பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு உடன்படிக்கையின் (CBD) கீழ், நகோயா நெறிமுறை குறித்த தனது முதல் தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த நெறிமுறை எதைக் குறிக்கிறது? மேலும், இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
தற்போதைய செய்தி
சமீபத்தில், அணுகல் மற்றும் பயன் பகிர்வு (access and benefit sharing (ABS)) தொடர்பான நகோயா நெறிமுறையின் (Nagoya Protocol) செயலாக்கம் குறித்த முதலாவது தேசிய அறிக்கையை (National Report (NR1)) இந்தியா சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்துடன் (National Biodiversity Authority (NBA)) இணைந்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) 2026 பிப்ரவரி 27 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது, கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் குறித்த நெறிமுறையின் 29-வது பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
1. இந்த அறிக்கையானது, 2017 நவம்பர் 1 முதல் கடந்த ஆண்டின் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தின் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) இலக்கு 13-க்கு பங்களிக்கும் அதே வேளையில், நகோயா நெறிமுறையைச் செயல்படுத்துவதன் மூலம் ஏற்படும் நாட்டின் முன்னேற்றத்தையும் இது எடுத்துரைக்கிறது.
2. அறிக்கையின்படி, இந்தியா, 'அணுகல் மற்றும் பயன் பகிர்வு' (Access and Benefit-Sharing) வழிமுறையை, மூன்று அடுக்கு நிறுவனக் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்பானது, தேசிய அளவில் NBA-வையும்; துணை-தேசிய அளவில் மாநிலப் பல்லுயிர் வாரியங்கள் (State Biodiversity Boards (SBBs)) அல்லது ஒன்றியப் பிரதேசப் பல்லுயிர் மன்றங்களையும் (Union Territory Biodiversity Councils (UTBCs)) மற்றும் உள்ளூர் அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்ட பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களையும் (Biodiversity Management Committees (BMCs)) உள்ளடக்கியுள்ளது. இந்த பரவலாக்கப்பட்ட அமைப்பு, தேசிய, மாநில மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.
3. ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் கட்டமைப்பை (UN Framework Convention on Climate Change (UNFCCC)) உருவாவதற்குக் காரணமாக அமைந்த 1992 ரியோ பூமி (Rio Earth Summit) உச்சிமாநாட்டிலிருந்தே, பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பும் (Convention on Biological Diversity (CBD)) தோன்றியது. உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதும், இயற்கைச் சூழல் மண்டலங்களை மீட்டெடுப்பதும், உலகின் உயிரியல் வளங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வது பல்லுயிர் பெருக்கத்திற்கான கூட்டமைப்பின் நோக்கங்களாகும்.
4. இந்தியா உட்படப் பல நாடுகள், 1994-ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டை (CBD) ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டன. இதில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்துப் பொதுவான ஒருமித்த கருத்து எட்டப்பட்டது: அவை,
(i) உயிரியல் வளங்களை வரம்பின்றிப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்;
(ii) இவ்வளங்களின் மருத்துவப் பண்புகள் போன்ற பயன்பாடுகளுக்காக, அவற்றை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை முறைப்படுத்த வேண்டும்;
(iii) இவ்வளங்களைப் பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் துணை நிற்கும் மக்களுக்கும் சமூகங்களுக்கும், அவர்களின் முயற்சிகளுக்காக உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
5. பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாடு (CBD) என்பது சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பது மற்றும் மீட்டெடுப்பது பற்றியது மட்டுமல்ல. இது இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது குறித்தும், இவ்வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசுகிறது. உதாரணமாக, ஐரோப்பாவில் உள்ள ஒரு மருந்து நிறுவனம் தமிழ்நாட்டில் வளரக்கூடிய சில செடிகளின் மருத்துவ குணங்களை பயன்படுத்த விரும்பினால், அந்த பயன்பாட்டினால் கிடைக்கும் நன்மைகள் பணம் அல்லது பிற வகையிலானவை அனைத்து பங்குதாரர்களுக்கும் சமமாக பகிரப்பட வேண்டும். இதில், அந்த குறிப்பிட்ட உயிரியல் வளத்தை பாதுகாத்து வந்த உள்ளூர் பழங்குடியினர் (indigenous மக்கள்) உட்பட அனைவரும் சேர்க்கப்பட வேண்டும்.
6. பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஒப்பந்தம் இரண்டு ‘துணை’ ஒப்பந்தங்கள் உருவாகுவதற்கு வழிவகுத்துள்ளது. அவை, 2003-ஆம் ஆண்டின் கார்டஜீனா (Cartagena Protocol) நெறிமுறை மற்றும் 2014-ஆம் ஆண்டின் நகோயா நெறிமுறை ஆகும். இந்த இரண்டு ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இடங்களின் பெயர்களையே கொண்டுள்ளன.
7. உயிரியல் பாதுகாப்பு குறித்த கார்டஜீனா நெறிமுறையானது, மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களைக் கையாளுதல், அவற்றை கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைச் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்வதன் மூலம், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க முயல்கிறது. உதாரணமாக, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (GM crops), இயற்கைச் சூழல் மண்டலங்களில் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத வகையிலான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால்தான், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தனி பண்ணைகளில் பயிரிடப்படுகின்றன.
8. நகோயா நெறிமுறை (Nagoya Protocol) என்பது உயிரியல் மற்றும் மரபணு வளங்களின் (biological & genetic resources) வர்த்தகப் பயன்பாட்டை (commercial utilisation) பற்றியதாகும். உதாரணமாக, மருந்து நிறுவனங்கள் இந்த வளங்களை பயன்படுத்தும் சூழல்களில் இது பொருந்தும். இந்த ஒப்பந்தம், வளம் உள்ள நாடுகள் தங்களது மரபணு வளங்களுக்கு சட்டபூர்வமாக, நியாயமான முறையில் அணுகலை (access) வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அதே நேரத்தில், அந்த வளங்களை பயன்படுத்தி கிடைக்கும் நன்மைகள் அந்த நாடுகளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கும் சமமாகவும் நியாயமாகவும் (fair and equitable) பகிரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், உயிரியல் வளங்களின் மீதான நாடுகளின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பொதுவான கோட்பாடுகளையும், அவற்றின் வர்த்தக பயன்பாட்டிற்கான விதிமுறைகளையும் இது நிர்ணயிக்கிறது.
9. இந்த நடைமுறையின் கீழ், உயிரியல் பல்லுயிர்வகைமையில் (biodiversity) வளமான நாடுகள், ஆராய்ச்சி அல்லது வர்த்தக நோக்கங்களுக்காக தங்களது உயிரியல் வளங்களை பயன்படுத்த விரும்புவோருக்கு அவற்றை அணுகும் வாய்ப்பை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேவேளையில், அந்த வளங்களைப் பயன்படுத்தும் முகமைகள், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பயன்களை உள்ளூர் சமூகங்களுடன் பகிர்ந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த அணுகல் மற்றும் பயன் பகிர்வு, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆகிய இரண்டு நிலைகளிலும் செயல்படுகிறது.
10. 1993-ஆம் ஆண்டு ஒப்பந்தமான பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் (CBD) கையொப்பமிட்ட நாடுகள், காலநிலை கூட்டங்களைப் போல ஆண்டுதோறும் இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி, பல்லுயிர் இழப்பைத் தடுத்து இயற்கைச் சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான ஒரு உலகளாவிய திட்டத்தில் பணியாற்றுகின்றன. பல்லுயிர் பாதுகாப்பு மாநாட்டில் காலநிலை மாநாட்டின் விளைவுகள்:
17-வது காலநிலை மாநாடு இது 2026 அக்டோபர் 19 முதல் 30 வரை ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற உள்ளது.
16-வது காலநிலை மாநாடு: இது 2024 அக்டோபர் 21 முதல் நவம்பர் 1 வரை கொலம்பியாவின் காலியில் நடைபெற்றது. இந்த மாநாடு, குறிப்பாக பழங்குடியினர் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் சமமான பகிர்வை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வரிசைத் தகவலுக்கான காலி நிதியத்தை (Digital Sequence Information (DSI)) நிறுவியதோடு முடிவடைந்தது. மேலும், உலகளவில் பல்லுயிர் முயற்சிகளுக்கு நிதியளிக்க, 2030-க்குள் ஆண்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.
15-வது காலநிலை மாநாடு: இது 2022-ல் கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெற்றது. இது உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு (Global Biodiversity Framework (GBF)) எனப்படும் ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்கியது. அதன்படி, 2030-க்குள் அடையப்பட வேண்டிய நான்கு குறிக்கோள்களும் 23 இலக்குகளும் உள்ளன. இந்த உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு, உலகளாவிய காலநிலை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் 2015-ஆம் ஆண்டின் காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்துடன் ஒப்பிடப்படுகிறது.
பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு
1. இந்தியாவில் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்காக அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகிறது மற்றும் குடிமக்கள் மீது அடிப்படைக் கடமைகளை விதிக்கிறது.
பிரிவு 48A-அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy): "அரசு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின் வனப் பகுதிகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறுகிறது.
பிரிவு 51-A(g)-அடிப்படைக் கடமைகள் ((Fundamental Duties)) ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்தவும், உயிரினங்கள்மீது கருணை காட்டவும் கடமையை விதிக்கிறது.
2. அரசியலமைப்பு வழிகாட்டுதல்கள் தவிர, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பேணுதலுக்கான சட்டப்பூர்வமான விதிகளும் உள்ளன: அவை மீன்வளச் (Fisheries Act) சட்டம், 1897, வனவிலங்கு பாதுகாப்புச் (Wildlife Protection Act) சட்டம், 1972, பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், 2002 ஆகும்.
3. 1994-ல் இந்தியா அங்கீகரித்த, ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் பாதுகாப்பு உடன்படிக்கையில் மறைந்துள்ள நோக்கங்களை நிறைவேற்றும் இந்தியாவின் முயற்சியின் விளைவாகவே 2002-ஆம் ஆண்டில் பல்லுயிர் (Biological Diversity Act) சட்டம், உருவானது. இந்தச்சட்டத்தின் முக்கிய நோக்கங்கள் – பல்லுயிரைப் பாதுகாத்தல், அதன் வளங்களை நீடித்த முறையில் பயன்படுத்துதல், மற்றும் மரபணு வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை ஒரு நியாயமான செயல்முறையின் மூலம் நேர்மையாகவும் சமமாகவும் பகிர்ந்தளிப்பது ஆகும்.
4. இதேபோல், பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டின் (CBD) ஆணைகளைச் செயல்படுத்துவதற்காக, 1999-ஆம் ஆண்டு தேசிய பல்லுயிர் பாதுகாப்பு உத்தி மற்றும் செயல் திட்டம் (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2008-இல் புதுப்பிக்கப்பட்டது. 2010-ல் நகோயாவில் நடைபெற்ற பல்லுயிர் பெருக்கத்திற்கான மாநாட்டின் COP 10-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐச்சி பல்லுயிர் பாதுகாப்பு (Aichi Biodiversity targets) இலக்குகளுடன் இந்தத்திட்டத்தை சீரமைப்பதற்காக, 2014-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன.
5. இதன் தொடர்ச்சியாக, ஐச்சி இலக்குகளுக்குப் பதிலாக COP15-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட குன்மிங்-மான்ட்ரியல் பல்லுயிர் (Kunming-Montreal Biodiversity Framework) பாதுகாப்பு கட்டமைப்புடன் திட்டத்தை சீரமைப்பதற்காக, இந்தியா தனது, 'தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை' (National Biodiversity Strategy and Action Plan (NBSAP)) 2024 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்காக, கொலம்பியாவின் காலி நகரில் நடைபெற்ற COP 16 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது. 2030-ஆம் ஆண்டு வரையிலான பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டும் வகையில், இது 23 தேசிய பல்லுயிர் இலக்குகளை நிர்ணயித்துள்ளது.
Original Link: India submits first Nagoya Protocol Report.