பழங்குடியினர் அடையாளம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த அடையாளத்தை உருவாக்கப் பெரும் பங்காற்றிய மிக முக்கியமான தலைவரான பிர்சா முண்டாவை நினைவுகூர்வோம். -சுபம் டிகா

 பிர்சாவை வெறும் ஒரு உழவர்களின் எழுச்சியின் தலைவராக மட்டும் புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அவர் பழங்குடியின மக்களின் அடையாளம், தனித்துவம் மற்றும் தன்னாட்சி குறித்த ஒரு விரிவான பார்வையை உலகிற்கு வெளிப்படுத்தினார்.


ஜூன்  மாதம் 9-ஆம் தேதி, பழங்குடியின மக்களின் அடையாளமாகவும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த பிர்சா முண்டாவின் நினைவுநாளையொட்டி, ஜார்க்கண்டில் உள்ள பல பழங்குடியின அமைப்புகள் அவருடைய "பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டன.


கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பழங்குடியினரை, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற "பட்டியல் நீக்க" கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்று வரும் சூழலில் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பழங்குடியின மக்களின் அடையாளம் குறித்த நீண்டகால விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.            கடந்த மாதம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பழங்குடியினரின் கூட்டத்தில் இந்த 'பட்டியல் நீக்க' கோரிக்கை சமீபத்தில் முன்வைக்கப்பட்டது.

ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியின அமைப்புகள் இந்த உறுதிமொழி நிகழ்வின்போது, "பிர்சா முண்டாவின் பார்வை என்பது பழங்குடியினரின் அடையாளம், அவர்களின் இறையாண்மை மற்றும் நில உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினர். மேலும், வலதுசாரி அமைப்புகள் பிர்சாவின் அந்தப் பார்வையைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


அப்படியென்றால், பிர்சா எதற்காகப் போராடினார்? அவர் மறைந்து 125 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அந்தப் பழங்குடியினத் தலைவரின் வாழ்க்கை, நம்பிக்கைகள் மற்றும் அவர் விட்டுச்சென்ற பாரம்பரியம் குறித்த ஒரு பார்வை பின்வருமாறு:


பிர்சா முண்டா என்பவர் யார்?


ஜார்க்கண்ட் மற்றும் அதன் அண்டை மாநிலங்களை உள்ளடக்கிய, கனிமங்கள் நிறைந்த சோட்டாநாக்பூர் பீடபூமி பிராந்தியத்தின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களில் பிர்சா முண்டாவும் ஒருவர் ஆவார்.

பலராலும் பூமியின் தந்தை (Dharti Aba)  என்று போற்றப்படும் இவர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் பழங்குடியினரின் நிலங்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் மீதான ஆக்கிரமிப்பு அதிகரித்தபோது, அதற்கு எதிராகப் போராடினார். ஆங்கிலேயர் ஆட்சி மற்றும் "டிக்கு" (Diku - பழங்குடி அல்லாத மக்கள்) என்று அழைக்கப்பட்ட ஜமீன்தார்களுக்கு எதிராக உல்குலன் (Ulgulan) அல்லது "பெரிய எழுச்சி" (Great Tumult) என்ற போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தியதற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.


இருப்பினும், பிர்சாவின் செல்வாக்கு தற்போதைய ஜார்க்கண்ட் மாநில எல்லைகளைத் தாண்டி மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களின் தொலைதூரக் கிராமங்கள் வரை பரவியிருந்தது.



வரலாற்றாசிரியர் கே. எஸ். சிங், தனது முக்கியத்துவம் வாய்ந்த  'பிர்சா முண்டாவும் அவரது இயக்கமும்' என்ற நூலில், பிர்சாவை முண்டா பழங்குடி சமூகத்தை மாற்றியமைத்த ஒரு மத சீர்திருத்தவாதி, சமூக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசியல் தலைவர் என்று விவரித்துள்ளார்.


அதேபோல, பழங்குடியின வரலாற்று ஆய்வாளர் ஜோசப் பரா என்ன வாதிடுகிறார் என்றால், பிர்சாவை வெறும் ஒரு விவசாயப் புரட்சியின் தலைவராக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அதற்குப் பதிலாக, அவர் பழங்குடியினரின் தனித்துவம், தன்னாட்சி மற்றும் பழங்குடியினரின் சொந்த தேசம் (Adivasi disum) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த தொலைநோக்குக் பார்வையை வெளிப்படுத்தினார்.


2000-ஆம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய அரசியல் மற்றும் பொது விவாதங்களில் பிர்சாவின் முக்கியத்துவம் கணிசமாக வளர்ந்தது என்று பரா குறிப்பிடுகிறார்.


இன்று, அவர் இந்தியாவின் மிகப்பரவலாக அறியப்பட்ட பழங்குடியின அடையாளங்களில் ஒருவராகத் திகழ்கிறார். மேலும், பழங்குடியினரின் தனித்துவம், நில உரிமைகள், மதம் மற்றும் சுயாட்சி குறித்த விவாதங்களில் மிக முக்கியப் இடத்தைப் பிடித்துள்ளார்.


பிர்சா முண்டாவின் ஆரம்பகால வாழ்க்கையும் அவரது தாக்கங்களும் 


பிர்சா முண்டா தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி (Khunti) மாவட்டத்தில் உள்ள உலிஹாது (Ulihatu) கிராமத்தில் 1875-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 -ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுக்னா முண்டா கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு 'மசிஹ் தாஸ்' (Masih Das) என்றும் அழைக்கப்பட்டார். சுக்னா முண்டா 'சர்தாரி இயக்கத்துடன்' (Sardari movement) தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது. இது பாரம்பரிய நில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், 'டிக்கு' (Diku) என்று அழைக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் மற்றும் இடைத்தரகர்களின் அதிகரித்து வரும் ஆதிக்கத்திற்கு எதிராகவும், முண்டா மற்றும் ஓரான் பழங்குடியின மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆரம்பகால போராட்ட இயக்கமாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பே பழங்குடியினரின் பகுதிகளில் வெளியாட்களின் ஊடுருவல் தொடங்கிவிட்டது, ஆனால் ஆங்கிலேய காலனித்துவ நிலக் கொள்கைகள் அதற்கு முன் எப்போதும் இல்லாத சட்டப்பூர்வ ஆதரவை வழங்கின. 1773-ஆம் ஆண்டின் 'நிலையான நிலவரித் திட்டம்' போன்ற சட்டங்கள் மூலம், ஆங்கிலேயர்கள் இந்த வரி வசூலிக்கும் இடைத்தரகர்களுக்கு  காடுகளைத் திருத்தி விவசாயம் செய்யும் கூட்டு நில உரிமை முறை (Khuntkatti) போன்ற பாரம்பரிய அமைப்புகளின்கீழ் நிர்வகிக்கப்பட்ட நிலங்களிலிருந்து வரி வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கினர். இதனால் பழங்குடியினரின் பாரம்பரிய உரிமைகள் பறிபோனதுடன், அவர்கள் கடுமையான கடன் சுமை, நில இழப்பு மற்றும் கட்டாய வேலை போன்ற கொடுமைகளை எதிர்கொண்டனர். அதேநேரத்தில், கிராமப்புற அமைப்புகளும் தங்களின் வளங்கள் மற்றும் விவகாரங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்தன.


இந்த மாற்றங்கள் சோட்டாநாக்பூர் பகுதி முழுவதும் வேளாண் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தன.


பிர்சா முண்டா குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்த புத்ராம் முண்டா பகிர்ந்துகொண்ட தகவல்களின்படி, பிர்சா தனது ஆரம்பகால சிறுவயது வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தனது மாமாவின் கிராமத்தில் கழித்தார். அதன் பிறகு சாய் பாசா (Chaibasa) பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பயின்றார்.


இந்தக் காலகட்டத்தில், அவருக்கு கிறிஸ்தவப் பள்ளிகளின் கல்வி அறிமுகமானது. அப்போது அவர் 'தாவூத்' (Daud) என்ற கிறிஸ்தவப் பெயரால் அழைக்கப்பட்டார், இதை அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் 'டேவிட்' (David) என்றும் நினைவுகூர்கின்றனர்.


எதிர்ப்பிலிருந்து அரசுரிமை வரை


பிர்சா முண்டா தலைமையிலான உல்குலன், 1899-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குந்தி கிராமத்தில் உள்ள டோம்பாரி புருவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இங்குதான் பிர்சா முண்டாவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் நிலத்தின் மீதான தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், ஆங்கிலேயர் அதிகாரத்தை எதிர்க்கவும் ஆயிரக்கணக்கான பிர்சா முண்டாவின் ஆதரவாளர்கள் அங்கு ஒன்று கூடினர்.


ஆங்கிலேயப் படைகள் அந்த மலையைச் சூழ்ந்து கொண்டு, அங்கிருந்த மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தின. அதிகாரப்பூர்வ பதிவுகள் உயிரிழப்பு குறைவாக இருந்ததாகக் கூறினாலும், பழங்குடியின மக்களின் நினைவுகளில் இது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையாகவே பதிவாகியுள்ளது. பல மாதங்கள் தலைமறைவாக இருந்த பிர்சா முண்டா, 1900-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி போரஹாட் (Porahat) காடுகளில் கைது செய்யப்பட்டு, ஜூன் மாதம் 9-ஆம் தேதி, 1900-ஆம் ஆண்டு ராஞ்சி சிறையில் காலமானார். காலனித்துவ பதிவுகள் அவர் காலரா மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கினால் இறந்ததாகக் கூறினாலும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்களிடமும் மக்கள் நினைவுகளிலும் இன்றும் நீடிக்கிறது.


ஆங்கிலேய அரசு இந்தப் புரட்சியை ஒடுக்கியிருந்தாலும், டோம்பாரி புரு மலை பழங்குடியினரின் வீரமிக்க போராட்டத்தின் அடையாளமாக மாறியது.


இந்த நிகழ்வு, காலனித்துவ நிர்வாகத்தை நிலச் சீர்திருத்தங்களைத்  கட்டாயப்படுத்தியது. அதன் விளைவாக காடுகளைத் திருத்தி விவசாயம் செய்யும் கூட்டு நில உரிமைகளுக்குச் (Khuntkatti) சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது, பின்னர் 1908-ஆம் ஆண்டின் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (Chotanagpur Tenancy Act (CNT)) இயற்றப்பட்டது.




இது சோட்டாநாக்பூர் பகுதியில் வாழும் முண்டா பழங்குடியினரிடையே நடைமுறையில் இருந்த பாரம்பரிய கூட்டு நில உரிமை மற்றும் நிர்வாக முறையாகும். (ஓரான் பழங்குடியினரிடையே இது புய்ன்ஹாரி - Bhuinhari என்று அழைக்கப்பட்டது). இந்த முறையின்கீழ், காடுகளை அழித்து கிராமத்தை உருவாக்கிய ஆரம்பகால குடியேறிகளின் வாரிசுகள் குண்ட்கட்டிதாரர்கள் (Khuntkattidars) எனப்படுவர், அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பின் மீதும் கூட்டு உரிமையைக் கொண்டிருந்தனர்.


குண்ட்கட்டிதார் (Khuntkattidar) என்பது குறிப்பாக ஜார்க்கண்ட் மற்றும் சோட்டாநாக்பூர் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பழங்குடியினர் நில உரிமை  தொடர்பான சொல்லாகும். இது பொதுவாக வனப் பகுதிகளை  அழித்து முதன்முதலில் அந்த இடத்தை குடியிருப்புக்கும் சாகுபடிக்கும் ஏற்றதாக மாற்றிய பழங்குடியினரின் வழித்தோன்றல்களைக் குறிக்கிறது.


முண்டா பழங்குடியின சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்த மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரான மானுடவியலாளர் மற்றும் பாதிரியார் ஜான்-பாப்டிஸ்ட் ஹாஃப்மேன், 'முண்டாரி குண்ட்கட்டி' (Mundari Khuntkatti) முறையை சாதாரண தனிச்சொத்துரிமை விதிகளின்கீழ் புரிந்துகொள்ள முடியாது என்று வாதிட்டார். இது ஒரு வாடகை நிலமோ அல்லது சாதாரண சட்டப்பூர்வமான நில உடைமையோ அல்ல; மாறாக இது நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு தனித்துவமான முறை. இதில் 'குண்ட்கட்டிதாரர்கள்' நிலத்தை தங்களுக்கே உரித்தான முழு அதிகாரத்துடன் வைத்திருக்கிறார்கள் என்று அவர் விளக்கினார்.


பழங்குடியின மக்களின் பல ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, சோட்டாநாக்பூர் பகுதியில் அவர்களின் பாரம்பரிய நில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆங்கிலேய காலனித்துவ அரசாங்கத்தால் 1908-ஆம் ஆண்டு சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (CNT Act) கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் சட்டக் கட்டமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவராக தந்தை ஜே.பி. ஹாஃப்மேன் கருதப்படுகிறார். பழங்குடியினரின் நிலம் பழங்குடி அல்லாதவர்களுக்கு கைமாறுவதைத் தடுப்பதும், குண்ட்கட்டி மற்றும் புய்ன்ஹாரி (Bhuinhari) போன்ற பாரம்பரிய நில உரிமை முறைகளை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதும்தான் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதிகாரிகள் மற்றும் குடியேறியவர்களின் கூட்டுச் சதியால் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின நிலங்கள் பறிபோகாமல் தடுக்கும் வலிமையான சட்டப் பாதுகாப்பாக இது இன்றும் உள்ளது.


உல்குலன் (Ulgulan) போராட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்ட பழங்குடியினரின் தன்னாட்சி கனவு, பின்னர் 1900-களின் நடுப்பகுதியில் ஜெய்பால் சிங் முண்டா தலைமையில் தனி ஜார்க்கண்ட் மாநிலம் கோரும் இயக்கமாக மாறியது என்று எழுத்தாளர் பரா குறிப்பிடுகிறார்.


மத ரீதியான கருத்துக்கள்


முண்டா பழங்குடிச் சமூகம் குறித்து தேவாலய அதிகாரிகள் கூறிய சில கருத்துக்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, கிறிஸ்தவ கல்வியுடனான பிர்சாவின் தொடர்பு முடிவுக்கு வந்தது என்று புத்ராம் முண்டா கூறுகிறார்.


கிறிஸ்தவ மதத்திலிருந்து விலகிய பிறகு, பிர்சா ஒரு உள்ளூர் குருவின் மூலம் சில காலம் வைணவத்தின் (Vaishnavism) தாக்கத்திற்கு உள்ளானார்.


1885-ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு, வாழ்க்கை மற்றும் இயற்கையைப் பற்றிய தனது போதனைகளை பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் என்று புத்ராம் முண்டா கூறினார். அமைதிக்கு இடையூறு விளைவித்தல், கூட்டத்தைக் கூட்டுதல் மற்றும் ஆங்கிலேய அரசு, கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் ‘டிக்கு' (Diku) ஜமீன்தார்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாகக் கூறி ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்தனர்.


இவரது போதனைகள் 'பிர்சைட்' (Birsait) என்ற மத இயக்கத்தை உருவாக்கியது. இது பாரம்பரிய பழங்குடி மதம் (Sarnaism), கிறிஸ்தவம் மற்றும் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது.



அவரது ஆதரவாளர்கள் அவரிடம் பல அற்புதங்கள் இருப்பதாக நம்புகின்றனர். அவரை ஒரு மீட்பராகக் கருதி, "பகவான்" என்றும் "பூமியின் தந்தை" (Dharti Aba) என்றும் அழைக்கின்றனர்.


 புத்ராம் முண்டா கூறுகையில், பகவான் பிர்சா எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இலக்காகக் கொள்ளவில்லை. ஜமீன்தார்களாக நியமிக்கப்பட்ட சாதிச் சமூகத்தைச் சேர்ந்த வெளிநபர்களையும், கிறிஸ்தவ மதபோதகர்களையும் அவர் எதிர்த்தார். ஏனெனில் அவர்கள் இருவரையும் சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாகவே அவர் கருதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


கிறிஸ்தவ பழங்குடியினரை, பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்த்து புத்ராம் முண்டா பேசியுள்ளார். பழங்குடியினரின் புகழ்பெற்ற தலைவரான பிர்சா முண்டாவின் தந்தை சுக்னா முண்டாவின் மூத்த சகோதரரான கானு முண்டாவின் வம்சாவளியினர், பல தலைமுறைகளாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவதாகக் கூறினார். பழங்குடியினருக்கான அடையாளம் என்பது அவர்களின் முன்னோர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடிப்படையில் அல்ல என்று அவர் வாதிட்டார்.


அவரது கூற்றுப்படி, அவர்கள் வழிபடும் முறையில் வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து பழங்குடியினரும் தங்களின் தோற்றம் 'சிங்போங்கா' (Singbonga) என்ற ஒரே பிரபஞ்சப் பேரிறைவனிடமிருந்தே உருவானதாக நம்புகின்றனர்.


Original article : Amid debate over Adivasi identity, recalling the icon who helped define it: Birsa Munda. -Shubham Tigga

Share:

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான ஆண்டுப் புத்தகம், உலகளாவிய பாதுகாப்பு குறித்து என்ன கூறுகிறது? -குஷ்பூ குமாரி

எந்தெந்த நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன, அவற்றின் ஆயுதக் கையிருப்புகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன? இந்தியாவின் நிலை என்ன? "அணு மற்றும் மரபுசார் ஆயுதங்களின் பிணைப்பு" (nuclear–conventional entanglement) மற்றும் பல தனித்தனியாகக் குறிவைக்கக்கூடிய மீள்நுழைவு வாகனங்கள் (Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV)) என்றால் என்ன?


தற்போதைய செய்தி?


சுவீடனை தலைமையிடமாகக் கொண்ட 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' (Stockholm International Peace Research Institute (SIPRI)) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியா 2025-ஆம் ஆண்டில் இராணுவத்திற்காக 92.1 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது. இது உலகிலேயே ஐந்தாவது அதிகபட்ச இராணுவச் செலவாகும். இது கடந்த ஆண்டைவிட 8.9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.




முக்கிய அம்சங்கள்:


ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute (SIPRI)) என்றால் என்ன?


— 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) என்பது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சர்வதேச அமைப்பாகும். இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் தரவுகள், பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.


— ஆயுதப் பரிமாற்றங்கள் குறித்து 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்' வழங்கும் புள்ளிவிவரத் தரவுகள், அந்த அமைப்பால் வரையறுக்கப்பட்ட பெரிய அளவிலான ஆயுதங்களின் உண்மையான விநியோகங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். சர்வதேச அளவில் நடைபெறும் பெரிய ஆயுதப் பரிமாற்றங்களின் அளவை, 'Trend-Indicator Value' (TIV) என்ற பொதுவான அளவீட்டு முறையைப் பயன்படுத்தி ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கணக்கிடுகிறது.


Trend-Indicator Value (TIV): ஆயுதங்களின் பண மதிப்பை மட்டும் கணக்கிடாமல், அந்த ஆயுதங்களின் தரம் மற்றும் இராணுவத் திறனை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச ஆயுதப் பரிமாற்றத்தின் போக்கைக் கண்டறிய ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தும் ஒரு பிரத்யேக அளவீட்டு முறை.





2026-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள் யாவை?


1. உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து 2025-ஆம் ஆண்டில் தங்களது ராணுவத்திற்காக முன்னெப்போதும் இல்லாத அளவாக 2.9 டிரில்லியன் டாலர்களை (சுமார் 2.9 லட்சம் கோடி டாலர்) செலவிட்டுள்ளன. இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதார உற்பத்தியில் 2.5 சதவீதத்திற்குச் சமமாகும். உலகளாவிய ராணுவச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிப்பது இது 11-ஆவது ஆண்டாகும். மேலும், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தனது வரலாற்றிலேயே பதிவு செய்த மிக அதிகபட்சத் தொகை இதுவாகும். 


2. உலகிலேயே ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடாக அமெரிக்கா (US) முதலிடத்தில் உள்ளது. அது 2025-ஆம் ஆண்டில் 954 பில்லியன் டாலர்களைச் செலவிட்டது (இது 2024-ஆம் ஆண்டைவிட 7.5 சதவீதம் குறைவு). இது உலக ஒட்டுமொத்த ராணுவச் செலவில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காகும். சீனா 336 பில்லியன் டாலர்களுடன் (உலக அளவில் 12%) இரண்டாம் இடத்திலும், ரஷ்யா 190 பில்லியன் டாலர்களுடன் (6.6%) மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மனி 114 பில்லியன் டாலர்களையும், இந்தியா 92.1 பில்லியன் டாலர்களையும் செலவிட்டுள்ளன. 

3. இந்தியா-பாகிஸ்தான் மோதலை இந்த ஆண்டின் மிகவும் அபாயகரமான பதற்றப் பகுதிகளில் ஒன்றாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. பாகிஸ்தானின் விமான மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் சில அணுசக்தி தொடர்பான பணிகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க இரு தரப்பினரும் நடவடிக்கைகளை எடுத்தனர் என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டது.



4. ஆயுத மோதலின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை வெளிப்படையாக இணையவழித் தாக்குதல்களைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசையில், ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இவ்வாறு பதிவு செய்துள்ளது: "மே 7-10: இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லைப் பகுதியில் தீவிரமான துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டன."




5. கடந்த 2021-25-ஆம் ஆண்டு காலகட்டத்தில், பெரிய அளவிலான ஆயுதங்களின் சர்வதேசப் விற்பனை மற்றும் இறக்குமதி, பனிப்போர் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இது 2016-20-ஆம் ஆண்டு காலகட்டத்தோடு ஒப்பிடும்போது 9.2% அதிகமாகும். உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே 70 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. அதேநேரத்தில், 2021-25-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சர்வதேச அளவில் அதிக ஆயுதங்களை வாங்கிய நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 8.2% ஆகும். 


உலகளாவிய அணுசக்தி குறித்து அந்த அறிக்கை என்ன கூறுகிறது?


6. 2026-ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா 2025-ஆம் ஆண்டில் தனது அணு ஆயுதக் கையிருப்பைச் சிறிதளவு விரிவுபடுத்தி, புதிய வகை அணு ஆயுத விநியோக அமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதேநேரத்தில், பாகிஸ்தான் 2025-ஆம் ஆண்டில் புதிய விநியோக அமைப்புகள் மற்றும் அணுக்கருப் பிளவு பொருட்களை (Fissile material) சேகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.


7. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் (SIPRI) மதிப்பீடுகளின்படி, 2026-ஆம் ஆண்டு  ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்களும் இருந்தன. 2025-ஆம் ஆண்டில் இந்தியா தனது ஆயுதக் கையிருப்பைச் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும், நீண்டதூரம் பயணிக்கக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.







2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகின் அணு ஆயுதங்களைக் கொண்ட முதல் 9 நாடுகள்:

தரவரிசை

நாடு

மொத்த அணு ஆயுதங்கள்

1

ரஷ்யா

5,420

2

அமெரிக்கா

5,042

3

இங்கிலாந்து

225

4

பிரான்ஸ்

370

5

சீனா

620

6

இந்தியா

190

7

பாகிஸ்தான்

170

8

வட கொரியா

60

9

இஸ்ரேல்

90

மொத்தம்


12, 187


8. “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி  நிறுவனத்தின் 2026-ஆண்டுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள (SIPRI Yearbook 2026) முக்கியக் கண்டுபிடிப்புகள் என்னவென்றால், நாடுகள் தங்களின் தேசிய அதிகாரத்தின் ஆயுதமாக அணுஆயுதங்களை அதிகளவில் நம்பத் தொடங்கியுள்ளன. இது அணுஆயுதங்களின் எண்ணிக்கையையும் அவற்றின் பங்கையும் குறைப்பதற்காகப் பல ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளை தலைகீழாக மாற்றியுள்ளது. அதேநேரத்தில், தவறான கணக்கீடுகள் மற்றும் மோதல்கள் தீவிரமடைவதற்கான அபாயங்களும் அதிகரித்து வருகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

9. சமீபத்திய நவீனமயமாக்கலும் அறிவியல் முன்னேற்றங்களும் உலகை  ஆபத்தானதாக மாற்றி வருகின்றன என்று இந்த ஆண்டுப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. அணு ஆயுத-மரபுவழிப் போர் முனைப்பு, ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பம் (MIRVs) அதிகரிப்பது மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த அணுஆயுத விநியோக அமைப்புகள் ஆகியவை உலகை அச்சுறுத்தும் வளர்ச்சிகளாகும். இவை உலகளாவிய அணுஆயுதப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.


10. அணு-மரபுவழிப் போர்ச் சிக்கல்: ஒரே மாதிரியான உபகரணங்கள், குறிப்பாக ஏவுகணைகள், அணு மற்றும் மரபுவழி இராணுவத் திறன்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்படும் ஒரு தெளிவற்ற நிலையைக் குறிக்கிறது. இது, மோதல்கள் அணு ஆயுத மோதலாக மாறிவிடும் அபாயத்தை உருவாக்குகிறது.


11. ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பம் (MIRVs): இத்தொழில்நுட்பம், ஒரே ஒரு ஏவுகணையில் பல அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது. மேலும், அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு இலக்குகளைத் தாக்குமாறு நிரலாக்கம் (Program) செய்ய முடியும். இதனால் அந்த ஏவுகணையின் அழிவுத்திறன் பல மடங்கு அதிகரிக்கிறது.

2026-ஆம் ஆண்டு மே மாதத்தில், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை, ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்துடன்  (MIRVs) இணைத்து, இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதனை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence (MoD)) அறிவித்தது. ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைப் பரிசோதனையானது ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் மேற்கொள்ளப்பட்டது.


12. நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த அணுஆயுத விநியோக அமைப்புகளும் உலகளவில் அதிகரித்து வருகின்றன. அணுஆயுதம் வைத்துள்ள நாடுகள், தங்களின் ஆயுதங்களை நீர்மூழ்கிக் கப்பல்களில் அதிகளவில் நிலைநிறுத்தி வருகின்றன.


உலக நாடுகள் அணு ஆயுதங்களை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன?


1. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (Non-Proliferation of Nuclear Weapons (NPT)): 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். அணு ஆயுதங்கள் மற்றும் ஆயுதத் தொழில்நுட்பம் பரவுவதைத் தடுத்தல், அணு ஆற்றலின் அமைதியான பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் ஆயுதக் குறைப்பு இலக்கை முன்னெடுத்தல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.


ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 1967-ஆம் ஆண்டுக்குமுன் அணு வெடிப்புச் சாதனத்தை உருவாக்கிச் சோதித்த நாடுகளை (அமெரிக்கா, ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா) இந்த ஒப்பந்தம் 'அணு ஆயுத நாடுகள்' என்று சுட்டிக்காட்டுகிறது. மேலும், வேறு எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பெறுவதை இது  தடை செய்கிறது. 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. இந்தியா 1974-ஆம் ஆண்டில் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதற்குப் பதிலாக, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உலக நாடுகள் அனைத்திற்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தியது.




2. அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (Treaty on the Prohibition of Nuclear Weapons (TPNW)) 2017): இது அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான முதல் சட்டப்பூர்வ சர்வதேச ஒப்பந்தமாகும். அணு ஆயுதங்களை உருவாக்குவது, சோதனை செய்வது, தயாரிப்பது, வைத்திருப்பது அல்லது அணு ஆயுத மிரட்டல் விடுப்பது என அணு ஆயுதம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஒப்பந்தம் முற்றிலும் தடை செய்கிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.


3. விரிவான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT)) 1996): இது இராணுவ அல்லது அமைதி நோக்கங்களுக்காக நடத்தப்படும் அனைத்து வகையான அணு வெடிப்புகளையும் தடை செய்யும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். 1996-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இது இன்னும் ஒப்புதல் அளிக்கும்  நிலையிலேயே உள்ளது. 18 நாடுகள் இன்னும் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கவில்லை (ஒரு நாடு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாகத் தெரிவிக்கும் செயல்முறையே ஒப்புதல் அளித்தல் ஆகும்). இந்தியா இதில் கையெழுத்திடவில்லை.


4. புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் (New Strategic Arms Reduction Treaty (New START)): அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் பயன்பாட்டில் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றை ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் "புதிய உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்" (New START) கடந்த பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் காலாவதியானது. இருநாடுகளுக்கும் இடையே எஞ்சியிருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் இதுவே ஆகும்.



குறிப்பாக, இந்த ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது.            சமீபத்தில், உக்ரைன் போருக்கு இடையில் 2023-ஆம் ஆண்டில், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நடக்கும் அணு ஆயுதக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்குத் தன்னிச்சையாக நீட்டிக்க முன்மொழிந்தார்.

 

Original article : What does SIPRI Yearbook 2026 reveal about global security? -Khushboo Kumari

Share:

இல்லத்தரசிகளுக்கான இழப்பீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2001-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதியன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டுத் தொகையை ரூ. 8.4 லட்சத்திலிருந்து ரூ. 62.78 லட்சமாக உயர்த்தியது.


• டிசம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில் , மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீட்டுத் தீர்ப்பாயம் (Motor Accidents Claims Tribunal (MACT)), அந்தப் பெண்ணின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்குக் காப்பீட்டுத் தொகையாக ரூ.2,42,000 வழங்க உத்தரவிட்டது. டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், இதை ₹8.43 லட்சமாக உயர்த்தி, மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து 7.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் வாரிசுகள் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.


• ஒரு பெண் தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகச் செய்யும் பணிகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அவரது உடல் மற்றும் உணர்வு ரீதியான உழைப்பு வீட்டின் நான்கு சுவர்களுக்குள் இருந்தாலும், அதன் தாக்கம் மிகவும் விரிவானது என்பதை மறுக்க முடியாது. இன்று கணவரின் பங்களிப்பிற்கும், நாளை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருப்பதன் மூலம், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களே அச்சாணியாகத் திகழ்கின்றனர் என்று அந்த அமர்வு குறிப்பிட்டது. மேலும், ஒரு இல்லத்தரசியின் இழப்பு என்பது  கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமான இழப்பு அல்ல என்றும் நீதிபதி கரோல் தீர்ப்பில் குறிபிட்டுள்ளார்.


• வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண் ஒருவர் இறப்பு தொடர்பான வழக்குகளில், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்கள் "வீட்டுப் பராமரிப்பு இழப்பு" (Loss of domestic care) என்ற தலைப்பின்கீழ் கூடுதலாக ₹30,000 மொத்தத் தொகையை வழங்க வேண்டும் என்று அந்த அமர்வு கூறியது. இல்லத்தரசிகளின் வருமானம் மிகக் குறைந்த அளவிலேயே கணக்கிடப்படும் நிலையில், இந்தக் கூடுதல் தொகை அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய உதவும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


• குடும்பத்தின் சுமுகமாக கொண்டும் செல்லும் பணியில் பெண்களின் பங்களிப்பு, குழந்தைகளுக்குக் கிடைக்கும் தாயின் அரவணைப்பு இல்லாமல் போவது, வாழ்க்கைத் துணையின் ஆதரவு இழப்பு, வயது வந்த பிள்ளையின் ஆதரவு மற்றும் பராமரிப்பு, அத்துடன் உயிரிழந்தவரின் பெற்றோருக்கான ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அந்தத் தொகையானது கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


• ஒரு இல்லத்தரசி பாரம்பரியமான, பண ரீதியான வருமானம் எதையும் வீட்டிற்கு ஈட்டித் தராமல் இருக்கும் பட்சத்தில், அவருடைய மாதாந்திர வருமானத்திற்கான ஒரு அடிப்படை குறைந்தபட்சத் தொகையாக இந்த 30,000 ரூபாயைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது. அதேநேரம், அந்த இல்லத்தரசி ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டுபவராக இருக்கும்பட்சத்தில், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் முன்பு நிரூபிக்கப்படும் அவரது மாதாந்திர வருமானத்தோடு சேர்த்து, அவர் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டதற்கான இழப்பீட்டுத் தொகையும் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.


உங்களுக்குத் தெரியுமா?


• வீட்டுப் பராமரிப்பில் ஈடுபடும் பெண்கள் செய்யும் வேலைகள் எவ்வாறு பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன என்பதை விளக்கிய நீதிமன்றம், சமையல், வீட்டைச் சுத்தம் செய்தல் மற்றும் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற அன்றாட வீட்டுப் பணிகள், சம்பளம் வாங்கும் உழைப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதிலும், நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனை இயக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று குறிப்பிட்டது. இருப்பினும், இத்தகைய பங்களிப்புகள் பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) போன்ற கணக்கீடுகளில் உற்பத்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


• அனுமான வருமானத்தைக் (Notional income) கணக்கிடும் "இந்த வழக்கமான முறைகளால் நாம் எவ்வளவு பெரிய விஷயத்தை இழக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள, ஒவ்வொரு நாளும் உலகளவில் சுமார் 1,600 கோடி மணிநேரம் தனிநபர்களால் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகவும், பராமரிப்புப் பணிகளுக்காகவும் அர்ப்பணிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.


• மேலும், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு (Time Use Survey) குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த ஆய்வு, குறிப்பாக பெண்கள் மேற்கொள்ளும் ஊதியமற்ற வீட்டு வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகளின் அளவை வெளிக்காட்டுகிறது.


• இந்த ஆய்வின்படி, 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் (Unpaid domestic work) ஈடுபடுகிறார்கள். ஆனால், ஆண்கள் இதற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சராசரியாக, பெண்கள் வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும்கூட, ஆண்களைவிட 2.6 மடங்கு அதிகமாக ஊதியம் இல்லாத பராமரிப்பு மற்றும் வீட்டுப் பொறுப்புகளைச் சுமக்கிறார்கள். இந்த ஒருதலைப்பட்சமான சூழ்நிலைதான் நாட்டில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு (Female labour force participation) 31.7-சதவீதமாகக் குறைவாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.          ஏனெனில், சமூகக் கட்டமைப்பு பொதுவாக இதுபோன்ற பொறுப்புகள் தானாகவே பெண்கள் மீதுதான் விழும் என்று கருதுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பெண்களின் இந்த ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகள்       15 முதல் 17 சதவீதம் வரை பங்களிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் இது இன்னும் ஊதியமின்றியும் அங்கீகாரமின்றியும் தொடர்கிறது என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.


• பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, ஊதியம் பெறாத பராமரிப்புப் பணி என்பது ஒரு குடும்பத்திற்குள்ளும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் ஊதியம் பெறாத அனைத்து சேவைகளையும் குறிக்கிறது. இதில் நபர்களைப் பராமரித்தல், வீட்டு வேலைகள் மற்றும் தன்னார்வ சமூகப் பணிகள் ஆகியவை அடங்கும். இது போன்ற செயல்பாடுகள் பணியாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், கோட்பாட்டளவில் இவற்றைச் செய்வதற்கு ஒரு மூன்றாம் நபருக்கு ஊதியம் வழங்க முடியும்.


• பொருளாதார நடவடிக்கைகளின் நிலையான அளவீடுகள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளால் செய்யப்படும் இந்த வேலைகளின் பெரும் பகுதியை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இந்த வேலைக்காக ஒதுக்கப்படும் நேரத்தில் நிலவும் பாலின ரீதியான ஏற்றத்தாழ்வு மிகவும் வெளிப்படையானது. உலகளவில் செய்யப்படும் மொத்த ஊதியம் இல்லாத பராமரிப்பு வேலைகளில் 75 சதவீதத்தைப் பெண்கள்தான் செய்கிறார்கள் என்று ‘McKinsey’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில், 'Time Use' குறித்த 2019-ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலக அறிக்கையின்படி, பெண்கள் ஒரு நாளைக்கு 299 நிமிடங்களை ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகிறார்கள், ஆண்கள் 97 நிமிடங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, பெண்கள் முறையான பொருளாதாரத்தில் பங்கெடுப்பதோடு நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Original article : What exactly Supreme Court ruling on compensation for homemakers said? -Priya Kumari Shukla

Share:

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பணிக்குழு, மாணவர்களின் தற்கொலைகளை வெறும் மனநலப் பிரச்சினை மட்டுமல்ல என்று ஏன் கருதுகிறது? -அமால் ஷேக்

 பல வருட அறிக்கைகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) விதிகள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு உத்திகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நேரடிச் சட்டக் கட்டமைப்பு எதுவும் இன்னும் இல்லை என்பதை தேசிய பணிக்குழு (National Task Force (NTF)) சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

மாணவர்களின் மனநலம் மற்றும் தற்கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசிய பணிக்குழு (NTF) ஜூன் மாதம் 8 திங்களன்று அன்று வெளியிட்ட இடைக்கால அறிக்கையில், இந்தியாவில் மாணவர் தற்கொலைகளை வெறும் மனநலப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்று தேசிய பணிக்குழு வாதிடுகிறது.



அமித் குமார் மற்றும் பலர் vs இந்திய ஒன்றியம்-2026 (Amit Kumar & Ors vs Union of India) வழக்கில், இந்தியாவில் மாணவர் தற்கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர், இது அதே ஆண்டில் நடந்த வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகளைவிட அதிகமாகும். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலை மரணங்களில் இது 7.6% பங்கைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்கான காரணங்களை ஆராயவும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நிறுவன நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான கட்டமைப்பைப் பரிந்துரைக்கவும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் ஒரு தேசிய பணிக்குழுவை (NTF) உச்ச நீதிமன்றம் அமைத்தது.


தேசிய பணிக்குழுவின் அறிக்கை கூறுவது என்ன?


மாணவர்களின் தற்கொலைகள் பொதுவாக மனநலம் சார்ந்த பிரச்சனையாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அவை உண்மையில் கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுதான் என்பது தேசிய பணிக்குழுவின் (NTF) முக்கியக் கருத்தாகும். அந்த அறிக்கையின்படி, இப்பிரச்சினை குறித்த முந்தைய அறிக்கைகள் அனைத்தும் முக்கியமாக ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தியிருந்தன.


"மாணவர்களின் நலன்தொடர்பான இதே போன்ற சிக்கல்கள் ஆண்டுதோறும் பதிவாகி வருகின்றன. இருப்பினும், இந்தத் துறையில் நாம் பெரிய முன்னேற்றம் கண்டதாகத் தெரியவில்லை" என்று தேசியப் பணிக்குழு (NTF) குறிப்பிட்டது. எனவே, ஏதாவது நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஒரு நிரந்தரமான மற்றும் தற்காப்பு ரீதியான கட்டமைப்பை உருவாக்குவதே தங்களது நோக்கம் என்று பணிக்குழு கூறியுள்ளது.


இந்த அறிக்கையானது, தற்கொலை எண்ணத்தை ஒரு தொடர் சங்கிலியாகப் பார்க்கிறது, இதில் உயிரிழப்பு என்பது கடைசி கட்டம் மட்டுமே. அது தற்கொலை எண்ணங்கள், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல், சமூகத்திலிருந்து விலகி இருத்தல் மற்றும் படிப்பை பாதியில் கைவிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான நிலை என்று வரையறுத்தது. இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கும், 200-க்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு வடிவத்தில் தற்கொலை எண்ணத்தை அனுபவிப்பதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த அறிக்கையின்படி, ஒரு மாணவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுத்து அவர்களை உயிரோடு காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள் அல்ல; ஒரு மாணவரை அந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டிய காரணங்களை ஆராய்ந்து சரிசெய்வதே எங்களது நோக்கம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சட்டத்தில் உள்ள குறைபாடு?


தேசியப் பணிக்குழுவின் (NTF) மிக முக்கியமான கண்டுபிடிப்பு சட்டம் சார்ந்தது ஆகும். பல ஆண்டுகால அறிக்கைகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகள் மற்றும் அரசாங்கத்தின் உத்திகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உயர் கல்வியில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நேரடிச் சட்டக் கட்டமைப்பு எதுவும் இல்லை. அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது: "மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், தற்கொலைகளைக் கையாள்வதற்கும் தடுப்பதற்கும் நேரடியான சட்டப்பூர்வ, ஒழுங்குமுறை அல்லது நிறுவனக் கட்டமைப்பு முற்றிலும் இல்லாமல் இருப்பதுதான். எடுக்கப்படும் பெரும்பாலான நடவடிக்கைகள் பொதுவானவையாகவும், ஒரு பிரச்சனை நடந்த பிறகு அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலுமே உள்ளன.


தற்கொலை தடுப்பு விஷயத்தில் இந்தியாவின் ஒரே பிரத்யேக கொள்கை கருவியான தேசிய தற்கொலை தடுப்பு உத்தியை (National Suicide Prevention Strategy), "தெளிவான செயலாக்க வழிகாட்டுதல்கள் இல்லாத ஒரு கருத்தியல் வடிவம்" என்று விவரிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மற்றும் கனடா போன்ற நாடுகள், கல்வி நிறுவனங்களின் பொறுப்பை உறுதி செய்யும் மற்றும் தற்கொலைகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால், இந்தியாவின் நடவடிக்கை வெறும் வழிகாட்டுதல் என்ற அளவிலேயே நின்றுவிட்டது.



சட்டப்பூர்வ கட்டமைப்பும் அதன்கீழ் உருவாக்கப்படும் விதிகளும் மட்டுமே அதைச் செயல்படுத்தும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வெறும் வழிகாட்டுதல்கள் அந்த அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, எனவே அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் ஏற்படுகின்றன.


இந்தக் கண்டுபிடிப்பானது, 2025-ஆம் ஆண்டில் சுக்தேப் சாஹா vs ஆந்திரப் பிரதேச அரசு (Sukdeb Saha vs The State of Andhra Pradesh (2025)) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பை ஒட்டி வந்துள்ளது. இந்தத் தீர்ப்பில், சட்டப்பிரிவின் 21-வது பிரிவின்கீழ் "மனநலம் என்பது வாழ்வதற்கான உரிமையிலிருந்து பிரிக்க முடியாதது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைத் தடுப்பிற்கான ஒரு ஒருங்கிணைந்த, நடைமுறைப்படுத்தக்கூடிய கட்டமைப்பு இந்தியாவில் இல்லாத சட்ட மற்றும் ஒழுங்குமுறை ரீதியான ஒரு பெரிய வெற்றிடத்தைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டது.


நீதிமன்றம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான சில தற்காலிகக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டது, ஆனால் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படும் வரை மட்டுமே இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் தெளிவுபடுத்தியது. தங்களின் இறுதி அறிக்கை அந்தச் சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படும் என்று தேசியப் பணிக்குழு (NTF) தெரிவித்துள்ளது.


உயர்கல்வித் துறை எவ்வாறு மாறியுள்ளது?


இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2001-02-ஆம் ஆண்டில் 88 லட்சமாக இருந்தது, 2021-22-ஆம் ஆண்டில் 4.32 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 60%-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும், 75%-க்கும் அதிகமான கல்லூரிகளும் தனியார் நிர்வாகத்தின்கீழ் இயங்குகின்றன.


2021-2022-ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்கல்விக்கான பொதுச் செலவினத்தின் பங்கு 1.29%-ஆக இருந்தது.                     இது கடந்த பல ஆண்டுகளாக தேசியக் குழுக்கள் பரிந்துரைத்து வரும் 2% என்ற அளவைவிட மிகவும் குறைவு. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியைவிட, மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததே இதன் விளைவு என்று அந்த அறிக்கை கூறுகிறது.


தற்போது மொத்த மாணவர் சேர்க்கையில் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (OBC) சேர்ந்த மாணவர்கள் தற்போது மொத்த மாணவர் சேர்க்கையில் ஏறக்குறைய 60%-ஆக உள்ளனர். ஆனால், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (NITs), 67.71% ஆசிரியர்கள் SC/ST/OBC அல்லாத பின்னணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மொத்த ஆசிரியர்களில் பட்டியல் சாதியினர் (SC) 7.57%-ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) ஆசிரியர்கள் 1.91%-ஆகவும் உள்ளனர். தனியார் பல்கலைக்கழகங்களில், 67%-ஆசிரியர்கள் முன்னேறிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், 3.59%-பேர் பட்டியல் சாதியினர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1.68% பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். "இந்தச் சமூகப் பிரதிநிதித்துவ இடைவெளி, கல்விச் சூழலில் மாணவர்களின் ஒருங்கிணைப்பு குறைவாக இருப்பதற்கு வழிவகுக்கக்கூடும். இத்தகைய குறைந்த அளவிலான கல்விசார் ஒருங்கிணைப்பு, மனச்சோர்வு, இடைநிற்றல் மற்றும் தற்கொலைக்கான அதிக ஆபத்து ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் தேசிய பணிக்குழு குறிப்பிட்டது.


நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், பலமுறை நினைவூட்டல்களும் காலக்கெடு நீட்டிப்புகளும் வழங்கப்பட்ட பின்னரும்கூட, 60,000-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் வெறும் 3.5%-நிறுவனங்கள் மட்டுமே இதற்குப் பதிலளித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.


மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேசிய பணிக்குழுவிடம் கூறியது என்ன?


தேசியப் பணிக்குழு (NTF) கணக்கெடுப்பிற்குப் பதிலளித்த மாணவர்களில் சுமார் 46% பேர், தங்கள் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். யார் படிப்பைத் தொடர்கிறார்கள் மற்றும் யார் பாதியில் விலகுகிறார்கள் என்பது குறித்த தரவுகள் ஒரு தெளிவான உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.

2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பட்டியல் சாதி, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 13,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIMs) ஆகியவற்றிலிருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். நாடாளுமன்றத்தில், இத்தகைய விலகல்களுக்கான காரணங்களை அரசாங்கம் ஆய்வு செய்துள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அன்றைய கல்வித்துறை இணை அமைச்சர், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிற துறைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்ததால் படிப்பை மாற்றிக்கொண்டது அல்லது அவர்களின் தனிப்பட்ட காரணங்களினால்தான் இவை முக்கியமாக நிகழ்ந்துள்ளன என்று தெரிவித்தார்.


ஆனால், இந்த அறிக்கை ஆராய்ச்சியாளர் பிரபாகர் கிருஷ்ணமூர்த்தி 2025-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வை ஆதாரமாகக் காட்டுகிறது. அதன்படி, டெல்லி மற்றும் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IITs) படிக்கும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (SC/ST) மாணவர்கள், பொதுப் பிரிவினரைவிட 318% அதிகமாகப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழலை எதிர்கொள்கிறார்கள் என்றும், விடுதிக் கட்டணம் மற்றும் கல்விப் பொருட்களுக்கான வசதிகள் குடும்பங்களிடம் இல்லாததால், பொருளாதார நெருக்கடியே 47.6%-இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் படிப்பை நிறுத்தக் காரணமாக அமைகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயர்தரக் கல்வி நிறுவனங்கள் வெறும் "முன்னேற்றத்திற்கான ஒரு கானல் நீரை" (Mirage of mobility) மட்டுமே காட்டுகின்றன. ஏனெனில், இடஒதுக்கீடு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் உள்ளே அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு அவர்களுக்கான கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்தவில்லை என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.


ஒரு மாநிலப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், "தங்களுக்கு வர வேண்டிய கல்வித்தொகை (Scholarship) வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள், முரண்பாடுகள் மற்றும் சமமற்ற நிலைகள் குறித்து மிக விரிவாகப் பேசினர்". சில மாணவர்கள் தங்களுடைய சூழ்நிலையை விவரிக்கும் போது: கல்லூரிகள் தங்களுடைய கல்விக்கட்டணத்தில் (Tuition fees) இருந்து கல்வித்தொகைக்கான மதிப்பை முன்கூட்டியே கழித்துக் கொண்டன; ஆனால், அரசாங்கத்திடமிருந்து அந்தக் கல்வித்தொகை திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, அந்தப் பண நிலுவைக்கு மாணவர்களையே பொறுப்பாக்கின என்று கூறினர். இதனால், தாங்கள் ஏற்படுத்தாத பண நிலுவைகளுக்காக (Arrears) மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாமலும், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டும், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் மறுக்கப்பட்டும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.


ஆலோசனை சேவைகள் குறித்து தேசியப் பணிக்குழு கண்டறிந்த  உண்மைகள்


உயர் கல்வி நிறுவனங்கள் முழுவதும் 27,136 "பிரத்யேக ஆலோசகர்கள்" இருப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தரவுகள் கூறுகின்றன.  அதாவது தோராயமாக 221 மாணவர்களுக்கு 1 ஆலோசகர் வீதம் உள்ளனர். ஆனால், இந்தத் தேசியப் பணிக்குழு (NTF) அங்கிருந்து சீரற்ற முறையில் (Random)      50-நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தகுதிகளை ஆய்வு செய்தபோது, அந்த 50-பேரில் 47-பேர் பேராசிரியர்களாகவோ, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாகவோ அல்லது கல்வி ஆலோசகர்களாகவோதான் இருந்தனரே தவிர, அவர்கள் யாரும் மனநலத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இல்லை.


மேலும், 70%-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர மனநல சேவை வழங்குநர் இல்லை என்பதையும், மேலும் 4%-க்கும் குறைவான நிறுவனங்களிடம் மட்டுமே தற்கொலை ஆபத்து மேலாண்மை நெறிமுறைகள் உள்ளன. இந்தியாவின் 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) வெறும் நான்கு நிறுவனங்களில் மட்டும்தான் மனநல அவசரநிலைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை இருந்தது. மேலும், மாணவர் ஒருவர் உயிரிழந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கும் வழிமுறைகள் எந்தவொரு இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இல்லை.


மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பதிலளித்தவர்களில் சுமார் 9%-பேர் கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்கு 'அடிக்கடி' அல்லது 'மிக அடிக்கடி' தற்கொலை எண்ணங்கள் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். பல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை சேவைகளைத் தாங்கள் நம்புவதில்லை என்று பணிக்குழுவிடம் (NTF) கூறினர். ஏனெனில், "கடந்த காலங்களில் தாங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் தங்களின் பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.


குறிப்பாக மருத்துவக் கல்வி குறித்துப் பேசிய மாணவர்கள், தூக்கமோ உணவோ இன்றித் தொடர்ந்து 36 முதல் 48 மணி நேரம் வரை தங்களை வேலை செய்ய வற்புறுத்துவதாக விவரித்தனர். விடுப்போ அல்லது ஓய்வோ கேட்கும் மாணவர்கள் "பலவீனமானவர்கள்", "சோம்பேறிகள்" மற்றும் "வேலை செய்யவே விருப்பம் இல்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒரு மாணவர் மருத்துவக் கல்வியை ஒரு வகையான "கொத்தடிமை முறை" (Bonded labour) என்று விவரித்தார். டெல்லியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 100% வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த ஒரு தற்கொலைக்குப் பிறகு, மாணவர்கள் தினமும் தங்களது திறன்பேசிகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, இதனால் மாணவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.


மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த உடனேயே, சக மாணவர்களும் பேராசிரியர்களும் அவர்களின் JEE (Joint Entrance Examination) மற்றும் NEET (National Eligibility cum Entrance Test) தரவரிசைகளை விசாரிக்கிறார்கள்.  இதன் மூலம் அம்மாணவர்கள் எந்த இடஒதுக்கீடு பிரிவின்கீழ் வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களின் சாதியைக் கண்டறிய முயற்சிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வளாகத்திற்குள், பல்வேறு கல்வித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வலைப்பின்னல்களில் சேருவது "vibe checks" எனப்படும் முறைசாரா நேர்காணல்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நேர்காணல்களில் ஒருவரின் ஆங்கிலப் புலமை மற்றும் நகர்ப்புற தோற்றம் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள் "சப்ரி" (chhapri) என்ற இழிசொல்லால் அழைக்கப்படுகிறார்கள்.


குடும்பத்தினரால் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களோ அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட (LGBTQ+) சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களோ, ஏதேனும் மனநல பாதிப்பு அல்லது ஆபத்தான சூழலில் இருக்கும்போது கல்வி நிறுவனம் அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. இது போன்ற சூழலால், அம்மாணவர்கள் தங்களுக்குத் தேவையான முறையான உதவிகளைப் பெற முடியாமல் முற்றிலுமாகத் தயங்குகிறார்கள். பேராசிரியர்களோ, மாணவர்களின் மனநலப் பிரச்சினையை ஒரு தனிநபர் பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். எங்கள் வேலை பாடம் நடத்துவதும் ஆராய்ச்சி செய்வதும்தான். ஆனால் எங்களிடம் வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதால், எங்களால் பாடம் நடத்துவதையோ அல்லது மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவதையோ முழுமையாகச் செய்ய முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.


தேசிய பணிக் குழுவின் (NTF) பரிந்துரைகள்


இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகளாக இந்த இடைக்காலப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட காலியாக உள்ள அனைத்துப் பேராசிரியர் பணியிடங்களும் 3 மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பதவிகள் ஒரு மாதத்திற்கு மேல் காலியாக இருக்கக் கூடாது.


மாணவர் தற்கொலைகள் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதுகுறித்து அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தங்களைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும், மாநில பொறுப்பு அதிகாரிகளுக்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். விடுதி வசதி கொண்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 24 மணி நேரமும் தகுதிவாய்ந்த மருத்துவ உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) தனது வருடாந்திரத் தரவுகளில், பள்ளி மாணவர்களின் தற்கொலைகளையும், உயர்கல்வி மாணவர்களின் தற்கொலைகளையும் தனித்தனியாகக் கணக்கிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.


இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றுவது குறித்த தனது பரிந்துரையை தேசியப் பணிக்குழு (NTF) இன்னும் வழங்கவில்லை. அது இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போதிருக்கும் கொள்கைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாததால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று இந்த இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Original article : Why Supreme Court-appointed taskforce framed student suicides as not just a mental health issue?. -Amaal Sheikh

Share: