தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் பணிகள் என்னென்ன? - பிரியா குமாரி சுக்லா

 ஒன்றிய அரசு தனது பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை அறிவித்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவானது (National Council of Educational Research and Training (NCERT)) இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு "நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக" (Deemed to be University) அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய பள்ளி கல்வி அமைப்பான தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு முக்கியக் கட்டமைப்பு மாற்றமாக பார்க்கப்படுவதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


• புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டதன் மூலம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பள்ளிப் பாடத்திட்டங்களை வடிவமைப்பதோடு மட்டுமல்லாமல், தனது செயல்பாடுகளைப் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில், முனைவர் பட்டம் மற்றும் பல்வேறு புதுமையான கல்விப் பாடத்திட்டங்களை நேரடியாக வழங்கவும், கல்விசார் மேம்பாடுகளை முன்னெடுக்கவும் இந்த அமைப்புக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது.


• கடந்த திங்கட்கிழமை, மார்ச் மாதம் 30-ஆம் தேதியன்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு மற்றும் அதன்கீழ் இயங்கும் ஆறு உறுப்பு நிறுவனங்களுக்கு, 1956-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) சட்டத்தின் 3-வது பிரிவின்கீழ் "தனித்துவமான வகைப்பாட்டில்" “நிகர்நிலைப் பல்கலைக்கழக” அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஆலோசனையின் அடிப்படையில், கல்வி அமைச்சகம் இந்த அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவுக்கு வழங்கியுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

• இந்தக் கல்வி நிறுவனங்கள், அஜ்மீர், போபால், புவனேஸ்வர், மைசூர் மற்றும் ஷில்லாங் ஆகிய இடங்களில் உள்ள மண்டலக் கல்வி நிறுவனங்களையும் (Regional Institutes of Education (RIE)), போபாலில் அமைந்துள்ள பண்டிட் சுந்தர்லால் சர்மா மத்திய தொழிற்கல்வி நிறுவனத்தையும் (Central Institute of Vocational Education (CIVE)) உள்ளடக்கிய அங்கங்களாகச் செயல்படுகின்றன.


• இந்த அறிவிப்பு ஒரு பலகட்ட செயல்முறைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இது முதலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT), பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இணையதளத்தில் விண்ணப்பித்ததிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 2023-ஆம் ஆண்டில் 'விருப்பக் கடிதம்' (Letter of Intent) வழங்கப்பட்டது. பின்னர், நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ஒரு இணக்க அறிக்கையை (Compliance Report) சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபுணர் குழு ஏற்றுக்கொண்டதுடன், இந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் 595-வது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• இந்த அறிவிப்பின்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவானது (NCERT) கல்வி சார்ந்த ஆராய்ச்சிப் பணிகள், முனைவர் பட்ட ஆய்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான கல்வித் திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


• மேலும், இது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவை (NCERT) தெளிவான முறையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஒழுங்குமுறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது. இது முன்னதாக விமர்சகர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது. இந்த அறிவிப்பின்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் கல்வித் திட்டங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் மற்றும் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஏதேனும் புதிய பாடப்பிரிவுகள் அல்லது வளாகத்திற்கு வெளியேயுள்ள மையங்களைத் (Off-campus centres) தொடங்கினாலும், அவை கண்டிப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


• தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) வணிகரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது "லாப நோக்கிலான செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது" என்று அந்த அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


• கல்வி நிறுவனங்கள் தேசிய அளவிலான தரவரிசை மற்றும் அங்கீகார முறைகளில் பங்கேற்பது உட்பட, உயர்கல்வியின் விரிவான கட்டமைப்புகளோடு இணைந்து செயல்பட வேண்டும். அந்த நிறுவனம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (National Institutional Ranking Framework (NIRF)) வருடாந்திர தரவரிசைப் பட்டியலில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு (National Assessment and Accreditation Council (NAAC)) மற்றும் தேசிய அங்கீகார வாரியம் (National Board of Accreditation (NBA)) போன்ற அமைப்புகளிடமிருந்து தர அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.


• 2023-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், இந்த நடவடிக்கை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு அமைப்பை ஓர் ஆராய்ச்சி சார்ந்த நிறுவனமாக மாற்றவும், அதன் சர்வதேச கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தவும் பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.


Original article: What is the role of the National Council of Educational Research and Training? -Priya Kumari Shukla

Share: