ரூபாய் சர்வதேசமயமாக்கலுக்கு முயற்சி செய்ய வேண்டிய நேரம். -லோகேஷ்வரி எஸ்.கே.

 எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகளில் ரூபாயின் அதிகப்படியான பயன்பாடு, நாணயத்திற்கான தேவையை உருவாக்கி, அதன் மதிப்பில் ஏற்படும் தொடர்ச்சியான வீழ்ச்சியைத் தடுக்க உதவும்.


டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 95 என்ற அளவை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ரூபாயில் நிலவும் தற்போதைய நெருக்கடியானது, இந்தியாவிற்கு வெளியே ரூபாய்க்கான தேவையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கடந்த நான்கு ஆண்டுகளில், வெளிநாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ரூபாயைப் பயன்படுத்தும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.


2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, சர்வதேச வர்த்தகத் தகவல் பரிமாற்றத் தளமான, உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத்தொடர்புக்கான சங்கத்திலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT)) ரஷ்யா நீக்கப்பட்டதால், கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் சர்வதேசப் பணப்பரிவர்த்தனைகளை அணுகும் விதத்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளுக்காக மாற்றுத் தளங்களையும் வழிகளையும் உருவாக்குவதற்கும், டாலரிலிருந்து விலகி கையிருப்பைப் பல்வகைப்படுத்துவதற்கும், இருதரப்பு வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் தீர்ப்பதற்கும் தற்போது தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் இந்த நடவடிக்கைக்கு மேலும் உத்வேகம் அளிக்கக்கூடும். ஏனெனில், இந்தியா இப்போது டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டே இருப்பதுடன், எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைவேறாத கனவாக இருந்த ரூபாயின் சர்வதேசமயமாக்கல், சமீபத்திய ஆண்டுகளில் டாலர் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் அதிருப்தியைக் கருத்தில் கொண்டு, இப்போது ஒரு சாத்தியமாகத் தெரிகிறது. இது, உலகளாவிய கையிருப்பு மற்றும் கொடுப்பனவுகளில் டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் அல்லது டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளுடன் நெருக்கமாகப் பொருந்துகிறது.


கொள்கை நகர்வுகள்


2022-ல் ரஷ்யா உலகளாவிய பணப்பரிவர்த்தனைச் சூழலமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்டபோது, ​​உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் பெரும் அதிர்ச்சியை அடைந்தனர். இந்திய ரிசர்வ் வங்கியும் ஏறக்குறைய இதே காலகட்டத்தில் ரூபாயின் சர்வதேசப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க ஆரம்பித்தது. 2022 ஜூலையில், வெளிநாட்டு வர்த்தகத்திற்கான விலைப்பட்டியல் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை ரூபாயில் செய்ய அது அனுமதித்தது. ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு எதிரான தடையை இந்தியா மீறியதால், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் பாதுகாப்புப் பொருட்கள் உட்பட, ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 2022 முதல் ரூபாயிலேயே தீர்க்கப்பட்டு வருகிறது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா மற்றும் மாலத்தீவுகள் போன்ற நாடுகளுடன், இருதரப்பு வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் தீர்வு காண்பதற்காக இருதரப்பு நாடுகளின் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. டிசம்பர் 2023-ல், அனைத்து வர்த்தக நட்பு நாடுகளுடனும் உள்ளூர் நாணயங்கள் மற்றும் ரூபாயில் எல்லை தாண்டிய தீர்வுகாண அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டன.


இந்த நடவடிக்கைகள் தற்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ஜனவரி 2026 நிலவரப்படி, நிதியாண்டு 2026-ன் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் 6.18 சதவீதம் ரூபாயில் விலைப்பட்டியல் (invoicing) இடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ₹2.64 லட்சம் கோடியாகும். நிதியாண்டு 2024 முதல் இந்தப் பங்கு சுமார் 5.80 முதல் 5.9 சதவீதம் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. மொத்த இறக்குமதிகளில் ரூபாயில் விலைப்பட்டியல் செய்யப்படும் பங்கு 4.69 சதவீதமாக உள்ளது.


இருப்பினும், இந்தியப் சரக்குகள் மற்றும் சேவைகள் வர்த்தகத்திற்கான 'உண்மையான பணப் பரிமாற்றத்தில்' (settlement) ரூபாயின் பங்கு இதைவிடக் குறைவாகவே உள்ளது. இந்த நிதியாண்டில் ஏற்றுமதித் தீர்வகத்தில் ரூபாயின் பங்கு 2.76 சதவீதமாகவும், இறக்குமதியில் 2.32 சதவீதமாகவும் இருந்தது. இந்த இடைவெளி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இந்த இடைவெளியை விரைவில் சரிசெய்ய வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.


பல நாடுகளும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை குறைக்க விரும்புவது ஒரு நம்பிக்கையூட்டும் விஷயமாகும். பிப்ரவரி 2025 நிலவரப்படி, 30 வர்த்தகப் பங்குதாரர் நாடுகளைச் சேர்ந்த 123 வெளிநாட்டு வங்கிகள் 156 சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ (Vostro) கணக்குகளைத் திறக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதில் சுமார் 26 இந்திய வங்கிகள் ஈடுபட்டுள்ளன.


மேற்கு ஆசிய மோதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் அடக்குமுறைப் போக்குகள் மீதான அதிருப்தி அதிகரித்து வருவதால், இருதரப்பு நாடுகளின் வர்த்தகத்தில் ரூபாயின் பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும்.


டாலரின் ஆதிக்கம் குறைகிறது


மறுபுறம், சமீப ஆண்டுகளில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வலுவிழந்து வருகிறது. உலகளாவிய நிதி நெருக்கடியையும், அதைத் தொடர்ந்து கோவிட் பெருந்தொற்றையும் எதிர்கொள்வதற்காக அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மேற்கொண்ட கட்டுப்பாடற்ற நாணய அச்சிடல், டாலரின் மதிப்பைச் சரிவடையச் செய்துள்ளது. இதனால், நாடுகள் நம்பகமான கையிருப்பு நாணயங்களில் மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.


சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு நாணய இருப்புகளின் நாணயக் கலவை ((Currency Composition of Official Foreign Exchange Reserves(COFER)) தரவுகளின்படி, அமெரிக்க டாலர்களில் உள்ள உலகளாவிய வெளிநாட்டு நாணய இருப்புகளின் சதவீதம், 2017-ல் 64 சதவீதத்திலிருந்து 2025-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 56.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.


இந்தக் காலகட்டத்தில் உலகளாவிய கையிருப்பில் மற்ற நாணயங்களின் பங்கு 2.5 சதவீதத்திலிருந்து 6.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மரபுசாரா கையிருப்பு நாணயங்களை நோக்கிய ஒரு நகர்வைக் குறிக்கிறது. மற்றொரு பாதுகாப்பான புகலிடமான தங்கமும், டாலருக்கு ஒரு போட்டியாளராக உருவெடுத்து வருகிறது. உலகளாவிய கையிருப்பில் தங்கத்தின் பங்கு, 2015-ல் 10 சதவீதத்திலிருந்து தற்போது 23 சதவீதமாக, இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


வெளிநாடுகள் வசம் உள்ள அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் பங்கும் குறைந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) அறிக்கையின்படி, சுமார் 9 டிரில்லியன் டாலர் அல்லது 32 சதவீத அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வசம் உள்ளன. இது 2014-ல் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கிட்டத்தட்ட 50 சதவீதப் பங்கீட்டிலிருந்து குறைந்துள்ளது.


வெவ்வேறு நாணயங்களைப் பயன்படுத்தும் நாடுகளுக்கு இடையேயான வெளிநாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு குறிப்பு நாணயமாக டாலரின் பங்கு, உலகளாவிய வர்த்தகக் கட்டணப் பட்டியல்களில் டாலர் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. SWIFT தளத்தின் தரவுகளின்படி, சர்வதேசப் பணப்பரிவர்த்தனைகளில் டாலரின் பங்கு தற்போது சுமார் 50 சதவீதமாக உள்ளது என்று அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) கூறுகிறது. இந்தப் பணப்பரிவர்த்தனைகளில் வர்த்தகப் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் அனுப்புதல் ஆகிய இரண்டும் அடங்கும்.



மாற்று வழிமுறைகள்


ஆனால், இருதரப்பு நாடுகளின் வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் தீர்வு காண்பதை அதிகரிப்பது, டாலரிலிருந்து விலகிச் செல்லும் வர்த்தக நகர்வை விரைவுபடுத்த உதவும். சர்வதேச வர்த்தகத்திற்கான மாற்றுத் தீர்வு மற்றும் தகவல் பரிமாற்றத் தளத்தை உருவாக்குவதன் மூலம் இதற்கு உதவலாம். பெல்ஜிய வங்கி, அமெரிக்க மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் SWIFT தளம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் பெரும்பாலான உலகளாவிய கொடுப்பனவுகளைக் கையாள்வதால், அந்தத் தளத்திலிருந்து வெளியேற்றப்படும் எந்தவொரு நாடும் சர்வதேசப் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதில் பெரும் தடையை எதிர்கொள்ளும்.


பிரிக்ஸ் நாடுகள் தங்களின் தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய நிதிச் செய்திப் பரிமாற்ற அமைப்பாக வடிவமைக்கப்பட்டு வரும் பிரிக்ஸ் பே (BRICS Pay), ஒரு மாற்று வழியாகும். ஆனால், இந்த அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் ஒரு சிக்கலாக அமையக்கூடும். இதற்கிடையில், சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பெரிய பிரிக்ஸ் நாடுகள், முறையே எல்லை தாண்டிய வங்கிகளுக்கு இடையேயான செய்திப் பரிமாற்ற அமைப்பு (Cross-Border Interbank Payment System(CIPS)) மற்றும் நிதிச் செய்திகளைப் பரிமாற்றுவதற்கான அமைப்பு (System for Transfer of Financial Messages(SPFS)) ஆகிய தங்களின் சொந்த செய்திப் பரிமாற்றத் தளங்களை உருவாக்கி வருகின்றன. இந்தத் தளங்களுக்கு இடையேயான இயங்குதன்மை, SWIFT அமைப்புக்கு ஒரு பெரிய மாற்றை உருவாக்குவதற்கான ஒரு வழியாக அமையக்கூடும்.


கிட்டத்தட்ட அனைத்து நாடுகளாலும் உருவாக்கப்பட்டு வரும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள், எல்லை தாண்டிய வர்த்தகத் தீர்விற்கு ஒரு சாத்தியமான வழித்தடத்தையும் வழங்க முடியும். அட்லாண்டிக் கவுன்சிலின்படி, சீனா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள வங்கிகளை இணைக்கும் mBridge திட்டம் (Project mBridge) உட்பட, தற்போது 13 எல்லை தாண்டிய மொத்த இந்திய மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணய (India's Central Bank Digital Currency (CBDC)) திட்டங்கள் உள்ளன.


இந்த முயற்சிகள் சிறிய படிகளாகத் தோன்றலாம். இருப்பினும், ரூபாயை சர்வதேசமயமாக்கும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றுவது முக்கியம். உலகளாவிய மனநிலை டாலரிலிருந்து விலகிச் செல்லும் இந்த நேரத்தில் இது மிகவும் அவசியமாகிறது.      

Original article: Time to push for rupee internationalisation. -Lokeshwarri SK

Share:

ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் அமெரிக்கப் போருக்கு நடுவே மத்திய கிழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த 10 இராஜதந்திர இடங்கள் -குஷ்பூ குமாரி

 தற்போதைய நிகழ்வு என்ன? 


மார்ச் 2-ம் தேதி இரவு, டெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் முக்கியப் பாலம் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துடன், பேரழிவுகள் ஏற்படும் என அவர் எச்சரித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற டிரம்ப், "காலம் கடப்பதற்குள்" ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஈரானை வலியுறுத்தினார். மேலும், மின்சார உள்கட்டமைப்பு (power infrastructure) அடுத்த இலக்காக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.


இந்த மோதலில், இராஜதந்திரரீதியான நீர்வழிப் பாதைகளையும் முக்கிய உள்கட்டமைப்புகளையும் குறிவைத்துள்ளனர். இது புவி-பொருளாதாரப் போரை நோக்கிய ஒரு மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த முக்கியமான இடங்களைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :




1. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz)


ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறம்பட முற்றுகையிட்டிருப்பது, போரில் அதன் மிகவும் சக்திவாய்ந்த இராஜதந்திர கருவியாக உருவெடுத்துள்ளது. இது, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ளவும், சமாதானத்தை முன்னெடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளைத் தடுக்கவும் ஈரானுக்கு உதவுகிறது.

ஹோர்முஸ் நீரிணை, ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவை ஓமான் வளைகுடா மற்றும் அரபிக் கடலுடன் இணைக்கிறது. இந்த நீரிணை 48 முதல் 80 கிலோமீட்டர் அகலம் கொண்டது. அதன் குறுகிய பகுதியில், இது சுமார் 35-40 கிலோமீட்டர் அகலம் கொண்டது. இருப்பினும், கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு சில கிலோமீட்டர்கள் மட்டுமே பொதுவாக கிடைக்கின்றன.


2. பாப் எல்-மண்டேப் நீரிணை (Bab el-Mandeb Strait)


ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூவுதிகள் தற்போது போரில் நுழைந்துள்ளனர். பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் மீது அவர்கள் தொடுத்த முதல் தாக்குதல் இதுவாகும். செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டாப் மலைக்கு அருகில் அமைந்துள்ள ஏமனின் தலைநகரான சனாவை ஹூவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதன் காரணமாகவே, தற்போது கவலைகள் அதிகரித்து வருகின்றன.


அரபு மொழியில் 'கண்ணீர்க் கதவு' (Gate of Tears) என்று அழைக்கப்படும் பாப் அல்-மண்டாப் (Bab el-Mandeb), ஏமனுக்கும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதிக்கும் இடையில், செங்கடலின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது. இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடனும் (Gulf of Aden), மேலும் இந்தியப் பெருங்கடலுடனும் இணைக்கிறது. உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 10 முதல் 12 சதவீதம் இதன் மூலமே நடைபெறுகிறது.


3. செங்கடல் (Red Sea)


ஹூவுதிகள் கிளர்ச்சியாளர்கள் போரில் நுழைந்துள்ள நிலையில், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இக்குழுவினர் இதற்கு முன்னரும் இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர். செங்கடல் ஏறக்குறைய 2,000 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது மத்திய தரைக்கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இந்த இணைப்பு, குறுகிய சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது.


செங்கடலின் எல்லையில் எகிப்து, சூடான், ஜிபூட்டி, சவூதி அரேபியா, ஏமன் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. அகாபா வளைகுடா (Gulf of Aqaba) என்பது செங்கடலின் வடகிழக்குப் பகுதியாக அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக எகிப்து, இஸ்ரேல், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உள்ளன.


4. கார்க் தீவு (Kharg Island)


ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்க இராணுவப் படைகளை அனுப்பக்கூடும் என்று டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். பாரசீக வளைகுடாவின் “ஆதரவில்லாத முத்து” (orphan pearl) என்று குறிப்பிடப்படும் கார்க் தீவு, ஈரானின் கடற்கரையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது டெஹ்ரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் செயலாக்குவதோடு, பண நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.


5. நாடன்ஸ் செறிவூட்டல் ஆலை (Natanz enrichment plant)


ஈரானின் முக்கிய யுரேனியம் செறிவூட்டும் தளமாக நீண்டகாலமாக கருதப்பட்டு வரும் நாடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தின் (Natanz uranium enrichment facility) மீது, அமெரிக்காவும் இஸ்ரேலும் மார்ச் 21 அன்று தாக்குதல் நடத்தின. ஈரானின் நிலத்தடி நாடன்ஸ் எரிபொருள் செறிவூட்டும் ஆலையின் (Fuel Enrichment Plant (FEP)) நுழைவாயில்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டதை சர்வதேச அணுசக்தி முகமையும் (IAEA) உறுதி செய்துள்ளது.


ஈரானின் முக்கிய எரிபொருள் செறிவூட்டும் தளமாக நீண்டகாலமாக கருதப்படும், டெஹ்ரானுக்கு தென்கிழக்கே 220 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நாடன்ஸ், ஜூன் 2025-ல் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியபோது செயல்பாட்டில் இருந்த எரிபொருள் செறிவூட்டும் ஆலை (Fuel Enrichment Plant (FEP)) மற்றும் பைலட் எரிபொருள் செறிவூட்டும் ஆலை (Pilot Fuel Enrichment Plant (PFEP)) ஆகிய இரண்டு செறிவூட்டும் ஆலைகளின் இருப்பிடமாக உள்ளது.


6. ஈரானில் உள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு ஏற்பட்ட சேதம்


இஸ்பஹான் (Isfahan) : மார்ச் 31 அன்று ஈரானின் இஸ்பஹானில் உள்ள வெடிமருந்துக் கிடங்கு மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தின. முன்னதாக, இஸ்பஹானில் அமைந்துள்ள 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செஹெல் சொட்டூன் அரண்மனை (Chehel Sotoun Palace) மற்றும் நாட்டின் மிகப் பழமையான வெள்ளிக்கிழமை மசூதியான மஸ்ஜித்-இ ஜாமே (Masjed-e Jamé) ஆகிய இரண்டும் சேதமடைந்ததை யுனெஸ்கோ உறுதிப்படுத்தியது.


யுனெஸ்கோ இணையதளத்தின்படி, “மஸ்ஜித்-இ ஜாமே (‘வெள்ளிக்கிழமை மசூதி’) கி.பி.841-ல் தொடங்கி, பன்னிரண்டு நூற்றாண்டுகளாக மசூதிக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியின் ஒரு பிரமிக்க வைக்கும் எடுத்துக்காட்டாகக் காணப்படுகிறது. இது ஈரானில் அதன் வகையில் பாதுகாக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கட்டிடம் மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் உள்ள பிற்கால மசூதி வடிவமைப்புகளுக்கான ஒரு முன்மாதிரி ஆகும்.”


கோலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) : அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கோலெஸ்தான் அரண்மனைக்கு (காக்-இ கோலெஸ்தான்) பேரழிவு தரும் வகையிலான சேதம் ஏற்பட்டதை ஈரானின் கலாச்சார பாரம்பரிய அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இது 1789 முதல் 1925 வரை நீடித்த கஜார் காலத்தைச் சேர்ந்த ஒரு பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். இந்த அரண்மனை கஜாரி கலைகள் மற்றும் கட்டிடக்கலையின் ஒரு முக்கிய மையமாக விளங்கியது. இது அந்தப் பாணியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் திகழ்வதோடு, இன்றுவரை ஈரானிய கலைஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.


கோலெஸ்தான் அரண்மனை, ஆயுத மோதல்களின் போது கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான 1954-ம் ஆண்டு ஹேக் மாநாட்டின் (Hague Convention) சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது.


ஈரான்


ஈரான் அல்லது பெர்சியா, கி.மு. நான்காயிரமாண்டில் எலாமைட் பேரரசுகளுடன் தொடங்கி, உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் தாயகமாக இருந்து வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக அதன் வழியே பயணித்த பல பேரரசுகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் முத்திரையைத் தாங்கியுள்ள ஒரு வளமான வரலாற்றை அது கொண்டுள்ளது. அவர்களில் மகா சைரஸ், மகா டேரியஸ், மகா அலெக்சாண்டர் மற்றும் நாதிர் ஷா ஆகியோர் அந்நாட்டின் வரலாற்றையும் பரிணாம வளர்ச்சியையும் வடிவமைத்த பல பேரரசர்களில் சிலரே ஆவர்.


7. லிட்டானி நதி (Litani River)


ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அரணாக, தெற்கு லெபனானை லிட்டானி நதி வரையிலான பகுதி வரை தனது நாடு ஆக்கிரமிக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மார்ச் 24 அன்று தெரிவித்தார்.


தேசிய லிட்டானி நதி ஆணையத்தின்படி, “லிட்டானி நதி லெபனானின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய நதியாகும். இது 170 கி.மீ நீளமும், ஆண்டுக்கு சுமார் 750 மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளளவும் கொண்டது.” ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட நீலக் கோடு (Blue Line), லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள கோலான் குன்றுகளிலிருந்து பிரிக்கும் எல்லைக்கோடாக இருந்து வருகிறது. 2000-ம் ஆண்டில் தெற்கு லெபனானை விட்டு வெளியேறியபோது, ​​இஸ்ரேலியப் படைகள் நீலக் கோடு வரை பின்வாங்கின.


8. நகுவோரா மற்றும் டைர் (Naquora and Tyre)


லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் (United Nations Interim Force in Lebanon (UNIFIL)) தலைமையகமான நகுவோராவையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. இந்தப் படையில் இந்தியப் படைகளும் ஒரு அங்கமாக உள்ளன. இது ரோமானியக் கால இடிபாடுகளுக்குப் பெயர் பெற்ற, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான டைரும் (Tyre) தாக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் லெபனானில் அமைந்துள்ளன.


யுனெஸ்கோவின் கூற்றுப்படி, லெபனானின் தெற்குக் கடற்கரையில், பெய்ரூட்டிலிருந்து (Beirut) 83 கி.மீ தெற்கே அமைந்துள்ள டைர் (Tyre), கடல்களை ஆண்ட ஒரு மாபெரும் ஃபீனீசிய நகரமாக (Phoenician city) இருந்ததுடன், காடிஸ் மற்றும் கார்தேஜ் போன்ற செழிப்பான குடியேற்றங்களையும் நிறுவியது.


9. டியாகோ கார்சியா (Diego Garcia)


ஈரானிய பெருநிலப்பரப்பிலிருந்து 4,000 கி.மீ. தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவைத் தாக்கும் முயற்சியில் ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தியது. இது மத்திய இந்தியப் பெருங்கடலில், இந்தியாவிற்குத் தெற்கிலும் இலங்கைக்குத் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. இது சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானத் தளங்களில் ஒன்றாகும்.


10. எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்

தெற்கு பார்ஸ் (South Pars): ஈரானின் முக்கிய கடலோர இயற்கை எரிவாயு வளங்களாக தெற்கு பார்ஸை (South Pars) இஸ்ரேல் கண்டறிந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ளது மற்றும் ஈரானின் எரிவாயு உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கிற்கு பங்களிக்கிறது. இது ஈரான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு இடையே பகிரப்பட்டுள்ளது. தெற்கு பார்ஸ் உலகின் மிகப்பெரிய எரிவாயு வளங்களாகும். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, தெற்கு பார்ஸ் நீர்த்தேக்கம் முழுவதும் சுமார் 1,800 டிரில்லியன் கன அடி பயன்படுத்தக்கூடிய எரிவாயு உள்ளது. இது முழு உலகின் 13 ஆண்டுகால தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது.


ராஸ் லஃபான் (Ras Laffan) : நாட்டின் முதன்மை எரிவாயு மையமான ராஸ் லஃபான் (Ras Laffan) தொழில்துறை நகரைத் தாக்கிய ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை கத்தாரின் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. கத்தார் எரிசக்தியின் முதன்மை LNG உற்பத்தி நிலையங்கள், திரவமாக்கும் ஆலைகள் மற்றும் ஏற்றுமதி உள்கட்டமைப்பு ஆகியவை அனைத்தும் ராஸ் லஃபானில் குவிந்துள்ளதால், இது உலகளாவிய LNG விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய LNG மையமாக விளங்குகிறது.


1954-ம் ஆண்டின் ஹேக் மாநாடு (Hague Convention)


1. யுனெஸ்கோவின் கீழ் உருவாக்கப்பட்ட 1954-ம் ஆண்டின் ஹேக் உடன்படிக்கையானது, ஆயுத மோதல் ஏற்படும் பட்சத்தில் கலாச்சாரச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு வழிவகை செய்கிறது. கட்டிடக்கலை, கலை அல்லது வரலாற்றுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்கள், கலைப் படைப்புகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் மற்றும் கலை, வரலாற்று, தொல்பொருள் மதிப்புள்ள பிற பொருள்கள், அத்துடன் எந்த வகையான அறிவியல் சேகரிப்புகள் போன்ற கலாச்சாரச் சொத்துக்களையும், அவற்றின் தோற்றம் அல்லது உரிமையைப் பொருட்படுத்தாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.


2. 1954-ம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையும், 1999-ம் ஆண்டு இரண்டாம் நெறிமுறையும், இந்த உடன்படிக்கைகளின் கீழ் பாதுகாக்கப்படும் அல்லது அவற்றின் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள கலாச்சாரச் சொத்துக்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில் தனித்துவமான சின்னங்களை நிறுவியுள்ளன.

de

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, “நீலக் கேடயச் சின்னம் (Blue Shield emblem) என்றும் அழைக்கப்படும் இந்த மாநாட்டின் தனித்துவமான சின்னத்தை, பொதுப் பாதுகாப்பின் கீழ் உள்ள கலாச்சாரச் சொத்துக்களைக் குறிக்கவோ, அல்லது அதன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அல்லது 1954-ம் ஆண்டு ஹேக் மாநாட்டின் செயலாக்கத்தை மேற்பார்வையிடும் பணியாளர்களைக் குறிப்பிடவோ தனியாகப் பயன்படுத்தலாம்.”


3. சிறப்புப் பாதுகாப்பின் கீழுள்ள அசையா கலாச்சாரச் சொத்துக்களை அடையாளம் காண்பதற்கும், பண்பாட்டு வசதிகளைக் கொண்டு செல்வதற்கும், மற்றும் கலாச்சாரச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான தற்காலிகப் புகலிடங்களை அமைப்பதற்கும் வசதியளிக்கும் வகையில், நீலக் கேடயச் சின்னம் (Blue Shield emblem) மூன்று முறை காட்டப்படுகிறது.


யுனெஸ்கோவின் கூற்றுப்படி, வெளிப்புறத்தில் தனித்த சிவப்புப் பட்டையால் சூழப்பட்ட நீலக் கேடயச் சின்னம் என்பது, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பின் கீழ் உள்ள கலாச்சாரச் சொத்துக்களின் சர்வதேசப் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களுக்கான தனித்துவமான சின்னமாகும்.


Original article: 10 Strategic Middle East locations amid the Iran vs Israel-US War. -Khushboo Kumari

Share:

பாதுகாப்புத் துறைக்காக எத்தகைய கொள்கைச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• பாதுகாப்புத் துறைப் பொதுத்துறை நிறுவனங்களும் (Defence Public Sector Undertakings (DPSUs)) தனியார் துறையும் முறையே 54.84% மற்றும் 45.16% பங்களிப்பை வழங்கியுள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் இந்தியப் பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களைப் பாராட்டினார். மேலும், பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுக்கும்   இந்தியா முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தங்களது கருத்துகளை கூறினார்.


• கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்களின் ஏற்றுமதி 151% அதிகரித்துள்ளது. அதேவேளையில், தனியார் நிறுவனங்கள் 14% வளர்ச்சியைப் பதிவு செய்து வலுவான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாதுகாப்பு ஏற்றுமதியில் தனியார் துறை ரூ. 17,353 கோடி மதிப்பிலான பங்களிப்பை அளித்துள்ளது. அதே சமயம், பாதுகாப்புத் துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.21,071 கோடி மதிப்பிலான பங்களிப்பை வழங்கியுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute (SIPRI)) சமீபத்திய அறிக்கையின்படி, 2021-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடுகளுக்கிடையேயான முக்கிய ஆயுதப் பரிமாற்றங்களின் உலகளாவிய அளவு, 2016 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை விட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது. மேலும்,  இரண்டு  காலகட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதிகள் மூன்று மடங்கிற்கும் அதிகமாக (210 சதவீதம் அதிகரிப்பு) உயர்ந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


• 2016 முதல் 2020-ஆம் ஆண்டு  வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய ஆயுதங்களின் சர்வதேசப் பரிமாற்ற அளவு, 2016–20 காலகட்டத்தை விட 9.2 சதவீதம் அதிகமாக இருந்தது. 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய  அதிகரிப்பு இதுவாகும்.


• 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகித்த நாடுகளாக 66 நாடுகளை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) அடையாளம் கண்டுள்ளது. இந்தக்காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களை விநியோகித்த முதல் ஐந்து பெரிய நாடுகள், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகியவை ஆகும். இந்த ஐந்து நாடுகளும் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 70 சதவீதம் பங்களிக்கின்றன.


• 2021 முதல் 2025-ஆம் ஆண்டு  வரையிலான காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட தரப்புகளாக 162 நாடுகளையும், 4 அரசு சாரா ஆயுதக் குழுக்களையும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இந்தக்காலகட்டத்தில் முக்கிய ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட முதல் ஐந்து நாடுகள்: உக்ரைன், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகும். இவை உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் 35 சதவீதத்தைப் பெற்றுள்ளன. 1966-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம், மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகியவை குறித்த ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சர்வதேச நிறுவனமாகும். இது திறந்த மூலங்களை அடிப்படையாகக் கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தரவுகள், பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.


Original article: What policy reforms are taken for defence sector? -Priya Kumari Shukla

Share:

ஜெவார் விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் எத்தனால் ஊக்குவிப்பு. ஏன் இந்த உயிரி எரிபொருள் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி:


ஜெவாரில் நடைபெற்ற நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (Noida International Airport (NIA)) முதல் கட்டத் திறப்பு விழாவில் உரையாற்றியபோது, ​​உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க இந்தியாவின் எத்தனால் ஊக்குவிப்பு முயற்சி உதவுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.


எத்தனால் உற்பத்தியும், அதனை பெட்ரோலுடன் கலக்கும் முறையும் அதிகரிக்காமல் இருந்திருந்தால், நமது நாட்டில் ஆண்டுதோறும் 4.5 கோடி பேரல்கள், ஏறக்குறைய 700 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் என்பது பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு திரவமாகும். 95% தூய்மையுடன் இருக்கும்போது, ​​இது 'வடித்த வடிகட்டப்பட்ட மதுபானம்' (rectified spirit) என்று அழைக்கப்படுகிறது மற்றும் மதுபானங்களில் போதை தரும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 99%-க்கு அதிக தூய்மையுடன் இருக்கும் எத்தனால், பெட்ரோலுடன் கலக்க (blending) பயன்படுத்தப்படுகிறது.


2. எத்தனால் என்பது ஒரு பொதுவான உயிரி எரிபொருள் (biofuel) வகையாகும். இது தாவரங்கள் அல்லது வேளாண்மை, விலங்கு, வீடு மற்றும் தொழில்துறை உயிரி கழிவுகள் போன்ற உயிரிப் பொருள்களிலிருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். உயிரி எரிபொருள்கள் வழக்கமான புதைபடிவ எரிபொருள்களைவிட கணிசமாகத் தூய்மையானவை. ஆனால், அவற்றின் முழு   சுழற்சி (lifecycle) மூலப்பொருள் மற்றும் தயாரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும்.


இந்த மூலங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படும்போது, ​​அது பயோஎத்தனால் (எத்தனாலின் ஒரு துணை வகை) என்று அழைக்கப்படுகிறது. கரும்பு, பீட்ரூட் சாறு, மக்காச்சோளம், அரிசி அல்லது பிற தானியங்களிலிருந்து பயோஎத்தனாலை எளிதாக உருவாக்கமுடியும். இந்த எரிபொருட்கள் முதல் தலைமுறை உயிரி எரிபொருட்கள் (first-generation biofuels) என்று அழைக்கப்படுகின்றன.


வெவ்வேறு தலைமுறை உயிரி எரிபொருட்கள்


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை (National Policy on Biofuels) படி, உயிரிசை எரிபொருட்கள் என பல தலைமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:


(i) முதல் தலைமுறை (1G)- கரும்புப்பாகுவிலிருந்தும் பயோ-எத்தனாலையும், உண்ணமுடியாத எண்ணெய் வித்துக்களிலிருந்து பயோ-டீசல் (bio-diesel) தயாரிக்கப்படுகிறது.


(ii) நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து (municipal solid waste) இரண்டாம் தலைமுறை (2G) எத்தனாலை உற்பத்தி செய்யமுடியும்.

(iii) மூன்றாம் தலைமுறை (3G): பயோ-அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) போன்ற எரிபொருட்கள் இதில் அடங்கும்.


கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி


1. சர்க்கரை உற்பத்தியின் ஒரு துணைப் பொருளாகக் கிடைக்கும் கரும்புப்பாகுவிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை தயாரிப்பதற்காக, ஆலைகள் கரும்பை நசுக்குகின்றன. இதில் பொதுவாக 14% மொத்த நொதிக்கக்கூடிய சர்க்கரை (total fermentable sugar (TFS)) உள்ளடக்கம் உள்ளது. இந்த மொத்த நொதிக்கக்கூடிய சர்க்கரை கூறானது, சுக்ரோஸுடன் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் ஆகியவை அடங்கும். இந்த TFS பகுதியின் பெரும்பகுதி சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரையாக மாறுகிறது; மீதமுள்ள பகுதியே கரும்பு  சர்க்கரைப்பாகு (molasses) என்று அழைக்கப்படுகிறது.


2. இந்த மோலாஸ் மூன்று நிலைகளில் செல்கிறது — A, B, மற்றும் C, இதில் கடைசி நிலையான C இல் மோலாஸ் மிகவும் படிகமாக்கப்படாத (un-crystallised) மற்றும் மீட்டெடுக்க முடியாத (non-recoverable) நிலையில் இருக்கும். ‘C’ மோலாஸ் சுமார் கரும்பின் 4.5% அளவுக்கு இருக்கும், மற்றும் அதில் மீதமுள்ள TFS 40% ஆகும்.


3.  மேற்கூறிய இரண்டு தீவிர நிலைகளுக்கும் இடைப்பட்ட வகையில், சில இடைநிலைத் தேர்வுகளும் உள்ளன. இவற்றில் கரும்புச் சாற்றை, இறுதி நிலையான ‘C’ வகை வெல்லப்பாகு (molasses) நிலை வரை முழுமையாகப் படிகமாக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, சர்க்கரை வெல்லப்பாகு  உருவாக்கத்தின் ஆரம்ப நிலையான ‘A’ மற்றும் ‘B’ நிலைகளுக்குப் பிறகு வெல்லப்பாகுவை மாற்றி பயன்படுத்தலாம். ஆலைகள் கரும்புச் சாறு முழுவதையும் நொதிக்கச் செய்து எத்தனாலாக மாற்றுவதற்கு மாறாக, சிறிதளவு சர்க்கரையை உற்பத்தி செய்யும்.


‘‘B’ வகை கனக் கரும்புச் சாற்றைப் (கரும்பின் எடையில் 7.25% மற்றும் 50% TFS கொண்டது) பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டால், ஒவ்வொரு 1 டன் கரும்பிலிருந்து 21.75 லிட்டர் எத்தனால் மற்றும் 95 கிலோ சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.


4. 2017-18-ஆம் ஆண்டு வரை, ஆலைகள் கரும்பு பதப்படுத்துதலின் இறுதி துணை விளைபொருளான, சுக்ரோஸைக் (sucrose) கொண்ட 'C-heavy molasses’ எனப்படும் திரவத்திலிருந்து மட்டுமே எத்தனாலை உற்பத்தி செய்தன. இந்த சுக்ரோஸை பொருளாதாரரீதியாக மீட்டெடுத்து சர்க்கரையாகப் படிகமாக்க முடியாது.


5. 2018-19 விநியோக ஆண்டிலிருந்து, ஆலைகள் எத்தனாலை, ‘B-heavy’ நிலையிலுள்ள கரும்புக் கழிவிலிருந்து (இதில் நொதித்தலுக்கு ஏற்ற அதிக அளவு சுக்ரோஸ் உள்ளடக்கம் இருக்கும்), அத்துடன் நேரடியாக முழு கரும்புச் சாறு அல்லது பாகிலிருந்தும் உற்பத்தி செய்யத் தொடங்கின.


6. இதன் விளைவாக: 2013-14 மற்றும் 2018-19-க்கு இடையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (oil marketing companies (OMC)) வழங்கப்படும் எத்தனாலின் மொத்த அளவு  38 கோடி லிட்டரிலிருந்து 189 கோடி லிட்டராக அதிகரித்தது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அகில இந்திய சராசரி அளவும் 1.6%-லிருந்து 4.9%- ஆக அதிகரித்தது.


மற்ற தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி


7. 2018–19 ஆம் ஆண்டிலிருந்து, அரிசி, மக்காச்சோளம் மற்றும் சேதமடைந்த உணவுத்தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்காக அரசு தனித்தனி ஆலை  விலைகளை (ex-distillery prices) நிர்ணயித்துள்ளது.


8. கரும்புப்பாகு அல்லது கரும்புச் சாற்றில், சர்க்கரையானது சுக்ரோஸ் வடிவில் உள்ளது. மாவுச்சத்து காணப்படுகிறது; இது ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகும். தானியங்களிலிருந்து பெறப்படும் ஸ்டார்ச் முதலில் பிரித்தெடுக்கப்பட்டு, எளிய சர்க்கரைகளாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர், நொதித்தல் (fermentation), ஆவியாக்கம் (distillation) மற்றும் நீரிழப்பு (dehydration) செயல்முறைகள் மூலம் 99.99% தூய்மையுள்ள எத்தனால் தயாரிக்கப்படுகிறது.


9. ஈரான் - இஸ்ரேல்-அமெரிக்கப் போருக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக எத்தனால் கலப்பு கருதப்படுகிறது.


நிபுணர்கள், கரும்பு பயிர் இடுவதனால் அதிக நீர் பயன்பாடு, மானியங்களின் (subsidies) நிதிச்சுமை மற்றும் உணவுப் பயிர்களை எரிபொருளாக மாற்றுவதில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றனர். ஆற்றல் ஆய்வாளர்கள் மற்றும் துறைசார் அறிக்கை, எத்தனால்  முக்கியமானது என்றாலும், அது ஒரு தனித்த தீர்வாகக் கருதப்படாமல், பரந்த அளவிலான ஆற்றல் மாற்ற உத்தியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.


அரசாங்க முயற்சிகள்


2018-ஆம் ஆண்டு உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை (National Policy on Biofuel)


எத்தனால் கலந்த பெட்ரோல் (Ethanol Blended Petrol (EBP)) திட்டத்தின்கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலப்பு என்ற ஒரு வழிகாட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அமைச்சர், டிசம்பர் 202ஆம் ஆண்டு மாநிலங்களவையில், பொதுத் துறை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (Public Sector Oil Marketing Companies – (OMCs)), நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, ஜூன் 2022-ல் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கை (Ethanol Blending Target) அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.


பிரதமர் ஜீ-வான் (இயற்கை எரிபொருள் - சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பயிர்க் கழிவு மேலாண்மை) திட்டம்


இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, லிக்னோசெல்லுலோசிக் உயிரிப்பொருள் (lignocellulosic biomass) மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நாட்டில் மேம்பட்ட உயிரி எரிபொருள் திட்டங்களை உருவாக்குவதற்கும், எத்தனாலை  பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதற்கும், எத்தனால் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கும், அதனுடன் சேர்த்து அதிக அளவு எத்தனால் கலவைகளைக் கையாள்வதற்கான பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது.


 உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (Global Biofuel Alliance)


சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கும், நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்துவதற்கும், அதனுடன் உலகளாவிய உயிரி எரிபொருள் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் மற்றும் தேசிய உயிரி எரிபொருள் திட்டங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு இந்தத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது.


செய்திகளில் இடம்பெற்றுள்ள பிற நிலையான எரிபொருட்கள்


1. நிலையான விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel (SAF)): கடந்த ஆண்டு, ஹரியானாவில் உள்ள தனது பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் நீடித்த விமான எரிபொருள்  உற்பத்திக்காக ISCC CORSIA சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation (IOC)) ஆனது.


நிலையான விமான எரிபொருள் (SAF) என்பது நிலைத்தன்மை வாய்ந்த மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது, கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் வழக்கமான விமான டர்பைன் எரிபொருள் (aviation turbine fuel (ATF)) அல்லது ஜெட் எரிபொருளைப் போன்ற வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நேரடியாக பயன்படுத்தக்கூடிய (drop-in) எரிபொருள் ஆகும். விமானத்தின் தற்போதைய இயந்திரங்களில் எந்த மாற்றமும் செய்யமல், இதை விமான டர்பைன் எரிபொருள் உடன் கலக்க முடியும்.


2. மேம்பட்ட நிலையான எரிபொருள் (Advanced Sustainable Fuel (ASF)): 2026-ஆம் ஆண்டின் ஃபார்முலா 1 போட்டி விதிகளில் மாற்றம் செய்து, F1 கார்கள் உள் எரிவாயு இயந்திரங்களில் (internal combustion engine) மேம்பட்ட நிலையான எரிபொருள் பயன்படுத்த வேண்டும். இந்த எரிபொருள், உணவுப் பயிர்களுடன் போட்டித் தன்மை இல்லாத  நிலையான மூலப்பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.


இந்த மூலப்பொருட்களில் நகராட்சிக் கழிவுகள் மற்றும் உணவு அல்லாத உயிரிப் பொருட்கள் இடம் பெற்றிருக்கும். காற்றில் இருந்தும் தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்தும் கார்பன் பிடிப்பு (carbon capture) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். இந்த மேம்பட்ட நிலையான எரிபொருளானது, இயந்திரத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற்கொள்ளாமல், புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

Original article:  PM Modi’s Ethanol push at Jewar airport. Why this biofuel is important -Khushboo Kumari

Share:

படிவம் 6 என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் படிவமான படிவம் 6-ஐ சமர்ப்பிப்பதன் மூலம், மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்ற பாஜக முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.


• கடந்த வாரம் நடைபெற்ற தொடர்ச்சியான செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் அறிக்கைகளில், கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலின் அலுவலகத்தில் பாஜக ஆயிரக்கணக்கான படிவம் 6-ஐ  சமர்ப்பித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


• தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர்களைச் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் தினமும் 50 படிவங்கள் வரை சமர்ப்பிக்கலாம். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரும், தகுதியற்றவர் என சந்தேகிக்கும் ஒருவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம்.


உங்களுக்குத் தெரியுமா?


படிவம் 6 என்பது புதிய வாக்காளராக பதிவு செய்ய பயன்படும் தேர்தல் ஆணையத்தின் விண்ணப்பப் படிவமாகும். இது 1960-ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules) படி பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பப் படிவம், சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலருக்கோ அல்லது சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கோ, நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பதிவு அலுவலரிடம் (Electoral Registration Officers (EROs)) சமர்ப்பிக்கப்படுகிறது.


• சட்டப்படி, மாநில அரசுடன் கலந்தாலோசித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) இந்தப் பணிக்காக நியமிக்கப்பட்ட உள்ளூர் அதிகாரியான தேர்தல் பதிவு அலுவலரே (ERO), வாக்காளர் பட்டியலைப் பராமரித்தல், புதிய பெயர்களைச் சேர்த்தல், பெயர் நீக்கங்களைச் மேற்கொள்ளுதல் மற்றும் ஆட்சேபனைகள் எழும்பட்சத்தில் விசாரணைகளை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


• விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரர் தமது பிறந்த தேதியை நிரூபிக்கும் ஆவணங்களின் சுயசான்றளிக்கப்பட்ட (self-attested) நகலை வழங்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, நிரந்தரக் கணக்கு எண் (Permanent Account Number (PAN)), ஓட்டுநர் உரிமம், 10-ஆம் அல்லது 12-ஆம் வகுப்பு சான்றிதழ் அல்லது இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport) ஆகியவை ஆகும்.


• இந்திய அரசியலமைப்பின் 326-வது  பிரிவு, 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் மட்டுமே வாக்களிக்கப் பதிவு செய்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டிருந்தாலும், 'படிவம் 6' குடியுரிமைக்கான சான்றைக்  கருதபடுவதில்லை. இருப்பினும், விண்ணப்பதாரர் ஒரு குடிமகன் என்று அவரே சுய அறிவிப்பு அளிக்கும் ஒரு பகுதி அதில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு அளிக்கப்பட்ட தகவல் தவறு என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அபராதம் அல்லது ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


Original article: What is Form 6? -Priya Kumari Shukla

Share:

ஐஎன்எஸ் அரிதமன் : இந்தியாவின் புதிய அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் குறித்து…

 7,000 டன் எடையும், அரிகந்த் (Arihant) வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்றாவதும் காப்பலுமான இந்த நீர்மூழ்கிக் கப்பல், இதற்கு முன் வந்த ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (Arighaat) ஆகியவற்றைவிடப் பெரியது மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாகும். இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனில் (Nuclear Triad) தரை, நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறனில் இது மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியா தனது மூன்றாவது அணுசக்தியால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதமன் மற்றும் மேம்படுத்தப்பட்ட மறைந்து தாக்கும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரி (Taragiri) ஆகியவற்றை கடற்படையில் இணைத்துள்ளது. ஐஎன்எஸ் அரிதமன் அதிகாரப்பூர்வமாகச் சேவையில் இணைக்கப்பட்டதைப் பற்றி இதுவரை முறையான அறிவிப்பு ஏதும் இல்லை என்கின்றனர். இருப்பினும், இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'X' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்: "வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, வலிமை, 'அரிதமன்'!" என்று அவர் பதிவிட்டுள்ளதன் மூலம் இந்த அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படைச் சேவையில் இணைக்கப்பட்டதை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.


ஐஎன்எஸ் அரிதமான்  முன்னறிவுப்பின்றி அமைதியான முறையில் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் அணுஆயுதத் தடுப்புத் திறனை (sea-based nuclear deterrence) பெருமளவில் வலுப்படுத்தும் என்கின்றனர். இந்த நடவடிக்கை, இதற்கு முந்தைய அரிஹந்த்-ரக(Arihant-class) நீர்மூழ்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த் (2016-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது) மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (2024-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது) ஆகியவற்றின் அதே பாணியைப் பின்பற்றுகிறது. அதாவது, எவ்வித பெரிய ஆரவாரமுமின்றி ரகசியமாகவும் முறையாகவும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வமாக இணைத்தல்


அரிதமன் (Aridhaman) கப்பற்படையில் இணைவதன் மூலம், இந்தியா முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை (Ballistic Missile Submarines) கடலில் இயக்கும் திறனைப் பெறும் என்கின்றனர். சுமார் 7,000 டன் எடையுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், இதற்கு முந்தைய கப்பல்களைவிடப் பெரியது மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏவுகணைகளைச் செங்குத்தாக ஏவும் எட்டு குழாய்கள் (Vertical Launch Tubes) உள்ளன. இது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகியவற்றைவிட அதிக எண்ணிக்கையிலான நீண்ட தூர அணுசக்தி ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.


இந்த நீர்மூழ்கிக் கப்பல் 750 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய K-15 குறுகிய தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் (Submarine-Launched Ballistic Missiles (SLBMs)), மற்றும் 3,500-கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட K-4 நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்கின்றனர். இந்தியாவின் மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்தைவிட (Arihant), அரிதமான் (Aridhaman) இரண்டு மடங்கு அதிகமான ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் உடையாதாகத் தெரிவிக்கின்றனர். அதாவது, இது எட்டு K-4 ஏவுகணைகளையோ அல்லது 24 K-15 ஏவுகணைகளையோ சுமந்து செல்லக்கூடிய வலிமை பெற்றது என்கின்றனர். 


மற்ற இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் போலவே, அரிதமான் (Aridhaman) இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனின் (Nuclear Triad) மிக முக்கியமான அங்கமாகும். அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறன் என்பது தரை, கடல் மற்றும் வான் பகுதி ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறனைக் குறிக்கிறது. நிலத்திலிருந்து அக்னி (Agni) வரிசை ஏவுகணைகள் மூலம் அணு ஆயுதங்களை ஏவ முடியும் என்றும் அதே வேளையில், வான்வழியாக ரஃபேல் (Rafales), சுகோய் (Su-30MKIs) மற்றும் மிராஜ் 2000 (Mirage 2000s) போன்ற போர் விமானங்கள் அணுக்கரு முனைகளைத் தாங்கிச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.


இந்தியாவின் அணுசக்திக் கொள்கை "முதலில் பயன்படுத்தக் கூடாது" (No First Use) என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. அதாவது, அணு ஆயுதங்களை எதிரிகளை அச்சுறுத்தித் தற்காத்துக் கொள்ளவும், இந்தியா தாக்கப்பட்டால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBN) இந்தியாவின் "இரண்டாவது தாக்குதல் திறனை" உறுதி செய்கின்றன. ஒருவேளை எதிரி நாடு இந்தியாவின் நிலப்பகுதி மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினாலும், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க முடியும். இது எதிரி நாடுகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயங்கும் ஒரு வலுவான பாதுகாப்புச் சூழலை உருவாக்குகிறது.


அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, அணுசக்தி மும்முனைப் பாதுகாப்புத் திறன் (Nuclear Triad) வசதியைக் கொண்டுள்ள உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அமெரிக்கா தற்போது 14 ஓஹியோ-ரக ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களையும் (Ohio-class SSBNs) மற்றும் 53 வேகமாகத் தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் (Fast-attack submarines) இயக்கி வருகிறது. அதே நேரத்தில், சீனாவிடம் 12 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.  இதில் ஆறு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும்  (Nuclear-powered attack submarines (SSNs)) அடங்கும் என்கின்றனர். 


அரிதமன் (Aridhaman) நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைக்கப்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கின்றனர். டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறுகையில், இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இறுதிக்கட்டச் சோதனையில் இருப்பதாகவும், அது விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.




அரிஹந்த்-ரக நீர்மூழ்கிக் கப்பல்கள்


இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. மேலும், இந்த மாபெரும் முயற்சிக்கு ரஷ்யா முக்கிய ஆதரவையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஐஎன்எஸ் அரிஹந்த் (Arihant) 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2016-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையின் முதல் அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாக (SSBN) படையில் இணைக்கப்பட்டது. இது 2018-ஆம் ஆண்டில் தனது முதல் தற்காப்புப் ரோந்துப் பணியை மேற்கொண்டு, இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனை (Nuclear Triad) முழுமையடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் 2022-ஆம் ஆண்டில், ஐஎன்எஸ் அரிஹந்த் வங்காள விரிகுடாவில் மிகத் துல்லியமாக ஒரு கடல்வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையை (SLBM) வெற்றிகரமாகச் சோதித்ததாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.


பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஐஎன்எஸ் அரிகாட் (Arighaat) கப்பலானது ஐஎன்எஸ்  அரிஹந்த் (Arihant) கப்பலைவிட தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்டதாகும். இதன் கட்டுமானத்தில் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகள், விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சிறப்புப் பொருட்கள், சிக்கலான பொறியியல் நுணுக்கங்கள் மற்றும் திறமையான கைவினைத்திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.


அரிகாட் (Arighaat) நீர்மூழ்கிக் கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட K-15 ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது அரிஹந்த் (Arihant) நீர்மூழ்கிக் கப்பலைப் போலவே, 83 மெகாவாட் (Mega Watt) திறன் கொண்ட அழுத்தப்பட்ட மென்னீர் அணுக்கரு உலை (pressurised light-water nuclear reactor) மூலம் இயங்குகிறது. இதன் காரணமாக, சாதாரண டீசல்-மின்சார (Diesel-electric) நீர்மூழ்கிக் கப்பல்களைவிட, இது நீண்டகாலத்திற்கு நீருக்கடியில் மறைந்திருந்து யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் செயல்படும் ஆற்றல் கொண்டதாகும்.


அடுத்தது என்ன?


இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் (SSBN), 'S4*' என்ற குறியீட்டுப் பெயரில் அரிஹந்த் (Arihant) வகுப்பின் ஒரு பகுதியாக தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. அரிதமன் (Aridhaman) கப்பலைப் போலவே, இதுவும் பெரிய அளவைக் கொண்டிருப்பதால், இதில் அதிக எண்ணிக்கையிலான K-4 ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த S4* கப்பல் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டபிறகு, இந்தியாவின் 'இரண்டாவது தாக்குதல் திறன்' உறுதி செய்யப்படும். ஏனெனில், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் பராமரிப்பில் இருக்கும்போதோ அல்லது வேறு இடங்களில் பணியில் இருக்கும்போதோ, குறைந்தது ஒரு நீர்மூழ்கிக் கப்பலாவது எப்போதும் கண்காணிப்புப் பணியில் இருப்பதை இந்த ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உறுதி செய்யும் என்கின்றனர். 


இந்தியா தற்போது அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை (Nuclear-powered Attack Submarine (SSN)) உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியக் கடற்படை தனது சொந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாராகும் வரை உள்ள இடைவெளியைச் சரிசெய்ய, உள்நாட்டிலேயே இரண்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கவும், ரஷ்யாவிடமிருந்து ஒன்றை குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து பெறப்படும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் 2027-28-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article: INS Aridhaman: Here’s what to know about India’s new nuclear-powered ballistic submarine

Share: