தீர்ப்பாயங்கள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள் யாவை? - பிரியா குமாரி சுக்லா

நாடாளுமன்றம் தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதாவை, (2026) (Tribunals Reforms Bill, 2026) நிறைவேற்றியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.


முக்கிய அம்சங்கள்:


• தீர்ப்பாயங்கள் என்பவை விரைவாகவும், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவத்துடனும் வழக்குகளுக்குத் தீர்வு காணவும், நீதிமன்றங்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் அமைக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த அமைப்புகளாகும்.

• இந்த மசோதா தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை (National Tribunals Commission) அமைக்கிறது. மேலும், தீர்ப்பாய உறுப்பினர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிப்பதுடன், ஆணையத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களை மூன்று மாதங்களுக்குள் ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்குகிறது.


• தீர்ப்பாயங்களின் நிர்வாகம், குறிப்பாக உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் நியமனங்களில் நிர்வாகத் துறையின் அதிகாரம் குறித்து பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக எழுப்பி வந்த பல பிரச்சனைகளுக்கு இந்த மாற்றங்கள் தீர்வுகாண்கின்றன.


• ஆனால் இந்த மசோதா, தீர்ப்பாயங்களின் நிர்வாகத்திலிருந்து அரசின் தலையீட்டை முழுமையாக வெளியேற்றிவிடவில்லை: ஆணையத்தின் மீதான அதிகாரங்கள், நிதி ஒதுக்கீடு, விதிகள் மற்றும் சேவை நிபந்தனைகள் ஆகியவற்றில் ஒன்றிய அரசு தொடர்ந்து முக்கிய அதிகாரங்களைக் கொண்டுள்ளது.


• பல ஆண்டுகளாக, உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசிற்கும் இடையே தீர்ப்பாயங்களின் நிர்வாகம் தொடர்பாகச் சட்டப்பூர்வ மற்றும் நீதித்துறைரீதியான முரண்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.


• 2017-ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின் மூலமே இந்த மோதல் தொடங்கியது. இந்தச் சட்டம் தீர்ப்பாயங்களுக்கான விதிகளை உருவாக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் அளித்தது. ஆனால், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்திருந்ததால், 2019-ஆம் ஆண்டின் 'ரோஜர் மேத்யூ' (Rojer Mathew) வழக்கின்போது உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இந்த விதிகளை ரத்து செய்தது.


• 2020-ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு புதிய விதிகளை அறிவித்தபோது, உறுப்பினர்களின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல மாற்றங்களை உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகளை ஏற்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டில் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதில் உறுப்பினர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் என்றும், நியமனத்திற்கான குறைந்தபட்ச வயது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும், அரசு தேர்வு செய்வதற்காகத் தேர்வுக் குழுக்கள் இரண்டு பெயர்கள் கொண்ட பட்டியலைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டது.


• இந்த விதிகளை தன்னிச்சையானவை என்று கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தபிறகும், நாடாளுமன்றம் ஆகஸ்ட் மாதம் 2021-ஆம் ஆண்டில் 'தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தை' (Tribunals Reforms Act) நிறைவேற்றியது. நீதிமன்றம் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவித்த விதிகளை, மீண்டும் அந்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வந்தது.


உங்களுக்குத் தெரியுமா?


• 2026-ஆம் ஆண்டின் புதிய மசோதா, 2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தை ரத்து செய்கிறது. மேலும், தற்போதைய சில நியமனங்களைப் பாதுகாக்கவும், பழைய நடைமுறையின்கீழ் தொடங்கப்பட்ட சில தேர்வுச் செயல்பாடுகளைத் தொடர அனுமதிக்கவும் தேவையான விரிவான இடைக்கால விதிகளைக் கொண்டுள்ளது.


• தீர்ப்பாயங்களின் செயல்பாட்டில் திறனை மேம்படுத்தவும், சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சீரான தன்மையை உறுதிப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக இதன் நோக்கம் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்து வழங்கிய தீர்ப்பையே இந்த மசோதா குறிக்கிறது.


• தேசிய தீர்ப்பாயங்கள் ஆணையத்தை (National Tribunals Commission) அமைப்பதே இதில் கொண்டுவரப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றமாகும். தீர்ப்பாயங்கள் தங்கள் நிர்வாக மற்றும் நிதித் தேவைகளுக்காகச் சம்பந்தப்பட்ட அரசு அமைச்சகங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க, இத்தகைய சுதந்திரமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியிருந்தது. இந்தச் சார்புநிலை தீர்ப்பாயங்களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதாக நீதிமன்றம்  சுட்டிக்காட்டியது.

• இந்த ஆணையம், தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுச் செயல்முறையை நடத்தும், தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யும், உறுப்பினர்களுக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணைகளைக் கண்காணிக்கும் மற்றும் தேசிய தீர்ப்பாய தரவுத் தளத்தைப் (National Tribunals Data Grid) பராமரிக்கும். இதன் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார். மேலும், இதில் இரண்டு நீதித்துறை உறுப்பினர்களும் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களும் இடம்பெறுவர். தொழில்நுட்ப உறுப்பினர்கள் பொது நிர்வாகம், நிதி அல்லது சட்டம் போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதிநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 


• தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் எனக்கூறி, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப, முன்னர் சர்ச்சைக்குரியதாக இருந்த பதவிக்காலம் தொடர்பான பிரச்சனையை இந்த மசோதா தீர்த்து வைக்கிறது. அதிகபட்ச வயது வரம்பு தலைவர்களுக்கு 70 ஆண்டுகளாகவும், உறுப்பினர்களுக்கு 67 ஆண்டுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட பரிசீலிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


• தேர்வுச் செயல்முறையும் மாற்றப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுவிற்கு ஆணையத்தின் நீதித்துறை உறுப்பினர் தலைமைப் பொறுப்பு வகிப்பார். இதில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, அரசுச் செயலாளர், தொழில்நுட்ப உறுப்பினர் மற்றும் வல்லுநர்கள் இடம்பெறுவர். இக்குழு ஒவ்வொரு காலியிடத்திற்கும் தகுதியான ஒரு வேட்பாளரைப் பரிந்துரைக்கும், மேலும் ஒரு கூடுதல் பெயர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படும். பரிந்துரையைப் பெற்ற மூன்று மாதங்களுக்குள் அரசு இந்த நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


Original Link: What are the constitutional provisions related to the tribunals?

Share: