சபரிமலை வழக்கு மறு ஆய்வும் ஒரு முக்கியக் கேள்வியும் : நம்பிக்கை எவ்வளவு தூரம் வரை நீளும்? அரசியலமைப்பு எப்போது தலையிட வேண்டும்? -குமார் கார்த்திகேயா

இறுதியில், இந்த விவாதம் இவ்விரண்டு கேள்வியில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல. ஒரு பன்மைச் சமூகத்தில் நம்பிக்கை பின்பற்றப்படும் கட்டமைப்பை அரசியலமைப்பு வழங்குகிறது என்பதை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.


நீதித்துறை ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சினையை ஆராயும்போது, அது சட்டத்தால் மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் அடையாளத்தாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்குள் நுழைகிறது. இதன் பொருள், சபரிமலை மறுஆய்வான கண்டரு ராஜீவரு vs இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் (Kantaru Rajeevaru vs Indian Young Lawyers Association) வழக்கை விசாரிக்கும்போது, உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த நுட்பமான தளத்தை எதிர்கொள்ளும். இது ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 22 வரை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் பட்டியலிடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரம் அதே கடினமான கேள்வியை மீண்டும் எழுப்புகிறது. நம்பிக்கை எந்த அளவிற்குப் பரவுகிறது?. மேலும், அரசியலமைப்பும் நீதிமன்றங்களும் தலையிட வேண்டுமானால், எந்தக் கட்டத்தில் தலையிட வேண்டும்?


அரசியலமைப்பின் 25 மற்றும் 26 ஆம் பிரிவுகள், இந்தியாவின் மதப் பன்முகத்தன்மையை உணர்த்தும், ஒவ்வொரு மதத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் பாதுகாக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டன. அதே நேரத்தில், அவை சில வரம்புகளையும் உள்ளடக்கியுள்ளன. அரசியலமைப்புப் பிரிவு 25, ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சி சுதந்திரத்தையும், மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் உள்ள உரிமையையும் உறுதி செய்கிறது. இருப்பினும், இந்த உரிமை பொது ஒழுங்கு, ஒழுக்கநெறி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு உட்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளைக் கையாளும் அரசியலமைப்புப் பகுதி III-இல் மற்ற விதிகளுக்கும் இது பொருந்தும். இந்தியாவில் மத சுதந்திரம் என்பது சமத்துவம், கண்ணியம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து தனித்துச் செயல்படும் வகையில் ஒருபோதும் கருதப்பட்டதில்லை.


'ஆணையர், இந்து சமய அறநிலையங்கள், மெட்ராஸ் vs சிரூர் மடத்தின் ஸ்ரீ லட்சுமிந்திர தீர்த்த சுவாமியார்' (The Commissioner, Hindu Religious Endowments, Madras vs Sri Lakshmindra Thirtha Swamiar of Shirur Mutt) வழக்கில் மதத்தின் வரம்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய கருத்துக்கள் தொடர்ந்து வழிகாட்டி வருகின்றன. நம்பிக்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் அத்தியாவசிய நடைமுறைகளை மதம் உள்ளடக்கியுள்ளது என்று நீதிமன்றம் கூறியது. அதேநேரத்தில், மத நடைமுறைகளுக்கும், மதத்துடன் தொடர்புடைய மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் அது வரையறுத்தது. குறிப்பாக நிர்வாகம், சொத்து மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில், பிந்தையதை அரசு ஒழுங்குபடுத்தலாம்.


புனிதத்திற்கும் (sacred) மதச்சார்பற்றுக்கும் (secular) இடையிலான இந்த வேறுபாடு, எழுபது ஆண்டுகால சட்ட முடிவுகளை வடிவமைத்துள்ளது. இருப்பினும், இது நீதித்துறையை ஒரு கடினமான நிலையிலும் வைத்துள்ளது. எது ஒரு அத்தியாவசிய மத நடைமுறையாகக் கருதப்படுகிறது என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்க, மதக் கோட்பாடுகளை விளக்க வேண்டியுள்ளது. மதச் சுயாட்சியையும் பொதுப் பொறுப்புணர்வையும் சமநிலைப்படுத்த முயற்சிப்பதால், இந்தக் கோட்பாடு நிலைத்திருக்கிறது.


அரசியலமைப்புப் பிரிவுகள் 25 மற்றும் 26-க்கு இடையிலான தொடர்பு இந்த முரண்பாட்டை மேலும் தெளிவுபடுத்துகிறது. அரசியலமைப்புப் பிரிவு 25 தனிநபர் உரிமைகளைப் (rights of individuals) பாதுகாக்கிறது. அதேசமயம் பிரிவு-26, மத விவகாரங்களில் தங்கள் சொந்த மத விவகாரங்களை நிர்வகிப்பதற்கும், நிறுவனங்களை நிறுவுவதற்கும், சொத்துக்களை நிர்வகிப்பதற்கும் மதப் பிரிவுகளின் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்கிறது. கோட்பாட்டளவில், இவ்விரு பிரிவுகளும் இணக்கமாக இணைந்து செயல்படுகின்றன. ஆனால் நடைமுறையில், மதப் பிரிவுகளின் தன்னாட்சி தனிநபர் அணுகலையோ அல்லது சமத்துவத்தையோ கட்டுப்படுத்தும்போது முரண்பாடு ஏற்படுகின்றன.


சபரிமலை கோயில் தொடர்பான சர்ச்சை, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs கேரள அரசு வழக்கில் (Indian Young Lawyers Association vs State of Kerala) இந்த முரண்பாட்டைத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு குறிப்பிட்ட வயதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களை கோயிலில் நுழைவதை விலக்குவது, சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீறுவதாகப் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கோயில் ஒரு தனி மதப் பிரிவாக இருப்பதால், விலக்குவதற்கு அதற்கு உரிமை உண்டு என்ற வாதத்தை அது நிராகரித்தது.


மத நடைமுறைகளைச் சோதிப்பதற்கான ஒரு அளவுகோலாக அரசியலமைப்பு அறநெறி (constitutional morality) என்ற கருத்தை இந்தத் தீர்ப்பு குறிப்பிட்டது. மத நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் அந்த நெறிமுறை கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்று அது கோருகிறது. அரசியலமைப்பு சார்ந்த அறநெறி ஒவ்வொரு சர்ச்சைக்குரிய நடைமுறைக்கும் அளவுகோலாக மாறினால், சமூகங்களே தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளக்கூடிய விவகாரங்களை முடிவு செய்யும் நிலைக்கு நீதிமன்றங்கள் இழுத்துச் செல்லப்படக்கூடும். மதத்தின் போர்வையில் சமூகப் படிநிலைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பு உருவாக்கப்படவில்லை.


அரசியலமைப்புப் பிரிவு-26-ன் கீழ் உள்ள மதப்பிரிவு உரிமைகள், அடிப்படை உரிமைகளா என்பது தொடர்பான ஒரு கேள்வி எழுகிறது. இதற்கான பதில் தெளிவாக ஆம் என்பதே. மதப்பிரிவுகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட அரசியலமைப்பு நீதிமன்றங்களை அணுகும் உரிமை உண்டு. எஸ். பி. மிட்டல் vs இந்திய ஒன்றியம் வழக்கில் (S P Mittal vs Union of India), ஒரு மதப்பிரிவை அடையாளம் காண்பதற்கான சோதனைகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதில் ஒரு பொதுவான நம்பிக்கை, ஒரு பொதுவான அமைப்பு மற்றும் ஒரு தனித்துவமான பெயர் இருக்க வேண்டும்.


இந்த உரிமைகள் உண்மையானவை மற்றும் அவற்றை நீதிமன்றத்தில் அமல்படுத்த முடியும். இருப்பினும், அவை மற்ற அடிப்படை உரிமைகளைவிட மேலானவை அல்ல. அரசியலமைப்புப் பிரிவு-26 இதை வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், நீதித்துறையின் விளக்கமானது பிரிவுகள் 14, 15 மற்றும் 21 உடன் அதைத் தொடர்ந்து உட்படுத்தியுள்ளது. எந்தவொரு அடிப்படை உரிமையும் தனித்து இருப்பதில்லை. மதப்பிரிவு நடைமுறைகள் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் முரண்படும் இடங்களில், நீதிமன்றங்கள் ஒரு கவனமான சமநிலைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.


அரசியலமைப்புப் பிரிவு 25(2)(b), சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்தைப் பற்றிய மற்றொரு பார்வையை வழங்குகிறது. இது, "பொதுவான தன்மையுடைய இந்து மத நிறுவனங்களை அனைத்து வகுப்பினருக்கும் மற்றும் இந்துக்களின் பிரிவினருக்கும் திறந்துவிடும்" சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. "இந்துக்களின் பிரிவு" (section of Hindus) என்ற சொற்றொடர் வேண்டுமென்றே பரந்த தன்மையைக் கொண்டவையாக இருந்தன. இந்து சமூகத்திற்குள் இருக்கும் பன்முகத்தன்மையை அவை அங்கீகரித்து, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை அகற்றுவதையும் அவை நோக்கமாகக் கொண்டிருந்தன.


நாடு முழுவதும் உள்ள கோயில் நுழைவுச் சட்டங்கள் இந்த அரசியலமைப்பு அடித்தளத்தின் மீதுதான் அமைந்துள்ளன. சமூக சீர்திருத்தம் அரசியலமைப்பின் வடிவமைப்பிலேயே எப்போதும் சேர்க்கப்பட்டிருந்தது என்பதை இந்த விதி காட்டுகிறது. மத சுதந்திரம் எல்லா வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரான ஒரு கேடயமாகச் செயல்படுவதற்காக ஒருபோதும் கருதப்படவில்லை. அதேநேரத்தில், சீர்திருத்தம் சட்டத்தின் மூலமே முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, நிர்வாக உத்தரவுகள் மூலம் அல்ல. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25(2)(b)-இன் கீழ் அரசின் அதிகாரம் இயல்பிலேயே செயல்பட வழிவகுப்பதாக இருந்தாலும், அது அரசியலமைப்பு வரம்புகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.


இறுதியில், இந்த விவாதம் என்பது நம்பிக்கைக்கும் அரசியலமைப்புக்கும் இடையே ஒன்றைத் தேர்ந்தெடுப்பது பற்றியது அல்ல. ஒரு பன்மைச் சமூகத்தில் நம்பிக்கை பின்பற்றப்படுவதற்கான கட்டமைப்பை அரசியலமைப்பு வழங்குகிறது என்பதை அங்கீகரிப்பதே இதன் நிலையாகும். அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 25 மற்றும் 26 ஆகியவை பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டன. அவை, சமத்துவமின்மையைப் பாதுகாப்பதற்காக அல்ல. இந்தச் சட்டப்பிரிவுகள் நம்பிக்கைக்கான மரியாதையையும் சீர்திருத்தத்திற்கான ஒரு உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. இந்த சட்டப்பிரிவுகளை கவனமாகவும் தெளிவாகவும் செயல்படுத்துவதில் நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்கின்றன. அத்தியாவசிய மத நடைமுறைகள் கவனத்துடன் அடையாளம் காணப்பட வேண்டும். அரசியலமைப்பு அறநெறி (Constitutional morality) என்பது ஒரு வெற்று முழக்கமாகவோ அல்லது கடுமையற்ற கருவியாகவோ ஆகிவிடக்கூடாது. மதப்பிரிவுகளின் தன்னாட்சி மதிக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்தத் தன்னாட்சி அடிப்படை உரிமைகளின் இழப்பில் வரக்கூடாது.


இந்திய அரசியலமைப்பு எப்போதுமே பாரம்பரியத்திற்கும், மாற்றத்திற்கும் இடையிலான ஒரு சமரசப் பேச்சுவார்த்தையை உள்ளடக்கியுள்ளது. சமய சுதந்திரம் நமது அரசியலமைப்பின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். அதன் பாதுகாப்பிற்கு, வலுவான நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதில் பணிவும், குடியரசை ஒன்றிணைக்கும் மதிப்புகளை நிலைநிறுத்துவதில் உறுதியும் தேவைப்படுகின்றன. இந்தச் சமநிலை நுட்பமானதும், அடிக்கடி விவாதிக்கப்பட்டு, சவாலுக்குட்படுத்தப்படுவதும் நமது அரசியலமைப்பு நிலையின் உண்மையான அளவுகோலாகும்.


கட்டுரையாளர், இந்திய உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர். இவர் அரசியலமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.


Original Link: Sabarimala review and a question: How far does faith extend — and when should the Constitution step in?


Share:

சமூக ஊடகங்கள் ஒரு திருப்புமுனையில் : அதன் நன்மைகள், அபாயங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் - ரோஷ்னி யாதவ்

பிரச்சினை என்ன?


பல நாடுகள் இளைஞர்கள் மத்தியில், சமூக ஊடகங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவரும் சூழலில், இந்த ஆண்டின் 'உலக மகிழ்ச்சி அறிக்கை' (World Happiness Report) சமூக ஊடகங்களின் தாக்கம் மீது கவனத்தை ஈர்க்கிறது. இந்தியாவில், இணைய உள்ளடக்கங்களை நீக்குவதற்கான ஒரு முக்கியக் கட்டமைப்பை (content takedown framework) பரவலாக்கவும், பல அமைச்சகங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்குச் சமூக ஊடக நிறுவனங்களுக்குத் 'தடை உத்தரவுகளை' (blocking orders) அனுப்பும் அதிகாரத்தை வழங்கவும் அரசு திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கு இணையாக, மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கர்நாடக அரசு தனது சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. அதேவேளையில், ஆந்திரப்பிரதேச அரசு 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையைத் திட்டமிட்டுள்ளது.


சமூக ஊடகத் தளங்கள் ஏற்படுத்தக்கூடிய தீங்குகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் இந்தியா அதிகக் கவனம் செலுத்துகிறது என்பதை இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இச்சூழலில், சமூக ஊடகங்களையும், அதன் ஒழுங்குமுறை குறித்த விவாதங்களையும் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது இன்றியமையாததாகிறது.


கேள்வி 1 : சமூக ஊடகங்களின் முக்கிய நன்மைகள் யாவை?


இன்றைய உலகில், முந்தைய தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக, உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவுகளில் மக்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைக்கும் ஒரு வலிமைமிக்க சக்தியாகச் சமூக ஊடகங்கள் உருவெடுத்துள்ளன. முன்னணி தரவு மற்றும் வணிக நுண்ணறிவுத் தளமான 'ஸ்டாடிஸ்டா' (Statista) வெளியிட்ட அறிக்கையின்படி, உலகம் முழுவதும் உள்ள 6.04 பில்லியன் இணையப் பயனர்களில், 5.66 பில்லியன் பயனர்கள், அதாவது உலக மக்கள்தொகையில் 68.7 சதவீதம் நபர்கள் அக்டோபர் 2025 நிலவரப்படி சமூக ஊடகப் பயனர்களாக இருந்துள்ளனர். சமூக ஊடகப் பயனர்களின் இந்த அதிகப்படியான எண்ணிக்கை பொதுவாக ஒரு எளிய கேள்வியை எழுப்புகிறது. உலக மக்கள் தொகையில் இவ்வளவு பெரிய பகுதியினரின் வாழ்வில் சமூக ஊடகங்கள் ஏன் இவ்வளவு வலுவாகப் பின்னிப்பிணைந்துள்ளன?


இக்கேள்விக்குப் பதிலளிக்கப் பல வழிகள் இருந்தாலும், சமூக ஊடகங்கள் வழங்கும் நன்மைகளை ஆராய்வதே இதற்கான ஒரு தர்க்கரீதியான மற்றும் சுவாரஸ்யமான வழியாக அமையும்.


1. மேம்பட்ட தகவல் தொடர்பு ஆதாரம் (Advanced Source of Communication) : பொதுவாக, விளம்பர அல்லது கல்வி முறைகளால் ஈடுகொடுக்க முடியாத வேகத்தில், தனிநபர்களும் நிறுவனங்களும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் பரிமாறவும் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும், பொதுமக்களுடன் மட்டுமல்லாமல் தொழில்முறைச் சமூகங்களுடனும் தொடர்புகொள்வதற்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகிவிட்டது.


2. அதிகாரமளித்தலை எளிதாக்கும் ஒரு ஊடகம் (Medium for facilitating empowerment) : பொதுவாக, சமூக ஊடகங்களின் நன்மைகளில் ஒன்று, அது அதிகாரமளித்தலுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக உருவெடுத்துள்ளது என்பதே ஆகும். வரலாற்றுரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட குரல்களுக்கு இது ஒரு தளத்தை வழங்குகிறது. இதன்மூலம் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கவும், தங்களின் நிலைகளைப் பகிர்ந்துகொள்ளவும், தங்களுக்கு ஆதரவான சமூகங்களை உருவாக்கிக்கொள்ளவும் இது வழிவகுக்கிறது. உதாரணமாக, #MeToo மற்றும் #TimesUp போன்ற இயக்கங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஊக்கமும், தெளிவான கவனத்தையும் பெற்றது.


3. நல்லாட்சிக்கு உதவுதல் (Helping in Good Governance) : மக்களிடையே தகவல் பகிரப்படும் விதத்தை சமூக ஊடகங்கள் மாற்றியமைத்துள்ளன. இதன் விளைவாக, முடிவெடுப்பதில் குடிமக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் நல்லாட்சியை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. குடிமக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்தால் புகாரளிக்கலாம் மற்றும் அரசாங்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம். மேலும் அதன் மூலம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கச் செய்யலாம். பதிலுக்கு, அரசாங்கங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி குடிமக்கள், வணிகங்கள் மற்றும் நிபுணர்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, சேவை வழங்கல் குறித்த கருத்துக்களைச் சேகரிக்கவும், திட்டங்களை உருவாக்கவும், கொள்கைகளை வகுக்கவும் முடியும்.


4. சமூக ஊடகங்களும் ஜனநாயகமும் (Social media and Democracy) : சமூக ஊடகங்கள் குடிமக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, ஜனநாயகத்தை மேலும் பங்கேற்பு மிக்கதாக மாற்றியுள்ளன.


சமூக ஊடகங்கள் முக்கியமாக மக்கள் மற்றும் மனித உறவுகளைப் பற்றியவை. பொதுவாக அடிப்படையில் சமூக ஊடகங்களின் முக்கிய செயல்பாடு, மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளின் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் கலந்துரையாடலுக்கு முன்மாதிரியாகவும் ஊடகமாகவும் விளங்குதல், மற்றும் புவியியல் மற்றும் சமூக எல்லைகளைக் கடந்து இணைப்புகளை எளிதாக்குதல் ஆகியவை அடங்கும்.


இந்தச் செயல்பாடுகளையும், நமது வாழ்வில் சமூக ஊடகங்கள் வகிக்கும் முக்கியமானப் பங்கையும் கருத்தில் கொள்ளும்போது, தற்போது பெரும்பாலான மக்கள் இப்போது இணையத்தை முக்கியமாக சமூக ஊடகத் தளங்கள் வழியாகவே பயன்படுத்துகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. இது, மேலும் தகவலறிந்த மற்றும் திறந்த மனப்பான்மை கொண்ட ஒரு உலகளாவிய சமூகத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


கேள்வி 2 : சமூக ஊடகப் பயன்பாட்டின் தீமைகள் யாவை?


சமூக ஊடகங்கள் வழங்கும் ஏராளமான நன்மைகள் இருந்தபோதிலும், அது பல முனைகளில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தின் காரணமாக, அது பெரும்பாலும் இருமுனைக் கத்தி (double-edged sword) என்று குறிப்பிடப்படுகிறது. இச்சூழலில், சமூக ஊடகங்களின் தீமைகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.


1. தவறான தகவல்களின் சவால் (Challenge of Misinformation) : சமூக ஊடகங்களின் பரவலான அணுகல், தகவல்களைப் பெறுவதற்கான அணுகலை மேம்படுத்துவதற்கும், சமூக ஈடுபாட்டை வளர்ப்பதற்கும், சாதாரண குடிமக்களுக்கும் முடிவெடுப்பவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது. இருப்பினும், தவறான தகவல்கள் பரவும் பிரச்சினை சமூக ஊடகங்களின் மிகப்பெரிய தீமையாக உருவெடுத்துள்ளது.


இணையவழித் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சின் தாக்கம் குறித்த யுனெஸ்கோ-இப்சோஸ் ஆய்வின்படி (UNESCO-Ipsos Survey), இந்தியாவில் பதிலளித்தவர்களில் 64 சதவீதம் நபர்கள், சமூக ஊடகப் பதிவுகளைத் தவறான தகவல்கள் மற்றும் போலிச் செய்திகளின் மிகப்பெரிய ஆதாரமாகக் கருதுகின்றனர். இருப்பினும், நகர்ப்புற இந்தியர்களில் இருவரில் ஒருவர் (56 சதவீதம் பேர்) செய்திகள் மற்றும் தகவல்களுக்கான தங்களின் முதன்மை ஆதாரமாக சமூக ஊடகப் பதிவுகளையே சார்ந்துள்ளனர் என்பதை இந்தக் கணக்கெடுப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


2. தனியுரிமை மீறல்கள் (Privacy violations) : சமூக ஊடகங்களில் நிகழும் தனியுரிமை மீறல்கள் குறித்த கவலைகள் குறித்து விரிவாக விளக்கத் தேவையில்லை. தனியுரிமை மீறல்களில் பெரும்பாலும் தரவுச் சுரண்டல், மூன்றாம் தரப்பினருடன் தரவைப் பகிர்தல், நேரடி இருப்பிடக் கண்காணிப்பு (live location tracking), அடையாளத் திருட்டு (identity theft), மற்றும் இணைய ஊடுருவல்கள் (hacking), ஃபிஷிங் (phishing) போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுவது ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை, இலக்கு வைக்கப்பட்ட விளம்பர நடைமுறைகளால் (targeted advertising practices) தூண்டப்படுகின்றன.


Phishing : ஃபிஷிங் என்பது மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது போலி இணையதளங்கள் மூலம், நம்பகமான நிறுவனம் போல நடித்து, பயனர்களின் கடவுச்சொற்கள், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்டத் தகவல்களைத் திருடும் ஒரு இணையக் குற்றச் செயல் ஆகும்.


3. இணையவழித் துன்புறுத்தல் (Online abuse) : இணையவழித் துன்புறுத்தல் என்பது அவசரமாக கவனம் செலுத்தப்படும் மற்றொரு தீவிரமான கவலைக்குரிய பகுதியாகும். இது பொதுவாகப் பயனர்களுக்கு ஒரு கவலையாக இருந்தாலும், பெண்களும் மற்ற விளிம்புநிலை குழுக்களைச் சேர்ந்த பயனர்களும் இணையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

4. இளம் பருவத்தினர் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் (Social media impact on adolescents) : சமூக ஊடகங்களின் வளர்ச்சியானது, உலகெங்கிலும் உள்ள பல இளம்பருவத்தினரை அவதூறு பேசுதல், துன்புறுத்தல், சங்கடப்படுத்துதல், அவமானப்படுத்துதல், பின்தொடர்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளையும் கூட எதிர்கொள்கின்றனர். இந்த அனுபவங்கள் இளம் பருவத்தினரிடையே மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கக் காரணமாகியுள்ளதுடன், சில சமயங்களில் துயரமான விளைவுகளுக்கும் வழிவகுத்துள்ளது.


5. இணையவழி கொடுமைப்படுத்துதல் (Cyberbullying) : இணையப் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபி கார்ப் (McAfee Corp) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 85 சதவீத குழந்தைகள் இணையவழி கொடுமைப்படுத்துதலுக்கு ஆளாகியுள்ளனர். இணையவழி கொடுமைப்படுத்துதலால் (Cyberbullying) ஏற்படும் நீடித்த மனரீதியான பாதிப்புகளையும், பாதிக்கப்பட்டவர்களின் இளம் வயதையும் கருத்தில் கொள்ளும்போது, சமூக ஊடகங்களை நிர்வகிப்பதும் கண்காணிப்பதும் பெற்றோர்களுக்கு மிகவும் கடினமாகிறது.


6. மனநலத்தில் ஏற்படும் தாக்கம் (Impact on mental health) : சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்துவது எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை. உண்மையில், அது மூளையில் செரோடோனின் (serotonin) மற்றும் பிற மகிழ்ச்சி தரும் வேதிப்பொருட்களை அதிகரித்து, ஒருவரின் மனநிலையை மேம்படுத்த உதவும். இருப்பினும், சமூக ஊடகப் பயன்பாடு ஒரு பழக்கமாக மாறும்போது சிக்கல்கள் எழுகின்றன. ஏனெனில், அடிக்கடி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, உணர்ச்சிகள் மற்றும் கற்றல் தொடர்பான மூளையின் பகுதிகளை மாற்றக்கூடும். மேலும், மனித மூளையானது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட காலத்தில் தனது அடையாளம் மற்றும் சுயமதிப்பு உணர்வை வளர்த்துக் கொள்வதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.


7. மகிழ்ச்சியில் சமூக ஊடகங்களின் தாக்கம் (Social Media impact on happiness) : இளைஞர்களிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், இந்த ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கை சமூக ஊடகங்களின் தாக்கத்தின்மீது அதிகக் கவனத்தை ஈர்க்கிறது.


சமூக ஊடகங்களின் அதீதப் பயன்பாடு இளைஞர்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஆங்கிலம் பேசும் நாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள இளம் பெண்களுக்கு இதன் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.


கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 25 வயதுக்குட்பட்டோரின் வாழ்க்கைத் திருப்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், நீண்டகால சமூக ஊடகப் பயன்பாடு இதற்கு ஒரு முக்கியக் காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


குறிப்பாக இளம் வயதுப் பெண்களிடையே, அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாட்டிற்கும், நல்வாழ்விற்கும் இடையே ஒரு வலுவான எதிர்மறைத் தொடர்பு உள்ளது.


தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள், பயன்படுத்தாதவர்களைவிடவும் மிக உயர்ந்த நல்வாழ்வைப் பெறுவதாகக் கூறுகின்றனர். இருப்பினும், இளம் வயதினர் இந்தத் தளங்களில் ஒரு நாளைக்குச் சராசரியாக 2.5 மணி நேரம் செலவிடுகின்றனர்.


நிரல் நெறிமுறை மூலம் இயக்கப்படும் பதிவுகள் (algorithm-driven feeds), பிரபலமானவர்கள் (influencers) மற்றும் காட்சி உள்ளடக்கங்களால் (visual content) இயக்கப்படும் தளங்கள் மிகவும் தீங்கு விளைவிப்பவை. ஏனெனில், அவை பயனர்களிடையே சமூக ஒப்பீட்டை ஊக்குவிக்கின்றன. அதேசமயம், தகவல் தொடர்பை மையமாகக் கொண்ட சில தளங்கள் சிறந்த விளைவுகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.


எனவே, பயனர்கள் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அவர்கள், சமூக ஊடக அடிமைத்தனத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, அதற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும்.


கேள்வி 3 : இந்தியாவில் சமூக ஊடகங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன?


சமூக ஊடகத் தளங்களைச் சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஒரு முக்கிய நடவடிக்கை, 'தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள்-2021' (Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules) ஆகும்; இவை 'தகவல் தொழில்நுட்பம் விதிகள்' (IT Rules) என்றும் அழைக்கப்படுகின்றன.


பொதுமக்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடனான விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் படி 87(2)-ன் அதிகாரத்தின்கீழ் தகவல் தொழில்நுட்ப விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இதன் மூலம், முந்தைய தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள்) விதிகள்-2011 (Information Technology (Intermediary Guidelines) Rules) ரத்து செய்யப்பட்டுள்ளன.


இவ்விதிமுறைகளின்கீழ், அனைத்து சமூக ஊடகத் தளங்களும் ஒரு குறை தீர்க்கும் மற்றும் இணக்க அமைப்பை உருவாக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஒரு உள்ளூர் குறைதீர்ப்பு அதிகாரி (resident grievance officer), தலைமை இணக்க அதிகாரி (Chief Compliance Officer) மற்றும் ஒரு தொடர்பு ஒருங்கிணைப்பாளரும் (Nodal Contact Person) நியமிப்பதும் அடங்கும். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் இந்தத் தளங்களைக் கேட்டுள்ளது. உடனடிச் செய்திப் பரிமாற்றச் செயலிகளுக்கான (Instant Messaging Apps) மூன்றாவது தேவை, ஒரு செய்தியை முதலில் அனுப்பியவரைக் கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதாகும்.


இந்தத் தேவைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் (IT Act) பிரிவு 79-ன்கீழ் சமூக ஊடக இடைத்தரகர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு பறிக்கப்படும்.


தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் பிரிவு 79


எந்தவொரு இடைத்தரகரும் (intermediary), தனது தளத்தில் கிடைக்கச் செய்யப்பட்ட அல்லது வழிநடத்தி செய்யப்பட்ட மூன்றாம் தரப்புத் தகவல்கள், தரவுகள் அல்லது தொடர்பு இணைப்புகளுக்குச் சட்டரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ பொறுப்பாக்கப்பட மாட்டார் என்று பிரிவு 79 கூறுகிறது. இந்தச் சட்டம் குறிப்பிடுவதுபோல, சம்பந்தப்பட்ட இடைத்தரகர் அந்தச் செய்தியின் பரிமாற்றத்தை எந்த வகையிலும் தொடங்காமலும், செய்தியைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்காமலும், பரிமாற்றத்தில் உள்ள எந்தத் தகவலையும் மாற்றியமைக்காமலும் இருந்தால் மட்டுமே, இந்தச் சட்டப் பாதுகாப்பு அவருக்குப் பொருந்தும்.


மேலும், அந்த இடைத்தரப்பு நிறுவனம் தனது தளத்தில் கிடைக்கக்கூடிய அத்தகைய செய்திகள் அல்லது உள்ளடக்கங்கள் தொடர்பான எந்தவொரு ஆதாரத்தையும் சிதைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ தவறினால், பிரிவு 79-ன்கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு தானாகவே கிடைத்துவிடுவதில்லை. இடைத்தரகர் தனது தளத்தில் உள்ள இந்தச் செய்திகள் அல்லது உள்ளடக்கங்கள் தொடர்பான எந்தவொரு ஆதாரத்தை அழிக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ கூடாது. அவ்வாறு தவறினால், அச்சட்டத்தின்கீழ் அவருக்குக் கிடைக்கும் பாதுகாப்பை அவர் இழக்க நேரிடும்.


குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் 2023-ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம், எந்தத் தகவலைப் 'பொய்யானது' (false) என்று கருதுவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக, பதிவுகளைப் போலியானவை என்றோ அல்லது தவறான வழிகாட்டுதல் கொண்டவை என்று அரசாங்கம் முத்திரை குத்தும் பதிவுகளை நீக்குமாறு இடைத்தரகர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் விரிவான தணிக்கை அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும்.


புதிய பரவலாக்கப்பட்ட தணிக்கை முறை


தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000-ன் பிரிவு 69(A)-ன்கீழ் சமூக ஊடகத் தளங்களுக்கு உள்ளடக்கத்தை முடக்குவதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை, உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய அமைச்சகங்களுக்கும் வழங்க மத்திய அரசு விரைவில் அனுமதிக்கக்கூடும் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் புதன்கிழமை (மார்ச் 18) செய்தி வெளியிட்டது. தற்போது, ​​இந்த அதிகாரம் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ளது.


தற்போது இந்தியாவில் தகவல் உள்ளடக்கத்தை முடக்குவதற்கான இரண்டு இணையான வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஒன்று, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69(A)-ன் கீழ் செயல்படுகிறது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பை மீறும் அல்லது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உள்ளடக்கங்கள் நீக்கப்படுகின்றன. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களில் உள்ள தொடர்பு அலுவலர்கள் (Nodal Officers), அத்தகைய உள்ளடக்கங்களைச் சேகரித்து, தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர். உள்ளடக்கத்தை முடக்குவதற்கான உத்தரவில் இறுதியாக ஒப்புதல் அளித்து, அதனை வெளியிடும் பொறுப்புடைய முகமையாகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமே செயல்படுகிறது.


மற்றொரு வழிமுறை, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-ன்கீழ் செயல்படுகிறது. இந்த பிரிவின்கீழ், பல்வேறு அமைச்சகங்களுக்கு இணையத் தளங்களுக்குத் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நேரடி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் பெரும்பாலும், உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் 'சஹ்யோக்' (Sahyog) இணையதளம் வாயிலாகவே பயன்படுத்தப்படுகிறது.


சமூக ஊடக நிறுவனங்கள் உள்ளடக்கங்களை விரைவாக நீக்கவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்திவரும் வேளையில், இந்த மாற்றங்கள் குறித்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம், உள்ளடக்கத்தைத் தடை செய்வதற்கான கால அளவை 24–36 மணிநேரத்திலிருந்து 2–3 மணிநேரமாகக் குறைக்கும் வகையில், அரசாங்கம் சட்டத்தைத் திருத்தியது.


Original Link: Social Media at a Crossroads: Benefits, risks, and regulation 


Share:

நாடாளுமன்றத்தில் ஒதுக்கீட்டு மசோதாவிற்காகப் பின்பற்றப்படும் நடைமுறை என்ன? - பிரியா குமாரி சுக்லா

மக்களவையில் புதன்கிழமை அன்று, 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள், எவ்வித விவாதமும் இன்றி 'கில்லட்டின்' (Guillotine) நடைமுறையைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டன. இதன் மூலம் 53 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, ரயில்வே மற்றும் விவசாய அமைச்சகங்களுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து மட்டும் அவையில் விவாதம் நடைபெற்றது.


முக்கிய அம்சங்கள்:


• நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்ட ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill (2), 2026) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, 2026–27-ஆம் நிதியாண்டிற்கான செலவினங்களுக்காக இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து குறிப்பிட்டத் தொகையை எடுத்துப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது.


• பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price (MSP)) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவை நடவடிக்கைகளின்போது எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசு, சில மாநிலங்கள் ஒன்றிய அரசின் திட்டங்களுக்குப் பிரதமரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாலேயே அவற்றைச் செயல்படுத்த  மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• அரசியலமைப்பின் விதி 113-ன்படி (Article 113), இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் மக்களவையில் "மானியக் கோரிக்கைகளாக" (Demands for Grants) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் காரணமாக, ஒவ்வொரு அமைச்சகமும் அடுத்த நிதியாண்டிற்கான தங்களது மானியக் கோரிக்கைகளைத் தயார் செய்வதாகவும் இந்த அனைத்துக் கோரிக்கைகளும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, ஒன்றிய நிதிநிலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 


• மானியக் கோரிக்கைகள் என்பது 'கட்டாயச் செலவினம்' (Charged expenditure) மற்றும் 'வாக்கெடுப்பிற்குரிய செலவினம்' (Voted expenditure) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாயாகும். இதில், கட்டாயச் செலவினம் (Charged Expenditure) என்பது வட்டி செலுத்துதல் போன்ற அரசாங்கத்தின் கட்டாயச் செலவுகளைக் குறிக்கிறது. இதற்கு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


• இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 113(iii)-ன்படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் முன்அனுமதியின்றி மக்களவையில் எந்தவொரு மானியக் கோரிக்கையையும் தாக்கல் செய்ய முடியாது என்றும் அதேபோல், விதிகள் 117 மற்றும் 274-ன்கீழ், மக்களவையில் ஒரு பண மசோதாவை (Money Bill) அறிமுகப்படுத்துவதற்குக் குடியரசுத் தலைவரின் பரிந்துரை அவசியம் என்றும் கூறப்படுகிறது. ஒன்றிய நிதிநிலைத் திட்டத்துடன் தாக்கல் செய்யப்படும் நிதி மசோதாவிலும் (Finance Bill), குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். 


• இந்திய அரசியலமைப்பின்படி, சட்டப்பூர்வமான அனுமதியின்றி இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து எந்த நிதியையும் பயன்படுத்த முடியாது என்கின்றனர்.  எனவே, தேவையான அனைத்துச் செலவுகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை இந்தத் தொகுப்பு நிதியத்திலிருந்து பயன்படுத்த அனுமதி பெறுவதற்காக, ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது:


—மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட மானியக் கோரிக்கைகள்.


—இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து நேரடியாகச் செலுத்தப்பட வேண்டிய கட்டாயச் செலவுகள்.


• ஒப்புதல் அளிக்கப்பட்ட எந்தவொரு மானியத்தின் தொகையை அல்லது நோக்கத்தை மாற்றும் வகையிலோ, அல்லது இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பயன்படுத்தப்படும் செலவினங்களை மாற்றும் வகையிலோ இருந்தால், ஒதுக்கீட்டு மசோதாவில் (Appropriation Bill) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தவொரு திருத்தத்தையும் செய்ய முடியாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


• குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill) ஒரு ஒதுக்கீட்டுச் சட்டமாக (Appropriation Act) மாறுகிறது. இந்தச் சட்டம் இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணம் செலுத்துவதற்கு அதிகாரம் அளிக்கிறது. அதாவது, இந்த மசோதா நிறைவேற்றப்படும் வரை அரசாங்கம் அந்த நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியாது என்கின்றனர். 


• சட்டமன்ற நடைமுறையில், "கில்லட்டின்" (Guillotine) என்பது நிதி சார்ந்த விவகாரங்களை ஒன்றாகத் தொகுத்து, விவாதமின்றி விரைவாக நிறைவேற்றுவதைக் குறிக்கிறது. இது நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடரின் போது மக்களவையில் பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறை ஆகும்.


Original Link: What is the Procedure Followed for the Appropriation Bill in Parliament?


Share:

புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர், எதிர்காலப் பாதையைத் திட்டமிடுதல். - ஜி.சி. மன்னா

தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) மாதிரி கட்டமைப்பைப் புதுப்பிப்பதும், ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) ஆய்வு முறையைச் மேம்படுத்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic Product (GSDP)) மதிப்பீடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும்  என்கின்றனர். 


2022–23 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர் பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), 2022–23, 2023–24 மற்றும் 2024–25 ஆண்டுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய தரவுகளுடன் கூடிய செய்திக்குறிப்பை வெளியிட்டது. காலாவதியான 2011–12-ஆம் அடிப்படை ஆண்டிற்குப் பதிலாக இந்த புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டதன் மூலம், இந்தியாவின் பொருளாதாரத்தை மிகவும் துல்லியமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நீண்டகாலத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


புதிய புள்ளிவிவர வரிசையின்படி, இந்தியாவின் நடப்பு விலையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)), 2022–23-ஆம் ஆண்டில் ₹261.18 லட்சம் கோடியாகவும், 2023–24-ஆம் ஆண்டில் ₹289.84 லட்சம் கோடியாகவும், 2024–25-ஆம் ஆண்டில் (முதல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி) ₹318.07 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய புள்ளிவிவரங்கள் பழைய கணக்கீட்டு முறையைவிடச் சற்று குறைவாக (3–4%) உள்ளன. 2024–25-ஆம் ஆண்டிற்கான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) கணக்கீட்டில், முதன்மைத் துறை (விவசாயம்), இரண்டாம் நிலைத் துறை (தொழில்), மற்றும் மூன்றாம் நிலைத் துறை (சேவை) ஆகியவற்றின் பங்களிப்பு முறையே 21.4%, 25.8% மற்றும் 52.9%-ஆக உள்ளது. இதில் உற்பத்தித் துறையானது சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது 2023–24-ஆம் ஆண்டில் 12.7%-ஆகவும், 2024–25-ஆம் ஆண்டில் 9.3%-ஆகவும் உள்ளது. செலவின அடிப்படையில் பார்த்தால், தனிநபர் நுகர்வுச் செலவானது (Private Final Consumption Expenditure) நடப்பு மற்றும் நிலையான விலைகள் இரண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 56% பங்கைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 


புதிய தொடரில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மேம்பாடுகள்


புதிய தொடரில் பின்பற்றப்படும் முறையியலில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவதாக, நிதி சாரா தனியார் பெருநிறுவனத் துறையைச் சேர்ந்த பல தொழில்களைச் செய்யும் நிறுவனங்களின் செயல்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நிறுவனத்தின் மொத்த கூடுதல் மதிப்பு (Gross Value Added (GVA)), அந்நிறுவனம் சமர்ப்பிக்கும் (Management 7/7A) தரவுகளில் உள்ள வருவாய் பங்கீட்டுத் தகவலின் அடிப்படையில் அந்தந்த வணிகச் செயல்பாடுகளுக்குப் பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், 2011-12-ஆம் ஆண்டு தொடரில் மொத்த மொத்தக் கூடுதல் மதிப்பும் அந்த நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டாவதாக, வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யாத நிறுவனங்களின் பங்களிப்பைக் கணக்கிட, செலுத்தப்பட்ட மூலதனத்தின் (Paid-up Capital) அடிப்படையில் தொழில் மற்றும் நிறுவனத்தின் அளவிற்கேற்ப தனித்தனியான ‘Blown up factor’ பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக, நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (Ministry of Corporate Affairs (MCA)) தரவுகளைப் பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மைகள் (Limited Liability Partnerships (LLPs)) முழுமையாகக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நான்காவதாக, குடும்பத் துறையின் (Household Sector) GVA பங்களிப்பைக் கணக்கிட, ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASUSE) வழங்கும் ஒரு தொழிலாளருக்கான சராசரி கூடுதல் மதிப்பு (GVAPW) தரவுகளும், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) வழங்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது குறித்துக் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2011-12-ஆம் ஆண்டு தொடரில், அடிப்படை ஆண்டின் மொத்த கூடுதல் மதிப்பீடுகள் பொருத்தமான குறியீடுகளைக் கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளுக்குக் கணிக்கப்பட்டன.  ஆனால், தற்போது துல்லியமான வருடாந்திர தரவுகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


புதிய தொடரானது, 'இரட்டைப் பணவீக்கக் குறைப்பு' (Double Deflation (DD)) மற்றும் 'அளவு மதிப்பீடு' (Volume Extrapolation (VE)) முறைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலம், உண்மையான மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added (GVA)) மதிப்பீட்டை மேம்படுத்துகிறது. இது சர்வதேச வழிகாட்டுதல்களுடன் மிக நெருக்கமாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், இது 2022–23-ஆம் ஆண்டிற்கான தனிநபர் இறுதிக் நுகர்வுச் செலவினத்தை (Private Final Consumption Expenditure (PFCE)), குறிப்பாக வருமான மாற்றங்களால் பெரிய பாதிப்பு அடையாத அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களுக்காக, குடும்ப நுகர்வுச் செலவின ஆய்விலிருந்து (Household Consumption Expenditure Survey (HCES 2022–23) பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு நேரடியாகக் கணக்கிடப்படுகிறது.


எதிர்வரும் சவால்கள்


பொது அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகளிலும் 'மொத்த மதிப்பு கூடுதல்' (GVA) தனித்தனியாகக் கணக்கிடப்பட்டு பின் ஒன்றிணைக்கப்படுகிறது. இதில் முதல் இரண்டு துறைகளுக்கான தரவுகள் மிகவும் துல்லியமாக உள்ளன. இருப்பினும், தனியார் நிறுவனத் துறையில், குறிப்பாக நிதிசாரா தனியார் நிறுவனங்களின் மொத்த கூட்டு மதிப்பானது பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் (MCA) தரவுத்தளத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இந்த நிறுவனங்களின் தரவுகள் தேசிய அளவில் மட்டுமே கிடைப்பதால், அந்த மொத்த மதிப்பை மாநில வாரியாகப் பிரித்து 'மாநில மொத்த மதிப்பு கூடுதலாகக் கணக்கிடுவது ஒரு முக்கியமான சவாலாக உள்ளது.


2011–12-ஆம் ஆண்டு தொடரில், தேசிய அளவிலான மொத்த உற்பத்தி மதிப்புக்கூட்டல் (Gross Value Added (GVA)), மாநிலங்களுக்கு இடையே தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (Annual Survey of Industries (ASI)) தரவுகளின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்பட்டது. புதிய தொடரில், இந்த நோக்கத்திற்காக தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASI) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) ஆகிய இரண்டு தரவுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) தரவுகளில் போதிய தகவல்கள் முழுமையாக இல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது. உதாரணமாக, 2011–12-ஆம் ஆண்டில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் (MCA) தரவுத்தளத்தில் 1,35,802 உற்பத்தி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன, ஆனால், தொழில் நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASI) வெறும் 67,649 தொழிற்சாலைகளை மட்டுமே உள்ளடக்கியிருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.  இத்தகைய குறைவான தரவுகளால், தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (ASI) அடிப்படையில் கணக்கிடப்படும் மாநிலங்களின் மொத்த கூட்டு மதிப்பு பங்குகள் உண்மையான நிலையை வெளிப்படுத்தாமல் போகலாம் என்கின்றனர். இது மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) மதிப்பீடுகளையும் பாதிக்கக்கூடும் என்கின்றனர். இதைச் சரிசெய்ய, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் (MCA) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி  தரவுகளைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் முறையை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதே நேரத்தில், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்வது, மொத்த கூடுதல் மதிப்பில் மாநிலங்களின் பங்கினை இன்னும் துல்லியமாக மதிப்பீடு செய்ய உதவும் என்றும் கூறப்படுகிறது. 


மாறுபாடுகளைகச்  சரிசெய்தல்


வீட்டு உபயோகப் பொருட்கள் துறை தொடர்பாக, புதிய தொடரின்கீழ் அதன் மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added (GVA)) என்பது, முறைசாராத் துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) வழங்கும் ஒரு தொழிலாளியின் சராசரி மொத்த மதிப்பு கூடுதலை (GVAPW), காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) அடிப்படையிலான தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு பெருக்குவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இதற்கு, இந்த இரண்டு கணக்கெடுப்புகளிலிருந்தும் கிடைக்கும் தரவுகள் மிகவும் நம்பகமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும், நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பின் (ASUSE) முடிவுகள் சில தொழில்துறைகள் மற்றும் மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு ஒருவித நிலையற்றத் தன்மையைக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, முறைசாராத் துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அறிக்கையின்படி, இந்தியாவின் "ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு" (இது மொத்த உள்நாட்டு உற்பத்திக் கணக்கீட்டில் ஒரு தனிப் பிரிவாகும்) துறைக்கான ஒரு தொழிலாளியின் சராசரி மொத்த மதிப்பு கூடுதல் (Gross Value Added Per Worker (GVAPW)) மதிப்பீடுகள் (கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்கள், மற்றும் வீட்டு அமைப்புகள் மற்றும் பகுதி-நிறுவன அமைப்புகள் உட்பட) 2021–22-ஆம் நிதியாண்டில் ₹1,63,078-ஆகவும், 2022–23-ஆம் ஆண்டில் ₹2,55,447-ஆகவும், மற்றும் 2023–24-ஆம் ஆண்டில்  ₹2,01,930-ஆகவும் இருந்தன.


அதேபோல், பீகாரின் உற்பத்தித் துறையின் வருடாந்திர மொத்த கூடுதல் மதிப்பு (GVAPW) மதிப்பீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் முறையே ₹89,638, ₹117,021 மற்றும் ₹100,101-ஆக இருந்தன. இத்தகைய ஏற்ற இறக்கங்களைச் சரிசெய்ய, அடிப்படை ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகால நகரும் சராசரியை (Moving Average) பயன்படுத்துமாறு புதிய தரவுத் தொடர் பரிந்துரைக்கிறது. இருப்பினும், முறைசாரா துறை நிறுவனங்களின் வருடாந்திர ஆய்வு (ASUSE) முறையில், காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) முறையைப் பின்பற்றி, அடுத்தடுத்த ஆண்டுகளின் மாதிரிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மேலோட்டமான ஒற்றுமையுடன் கூடிய ஒரு சுழற்சி குழு வடிவமைப்பை பயன்படுத்துவது அதிக நிலையான மதிப்பீடுகளை உருவாக்குமா என்பதை ஆராய்வதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


இறுதியாக, தொழில் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) மாதிரி கட்டமைப்பைப் புதுப்பிப்பதும், ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திரக் கணக்கெடுப்பு (ASUSE) முறையைச் மேம்படுத்துவதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி  (GDP) மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பீடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க உதவும்  என்கின்றனர். 


ஜி.சி. மன்னா அவர்கள் மனித மேம்பாட்டு நிறுவனத்தில் (IHD) பேராசிரியராகவும், பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கூட்டமைப்பில் (NCAER) மூத்த ஆலோசகராகவும், மற்றும் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.


Original Link: New GDP series, charting the path ahead 


Share:

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வரி நிர்வாகமும் அதன் சவால்களும் -ஸ்தானு ஆர் நாயர், ரஞ்சித் குண்டபோய்னா

இந்தியாவின் வரி நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு சிறந்த விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.


இந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் முக்கிய வரி கொள்கை சார்ந்த பிரச்சினை, குறைந்த 'வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி' (Gross Domestic Product (GDP)) விகிதமும், அதிக அளவிலான வரி ஏய்ப்பும் ஆகும். சராசரியாக, 2001 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (16.36%) வளர்ந்துவரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளிலேயே  குறைவாக இருந்தது. வரி ஏய்ப்பின் காரணமாக, இந்தியா ஆண்டுதோறும் தனது வரி வருவாயில் 4.3 சதவீதத்தை இழக்கிறது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற 'இந்தியா செயற்கை நுண்ணறிவு தாக்க (AI Impact Summit) உச்சிமாநாட்டில்', நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலைப் பயன்படுத்துவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை, உலகத் தலைவர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் வெகுவாகப் பாராட்டினர்.


செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதில் ஆய்வு செய்யவேண்டிய முக்கியமான ஒரு பிரச்சினை வரி வருவாய் திரட்டலும் (tax revenue mobilisation) மற்றும் வரி நிர்வாகமும் (tax governance) ஆகும். இந்தச் சூழலில், வரி நிர்வாகத்தையும் வருவாய் திரட்டலையும் வலுப்படுத்துவதற்காகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வைப் பயன்படுத்தும்,  இந்திய வருமான வரித் துறையின் 'நுண்ணறிவு திட்ட' (PI) முயற்சியை,  ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.


நன்மைகள்


2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2019-ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த நுண்ணறிவு திட்ட முயற்சி (PI), தன்னார்வமான வரி கட்டுப்பாட்டை (voluntary tax compliance) ஊக்குவிப்பதையும், அதிக அபாயம் உள்ள வரி ஏய்ப்பு வழக்குகளைக் குறைப்பதையும், வரி அமலாக்கத்தை நியாயமாகவும் சமமாகவும் மாற்றுவதையும் மற்றும் வரி அமலாக்கத்தில் உள்ள பாரபட்சத்தைக் குறைப்பதையும் இந்த செயல்திறன் குறிகாட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த நுண்ணறிவு திட்ட முயற்சிக்கு மூன்று கூறுகள் உள்ளன. வருமான வரி பரிவர்த்தனை பகுப்பாய்வு மையம் (Income Tax Transaction Analysis Centre (INTRAC)) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்தும் பகுப்பாய்வு மையமாகும். இது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், சொத்து மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகள், கடன் அட்டை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணங்கள், மேலும் அதிக மதிப்புள்ள கொள்முதல்கள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து நிதி தரவுகளை சேகரித்து அதனை செயல்படுத்துகிறது. இந்த தகவல்களை வைத்து, ஒரு வரி செலுத்துபவரின் முழுமையான நிதி சுயவிவரத்தை உருவாக்குகிறது.


இத்தகைய தகவல்கள், வரி செலுத்துவோர் தெரிவித்த வருமானத்திற்கும் அவர்களின் உண்மையான நிதிச் செயல்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளைக் கண்டறிய வருமான வரித் துறைக்கு உதவுகின்றன. இணக்க மேலாண்மை மையப்படுத்தப்பட்ட செயலாக்க (Compliance Management Centralized Processing Centre) மையம், INTRAC-லிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நடத்தை சார்ந்த இணக்கத்தை உறுதி செய்கிறது. தவறான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்த வரி செலுத்துவோரை, அவர்களின் உண்மையான பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பொருந்தும் வரிகளைச் செலுத்துமாறு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் நினைவூட்டல்களை அனுப்பும் 'வழிகாட்டவும் செயல்படுத்தவும் தரவின் ஊடுருவாத பயன்பாடு' (Non-intrusive Usage of Data to Guide and Enable (NUDGE)) என்ற முறையை பயன்படுத்துகிறது. இந்த முறையில், அந்த நபரின் உண்மையான பொருளாதார செயல்பாடுகளுக்கு ஏற்ப வரி செலுத்தும்படி குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் நினைவூட்டல்கள் அனுப்பப்படுகின்றன. இதற்குப் பிறகு, வரி செலுத்துபவர்கள் தங்கள் அறிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யலாம் அல்லது முன்பு தாக்கல் செய்ததை அப்படியே வைத்துக்கொள்ளலாம். வரி நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, இது வரி செலுத்துவோரின் விவரங்களைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கும், வரி ஏய்ப்பைக் கண்டறிவதற்கு வரி முகமைகளுக்கு உதவுகிறது. இரண்டாவதாக, வரி ஏய்ப்பின் அளவு மற்றும் நுட்பத்தின் அடிப்படையில் வரி ஏய்ப்பு வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க இது வரி நிர்வாகிகளுக்கு உதவுகிறது. மூன்றாவதாக, வழக்கமான நிர்வாகப் பணிகளை தானியங்கியாக (automate) செய்து, அதிகாரிகள் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய பணிகளில் கவனம் செலுத்த உதவுகிறது. நான்காவதாக, வரி செலுத்துவோருக்குச் சரியான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய உதவுதல், திறன்மிகு உரையாடல் செயலிகள் (smart chatbots) மூலம் கேள்விகளுக்குப் பதிலளித்தல் மற்றும் வரி மோசடிகளைத் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவால் வரி செலுத்துவோர் சேவைகளை மேம்படுத்த முடியும்.


'நுண்ணறிவு திட்ட' (PI) முயற்சியின் விளைவு


நுண்ணறிவு திட்ட முயற்சி அதன் பலன்களைக் காட்டத் தொடங்கியுள்ளது. நினைவூட்டல்களைப் பெற்றபிறகு, பல வரி செலுத்துவோர் வருமான வரித் துறையின் (ITD) புதுப்பிக்கப்பட்ட-தாக்கல்  தகவலின் மூலம் தங்களின் உண்மையான வரிக் கணக்குகளில் தாங்களாகவே மாற்றங்களைச் செய்துள்ளனர். 2020-21 முதல், ஒரு கோடிக்கும் அதிகமான திருத்தப்பட்ட வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாகக் கூடுதலாக ரூ.11,000 கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது. வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்த இலக்கு வைக்கப்பட்ட  (NUDGE) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வருமான வரித் துறையால் (ITD) தொடர்பு கொள்ளப்பட்ட 19,501 வரி செலுத்துவோரில், 62% பேர் தங்களின் உண்மையான வரிக் கணக்குகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களைத் திருத்தியுள்ளனர். மேலும், 30,161 வரி தாக்கல் செய்பவர்கள், மொத்தம் ரூ.29,208 கோடி மதிப்புள்ள வெளிநாட்டுச் சொத்துக்களையும், கிரிப்டோகரன்சிகள் அல்லது மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களிலிருந்து ரூ.1,089 கோடி வெளிநாட்டு வருமானத்தையும் அறிவித்துள்ளனர்.


6.25 லட்சம் வரி செலுத்துவோரை உள்ளடக்கிய (NUDGE) பிரச்சாரத்தின் விளைவாக, அரசியல் நன்கொடைகளுக்காகக் வழங்கப்பட்ட தவறான கோரிக்கைகள் ரூ.963 கோடி அளவுக்கு திருத்தப்பட்டன. மேலும், ரூ.410 கோடி அளவுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது. வரித் திரும்பப் பெறுதலைச் (tax refund) செயல்படுத்த ஆகும் சராசரி நேரம் 93 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைந்துள்ளது. சமீபத்தில், பெருந்தரவுப் பகுப்பாய்வு (big data analysis) மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள், ரொக்க ரசீதுகளைத் தேர்ந்தெடுத்து நீக்குதல், ரசீதுக்குப் பிந்தைய மாற்றங்கள், விற்பனைத் தரவுகளை அழித்தல் மற்றும் ரசீது மதிப்பைத் திரித்தல் போன்ற நுட்பமான முறைகளைப் பயன்படுத்தி 2019-20 முதல் ரூ.70,000 கோடி விற்பனை வருவாயை மறைத்திருப்பதை வருமான வரித் துறை கண்டறிந்துள்ளது.


ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற பல முன்னேறிய நாடுகள், நுண்ணறிவு திட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தளங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, கூடுதல் வருவாயை பெற்றன.

கவலைகளும் அபாயங்களும்


இந்தியா நெறிமுறை சார்ந்த வரி நிர்வாகத்திற்கு மாறுவதால், பல செயல்பாட்டு, நெறிமுறை மற்றும் சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும்.


முதலாவது, தரவு மூலம் (data provenance) மற்றும் தரம் (quality) பற்றியது. PI போன்ற AI அமைப்புகள், அவை பயிற்சி பெறும் தரவின் தரத்தைப் போலவே மட்டுமே நல்லதாக இருக்கும். அவை வழக்கத்திற்கு மாறானவற்றை (outliers) கண்டறிய முடியும், ஆனால் தவிர்ப்பு (evasion) மற்றும் நியாயமான சிக்கலான தன்மை (legitimate complexity) ஆகியவற்றை எப்போதும் வேறுபடுத்த முடியாது. மாறுபாடுள்ள வருமானம் உள்ள தொழில்முறை நிபுணர்களின் முந்தைய சேமிப்புகளைப் பயன்படுத்துதல், எழுத்துப் பிழைகள் (clerical errors), அல்லது கூட்டுக் குடும்ப நிதி அமைப்புகள் (joint family financial structures) குறித்த தரவுகள் தவறான நேர்மறைகளை (false positives) தூண்டலாம். எளிதில் அணுகக்கூடிய மனித மறுஆய்வு (human review) இல்லாத நிலையில், குறியிடப்பட்ட வடிவங்களின் (flagged patterns) சட்டபூர்வத்தன்மையை வரி செலுத்துபவர்கள் (taxpayers) நிரூபிக்க வேண்டியிருக்கும்.


இரண்டாவது, நெறிமுறை சார்புநிலையைப் (algorithmic bias) பற்றியது. வரலாற்று அமலாக்கத் தரவுகளில் பயிற்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், தற்செயலாக ஏற்கனவே உள்ள சமூக-பொருளாதாரஅடிப்படையிலான பாகுபாடுகளை மீண்டும் உருவாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சில பகுதிகளில் அல்லது சில குழுக்களில் அதிகமாக வரி ஏய்ப்பு இருப்பதாக தவறாக அடையாளம் காணப்படலாம். இதற்கு டச்சு குழந்தை பராமரிப்பு நல ஊழல் (Dutch childcare benefits scandal) ஒரு உதாரணமாகும்.


மூன்றாவது, விளக்கக்கூடிய தன்மை மற்றும் உரிய செயல்முறை தொடர்பான பிரச்சினையாகும். ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வரி இணக்க அமைப்பு சட்டப்பூர்வமானதாக இருக்க, வரி செலுத்துவோர் தாங்கள் ஏன் அடையாளம் காணப்பட்டனர், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அந்த அமைப்பு எவ்வாறு தனது முடிவுகளை எடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், முடிவுகளை எதிர்த்துப் போராட ஒரு தெளிவான, எளிதான வழியும் இருக்க வேண்டும். வரி செலுத்துவோருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு முடிவிற்கும், மனிதத் தலையீடுடன் கூடிய மதிப்பீடு  கட்டாயமானதாக இருக்க வேண்டும்.


நான்காவது, தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் பற்றியது. வரி செலுத்துபவர்களின் நுணுக்கமான நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவது, அவை தவறாக பயன்படுத்தப்படக்கூடிய பெரிய அபாயத்தை (attack surface) உருவாக்குகிறது.


இறுதியாக, இந்தியாவில் எதிர்க்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்ய ஒரு செயற்கை நுண்ணறிவு குறைதீர்ப்பாளர், நிரல்நெறிமுறை தாக்க மதிப்பீடுகளுக்கான தேவை, தவறான நேர்மறை மற்றும் மேல்முறையீட்டு வெற்றி விகிதங்கள் குறித்த பொது அறிக்கை மற்றும் இடர் மதிப்பெண் மாதிரிகளின் வெளிப்புற ஆய்வுகள் போன்றவற்றின் தேவை உள்ளது.


மேற்கண்ட வலுவான செயற்கை நுண்ணறிவு நிர்வாகக் கட்டுப்பாடுகள் இல்லையெனில், நுண்ணறிவு திட்ட முயற்சி (Project Insight (PI)) ஒரு மறைமுக கண்காணிப்பு அமைப்பாக மாறி, பொறுப்புணர்வையும் வரி அமைப்பின் கட்டுப்பாட்டையும் பாதிக்கக்கூடும். இதனால், வரி செலுத்துபவர்கள் நம்பிக்கையை இழந்து எதிர்ப்பு காட்டக்கூடும். எனவே, இந்தியா ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஒழுக்கத்தையும் (ethical) செயல்திறனையும் (effective) இணைக்கும் ஒரு நவீன வரி நுண்ணறிவு (modern tax intelligence system) அமைப்பை உருவாக்க வேண்டும்.


ஸ்தானு ஆர். நாயர், கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (Indian Institute of Management (IIM)) பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கை ஆசிரியர் ஆவார். ரஞ்சித் குண்டபோய்னா, நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளில் பணியாற்றி வருகிறார். இவர் பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி, கடன் தொகுப்புகள் மற்றும் இடர் மதிப்பீட்டை நிர்வகித்துள்ளார்.


Original Link: AI-powered tax governance in India and its challenges 


Share: