இந்தியா AYUSH துறையில் உள்ள வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். -சுச்சிகா சோப்ரா, சபா சித்திகி

ஆயுர்வேதம் மற்றும் பிற ஆயுஷ் (AYUSH) மருத்துவ முறைகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால், அவை கடுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.


2026–27 ஒன்றிய நிதிநிலைத் திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன்  இந்தியா மேற்கொண்டுள்ள புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) ஆகியவை ஆயுர்வேதத்தை உலகளாவிய முதன்மை தளத்திற்குக் கொண்டு செல்வதற்கான வலுவான முயற்சியைக் காட்டுகின்றன. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH)) அமைச்சகத்தின் நிதிநிலைத் திட்டம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறக்குறைய இரண்டு மடங்கு உயர்ந்து, இந்த ஆண்டு ₹4,408 கோடியை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். நவீன மருத்துவத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) (All India Institute of Medical Sciences (AIIMS)) மருத்துவமனைகள் இருப்பதைப் போல, பாரம்பரிய மருத்துவத்திற்கு உயர்தரத்தை நிர்ணயிப்பதற்காக மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, கல்வி மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிகளையும் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மருந்தகங்களை நவீனப்படுத்தவும், அரசு மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவமனைகளை அமைக்கவும், மருந்து பரிசோதனை ஆய்வகங்களை மேம்படுத்தவும் தேசிய ஆயுஷ் திட்டத்திற்கென்று (National AYUSH Mission (NAM)) ஒதுக்கப்படும் நிதியானது 66% உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


இந்த நடவடிக்கைகள் பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒரு மாற்றுத் தனிப்பிரிவாக கருதுவதற்குப் பதிலாக, அவற்றை நாட்டின் முதன்மை சுகாதாரக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியைப் பிரதிபலிக்கின்றன.


உலகளாவிய அணுகல்


இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையானது இந்தியாவிற்குள் ஆயுர்வேதத்தை வலுப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (India–EU FTA - Free Trade Agreement) அதன் உலகளாவிய அணுகலை விரிவுபடுத்துகிறது. பாரம்பரிய மருத்துவத்திற்கு என்று தனிப்பட்ட விதிகள் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், இந்த ஒப்பந்தம் இந்திய ஆயுஷ் (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH)) மருத்துவர்கள் தங்களின் இந்திய கல்வித் தகுதியைப் பயன்படுத்தியே சேவைகளை வழங்க அனுமதிக்கிறது. திடீர் கொள்கை மாற்றங்கள் குறித்த அச்சமின்றி இந்திய நிறுவனங்கள் ஐரோப்பா முழுவதும் ஆயுர்வேத மருத்துவமனைகளைத் திறக்க முடியும் என்பதையும் உறுதி செய்கிறது. மேலும், இது இந்திய பாதுகாப்புச் சான்றிதழ்களை ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்வதற்கான வழியை உருவாக்குகிறது.  அதாவது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ஐரோப்பாவில் கூடுதல் சோதனைகள் தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


இருப்பினும், இந்த கொள்கையானது நாடு தனது பாரம்பரியத்தின் மீதான நம்பிக்கையையும், சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் ஒழுக்கத்தையும் எவ்வாறு இணைக்கப் போகிறது என்பதற்கான ஒரு சோதனையாக அமையும் என்கின்றனர். இது வெறும் பொருளாதார வளர்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல, இந்தியாவின் சுகாதார அமைப்பு மற்றும் உலகளாவிய சந்தையில் ஆயுர்வேதத்தை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. உள்ளூர் மருத்துவமனைகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு ஆயுர்வேத மருத்துவம் கொண்டு செல்லப்படும்போது, அது கடுமையான ஒழுங்குமுறை மற்றும் அறிவியல் தரங்களைச் சந்திக்க நேரிடும் என்றும், பாரம்பரிய, கூடுதல் மற்றும் மற்றும் மாற்று மருத்துவ முறைகள்  (Traditional, Complementary, and Alternative Medicine (TCAM)) என வகைப்படுத்தப்படும் இந்த சிகிச்சைகள், கடுமையான ஒழுங்குமுறை கட்டமைப்புகளின்கீழ் மதிப்பீடு செய்யப்படும். எனவே, தரநிலைகளை உலகளாவியரீதியில் ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. ஆயுஷ் (Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homoeopathy (AYUSH)) தயாரிப்புகள் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் உரிய இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், அவை பாதுகாப்பு, தரம் மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்த சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவின் உலகளாவிய லட்சியத்திற்கு அறிவியல்ரீதியான பொறுப்புக்கூறல் மிகவும் அவசியமாகிறது.


அறிவியல்ரீதியான ஆதாரங்களின் அவசியம்


ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகள் குறித்த ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட மிகையான உரிமைக்கோரல்கள், இந்தியாவுக்கு சட்டரீதியான சிக்கல்களையும், நற்பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்துவதுடன், "அறிவியலுக்குப் புறம்பான பாரம்பரியம்" என்ற எதிர்மறையான பிம்பத்தை வலுப்படுத்தும் அபாயத்தையும் கொண்டுள்ளன. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) ஆகிய மருத்துவ முறைகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால், அவை மூன்றாம் தரப்பு ஆராய்ச்சி நிறுவனங்களால் கடுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது, பல ஆய்வுகள் ஆயுஷ் அமைச்சகத்தாலேயே (Ministry of AYUSH) நிதியளிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. இது ஒரு 'நலன் சார்ந்த முரண்பாட்டை' உருவாக்குகிறது. உலகளாவிய நம்பகத்தன்மையை உருவாக்க, சுயேச்சையான நிதியுதவியுடன்கூடிய மருத்துவப் பரிசோதனைகள், வெளிப்படையான முறைகள், சக அறிஞர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகள் மற்றும் எதிர்மறையான முடிவுகளையும் வெளியிடும் மனப்பக்குவம் ஆகியவை அவசியமாகிறது.


பாரம்பரிய மருத்துவம் அல்லது கலாச்சார அறிவு சார்ந்த விவாதங்களில், அறிவியல்ரீதியான கேள்விகளை "காலனித்துவ பாகுபாடு" (Colonial Bias) அல்லது "மேற்கத்திய ஆதிக்கம்" (Western Dominance) என்று முத்திரை குத்துவது ஒரு பொதுவான தற்காப்பு நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவில் காலனித்துவ ஆட்சிக்கால மருத்துவம் ஒரு காலத்தில் உள்ளூர் பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஓரங்கட்டி, அவற்றின் நம்பகத்தன்மையைக் குறைத்தது என்பது உண்மைதான். இந்த வரலாற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றாலும், ஆதாரங்களைக் கோரும் ஒவ்வொரு முறையும் அது ஆதிக்கச் செயல் என்று கருதிவிட முடியாது. ஒரு விஷயத்திற்கு நிரூபணம் கேட்பதென்பது கலாச்சாரத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகாது என்றும் அதேபோல், அறிவியல்ரீதியான மதிப்பீடு பாரம்பரியத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்புகள் 


மேலும்,  பாரம்பரிய, கூடுதல் மற்றும் மற்றும் மாற்று மருத்துவ முறைகள் (Traditional, Complementary, and Alternative Medicine (TCAM)) வெறும் கலாச்சாரப் பற்றுக்காக மட்டும் நிலைத்திருக்கவில்லை என்றும் அவை உடல், ஆரோக்கியம் மற்றும் நோய் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் தனித்துவமான வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றன. இந்த மாற்று மருத்துவ முறைகளை (TCAM) ஆழமாக அணுகுவது என்பது, அவற்றை வெறும் மருந்துகளின் தொகுப்பாக மட்டும் பார்க்காமல், ஒரு முழுமையான அறிவு அமைப்பாக அங்கீகரிப்பதாகும். உதாரணமாக, ஆயுர்வேதம் உடல் என்பது என்ன, அது எவ்வாறு உருவாகிறது மற்றும் நோய்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்த குறிப்பிட்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. ஆயுர்வேதத்தில், உடல் என்பது தனித்தனி உறுப்புகளாகப் பார்க்கப்படாமல், சுற்றுச்சூழல், உணவுமுறை, பருவக்காலங்கள் மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றோடு தொடர்புடைய ஒரு ஒன்றிணைந்த அமைப்பாகக் கருதப்படுகிறது. ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையாகக் கருதப்படுகிறது. அதே சமயம், நோய் என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கப்படாமல், இந்தத் தொடர்புகளில் ஏற்படும் இடையூறாகவே பார்க்கப்படுகிறது.


இது நவீன மருத்துவத்திலிருந்து மாறுபட்டது என்கின்றனர். ஏனெனில், நவீன மருத்துவம் பாரம்பரியமாக உடலின் குறிப்பிட்ட பாகங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. உயிரிமருத்துவம் (Biomedicine) என்பது நோய்க்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரியாகக் குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. இருப்பினும், பாரம்பரிய, கூடுதல் மற்றும் மாற்று மருத்துவ முறைகள் (TCAM) உடல் முழுமையையும் தழுவிய அணுகுமுறைகளைக் கொண்டுள்ளன. இங்குப் பிரச்சனை என்பது உயிரிமருத்துவமா அல்லது மாற்று மருத்துவமா என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அல்ல என்கின்றனர். மாற்று மருத்துவக் கருத்துக்கள் பயனுள்ளதாக இருப்பதற்கு அவை நவீன மருத்துவத்தை முழுமையாக மாற்றீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக, ஆரோக்கியம் என்பதன் பொருளுக்கு அவை புதிய பார்வைகளை வழங்குகின்றன. உடல் என்பது தனித்தனி பாகங்களால் ஆனது அல்ல என்றும் அது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் ஒரு அமைப்பு என்ற மாற்றுப் பார்வையை இவை முன்வைக்கின்றன.


இதன் நோக்கம் எதையும் மாற்றுவது  அல்ல, மாறாக ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை உருவாக்குவதாகும். இத்தகைய உரையாடலின் மூலம், மருத்துவப் பராமரிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் அறிவியல் ரீதியான தேடல்களை வலுப்படுத்த முடியும் என்கின்றனர். எனவே, பொது நிதியுதவியானது சிந்தனை சுதந்திரத்திற்கும் அறிவியல் சுதந்திரத்திற்கும் ஆதரவாக அமைய வேண்டும். நீண்டகால உலகளாவிய முன்னேற்றம் என்பது வெறும் உரிமைகோரல்களை மட்டும் பொறுத்தது அல்ல என்றும் மாறாக அது வலுவான ஆதாரங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் விமர்சனரீதியாக ஆய்வு செய்யப்படுவதை எதிர்கொள்ளும் துணிச்சல் ஆகியவற்றையே சார்ந்து இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.


சுச்சிகா சோப்ரா, கிரியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் ஆவார். சபா சித்திக், கிரியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் ஆவார். 



Original Link: India must use the AYUSH opportunity 


Share: