிக்காட்டியது. பதிவு செய்வதன் மூலம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற தனிநபர்களின் தனியார் அமைப்பு என்ற வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அரசின் எந்தவொரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டிற்குள் வராது என்று   குறிப்பிட்டது.




இந்தத் தீர்ப்பு, பேச்சு மற்றும் கருத்து வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையின் முக்கிய அங்கமாக இருந்து வரும், தெரிந்துகொள்ளும் உரிமை" (Right to Know) தொடர்பாகவும், பொது அதிகார அமைப்பு (Public Authority) என்ற கருத்து தொடர்பாகவும் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவில் தெரிந்து கொள்ளும் உரிமை எவ்வாறு 2005-ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டமாக உருவானது. மேலும், அந்தச்சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்பு என்பது எதைக் குறிக்கிறது?


தெரிந்து கொள்வதற்கான உரிமையின் அரசியலமைப்புரீதியான அடித்தளம்


உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நாடுகள், தகவல் பெறும் உரிமை சட்டத்தை  மக்களின் உயிர்நாடியாக அங்கீகரிக்கின்றன. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (1948) 19-வது பிரிவும், மக்கள் மற்றும் 1966-ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 19(2)-வது பிரிவும், தகவல்களைத் தேடுதல், பெறுதல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை கருத்துச் சுதந்திரத்தின் ஒரு முக்கிய அடையாளமாக உறுதிப்படுத்துகின்றன.


இந்தியாவில், அரசியலமைப்பின் பிரிவு 19(1)(அ)-ன் கீழ் உள்ள பேச்சு மற்றும் கருத்துரிமை எனும் அடிப்படை உரிமையின் முக்கியப்பகுதியாக 'அறியும் உரிமையை' (right to know) உறுதி செய்வதில் நீதித்துறை முக்கிய பங்காற்றியுள்ளது. எடுத்துக்காட்டாக, 1975-ஆம் ஆண்டு 'உத்தரப் பிரதேச மாநிலம் vs ராஜ் நரேன்' (State of Uttar Pradesh vs Raj Narain) வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், நாட்டு மக்கள் ஒவ்வொரு பொது நடவடிக்கை குறித்தும், பொதுப் பொறுப்பில் உள்ளவர்களால் பொதுவெளியில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல் குறித்தும் தெரிந்துகொள்ளும் உரிமையை பெற்றுள்ளனர் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


1986-ஆம் ஆண்டு எல். கே. கூல்வால் vs ராஜஸ்தான் மாநிலம் (L K Koolwal vs State of Rajasthan) வழக்கில், “அரசியலமைப்பின் 19(அ) பிரிவின்கீழ் பேச்சுரிமை உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. பேச்சுரிமை என்பது தெரிந்து கொள்வதற்கான உரிமையின் அடிப்படையாக  அமைந்துள்ளது.



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) பரிணாம வளர்ச்சி


பின்னர், 1990-களில் ராஜஸ்தானில் செயல்பட்ட மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (Mazdoor Kisan Shakti Sangathan (MKSS)) முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இயக்கத்தின் மூலம் தகவல் அறியும் உரிமைக்கான (Right to Information) போராட்டம் வலுப்பெற்றது.


பொது விசாரணைகளின்போது போலி வருகைப் பதிவேடுகளையும் பிற மசோதாக்களையும் வெளிப்படையாக ஆய்வு செய்த தேவதுங்கிரி கிராம மக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையாக உருவெடுத்தனர். இந்த அடிப்படை இயக்கம் இறுதியில் 2005-ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் (Right to Information Act) சட்டத்திற்கு வழிவகுத்தது.


பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஊக்குவித்தல், ஊழலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தகவல் தெரிந்த குடிமக்கள் மூலம் பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் இந்தச் சட்டம் 2005-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வந்தது. இருப்பினும், இந்தச் சட்டத்தின்கீழ் மிக முக்கியமாக எழும் கேள்வி, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act) கீழ் பொது அதிகார அமைப்பு (Public Authority) என்று எதை வரையறுக்கலாம்? என்பது ஆகும்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI Act)கீழ் பொது அதிகார அமைப்பு


அறியும் உரிமைச்சட்டத்தின்,பிரிவு 2(h)-ன் கீழ், பொது அதிகார அமைப்பு (Public Authority) என்பது பின்வரும் வழிகளில் உருவாக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட அதிகாரம், அமைப்பு அல்லது தன்னாட்சி நிறுவனத்தையும் குறிக்கிறது: அவை,


(அ) அரசியலமைப்பின் மூலம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்புகள்.


(ஆ) நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள்;


(இ) மாநில சட்டமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வேறு அமைப்புகள்.


(ஈ)  மத்திய அல்லது மாநில அரசு வெளியிடும் அறிவிப்பு (Notification) அல்லது அரசாணை (Order) மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஆகும்.


இந்த வரையறையானது, உரிய அரசாங்கங்களுக்குச் சொந்தமான, அவற்றால் கட்டுப்படுத்தப்படும் அல்லது கணிசமாக நிதியளிக்கப்படும் அனைத்து அதிகார அமைப்பு அல்லது நிறுவனத்திற்கும் விரிவடைகிறது. சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் நிதிகளால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதிகளவில் பெறும் அரசு சாரா அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வருகின்றன.


இந்தச் சட்டம் பொது அதிகார அமைப்பிற்கு ஒரு வரையறையை வழங்குகிறது. இதன்மூலம், அரசாங்க அதிகாரசபைகள் மட்டுமல்லாமல், அரசாங்க நிதி மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் அதன் வரம்பிற்குள் கொண்டுவரப்படுகின்றன.


பொது அதிகாரிகளின் முக்கிய கடமைகள்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4, பொது அதிகார அமைப்புகளின் முக்கிய கடமைகளை வரையறுக்கிறது. தகவல்களை எளிதாக பெறுவதற்கு வசதியாக, பொது அதிகார அமைப்புகள் தங்களின் அனைத்து பதிவுகளையும்  முறையாகப் பட்டியலிட்டு மற்றும் அட்டவணைப்படுத்தி அதைக் கட்டாயமாக பராமரிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தங்களின் நிறுவனங்கள், செயல்பாடுகள், கடமைகள், முடிவெடுக்கும் செயல்முறை மற்றும் பிற முக்கிய தகவல்களின் விவரங்களை வெளியிடவும், ஆண்டுதோறும் புதுப்பிக்கவும் வேண்டும் என்றும் இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது..


இருப்பினும், முறையான கோரிக்கைகளின் தேவையைக் குறைக்கும்  வகையில், இணையம் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்புகள் மூலமாகவும், முடிந்தவரை உள்ளூர் மொழியிலும், பொது மக்களுக்கு சீரான இடைவெளியில் முடிந்தவரை அதிக தகவல்களைப் வழங்குமாறு இந்தச் சட்டம் பொது அதிகார அமைப்புகளை ஊக்கப்படுத்துகிறது.


மேலும், தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், சட்ட விதிகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்களுக்கு கேட்ட தகவல்களை வழங்குவதற்கும், பொது அதிகார அமைப்புகள் தங்களின் அனைத்து நிர்வாகப் பிரிவுகள் மற்றும் அலுவலகங்களில் பொதுத் தகவல் அலுவலர்களை (Public Information Officers (PIO)) நியமிப்பது கட்டாயமான செயல்முறையாகும்.


இருப்பினும், ஒரு நிறுவனம் தனது பொதுப் பணிகளை அல்லது “பொது நடவடிக்கைகளை” மேற்கொள்வது, அதனைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவருமா இல்லையா என்பதே ஒரு முக்கியக் கேள்வியாக எழுகிறது.


பொதுச் செயல்பாடுகள் (public actions) ஒரு அமைப்பை "பொது அதிகார அமைப்பாக" (public authority) தீர்மானிக்க முடியுமா?


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI)) தொடர்பான தனது மே 2026-ஆம் ஆண்டு வழக்கில், மத்திய தகவல் ஆணையம் (CIC) உச்சநீதிமன்றத்தின் மூன்று முக்கியத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தனது தீர்ப்பை வழங்கியது. அவை:


தலப்பலம் சர்வீஸ் கூட்டுறவு வங்கி vs  கேரளா மாநிலம் (Thalappalam Service Cooperative Bank vs State of Kerala),


ஜீ டெலிஃபிலிம்ஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா (Zee Telefilms vs Union of India),


டால்கோ இன்ஜினியரிங் vs சதீஷ் பிரபாகர் பத்யே (Dalco Engineering vs Satish Prabhakar Padhye) வழக்குகளாகும்.


2005-ஆம் ஆண்டு ஜீ டெலிஃபிலிம்ஸ் vs இந்திய அரசு வழக்கில், அரசியலமைப்பின் 12-வது பிரிவின் வரையறைப்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அரசின் கீழ் வரும் அமைப்பு என்று கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், அந்த அமைப்பு முக்கிய பொதுப் பணிகளை மேற்கொள்கிறது என்பதைப் பல்வேறு நீதிமன்றக் கருத்துகளும் நிபுணர் குழு அறிக்கைகளும் அங்கீகரித்துள்ளன.


2018-ஆம் ஆண்டில், அப்போதைய மத்திய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலுவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு பொது அதிகார அமைப்பு என்று கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பரப்புவதற்கான வழிமுறைகளை அமைக்குமாறு அந்த அமைப்புக்கு உத்தரவிட்டார்.


இருந்த போதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை செப்டம்பர் 2025-ல் புதிதாகப் பரிசீலிப்பதற்காக மத்திய தகவல் ஆணையத்திற்கே (CIC) திருப்பி அனுப்பியது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு “பொது அதிகார அமைப்பு” அல்ல என்று தீர்ப்பளித்ததன் மூலம், ஆணையம் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்தது.


பொதுப் பணிகள் மட்டுமே ஏன் போதுமானதாக இல்லை?


இருப்பினும், மத்திய தகவல் ஆணையத்தின்  (Central Information Commission (CIC)) தீர்ப்பை விமர்சிப்பவர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்: அரசின் மறைமுக ஒப்புதலுடன் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 'இந்தியா' என்ற பெயரைப் பயன்படுத்துதல், வரி விலக்குகள், கிரிக்கெட் மீதான ஒழுங்குமுறை அதிகாரம் மற்றும் தேசிய அணியைத் தேர்ந்தெடுத்தல் போன்ற 'பொது அதிகாரம்' (public authority) சார்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சலுகைகளை பெற்ற வருகிறது என்பது அவர்களது வாதமாக உள்ளது.


இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அனுபவிக்கும் சில வரி சலுகைகள், அரசு அதற்குப் அளவில் நிதியுதவி அளிப்பதாகக் கருதப்படாது என்று மத்திய தகவல் ஆணையம் கூறியது. மேலும், முக்கிய பொதுப் பணிகளை மேற்கொள்வது மட்டுமே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பொது அதிகாரம் என்ற வரம்பிற்குள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தானாகவே கொண்டு வந்துவிடாது என்று  மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டது.



மேலும், பொது அதிகாரம் (public authority) என்பதை வரையறுக்கும் வகையில், இந்தச்சட்டத்தில் "பொதுச் செயல்பாடு" (public function) என்ற சொல் எந்த ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை. மாறாக, அரசாங்கக் கட்டுப்பாட்டின் தன்மை மற்றும் பொது நிதியுதவியின் அளவு ஆகியவற்றின் மீதே இந்தச்சட்டம் கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற சட்டரீதியான அளவுகோல்களே நீதிமன்ற விளக்கத்தின் முக்கியயப் புள்ளியாக அமைந்துள்ளன.


அரசாங்கக் கட்டுப்பாடு மற்றும் கணிசமான நிதியுதவி


தகவல் அறியும் உரிமைச் சட்டம், “கணிசமான நிதியுதவி” மற்றும் “பொருத்தமான அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவது” போன்ற சொற்களுக்கு தெளிவான வரையறை வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும், மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) முடிவுகளும் நீதிமன்றத் தலையீடுகளும் அவ்வப்போது இந்தச் சொற்களின் பயன்பாட்டைத் தெளிவுபடுத்த முயற்சிக்கின்றன.


2013-ஆம் ஆண்டு தலப்பலம் சேவை கூட்டுறவு வங்கி லிமிடெட் மற்றும் பிறர் எதிர் கேரள மாநிலம் மற்றும் பிறர் (Thalappalam Service Cooperative Bank Ltd. & Others vs State of Kerala & Others) வழக்கில், உச்சநீதிமன்றம், கூட்டுறவு சங்கங்கள் (Cooperative Societies) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பொது அதிகார அமைப்புகள் (Public Authorities) அல்ல என்று தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் "கட்டுப்பாடு" என்பது கணிசமான (Substantial) மற்றும் நேரடியான கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை மட்டுமே எந்த ஒரு நிறுவனத்தையும் அந்தச்சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப் போதுமானதல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


மேலும், நீதிமன்றம் “கணிசமான நிதி” (substantial financing) என்ற சொல்லை, அது இல்லாமல் ஒரு அமைப்பு நடைமுறையில் இயங்க முடியாது என்பதால் “முக்கியமானது” எனக் குறுகிய முறையில் வரையறுத்துள்ளது. இந்த விளக்கங்கள், முக்கிய பொதுப்பணிகளைச் செய்யும் மற்றும் அரசாங்கங்களால் விரிவாக ஒழுங்குபடுத்தப்படும் அரசு அல்லாத அமைப்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே வைக்கின்றன.



சட்டப்பூர்வ விளக்கங்களை தாண்டி (Beyond Legal Formalism)


சட்டப்பூர்வ விளக்கங்களைத் தாண்டி, பொதுப் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள், அவற்றின் வடிவம் மற்றும் அமைப்பின் தன்மையைப் பொருட்படுத்தாமல், தங்கள் நிர்வாகத்தில் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தவும் அவற்றை அதிகரிக்கவும் முயற்சி செய்யலாம். அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மக்கள் அந்த நிறுவனங்களின்மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும். மேலும், சமூகத்தில் சமூக மூலதனம் (Social Capital) உருவாகவும் அது உதவும்.


மேலும், சந்தை நலன்கள் (Market Considerations) அல்லது போட்டியில் முன்னிலை பெறும் உரிமை (Competitive Advantage) போன்ற காரணங்கள், நிர்வாக வெளிப்படைத்தன்மை என்ற ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்பை புறக்கணிக்கக் கூடாது. இறுதியாக, சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சொற்களுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதும், அந்த சொற்களின் வரம்பை தெளிவாக நிர்ணயிப்பதும்,  வெளிப்படைத்தன்மைச் சட்டங்கள் அதிக நிறுவனங்களுக்கு பொருந்தும் வகையில் அதன் வரம்பை விரிவுபடுத்த உதவும்.


Original article : What constitutes public authority under the RTI Act. -Dileep P Chandran

Share: