வெளிநாட்டு நடுவர் மன்றத் தீர்ப்புகளின் அமலாக்கத்தை ரத்துசெய்வதற்கான இந்திய உச்சநீதிமன்றத்தின் தடை. -அமால் ஷேக்

 வெளிநாட்டு தீர்ப்பாயங்கள் வழங்கும் முடிவுகள் கடுமையான சட்டத் தரங்களை மீறாதவரை, அவை நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் இறுதி நிலையில் ஏற்படும் காலதாமதங்கள் குறைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர் தொடர்பான சர்ச்சைகளில், மேல்முறையீடுகள் மற்றும் தொடர் வழக்குகள் காரணமாகத் தீர்ப்புகளை அமல்படுத்துவதில் அடிக்கடி தாமதம் ஏற்படுவது வழக்கம் என்றும் அத்தகைய சூழலில் இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.


கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி, வெளிநாட்டுத் தீர்ப்பாயங்கள் வழங்கும் முடிவுகளை அமல்படுத்தும்போது, இந்திய நீதிமன்றங்கள் அந்த வழக்கின் தகுதிகள் அல்லது நியாயங்களை மீண்டும் ஒருமுறை ஆராய முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம், அத்தகைய சூழல்களில் நீதிமன்றங்கள் மேல்முறையீட்டு அமைப்புகளாக செயல்படாது என்பதைத் தெளிவுபடுத்தியது. நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, நிறுவனத்தை முன்னின்று நடத்துபவர்கள் தாக்கல் செய்த மனுவை முற்றிலும் அடிப்படையற்றது என்று கூறி நிராகரித்தது. மேலும், இது தீர்ப்பை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.


இந்தக் வழக்கு, நடுவர் தீர்ப்பு மற்றும் சமரசச் சட்டத்தின்கீழ் (Arbitration and Conciliation Act) உள்ள "பொதுக் கொள்கை" விதிவிலக்கை நீதிமன்றங்கள் எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம் என்பதைச் சுட்டிக்காட்டியது. ஒரு உள்ளூர் சட்டத்தை மீறுவது மட்டுமே ஒரு தீர்ப்பைச் செயல்படுத்துவதைத் தடுப்பதற்குப் போதுமானதாக இருக்காது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், நடுவர் மன்றத்தாலோ அல்லது நீதிமன்றத்தாலோ ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட முடிவுகளை, இந்த அமலாக்க நடவடிக்கைகள் மீண்டும் ஆராயக்கூடாது என்றும் தெரிவித்தது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே விவகாரங்களை இந்தியாவில் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.


இறுதியில், இந்தத் தீர்ப்பானது ஒரு வழக்கின் இறுதித்தன்மையை உறுதிப்படுத்துகிறது மற்றும் 'பொதுக் கொள்கை விதிவிலக்கு' (Public Policy Exception) தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பாயத்தின் முடிவுகள் மிகக்குறுகிய சட்டச் சோதனையில் தோல்வியடையாத வரை, அது கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்பதை இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கிடையிலான சர்ச்சைகளைத் தீர்ப்பதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதங்கள் குறைக்கப்படுகின்றன.


வழக்கின் உண்மைகள்


2014-ஆம் ஆண்டில், ‘Financial Software and Systems Pvt. Ltd’ நிறுவனத்தின் உரிமையாளர்களும் மற்றும் சில தனிப்பட்ட முதலீட்டாளர்களும் ஒரு 'பங்கு கையகப்படுத்துதல் மற்றும் பங்குதாரர்கள் ஒப்பந்தத்தில்' (Share Acquisition and Shareholders Agreement) கையெழுத்திட்டனர். இதுபோன்ற பெரும்பாலான ஒப்பந்தங்களைப் போலவே, இதிலும் ஒரு "வெளியேறும் வழிமுறை" சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது, முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்தை லாபத்துடன் திரும்பப் பெறுவதற்கான சில வழிமுறைகள் இதில் கூறப்பட்டிருந்தன. இந்த ஒப்பந்தத்தின்படி, ‘Financial Software and Systems Pvt. Ltd’ நிறுவனமும் அதன் உரிமையாளர்களும் மார்ச் மாதம் 2016-ஆம் ஆண்டுக்குள் ஒரு தகுதியான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (Qualified Initial Public Offering (QIPO)) உறுதி செய்ய வேண்டிய கட்டாயப் பொறுப்பில் இருந்தனர்.


ஒரு தகுதியுள்ள பொதுப் பங்கு வெளியீடு (QIPO) என்பது தனியார் பங்கு மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான மூலதன (Venture Capital) முதலீட்டாளர்கள் தாங்கள் செய்த முதலீடுகளை விற்று, லாபத்தை ஈட்டுவதற்கான ஒரு வெளியேறும் வழியாகும். ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடும்போது இது நிகழ்கிறது. இதன்மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்க முடியும் என்றும் ஒருவேளை இது நடக்கவில்லை என்றால், “Exit Waterfall” என்று அழைக்கப்படும் பிற வழிகள் பின்பற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் இரண்டாம் நிலை விற்பனை, பங்குகளைத் திரும்பப் பெறுதல் (Buy-back) அல்லது இவை தோல்வியுற்றால் நிறுவனத்தை மற்றொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்தல் போன்ற முறைகள் அடங்கும். ஆனால், தற்போதைய சூழலில் இந்த மாற்று வழிகள் எதுவுமே நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


இந்தச் சர்ச்சை சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் (Singapore International Arbitration Centre (SIAC)) முன் விசாரணைக்குக்  கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலீட்டாளர்கள் தங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர். இதனை விசாரித்த தீர்ப்பாயம், அந்த ஒப்பந்தத்தில் இருந்த வெளியேறும் விதிமுறை சட்டப்படி செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாததாலும், மாற்று வெளியேறும் வழிமுறை ஏதும் வழங்கப்படாததாலும், இது ஒப்பந்த மீறல் என்று தீர்ப்பாயம் கருதியது. இதற்காக சுமார் 11,288 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. மேலும், இந்தத் தொகை செலுத்தப்படாவிட்டால், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை மீட்டெடுக்க அந்த நிறுவனத்தின் பங்குகளை மற்றொரு நிறுவனத்திற்கு (strategic sale) மூலம் விற்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.


நிறுவனத்தின் உரிமையாளர்கள், தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த நீதிமன்றமே அந்தத் தீர்ப்பாய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அதிகாரத்தையும், தேவையெனில் அத்தீர்ப்பை ரத்து செய்யும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. அந்த உரிமையாளர்கள் வாதிடும்போது, இந்த விவகாரத்தில் உரிமைகளை விட்டுக்கொடுத்தல் (Waiver) நடந்திருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என்றும் கூறினர். மேலும், இது ஒரு நிறுவனம் தனது சொந்தப் பங்குகளைத் திரும்ப வாங்குவதைப் போன்றது என்றும், இது நிறுவனச் சட்டத்திற்கு  எதிரானது என்றும் வாதிட்டனர். ஆனால், நீதிமன்றம் இந்த இரண்டு வாதங்களையும் நிராகரித்தது. ஒப்பந்தத்தின்படி எழுத்துப்பூர்வமான தள்ளுபடி எதுவும் இல்லை என்றும், ஒரு பாதிப்பிற்கு நஷ்டஈடு வழங்குவது என்பது பங்குகளைத் திரும்ப வாங்குவதற்குச் சமமாகாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் விளைவாக, பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில், அந்தத் தீர்ப்பை ரத்துசெய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது


சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்துதல்


முதலீட்டாளர்கள் ஒரு தீர்ப்பாயத்தின் முடிவை அமல்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தபோது, அதற்கான சட்டக் கட்டமைப்பு ஏற்கனவே மிகவும் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. நடுவர் தீர்ப்பு மற்றும் சமரசச் சட்டம் (Arbitration and Conciliation Act) பிரிவு 48-ன்படி, இந்திய நீதிமன்றங்கள் ஒரு வெளிநாட்டுத் தீர்ப்பை அமல்படுத்த மறுக்க வேண்டுமானால், அதற்கு மிகச் சில காரணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதில் மிகவும் விவாதிக்கப்படும் ஒரு அம்சம் "இந்தியாவின் பொதுக் கொள்கை" (Public Policy of India) என்பதாகும். இந்தக் கொள்கையும் மிகக் குறுகிய அளவிலேயே வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது மோசடி அல்லது ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகள், இந்தியச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுதல் அல்லது அடிப்படை ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுக்கு முரணான முடிவுகள் ஆகியவற்றிற்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும் என்கின்றனர். முக்கியமாக, இந்த விதியைப் பயன்படுத்தி வழக்கின் தகுதியின் அடிப்படையில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


இது அரசாங்கத்தின் கொள்கை முடிவைப் பிரதிபலிக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளைப் போலவே, இந்தியாவும் நடுவர் மன்றங்கள் வழங்கும்  தீர்ப்புகளை மிகக் குறைந்த தலையீட்டுடன் நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை மீண்டும் ஆராய்வதைத் தவிர்க்கும்போது மட்டுமே இந்தத் அமைப்பு சிறப்பாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


இருப்பினும், இந்த வழக்கில், நிறுவன உரிமையாளர்கள், பொதுக் கொள்கைகளை முன்னிறுத்தி, நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்று நேரடியாகக் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.


உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு


தீர்ப்பாயத்தின் அந்த முடிவு தங்களைக் கட்டாயமாகப் பங்குகளை திரும்பப் பெறச் செய்வதாகவும், இது பொதுக் கொள்கைக்கு எதிரானது என்றும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வாதிட்டனர். பங்குகளைத் திரும்பப் பெறுதல் என்பது ஒரு நிறுவனம் தனது சொந்தப் பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து விலைக்கு வாங்குவதாகும்; அதே சமயம் பங்கு ஒப்படைப்பு என்பது ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தீர்வுக்காகவோ பங்குதாரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் பங்குகளை நிறுவனத்திடம் திருப்பியளிக்கும் முறையாகக் கருதப்படுகிறது.


இந்த வழக்கில் நிறுவனத்திற்கு தனது பங்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், மாறாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் பணத்தையும் பங்குகளையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்கள் தங்கள் பங்குகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


நிறுவனத்தின் உரிமையாளர்கள் அதற்கான தொகையைச் செலுத்தினால், பங்குகள் அவர்களுக்கு மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் நிறுவனத்தின் மூலதனம் குறைக்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் பார்க்கும்போது, நிறுவனங்களே பங்குகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்  நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகள் இதற்குப் பொருந்தாது  என்றும் தெரிவிக்கின்றனர்.


மிக முக்கியமாக, உள்நாட்டு சட்டங்களுடன் சில முரண்பாடுகள் இருந்தாலும், அது "இந்திய சட்டத்தின் அடிப்படை கொள்கையை" (Fundamental Policy of Indian Law) மீறுவதாக அமையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. உள்ளூர் சட்டத்தின் ஒரு விதியைச் சாதாரணமாக மீறுவது மட்டுமே ஒரு தீர்ப்பை ரத்து செய்யப் போதுமானது அல்ல என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


ஒருமுறை இழப்பீடு வழங்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட சொத்தை விற்பனை செய்ய அனுமதிப்பது என்பது குறிப்பிட்ட நிவாரணச் சட்டத்தின்கீழ் (Specific Relief Act (SRA)) அனுமதிக்கப்படாது என்பதாகும். அதாவது, இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பிறகு, அதே நேரத்தில் குறிப்பிட்ட ஒப்பந்தப்படியே அந்தச் சொத்தை விற்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது சட்டப்படி முறையல்ல என்று நிறுவனத்தின் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.


நீதிமன்றம் இந்தச் சிக்கலான பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக, அந்தத் தீர்வை வேறு கோணத்தில் மாற்றி அமைத்தது. இழப்பீடு வழங்குவதே முதன்மையான தீர்வாகும் என்றும், அந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாத பட்சத்தில், அதை வசூலிப்பதற்கான ஒரு வழியாக மட்டுமே வேறு நிறுவனத்திற்கான விற்பனை முறை அமையும் என்றும் நீதிமன்றம் கூறியது.


இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, ​​அந்த விற்பனை என்பது ஒரு தனிப்பட்ட தீர்வாக அமையவில்லை என்றும் மாறாக, ஏற்கனவே இருக்கும் ஒரு சட்டப்பூர்வ தீர்வை அல்லது உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கருவியாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான பகுதி என்னவென்றால், மீண்டும் மீண்டும் தொடரப்படும் வழக்குகளை நீதிமன்றம் அணுகிய விதம் ஆகும்.


இந்த வழக்கு இந்தியாவில் மேல்முறையீடு செய்யப்படுவதற்கு முன்பே, நிறுவன உரிமையாளர்கள் இந்த நடுவர் தீர்ப்பாய நடவடிக்கையை மேற்பார்வையிடும் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் (Singapore High Court (SHC)) எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அவர்கள் முன்வைத்த அந்த எதிர்ப்புகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.


நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டத்தில் அதே பிரச்சனைகளை மீண்டும் எழுப்பமுடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக நீதிமன்றம் சர்வதேசப் பிரச்சினைத் தடைக்கோட்பாடு (Transnational Issue Estoppel) என்ற கொள்கையைப் பயன்படுத்தியது. அதாவது, ஒரு தகுதியுள்ள நீதிமன்றம் ஒருமுறை ஒரு விவகாரத்தில் முடிவெடுத்துவிட்டால், அதே தரப்பினர் மற்றுமொரு நீதிமன்றத்தில் அல்லது மன்றத்தில் அந்த விவகாரத்தைப் பற்றி மீண்டும் விவாதிக்க முடியாது. வெவ்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்வதன் மூலம் ஏற்கனவே தீர்க்கப்பட்ட விவகாரங்களை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவதை இந்தக் கொள்கை விதிகள் தடுக்க உதவுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.


Original article: Supreme Court’s high bar for overturning enforcement of foreign arbitration awards. -Amaal Sheikh

Share: