அடிப்படை உரிமைகளின் 'கிடைமட்டப் பயன்பாடு' (horizontal application) ஏன் கவனம் பெற்றுள்ளது? -ரோஷ்னி யாதவ்

 தனியார் ஊடகங்களுக்கு எதிராகவும் அடிப்படை உரிமைகளை அமல்படுத்த முடியுமா? ''கிடைமட்டப் பயன்பாடு' (horizontal application) என்பதன் உண்மையான பொருள் என்ன? தனியுரிமை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் சட்டப்பிரிவு 19 உரிமைகளுக்கு இடையிலான சமநிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏன் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது? 


தற்போதைய செய்தி :


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட அடிப்படை உரிமைகள், பாரம்பரியமாக அரசிற்கு எதிராக குடிமக்களுக்கான ஒரு பாதுகாப்பு கவசமாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளன. இருப்பினும், ஜூலை 1 அன்று டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த உரிமைகளின் "கிடைமட்டப் பயன்பாட்டை" விரிவுபடுத்தியது. அதன்படி, தனியார் ஊடக நிறுவனங்கள் ஒரு "பொதுப் பணியை" (public function) மேற்கொள்கின்றன என்றும், ஒரு தனிநபரின் தனியுரிமையை மீறினால் அவற்றின்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது.


இந்தச் சூழலில், அடிப்படை உரிமைகளின் செங்குத்து மற்றும் கிடைமட்டப் பயன்பாடுகள் (vertical and horizontal application) குறித்து அறிந்துகொள்வதோடு, பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திர உரிமையையும் புரிந்துகொள்வோம்.


Vertical application (செங்குத்து பயன்பாடு) – குறிப்பிட்ட ஒரு துறை அல்லது தொழிலுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள் அல்லது அமைப்பு.

Example: மருத்துவமனை மேலாண்மை மென்பொருள், வங்கி மென்பொருள்.


Horizontal application (கிடைமட்ட பயன்பாடு) – பல துறைகளிலும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டு மென்பொருள் அல்லது அமைப்பு.

Example: Microsoft Word, Excel, Email, Database Management Systems.


முக்கிய அம்சங்கள் :


1. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான விவரங்களை ஒளிபரப்பியதற்காக, டிவி டுடே நெட்வொர்க் (TV Today Network) நிறுவனத்தை ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று 2013-ல் ஒற்றை நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.


2. நீதிபதி சி. ஹரி சங்கர் அவர்கள் தனக்காகவும், நீதிபதி ஓ. பி. சுக்லாவின் சார்பாகவும் எழுதிய இந்தத் தீர்ப்பு, பத்திரிகை சுதந்திரம், தனியுரிமை உரிமை மற்றும் ஊடகங்களுக்கு எதிராகக் குடிமக்கள் வழக்கு தொடரக்கூடிய வழிமுறைகள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டக் கோட்பாடுகளை வகுத்துள்ளது.


3. ஊடகங்கள் தனியாருக்குச் சொந்தமானவையாக இருந்தாலும், அவை ஒரு “பொதுப் பணியை” (public function) மேற்கொள்கின்றன என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, செய்திகளைப் பரப்புவதிலும் பொதுக் கருத்தை உருவாக்குவதிலும் ஊடகங்களின் பங்கு சமூகத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதால், அது ஒரு பொதுப் பணியாக அமைகிறது என்று அது வாதிட்டது.


4. “ஊடகங்கள் எந்தவொரு பொதுச் செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்று கருதுவது யதார்த்தமற்றது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், “அத்தகைய பொதுப் பணியைச் செய்யும்போது மக்களின் உரிமைகள் பாதிக்கப்படாமலோ அல்லது சேதமடையாமலோ இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய "பொதுக் கடமை" இதில் உள்ளார்ந்துள்ளதாகத் தெரிவித்தது.



5. இதன் அடிப்படையில், நீதிமன்றம் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை 'கிடைமட்டமாக' (horizontally) செயல்படுத்தியது. பொதுவாக, அடிப்படை உரிமைகள் பொதுவாக செங்குத்தாக (vertically) செயல்படுத்தப்படும் நிலையில், ஒரு குடிமகன் அவற்றை அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுத்தும்போது, கிடைமட்டச் செயல்பாடு (horizontal application) ஒரு குடிமகன் இந்த உரிமைகளை அரசு சாரா அமைப்புக்கு எதிராகச் செயல்படுத்த அனுமதிக்கிறது.


6. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, 2023-ம் ஆண்டின் கௌஷல் கிஷோர் தீர்ப்பில் (Kaushal Kishor judgment), சில அடிப்படை உரிமைகளைத் தனிநபர்களுக்கு எதிராகப் பரவலாகச் செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்து, இந்தக் கொள்கையை நிலைநாட்டியது.


7. தற்போது டெல்லி உயர்நீதிமன்றம், ஊடகங்கள் தொடர்பான வழக்குகளில் தனிநபர் உரிமைக்கும் இந்தக் கொள்கையை விரிவுபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு, அவரது தனியுரிமையில் ஒரு சட்டவிரோத அத்துமீறல் என்றும், எனவே ஒரு 'நீதிப்பேராணை (Writ)' அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தில் பண இழப்பீடு வழங்குவது நியாயமானது என்றும் அது தீர்ப்பளித்துள்ளது.

உரிமைகளின் செங்குத்து மற்றும் கிடைமட்ட பயன்பாடுகள் என்றால் என்ன?


உரிமைகளின் செங்குத்துப் பயன்பாடு (Vertical application of rights) என்பது, அவற்றை அரசுக்கு எதிராக மட்டுமே அமல்படுத்த முடியும் என்பதாகும். அதேசமயம், உரிமைகளின் கிடைமட்டப் பயன்பாடு (Horizontal application of rights) என்பது, அவற்றை மற்ற குடிமக்களுக்கு எதிராகவும் அமல்படுத்த முடியும் என்பதாகும். உதாரணமாக, வாழ்வதற்கான உரிமையைப் பரந்த அளவில் பயன்படுத்தும்போது, தூய்மையான சுற்றுச்சூழலுக்கான உரிமையை மீறும் வகையில் மாசுபாட்டை ஏற்படுத்தும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஒரு குடிமகன் வழக்குத் தொடர முடியும்.


உங்களுக்குத் தெரியுமா?

          தீண்டாமையைத் தடைசெய்யும் (பிரிவு 17), ஆட்கடத்தல் மற்றும் கொத்தடிமைத் தொழிலைத் தடைசெய்யும் (பிரிவு 23) போன்ற அடிப்படை உரிமைகள், அரசுக்கும் மற்ற தனிநபர்களுக்கும் எதிராகக் கிடைக்கின்றன.


தனியுரிமை (Right to Privacy) என்றால் என்ன?

1. ஆகஸ்ட் 2017-ல், இந்திய உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு கே. புட்டஸ்வாமி vs இந்திய ஒன்றியம் வழக்கு" (K. Puttaswamy vs Union of India Case) தனியுரிமைக்கான உரிமை என்பது, சட்டப்பிரிவின் 21-வது பிரிவின்கீழ் உள்ள வாழ்வதற்கான மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகவும், அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியால் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரங்களின் ஒரு பகுதியாகவும் பாதுகாக்கப்படுகிறது" என்று ஒருமனதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு

        இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவு, வாழ்வு மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இது ஒவ்வொரு நபரின் வாழ்வையும் தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன், வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் தன்னிச்சையாகப் பறிக்கப்படுவதற்கெதிரான பாதுகாப்புகளையும் இது வழங்குகிறது.


2. சமீப ஆண்டுகளில் தனியுரிமை பல்வேறு சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், பல சந்தர்ப்பங்களில் இதன் துல்லியமான பொருள் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.


3. அலோக் பிரசன்ன குமார் தனிநபர் உரிமை குற்த்து குறிப்பிட்டதாவது, தனிநபரின் உரிமையின் மையமாக மூன்று கூறுகள் கருதப்படுகின்றன. அவை, தனிநபர் தன்னாட்சி (Personal autonomy), முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரம் மற்றும் தன்னைப் பற்றிய தகவல்களுக்கு என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கிறது.

பேச்சுரிமை (Right to Freedom of Speech) என்பது என்ன?


1. இந்திய அரசியலமைப்பின் பகுதி III-ல் உள்ள பிரிவு 19(1)(a), அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது.


2. இந்த உரிமை இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது வெளிநாட்டினருக்குக் கிடைக்காது. பிரிவு 19 (1) சில சுதந்திரங்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. அதனுடன், அனைத்து குடிமக்களுக்கும் பின்வரும் உரிமைகள் உண்டு என்று குறிப்பிடுகிறது. அவை,


(a) ​​பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு;

(b) அமைதியாகவும் ஆயுதங்கள் இன்றியும் ஒன்றுகூடுவது;

(c) சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை அமைத்தல்;

(d) இந்தியப் பிரதேசம் முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கு;

(e) இந்தியப் பிரதேசத்தின் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கும் குடியேறுவதற்கும்; மற்றும்

(f) நீக்கப்பட்டது

(g) எந்தவொரு தொழிலையும் அல்லது பணியையும், வணிகத்தையும் அல்லது வியாபாரத்தையும் மேற்கொள்ளும் உரிமை.

(குறிப்பு : தொடக்கத்தில், சரத்து 19 (1) (f) மற்றும் சரத்து 31 ஆகியவை சொத்துரிமையைக் கொண்டிருந்தன. அதாவது, சட்டத்தின் அதிகாரத்தின் மூலம் பொது நோக்கங்களுக்காக அரசு கட்டாயமாக கையகப்படுத்தும் உரிமைக்கு உட்பட்டு சொத்தை கையகப்படுத்துதல், வைத்திருத்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய உரிமைகள் இதில் அடங்கும். இருப்பினும், 1978-ம் ஆண்டின் அரசியலமைப்பு (44வது திருத்தம்) சட்டம் (Constitution (44th Amendment) Act), சரத்து 19 (1)-ன் உட்பிரிவு (f) மற்றும் சரத்து 31 ஆகியவற்றை அரசியலமைப்பிலிருந்து நீக்கியபோது சொத்துரிமை ஒரு அடிப்படை உரிமையாக இல்லாமல் போனது.)


3. பிரிவு 19 (1)-ல் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் முழுமையானதோ அல்லது தடையற்றதோ அல்ல. அதைத் தொடர்ந்து பிரிவு 19(2)-ன்கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இது பின்வரும் தலைப்புகளின்கீழ் பேச்சு சுதந்திரத்திற்கான விதிவிலக்குகள் அல்லது "நியாயமான கட்டுப்பாடுகளை" பட்டியலிடுகிறது. அவை,


→ அரசின் பாதுகாப்பு,

→ வெளிநாடுகளுடனான நட்புறவு

→ பொது ஒழுங்கு,

→ கண்ணியம் மற்றும் ஒழுக்கம்,

→ நீதிமன்ற அவமதிப்பு,

→ அவதூறு,

→ குற்றம் செய்யத் தூண்டுதல்,

→ இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு.





அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 226-ன் கீழ் நீதிப்பேராணை (Writ) அதிகாரம்

         அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ், அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காகவும், அத்துடன் அரசுக்கோ அல்லது பொதுக் கடமைகளை ஆற்றும் அதிகாரிகளுக்கோ எதிராக வேறு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமைக்காகவும் நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றங்களுக்கு உண்டு.

 

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு-2026 


1. 180 நாடுகளை மதிப்பீடு செய்யும் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு, அதன் 25 ஆண்டு கால வரலாற்றிலேயே மிகக் குறைந்த சராசரி மதிப்பெண்ணைப் பதிவு செய்துள்ளது. இது 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) அமைப்பால் வெளியிடப்படும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும்.


2. இந்தக் குறியீட்டின் 25 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக, உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தவரை “கடினமான” அல்லது “மிகவும் தீவிரமான” பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.


3. இந்த அறிக்கையின்படி, “இந்த ஆண்டு இக்குறியீட்டின் சட்டரீதியான குறியீட்டெண் (legal indicator) மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. 2025 மற்றும் 2026-க்கு இடையில், 60%-க்கும் மேற்பட்ட நாடுகளில் (அதாவது 180-ல் 110 நாடுகளில்) இந்த மதிப்பெண் மோசமடைந்துள்ளது. குறிப்பாக இந்தியா (157-வது இடம்), எகிப்து (169-வது இடம்), இஸ்ரேல் (116-வது இடம்) மற்றும் ஜார்ஜியா (135-வது இடம்) ஆகிய நாடுகளில் இச்சரிவு குறிப்பிடத்தக்கதாக உள்ளது."


4. இந்தக் குறியீடு, பத்திரிகைத் துறையைப் பாதிக்கும் பொருளாதாரம், சட்டம், பாதுகாப்பு, அரசியல் மற்றும் சமூக நிலைமைகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளை அளவிடுகிறது. இவற்றில், இந்த ஆண்டு சட்டரீதியான சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.


5. இக்குறியீட்டில், நார்வே தொடர்ந்து 10-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், எரித்திரியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் கடைசி இடத்தில் நீடித்தது.


6. இந்தியாவைப் பொறுத்தவரை, அது தரவரிசையில் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. 2025-ல் 151-வது இடத்தில் இருந்த அது, தற்போது 2026-ல் 31.96 என்ற உலகளாவிய மதிப்பெண்ணுடன் 157-வது இடத்திற்கு வந்துள்ளது. இந்நாடு தொடர்ந்து "மிகவும் மோசமான" (very serious) பிரிவிலேயே நீடிக்கிறது.

தரவரிசை

நாடு

நிலை

1

நார்வே

நன்று

2

நெதர்லாந்து

நன்று

33

ஆஸ்திரேலியா

திருப்திகரமான

87

நேபாளம்

சிக்கலான

134

இலங்கை

கடினம்

153

பாகிஸ்தான்

மிகவும் தீவிரமான

157

இந்தியா

மிகவும் தீவிரமான

175

ஆப்கானிஸ்தான்

மிகவும் தீவிரமான

Original article : Why horizontal application of fundamental rights is in news? -Roshni Yadav

Share: