இந்தியாவின் காடுகள், ஒரு நிலையான உயிரிப் பொருளாதாரத்தின் வேர்களாகத் திகழ்கின்றன. -தகாயுகி ஹகிவாரா

காடுகளைப் பாதுகாப்பது மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலையான பொருளாதார எதிர்காலத்தையும் உறுதி செய்கிறது.


இந்திய வன நிலை அறிக்கை 2023-ன்படி (India State of Forest Report 2023), இந்தியாவின் நிலப்பரப்பில் 25.17% காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டுள்ளது. இவை நாட்டின் சூழலியல் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களுக்கு மிக முக்கியமானவை ஆகும். இவை கோடிக்கணக்கான மக்களுக்கு ஆதரவளிப்பதோடு, வேளாண்மைக்கு துணைபுரிந்து, புதிய உயிரியல் சார்ந்த தொழில்களுக்கான புதுப்பிக்கத்தக்க வளங்களையும் வழங்குகின்றன. இந்தியா காலநிலை மாற்றத்தைத் தாங்கும் வளர்ச்சி மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காடுகள் மற்றும் மரம் சார்ந்த அமைப்புகள் உயிரிப் பொருளாதாரத்தின் முக்கிய தூண்களாக மாறி வருகின்றன.


இந்த ஆண்டின் சர்வதேச காடுகள் தினத்தின் (மார்ச் 21) கருப்பொருளான "காடுகளும் பொருளாதாரங்களும்" (Forests and Economies) என்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இது காடுகள் உலகளவில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை மிகச்சரியாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.


வாழ்வாதாரங்களையும் பொருளாதாரங்களையும் நிலைநிறுத்துதல்


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization (FAO)) 2020-ஆம் ஆண்டிற்கான உலக வன வள மதிப்பீட்டு அறிக்கையின்படி, காடுகள் உலகின் நிலப்பரப்பில் சுமார் 31% பகுதியை ஆக்கிரமித்துள்ளன. மேலும், இவை 1.6 பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக விளங்குகின்றன.


இந்தியாவில், காடுகள் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்குகின்றன, குறிப்பாகப் பழங்குடியினர் மற்றும் காடுகளைச் சார்ந்து வாழும் சமூகங்களுக்கு இவை மிக முக்கியமானவையாகும். மரம், மூங்கில், தேன், மருத்துவத் தாவரங்கள், பிசின்கள் (Resins), கோந்துகள் (Gums), தேந்து இலைகள் (Tendu leaves), மகுவா மலர்கள் (Mahua flowers) மற்றும் காட்டு உணவுகள் போன்ற வனப் பொருட்கள் (Minor Forest Produce (MFP)) அவர்களுக்குத் தேவையான வருமானத்தையும் ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. பெரும்பாலும் “பச்சைத் தங்கம்” (Green Gold) என்று அழைக்கப்படும் மூங்கில், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டுமானத் தொழில்துறை போன்ற வளர்ந்துவரும் துறைகளுக்குப் பெரும் ஆதரவாக இருப்பதோடு, மரத்திற்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.


காடுகள் மிக முக்கியமான சூழலியல் சேவைகளை (Ecosystem Services) வழங்குகின்றன மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்திற்கு இருப்பிடமாகத் திகழ்கின்றன. இவை விவசாயம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதன் மூலமும், நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவதன் மூலமும், அனைத்துப் பருவகாலங்களிலும் சீரான நீர் விநியோகத்தை காடுகள் உறுதி செய்கின்றன. மேலும், இவை மண்ணின் வளத்தை மேம்படுத்தி, விவசாயத்திற்கு அவசியமான மகரந்தச் சேர்க்கையாளர்களுக்கு (Pollinators) ஆதரவளிக்கின்றன. இது பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் திறன் மற்றும் நீண்டகால உணவுப் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகிறது. 


மரங்கள், பயிர்கள் மற்றும் கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்க்கும் வேளாண் காடு வளர்ப்பு (Agroforestry) முறை, காடுகளைச் சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். மரம் சார்ந்த விவசாயம் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் துணையாக இருக்கிறது. மேலும் மரம், பழங்கள், கால்நடைத் தீவனம் மற்றும் உயிரிப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. எதிர்பாராத விதமாகப் பயிர்கள் பொய்த்துப்போகும் காலங்களில் (Crop failure), இது விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது.


இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய மற்றும் உள்நாட்டு வேளாண் முறைகள் (Traditional and Indigenous Farming Systems (TIFS)), காடுகள், பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் வேளாண்மை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதைக் காட்டுகின்றன. இத்தகைய முறைகளை நவீன கண்டுபிடிப்புகள், நிலையான மதிப்புச் சங்கிலிகள் மற்றும் சிறந்த பொருளாதாரச் சந்தை அணுகல் ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்துவது, கிராமப்புற சமூகங்களுக்குப் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்கின்றனர்.


உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) பங்கு


உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) நிலையான வன மேலாண்மை மற்றும் காடுகளைச் சார்ந்த வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறது.


இந்தியாவில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization (FAO)), உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (Global Environment Facility (GEF)) மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களின் வழியாக வேளாண் சூழலியல் (Agroecology), வேளாண் காடுகள் (Agroforestry) மற்றும் சமூகம் சார்ந்த இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றை ஆதரிக்கிறது. இத்திட்டங்கள், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற உதவுகின்றன.


பசுமை காலநிலை நிதி (Green Climate Fund (GCF)) ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தின்கீழ், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினருக்காக வடிவமைக்கப்பட்ட வேளாண் காடு வளர்ப்பு மாதிரிகளை ஊக்குவிக்கும் என்கின்றனர். இந்தக் குழுக்கள் பருவநிலை மாற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதால், அதற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வேளாண் காடு வளர்ப்பு ஒரு முக்கிய வழியாக இத்திட்டத்தில் கருதப்படுகிறது. இத்திட்டங்களை பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்ற, மரம் மற்றும் மரம் அல்லாத வனப் பொருட்கள்ஆகிய இரண்டிற்கும் விரிவான செலவு-பயன் பகுப்பாய்வு மற்றும் மதிப்பு சங்கிலி ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் மரம் சார்ந்த விவசாயம் இச்சமூகங்களுக்கு ஒரு நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்பாக மாறுவதையும் உறுதி செய்கிறது.


வேளாண் காடுகள் வளர்ப்பை விரிவுபடுத்துவதற்கு, நம்பகமான நாற்றுப்பண்ணைகளும் உயர்தரமான நடவுப் பொருட்களும் அவசியமாகும். இதனை ஊக்குவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization (FAO)), இந்தியாவின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் (Ministry of Agriculture and Farmers’ Welfare (MoA&FW)) இணைந்து செயல்பட்டது. இந்த முயற்சி, சான்றளிக்கப்பட்ட தரமான நடவுப் பொருட்கள் (Quality Planting Material (QPM)) மற்றும் மரம் சார்ந்த மற்றும் மரம் அல்லாத வன வகைகளுக்கான நாற்றுப்பண்ணை சான்றிதழ் குறித்த வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளது. இது நாடு முழுவதும் நாற்றுப்பண்ணைகளின் தரத்தை மேம்படுத்தவும், நிலையான விவசாயக் காடுகள் வளர்ப்பை முன்னெடுக்கவும் உதவுகிறது.


காடுகளில் முதலீடு செய்வதற்கான அழைப்பு


ஆரோக்கியமான காடுகள் வலுவான பொருளாதாரத்திற்குப் பெரும் ஆதரவாக அமைகின்றன. காடுகள் சேதமடையும் போது, அதனால் ஏற்படும் விளைவுகளான மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு, பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை மாற்றத் தாக்கங்கள் (Climate Change Impacts (CCI)) போன்றவை, காடுகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் கிடைக்கும் குறுகியகால லாபங்களைவிட மிக அதிகமான பாதிப்புகளை உண்டாக்குவதாகத் தெரிவிக்கின்றனர். 


இந்த சர்வதேச காடுகள் தினத்தில் (International Day of Forests (IDF)), சொல்லப்படும் செய்தி மிகவும் தெளிவானது: காடுகளில் முதலீடு செய்வது என்பது காலநிலை மீள்தன்மை, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்வதாகும்.


இந்தியாவுக்கு, வேளாண் காடுகள் வளர்ப்பு முறையை விரிவுபடுத்துவது, வனப் பொருட்களின் மதிப்புச் சங்கிலியை மேம்படுத்துவது மற்றும் சுழற்சி உயிரிப் பொருள் அமைப்புகளை (Circular Biomass Systems (CBS)) ஊக்குவிப்பது போன்றவை பசுமைத் தொழில்களுக்கும் வலிமையான கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காடுகளைப் பாதுகாப்பது என்பது ஒரு சுற்றுச்சூழல் கடமை மட்டுமல்ல என்றும் அது ஒரு நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான முதலீடாகவும் கருதப்படுகிறது. 


தகாயுகி ஹகிவாரா, இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) பிரதிநிதியாகவும், இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் குழுவில் ஒரு அங்கமாகவும் உள்ளார்.


Original Link: India’s forests as the roots of a sustainable bioeconomy 


Share: