நகர்ப்புற பொது சுகாதார நெருக்கடிகளில், பெரும்பாலான மக்கள் மருத்துவமனைகளின் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் உண்மையான பிரச்சனை பொதுவாக கண்ணுக்குத் தெரியாத, ஆனால் விவாதிக்கக்கூடிய வகையில் அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை, அன்றாட நகர்ப்புற அமைப்புகளில் ஏற்படும் தோல்விகளே ஆகும்.
மத்திய அமைச்சரவை சமீபத்தில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான நகர்ப்புற சவால் நிதியை (Urban Challenge Fund(UCF)) தொடங்க ஒப்புதல் அளித்தது. இதற்கு மத்திய அரசு ரூ. 1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கும். மேலும், மொத்த செலவில் குறைந்தபட்சம் 50 சதவீதம் சந்தையிலிருந்து திரட்டப்படும். பொருளாதார வழித்தடங்கள், நகர்ப்புற போக்குவரத்து, காலநிலை மீள்திறன், பேரிடர் மேலாண்மை, மற்றும் நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் "சவால் அடிப்படையிலான கட்டமைப்பு" (challenge-based framework) மூலம் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இதில் போட்டி அடிப்படையிலான திட்டத் தேர்வு, சந்தை நிதி மற்றும் தனியார் பங்கேற்பு ஆகியவற்றிற்கு நகர்ப்புற சவால் நிதி (UCF) அளிக்கும் முக்கியத்துவம், பங்கு மூலதனம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவின் நகரமயமாக்கலானது, மும்பை அல்லது டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் பெருமளவில் குடிபெயர்வதால் ஏற்படுவதில்லை, மாறாக அவற்றின் புறநகர்ப் பகுதிகளான குருகிராம், நொய்டா, நவி மும்பை மற்றும் பல சிறிய குடியிருப்புகளுக்கு மக்கள் குடிபெயர்வதால் ஏற்படுகிறது. குறிப்பாக, கிராமங்கள் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை மையங்களாக மாற்றப்படுவதால் நிலப் பயன்பாடு (Land use) வேகமாக மாறிவருகிறது. அதேநேரத்தில் போக்குவரத்து, குடிநீர், வடிகால் மற்றும் திடக்கழிவு, திரவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுதல் தொடர்பான சேவைகள் போதுமானதாகவோ அல்லது பகுதியளவாகவோ உள்ளன. வளர்ச்சியை நிர்வகிக்க நிறுவனங்கள் முழுமையாகத் தயாராக இல்லாமல், இடம்சார்ந்த விரிவாக்கம் செய்வது இந்தியாவின் நகரமயமாக்கலின் ஒரு முக்கிய அம்சமாகும். பிரிக்ஸ் (BRICS) மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) நாடுகளில் 5 முதல் 8 சதவீதம் வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULB) இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்தை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. பெருந்திட்டம் (Master plans) என்பது செயல்படுத்தக்கூடிய வளர்ச்சி கட்டமைப்புகளாக இல்லாமல், பெரும்பாலும் அடையாளப்பூர்வமான செயல்களாகவே உள்ளன. குடிசைப் பகுதிகளும் (Slums), குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளும் (low-income settlements) "செறிவூட்டப்பட்ட பின்தங்கிய நிலையின்" இடங்களாக மாறுகின்றன. மேலும், மறுவளர்ச்சித் திட்டங்கள் பெரும்பாலும் கண்ணியம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பைக் காட்டிலும் பொறியியலுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.
இந்த பலவீனங்களின் காரணமாக, இந்தியாவின் நகரங்களும் மாநகரங்களும் ஒரேநேரத்தில் மூன்று பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. மோசமடைந்து வரும் பொது சுகாதாரம், அதிகரித்து வரும் காலநிலை பாதிப்பு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் இடம்பெயர்வு போன்றவை ஆகும். ஐந்து ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.6 டிரில்லியன் ஒதுக்கீடு செய்ய நிதி ஆணையம் எடுத்த முடிவு, நகரங்கள் வெறும் திட்டங்களைச் செயல்படுத்தும் இடங்களாக மட்டும் இல்லாமல், நிர்வாகத்தின் முக்கிய அலகுகளாக அங்கீகரிக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம், நிதியின் அளவைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, பொது சுகாதாரம், காலநிலைத் தழுவல் அல்லது இடம்பெயர்வு மேலாண்மை ஆகிய துறைகளில் நகர்ப்புற நிதி எதைச் சாத்தியமாக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது என்பதில்தான் உள்ளது.
நகர்ப்புற பொது சுகாதார நெருக்கடிகள் பெரும்பாலும் மருத்துவமனைப் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை என்ற அடிப்படையில் மட்டுமே விளக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டம் மிகவும் குறுகியது. ஆனால், அடிப்படை நகர்ப்புற அமைப்புகளில் ஏற்படும் குறைபாடுகளால் பல கடுமையான பிரச்சனைகள் உருவாகின்றன. சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, வடிகால், நீர் வழங்கல் அல்லது காற்றின் தரம் ஆகியவை இதில் அடங்கும். நகர்ப்புற நிர்வாகத்தையும் நீர்-சுகாதார மேலாண்மையையும் வலுப்படுத்துவது ஒரு சுற்றுச்சூழல் கட்டாயம் மட்டுமல்ல, மருந்து-எதிர்ப்புத் நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு எதிரான ஒரு முக்கியப் பாதுகாப்பாகவும் இது விளங்குகிறது. மானியங்களின் பெரும் பகுதியை சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் நீர் சேவைகளுடன் இணைப்பதன் மூலம், ஆணையம் ஒரு முக்கிய உண்மையை ஏற்றுக்கொள்கிறது. பொது சுகாதார விளைவுகள் மருத்துவப் பராமரிப்பைப் போலவே நகராட்சி சேவைகளாலும் வடிவமைக்கப்படுகின்றன. நகர்ப்புற மானியங்களின் கட்டுப்பாடற்ற பகுதி சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. இது குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்புகளை வெள்ளபெருக்குப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது, முறைசாராக் கழிவு அமைப்புகளை மேம்படுத்துவது அல்லது கடைசி மைல் வரை நீர் கிடைப்பதை மேம்படுத்துவது போன்ற உள்ளூர் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு பதிலளிக்க உள்ளாட்சி அமைப்புகளை (ULB) அனுமதிக்கிறது.
வெப்ப அலைகள், நகர்ப்புற வெள்ளம், நீர்ப் பற்றாக்குறை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை நகர்ப்புறங்களை மையமாகக் கொண்ட அபாயங்களாகும். இருப்பினும்கூட, காலநிலைத் தழுவல் என்பது முதன்மையாக ஒரு தேசிய அல்லது மாநில அளவிலான கொள்கைத் துறையாகவே தொடர்கிறது. இதனால், நகரங்கள் குறைந்த நிதிச் சுயாட்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULB) வழங்கப்படும் சீரான மற்றும் நெகிழ்வான நிதிப் பரிமாற்றங்கள் இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய உதவும். இடம்பெயர்வு நகரங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. கோவிட் பெருந்தொற்று, இந்த நகர்ப்புற சமூக ஒப்பந்தத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (ULB) வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, முறைசாரா குடியிருப்புப் பகுதிகளே முதலில் பாதிக்கப்படுகின்றன.
இருப்பினும், பலவீனமான நிறுவனக் கட்டமைப்பை நிதியால் மட்டும் ஈடுசெய்ய முடியாது. பெரும்பாலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பணியாளர்கள், திட்டமிடுதல் மற்றும் வருவாய் வழிமுறைகள் மீதான வரையறுக்கப்பட்ட தன்னாட்சியுடன், நிர்வாக வரம்புகளை எதிர்கொள்கின்றன. இது சீர்திருத்தத்தின் அடுத்தநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிதிப் பகிர்வுடன், செயல்பாட்டு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வும் இணைக்கப்பட வேண்டும். நிதி ஆணையம் இந்தத் துறையில் 455 சதவிகித அதிகரிப்பைப் பரிந்துரைத்தது மட்டுமல்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிபந்தனையற்ற மானியங்கள் மற்றும் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் பணத்தைச் செலவிட அனுமதிக்கின்றன. இது, பல்வேறு நகர்ப்புற முகமைகளிடையே ஒருங்கிணைப்பை அடைவதில் ஒரு முன்மாதிரியான மாற்றத்தை அவசியமாக்குகிறது.
தாஸ்குப்தா, ஜே.என்.யு-வின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தில் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். வாலியா, ஐ.சி.எம்.ஆரில் விஞ்ஞானி ஜி மற்றும் விளக்க ஆராய்ச்சிப் பிரிவின் தலைவராக உள்ளார். Original Link: For public-health reform, fix urban governance.