ஐஎன்எஸ் அரிதமன் : இந்தியாவின் புதிய அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் குறித்து…

 7,000 டன் எடையும், அரிகந்த் (Arihant) வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்றாவதும் காப்பலுமான இந்த நீர்மூழ்கிக் கப்பல், இதற்கு முன் வந்த ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (Arighaat) ஆகியவற்றைவிடப் பெரியது மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாகும். இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனில் (Nuclear Triad) தரை, நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறனில் இது மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த வெள்ளிக்கிழமை, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விழாவில் இந்தியா தனது மூன்றாவது அணுசக்தியால் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதமன் மற்றும் மேம்படுத்தப்பட்ட மறைந்து தாக்கும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தாராகிரி (Taragiri) ஆகியவற்றை கடற்படையில் இணைத்துள்ளது. ஐஎன்எஸ் அரிதமன் அதிகாரப்பூர்வமாகச் சேவையில் இணைக்கப்பட்டதைப் பற்றி இதுவரை முறையான அறிவிப்பு ஏதும் இல்லை என்கின்றனர். இருப்பினும், இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'X' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்: "வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, வலிமை, 'அரிதமன்'!" என்று அவர் பதிவிட்டுள்ளதன் மூலம் இந்த அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படைச் சேவையில் இணைக்கப்பட்டதை சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.


ஐஎன்எஸ் அரிதமான்  முன்னறிவுப்பின்றி அமைதியான முறையில் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல்சார் அணுஆயுதத் தடுப்புத் திறனை (sea-based nuclear deterrence) பெருமளவில் வலுப்படுத்தும் என்கின்றனர். இந்த நடவடிக்கை, இதற்கு முந்தைய அரிஹந்த்-ரக(Arihant-class) நீர்மூழ்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த் (2016-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது) மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் (2024-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது) ஆகியவற்றின் அதே பாணியைப் பின்பற்றுகிறது. அதாவது, எவ்வித பெரிய ஆரவாரமுமின்றி ரகசியமாகவும் முறையாகவும் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


அதிகாரப்பூர்வமாக இணைத்தல்


அரிதமன் (Aridhaman) கப்பற்படையில் இணைவதன் மூலம், இந்தியா முதல் முறையாக ஒரே நேரத்தில் மூன்று அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை (Ballistic Missile Submarines) கடலில் இயக்கும் திறனைப் பெறும் என்கின்றனர். சுமார் 7,000 டன் எடையுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், இதற்கு முந்தைய கப்பல்களைவிடப் பெரியது மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏவுகணைகளைச் செங்குத்தாக ஏவும் எட்டு குழாய்கள் (Vertical Launch Tubes) உள்ளன. இது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகியவற்றைவிட அதிக எண்ணிக்கையிலான நீண்ட தூர அணுசக்தி ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.


இந்த நீர்மூழ்கிக் கப்பல் 750 கி.மீ தூரம் வரை சென்று தாக்கக்கூடிய K-15 குறுகிய தூர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் (Submarine-Launched Ballistic Missiles (SLBMs)), மற்றும் 3,500-கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட K-4 நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது என்கின்றனர். இந்தியாவின் மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்தைவிட (Arihant), அரிதமான் (Aridhaman) இரண்டு மடங்கு அதிகமான ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் உடையாதாகத் தெரிவிக்கின்றனர். அதாவது, இது எட்டு K-4 ஏவுகணைகளையோ அல்லது 24 K-15 ஏவுகணைகளையோ சுமந்து செல்லக்கூடிய வலிமை பெற்றது என்கின்றனர். 


மற்ற இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் போலவே, அரிதமான் (Aridhaman) இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனின் (Nuclear Triad) மிக முக்கியமான அங்கமாகும். அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறன் என்பது தரை, கடல் மற்றும் வான் பகுதி ஆகிய மூன்று வழிகளிலும் அணு ஆயுதங்களை ஏவும் திறனைக் குறிக்கிறது. நிலத்திலிருந்து அக்னி (Agni) வரிசை ஏவுகணைகள் மூலம் அணு ஆயுதங்களை ஏவ முடியும் என்றும் அதே வேளையில், வான்வழியாக ரஃபேல் (Rafales), சுகோய் (Su-30MKIs) மற்றும் மிராஜ் 2000 (Mirage 2000s) போன்ற போர் விமானங்கள் அணுக்கரு முனைகளைத் தாங்கிச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.


இந்தியாவின் அணுசக்திக் கொள்கை "முதலில் பயன்படுத்தக் கூடாது" (No First Use) என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகிறது. அதாவது, அணு ஆயுதங்களை எதிரிகளை அச்சுறுத்தித் தற்காத்துக் கொள்ளவும், இந்தியா தாக்கப்பட்டால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSBN) இந்தியாவின் "இரண்டாவது தாக்குதல் திறனை" உறுதி செய்கின்றன. ஒருவேளை எதிரி நாடு இந்தியாவின் நிலப்பகுதி மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினாலும், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க முடியும். இது எதிரி நாடுகள் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயங்கும் ஒரு வலுவான பாதுகாப்புச் சூழலை உருவாக்குகிறது.


அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, அணுசக்தி மும்முனைப் பாதுகாப்புத் திறன் (Nuclear Triad) வசதியைக் கொண்டுள்ள உலகின் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அமெரிக்கா தற்போது 14 ஓஹியோ-ரக ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களையும் (Ohio-class SSBNs) மற்றும் 53 வேகமாகத் தாக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் (Fast-attack submarines) இயக்கி வருகிறது. அதே நேரத்தில், சீனாவிடம் 12 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.  இதில் ஆறு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களும்  (Nuclear-powered attack submarines (SSNs)) அடங்கும் என்கின்றனர். 


அரிதமன் (Aridhaman) நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைக்கப்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கின்றனர். டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறுகையில், இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இறுதிக்கட்டச் சோதனையில் இருப்பதாகவும், அது விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.




அரிஹந்த்-ரக நீர்மூழ்கிக் கப்பல்கள்


இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. மேலும், இந்த மாபெரும் முயற்சிக்கு ரஷ்யா முக்கிய ஆதரவையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஐஎன்எஸ் அரிஹந்த் (Arihant) 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2016-ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையின் முதல் அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாக (SSBN) படையில் இணைக்கப்பட்டது. இது 2018-ஆம் ஆண்டில் தனது முதல் தற்காப்புப் ரோந்துப் பணியை மேற்கொண்டு, இந்தியாவின் அணுசக்தி மும்முனைத் தற்காப்புத் திறனை (Nuclear Triad) முழுமையடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் 2022-ஆம் ஆண்டில், ஐஎன்எஸ் அரிஹந்த் வங்காள விரிகுடாவில் மிகத் துல்லியமாக ஒரு கடல்வழி ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையை (SLBM) வெற்றிகரமாகச் சோதித்ததாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.


பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஐஎன்எஸ் அரிகாட் (Arighaat) கப்பலானது ஐஎன்எஸ்  அரிஹந்த் (Arihant) கப்பலைவிட தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்டதாகும். இதன் கட்டுமானத்தில் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகள், விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சிறப்புப் பொருட்கள், சிக்கலான பொறியியல் நுணுக்கங்கள் மற்றும் திறமையான கைவினைத்திறன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.


அரிகாட் (Arighaat) நீர்மூழ்கிக் கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட K-15 ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது அரிஹந்த் (Arihant) நீர்மூழ்கிக் கப்பலைப் போலவே, 83 மெகாவாட் (Mega Watt) திறன் கொண்ட அழுத்தப்பட்ட மென்னீர் அணுக்கரு உலை (pressurised light-water nuclear reactor) மூலம் இயங்குகிறது. இதன் காரணமாக, சாதாரண டீசல்-மின்சார (Diesel-electric) நீர்மூழ்கிக் கப்பல்களைவிட, இது நீண்டகாலத்திற்கு நீருக்கடியில் மறைந்திருந்து யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் செயல்படும் ஆற்றல் கொண்டதாகும்.


அடுத்தது என்ன?


இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் (SSBN), 'S4*' என்ற குறியீட்டுப் பெயரில் அரிஹந்த் (Arihant) வகுப்பின் ஒரு பகுதியாக தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. அரிதமன் (Aridhaman) கப்பலைப் போலவே, இதுவும் பெரிய அளவைக் கொண்டிருப்பதால், இதில் அதிக எண்ணிக்கையிலான K-4 ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த S4* கப்பல் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டபிறகு, இந்தியாவின் 'இரண்டாவது தாக்குதல் திறன்' உறுதி செய்யப்படும். ஏனெனில், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் பராமரிப்பில் இருக்கும்போதோ அல்லது வேறு இடங்களில் பணியில் இருக்கும்போதோ, குறைந்தது ஒரு நீர்மூழ்கிக் கப்பலாவது எப்போதும் கண்காணிப்புப் பணியில் இருப்பதை இந்த ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உறுதி செய்யும் என்கின்றனர். 


இந்தியா தற்போது அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை (Nuclear-powered Attack Submarine (SSN)) உருவாக்கும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்தியக் கடற்படை தனது சொந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாராகும் வரை உள்ள இடைவெளியைச் சரிசெய்ய, உள்நாட்டிலேயே இரண்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைக்கவும், ரஷ்யாவிடமிருந்து ஒன்றை குத்தகைக்கு எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து பெறப்படும் அந்த நீர்மூழ்கிக் கப்பல் 2027-28-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article: INS Aridhaman: Here’s what to know about India’s new nuclear-powered ballistic submarine

Share: