Showing posts with label UAPA. Show all posts
Showing posts with label UAPA. Show all posts

பிரிட்டன் பாணியிலான நீதிமன்ற மறுஆய்வுமுறை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை மேலும் நியாயமானதாக மாற்ற முடியுமா? - பிரியான்ஷி சிங்

 இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) தீர்ப்பாயங்களின் முன்னால் நடத்தப்படும் மறைமுகமான வழக்குகளைவிட கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய தடைகளுக்கு எதிராக சட்டப்பூர்வமாக முறையிடுவதை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு வலுவான அமைப்பும் இந்தியாவிற்குத் தேவைப்படுகிறது.


சமீபத்தில் நடைபெற்ற சையத் இப்திகார் அண்ட்ராபி எதிர். தேசிய புலனாய்வு முகமை (Syed Iftikhar Andrabi vs National Investigation Agency (2026) வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைச் சுட்டிக்காட்டியுள்ளது. அது என்னவென்றால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (1967) பதியப்படும் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்வீதம் மிக மிகக் குறைவாக உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, தேசிய அளவில் இந்தத் தண்டனை வீதம் ஒற்றை இலக்க விழுக்காட்டில் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் இது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது.


தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பில் உறுப்பினராக மட்டுமே இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு, இந்தச் சட்டம் எந்தவொரு உண்மையான பாதுகாப்பையும் வழங்குவதில்லை. வெறுமனே உறுப்பினராக இருப்பது மட்டுமே ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் அந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்பட்சத்தில், அந்த நடவடிக்கையையே அவர்கள் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரமாகவும் பயன்படுத்தக்கூடும். இந்தச் சட்டத்தின் பிரிவு 43D(5)-ன்கீழ் உள்ள கடுமையான பிணை (Bail) விதிமுறைகள் காரணமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுகளுக்கு இடையிலேயே முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள் உருவாகியுள்ளன. இந்த முரண்பாடுகள் காரணமாக, கடந்த மே மாதம் 22-ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை இன்னும் பெரிய நீதிபதிகள் அமர்வின் பரிசீலனைக்கு மாற்றியது.


கடந்த பத்து ஆண்டுகளில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. இது 649 வழக்குகள் (தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau (NCRB)) 2024 தரவு) முதல் 1,226 வழக்குகள் (NCRB 2019 தரவு) வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 2019-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில், நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த தரவுகளின்படி, மொத்தம் கைது செய்யப்பட்ட 10,440 நபர்களில் 335 பேருக்கு மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது, இதன் தண்டனை வீதம் வெறும் 3.2 விழுக்காடு மட்டுமே ஆகும்.


2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கர்நாடகா மாநிலம் குறித்த சட்டப்பிரிவு 14 (Article 14) அமைப்பின் மூன்று ஆண்டுகால (2005-2025) ஆய்வும் இத்தகைய போக்கையே உறுதிப்படுத்துகிறது. அதன்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) குற்றம்சாட்டப்பட்ட 925 பேரில், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான வழக்குகளில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. மேலும், இந்த வழக்குகளில் தண்டனை பெற்றவர்களைவிட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. அதிகக் கைதுகள், மிகக் குறைந்த தண்டனைகள் மற்றும் நீண்டகால சிறைவாசம் ஆகிய இந்தத் தற்போதைய போக்கு, இச்சட்டத்தின் கடுமையான மற்றும் கொடூரமான தன்மையைக் காட்டுகிறது.


தொடக்கத்தில், பிரிவினைவாத நடவடிக்கைகளைக் கையாள்வதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பின்னர் பல சட்டத்திருத்தங்கள், குறிப்பாக 2019-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் இச்சட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த மாற்றங்கள், நீதிமன்றக் கண்காணிப்பு ஏதுமின்றி, ஒரு தனிநபரைத் பயங்கரவாதி என்றும், ஓர் அமைப்பைச் சட்டவிரோத அல்லது பயங்கரவாத அமைப்பு என்றும் அறிவிப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்கின. அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான பயனுள்ள வழிகளும் இதில் இல்லை.


அருப் புயான் vs அசாம் அரசு (Arup Bhuyan vs State of Assam (2023)) வழக்கில், எந்தவொரு அமைப்பையும் சட்டவிரோதமானது என்று அறிவிப்பதற்கு முன்னால், முறையான சட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பொதுமக்களுக்குப் பரவலான அறிவிப்பு வழங்குவதும், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தீர்ப்பாயத்தின் முன்னால் ஆஜராகி தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிப்பதும் அடங்கும். இருப்பினும், இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students' Islamic Movement of India (SIMI))  என்கிற அமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் ஒருவர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தீர்ப்பாயத்தின் முன் ஆஜரானபோது, அவர் அங்கு வந்ததே அந்த அமைப்பு இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, தங்களது தரப்பு நியாயத்தைக் கூறுவதற்கான உரிமை, ஒரு பாதுகாப்பாக அமைவதற்குப் பதிலாக அவர்களுக்கே ஒரு பொறியாக மாறிப்போனது.


இதேபோல், அக்டோபர் மாதம் 2025-ஆம் ஆண்டில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India (PFI)) வழக்கில் தடையை உறுதிசெய்த தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை (Writ petition) டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது ஒரு சாதகமான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. அப்படி இருந்தபோதிலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) அமைப்புகளுக்குத் தடை விதிக்கும் இந்த ஒட்டுமொத்த முறையானது தொடர்ந்து பல்வேறு கவலைகளை எழுப்பி வருகிறது.


மேலும், ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 35 மற்றும் 36 ஆகிய பிரிவுகளின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் 2025-ஆம் ஆண்டில், இதேபோன்ற மனுக்கள் நிலுவையில் உள்ள பல உயர்நீதிமன்றங்களுக்கு, இந்த வழக்குகளை அவற்றின் தகுதி அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்தச் சட்டப்பிரிவுகள், ஒன்றிய அரசு எந்தவொரு தனிநபரையும் நீதிமன்ற விசாரணை இல்லாமலும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளிப்படுத்தாமலும், அவர்கள் தரப்பு வாதத்தை வாய்மொழியாகக் கூறுவதற்குக்கூட வாய்ப்பளிக்காமலும் பயங்கரவாதி என்று அறிவிக்க அனுமதிக்கின்றன. இதுவரை, எந்தவொரு நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை வழங்கவில்லை.


சர்வதேச அளவில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு முறையான நீதித்துறை மறுஆய்வு வாய்ப்பை வழங்குவது என்பது ஒன்றும் புதிய சவால் அல்ல. பிரிட்டனில், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் (Proscribed Organisations Appeal Commission (POAC)) ரகசியமாக விசாரணைகளை நடத்தவும், ரகசிய ஆதாரங்களை ஆய்வு செய்யச் சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கவும் முடியும். இதன் முடிவுகளை எதிர்த்து, சட்டரீதியான கேள்விகளின் அடிப்படையில் அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியும்.


2025-ஆம் ஆண்டில் பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் (2000) (Terrorism Act 2000) 'Palestine Action' என்ற அமைப்பு தடை செய்யப்பட்டபோது, இந்தத் தடையை விரைவாக மறுஆய்வு செய்யாவிட்டால் அது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதி சேம்பர்லெய்ன் எச்சரித்தார். தம்மீதான வழக்குகள் நியாயமற்றவை என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாதிட வழிவகுக்கும் என்றும் கூறினார். இதற்குத் தீர்வாக, பிரிட்டன் ஒரு தெளிவான நீதிமன்ற மறுஆய்வு நடைமுறையை வழங்கியது. ஆனால், இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) தற்போதைக்கு இத்தகையதொரு மறுஆய்வு வழிமுறை இல்லை.


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (UAPA) தீர்ப்பாயங்களின் முன்பாக, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக யாரோ ஒருவர் போலிப் பிரதிநிதியாக நின்று வழக்கு நடத்தும் தற்போதைய முறையைவிட இந்தியாவுக்கு மேம்பட்ட ஒன்று தேவைப்படுகிறது. அதாவது, ஒரு நியாயமான மற்றும் அர்த்தமுள்ள சட்ட நடைமுறை தேவைப்படுகிறது. ஒரு அமைப்பு தடை செய்யப்பட்டவுடன், தீர்ப்பாயத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞருக்குப் பதிலாக, நீதிமன்றத்தால் அல்லது சட்ட உதவி மையத்தால் நியமிக்கப்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் (Amicus Curiae) அந்த அமைப்பின் சட்டபூர்வ உரிமைகளுக்காக ஆஜராக வேண்டும். இந்த வழக்கறிஞருக்கு, ரகசியத் தனியுரிமை விதிகளைப் பின்பற்றி, அரசாங்கம் தாக்கல் செய்யும் மூடிமுத்திரையிட்ட ஆதாரங்கள் (Sealed-cover material) உள்ளிட்ட அனைத்து சான்றுகளையும் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.


ஒரு வழக்கு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்படும்போதே, இத்தகைய மாற்று வழக்கறிஞர்கள் தானாகவே நியமிக்கப்பட வேண்டும். ரகசியமான ஆதாரங்களை அணுகுவது முறையான பாதுகாப்பு அனுமதிச் செயல்முறையின்படி இருக்க வேண்டும். தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு அந்த வழக்கறிஞரின் வாதங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும், சட்டரீதியான கேள்விகள் எழும்போது, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட வேண்டும்.


இந்தச் சீர்திருத்தங்கள், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்கப்படும் விளக்கம் கோரும் அறிவிப்பாணை செயல்முறையை அர்த்தமுள்ளதாக மாற்றும்; அதோடு, சட்டம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் மற்றும் அரசியலமைப்புத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ப சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் ஒரு சுதந்திரமான பாதுகாப்பு அரணாக இத்தீர்ப்பாயம் செயல்படவும் வழிவகுக்கும்.


பிரியான்ஷி சிங், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கே. எல். அரோரா குற்றவியல் சட்டத் துறைக்கான கல்விசார் ஆய்வாளர் ஆவார்.


Original article : Can a UK-style judicial review mechanism make the UAPA fairer? -Priyanshi Singh

Share:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பயங்கரவாதிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றனர்? - விஜயதா சிங்

 பயங்கரவாதிகளாக வகைப்படுத்துவதற்கான சட்டம் எது? அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட முதல் நபர்கள் யார்? இதற்கான நடைமுறை என்ன?


தற்போதைய செய்தி: ஜூலை மாதம் 4-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு, ஒன்றிய உள்துறை அமைச்சகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)), 1967-ன்கீழ் 23 நபர்களை "பயங்கரவாதிகள்" (terrorists) என்று வகைப்படுத்தியது. 'பயங்கரவாதிகள்' என்று அறிவிக்கப்பட்ட ஆறு இந்தியர்கள் மற்றும் 17 பாகிஸ்தானியர்களில் பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் ஆவர். இந்தியாவில் இல்லாத இந்தக் குறிப்பிட்ட நபர்கள் மீது, ஆள் சேர்ப்பு, பயிற்சி, ஊடுருவல் மற்றும் தளவாட உதவிகள் முதல் நிதியுதவி, ஆயுத விநியோகம், ட்ரோன் மூலம் ஆயுதங்களை அனுப்புதல் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் நடத்த திட்டமிடுதல் அல்லது அதற்குத் துணைபுரிதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 80-ஆக அதிகரித்துள்ளது.


எந்தச் சட்டத்தின்கீழ் இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன?


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities Prevention Act (UAPA)) பிரிவு 35-ன்கீழ் இந்தப் பெயர் பட்டியல் உருவாக்கப்பட்டது. ஒரு நபர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகக் கருதினால், அந்த நபரின் பெயரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 4-வது அட்டவணையில் சேர்ப்பதற்கு ஒன்றிய  அரசுக்கு இந்தப் பிரிவு அதிகாரம் அளிக்கிறது.


இது எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?


குறிப்பிட்ட இந்த விதிமுறை, 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், முதலில் 2004, 2008 மற்றும் 2013-ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்புகளைத் தடை செய்வதற்காக 2004-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட 34 அமைப்புகள் தடை செய்யப்பட்டன. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி அன்று கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தம், தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் அதிகாரத்தை ஒன்றிய  உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கியது.


முதலில் இந்தச் சட்டம் ஏன் திருத்தப்பட்டது?


2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய  உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாதச் செயல்கள் அமைப்புகளால் அல்ல, தனிநபர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்று குறிப்பிட்டார். ஒரு அமைப்பை மட்டும் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பது அதற்குப் பின்னணியில் உள்ள தனிநபர்களைத் தடுத்துவிடாது என்றும், அவர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்காவிட்டால் அவர்கள் சட்டத்தைத் நிராகரித்துவிட்டு வேறு பெயரில் ஒன்றிணைந்து தங்கள் பயங்கரவாதச் செயல்களைத் தொடர வாய்ப்பளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் கூறினார். பயங்கரவாதம் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனை என்றும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல்வேறு நாடுகள் தனிநபர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்ட விதிகளைக் கொண்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பயங்கரவாதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை முடக்க அல்லது கைப்பற்ற, தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு இந்தத் திருத்தம் அதிகரமாளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறினார். தேசிய புலனாய்வு முகமை சர்வதேச மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கை விசாரிக்கும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து முக்கியமான தகவல்களும் தேசிய புலனாய்வு முகமையிடமே இருக்கும். மாநில காவல்துறையிடம் இருக்காது என்று உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டத்திருத்தம், பயங்கரவாதச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்குத் தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைமை இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தச் சட்டம் மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார். சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தொடர்புகளைக் கொண்ட ஒரு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுக்கும்போது, அந்த வழக்கு தொடர்பான அனைத்து முக்கிய உண்மைகளும் தேசிய புலனாய்வு முகமையிடம் தான் இருக்குமே தவிர, மாநிலக் காவல்துறையிடம் இருக்காது என்று கூறினார். தற்போதைய சட்டப்படி, பயங்கரவாதச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அந்தந்த மாநிலக் காவல்துறைத் தலைவரிடம் தேசிய புலானாய்வு முகமை முன்அனுமதி பெற வேண்டியுள்ளது. இத்தகைய சொத்துக்கள் பெரும்பாலும் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், இந்த அனுமதி வாங்கும் நடைமுறை காலதாமதத்தை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.






பயங்கரவாதிகளாக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட நபர்கள் யார்?


2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தச் சட்டத்தின்கீழ் முதன்முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஜெய்ஷ்-இ-முகம்மது (Jaish-e-Mohammad) அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) அமைப்பின் ஹபீஸ் சயீத், அவரது துணைத் தலைவர் ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்திய தாவூத் இப்ராஹிம் ஆகியோர் அடங்குவர். இந்த தனிநபர் பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுபவர்கள் ஆவர்.


இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகள் ஏதேனும் இருந்தனவா?


எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள்  மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக இந்தச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பின.


காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல் மாநிலங்களவையில், "ஒரு தனிநபரை எந்தக் கட்டத்தில் நீங்கள் பயங்கரவாதியாக அறிவிப்பீர்கள்? கைது செய்யும்போதா, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதா அல்லது விசாரணை முடிந்த பிறகா? இது தெளிவாக இல்லை. மேலும், அவர் மீது ஏற்கனவே பயங்கரவாதக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தால், அவரைப் பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது. ஏனெனில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்படுவார். இந்தச்சட்ட மசோதா நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு ரத்து செய்யப்படலாம். எனவே, இதை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவது சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்.





இதற்கு உள்துறை அமைச்சகத்தின் பதில் என்னவாக இருந்தது?


ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப இந்த அறிவிப்புகள் உள்ளன என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கையும் தனிநபர்களை இவ்வாறு அறிவிக்கத் தொடங்கியதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்கீழ் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க உலக நாடுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியில், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு இராஜதந்திர வட்டாரங்களில் இக்கட்டான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறினார். அஸாரை ஏன் இன்னும் பயங்கரவாதியாக அறிவிக்கவில்லை என்று எங்களிடம் கேட்கப்பட்டது. அந்த முரண்பாட்டைச் சரிசெய்யவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (Unlawful Activities Prevention Act (UAPA)) மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி அப்போது கூறியிருந்தார்.


இதில் உள்ள நடைமுறை என்ன?


இந்த முழு செயல்முறையும் நீதிமன்றம் நடவடிக்கை இல்லாது  ஒன்றாகும். இது உள்துறை அமைச்சக (MHA) அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும். மேலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) அரசாங்கத்தை சார்ந்தே  இருக்கும்.


ஒரு நபரை பயங்கரவாதியாக அறிவிக்கும் முன்மொழிவு,   உளவுத்துறை அமைப்புகளிடமிருந்தே வர வேண்டும். ஒரு பாதுகாப்பு முகமை வழங்கும் தகவல் மற்றொரு முகமையின் தகவலுடன் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. உள்துறை அமைச்சகம் அந்த முன்மொழிவை ஆய்வு செய்கிறது. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சகம் திருப்தியடைந்தால், உள்துறை அமைச்சரால் பெயர்கள் அங்கீகரிக்கப்பட்டு, பின்னர் இந்திய அரசிதழில் (Gazette of India) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றன.



பயங்கரவாதியாகக் குறிப்பிடப்பட்ட நபர்கள், நேரில் அல்லது பதிவுத் தபால் மூலம் உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டதும், 45 நாட்களுக்குள் உள்துறை அமைச்சகம் அது குறித்த முடிவை எடுக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட       3  பேர் அடங்கிய சுதந்திரமான மதிப்பீட்டுக் குழுவிடம் (Independent Three-Member Review Committee) மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது. இந்தக் குழுவையும் உள்துறை அமைச்சகம் நியமிக்கிறது. இதுவரை, பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள் யாரும் தங்களது வழக்கை மறுபரிசீலனை செய்யக் கோரி உள்துறை அமைச்சகத்தை அணுகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்  சட்டத்தின்கீழ் (Unlawful Activities Prevention Act (UAPA)) பயங்கரவாத அமைப்புகளாகக் குறிப்பிடப்பட்ட குழுக்கள் மற்றும் அமைப்புகளின் நிலை என்ன?


உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 35-ன்கீழ் பயங்கரவாத அமைப்புகளாக 45 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அந்தச் சட்டத்தின் முதல் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தவிர, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 3(1)-ன்கீழ் 'சட்டவிரோத அமைப்புகள்' (Unlawful Associations) என 23 குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Original article: How are terrorists designated under the UAPA? -Vijaita Singh

Share:

குர்ரம் பர்வேஸுக்கு பிணை : சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) கடுமையான நிபந்தனைகள் இருந்தபோதிலும் டெல்லி உயர்நீதிமன்றம் ஏன் சலுகை வழங்கியது? -அமால் ஷேக்

 விசாரணையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லாமல், நீண்டகாலம் சிறையில் இருந்த கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


தேசிய புலனாய்வு முகமையால் (National Investigation Agency (NIA)) விசாரிக்கப்பட்ட பயங்கரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸுக்கு ஜூன் 10 புதன்கிழமை அன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவிந்தர் துதேஜா ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கீழ் ஜாமீன் பெறுவதில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பர்வேஸ் நீண்டகாலம் காவலில் இருந்த காரணத்தால், விசாரணையின் மந்தமான போக்கும் மற்றும் அவரது உடல் குறைபாடு ஆகியவை அவரை விடுவிப்பதை நியாயப்படுத்துவதாக நீதிமன்றம் கூறியது.


"இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் மேல்முறையீட்டாளரின் (மனுதாரரின்) உரிமை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும் அது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) பிரிவு 43D(5)-ன்கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறக்கூடும்," என்று நீதிமன்றம் கூறியது. இந்த ஜாமீன் உத்தரவு, 2021 நவம்பரில் பர்வேஸ் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது.


இருப்பினும், 2020-ம் ஆண்டின் மற்றொரு தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு காரணமாக பர்வேஸ் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார். அந்த வழக்கில், அவர் ஏற்கனவே காவலில் இருந்தபோதே 2023-ல் முறையாகக் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கிற்கான அவரது ஜாமீன் மனு இன்னும் விசாரணை நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.


குர்ரம் பர்வேஸ் மீதான வழக்கு


தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தய்பா (Lashkar-e-Taiba (LeT)), ஒரு ஒருங்கிணைப்பாளர் (handler) மூலம் இந்தியா முழுவதும் செயல்பாட்டாளர்கள் மற்றும் வெளிப்படையாகச் செயல்படும் உதவியாளர்களின் (over-ground workers) ஒரு வலையமைப்பை நிறுவியதாகக் குற்றம் சாட்டி, நவம்பர் 2021-ல் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலிருந்து (FIR) இந்த தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்கு உருவானது. அந்த முதல் தகவல் அறிக்கையில் பர்வேஸின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், விசாரணையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.


பர்வேஸ், ஜம்மு & காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை (human rights violation) விசாரிப்பதிலும், கட்டாயக் கடத்தல்கள் (enforced disappearances), சட்டவிரோத தடுப்புக்காவல் (illegal detentions), சித்திரவதை (torture) மற்றும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் (extrajudicial executions) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக வாதிடுவதிலும், இதில் ஈடுபட்டுள்ள குடிமைச் சமூக அமைப்புகளின் ஒன்றியமான ஜம்மு & காஷ்மீர் குடிமைச் சமூகக் கூட்டமைப்பின் (Jammu Kashmir Coalition of Civil Society (JKCCS)) திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.


தேசிய புலனாய்வு முகமையின் (NIA) கூற்றுப்படி, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சதித்திட்டத்தில் பர்வேஸ் ஒரு அங்கமாக இருந்தார். கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (Line of Control(LoC)) அருகிலுள்ள இராணுவ நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவர் சேகரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், பர்வேஸ் இதை மறுத்து, அந்தத் தகவல்கள் "முதன்மையாக, அரசின் வரம்புமீறல் மற்றும்/அல்லது தீவிரவாதம் காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்கள் குறித்த உண்மை கண்டறிதல், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தலைச் சுற்றியே உள்ளன" என்று கூறினார்.


2007 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையத் சலாஹுதீனை அவர் சந்தித்தது குறித்துக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அந்தச் சந்திப்புகள் அந்த அமைப்போடு அவருக்கு இருந்த தொடர்பை வெளிப்படுத்துவதாக வாதிடப்பட்டது. இந்தச் சந்திப்புகள், நீண்ட காலமாக "பொதுப் பதிவில் உள்ள ஒரு விஷயமாக" இருந்துவரும் ஜெனீவா உடன்படிக்கையை (Geneva Convention) கடைப்பிடிக்குமாறு அமைப்புகளை வலியுறுத்துவதற்காகவும், மனிதாபிமான மற்றும் உரிமை சார்ந்த பணிகளுக்காகவும், செல்லுபடியாகும் விசாக்களுடன் மேற்கொள்ளப்பட்டன என்று பர்வேஸ் வாதிட்டார்.


உயர்நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் சிறைவாசம் அனுபவித்த காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கருதியது. பர்வேஸ் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகள் காவலில் இருந்த நிலையில், வழக்கு நடவடிக்கைகள் இன்னும் வாதங்கள் நடைபெறும் நிலையிலேயே உள்ளன.


பர்வேஸ் நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இருப்பினும், இந்த வழக்கு விசாரணை விரைவில் முடிவடைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதில், ஜாமீன் வழங்குவதே பொதுவான விதி என்றும், ஜாமீன் மறுப்பது ஒரு விதிவிலக்கு என்றும் நீதிமன்றம் கூறியது. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் மேல்முறையீட்டாளரின் உரிமைகள் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43D(5)-இன் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் மீறக்கூடும்" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


வழக்கின் ஆதாரங்களைப் பொறுத்தவரை, பர்வேஸுக்கு எதிரான கட்டாரியா, 2019-ல் அரசுத் தரப்பு சாட்சியாக (approver) மாறினார். இருப்பினும், வழக்கு விசாரணையின்போது அவரது வாக்குமூலம் இன்னும் முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டியவருமான, அவருடன் குற்றம் சாட்டப்பட்ட முனீர் அகமது கட்டாரியாவின் வாக்குமூலத்தை பெருமளவில் சார்ந்திருந்தது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


சிறையில் உள்ள வசதிகள் “போதுமானதாக இல்லை” அல்லது “உதவிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இல்லை” என்று வாதிட்ட நீதிமன்றம், கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு காலை இழந்திருந்த பர்வேஸின் மாற்றுத்திறனுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையில் அவருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கருதியது.


சட்டக் கட்டமைப்பு


இந்த வழக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43D(5)-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது வழக்குக் குறிப்பேடு அல்லது குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த பிறகு, "அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேலோட்டமாக உண்மை" (prima facie - அதாவது முதல் பார்வையில்) என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்தால், நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கக்கூடாது என்று கூறுகிறது.


நடைமுறையில், இது சாதாரண குற்றவியல் வழக்குகளை விட ஜாமீன் வழங்குவதற்கான தகுதியை மிகவும் கடுமையானதாக்குகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, விசாரணைக்காகக் காத்திருக்கும்போது ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை காலவரையின்றி சிறையில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை நீதிமன்றங்கள் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன.



இந்திய ஒன்றியம் vs கே.ஏ. நஜீப் (Union of India vs K.A. Najeeb) வழக்கில், நீண்டகால சிறைவாசம் மற்றும் விசாரணையில் ஏற்படும் தாமதம் ஆகியவை சட்டப்பிரிவின் 21-வது பிரிவின் கீழ் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பட்சத்தில், ஜாமீன் வழங்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு நீதிமன்றங்கள் தக்கவைத்துக் கொள்கின்றன என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அது, “வழக்கு நடவடிக்கைகள் தொடங்கும் போது, ​​ஜாமீன் வழங்குவதற்கு எதிரான சட்டமன்றக் கொள்கையை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நியாயமான காலத்திற்குள் விசாரணை முடிவடைவதற்கான வாய்ப்பு இல்லாதபோதும், ஏற்கனவே அனுபவித்த சிறைவாசக் காலம் நிர்ணயிக்கப்பட்ட தண்டனையின் கணிசமான பகுதியைத் தாண்டியிருக்கும்போதும் இந்தக் கட்டுப்பாடுகள் நீங்கிவிடும்” என்று குறிப்பிட்டது.


அதே வேளையில், குல்ஃபிஷா ஃபாத்திமா மற்றும் சையத் இஃப்திகார் அண்ட்ராபி ஆகியோரின் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சமீபத்திய தீர்ப்புகள் மற்றும் இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் பெரிய அமர்வுக்கு (larger bench) பரிந்துரைக்கும் முடிவு ஆகியவை, இத்துறையில் சட்டம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைந்து வருவதையும், அது இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படாத நிலையில் இருப்பதையும் உணர்த்துகின்றன.


Original article : Khurram Parvez gets bail: Why Delhi HC granted relief despite stringent UAPA conditions. -Amaal Sheikh

Share:

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் பிணை : கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் வெவ்வேறு அமர்வுகள் எவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கின? -அபூர்வா விஸ்வநாத்

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் விதிக்கப்பட்டுள்ள கடுமையான பிணை கட்டுப்பாடுகள் (bail restriction), அரசியலமைப்புப் பாதுகாப்புகளை விட மேலானதாக இருக்க முடியுமா என்ற சிக்கலான கேள்வி குறித்து, வெவ்வேறு நீதிமன்ற அமர்வுகளுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன.


திங்களன்று, போதைப்பொருள் சார்ந்த பயங்கரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை (bail) வழங்கியதன் மூலம், கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) கீழ் உள்ள பிணைக் கட்டுப்பாடுகள், அரசியலமைப்புப் பாதுகாப்புகளைவிட மேலானதாக இருக்க முடியுமா என்ற சிக்கலான கேள்வி குறித்து, உச்சநீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் தனித்துவமான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள பலதரப்பட்ட நீதித்துறை அணுகுமுறைகளை உச்சநீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியது.

"ஒரு பெரிய அமர்வு வகுத்துள்ள விகிதாச்சாரத்துடன் சிறிய அமர்வுகள் முரண்பட்டாலும், அக்கோட்பாட்டை அவற்றால் புறக்கணிக்க முடியாவிட்டால், இவ்விஷயத்தை இன்னும் பெரிய நீதிமன்ற அமர்வின் பரிசீலனைக்கு வைப்பதற்காக, மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதிக்கு இதனைப் பரிந்துரைப்பதே சரியான மற்றும் சாத்தியமான ஒரே நடவடிக்கையாகும். இரண்டு நீதிபதிகள் கொண்ட கூட்டமைப்பில் இருப்பதால், கே. ஏ. நஜீப் வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வகுத்த விகிதாச்சாரத்தால் கட்டுப்பட்டுள்ளோம். இதை மட்டுமே நாங்கள் கூறுகிறோம், இதற்கு மேல் எதுவும் இல்லை," என்று நீதிபதிகள் பி. வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 102 பக்க தீர்ப்பில் கூறியுள்ளது.


முன்னுதாரணங்களின் நிலைமை


ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் மிக நீண்டகாலம் சிறையில் இருந்தும், வழக்கு விசாரணை முடிவின்றி தாமதமாகும் சூழல்களில், வலுவிழக்குமா என்பதை இத்தீர்ப்புகள் விவாதித்தன. இத்தகைய சூழ்நிலைகளில், வாழ்வுரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பின் சரத்து 21 (Article 21) மீறப்படும் பட்சத்தில், பிணை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43(D)(5)-ன் கடுமையாக "செயலிழக்குமா" என்பது குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்த முன்னுதாரணங்களின் நிலைமையிலிருந்து அதன் கவலை எழுகிறது.


அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 2021-ல் வழங்கிய தீர்ப்பு, இந்த விவகாரத்தில் பின்பற்றப்பட வேண்டிய முதன்மையான சட்டமாகக் கருதப்படுகிறது. குற்றவியல் விசாரணைக்கு முடிவே தெரியாமல் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் விசாரணைக் கைதியான குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. பின்னர், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட (UAPA) வழக்குகளில் பிணை தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பான, தேசிய புலனாய்வு முகமை எதிர் ஜஹூர் அகமது ஷா வதாலி (NIA vs Zahoor Ahmed Shah Watali) வழக்கில் 2019-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் ஆய்வு செய்தது. ஜஹூர் அகமது ஷா வதாலி வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் பிணை மனுக்களைப் பரிசீலிக்கும்போது, ​​நீதிமன்றங்கள் அரசின் தரப்பு வாதங்களை அதன் தகுதியின் அடிப்படையில் நுணுக்கமாக ஆய்வு செய்யாமல், மேலோட்டமாகவே (face value) ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது.


திங்கட்கிழமையன்று, உச்ச நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிட்டதாவது, "நஜீப் வழக்கில் வழங்கப்பட்ட எச்சரிக்கை என்னவென்றால், பிரிவு 43-D(5)-ன் கீழ் அரசு தனது 'மேலோட்டமான முகாந்திரத்தை' (prima facie standard) நிரூபித்ததாலேயே மட்டும், ஒருவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கும் நடைமுறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்படக்கூடாது." இதன் மூலம், வதாலி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைவிட நஜீப் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே முன்னுரிமை பெறும் என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


நீதித்துறை ஒழுக்கமும் உறுதியும், குறைந்த நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகள், பெரிய அமர்வுகளால் வழங்கப்படும் தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றையே பின்பற்றக் கடமைப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இருப்பினும், உச்ச நீதிமன்றம் போன்ற ஒரு நீதிமன்றத்தில், ஒரே நேரத்தில் பலவிதமான இரண்டு மற்றும் மூன்று நீதிபதிகள் அமர்வுகள் செயல்பட்டு வரும் நிலையில், இத்தகைய விதிகள் எப்போதும் சீராகப் பின்பற்றப்படுவதில்லை.


”குர்விந்தர் சிங் எதிர் பஞ்சாப் அரசு” (Gurwinder Singh vs State of Punjab) வழக்கில், 2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், பிணை கோருவதற்கு வழக்கில் ஏற்படும் காலதாமதத்தை ஒரு "இயந்திரத்தனமான" வழியாகப் பயன்படுத்துவதற்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு எச்சரிக்கை விடுத்தது. ஒரு வழக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) பிரிவு 43(D)(5)-ன் கீழ் வகுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே பிணை வழங்கப்பட வேண்டும் என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.


2026 ஜனவரியில், மற்றொரு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் நஜீப் முன்னுதாரணத்தைப் புறக்கணித்து, வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பிணை கோருவதில் தாமதம் செய்வதற்கான "அரசியலமைப்புரீதியான வரம்பை" இன்னும் எட்டவில்லை என்று தீர்ப்பளித்தது.



Share: