இந்தியா மாற்றுத்திறனாளிகளுக்கான, பொதுவான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்ட வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் (Digital India Mission) மூலம் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, இந்தியா ஒரு டிஜிட்டல் நல அரசாக (digital welfare state) உலகிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் நிலையை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் சென்றடைதல் என்ற வாக்குறுதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் விலக்கப்பட்டே உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாக, அவர்களுக்கான ஓய்வூதியம் என்பது மாற்றுத்திறன் தன்மை அல்லது அதன் தீவிரத்தின் அளவைக் கொண்டு அவர்களுக்குரிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக, வசிப்பிடம், மாநில அரசுகளின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் சிக்கலான அதிகாரத்துவ நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சென்றடையும் சேவை எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு மக்கள் நலக் கட்டமைப்பிற்கு வெளியேயே, சமூகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இந்த மக்கள் இன்னும் இருந்து வருகின்றனர்.
போதிய பாதுகாப்பற்ற சமூக நலத்திட்டம்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யப்பட்டனர். இன்று, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் மாறிவரும் நோய்ப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4.5 கோடி முதல் 6 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை இந்திய உச்சநீதிமன்றம் ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம்-2016 (Rights of Persons with Disabilities Act) சட்டப் பாதுகாப்பை வழங்கினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், குறிப்பாக ஓய்வூதியங்கள் ஒருங்கிணைப்பற்றதாகவும், அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவும், அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்டதாகவும் மட்டுமே உள்ளன. இதன் விளைவாக, இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme) மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஓய்வூதியத் தொகை மாதத்திற்கு வெறும் ₹300 முதல் ₹500 வரை மட்டுமே உள்ளது, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ₹1,000 முதல் ₹3,000 வரை வழங்குகின்றன.
ஓய்வூதியத் திட்டங்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 0.02% மட்டுமே செலவிடுகிறது. இதை ஒப்பிடுகையில், தென்னாப்பிரிக்கா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.12% முதல் 0.15% (ஆறு மடங்கு அதிகம்) வரையும்; பிரேசில் 0.45% முதல் 0.50% (20 மடங்கு அதிகம்) வரையும்; பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) நாடுகள் 2.2% (110 மடங்கு அதிகம்) மற்றும் ஆஸ்திரேலியா 0.35% முதல் 0.40% (20 மடங்கு அதிகம்) வரையும் செலவிடுகின்றன.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, சிறந்த பொருளாதாரம் மாற்றுத்திறனாளிகளைச் சமூகத்தில் உள்ளடக்குவதை அவசியமாக்குகிறது. மாற்றுத்திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிலிருந்து விலக்கப்படும்போது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% முதல் 7% வரை இழக்க நேரிடும் என்று உலக வங்கியும் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டமும் (United Nations Development Programme (UNDP)) மதிப்பிடுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான வருமானம் குடும்ப நிலைத்தன்மை, கிராமப்புற நுகர்வு மற்றும் தொழிலாளர் பங்கேற்பை மேம்படுத்துகிறது. செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் பரந்த பொருளாதார நன்மைகளை உருவாக்கக்கூடியது என்றும், அதன் நிதிப் பெருக்கிகள் (fiscal multipliers) 1.4 முதல் 1.6 வரை இருக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், 2025-ஆம் ஆண்டின் பொது நலன் பொருளாதார அறிக்கை (Pro Bono Economics report), மாற்றுத்திறனாளி ஓய்வூதியங்களிலிருந்து கிடைக்கும் சமூக-பொருளாதாரப் பலன்கள் அவற்றின் செலவுகளைவிட ஏறக்குறைய 48% அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை வெறும் நலத்திட்டச் செலவாக மட்டும் பார்க்கக்கூடாது. அவை ஒரு முதலீடாகவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் பயனுள்ள வழியாகவும் அமைகின்றன.
அரசியலமைப்பின் 41-வது பிரிவின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்குப் பொது உதவி (public assistance) வழங்குவதற்கான அரசின் கடமையைச் செயல்படுத்தவும், ஓய்வூதியப் பலன்கள் உட்பட போதுமான சமூகப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் 2016-ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் 24-வது பிரிவை நடைமுறைப்படுத்தவும், இந்தியா குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய அடிப்படை விகிதத்தை (Minimum Universal Disability Pension Floor Rate (MUDPFR)) உடனடியாக உருவாக்க வேண்டும். இத்தகைய ஒரு நடவடிக்கை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை வெறும் தொண்டு அல்லது அரசாங்கத்தின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் உதவி என்கிற அணுகுமுறையிலிருந்து மாற்றி, குடிமக்கள் உரிமைகளின் ஒரு அங்கமாக மாற்றுவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் "அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி" (சப்கா சாத், சப்கா விகாஸ்) என்ற வாக்குறுதியை உண்மையாக நிறைவேற்ற முடியும். மாற்றுத்திறனாளிகள் எங்கு வசித்தாலும், அவர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்குக் குறையாத தொகையைப் பெறுவதை உறுதி செய்வதோடு, குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய அடிப்படை விகிதமானது (MUDPFR), மாநில அரசுகள் விரும்பினால் தங்களின் பங்காகக் கூடுதல் தொகையையும் வழங்கிக் கொள்ள இது வழிவகுக்கும்.
இது ஒரு சாத்தியமில்லாத கோரிக்கை அல்ல. தென்னாப்பிரிக்கா, நாடு முழுவதும் ஒரே தகுதிகளுடன் ஒரு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவியை வழங்குகிறது. பிரேசிலின் மாதாந்திர சமூக உதவித் திட்டம் (Benefício de Prestação Continuada (BPC)) ஒரு தேசிய குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் நாடு தழுவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன. கென்யா, ருவாண்டா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளும் தேசிய அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான வருமான ஆதரவை வழங்குகின்றன. தரநிலைகள் ஒரே மாதிரியான முறையில் அமைக்கப்படும்போது, உலகளாவிய அணுகல் மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறினாலும் தடையின்றி நிதியுதவி கிடைக்கும் வசதி ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன என்பதை சர்வதேச அனுபவங்கள் காட்டுகின்றன.
40 லட்சம் பயனாளிகளுக்கு மாதம் ₹8,000 வழங்கும் குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய அடிப்படை விகிதத் (MUDPFR) திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் ₹38,400 கோடி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08%) செலவாகும். அதேசமயம், 65 லட்சம் பயனாளிகளுக்கு ₹10,000 வழங்கினால் ₹78,000 கோடி செலவாகும். மாதம் ₹15,000 ஓய்வூதியம் வழங்கினால்கூட, செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2%-க்கும் குறைவாகவே இருக்கும். உணவு மானியங்களுக்கு ₹2.05 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ₹1.80 லட்சம் கோடியும், வரிச் சலுகைகள் மற்றும் வருவாய் இழப்புகளுக்காக ₹1.72 லட்சம் கோடியும், உள்கட்டமைப்புக்கு ₹11.11 லட்சம் கோடி ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது, இத்தகைய செலவினம் நிதிரீதியாக நிர்வகிக்கக்கூடியதாகவே உள்ளது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் மற்றும் அவர்களின் நல்வாழ்விற்காக அரசாங்கம் செலவிடும் தொகை பொதுச் செலவினங்களில் இன்னும் மிக மிகக் குறைந்த பங்காகவே தொடர்கிறது.
பரவலாக்கப்பட்ட நிலையிலிருந்து ஒருங்கிணைப்பை நோக்கி
ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றுக்கு இடையே பகிரப்பட்டுள்ள தற்போதைய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய முறையானது, இரட்டிப்புப் பணிகள், தாமதங்கள் மற்றும் பொறுப்புக்கூறலில் தெளிவற்ற நிலை ஆகியவை ஏற்படுகின்றன. இதேபோன்ற சவால்களை எதிர்கொண்ட நாடுகள், தென்னாப்பிரிக்காவின் தென்னாப்பிரிக்க சமூகப் பாதுகாப்பு முகமை (South African Social Security Agency (SASSA)), ஆஸ்திரேலியாவின் தேசிய மாற்றுத்திறனாளி காப்பீட்டு முகமை (National Disability Insurance Scheme (NDIA)), பிரேசிலின் தேசிய சமூகக் காப்பீட்டு நிறுவனம் (Instituto Nacional do Seguro Social (INSS)) மற்றும் அயர்லாந்தின் சமூகப் பாதுகாப்புத் துறை (Department of Social Protection) போன்ற ஒரே தேசிய அதிகார அமைப்பை உருவாக்குவதன் மூலம் அவற்றை எதிர்கொண்டன. இத்தகைய அதிகாரம் தகுதி விதிமுறைகள், ஒரு தேசியப் பதிவேடு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஓய்வூதியத்தை மாற்றிக்கொள்ளும் வசதி, டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, குறைதீர்ப்பு மற்றும் மாநில வாரியான செயல்திறன் கண்காணிப்பு ஆகியவற்றை மேற்பார்வையிட இந்தியாவிற்கும் ஒரு தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய ஆணையம் தேவைப்படுகிறது. இதற்கு இலக்கு ஒரே தரநிலை, ஒரே அமைப்பு, ஒரே தேசம் (one standard, one system, and one nation) என்று இருக்க வேண்டும்.
ஒரு வலுவான மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐ.நா. உடன்படிக்கையின் 28-வது பிரிவு, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரை எண்-202, நீடித்த வளர்ச்சி இலக்கு-1.3, மற்றும் ஜி-20 இந்தியத் தலைவர்களின் பிரகடனம் (G-20 New Delhi Leaders' Declaration) ஆகியவற்றின்கீழ் இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகளைச் செயலாக மாற்றுவதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சியை வலுப்படுத்தும். இந்தக் கட்டமைப்புகள் அனைத்தும் சமூகப் பாதுகாப்பை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் ஒரு முக்கியத் தூணாக அங்கீகரிக்கின்றன.
ஓய்வூதியங்களுடன் வேலைவாய்ப்பு ஆதரவையும் இணைப்பது, மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வாழ்வாதாரத்தைத் தாண்டி முன்னேற உதவும். ஒரு குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய அடிப்படை விகிதப் (MUDPFR) பொருளாதாரப் பலன்களையும் அளிக்கக்கூடும். சிங்கப்பூர், தென்கொரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியங்களை வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கின்றன. இந்தியாவும் இதேபோல் தனது பரவலாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள மாதிரிகளில் குறிப்பிட்ட நைஜீரியாவின் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள், இங்கிலாந்தின் 'வேலைக்கான அணுகல்' (Access to Work) திட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஊதிய மானியங்கள் ஆகியவை அடங்கும். இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள பிரதமரின் பின்தங்கிய பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழிற்பயிற்சி வழங்கும் திட்டம் (Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampanna Hitgrahi (PM-DAKSH)), தேசிய அறிவுத்திறன் பயிற்சித் திட்டம் (National Apprenticeship Promotion Scheme (NAPS)) மற்றும் மாநில அளவிலான முதலாளிகளுக்கான ஊக்கத்தொகைகள் போன்ற திட்டங்கள், இந்தப் புதிய விரிவாக்கத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.
அரசியலமைப்பின் கட்டாயம்
ஒரு குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய அடிப்படை விகிதமானது (MUDPFR), அரசியலமைப்பின் சமத்துவம், சமமான பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகிய உத்தரவாதங்களை செயல்படுத்த உதவும். இந்தியா ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு முதல் பிரதம மந்திரி கிசான் மற்றும் ஓய்வூதியங்கள் வரையிலான முக்கிய நலத்திட்டங்களைத் தரப்படுத்தியுள்ளதுடன், நேரடிப் பணப் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)) மற்றும் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைமுகம் (Unified Payments Interface (UPI)) ஆகியவற்றின் மூலம் இந்த நன்மைகளைப் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தும் வருகிறது. கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அரசியல் உறுதிப்பாடு மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு நபர் வசிக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் சில உரிமைகளில் ஒன்றாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியமும் நீடிக்கிறது. கண்ணியம் என்பது ஒரு அரசியலமைப்பு உரிமையாக இருக்கும்போது, ஒருவரின் இருப்பிடம் அவர்கள் உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச ஆதரவைத் தீர்மானிப்பதாக இருக்கக்கூடாது.
ஒரு நிர்வாகச் சீர்திருத்தத்தைவிட, மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச உலகளாவிய ஓய்வூதிய மற்றும் நிதி உரிமைகள் சீர்திருத்தம் (MUDPFR) என்பது ஒரு தார்மீகக் கடமையாகும். இது மாற்றுத்திறனாளிகளைத் தர்மத்தை எதிர்பார்ப்பவர்களாகப் பார்க்காமல், உரிமைகளுடன் கூடிய குடிமக்களாக அங்கீகரிக்கிறது. அரசு என்பது வெறும் கருணை உள்ளத்துடன் உதவிகளை வழங்குபவர் என்ற நிலையிலிருந்து மாறி, அரசியலமைப்பு உரிமைகளை அவர்களுக்கு உறுதிசெய்யும் ஒரு அமைப்பாகச் செயல்படுவதன் மூலம், இது அவர்களின் கண்ணியம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் குடியுரிமை ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
மாநில நிதிநிலைத் திட்டங்கள், அரசியல் முன்னுரிமைகள் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியங்கள் மாறுபடும் முறையை இந்தியா தொடர வேண்டுமா? அவ்வாறு தொடரும்போது மாற்றுத்திறனாளிகள் இன்னல்களுக்கு ஆளாவார்களா? அல்லது இந்தியக் குடியரசு தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச ஆதரவை உத்தரவாதம் செய்ய வேண்டுமா? ஒரு வளர்ந்த இந்தியா (Viksit Bharat), தனது மிகவும் நலிவடைந்த குடிமக்களை "வாழும் இடத்தைப் பொறுத்து உதவி மாறுபடும் நிலை" (Postcode lottery) போன்ற ஒரு சூழலில் தவிக்கவிடக் கூடாது. சமத்துவமின்மைக்கு கூட்டாட்சித் தத்துவம் ஒருபோதும் ஒரு காரணமாக இருக்க முடியாது.
டிஜிட்டல் உள்ளடக்கத்தாலும் நேரடிப் பணப் பரிமாற்றத்தாலும் (DBT) சாத்தியமாக்கப்பட்ட உரிமைகள் அடிப்படையிலான சலுகைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் நலத்திட்டக் கட்டமைப்பில் குறைந்தபட்ச உலகளாவிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய அடிப்படை விகிதம் (MUDPFR) என்பது அடுத்த தர்க்கரீதியான படியாகும். இது அரசாங்கத்தை மக்கள் நலன் சார்ந்ததாக மாற்றும், மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் மற்றும் இந்தியக் குடியரசை மேலும் வலுப்படுத்தும்.
கடந்த 75 ஆண்டுகளில், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக இந்தியா தனது நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வந்துள்ளது. இதற்கான தேவையான தளங்களும், அவற்றைச் செயல்படுத்தும் முறைகளும் தற்போது நிறுவப்பட்டுள்ள நிலையில், அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தை ஒரு அரசியலமைப்பு உரிமையாகவும், ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகவும் இந்தியா அங்கீகரிக்கிறதா என்பதே உண்மையான கேள்வி ஆகும். அந்த வாக்குறுதி நீண்டகாலமாக வழங்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது, அதை நிறைவேற்றுவதற்கான ஒரு சிறந்த வழியை இந்த உலகளாவிய மாற்றுத்திறனாளி ஓய்வூதிய அடிப்படை விகித முறை (MUDPFR) வழங்குகிறது.
சுஷில் குமார், இந்திய அரசின் முன்னாள் செயலாளர் மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றுபவர் ஆவார்.
Original article : Equality of treatment for Persons with Disabilities. -Sushil Kumar