பல வருட அறிக்கைகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) விதிகள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு உத்திகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நேரடிச் சட்டக் கட்டமைப்பு எதுவும் இன்னும் இல்லை என்பதை தேசிய பணிக்குழு (National Task Force (NTF)) சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
மாணவர்களின் மனநலம் மற்றும் தற்கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேசிய பணிக்குழு (NTF) ஜூன் மாதம் 8 திங்களன்று அன்று வெளியிட்ட இடைக்கால அறிக்கையில், இந்தியாவில் மாணவர் தற்கொலைகளை வெறும் மனநலப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்று தேசிய பணிக்குழு வாதிடுகிறது.
அமித் குமார் மற்றும் பலர் vs இந்திய ஒன்றியம்-2026 (Amit Kumar & Ors vs Union of India) வழக்கில், இந்தியாவில் மாணவர் தற்கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் மட்டும் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர், இது அதே ஆண்டில் நடந்த வேளாண் தொழிலாளர்களின் தற்கொலைகளைவிட அதிகமாகும். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த தற்கொலை மரணங்களில் இது 7.6% பங்கைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்கான காரணங்களை ஆராயவும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நிறுவன நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், தற்கொலைகளைத் தடுப்பதற்கான ஒரு வலுவான கட்டமைப்பைப் பரிந்துரைக்கவும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் ஒரு தேசிய பணிக்குழுவை (NTF) உச்ச நீதிமன்றம் அமைத்தது.
தேசிய பணிக்குழுவின் அறிக்கை கூறுவது என்ன?
மாணவர்களின் தற்கொலைகள் பொதுவாக மனநலம் சார்ந்த பிரச்சனையாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அவை உண்மையில் கல்வி மற்றும் சமூகக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுதான் என்பது தேசிய பணிக்குழுவின் (NTF) முக்கியக் கருத்தாகும். அந்த அறிக்கையின்படி, இப்பிரச்சினை குறித்த முந்தைய அறிக்கைகள் அனைத்தும் முக்கியமாக ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட நல்வாழ்வு ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தியிருந்தன.
"மாணவர்களின் நலன்தொடர்பான இதே போன்ற சிக்கல்கள் ஆண்டுதோறும் பதிவாகி வருகின்றன. இருப்பினும், இந்தத் துறையில் நாம் பெரிய முன்னேற்றம் கண்டதாகத் தெரியவில்லை" என்று தேசியப் பணிக்குழு (NTF) குறிப்பிட்டது. எனவே, ஏதாவது நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஒரு நிரந்தரமான மற்றும் தற்காப்பு ரீதியான கட்டமைப்பை உருவாக்குவதே தங்களது நோக்கம் என்று பணிக்குழு கூறியுள்ளது.
இந்த அறிக்கையானது, தற்கொலை எண்ணத்தை ஒரு தொடர் சங்கிலியாகப் பார்க்கிறது, இதில் உயிரிழப்பு என்பது கடைசி கட்டம் மட்டுமே. அது தற்கொலை எண்ணங்கள், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல், சமூகத்திலிருந்து விலகி இருத்தல் மற்றும் படிப்பை பாதியில் கைவிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தொடர்ச்சியான நிலை என்று வரையறுத்தது. இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கும், 200-க்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு வடிவத்தில் தற்கொலை எண்ணத்தை அனுபவிப்பதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்த அறிக்கையின்படி, ஒரு மாணவர் தன் உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுத்து அவர்களை உயிரோடு காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோள் அல்ல; ஒரு மாணவரை அந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டிய காரணங்களை ஆராய்ந்து சரிசெய்வதே எங்களது நோக்கம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தில் உள்ள குறைபாடு?
தேசியப் பணிக்குழுவின் (NTF) மிக முக்கியமான கண்டுபிடிப்பு சட்டம் சார்ந்தது ஆகும். பல ஆண்டுகால அறிக்கைகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிகள் மற்றும் அரசாங்கத்தின் உத்திகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உயர் கல்வியில் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நேரடிச் சட்டக் கட்டமைப்பு எதுவும் இல்லை. அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது: "மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், தற்கொலைகளைக் கையாள்வதற்கும் தடுப்பதற்கும் நேரடியான சட்டப்பூர்வ, ஒழுங்குமுறை அல்லது நிறுவனக் கட்டமைப்பு முற்றிலும் இல்லாமல் இருப்பதுதான். எடுக்கப்படும் பெரும்பாலான நடவடிக்கைகள் பொதுவானவையாகவும், ஒரு பிரச்சனை நடந்த பிறகு அதற்கு எதிர்வினையாற்றும் வகையிலுமே உள்ளன.
தற்கொலை தடுப்பு விஷயத்தில் இந்தியாவின் ஒரே பிரத்யேக கொள்கை கருவியான தேசிய தற்கொலை தடுப்பு உத்தியை (National Suicide Prevention Strategy), "தெளிவான செயலாக்க வழிகாட்டுதல்கள் இல்லாத ஒரு கருத்தியல் வடிவம்" என்று விவரிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மற்றும் கனடா போன்ற நாடுகள், கல்வி நிறுவனங்களின் பொறுப்பை உறுதி செய்யும் மற்றும் தற்கொலைகள் குறித்த தரவுகளைச் சேகரிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால், இந்தியாவின் நடவடிக்கை வெறும் வழிகாட்டுதல் என்ற அளவிலேயே நின்றுவிட்டது.
சட்டப்பூர்வ கட்டமைப்பும் அதன்கீழ் உருவாக்கப்படும் விதிகளும் மட்டுமே அதைச் செயல்படுத்தும் அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வெறும் வழிகாட்டுதல்கள் அந்த அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை, எனவே அவற்றை நடைமுறைப்படுத்துவதில் சவால்கள் ஏற்படுகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பானது, 2025-ஆம் ஆண்டில் சுக்தேப் சாஹா vs ஆந்திரப் பிரதேச அரசு (Sukdeb Saha vs The State of Andhra Pradesh (2025)) வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இரண்டாவது தீர்ப்பை ஒட்டி வந்துள்ளது. இந்தத் தீர்ப்பில், சட்டப்பிரிவின் 21-வது பிரிவின்கீழ் "மனநலம் என்பது வாழ்வதற்கான உரிமையிலிருந்து பிரிக்க முடியாதது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைத் தடுப்பிற்கான ஒரு ஒருங்கிணைந்த, நடைமுறைப்படுத்தக்கூடிய கட்டமைப்பு இந்தியாவில் இல்லாத சட்ட மற்றும் ஒழுங்குமுறை ரீதியான ஒரு பெரிய வெற்றிடத்தைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டது.
நீதிமன்றம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான சில தற்காலிகக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டது, ஆனால் ஒரு விரிவான சட்டம் இயற்றப்படும் வரை மட்டுமே இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் தெளிவுபடுத்தியது. தங்களின் இறுதி அறிக்கை அந்தச் சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படும் என்று தேசியப் பணிக்குழு (NTF) தெரிவித்துள்ளது.
உயர்கல்வித் துறை எவ்வாறு மாறியுள்ளது?
இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2001-02-ஆம் ஆண்டில் 88 லட்சமாக இருந்தது, 2021-22-ஆம் ஆண்டில் 4.32 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது 60%-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும், 75%-க்கும் அதிகமான கல்லூரிகளும் தனியார் நிர்வாகத்தின்கீழ் இயங்குகின்றன.
2021-2022-ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்கல்விக்கான பொதுச் செலவினத்தின் பங்கு 1.29%-ஆக இருந்தது. இது கடந்த பல ஆண்டுகளாக தேசியக் குழுக்கள் பரிந்துரைத்து வரும் 2% என்ற அளவைவிட மிகவும் குறைவு. கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியைவிட, மாணவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததே இதன் விளைவு என்று அந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது மொத்த மாணவர் சேர்க்கையில் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (OBC) சேர்ந்த மாணவர்கள் தற்போது மொத்த மாணவர் சேர்க்கையில் ஏறக்குறைய 60%-ஆக உள்ளனர். ஆனால், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (NITs), 67.71% ஆசிரியர்கள் SC/ST/OBC அல்லாத பின்னணியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மொத்த ஆசிரியர்களில் பட்டியல் சாதியினர் (SC) 7.57%-ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (ST) ஆசிரியர்கள் 1.91%-ஆகவும் உள்ளனர். தனியார் பல்கலைக்கழகங்களில், 67%-ஆசிரியர்கள் முன்னேறிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், 3.59%-பேர் பட்டியல் சாதியினர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1.68% பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். "இந்தச் சமூகப் பிரதிநிதித்துவ இடைவெளி, கல்விச் சூழலில் மாணவர்களின் ஒருங்கிணைப்பு குறைவாக இருப்பதற்கு வழிவகுக்கக்கூடும். இத்தகைய குறைந்த அளவிலான கல்விசார் ஒருங்கிணைப்பு, மனச்சோர்வு, இடைநிற்றல் மற்றும் தற்கொலைக்கான அதிக ஆபத்து ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் தேசிய பணிக்குழு குறிப்பிட்டது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்கீழ் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், பலமுறை நினைவூட்டல்களும் காலக்கெடு நீட்டிப்புகளும் வழங்கப்பட்ட பின்னரும்கூட, 60,000-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் வெறும் 3.5%-நிறுவனங்கள் மட்டுமே இதற்குப் பதிலளித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று தேசிய பணிக்குழு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தேசிய பணிக்குழுவிடம் கூறியது என்ன?
தேசியப் பணிக்குழு (NTF) கணக்கெடுப்பிற்குப் பதிலளித்த மாணவர்களில் சுமார் 46% பேர், தங்கள் குடும்பத்தில் உயர்கல்வி பயிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆவர். யார் படிப்பைத் தொடர்கிறார்கள் மற்றும் யார் பாதியில் விலகுகிறார்கள் என்பது குறித்த தரவுகள் ஒரு தெளிவான உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.
2018-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பட்டியல் சாதி, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 13,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIMs) ஆகியவற்றிலிருந்து பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். நாடாளுமன்றத்தில், இத்தகைய விலகல்களுக்கான காரணங்களை அரசாங்கம் ஆய்வு செய்துள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அன்றைய கல்வித்துறை இணை அமைச்சர், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பிற துறைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்ததால் படிப்பை மாற்றிக்கொண்டது அல்லது அவர்களின் தனிப்பட்ட காரணங்களினால்தான் இவை முக்கியமாக நிகழ்ந்துள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த அறிக்கை ஆராய்ச்சியாளர் பிரபாகர் கிருஷ்ணமூர்த்தி 2025-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வை ஆதாரமாகக் காட்டுகிறது. அதன்படி, டெல்லி மற்றும் கரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IITs) படிக்கும் பட்டியல் சாதியினர்/பழங்குடியினர் (SC/ST) மாணவர்கள், பொதுப் பிரிவினரைவிட 318% அதிகமாகப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழலை எதிர்கொள்கிறார்கள் என்றும், விடுதிக் கட்டணம் மற்றும் கல்விப் பொருட்களுக்கான வசதிகள் குடும்பங்களிடம் இல்லாததால், பொருளாதார நெருக்கடியே 47.6%-இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் படிப்பை நிறுத்தக் காரணமாக அமைகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உயர்தரக் கல்வி நிறுவனங்கள் வெறும் "முன்னேற்றத்திற்கான ஒரு கானல் நீரை" (Mirage of mobility) மட்டுமே காட்டுகின்றன. ஏனெனில், இடஒதுக்கீடு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது, ஆனால் உள்ளே அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு அவர்களுக்கான கல்வியைத் தொடரும் சூழலை ஏற்படுத்தவில்லை என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
ஒரு மாநிலப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், "தங்களுக்கு வர வேண்டிய கல்வித்தொகை (Scholarship) வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள், முரண்பாடுகள் மற்றும் சமமற்ற நிலைகள் குறித்து மிக விரிவாகப் பேசினர்". சில மாணவர்கள் தங்களுடைய சூழ்நிலையை விவரிக்கும் போது: கல்லூரிகள் தங்களுடைய கல்விக்கட்டணத்தில் (Tuition fees) இருந்து கல்வித்தொகைக்கான மதிப்பை முன்கூட்டியே கழித்துக் கொண்டன; ஆனால், அரசாங்கத்திடமிருந்து அந்தக் கல்வித்தொகை திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, அந்தப் பண நிலுவைக்கு மாணவர்களையே பொறுப்பாக்கின என்று கூறினர். இதனால், தாங்கள் ஏற்படுத்தாத பண நிலுவைகளுக்காக (Arrears) மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாமலும், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டும், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் மறுக்கப்பட்டும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆலோசனை சேவைகள் குறித்து தேசியப் பணிக்குழு கண்டறிந்த உண்மைகள்
உயர் கல்வி நிறுவனங்கள் முழுவதும் 27,136 "பிரத்யேக ஆலோசகர்கள்" இருப்பதாகப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தரவுகள் கூறுகின்றன. அதாவது தோராயமாக 221 மாணவர்களுக்கு 1 ஆலோசகர் வீதம் உள்ளனர். ஆனால், இந்தத் தேசியப் பணிக்குழு (NTF) அங்கிருந்து சீரற்ற முறையில் (Random) 50-நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தகுதிகளை ஆய்வு செய்தபோது, அந்த 50-பேரில் 47-பேர் பேராசிரியர்களாகவோ, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாகவோ அல்லது கல்வி ஆலோசகர்களாகவோதான் இருந்தனரே தவிர, அவர்கள் யாரும் மனநலத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இல்லை.
மேலும், 70%-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர மனநல சேவை வழங்குநர் இல்லை என்பதையும், மேலும் 4%-க்கும் குறைவான நிறுவனங்களிடம் மட்டுமே தற்கொலை ஆபத்து மேலாண்மை நெறிமுறைகள் உள்ளன. இந்தியாவின் 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) வெறும் நான்கு நிறுவனங்களில் மட்டும்தான் மனநல அவசரநிலைகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை இருந்தது. மேலும், மாணவர் ஒருவர் உயிரிழந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கும் வழிமுறைகள் எந்தவொரு இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இல்லை.
மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பதிலளித்தவர்களில் சுமார் 9%-பேர் கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்கு 'அடிக்கடி' அல்லது 'மிக அடிக்கடி' தற்கொலை எண்ணங்கள் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். பல கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை சேவைகளைத் தாங்கள் நம்புவதில்லை என்று பணிக்குழுவிடம் (NTF) கூறினர். ஏனெனில், "கடந்த காலங்களில் தாங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் தங்களின் பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டன என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக மருத்துவக் கல்வி குறித்துப் பேசிய மாணவர்கள், தூக்கமோ உணவோ இன்றித் தொடர்ந்து 36 முதல் 48 மணி நேரம் வரை தங்களை வேலை செய்ய வற்புறுத்துவதாக விவரித்தனர். விடுப்போ அல்லது ஓய்வோ கேட்கும் மாணவர்கள் "பலவீனமானவர்கள்", "சோம்பேறிகள்" மற்றும் "வேலை செய்யவே விருப்பம் இல்லாதவர்கள்" என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒரு மாணவர் மருத்துவக் கல்வியை ஒரு வகையான "கொத்தடிமை முறை" (Bonded labour) என்று விவரித்தார். டெல்லியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 100% வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த ஒரு தற்கொலைக்குப் பிறகு, மாணவர்கள் தினமும் தங்களது திறன்பேசிகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, இதனால் மாணவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த உடனேயே, சக மாணவர்களும் பேராசிரியர்களும் அவர்களின் JEE (Joint Entrance Examination) மற்றும் NEET (National Eligibility cum Entrance Test) தரவரிசைகளை விசாரிக்கிறார்கள். இதன் மூலம் அம்மாணவர்கள் எந்த இடஒதுக்கீடு பிரிவின்கீழ் வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களின் சாதியைக் கண்டறிய முயற்சிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வளாகத்திற்குள், பல்வேறு கல்வித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வலைப்பின்னல்களில் சேருவது "vibe checks" எனப்படும் முறைசாரா நேர்காணல்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நேர்காணல்களில் ஒருவரின் ஆங்கிலப் புலமை மற்றும் நகர்ப்புற தோற்றம் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து வரும் மாணவர்கள் "சப்ரி" (chhapri) என்ற இழிசொல்லால் அழைக்கப்படுகிறார்கள்.
குடும்பத்தினரால் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களோ அல்லது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட (LGBTQ+) சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களோ, ஏதேனும் மனநல பாதிப்பு அல்லது ஆபத்தான சூழலில் இருக்கும்போது கல்வி நிறுவனம் அவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கும் கொள்கையைக் கொண்டுள்ளது. இது போன்ற சூழலால், அம்மாணவர்கள் தங்களுக்குத் தேவையான முறையான உதவிகளைப் பெற முடியாமல் முற்றிலுமாகத் தயங்குகிறார்கள். பேராசிரியர்களோ, மாணவர்களின் மனநலப் பிரச்சினையை ஒரு தனிநபர் பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். எங்கள் வேலை பாடம் நடத்துவதும் ஆராய்ச்சி செய்வதும்தான். ஆனால் எங்களிடம் வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதால், எங்களால் பாடம் நடத்துவதையோ அல்லது மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவதையோ முழுமையாகச் செய்ய முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
தேசிய பணிக் குழுவின் (NTF) பரிந்துரைகள்
இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகளாக இந்த இடைக்காலப் பரிந்துரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட காலியாக உள்ள அனைத்துப் பேராசிரியர் பணியிடங்களும் 3 மாதங்களுக்குள் நிரப்பப்பட வேண்டும். துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பதவிகள் ஒரு மாதத்திற்கு மேல் காலியாக இருக்கக் கூடாது.
மாணவர் தற்கொலைகள் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதுகுறித்து அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தங்களைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும், மாநில பொறுப்பு அதிகாரிகளுக்கும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். விடுதி வசதி கொண்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 24 மணி நேரமும் தகுதிவாய்ந்த மருத்துவ உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) தனது வருடாந்திரத் தரவுகளில், பள்ளி மாணவர்களின் தற்கொலைகளையும், உயர்கல்வி மாணவர்களின் தற்கொலைகளையும் தனித்தனியாகக் கணக்கிட்டுப் பதிவு செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக புதிய சட்டம் இயற்றுவது குறித்த தனது பரிந்துரையை தேசியப் பணிக்குழு (NTF) இன்னும் வழங்கவில்லை. அது இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போதிருக்கும் கொள்கைகளுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாததால், அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று இந்த இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Original article : Why Supreme Court-appointed taskforce framed student suicides as not just a mental health issue?. -Amaal Sheikh