கட்டாய வாக்களிப்பு முறையை அமல்படுத்தாமல், வாக்காளர்களின் பங்கேற்பை எவ்வாறு அதிகரிக்க முடியும்?
ஏப்ரல்-மே 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான மற்றொரு வழக்கின் விசாரணையின்போது, கட்டாய வாக்குப்பதிவு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை என்றால் என்ன?
ஒவ்வொரு குடிமகனுக்கும் பாகுபாடின்றி வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பின் பிரிவு-326 வழங்குகிறது. 18-வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, அரசியலமைப்பு அல்லது எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்படாத எந்தவொரு குடிமகனும், வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்தச் சட்டப்பிரிவு குறிப்பிடுகிறது.
1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 19-ன்படி, ஒரு குடிமகன் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் 18-வயது பூர்த்தியடைந்தவராகவும், அந்தத் தொகுதியில் சாதாரண வசிப்பிடத்தைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு-62, ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. பல வழக்குகளில், உச்சநீதிமன்றம் வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு 'சட்டப்பூர்வ உரிமை' என்று தீர்ப்பளித்துள்ளது.
வாக்களிப்பதை ஏன் கட்டாயமாக்க வேண்டும்?
ஒரு நாட்டில் மக்களாட்சி சிறப்பாகச் செயல்படுவதற்கு வாக்கு அளிப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால், இந்தியாவில் இது ஒரு அடிப்படை கடமையோ அல்லது சட்டரீதியான கட்டாயமோ அல்ல என்கின்றனர். மேலும், கட்டாய வாக்குப்பதிவு குறித்த விவாதம் நம் நாட்டில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த தினேஷ் கோஸ்வாமி குழு (1990) (Dinesh Goswami Committee on electoral reforms (1990)), கட்டாய வாக்குப்பதிவை நடைமுறைப்படுத்துவது கடினம் என்பதால் அதனை ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலமாக வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்குமாறு அக்குழு பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்ட ஆணையம், தனது 255-வது அறிக்கையில் (2015), இது குறித்து விரிவாக ஆய்வு செய்தது. கட்டாய வாக்குப்பதிவு முறையானது வாக்காளர் வருகையை சுமார் 7% வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தது. இருப்பினும், இந்த அதிகரிப்பு என்பது முக்கியமாக வாக்களிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் எவ்வளவு கடுமையானவை மற்றும் அவை எவ்வளவு உறுதியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.
ஆஸ்திரேலியா மற்றும் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற சில ஜனநாயக நாடுகளில் கட்டாய வாக்குப்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், சரியான காரணமின்றி வாக்களிக்கத் தவறினால் மக்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்கின்றனர். பெரு (Peru) நாட்டில், வாக்களிக்காதவர்களுக்கு சில பொதுச் சேவைகள் மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பதோ அல்லது அரசு சேவைகளைப் பெறுவதைத் தடுப்பதோ மிகவும் கடுமையான நடவடிக்கைகளாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவில் சரியான பலனைத் தராமல் போகலாம் என்றும் அரசியலமைப்புரீதியாகப் பார்த்தால், கட்டாய வாக்களிப்பு என்பது பிரிவு 19(1)-ன் கீழ் (Article 19(1)) குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான 'கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை' மீறுவதாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
குறைந்த வாக்குப்பதிவு ஒரு தொகுதியில் உள்ள மொத்த வாக்குகளில் மிகக் குறைந்த சதவீதத்தைப் பெற்றிருந்தாலும் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்கின்றனர்.
இருப்பினும், இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கையில், இந்தியாவில் கட்டாய வாக்குப்பதிவு என்பது சாத்தியமானதல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக, வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைச் செலுத்தத் தூண்டும் வகையில், புதுமையான பிரச்சாரங்கள் மூலம் குறிப்பாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அவர்களிடையே வாக்களிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதே சிறந்த வழியாகத் தெரிவிக்கின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க, தேர்தல் நாளன்று அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையை முறையாக அமல்படுத்துவதுடன், சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற கூடுதல் போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருவது அவசியமாகிறது. மேலும், புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன், அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான தொலைதூர வாக்குப்பதிவு (Remote Voting) முறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
ரங்கராஜன் ஆர். அவர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். அவர் தற்போது 'Officers IAS Academy'-ல் பயிற்சி அளித்து வருகிறார்.
Original Link: Is compulsory voting feasible in the Indian context?