தற்போதைய செய்தி?
ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான செலவினங்கள் அதிகமாக இருந்ததாக எழுந்த கவலைகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை நுணுக்கமாக ஆய்வு செய்து, அவற்றை முறைப்படுத்தும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அறிந்துள்ளது. இச்சூழலில், மார்ச் 22-ஆம் தேதி கொண்டாடப்பட்ட 'உலக நீர் தின’த்தில், சமீபகாலமாகச் செய்திகளில் வரும் அரசின் மிக முதன்மை நீர் திட்டமான 'ஜல் ஜீவன் திட்டம்' குறித்து நாம் சற்று விரிவாக அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. ஆகஸ்ட் 15, 2019 அன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டம், ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயல்படும் நிலையில் உள்ள குழாய் இணைப்பின் மூலம், ஒரு நபருக்கு நாளொன்றுக்குக் குறைந்தது 55 லிட்டர் குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. ஜல் ஜீவன் திட்டத்தை (JJM) செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாக ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் செயல்படுகிறது. தொடக்கத்தில் 2024-க்குள் நிறைவுபெறத் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் திட்டத்திற்கான காலக்கெடு, தற்போது 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. 2025 ஏப்ரல் 21 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலில் வெளியிட்ட செய்தியில், முறைகேடுகள், ஊழல் மற்றும் பணித் தரம் குறைவாக இருப்பது குறித்து கவலைகள் எழுந்ததால், 2028-ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்திற்கு ரூ.2.79 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்ற ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்தது.
4. ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியது. சில மாதங்கள் கழித்து, 2025 மார்ச் 10 அன்று ஒன்றிய அமைச்சரவை, இந்த திட்டத்திற்கு 2028 வரை கூடுதலாக ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்தது. மேலும், “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக 'டிஜிட்டல் வரைபடமாக்கல்' (digital mapping) முறையும் இடம்பெற்றுள்ளது.
5. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, “நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat) எனப்படும் ஒரே மாதிரியான தேசிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படும். இது நீர் வழங்கல் அமைப்பை “மூல ஆதாரம் முதல் குழாய் வரை” (from source to tap) டிஜிட்டல் முறையில் வரைபடம் அமைக்க உதவும். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், கட்டமைப்பு சீர்திருத்தங்களை உறுதி செய்வதற்காக, மூன்று மாதங்களுக்குள் மாநிலங்களுடன் தனித்தனியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்.
7. "ஜல் ஜீவன் திட்டம் 2.0-ன் கீழ் ஒன்றிய நிதியை விடுவிப்பது, மாநிலங்கள்/மத்தியப் பிரதேசங்கள் நான்கு கட்டாய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவை: புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடுதல், அனைத்து கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களையும் முழுமையாக டிஜிட்டல் வரைபடத்தில் கொண்டுவர நீர்வள கிராம அடையாள எண்ணை (“Sujal Gaon ID) உருவாக்குதல், காலவரையறைக்குள் நிதி சரிசெய்தல் பணிகளை (financial reconciliation) மேற்கொள்ளுதல், மாநிலங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) கொள்கைகளை அறிவித்தல் போன்றவைகளாகும்.
8. மார்ச் 20-ஆம் தேதி வரை, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
9. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின்படி, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கிராமப்புற குடிநீர் அமைப்புகளின் ஆளுகை, நிறுவனத் திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 11 முக்கியக் கட்டமைப்பு சீர்திருத்தப் பகுதிகளைச் செயல்படுத்துவதை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளன.
10. இந்த சீர்திருத்தங்களில் பின்வரும் முக்கிய அம்சங்கள் அடங்கும்: அவை,
குடிநீர் நிர்வாகத்திற்கான நிறுவன அமைப்பு (institutional architecture),
கிராமப்புற குடிநீர் வழங்கலுக்கான சேவை பயன்பாட்டுக் கட்டமைப்பு (service utility framework),
தொழில்நுட்ப இணக்கம் மற்றும் திட்டங்களை திறமையாக செயல்படுத்துதல் (technical compliance & efficient implementation),
பொதுமக்களை நோக்கமாகக் கொண்ட நீர்தர நிர்வாகம் (citizen-centric water quality governance),
நீர் ஆதாரம் மற்றும் நீர் பாதுகாப்புக்கான நிலைத்தன்மை கட்டமைப்பு (source sustainability & water security),
கிராமப்புற குடிநீர் அமைப்புகளில் டிஜிட்டல் தரவு நிர்வாகம் (digital data governance),
மக்கள் பங்கேற்பு மூலம் நிர்வாகம் (participatory governance through Jan Bhagidari),
திறன் மேம்பாட்டு கட்டமைப்பு,
மனிதவள மற்றும் திறன் வளர்ச்சி சூழல்,
குடிநீர் வழங்கல் திட்டங்களின் செயல்பாட்டு மற்றும் நிதி நிலைத்தன்மை (operational & financial sustainability),
ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் அறிவுச் சூழலமைப்பு போன்றவைகளாகும்.
“நீர் வளம் மிக்க இந்தியா" (Sujalam Bharat)
1. புதிய டிஜிட்டல் கட்டமைப்பின்கீழ், ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்துவமான “நீர்வள கிராம அடையாள எண் / சேவைப் பகுதி அடையாள எண்” வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் மூலம், குடிநீர் வழங்கல் முழு அமைப்பு “வள ஆதாரம் முதல் குழாய் வரை” (source to tap) டிஜிட்டல் முறையில் முழுமையாக வரைபடமாக்கப்படும்.
2. "வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக", "திட்டங்களைத் தொடங்குவதிலும் மற்றும் முறையாக ஒப்படைப்பதிலும்" கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் ஈடுபடுத்தப்படும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
3. ஒரு கிராமப் பஞ்சாயத்து பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதாக சான்றளித்து, “ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்” (Har Ghar Jal’) என அறிவிப்பது, மாநில அரசு கிராமத்திற்குள் போதுமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு (O&M) அமைப்புகளை நிறுவியுள்ளதை உறுதிப்படுத்திய பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
நீர் தொடர்பான பிற திட்டங்கள்
ஜல் சக்தி அமைச்சகத்தின் பிற திட்டங்களில், 'கங்கைக்கு வணக்கம்' என்று பொருள்படுகிற ‘நமாமி கங்கை’ (Namami Gange) மற்றும் 'நதி இணைப்புத் திட்டங்கள்' ஆகியவை முக்கியமானவையாகும். எனவே, இந்தத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது மட்டுமல்லாமல், 'நதிகள் இணைப்பு' என்பது எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியமானதாகும். முன்னதாக கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் இணைப்பு தொடர்பான ஒரு கேள்வியும் கேட்கப்பட்டிருந்தது. பல்வேறு நதி இணைப்புத் திட்டங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமானதாகிறது.
நமாமி கங்கே திட்டம் (Namami Gange Programme)
1. “கங்கைக்கு வணக்கம்” (Namami Gange) என்பது ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டமாகும். தேசிய நதியான கங்கையில் ஏற்படும் மாசுபாட்டை வேகமாக குறைத்தல், நதியைப் பாதுகாத்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற இரண்டு நோக்கங்களை அடைவதற்காக, ஜூன் 2014-ல் ஒன்றிய அரசால் இந்த திட்டம் “பாதுகாப்பு மற்றும் முதன்மைத் திட்டமாக” (Flagship Programme) அங்கீகரிக்கப்பட்டது.
2. கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு, நதிக்கரை மேம்பாடு, நதியின் மேற்பரப்புச் சுத்தம் செய்தல், பல்லுயிர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, பொது விழிப்புணர்வு, தொழிற்சாலைக் கழிவுநீர் கண்காணிப்பு மற்றும் 'கங்கா கிராம்' (Ganga Gram) ஆகியவை நமாமி கங்கே திட்டத்தின் முக்கியத் தூண்களாகத் திகழ்கின்றன.
நதிகள் இணைப்புத் திட்டம்
1. நதிகள் இணைப்பு (River Interlinking) என்பது, உபரிநீர் உள்ள பகுதிகளிலிருந்து நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு, மனிதத் தலையீட்டின் மூலம் நீரை மறுவிநியோகம் செய்யும் பெரிய அளவிலான நீர் மேலாண்மை திட்டமாகும்.
2. இந்த திட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நதி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கால்வாய்கள், அணைகள், குழாய்கள் போன்றவற்றின் மூலம் இணைக்கப்படுகின்றன. இந்த இடைநிலை நீர் மாற்று திட்டங்கள் (Inter-Basin Water Transfer (IBWT)) பாசன வசதியை அதிகரிக்கவும், வெள்ளக் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், வறட்சிப் பகுதிகளில் நீர் ஆதாரங்கள் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியாவில் நீர் தொடர்பான அரசியலமைப்பு விதிகள்
உலக நீர் தினத்தை முன்னிட்டு, நீர் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது என்பதையும் இப்போது காண்போம்.
அடிப்படை உரிமையாக நீர் பெறும் உரிமை: இந்தியாவில், சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமையானது, உணவு பெறும் உரிமை, சுத்தமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை மற்றும் சுகாதாரம் பெறும் உரிமை ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவை அனைத்தும், அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 'உயிர் வாழும் உரிமை' (Right to Life) எனும் தலைப்பின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
முக்கியமாக, குடிநீர் என்பது மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாகும். அது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ல் உள்ள ‘உயிர் வாழும் உரிமை’ மற்றும் மனித உரிமைகளின் ஒரு பகுதியாகும். மேலும், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்த வளர்ச்சி பெறும் உரிமையும் ‘உயிர் வாழும் உரிமைக்குள் உட்பட்ட அடிப்படை மனித உரிமைகளாகும் என்று 2000-ஆம் ஆண்டு நர்மதா பச்சாவோ அந்தோலன் vs யூனியன் ஆஃப் இந்தியா (Narmada Bachao Andolan v. Union of India) வழக்கில், உச்சநீதிமன்றம் கூறியது.
2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசு vs ஆந்திரப் பிரதேச மாநில அரசு (State of Karnataka v State of Andhra Pradesh (2000)) வழக்கில், நீருக்கான உரிமை என்பது ‘உயிர் வாழும் உரிமையின்’ ஒரு பகுதியாகும். ஆகவே, அது ஒரு அடிப்படை உரிமையாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரிவு 48A-அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy): "அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின் வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது.
பிரிவு 51A(g)- அடிப்படை கடமைகள் ((Fundamental Duties)) : இது முக்கியமாக சுற்றுச்சூழல் தொடர்பான அடிப்படை கடமையை எடுத்துரைக்கிறது. " வன பகுதிகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்கள்மீது கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்" என்று பிரிவு குறிப்பிடுகிறது.
பிரிவு 262: இது 'மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான சர்ச்சைகளைத் தீர்த்தல்' குறித்து குறிப்பிடுகிறது. இதன் உட்பிரிவு (1): மாநிலங்களுக்கு இடையிலான எந்த நதி அல்லது நதிக்கரைப் பகுதியின் நீரைப் பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாக எழும் எந்தவொரு தகராறு அல்லது புகாரையும் தீர்த்து வைப்பதற்கு, நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் செய்யலாம் என்று கூறுகிறது. உட்பிரிவு (2): "இந்த அரசியலமைப்பில் உள்ள பிற விதிகளைப் பொருட்படுத்தாமல், உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய சர்ச்சைகள் அல்லது புகார்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றமோ அல்லது வேறு எந்த நீதிமன்றமோ தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வழிவகை செய்யலாம் என்று கூறுகிறது. இந்த பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நதிநீர்ச் சிக்கல்களைக் கையாள்வதற்காக நாடாளுமன்றம் 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்கள் (Inter-State River Water Disputes Act) சட்டத்தை இயற்றியது.
இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் (பட்டியல் II) 17-வது பதிவு, நீர் வழங்கல், பாசனம் மற்றும் கால்வாய்கள், வடிகால் மற்றும் அணைக்கட்டுகள், நீர் சேமிப்பு மற்றும் நீர்வள மின்சாரம் ஆகியவை பட்டியல் I-ன் பட்டியல் 56-ன் விதிகளுக்கு உட்பட்டதாகும். இதன் பொருள் மாநிலங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கால்வாய்கள் மற்றும் கரைகள் போன்ற நீர் தொடர்பான விவகாரங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன என்பதாகும்.
இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையில் உள்ள ஒன்றியப் பட்டியலின் (பட்டியல் I) 56-வது பதிவு: மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் மற்றும் நதிக்கரைப் பகுதிகளின் கட்டுப்பாடு மற்றும் மேம்பாடு—பொது நலனுக்காக அவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சட்டம் மூலம் தேவையானதாக அறிவிக்கும் அளவிற்கு உட்பட்டது. நாடாளுமன்றம் அத்தகைய நதிகளை ஒழுங்குபடுத்து மேம்படுத்துவது முக்கியமென அறிவிக்கும் பட்சத்தில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான அதிகாரத்தை ஒன்றிய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.
Original Link: Jal Jeevan Mission 2.0: Why the government’s flagship water scheme is back in focus.