புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கையான சூழலமைப்புகள் குறித்த முதலாவது வழிகாட்டு நெறிமுறை நூலை இந்தியா வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும், இந்த வழிகாட்டு நெறிமுறை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது? புல்வெளிகள் ஏன் முக்கியமானவை?
தற்போதைய செய்தி?
சில நாட்களுக்கு முன்னர், மங்கோலியாவின் உலான்பாத்தரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதலைத் தடுப்பதற்கான உடன்படிக்கையின் (United Nations Convention to Combat Desertification (UNCCD)) 17-வது தரப்பினர் மாநாட்டில், இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கையான சூழலமைப்புகள் (Other Open Natural Ecosystems (ONEs)) குறித்த முதல் வழிகாட்டு நெறிமுறை நூலை இந்தியா வெளியிட்டது. இந்தச் சூழலில், அந்த வழிகாட்டு நெறிமுறையின் முக்கிய அம்சங்கள் மற்றும் புல்வெளிகளின் முக்கியத்துவம் குறித்து நாம் தெரிந்து கொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. புல்வெளிகள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கான இந்தியாவின் வழிகாட்டு நெறிமுறையானது, அவற்றின் பாதுகாப்பு, மீட்டமைப்பு மற்றும் நிலையான மேலாண்மையை வலுப்படுத்தும் திசையில் ஒரு முக்கியப் படியாக அமைகிறது.
2. இந்த வழிகாட்டு நெறிமுறை, இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கைச் சூழலமைப்புகளின் (Open Natural Ecosystems) வளமான பல்லுயிர் தன்மை, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் சமூக–பொருளாதார முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
3. இது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பிற திறந்தவெளி இயற்கைச் சூழலமைப்புகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்கிறது. இதில் அவற்றின் புவியியல் அமைப்புகள், சூழலியல் பண்புகள், பல்லுயிர் வளம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். மேலும், இதில் மேய்ச்சல் முறை, தீ சார்ந்த சூழலியல் மற்றும் கார்பன் சேமிப்பு (carbon sequestration) குறித்த பகுதிகளும் இடம் பெற்று உள்ளன.
4. சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், இந்த வழிகாட்டு நெறிமுறையை இந்தியாவின் திறந்தவெளி இயற்கைச் சூழல் மண்டலங்களை அங்கீகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று விவரித்தார். மேலும், வனப்பகுதிகளைப் போலவே இவற்றையும் அறிவியல் பூர்வமாகப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
5. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் பிற திறந்தவெளி இயற்கைச் சூழலமைப்புகளின் பல்வேறு வகைகளைக் கொண்டுள்ளன. இமயமலை மற்றும் தேராய் புல்வெளிகள், தார் மற்றும் பன்னி நிலப்பரப்புகள், பாறை பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், புதர்நிலங்கள், தக்காண சவானாக்கள், கடலோரச் சூழலமைப்புகள் மற்றும் பாலைவன நிலப்பரப்புகள் ஆகியவை இதில் உள்ளன.
6. இந்தியாவின் புல்வெளிகள் மற்றும் பிற திறந்தவெளி இயற்கைச் சூழலமைப்புகளைப் பாதுகாத்தல், மீட்டெடுத்தல் மற்றும் நிலையான முறையில் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், மேம்பாட்டு முகமைகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இந்த வழிகாட்டு நெறிமுறை ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும்.
புல்வெளிகள் ஏன் மிகவும் முக்கியமானவை?
1. புல்வெளிகள், 10,000 முதல் 12,000 வகையான தாவரங்களைக் கொண்ட புல் வகைத் தாவரங்களின் குடும்பம் (Poaceae family) எனப்படும் புல் குடும்பத்தின் முக்கிய வாழ்விடங்களாகும். இவை உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துள்ளதுடன், பல்வேறு வகையான விலங்குகளுக்கும் வாழ்விடமாக உள்ளன. இவை பொதுவாக ஆண்டுக்கு 600 முதல் 1500 மி.மீ வரையிலான குறைந்த மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் செழித்து வளர்கின்றன.புல்வெளிகள் பல்வேறு சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன. அவை நீரையும் கார்பனையும் சேமித்தல், வேதிப்பொருட்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் காலநிலையை கட்டுப்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளைச் செய்கின்றன.
2. புல்வெளிகள் நீர் மற்றும் கார்பனைச் சேமித்தல், வேதிப்பொருட்களை மறுசுழற்சி செய்தல் மற்றும் காலநிலையைச் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு சூழலமைப்புச் சேவைகளை வழங்குகின்றன.
3. இந்தியாவில், நிலப்பரப்பில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதி புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. இதில் இமயமலையின் அல்பைன் புல்வெளிகள், மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள சௌர் (Chaurs) புல்வெளிகள், கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளின் வெள்ளச் சமவெளிகளில் அமைந்துள்ள புகழ்பெற்ற தேராய் புல்வெளிகள், மணிப்பூரில் காணப்படும் பும்டிஸ் (Phumdis) எனப்படும் அசையும் ஈரமான புல்வெளிகள் (இங்கு மான்கள் “நடனமாடுவது” போன்ற தோற்றம் காணப்படும்) மேற்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சவானா புல்வெளிகள், மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் புகழ்பெற்ற “மலைப்பகுதிகளில் காணப்படும் பசுமையான சிறு வனப்பகுதிகள்” (Shola) புல்வெளி–வனப்பகுதி சூழலமைப்புகள் ஆகியவை அடங்கும்.
4. உலகின் பல்வேறு பகுதிகளில் புல்வெளிகள் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. உலக இயற்கை நிதியத்தின் (World Wide Fund for Nature (WWF)) கூற்றுப்படி, ஆப்பிரிக்காவில் ‘சவன்னா’, தென் அமெரிக்காவில் ‘செராடோ’, வட அமெரிக்காவில் ‘பிரெய்ரி’, மத்திய ஆசியாவில் ‘ஸ்டெப்பி’, மற்றும் இங்கிலாந்தில் ‘மெடோ’ என்று புல்வெளிகள் அழைக்கப்படுகின்றன.
பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம்
ஜூன் 17-ஆம் தேதி, பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை (United Nations Convention to Combat Desertification (UNCCD)) அமைப்பின் கீழ் பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாலைவனமாதல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் இந்த நாள் உலகளாவிய தளமாக செயல்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "புல்வெளி நிலங்கள்: அங்கீகரிப்போம், மதிப்போம், மீட்டெடுப்போம்" (Rangelands: Recognize. Respect. Restore) என்பதாகும். குறிப்பிடத்தக்க வகையில், 2026-ஆம் ஆண்டை 'சர்வதேச புல்வெளி நிலங்கள் மற்றும் மேய்ச்சல் சமூகங்களுக்கான ஆண்டாக' (International Year of Rangelands and Pastoralists (IYRP)) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
பான் சவால்' (Bonn Challenge) குறித்த இந்தியாவின் 2-வது முன்னேற்ற அறிக்கை
1. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் (International Union for Conservation of Nature (IUCN)) ஆகியவை இணைந்து ஜூன் 17, 2026 அன்று வெளியிட்ட 'பான் சவால்' குறித்த இந்தியாவின் 2-வது முன்னேற்ற அறிக்கையின்படி, 2011 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியா 21.7 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த மற்றும் காடழிப்புக்குள்ளான நிலங்களை மீட்டெடுத்துள்ளது. இதில் வனப்பகுதி வளர்ப்பு, இயற்கையான மறுவளர்ச்சி, வனவியல் மேலாண்மை, வேளாண் வனப்பகுதி வளர்ப்பு மற்றும் சதுப்புநிலக் காடுகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த நிலங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன
2. 'பான் சவால்' என்பது ஜெர்மனி அரசாங்கம் மற்றும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் போன்றவற்றின் முயற்சியால் 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு உலகளாவிய முன்னெடுப்பாகும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் 'பான் சவால்' அமைப்பின் செயலகமாகச் செயல்படுகிறது.
3. பான் சவால் மூலம் 2020-ஆம் ஆண்டுக்குள் 150 மில்லியன் ஹெக்டேர் பாதிப்படைந்த மற்றும் அளிக்கப்பட்ட வனப்பகுதிகளின் நிலப்பரப்புகளை மறுசீரமைப்பதும், 2030-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 350 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகளை மறுசீரமைப்பதையும் இலக்காக நிர்ணயித்துள்ளது.
4. பான் சவால் (Bonn Challenge) என்பது க்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பத்தாண்டிற்கு (UN Decade on Ecosystem Restoration) நேரடியாக பங்களிப்பாகும். இது நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDGs)), உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கையின் (Convention on Biodiversity (CBD)) ஐச்சி உயிரியல் பன்முகத்தன்மை இலக்குகள் (Aichi Biodiversity Targets) மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) உள்ளிட்ட சர்வதேச உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள வழிமுறையை வழங்குகிறது.
இந்தியாவின் பான் சவால் உறுதிமொழி
1. இந்தியா, 2030-ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 8 மில்லியன் ஹெக்டேருடன் 13 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்டெடுப்பதாக உறுதியளித்திருந்தது. 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பாலைவனமாதலைத் தடுப்பதற்கான 14-வது ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, இந்த உறுதிமொழி 2030-ஆம் ஆண்டுக்குள் 26 மில்லியன் ஹெக்டேராகத் திருத்தம் செய்யப்பட்டது.
2. இந்தியாவில், 2011-13 மற்றும் 2018-19-ஆம் ஆண்டிற்கு இடையில் 1.45 மில்லியன் ஹெக்டேர், மொத்த புவியியல் பரப்பில் 0.44 சதவீதம், நிலச் சீரழிவைச் சந்தித்தது. அதேநேரத்தில், 97.85 மில்லியன் ஹெக்டேர், நாட்டின் புவியியல் பரப்பில் 29.77 சதவீதம், நிலச் சீரழிவு மற்றும் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்டுள்ளது.
3. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக 461.14 மில்லியன் டன் கார்பன் சேமிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், நடப்பட்ட தாவரங்களின் இறப்பு விகிதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 343.66 மில்லியன் டன் கார்பன் சேமிக்கப்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நிலப் பயன்பாடு, நிலப் பயன்பாட்டில் ஏற்படும் மாற்றம் மற்றும் வனத்துறை ஆகியவை பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கும் கார்பன்-டை-ஆக்சைடை சேமிப்பதற்கான முக்கிய வழிகளில் சிலவாக உள்ளன.
4. 3.6 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான வேளாண் வனப்பகுதி வளர்ப்பு முயற்சியின் மூலம், 4.18 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்டெடுத்து, அதிகபட்ச நிலப்பரப்பை மீட்டெடுத்த மாநிலங்களின் பட்டியலில் தெலங்கானா முதலிடம் பிடித்தது. அறிக்கையின்படி, மறுசீரமைப்பு முயற்சிகளில் முன்னணியில் இருந்த பிற மாநிலங்களில் மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.
5. இந்த முன்னேற்றத்திற்கு ஈடுசெய் வனப்பகுதி வளர்ப்பு நிதி (Compensatory Afforestation Fund), பசுமை இந்தியா இயக்கம் (Green India Mission), தேசிய காடு வளர்ப்புத் திட்டம் (National Afforestation Programme), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) போன்ற தேசியத் திட்டங்களும், மாநில அளவில் மேற்கொள்ளப்பட்ட பசுமை வளர்ப்பு முயற்சிகளும் இணைந்து முக்கியக் காரணமாக இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.