'திருத்தப்பட்ட' இரண்டு விலை குறியீடுகள் (Price Indices) குறித்து . . . - அபிமான் தாஸ், ஸ்மிதா ராய் திரிவேதி

நுகர்வோர் விலை குறியீடு (Consumer Price Index(CPI)) மற்றும் மொத்த விலை குறியீடு (Wholesale Price Index(WPI)) ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பணவீக்கம் (inflation) ஆகிய இரண்டும் குறைவாக மதிப்பிடப்படுகின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.


இந்தியாவின் பணவீக்க அளவீட்டிற்கு அடிப்படையாக விளங்கும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் மொத்த விலை குறியீடு (WPI) ஆகிய இரண்டு விலை குறியீடுகளும், அடிப்படை ஆண்டுகளில் (base year) திருத்தங்கள் காரணமாக, வழக்கமான வேறுபாடுகளையும் அதே சமயம் புதிய முறையியல் சிக்கல்களையும் சந்தித்துள்ளன. இந்த இரண்டு குறியீடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் புதியவை அல்லது ஆச்சரியமானவை அல்ல என்றாலும், இந்தத் திருத்தங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியவை. இந்த மாற்றங்கள் பணவீக்கத்தின்மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? பொருளாதார வளர்ச்சியின் அளவீட்டிலும், அதன் விளைவாகக் கொள்கை முடிவுகளிலும் இது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?


முதலில் தரவுகளைப் பார்ப்போம். ஜூலை 2026-ல், ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீடு (CPI) (headline CPI) விகிதமானது ஜூன் 2026-ல் இருந்த 4.38 சதவீதத்திலிருந்து 4.45 சதவீதமாக (தற்காலிக மதிப்பீடு) சற்று உயர்ந்ததுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) 4 சதவீத பணவீக்க இலக்கை விட நுகர்வோர் விலை குறியீடு (CPI) தொடர்ந்து இரண்டு மாதங்களாக அதிகமாகவே உள்ளது. உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் (தற்காலிக மதிப்பீடு) கிராமப்புறங்களில் 5.79 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.05 சதவீதமாகவும் இருந்தது. நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) ஏற்பட்டுள்ள இந்த உயர்வு பெரும்பாலும் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டது என்பதை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நுகர்வோர் விலை குறியீடு (CPI) புள்ளிவிவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக உணவுப் பொருட்களின் விலைகள் இருப்பதால், ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீடு (CPI) எண்கள் 'முக்கியப் பணவீக்க' (core inflation) அளவிலிருந்து கணிசமாக விலகிச் செல்கின்றன.


கடந்த ஆறு மாதங்களாக மொத்த விலை குறியீட்டு (WPI) பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 2026-ல் இது 9.78 சதவீதமாக (தற்காலிக மதிப்பீடு) இருந்தது. மொத்த விலை குறியீட்டு (WPI), 'முதன்மைப் பொருட்கள்' (primary articles) மீதான பணவீக்கம் ஜூன் 2026-ல் 7 சதவீதமாக இருந்த நிலையில் இருந்து 8.52 சதவீதமாக உயர்ந்தது. அதே காலகட்டத்தில், எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 27.41 சதவீதத்திலிருந்து 20.05 சதவீதமாகக் குறைந்த அதே வேளையில், உற்பத்திப் பொருட்கள் மீதான பணவீக்கம் 7.48 சதவீதத்திலிருந்து 8.29 சதவீதமாகச் சற்று உயர்ந்ததுள்ளது. மொத்த விற்பனை உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 6.14 சதவீதத்திலிருந்து 6.65 சதவீதமாக அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக மொத்த விலை குறியீடு (WPI) பணவீக்கம் உயர்வதற்கு எரிபொருள் பணவீக்கமே முக்கியக் காரணமாக இருந்தது என்பது தெளிவாகிறது. ஆனால், இப்போது உணவு மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகிய இரண்டிலும் காணப்படும் பணவீக்க உயர்வு அதிகளவில் உள்ளது என்பது தெளிவாகிறது. இரண்டு குறியீடுகளும் மேல்நோக்கிய போக்கைக் காட்டினாலும், மொத்த விலைக் குறியீட்டில் (WPI) ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) இன்னும் பிரதிபலிக்கவில்லை.


மொத்த விலைக் குறியீடு (WPI) : மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்


இப்போது, ​​மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைப் பார்ப்போம். முதலாவதாக, நுகர்வோர் விலை குறியீடு (CPI) மற்றும் மொத்த விலைக் குறியீடு (WPI) ஆகிய இரண்டிலும் அடிப்படை ஆண்டுகள் (base years) புதுப்பிக்கப்பட்டுள்ளன. மொத்த விலைக் குறியீட்டுக்கான (WPI) அடிப்படை ஆண்டு 2011-12-லிருந்து 2022-23-க்கும், நுகர்வோர் விலை குறியீட்டுக்கான (CPI) அடிப்படை ஆண்டு 2012-லிருந்து 2024-க்கும் மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக, இக்குறியீடுகளுக்கு இடையிலான வேறுபாட்டிற்கு, அவற்றின் உள்ளடக்கம் மற்றும் பொருட்கள் தொகுப்பு (baskets), எடை விகிதங்கள் (weighting diagram) மற்றும் மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் உள்ள விலை மாறுபாடுகள் போன்ற காரணிகளே காரணமாகக் கருதப்படுகின்றன. உதாரணமாக, மொத்த விலைக் குறியீட்டில் (WPI) உற்பத்திப் பொருட்களின் பங்கு அதிகம். ஆனால், அதில் சேவைத் துறை சார்ந்த கூறுகள் எதுவும் இல்லை. மறுபுறம், நுகர்வோர் விலை குறியீட்டில் (CPI) சேவைத் துறையின் பங்கு கணிசமாகவும், உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவும் உள்ளது.


தேசிய வருமானத்தைக் கணக்கிடுவதற்கு இவ்விரு விலைக் குறியீடுகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், ஏறக்குறைய ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட மொத்த விலைக் குறியீடு (WPI) மற்றும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) ஆகியவற்றிற்கு ஏன் வெவ்வேறு அடிப்படை ஆண்டுகள் (முறையே 2022-23 மற்றும் 2024) நிர்ணயிக்கப்பட்டன என்பது தெளிவாக இல்லை. அடிப்படை ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​அந்த ஆண்டுகள் 'சாதாரணமான' (normal) ஆண்டுகளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். வரலாற்றுரீதியாக, இவை இரண்டு வெவ்வேறு அமைச்சகங்களால் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரு குறியீடுகளின் அடிப்படை ஆண்டு திருத்தத்தையும் ஒருங்கிணைக்கச் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.


இரண்டாவதாக, புதிய மொத்த விலைக் குறியீடு (WPI) தொடரில் உள்ள எடை விகிதங்கள், உள்நாட்டு உற்பத்தியின் 'மொத்த உற்பத்தி மதிப்பு' (Gross Value of Output(GVO)) அடிப்படையில் அமைந்துள்ளன. இது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தைக் கணக்கில் கொண்ட பழைய 'நிகர வர்த்தக மதிப்பு' (Net Traded Value) முறைக்கு (முந்தைய 2011-12 தொடர்) மாற்றாக வந்துள்ளது. அதாவது, மொத்த உற்பத்தி மதிப்பை (GVO) அடிப்படையாகக் கொண்ட தற்போதைய மொத்த விலைக் குறியீட்டு (WPI) முறையானது, பொருட்களின் வர்த்தக மதிப்பைவிட உள்நாட்டு உற்பத்தியில் அவற்றின் பங்கிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, மொத்த விலைக் குறியீட்டில் (WPI) ஏற்பட்டுள்ள தற்போதைய உயர்வு, உலகளாவிய விலை மாற்றங்களுக்கு உட்பட்ட பொருட்களைவிட உள்நாட்டுப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதைக் குறிப்பதாக இருக்கலாம்.


மூன்றாவதாக, தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பும் தன்மையும் பெருமளவில் மாறியுள்ளன. அப்படியிருக்க, கடந்த முப்பதாண்டுகளாக மொத்த விலைக் குறியீட்டு (WPI) எடை விகிதங்கள் எவ்வாறு இவ்வளவு நிலையாகத் தொடர்கின்றன? என்பதை வரைபடம் 1 காட்டுகிறது. உற்பத்திப் பொருட்கள் மற்றும் முதன்மைப் பொருட்கள் (primary articles) ஆகியவற்றின் ஒப்பீட்டு ஆதிக்கம் போன்ற பரந்த பேரியல் பொருளாதார விகிதாச்சாரங்கள் நடுத்தர காலத்தில் படிப்படியாக மாறக்கூடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், 1990-களிலிருந்து காணப்பட்ட இந்த நிலையான எடைகளில் காணப்படும் நிலைத்தன்மை ஆச்சரியமளிப்பதாகவும், இயல்பான எதிர்பார்ப்புகளுக்கு முரணானதாகவும் உள்ளன.


நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) திருத்தம்


நுகர்வோர் விலைக் குறியீட்டுத் (CPI) தொடரின் இந்த மாற்றமானது தனிநபர்கள் மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்கள் என இரு தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். 2016-ல் ரிசர்வ் வங்கி (RBI) நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய பணவீக்கக் கட்டுப்பாட்டு முறையை (flexible inflation targeting approach) ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் இதுவாகும். இம்முறையில், நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் ஒரு முக்கிய அளவுகோலாக (nominal anchor) பயன்படுத்தப்பட்டது. இப்புதிய தொடரானது, முன்பு இருந்த ஆறு முக்கியக் குழுக்களைக் கொண்ட கட்டமைப்பிற்குப் பதிலாக, 'நோக்கத்தின் அடிப்படையில் தனிநபர் நுகர்வு வகைப்பாடு-2018' (Classification of Individual Consumption According to Purpose(COICOP)) முறையைப் பின்பற்றுகிறது. திருத்தப்பட்ட குறியீட்டு எடைகள் (weights), HCES 2023-24 கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட புதுப்பிக்கப்பட்ட குடும்பச் செலவின முறைகளை பிரதிபலிக்கின்றன. அகில இந்திய அளவில், குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 299-லிருந்து 358-ஆக அதிகரித்துள்ளது. இதில், பொருட்கள் (goods) 259-லிருந்து 308-ஆகவும், சேவைகள் (services) 40-லிருந்து 50-ஆகவும் அதிகரித்துள்ளன. புதிதாகச் சேர்க்கப்பட்ட குறிப்பிடத்தக்க பொருட்களில் கிராமப்புற வீட்டுவசதி, இணையவழி ஊடகம் அல்லது ஸ்ட்ரீமிங் சேவைகள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள், பார்லி மற்றும் அதன் தயாரிப்புகள், பென் டிரைவ்கள் மற்றும் வெளிப்புற வன்வட்டுகள் (external hard disks), குழந்தைப் பராமரிப்புச் சேவைகள் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் ஆகியவை அடங்கும்.


முக்கியமாக, விலை சேகரிப்பு நடைமுறையில், 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 12 பெரிய நகரங்களில், மின்னணு வர்த்தக (e-commerce) விலைகளும் ஒரு கூடுதல் சந்தைப் பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய தொடரில், உணவு மற்றும் பானங்களின் பங்கு 45.86 சதவீதத்திலிருந்து 36.75 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொகுப்பின் (basket) மிகப்பெரிய அங்கமாக இது தொடர்ந்து நீடிக்கிறது என்பதை வரைபடம் 2 வெளிப்படுத்துகிறது.



இருப்பினும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) திருத்த ஆவணம் மற்றும் HCES 2023-24 ஆகியவற்றை உன்னிப்பாக ஆராயும்போது, ​​புதிய CPI-ல் - குறிப்பாக உணவுப் பொருட்களுக்கான - ஒதுக்கப்படும் முக்கியத்துவமானது (weightage), இணையவழி கொள்முதல்களால் ஏற்படும் நுகர்வு மாற்றங்களைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், புதிய CPI-ல் உணவுப் பொருட்களுக்கான முக்கியத்துவமும், உணவுப் பொருட்களின் பணவீக்கமும் குறைவாக மதிப்பிடப்படலாம். CPI தொடர்ந்து உணவுப் பொருட்களின் பணவீக்கத்தைக் குறைவாக மதிப்பிட்டால், பொதுவான பொருட்களின் விலையில் கூட இவ்விரு குறியீடுகளுக்கும் இடையே பணவீக்க வேறுபாடு ஏற்படுவது எதிர்பாராத ஒன்றல்ல.


மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மீதான தாக்கம்


இந்தியாவின் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கீட்டு முறையில் (அடிப்படை ஆண்டு 2022–23), புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI), ஒவ்வொரு பொருளுக்கான 'தனியார் இறுதி நுகர்வுச் செலவினத்தை' (Private Final Consumption Expenditure (PFCE)) கண்காணிக்கவும், காலாண்டுப் பகிர்வு முறைகளை மாற்றியமைக்கவும் குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பு (HCES) 2022-23 தரவை நேரடி தேசிய அளவுகோலாகப் பயன்படுத்துகிறது. இருப்பினும், முன்பே குறிப்பிட்டது போல, HCES 2022-23 தரவு இணையவழி கொள்முதல்கள் மூலமான நுகர்வை உள்ளடக்கவில்லை. இணையவழி கொள்முதல்கள் நுகர்வு முறையை அதிகளவில் தீர்மானித்து வரும் நிலையில், நாம் நுகர்வு அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அந்த அளவிற்கு குறைவாக மதிப்பிடுகிறோமா?. மேலும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) (nominal GDP), யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியின் தாக்கம் இன்னும் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். முறைசாரா அல்லது அமைப்புசாரா துறையை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்ற கவலை முன்பு இருந்த நிலையில், தற்போது முறைசார் துறையிலிருந்து (formal sector) வரும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளும் விடுபட்டுப் போகலாம் என்ற கவலை அதிகரித்து வருகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டின் மீதும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது (தாஸ் மற்றும் ராய் திரிவேதி, ஏப்ரல் 17, 2026, பிசினஸ்லைன்). எனவே, அடிப்படை ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரும் கூட, நாம் உற்பத்தி மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டையும் குறைவாகவே மதிப்பிடுகிறோமா?


தாஸ், IIM அகமதாபாத்தில் ICICI வங்கியின் 'சேர் பேராசிரியர்' (Chair Professor) ஆவார். திரிவேதி, தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்தில் (NIBM) இணைப் பேராசிரியராக உள்ளார்.


Original Link: A tale of 2 ‘revised’ price indices 

Share:

அறிவியல் தங்களுக்கு உதவ, இமயமலை நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - பெமா கியாம்சோ

வேகமான காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இமயமலை குறித்த கடந்தகால அறிவியல் தரவுகள் இன்றியமையாதவை என்றாலும், அவை இனி நம்பகமான வழிகாட்டியாக இருக்க முடியாது. அடுத்த பேரிடரை மிகவும் திறம்பட எதிர்கொள்ள இமயமலை பகுதி நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


ஆகஸ்ட் 26 அன்று காலை, சில நிமிடங்களிலேயே நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் பல உயிர்களை பலிவாங்கியது. மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அனைத்தையும் இழந்த நிலையில் துயருறும் மக்களுக்கு ஆறுதலாக நமது எண்ணங்கள் உள்ளன.


அறிவியல்ரீதியான மதிப்பீடுகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தப் பேரிடருக்கான காரணங்கள் குறித்து உறுதியான முடிவுக்கு வருவது இப்போதைக்கு முன்கூட்டியே எடுக்கும் முடிவாகவே அமையும். மேலும், இதில் பல கேள்விகள் எஞ்சியுள்ளன, விசாரணைகள் தொடரும்போது அவற்றுக்கான விடைகள் கிடைக்கும். ஆனால் ஒரு பாடம் ஏற்கனவே தெளிவாகிவிட்டது. இந்து குஷ் இமயமலைப் பகுதியில் காலநிலை சார்ந்த அபாயங்கள், அவற்றை முன்கூட்டியே கணிப்பதையோ அல்லது புரிந்துகொள்வதையோவிட மிக வேகமாக மாறி வருகின்றன.


நமக்கு முன்னால் உள்ள சவால் என்பது வெறும் கூடுதல் தகவல்களை அறிந்துகொள்வது மட்டுமல்ல, நிச்சயமற்ற தன்மையே காலநிலை அபாயங்களின் முக்கிய பண்புகளில் ஒன்றாக மாறிவரும் உலகில், எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்றுக்கொள்வதுதான்.


நாம் கண்டது ஒரு அசாதாரணமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தாகும். இது 'கிரையோஸ்பியர்' (cryosphere - நீர் பெரும்பாலும் திண்ம நிலையில் இருக்கும் பனி மண்டலம்) மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. இது எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய வேகத்துடனும் தீவிரத்துடனும் உருவானது. காலநிலை மாற்றம் உயரமான மலைப்பகுதிகளின் சூழலை நிலையற்றதாக்குகிறது. பனி, உறைபனி, பாறை, நீர் மற்றும் மலைச் சரிவுகள் ஆகியவை ஒன்றோடொன்று வினைபுரியும் விதம், ஆபத்தானதாகவும் முன்னறிவிப்பதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறி வருகிறது.


இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்து குஷ் இமயமலைப் பகுதி பெரும் பனி மண்டலம் (cryosphere) சார்ந்த பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவுகள், பனிப்பாறை ஏரி உடைப்பு, பனிச்சரிவுகள், உறைபனி உருகுதல் மற்றும் தொடர் ஆபத்துகள் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பேரிடர்கள் உயிர்களைப் பறித்ததோடு, பல ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளையும் சில மணிநேரங்களிலேயே அழித்துவிட்டன.


இனி இத்தகைய பேரிடர்கள் மீண்டும் நிகழுமா என்பது கேள்வியல்ல. அவை நிச்சயமாக நிகழும். அவை நிகழும்போது அவற்றை எதிர்கொள்ள நமது நிறுவனங்களும் முதலீடுகளும் தயாராக உள்ளனவா என்பதுதான் கேள்வி. வரலாற்றுரீதியாக, கடந்தகால நிகழ்வுகள் எதிர்கால அபாயங்கள் குறித்த எதிர்பார்ப்புகளை வழிநடத்த உதவின. ஆனால் அந்த அனுமானத்தை இனி தொடர்ந்து நம்பியிருக்க முடியாது.


காலநிலை மாற்றம் பனிப்பாறைகள், பனிப்பொழிவு, உறைபனி, நதி அமைப்புகள் மற்றும் மலைச் சரிவுகளை மாற்றியமைக்கிறது. இது அந்த வரலாற்று அனுமானங்கள் கட்டமைக்கப்பட்ட சூழலையே மாற்றியமைக்கிறது. கடந்தகால தரவுகளும் அனுபவங்களும் இன்றியமையாதவைதான். ஆனால், எதிர்காலத்திற்கான நம்பகமான வழிகாட்டிகளாக அவற்றை மட்டுமே இனி கருத முடியாது.


குறிப்பாக மலைப் பகுதிகளில், இது ஒரு பெரும் சவாலை உருவாக்குகிறது. இந்து குஷ் இமயமலைப் பனி மண்டலம், பரந்த மற்றும் பெரும்பாலும் அணுக முடியாத நிலப்பரப்பில் பரவியுள்ளது. அத்தகைய நிலப்பரப்பில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒரு மாபெரும் அறிவியல் முயற்சியாகும். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் பல மாற்றங்களைக் கவனிப்பதும், அவற்றை மாதிரிகள் (models) மூலம் விளக்குவதும் கடினம்.  மேலும், அவற்றை முன்கூட்டியே கணிப்பது அதைவிடக் கடினம்.


ஒரு ஆபத்து எப்போது ஏற்படக்கூடும் என்பதை அறிவது சவாலானது. அது எங்கு தோன்றக்கூடும் என்பதை அறிவது இன்னும் கடினமானதாக இருக்கலாம்.


அதே நேரத்தில், அறிவின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும் இவ்வேளையில், காலநிலை மாற்றம் ஆராய்ச்சியை மேலும் கடினமாக்குகிறது. தீவிர வானிலை நிகழ்வுகளும், மாறிவரும் பருவகால முறைகளும் கள ஆய்வை மேலும் சீர்குலைக்கின்றன. கண்காணிப்பு வலைப்பின்னல்கள் (Observation networks) முழுமையடையாமல் உள்ளன. மலைப் பிரதேசங்கள் தற்போது சந்தித்து வரும் மாற்றத்தின் அளவிற்கு ஏற்ப, நீண்டகாலக் கண்காணிப்பு, மாதிரியாக்கம் மற்றும் அறிவியல் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து போதுமானதாக இல்லை.


இந்தத் துயரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், நாம் திட்டமிடும், முதலீடு செய்யும் மற்றும் தயாராகும்போதும் நிச்சயமற்ற தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மிக வேகமாக மாறிவரும் காலநிலையில், நடவடிக்கை எடுப்பதற்கு முன் முழுமையான நிச்சயத்தன்மைக்காகக் காத்திருப்பது இனி ஒரு பொறுப்பான தேர்வாக இருக்க முடியாது.


இந்த மலைகளில் செய்யப்படும் ஒவ்வொரு பெரிய முதலீடும், வெப்பமயமாகி வரும் மற்றும் மேலும் தொடர்ந்து நிலையற்றதாகி வரும் காலநிலையால் ஏற்படும் அபாயங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். காலநிலை அபாயங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டால், இன்று பொருளாதாரரீதியாக சாத்தியமானதாகத் தோன்றும் உள்கட்டமைப்பு, நாளை மிக அதிக செலவுகளை ஏற்படுத்தக்கூடும். திட்டமிடல் செயல்முறைகளின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு இரண்டாம் நிலை அம்சமாக அபாயத்தை இனி கருத முடியாது. அது தொடக்கத்திலிருந்தே ஒரு முக்கிய அம்சமாக மாற வேண்டும்.


இந்தப் பேரிடர் இன்னொரு முக்கியமான பாடத்தையும் எடுத்துக் காட்டுகிறது.


இந்தப் பிராந்தியத்தின் கடினமான நிலப்பரப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களைக் கருத்தில் கொண்டு, அறிவியல் கவனம் எங்கு செலுத்தப்படுகிறது என்பது குறித்து எப்போதும் கடினமான தேர்வுகள் செய்யப்பட வேண்டும். இந்த கவனத்தின் பெரும்பகுதி பனியாறுகள் மற்றும் பனியாற்று ஏரிகளுக்குச் சரியான முறையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் நீண்டகாலமாக முக்கியமான பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் மலை அபாயங்களை தனித்தனியாக புரிந்து கொள்ள முடியாது என்பதை சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன.


பாறை மற்றும் பனிச்சரிவுகள், உறைபனிப் பாளங்கள் (permafrost) உருகுதல், நிலையற்ற மலைச் சரிவுகள், பனிப்பொழிவு நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட செயல்முறைகள் ஆகியவை பெருகிய முறையில் ஒன்றாகக் கருதப்பட வேண்டும். மலைப்பகுதிகளில் ஏற்படும் ஆபத்துகள் பெரும்பாலும் பெரும்பாலும் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்புகளைப் புரிந்துகொள்வது எந்தவொரு தனிப்பட்ட ஆபத்தையும் அதன் சொந்தமாகப் புரிந்துகொள்வதைப் போலவே முக்கியமானது.


தாங்களால் எல்லாவற்றையும் கண்காணிக்க முடியாது, எந்த நிறுவனமும் முடியாது. ஆனால், நாம் நம் முயற்சிகளை எங்கு கவனம் செலுத்துகிறோம் மற்றும் நாம் உருவாக்கும் அறிவை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் நாம் புத்திசாலியாக இருக்க முடியும். அதற்கு வலுவான அறிவியல் தேவை. ஆனால் அதற்கு அறிவியல் மட்டும் போதாது.


நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, மாறிவரும் கிரையோஸ்பியர் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளைப் புரிந்துகொள்வதற்கு தங்கள் எட்டு பிராந்திய உறுப்பு நாடுகளுடன் பணியாற்றியுள்ளோம். இருப்பினும்கூட, மாற்றத்தின் வேகம், எந்த ஒரு நிறுவனம் அல்லது எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக நிர்வகிக்கக்கூடிய வரம்புகளை சோதிக்கிறது. இந்த ஆபத்துகள் தேசிய எல்லைகளுடன் நின்றுவிடுவதில்லை. எனவே, இவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளும் எல்லைகளுடன் நின்றுவிடக் கூடாது. மலைப் பகுதிகளில் ஏற்படும் ஆபத்துகள் வேகமாக வளர்ச்சியடையும் மற்றும் பல நாடுகளை பாதிக்கும் என்பதை சமீபத்திய நாட்களின் நிகழ்வுகள் மீண்டும் நிரூபிக்கின்றன. இத்தகைய சூழலில், கூட்டு முயற்சி விரும்பத்தக்க ஒன்று மட்டுமல்ல, அது மிக அவசியமானதும் கூட.


தற்போதைய சூழலுக்குத் தேவைப்படுவது அலமாரிகளில் தேங்கிக்கிடக்கும் கூடுதல் அறிக்கைகள் அல்ல. அபாயங்கள் வேகமாக அதிகரித்து வரும் பகுதிகளில் கவனம் செலுத்தும் கடுமையான அறிவியலை இது கோருகிறது. இது துறைகள் மற்றும் எல்லைகளுக்கு அப்பால் வலுவான ஒத்துழைப்பைக் கோருகிறது. மிக முக்கியமாக, இது அறிவியல் புரிதலில் இருந்து நடைமுறை சார்ந்த நடவடிக்கைக்கு விரைவான பாதையைக் கோருகிறது.


இந்த ஆபத்துகளுக்கு மிக அருகில் வாழும் மக்களே, நமக்குத் தெரிந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் கடைசியாக இருக்கக்கூடாது. இன்றைய சூழலில் 'காலநிலை மாற்றம் சார்ந்த தலைமைத்துவம்' என்பது இதைத்தான் குறிக்கிறது.


காலநிலை சார்ந்த தலைமைத்துவம் (Climate leadership) என்பது முழுமையான உறுதித் தன்மைக்காக காத்திருப்பதைக் குறிக்காது. இது நிச்சயமற்ற நிலையிலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதையே அது குறிக்கிறது. காலநிலை இனி கடந்த காலத்தைப் போலச் செயல்படாது என்பதை உணர்ந்து கொள்வதும் இதில் அடங்கும். எனவே, எதிர்காலத்தைத் திட்டமிட நமக்கு புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன. பேரிடர்கள் நிகழ்ந்த பிறகு மட்டுமல்லாமல், அவை நிகழும் முன்பே நமது நடவடிக்கைகளுக்கு அறிவியல் வழிகாட்ட வேண்டும் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.


இயற்கை நமக்குத் தெளிவான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து விடுத்து வருகிறது. ஆகஸ்ட் 26 அன்று நிகழ்ந்த பேரழிவை, அன்று நடந்த சம்பவத்திற்காக மட்டுமே நினைவுகூரக் கூடாது. அது வெளிப்படுத்திய உண்மைகளுக்காகவும் அதை நினைவில் கொள்ள வேண்டும். மலைவாழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் மாறிவருகின்றன. நிச்சயமற்ற தன்மையே ஒரு ஆபத்துக் காரணியாக மாறியுள்ளது, அதற்கேற்ப நமது பதில் உருவாக வேண்டும்.


நமது கையில் அறிவியல் அறிவு மற்றும் நிபுணத்துவம் உள்ளது. இப்போது நமக்குத் தேவையானது, நமக்குத் தெரிந்தவற்றின் மீது செயல்படுவதற்கான கூட்டு விருப்பமே, நாம் இன்னும் அறியாததைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். நமது மலைகள் நமக்கு தெளிவான எச்சரிக்கைகளை கொடுக்கின்றன. நாம் அவற்றைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும்.


பேமா கியாம்ட்சோ | இயக்குநர் ஜெனரல், சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD), நேபாளம்

Original Link: Himalayan nations must unite to help science help them

Share:

‘சிப்ஃபிளேஷன்’: நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலை ஏன் உயர்கிறது? - ரவீனா பனேட்டா



சிப்ஃப்ளேஷன் என்பது “Chip” (செமிகண்டக்டர் சிப்) + “Inflation” (பணவீக்கம்) ஆகிய இரண்டு சொற்களின் கலவையாக உருவான புதிய சொல்.


இது குறைமின்கடத்தி சிப்கள் (குறிப்பாக நினைவக சிப்கள் – DRAM, NAND Flash போன்றவை) விலை வேகமாக உயரும் நிலையைக் குறிக்கிறது.


நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ‘சிப்ஃபிளேஷன்’ (Chipflation) என்ற புதிய நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது. சிப்ஃபிளேஷன் என்றால் என்ன? நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலை உயர்வுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியும் பிற காரணிகளும் எவ்வாறு பங்களிக்கின்றன?


தற்போதைய செய்தி :


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) நுகர்வோர் விலைக் குறியீட்டு (Consumer Price Index (CPI)) தரவுகளின்படி, பல்வேறு நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 3-5% வரை அதிகரித்துள்ளன. 2025-ஆம் ஆண்டில் விலைகளின் மாற்றம் இதைவிட மிகவும் குறைவாகவே இருந்தது.


முக்கிய அம்சங்கள்:


1. உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீடுகள் அதிக அளவில் அதிகரித்து வருவதால், தினசரி  பயன்படுத்தப்படும் நுகர்வோர் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நினைவகச் சில்லுகளுக்கு (Memory Chips) கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


2. இதன் காரணமாக, உற்பத்தியாளர்கள் தாங்கள் வசூலிக்கும் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளனர். இதனால், கடந்த காலங்களில் திறன்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களின் விலைகள் பல ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்த அளவிலான விலை உயர்வு, 2026-ஆம் ஆண்டில்  ஆறு மாதங்களிலேயே ஏற்பட்டுள்ளது.


3. நினைவகச் சில்லுகள் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடிப்படை கூறுகளாக உள்ளன. குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், காற்றுப் பதனிகள், மின்கலன்கள், திறன்பேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள், காதொலி சாதனங்கள் மற்றும் பென் டிரைவ்கள் போன்ற பல நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் விலைகள் கடந்த சில மாதங்களில், வெவ்வேறு அளவுகளில், ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு தொடர்ந்து உயர்ந்துள்ளன.


4. இவை அனைத்திலும் பொதுவாக இடம்பெறும் மிகச் சிறிய ஒரு கூறுதான் இதற்குக் காரணம்: நினைவகச் சில்லுகள் (Memory Chips) ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பட்டியலில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளில், இந்த 9  பொருட்களும் சேர்ந்து 1% பங்கை மட்டுமே வகிக்கின்றன.


5. இருப்பினும், சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கத்தை இவை தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகின்றன. மேலும், வரும் ஆண்டுகளிலும் இந்த நிலை நீடிக்கக்கூடும். உதாரணமாக:


  1. திறன் பேசிகள்: 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை  வரையிலான காலத்தில் 4% விலை உயர்வு காணப்பட்டது. ஆனால், 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு  0.7% சரிவைக் கண்டிருந்தது.

(b) காற்றுப் பதனிகள் (Air conditioners): கோடைக்காலத்தில் இவற்றின் விலைகள் வழக்கமாக அதிகரிக்கும் என்றாலும், இந்த ஆண்டு ஜனவரி–ஜூலை காலகட்டத்தில் விலை உயர்வு 4.8% ஆக இருந்தது. 2025-ஆம் ஆண்டின் ஜனவரி–ஜூலை காலகட்டத்தில் இது 1.1% மட்டுமே இருந்தது.


(c) தொலைக்காட்சிகள் (TVs): 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொலைக்காட்சிகளின் நுகர்வோர் விலைக் குறியீடு 3.5% உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பின்னோக்கிக் கணக்கிட்டால், இதே அளவிலான விலை உயர்வு ஏற்பட 54 மாதங்கள், அதாவது நான்கரை ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.


6. பிற நுகர்வோர் மின்னணுப் பொருட்களிலும் இதேபோன்ற பெரிய அளவிலான எண்ணிக்கைகள் காணப்படுகின்றன: காற்றுப் பதனிகளுக்கு 46 மாதங்கள், குளிர்சாதனப் பெட்டிகளுக்கு 45 மாதங்கள், திறன் பேசிகளுக்கு 41 மாதங்கள், சலவை இயந்திரங்களுக்கு 32 மாதங்கள், கணினிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு 31 மாதங்கள் ஆகிய காலங்களில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு இணையான அளவிலான உயர்வு 2026-ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.


7. மேற்கூறப்பட்ட 6 நுகர்வோர் மின்னணுப் பொருட்களின் 2026-ஆம் ஆண்டுக்கான விலைக் குறியீட்டு உயர்வு, புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தொடரின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.


8. 2026-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்திற்கான விலைக் குறியீட்டு மாற்றங்கள், 2012-ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட பழைய புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு தொடரைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டுள்ளன. பழைய மற்றும் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு கூடைகள் இரண்டிலும் இடம்பெற்றுள்ள நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் மட்டுமே இந்த ஒப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.


நினைவகச் சில்லு பணவீக்கம் (Memory Chip Inflation), சிப்ஃபிளேஷன் (Chipflation)


சிப்ஃபிளேஷன் (Chipflation) என்றால் என்ன?


9. ஜூன் மாதத்தில், அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வாளர்கள் ‘சிப்ஃபிளேஷன்’ (Chipflation) என்ற சொல்லை உருவாக்கினர். “AI-க்கான நினைவகச் சில்லுகளின் தேவை அதிகரிப்பதால், தரவு மையங்கள் முதல் திறன்பேசிகள் வரை அனைத்து பொருட்களின் செலவும் அதிகரிக்கிறது. இதன் விளைவுகள் தொழில்நுட்பத் துறையை தாண்டி செல்லக்கூடும்” என்பதை விளக்குவதற்காக இந்தச் சொல் உருவாக்கப்பட்டது.


10. எளிமையாகச் சொல்வதானால், நினைவகச் சில்லுகளின் விலை காலப்போக்கில் குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரிப்பதும், அவற்றைக் கண்டுபிடிப்பதும் வாங்குவதும் கடினமாகி வருவதுமே சிப்ஃபிளேஷன் (Chipflation) ஆகும்.


11. உலகப் பொருளாதார மன்றத்திற்காக டேவிட் எலியட் எழுதிய “Chipflation: What to know about ‘AI’s hidden price tag’” என்ற கட்டுரையின்படி, பெருமளவிலான கணினிப் பயன்பாட்டில் இந்த சிலிக்கான் சில்லுகளுக்கு தற்போது மாற்று எதுவும் இல்லை. இதனால், எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை முக்கியமாவையாக இருப்பதுடன், நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்கு ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.



12. எலியட்டின் கூற்றுப்படி, அமெரிக்காவின் ஐந்து மிகப்பெரிய AI நிறுவனங்கள் இந்த ஆண்டு $650 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செலவில் பெரும்பகுதி தரவு மையங்களுக்காக இருக்கும். இது 2025-ஆம் ஆண்டில் அவை செலவிட்ட தொகையைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். இந்த அளவிலான தேவை, ‘சிப்ஃபிளேஷன்’ எனப்படும் நிலை உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


சிப்ஃபிளேஷன் ஏன் ஏற்படுகிறது?


13. உலகளாவிய AI வளர்ச்சியின் காரணமாக, TSMC, Samsung மற்றும் SK Hynix போன்ற முக்கிய சிப் உற்பத்தியாளர்கள், உலகம் முழுவதும் வேகமாக உருவாகி வரும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும், அதிகத் தேவை கொண்ட மேம்பட்ட சில்லுகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


14. இதன் விளைவாக, குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், காற்றுப் பதனிகள், திறன்பேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் மற்றும் காதொலி சாதனங்கள் போன்ற அன்றாட மின்னணுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இயக்கநிலைத் தற்செயல் அணுகல் நினைவகம் (Dynamic Random Access Memory (DRAM)) மற்றும் பிற சில்லுகளின் உற்பத்தி பின்தள்ளப்படுகிறது.


15. நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கு தேவைப்படும் சில்லுகளின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையின் விளைவாக அவற்றின் விலைகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளன. JPMorgan Global Research மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 2026-ஆம் ஆண்டின் இறுதி வரை DRAM சில்லுகளின் விலை 400%-க்கும் அதிகமாக உயர்ந்திருக்கும்.


16. இது 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலும், 21-ஆம் நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளிலும் காணப்பட்ட, மூர் விதியால் (Moore’s Law) ஏற்பட்ட செலவுக் குறைவுக்கு முற்றிலும் மாறான நிலையாகும். அந்தக் காலகட்டத்தில் DRAM சில்லுகளின் விலை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் 90% குறைந்து வந்தது.


17. டேவிட் எலியட்டின் கூற்றுப்படி, சிப்ஃபிளேஷனுக்குப் பின்னால் உள்ள சில முக்கிய காரணிகள் பின்வருமாறு:


(i) செயற்கை நுண்ணறிவு தரவு மைய முதலீடு: செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு மையங்களுக்கு மிகப்பெரிய அளவில் சில்லுகள் தேவைப்படுகின்றன. இதனால், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சிப் தொழில்துறை எளிதில் வழங்கக்கூடிய அளவைவிட அதிகமான சில்லுகளை வாங்குகின்றன.


(ii) அதிக லாப விகிதம் கொண்ட சில்லுகளுக்கு முன்னுரிமை: செயற்கை நுண்ணறிவு சில்லுகள் கணிசமாக அதிக லாப விகிதத்தை வழங்கக்கூடியவை. இதனால், சிப் உற்பத்தியாளர்கள் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சில்லுகள் உள்ளிட்ட தினசரிப் பொருட்களுக்கான சில்லுகளைவிட செயற்கை நுண்ணறிவு சில்லுகளின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.


(iii) நீண்ட உற்பத்தி காலஅவகாசம்: புதிய குறைமின்கடத்தி உற்பத்தி ஆலைகளை உருவாக்கி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இதனால், விநியோகத்தில் ஏற்படும் பற்றாக்குறையை விரைவாகச் சரிசெய்ய முடியாத நிலை உருவாகிறது.


(iv) கட்டுப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகள் (Constrained supply chains): புவிசார் அரசியல் பதற்றங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் துண்டிக்கப்பட்ட விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து கட்டுப்படுத்துவதுடன், உற்பத்திச் செலவுகளையும் அதிகரிக்கின்றன.


நினைவகச் சில்லுகள் (memory chips) மற்றும் குறைமின்கடத்திகள் (semiconductors) என்றால் என்ன?


1. ஒரு சிப் (Chip) என்பது ஒருங்கிணைந்த மின்சுற்று (Integrated Circuit) அல்லது மைக்ரோசிப் (Microchip) என்பது சிலிக்கான் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான மின்னணுத் தயாரிப்பு ஆகும்.


2. இன்றைய பெரும்பாலான குறைமின்கடத்திகள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளாக உள்ளன. இவை குறைமின்கடத்தி ‘சில்லுகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. அடிப்படையில், சிலிக்கான் செதில் (wafer) மீது அடுக்குகளாக அமைக்கப்பட்ட மின்சாரத்தை கட்டுப்படுத்தும் சிறிய மின்னணுக் கருவிகள் (transistors), டையோடுகள், மின்தேக்கிகள் (capacitors), மின்தடைகள் (resistors) மற்றும் அவற்றை இணைக்கும் எண்ணற்ற நுண்ணிய மின்சுற்றுகளின் தொகுப்பாகும், இவை ஒரு சிலிக்கான் தகட்டின் மீது அடுக்கப்பட்டிருக்கும்.


3. குறைமின்கடத்திகள், மின்கடத்திகள் மற்றும் மின்காப்பான்களுக்கும் இடையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. தாமிரம் போன்ற கடத்திகள் மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக்கும்போதும், கண்ணாடி போன்ற மின்காப்பான்கள் அதைத் தடுக்கும்போதும், குறைமின்கடத்திகள் கட்டுப்படுத்தப்பட்ட கடத்தும் திறனைக் காட்டுகின்றன.


4. இயற்கையான நிலையில் குறைமின்கடத்திகள் மின்சாரத்தின் பலவீனமான கடத்திகளாக உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில பொருட்கள் சேர்க்கப்பட்டு, மின்புலம் பயன்படுத்தப்படும்போது மின்சாரம் பாயத் தொடங்கும். உதாரணமாக, சிலிக்கான் மற்றும் ஜெர்மேனியம் போன்ற குறைமின்கடத்திப் பொருட்களுடன் பாஸ்பரஸைச் சேர்ப்பது, ஒரு எதிர்மறை மின்னோட்டத்தின் பாய்வை அனுமதிக்கிறது.


5. மின்னணுச் சாதனங்களின் முக்கியமானவைகளாக குறைமின்கடத்திகள் உள்ளன. தகவல் தொடர்பு, கணினித் தொழில்நுட்பம், சுகாதாரம், ராணுவ அமைப்புகள், போக்குவரத்து, தூய்மையான ஆற்றல் உள்ளிட்ட எண்ணற்ற துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு இவை அடிப்படையாக உள்ளன.


6. குறைமின்கடத்திகள் வடிவமைப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் மிகவும் சிக்கலான பொருட்களாகும். மேலும், மின்னணு சாதனங்கள் தரவுகளைச் செயலாக்கவும், சேமிக்கவும், அனுப்பவும் தேவையான முக்கிய செயல்பாடுகளை அவை வழங்குகின்றன.


7. மத்திய அரசின் புதிய செமிகான் 2.0 திட்டம், உள்நாட்டில் சிப் வடிவமைப்பு நிறுவனங்களை உருவாக்குதல், ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த குறைமின்கடத்தித் தொழில்நுட்பங்கள் மற்றும் வணிகரீதியாகச் சாத்தியமான சில்லுகளின் மேம்பாட்டுக்கு ஆதரவளித்தல் மற்றும் அந்தப் பொருட்களைச் சந்தையில் அறிமுகப்படுத்துதல் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரு முன்னெடுப்பை விவரிக்கிறது.


Original Link: ‘Chipflation’: Why are consumer electronics facing a price rise?

Share:

'டிஜிட்டல் கைது' மோசடிகள் : மத்திய புலனாய்வு முகமையின் (CBI) தேசிய அளவிலான நடவடிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு - தேவேஷ் கே. பாண்டே

மத்திய புலனாய்வு முகமை (Central Bureau of Investigation(CBI)) 20 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளது.


தற்போதைய நிகழ்வு : 'ஆபரேஷன் சக்ரா-VI' (Operation Chakra-VI) திட்டத்தின்கீழ், "டிஜிட்டல் கைது" (digital arrest) மோசடிக் கும்பல்களுக்கு எதிரான தனது நடவடிக்கையை மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) விரிவுபடுத்தியுள்ளது. காணொளி அழைப்புகள் (video calls) மூலம் தாங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பொய்யாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களைக் கோடிக்கணக்கான ரூபாயை மாற்றச் செய்த மூன்று முக்கிய வழக்குகளை மையமாகக் கொண்டு இந்தச் சமீபத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிப் பதிவுகள் (bank records) மற்றும் டிஜிட்டல் கணக்கு அணுகல் தடயங்கள் (digital account-access trails) குறித்த விரிவான ஆய்வின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடவடிக்கைகள் அமைந்திருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. குற்றத்தின் மூலம் கிடைத்த பணம் எவ்வாறு நகர்த்தப்பட்டது என்பதையும், இறுதியில் யார் அதிலிருந்து பயனடைந்தனர் என்பதையும் கண்டறிவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.


என்ன நடந்தது?


நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் சிபிஐ சோதனைகளை நடத்தியது. கைது செய்யப்பட்டவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும் ஒருவர்; மோசடி செய்யப்பட்ட நிதியில் ரூ.1.95 கோடியை அவர் தனது பெயரில் தொடங்கிய கணக்கு ஒன்றில் பெற்று, அதே நாளில் அப்பணத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ராஜா கர்மாகர், மோசடிப் பணத்தில் ரூ.1.5 கோடியைத் தனது நிறுவனத்தின் கணக்கு வழியாக மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதேவேளையில், ஜோதி ராணி தனது கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை ரொக்கமாக எடுத்தும், மீதமுள்ள தொகையை வேறு இடங்களுக்கு மாற்றியும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


மத்திய புலனாய்வு முகமையின் (Central Bureau of Investigation(CBI)) கண்காணிப்பில் உள்ள வழக்குகள்


இந்த அதிரடி நடவடிக்கையின் மையமாக உள்ள மூன்று வழக்குகளும் இந்த மோசடியின் தீவிரத்தை உணர்த்துகின்றன. பிட்ஸ் பிலானி (BITS Pilani) நிறுவனத்தின் பேராசிரியை ஒருவர் மூன்று மாத காலம் போலியான "டிஜிட்டல் கைது" நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, ரூ.7.67 கோடி வரை ஏமாற்றப்பட்டார். அக்டோபர் 2023-ல், இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைப் (TRAI) பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஒரு நபர் அவரைத் தொடர்புகொண்டு, அவரது அலைபேசி எண் ஒரு சைபர் குற்றப் புகாரில் தொடர்புடையதாக எச்சரித்தார். பின்னர், மும்பை காவல்துறை, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்ட நபர்கள் ஸ்கைப் (Skype) வழியாகத் தொடர்புகொண்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்பான பணமோசடி வழக்கோடு அவரைத் தவறாகத் தொடர்புபடுத்தினர். ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என்று பாதிக்கப்பட்டவர் மிரட்டப்பட்டார்.


அவருக்கு எதிராகக் காவல் துறை பிடியாணை (police warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மூன்று மாதங்களுக்கும் மேலாக, அவர் தனது அன்றாட நடமாட்டங்கள் குறித்துத் தகவல் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மோசடி செய்பவர்கள் கூறியதை நம்பி, தனது நிதியை "டிஜிட்டல் சரிபார்ப்பு" செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்களை நம்பி 42 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.7.67 கோடியை எடுத்து, அவர்கள் அறிவுறுத்திய பல்வேறு கணக்குகளில் அப்பணத்தைச் செலுத்தினார். பணத்தைச் செலுத்துவதற்காக அவர் வங்கிகளிடமிருந்து ₹80 லட்சம் கடனும் பெற்றிருந்தார்.


இரண்டாவது சம்பவத்தில், இதே போன்றதொரு மோசடி முறையைப் பயன்படுத்தி, குஜராத்தின் காந்திநகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் குறிவைக்கப்பட்டார். தொலைத்தொடர்புத் துறை அதிகாரி, காவலர், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் நோட்டரி அதிகாரி போல வேடமணிந்த மோசடிக்காரர்கள், அவரை மூன்று மாதங்களுக்கும் மேலாக (மார்ச் 15 முதல் ஜூன் 25 வரை) 'டிஜிட்டல் சிறை'யில் (digital arrest) வைத்திருந்தனர். அமலாக்கத் துறையுடன் (ED) தொடர்புடையதாகக் கூறப்படும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர் மீது விசாரணை நடைபெறுவதாக அவரை நம்ப வைத்தனர். பயணத்தின் போது உட்பட எல்லா நேரங்களிலும் காணொலி அழைப்பில் இருக்கவும், தனது நேரடி இருப்பிடத்தைப் (live location) பகிரவும் அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். விசாரணை முடியும் வரை சுமார் ₹20 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பாதுகாப்பாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாற்ற வேண்டும் (parked) என்று மோசடிக்காரர்கள் அவரிடம் கூறினர்.


பாதிக்கப்பட்ட அந்த மருத்துவர் தனது நிலையான வைப்புத் தொகைகளை (fixed deposits) முறித்து கொண்டும், கடன் பெற்றும், தங்கத்தை விற்றும், பங்குகளை விற்றும் சுமார் ₹19.24 கோடியை ஏறக்குறைய 30 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார். பணத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளரான லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் கம்போடியாவைச் சேர்ந்த சைபர் குற்றக் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.


பிப்ரவரி-மார்ச் 2026 காலகட்டத்தில், பெலகாவியைச் சேர்ந்த 81 வயதுடைய தொழிலதிபர் அஜித் கோபாலகிருஷ்ணா சரஃப், ஆறு வாரங்கள் நீடித்த "டிஜிட்டல் கைது" (digital arrest) மோசடியில் சிக்கி ₹15.45 கோடியை இழந்தார். இச்சம்பவம் பிப்ரவரி 5 அன்று தொடங்கியது. அப்போது சிபிஐ (CBI) அதிகாரி போல அழைத்த ஒருவர், கோயல் என்பவருடன் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மற்றொருவர், இவரது நிலையான வைப்புத்தொகைகள் (fixed deposits) மற்றும் பங்குச் சந்தை முதலீடுகளை பணமாக்குமாறு கட்டாயப்படுத்தினார். பாதிக்கப்பட்ட இவர் பல நாட்களாகத் தனது அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து, மோசடி செய்பவர்களின் அறிவுறுத்தலின்படி பணத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். உகாதி பண்டிகையின்போது இவரது மகன் நேரில் வந்தபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.


மத்திய புலனாய்வு முகமையின் (CBI) இந்த அதிரடி நடவடிக்கை ஏன் முக்கியமானது?


முதியவர்களைப் பெருமளவில் பாதிக்கும் "டிஜிட்டல் கைது" மோசடிகள், இந்தியாவில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இணையவழி மோசடி வகைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளன. இத்தகைய மோசடிகளால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் ₹3,000 கோடி என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த அறிக்கை ஒன்று முன்பு குறிப்பிட்டிருந்தது. இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த உச்சநீதிமன்றம், டிசம்பர் 2025-ல், "இனி பொறுத்துக்கொள்ள முடியாது" என்று கூறி, மோசடிகள் குறித்து மட்டுமல்லாமல், அதற்குத் துணைபுரியும் வங்கி அதிகாரிகள் மற்றும் 'மியூல் கணக்கு' (mule-account) நெட்வொர்க்குகள் மீதும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு முழு அதிகாரம் அளித்தது.


நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன?


அப்போதிருந்து, "டிஜிட்டல் கைது" மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தாமாக முன்வந்து மேற்கொள்ளும் (suo motu) நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உச்சநீதிமன்றம் தொடர்ச்சியான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதில், மிகச் சமீபத்திய உத்தரவு ஆகஸ்ட் 2026-ல் பிறப்பிக்கப்பட்டது. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடமிருந்து (Indian Cyber ​​Crime Coordination Centre) பெறப்பட்ட நிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த அறிக்கைகள் முன்னேற்றங்களையும் அதே சமயம் தொடர்ந்து நிலவும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டின. தற்போது, ​​குறைகளைத் தீர்க்கும் நடைமுறையானது 69 வங்கிகளைச் சேர்ந்த 1.23 லட்சத்திற்கும் அதிகமான கிளைகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல், பணத்தை மீட்டெடுக்கும் நடைமுறையானது 57 வங்கிகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 36,290 வழக்குகளில் சுமார் ₹18.05 கோடி மீட்கப்பட்டுள்ளது.


அமைப்பில் உள்ள மீதமுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய, 'மியூல்' (mule) நடவடிக்கைகளுடன் (அதாவது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் கணக்குகள்) தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான நிலையான நடைமுறையை வெளியிடுமாறும், பரிவர்த்தனைகளைச் சற்று தாமதப்படுத்தும் வழிமுறைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துமாறும் இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


தனது பங்கிற்கு, சிபிஐ பல "டிஜிட்டல் கைது" மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களில் பல கட்ட சோதனைகளை நடத்தி, பலரைக் கைது செய்துள்ளது. ஜூன் 2026-ல், 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்பாக 16 மாநிலங்களில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த முகமை சோதனை நடத்தியது.


அடுத்தகட்ட நடவடிக்கைகள்


பதிவுசெய்யப்பட்ட மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், அது கண்காணிப்பைக் குறைப்பதற்கான நியாயமான காரணமாக அமையாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. 'டிஜிட்டல் கைது' (digital arrest) என்ற பெயரிலான மோசடிகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் குறைகளுக்குத் தீர்வு காணவும், 'பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர்' (Zero FIR) மூலம் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பண இழப்பை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திரும்பப் பெற்றுத் தரவும் தேவையான வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு ஆகஸ்ட் 4, 2026 அன்று உச்சநீதிமன்றம் விரிவான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.


Original Link: Digital arrest scams: CBI’s nationwide crackdown and the Supreme Court’s continuing oversight 

Share:

இந்தியாவிற்கு இரண்டாம் தலைமுறை அதிகாரப் பரவலாக்க சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. -அரிஜித் தாஷ், அம்ரேந்திர பிரதாப் சிங்

உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தெளிவான பொறுப்புகளும் நிதி ஆதாரங்களும் இருக்க வேண்டும். மாநில நிதியாணையங்கள் மேலும் திறம்படச் செயல்பட வேண்டும் மற்றும் உள்ளூர் அளவிலான திட்டமிடல்கள் பெயரளவில் இல்லாமல், உண்மையிலேயே நடைமுறைக்கு வர வேண்டும்.


16-வது நிதிஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்ந்து தாமதமாவது ஆகியவற்றின் பின்னணியில், உள்ளாட்சி நிர்வாகம் பற்றிய விவாதம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1970-களுக்குப் பிறகு, உலகளவில் அதிகாரப் பகிர்வுக்கான போக்கு அதிகரித்து வந்தது. அதிகாரங்களைப் பரவலாக்கும் இந்த உலகளாவிய போக்கு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களின் பங்கையும் பொறுப்பையும் உயர்த்தியது. பல்வேறு நாடுகள் பல்வேறு விதங்களில் அதிகாரப் பரவலாக்கத்தை அமல்படுத்தியபோது, அதற்கான நோக்கம் வெறும் மொழி, கலாச்சாரம் சார்ந்த அடையாளங்களை மையப்படுத்திய நிலையைத்தாண்டி, 'அதிக பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை அடைதல்' என்ற பொருளாதார நோக்கத்தை நோக்கி மாறியது.


இந்தியாவின் உள்ளாட்சி நிர்வாக முயற்சி, சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் ஒன்றாகும். அதேநேரத்தில், முழுமையடையாத சீர்திருத்தங்களில் ஒன்றாகவும் உள்ளது. 73 மற்றும் 74-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள், ஊராட்சிகளையும் நகராட்சிகளையும் உண்மையான சுயாட்சி அமைப்புகளாக மாற்றவும், ஜனநாயகத்தை மக்களுக்கும் வளர்ச்சியை மக்களின் தேவைகளுக்கும் அருகில் கொண்டு சேர்க்கவும் உறுதியளித்தன. ஆனால், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அதிகாரங்களை இந்தியா ஏன் இன்னும் முழுமையாக அவற்றின் மீது நம்பிக்கை வைத்து வழங்கவில்லை என்பதே உண்மையான கேள்வியாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன, தேர்தல்கள் நடத்தப்படுகின்றன, அரசியலமைப்பில் அதற்குரிய சட்டங்களும் உள்ளன. ஆனால், ஒரு நிர்வாகத்தின் உண்மையான அதிகாரத்தைக் குறிக்கும் நிதி, பணிகள், பணியாளர்கள் (3Fs) ஆகிய மூன்று முக்கியக் காரணிகளும் பெரும்பாலும் மாநில அல்லது ஒன்றிய அரசு அளவிலேயே முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. இதன் விளைவாக, இந்த அமைப்பு சட்டப் புத்தகத்தில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டது போல் தோன்றினாலும், நடைமுறையில் மையப்படுத்தப்பட்ட அதிகாரப் போக்கிலேயே செயல்பட்டு வருகிறது.


அதிகாரப் பரவலாக்கம் (Decentralisation) என்பது இந்தியாவில் இன்னும் முழுமையடையாத மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் பின்னணியில் வெறும் கொள்கைரீதியான லட்சியம் மட்டும் இல்லை; மாறாக, மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மிக நெருக்கமாக இருப்பவை உள்ளாட்சி அமைப்புகள்தான். ஒரு திட்டத்தில் உள்ள தடைகளைக் கண்டறியவும், நிதிஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும், அந்தந்த பகுதியின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சூழலுக்கு ஏற்பக் கொள்கைகளை மாற்றியமைக்கவும் உள்ளாட்சி அமைப்புகளால் மட்டுமே முடியும். ஊராட்சி அல்லது நகராட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அமைச்சகத்தைப் போலப் பெரிய அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், ஒரு பகுதிக்குக் குடிநீர் வருமா, சாலை சரிசெய்யப்படுமா, குப்பைகள் அகற்றப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான அமைப்பு இதுவே ஆகும். அந்த வகையில், உள்ளாட்சி அரசாங்கம் என்பது ஜனநாயகத்தின் வெறும் ஒரு அலங்கார அடுக்கு அல்ல; அதுதான் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை மக்களுக்கு நேரடியாகக் காட்டும் இடமாகும். ஒவ்வொரு பகுதியின் மாறுபட்ட தேவைகளுக்கு ஏற்பச் சேவைகளை வழங்க அதிகாரப் பரவலாக்கப்பட்ட அமைப்புகளாலே சிறப்பாக இயங்கும். மேலும், மக்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப பொதுச் சேவைகளைச் சரியாகச் சென்று சேர்ப்பதன் மூலம், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மற்றும் தனிநபர்களின் நலனை அதிகபட்சமாக உறுதிசெய்ய முடிகிறது. அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசாங்கங்கள், மாறுபட்ட உள்ளூர் தேவைகளைப் பிரதிபலிக்கும் சேவைகளைச் சிறப்பாக வழங்கக்கூடியவை. மேலும், மக்களின் விருப்பங்களுக்கு ஏற்பப் பொதுப் பொருட்களையும் சேவைகளையும் சரியாகப் பகிர்ந்தளிப்பதை இந்த முறை உறுதி செய்வதால், ஒட்டுமொத்தப் பொதுநலனும் தனிநபர் நலனும் அதிகபட்ச அளவை எட்டுகிறது.


அரசு-குடிமக்கள் இணைந்து செயல்படுதல் 


அதிகாரப் பரவலாக்கத்திற்கான ஜனநாயகக் காரணம் மிகவும் வலிமையானது. அதிகாரப் பகிர்வு என்பது குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. இதனால், அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்பதும் அவர்களின் பொறுப்புணர்வை உறுதி செய்வதும் எளிதாகிறது. ஒரு அமைச்சரையோ அல்லது உயர்அதிகாரியையோ சந்திப்பதைவிட, பொதுமக்கள் தங்களின் ஊராட்சி தலைவரை மிக எளிதில் நேரடியாகச் சந்தித்துக் கேள்வி கேட்க முடியும். இது உடனடியாக சிறந்த நிர்வாகத்திற்கு உத்தரவாதம் அளித்துவிடாது என்றாலும், பொறுப்புணர்வை மேலும் சாத்தியமானதாக மாற்றுகிறது. பலரும் அரசைத் தூரமானதாகவும், தங்களுக்குத் தொடர்பற்றதாகவும் கருதும் நம் நாட்டில், அரசிற்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதில் பரவலாக்கப்பட்ட ஆட்சிமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. 


இதன் வளர்ச்சி சார்ந்த காரணமும் அதே அளவிற்கு முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகள் வெறும் சேவைகளை மட்டும் வழங்குவதில்லை. அவை உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் வடிவமைக்கின்றன. சாலைகள், வடிகால் வசதிகள், சந்தைகள், சுகாதாரப் பணிகள் மற்றும் பிற அடிப்படை உள்கட்டமைப்புகள் ஆகியவை சமூகத்திற்கான அடிப்படை முதலீடுகளாகும். நீண்டகாலத்தில், ஒரு உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சியடைவதா அல்லது முடங்கிப்போவதா என்பதை இவையே தீர்மானிக்கின்றன. இதனால்தான், அதிகாரப் பகிர்வு என்பது வெறும் ஜனநாயகக் கோட்பாடு மட்டுமல்ல, நிலையான வளர்ச்சிக்கான ஒரு நடைமுறை உத்தியாகவும் இருக்கிறது. உள்ளூர் அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரம் இருக்கும்போது, அங்குள்ள நிலப்பரப்பு, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சூழலுக்கு ஏற்ப அரசுச் செலவினங்களை அவர்களால் சரியாகப் பயன்படுத்த முடியும்.


இதற்கு மிகச்சிறந்த சான்று, அதிகாரப் பகிர்வை தீவிரமாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது. இதற்கு கேரள மாநிலம் ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. அம்மாநில ஊராட்சி அமைப்புகள் குறித்த ஆய்வுகள், நிதிச் சார்ந்த வெற்றி என்பது நிதி ஒதுக்கீட்டில் மட்டும் இல்லை என்றும், நிர்வாகத் தயார்நிலை, திட்டமிடும் திறன் மற்றும் நிறுவன ஆதரவு ஆகியவற்றிலும்தான் உள்ளது என்றும் காட்டுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் பார்வதி சைலேஷ் மற்றும் பத்மினி ராம் (2022) சுட்டிக்காட்டியது போல, உள்ளாட்சி அமைப்புகளை மேலதிகாரத்தில் உள்ள அரசின் வெறும் சேவை முகவர்களாகக் கருதாமல், உண்மையான ஆட்சி அமைப்புகளாகக் கருதும்போதுதான் அதிகாரப் பகிர்வு சிறப்பாகச் செயல்படும் என்பதை கேரளாவின் அனுபவம் உணர்த்துகிறது. இதிலிருந்து நாம் பெறும் பாடம், அரசு அதிகாரப் பகிர்வை கொள்கையளவில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் உறுதியோடு செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றிபெறும் என்பதே ஆகும்.


பயன் தரும் சேவைகள் 


சுகாதாரத் துறை இதற்கு மற்றொரு தெளிவான உதாரணத்தை வழங்குகிறது. ராவத் மற்றும் சேகர் ஆகியோரின் 2013-ஆம் ஆண்டு ஒடிசா மற்றும் குஜராத் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு, சுகாதார அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்தில் கணிசமான வேறுபாடுகளைக் கண்டறிந்தது. இதில் குஜராத் அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியது. ஏனெனில், உள்ளூர் அளவிலான உடனடி நடவடிக்கை, ஒருங்கிணைப்பு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகியவை பொதுச் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த ஒப்பீடு ஒரு பரந்த விஷயத்தை வலியுறுத்துகிறது: அதிகாரப் பரவலாக்கம் என்பது வெறும் அரசியலமைப்பு சார்ந்த கோட்பாடு அல்ல. சேவைகள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன, யாருக்கு அதிகாரம் உள்ளது மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு பொது நிறுவனங்கள் எவ்வளவு விரைவாகச் செயல்பட முடியும் என்பதை இதுதான் தீர்மானிக்கிறது.


இருப்பினும், இந்தியாவின் அதிகாரப் பரவலாக்க அமைப்பில் உள்ள பலவீனங்கள் இன்னும் குறையாமல் உள்ளன. இதில் மிகப்பெரிய சிக்கல் நாம் அறிந்த ஒன்றுதான்: பெரும்பாலும் பொறுப்புகள் வழங்கப்படுகின்றனவே தவிர, உண்மையான அதிகாரம் வழங்கப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட எதிர்பார்க்கப்படுகின்றன; ஆனால் அதற்குத் தேவையான நிதி, அதிகாரப் பணிகள் அல்லது பணியாளர்கள் எப்போதும் வழங்கப்படுவதில்லை. இது அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு பலவீனமாகும். காகித அளவில் மட்டுமே இந்த அமைப்பு உள்ளது. ஆனால் நடைமுறையில், பல உள்ளாட்சி அரசாங்கங்கள் குறைந்த நிதி, பற்றாக்குறையான ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட அரசாங்கங்களின் தலையீடுகளால் கட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. மேலும், நவீன நகர்ப்புறத் திட்டங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி அமைப்புகளைப் புறக்கணித்து அதிகாரிகளால் நடத்தப்படும் சிறப்பு அமைப்புகளைச் சார்ந்து செயல்படுகின்றன. இது 74-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கத்தை மேலும் சிதைக்கிறது.


நிதிச்சார்பு (Fiscal dependence) இந்தப் பிரச்சினையின் ஒரு முக்கியப் பகுதியாகும். பல மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் அரசின் நிதிஒதுக்கீட்டையே பெரிதும் நம்பியுள்ளன. அதுவும் முறையான திட்டமிடல் இன்றி, பல கட்டுப்பாடுகளுடனே வழங்கப்படுகிறது. இது நீண்டகால திட்டமிடுதலைக் கடினமாக்குவதோடு, உள்ளூர் அளவிலான பொறுப்புணர்வையும் பலவீனப்படுத்துகிறது. முறையற்ற அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட நிதியை நம்பியிருக்கும்போது, ஒரு பரவலாக்கப்பட்ட ஆட்சிமுறை சரியாகச் செயல்பட முடியாது. அதிகாரப் பரவலாக்கம் என்பதன் நோக்கம் பொறுப்புகளை மட்டும் கீழே மாற்றுவது அல்ல; உள்ளாட்சி அரசாங்கங்களே முடிவெடுக்கவும், திட்டமிடவும், சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படவும் அனுமதிப்பதுதான் என்கின்றனர்.


திறன் பற்றாக்குறை மற்றொரு முக்கியத் தடையாகும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், மக்களுக்குப் பொறுப்பானவர்களாகவும் இருக்கலாம். ஆனால், போதிய தொழில்நுட்ப உதவியோ அல்லது பயிற்சியோ இல்லாமல்தான் பெரும்பாலும் பணியாற்றுகிறார்கள். நிதிநிலைத் திட்டம், கொள்முதல், ஆவணப் பராமரிப்பு மற்றும் திட்டங்களைக் கண்காணித்தல் போன்ற பணிகளுக்குத் தேவையான திறன்கள் பல உள்ளாட்சி அமைப்புகளிடம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் செலுத்தும் ஆதிக்கம் போன்ற சமூகத் தடைகளினாலும் இப்பிரச்சனை மேலும் சிக்கலாகிறது. அதேபோல், நகர்ப்புற நிர்வாகம் குறித்த ஆய்வுகள், நகர்ப்புறங்களில் உண்மையான நிதியதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சித் தலைவர்களைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சி ஆணையர்களிடமே குவிந்துள்ளதைக் காட்டுகின்றன. இவற்றுக்குத் தீர்வு காணாவிட்டால், அதிகாரப் பகிர்வு என்பது செயல்பாட்டுரீதியானதாக இல்லாமல், வெறும் பெயரளவு நடைமுறையாக மட்டுமே இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.


எனவே, முன்னோக்கிச் செல்வதற்கான வழி தெளிவானது. இந்தியாவிற்கு வெறும் அடையாளமாக இல்லாமல், உண்மையிலேயே அதிகாரமளிக்கும் "இரண்டாம் தலைமுறை அதிகாரப் பகிர்வு சீர்திருத்தங்கள்" (Second-generation decentralisation reforms) தேவைப்படுகின்றன.


முதலாவதாக, நிதி, பணிகள், பணியாளர்கள் உண்மையான முறையில் உள்ளாட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தெளிவான பொறுப்புகள், நிதிகள் மற்றும் அவர்களின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான நிர்வாகப் பணியாளர்கள் வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, மாநில நிதி ஆணையங்கள் மேலும் திறம்படவும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் மாற வேண்டும். அப்போதுதான் நிதிஒதுக்கீடுகள் வெளிப்படையாகவும், தவறாமலும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறும் இருக்கும். மூன்றாவதாக, உள்ளூர் திட்டமிடல் என்பது பெயரளவில் இல்லாமல் உண்மையானதாக மாற வேண்டும். மாவட்ட மற்றும் உள்ளூர் திட்டங்கள், செலவினங்களை வெறுமனே பதிவு செய்யாமல், உண்மைச் செலவினங்களுக்கு வழிகாட்டுபவையாக இருக்க வேண்டும். நான்காவதாக, திறன் மேம்பாடு என்பது நிர்வாகத்தின் முதன்மையான உள்கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும். நிதிநிலைத் திட்டம், கொள்முதல், திட்டமிடல் மற்றும் சமூகத் தணிக்கை (social audit) ஆகியவற்றில் பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும். ஐந்தாவதாக, வெளிப்படையான அறிக்கைகள், பொதுத் தகவல் பலகைகள், சமூகத் தணிக்கைகள் மற்றும் நகர்ப்புற மற்றும் ஊரகப்புற அளவில் அதிகப்படியான மக்கள் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் பொறுப்புணர்வு வலுப்படுத்தப்பட வேண்டும்.


இந்தியா அதிகாரப் பரவலாக்க முறையைப் புதிதாகக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. அதை முழுமைப்படுத்தினால் மட்டும்போதும். இதற்கான அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இதன் ஜனநாயகத் தேவையும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள வளர்ச்சி சார்ந்த காரணங்களும் வலிமையாக உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளை உண்மையான அதிகாரத்துடன் நம்புவதற்கான 'அரசியல் விருப்பம்' மட்டுமே இங்கு விடுபட்டுள்ளது.


அதனால்தான், அதிகாரப் பரவலாக்கம் என்பது 1990-களின் பழமையான யோசனையாகப் பார்க்கப்படாமல், இந்தியாவின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான தேவையாகக் கருதப்பட வேண்டும். நாடு மேலும் பொறுப்புள்ள நிர்வாகத்தையும், வலுவான பொதுச் சேவைகளையும், நிலையான உள்ளூர் வளர்ச்சியையும் விரும்பினால், உள்ளாட்சி அமைப்புகளைக் கடைசி நிலையாகக் கருதுவதை நிறுத்த வேண்டும். எனவே, 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்களின் முழுமையடையாத வாக்குறுதிகள் களத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அதிகாரத்தை வழங்குவதோடு மாநில மானியங்களை வெளிப்படையாக இணைப்பதன் மூலம், 16-வது நிதி ஆணையத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பு உள்ளது.


அரிஜித் தாஷ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளராக உள்ளார். அம்ரேந்திர பிரதாப் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை படித்து வருகிறார்.


Original Link: India needs a second generation of decentralisation reforms 

Share:

நீண்டகால புறக்கணிப்பிற்கு வெளியே : மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பான பருவம் தொடர்பான கொள்கை

மாதவிடாய் நிறுத்த காலத்திற்கு முந்தைய கொள்கையானது, நடுத்தர வயதில் உள்ள பெண்களுக்கு  மருத்துவ சேவைகளை எளிதாகப் பெறுவதை எளிதாக்கும்.


பெண்களுக்கான சுகாதார சேவைகள் குழந்தைப்பேறு வயதிலுள்ள (reproductive age) பெண்களை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, மாதவிடாய் முடிவுறும் பருவம் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாற்றமாகும். ஆனால், அதன் அறிகுறிகள் கடுமையாகவும் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலும் இருந்தாலும், பெண்களுக்கு தேவையான மருத்துவச் சேவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. அவர்கள் அந்தப் பிரச்சினைகளைப் பொறுத்துக்கொண்டு வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இங்கு நிலவும் மிகப்பெரிய மருத்துவப் பராமரிப்புக் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசும் மாதவிடாய் முடிவுறும் பருவம் தொடர்பான கொள்கையை அறிவித்து முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருப்பது பாராட்டத்தக்கதாக நடவடிக்கையாகும். இரண்டு மாநிலங்களும் ஆகஸ்ட் மாதத்தில் குறுகியகால இடைவெளியில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டன. இதன் முக்கியப் பயன், இதுவரை பெரிதும் புறக்கணிக்கப்பட்டு வந்த நடுத்தர வயதுப் பெண்களின் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கிடைப்பதுடன், வாழ்க்கை சுழற்சியில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநலத் தேவைகள் வழக்கமான அரசு சுகாதாரப் பராமரிப்பின் ஒரு பகுதியாக மாறும். இதனால் மருத்துவச் சேவையைப் பெறுவதும் எளிதாகும். ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், மாதவிடாய் முடிவுறும் பருவப் (Menopause) பராமரிப்புக் கொள்கையை அறிவித்தார். மாதவிடாய் முடிவுறும் பருவப் பெண்களின் உடல் மற்றும் மனநலத் தேவைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHCs) மற்றும் உயர் மருத்துவ மையங்கள் மூலம் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார். இதேபோல், ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் யு.டி. காதர், ‘பெண்களின் சுகாதாரப் பருவ மாற்றக் கொள்கை’ (Ruthu Thare) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது மாதவிடாய் காலத்திற்கு முந்தைய மற்றும் மாதவிடாய் முடிவுறும் பருவ காலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும், நாட்டின் முதல் தனிப்பட்ட பெண்கள் சுகாதாரக் கொள்கையாகும். மாதவிடாய் முடிவுறும் பருவம் என்பது மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்கத் திறன் நிரந்தரமாக முடிவடையும் நிலையாகும். தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் ஏற்படாத நிலையில் இது உறுதி செய்யப்படுகிறது. கருப்பைகள் இயற்கையாகவே செயல்பாட்டைக் குறைத்து, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களை குறைந்த அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்கு முன்பாக ஏற்படும் மாற்றக் பருவமே மாதவிடாய் முடிவுறும் (Menopause) பருவமாகும். இது பல ஆண்டுகள் நீடிக்கக்கூடியதுடன், சீரற்ற மாதவிடாய் மற்றும் உடலில் பல்வேறு மாற்றங்களையும் ஏற்படுத்தும். திடீர் உடல் வெப்பம், சரியான தூக்கம்  இல்லாத நிலை, தீவிர மனநிலை மாற்றங்கள், மூட்டு வலி, பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.  பல பெண்களுக்கு இது போன்ற அறிகுறிகள் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.


இரண்டு  மாநிலங்களும் மாநில அளவில் பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குதல், பெண்களுக்கான மருத்துவமனைகளை நடத்துதல், மாவட்ட அளவில் பெண்களுக்கான முழுமையான சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், சமூக அளவில் விழிப்புணர்வு மற்றும் மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றைத் திட்டமிட்டுள்ளன. இதனுடன், தேவையான பெண்களை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேல்சிகிச்சைக்காகப் பரிந்துரைத்து அனுப்பும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. சந்தேகமின்றி, இது ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும். மேலும், மாதவிடாய் முடிவுறும் (Menopause) பருவத்தில் பெண்கள் தெரிவிக்கும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் வழங்க இந்த கொள்கை உதவும். இருப்பினும், ஒரு திட்டத்தின் உண்மையான பயன் அது நடைமுறையில் செயல்படுத்தப்படும்போதுதான் தெரியவரும். இந்தக் கொள்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கின்றன என்பது அவற்றின் செயல்படுத்தலின்போதுதான் மதிப்பிடப்படும். தற்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விவகாரம், மாதவிடாய் முடிவுறும் பருவத்தில் ஏற்படும் அறிகுறிகள் மருத்துவத் துறையினரால் தீவிரத்துடன் அணுகப்படுவதில்லை. எனவே, மருத்துவ நிபுணர்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரிடையே இது குறித்த போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானதாகும்



Share:

வளைகுடா நாடுகளின் அழைப்புக்கு இந்திய அரசு செவிசாய்க்க வேண்டும். -சசி தரூர்

மாறிவரும் மேற்காசியச் சூழலுக்கு, நேரடி ராணுவப் பாதுகாப்பு கூட்டாண்மைகளை முன்னெடுப்பதில் இந்தியா இன்னும் உறுதியான, தீவிரமான பங்களிப்பை வழங்கிட வேண்டும்.


பல ஆண்டுகளாக, மேற்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு, தெளிவற்ற ஒரு கொள்கையின் அடிப்படையிலும், சில தூர விலகல் அணுகுமுறையிலுமே இயங்கி வந்தது. இந்திய அரசு, 'மத்திய கிழக்கு' நாடுகளை முக்கியமாகத் தன் பொருளாதாரத் தேவைகளுக்கான பகுதியாகவே பார்த்தது: அதாவது, கச்சா எண்ணெய்க்கான முக்கிய ஆதாரம், இந்தியத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் பாதுகாப்பான இடம் மற்றும் நாட்டிற்கு வரும் பணத்திற்கான முக்கிய வழித்தடம் என்று கருதியது. அங்கு பிராந்திய அளவில் பிரச்சினைகள் எழுந்தபோதெல்லாம், இந்திய வெளியுறவுக் கொள்கையானது எந்தவொரு நாட்டின் ராணுவப் பாதுகாப்புப் பொறுப்பிலும் தன்னை பிணைத்துக் கொள்ளாமல் விலகியிருந்தது. ரியாத், டெஹ்ரான், டெல் அவிவ் மற்றும் அபுதாபி போன்ற அதிகார மையங்களுக்கு இடையே ஒரு நடுநிலைப் போக்கையே பின்பற்றியது. சமீபகாலமாக, இந்த அணுகுமுறையை நாம் 'பல்முனை சீரமைப்பு' (Multi-alignment) என்று குறிப்பிட்டோம். 


இதுவரை பலனளித்தது


ஆனால், இந்தியா அனைவருக்கும் நட்பாக இருக்க விரும்பினாலும், யாருடைய கோபத்திற்கும் ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக யாருடனும் அளவுக்கு அதிகமான நெருக்கத்தைக் காட்டவில்லை. இதற்கான காரணம் தெளிவாக இருந்தது. மேற்காசியாவில் உருவாகிவரும் பொருளாதார மறுமலர்ச்சியால் அனைத்து நாடுகளிடமிருந்தும் இந்தியாவிற்குப் பெரிய நன்மைகள் கிடைப்பதாக இருந்தது. அந்தப் பிராந்தியம் ஒரு பெரிய பொருளாதார அணுகுமுறையோடு பார்க்கப்பட்டது. அதன் சாதகமான புவியியல் அமைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற வளங்கள், பெரும் மூலதனச் சேமிப்பு, மற்றும் இந்தியாவில் அதிகமாக இருக்கும் மனிதவளத்தையும் திறன்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டன. வீழ்ச்சியடையும் மேற்கத்திய நாடுகளுக்கும், எழுச்சியடையும் ஆசிய நாடுகளுக்கும் இடையே மேற்கு ஆசியாவே கடல் மற்றும் தரைவழியாக இணைக்கும் முதன்மையான இணைப்புப் பாலமாகக் கருதப்பட்டது.


மேற்கு ஆசிய நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவே முழுப்பொறுப்பேற்று, கடல்சார் வணிகப் பாதைகளைத் திறந்து வைத்துப் பிராந்திய அமைதியைப் பராமரித்த காலத்தில், இந்தியாவின் இந்தத் தற்காப்பு மற்றும் சுயநலன் சார்ந்த அணுகுமுறை கைக்கொடுத்தது. ஆனால், தற்போது மேற்கு ஆசியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா தனது உலகளாவியப் பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டு தேவைக்கேற்ப மட்டுமே தலையிடும் கொள்கைக்கு மாறியதால், அங்கே ஒரு பாதுகாப்பு இடைவெளி உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்குள்ள நாடுகள் தங்களுக்கு நிலையான பாதுகாப்புத் தேவைகளுக்காக பிற நாடுகளை நாடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இந்தியா வழக்கம் போல மௌனமாக இருந்து, பழமையான அணுகுமுறையையே பின்பற்றித் தன் முக்கியத்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளதா?


மேற்கு ஆசிய நாடுகள் இனி நடுநிலை வகிப்பதையோ அல்லது பல நாடுகளுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்துக்கொள்வதையோ ஒரு சிறந்த கொள்கையாகப் பார்க்கவில்லை. வெறுமனே ராஜதந்திரப் பேச்சுக்களையும், வழக்கமான பொருளாதார உறவுகளையும் தாண்டி, தங்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு அளிக்கக்கூடிய நாடுகளின் நட்புறவைத் தீவிரமாகத் தேடி வருகின்றன. சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து கையெழுத்தான 'மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்' (Mecca Joint Defence Agreement) இந்த மாற்றத்தை வெளிப்படையாக உணர்த்துகிறது. இது ஒரு தற்காப்பு ஒப்பந்தமாகச் சொல்லப்பட்டாலும், பிராந்தியப் பாதுகாப்பில் ஒரு பெரிய மாற்றத்தின் அடையாளமாகும். வளைகுடா நாடுகளின் வளம், துருக்கியின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் இராணுவப் பலம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இந்த ஒப்பந்தம், இந்தியாவின் மேற்குச் கடல் எல்லைக்கு மிக அருகில் ஒரு வலுவான புதிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.


மாற்றத்தின் தெளிவான அறிகுறி


இந்தியாவைப் பொறுத்தவரை, மெக்கா ஒப்பந்தம் என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தூதரக நடவடிக்கை அல்ல; மாறாக, மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு அமைப்பு முற்றிலும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது என்பதற்கான ஒரு தெளிவான கட்டமைப்பு சார்ந்த அறிகுறியாகும். இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு நேரடியாக எதிரான உத்திசார் விருப்பங்களைக் கொண்ட அமைப்புகளாலேயே பெரும்பாலும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்த இந்தியாவின் உத்திப்பூர்வமான மௌனம் புரிந்து கொள்ளக்கூடியதுதான் என்றாலும், "அடுத்து என்ன?" என்ற கேள்வி எழவே செய்கிறது. வெளிநாட்டு சக்திகளின் வளர்ந்து வரும் செல்வாக்கும், பகையான பிராந்தியக் கூட்டமைப்புகளும் இந்தியாவின் வர்த்தகப் பாதைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வளைகுடாவில் வாழும் கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்தியா தனது சொந்தக் கூட்டாண்மைகளை உருவாக்கப் போகிறதா, அல்லது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குத் தொடர்பற்ற ஒன்றாக மாறப்போகிறதா?


இந்தியா தொடர்ந்து பழமையான தூதரக நடைமுறைகளையும், வெறும் வணிகப் பரிவர்த்தனைகளையும் மட்டுமே நம்பியிருந்தால், தனது தேசியப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு பிராந்தியத்தில் ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது. இதிலுள்ள சவால்கள் மிகவும் கடினமானவை. ஈரானை உள்ளடக்கிய போர்கள், நவீன மற்றும் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார உள்கட்டமைப்புகள், நிழல் யுத்தம் (grey-zone) மற்றும் சமச்சீரற்ற போர்களின்போது (asymmetric warfare) எவ்வளவு பலவீனமானவை என்பதை நிரூபித்தன. அதிநவீன துறைமுக வசதிகள், எரிசக்தி வலைப்பின்னல்கள் மற்றும் போக்குவரத்துப் பாதைகள் ஆகியவை குறைந்த செலவிலான ட்ரோன்களால் பாதிக்கப்படக்கூடியவை என்பது நிரூபணமாகியுள்ளது. பெரும் மூலதனத்துடன் கூடிய உள்கட்டமைப்புகள் மட்டுமே உள்ளூர் பாதுகாப்பு இடைவெளிகளை முழுமையாக ஈடுசெய்துவிடமுடியாது. பிராந்தியத்தில் நிலவும் நிலையற்றத் தன்மையின் விளைவுகளால், தீவிரமாகப் பாதுகாக்கப்பட்ட பொருளாதார மண்டலங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவே செய்யும் என்பது தெளிவாகிறது. நவீன வளைகுடா மாதிரியானது வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பெரிதும் நம்பியிருப்பதால், அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மை உலகளாவிய பார்வையோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆபத்துகள் ஒரு குறிப்பிட்ட உளவியல் எல்லையைக் கடக்கும்போது, தடையின்றி உள்ளே வந்த திறமைகளும் மூலதனமும் அவ்வளவு வேகமாக வெளியேறிவிடும். மேலும், குறுகிய கடல்வழிச் பாதைகளோ அல்லது நிலவழி வர்த்தகப் பாதைகளோ நேரடியாகப் பாதிக்கப்படும்போது, உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன்மூலம், இந்த பிரம்மாண்டமான வர்த்தகப் பாதைகளின் பலம், அவற்றின் மிகவும் பலவீனமான புவியியல் இணைப்பைப் பொறுத்தே அமைகிறது என்பது தெளிவாகிறது.


இந்த நெருக்கடியான பின்னணியில், வெறும் வர்த்தக உறவுகளும் புலம்பெயர்ந்தோர் மூலமான ராஜதந்திரமும் மட்டுமே இந்தியாவின் செல்வாக்கைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வேகமாகச் சரிந்து வருகிறது. செங்கடலில் கடல்சார் அச்சுறுத்தல்கள், முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ட்ரோன் தாக்குதல்கள், ஈரான், ஏமன், சூடான், ஹார்முஸ் நீரிணை மற்றும் தற்போது பாப் எல்-மந்தேப் ஆகியவற்றில் நடக்கும் மோதல்களுடன் போராடி வரும் ஒரு பிராந்தியத்திற்கு, உறுதியான பாதுகாப்பு வளங்களை வழங்கக்கூடிய நட்பு நாடுகள் தேவைப்படுகிறார்கள். கடற்படை ரோந்துகள், உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் நம்பகமான பயங்கரவாத எதிர்ப்புத் திறன்கள் போன்ற வலுவான இராணுவப் பாதுகாப்புத் தேர்வுகளுக்காக மேற்கு ஆசிய நாடுகள் காத்துக்கிடக்கின்றன. இத்தகையப் பொறுப்பை ஏற்பதில் இந்தியா தயக்கம் காட்டினால், மெக்காவில் துருக்கி ஏற்கனவே நிரூபித்துக் காட்டியதுபோல, அந்த வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பிவிடும் வாய்ப்புள்ளது.


இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்


தனது தேசியப் பாதுகாப்பையும் எல்லையையும் பலப்படுத்த, இந்தியா உடனடியாகத் தனது பாதுகாப்புப் அணுகுமுறையை மாற்றியாக வேண்டும். பிராந்திய அமைதியால் பயன்பெறும் ஒரு நாடாக மட்டும் இல்லாமல், அந்த அமைதியைத் தானே முன்னின்று உறுதிசெய்யும் அமைப்பாக இந்தியா மாற வேண்டும். இதற்கு வெறும் உயர்மட்ட தூதரகச் சந்திப்புகள் மற்றும் பொருளாதார மாநாடுகளோடு நின்றுவிடாமல், மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் தனது ராணுவ மற்றும் கடற்படைப் பலத்தை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக ஹார்முஸ் நீரிணை, ஓமன் மற்றும் ஏடன் வளைகுடாக்கள், சோமாலியக் கடற்பகுதி, பாப்-எல்-மண்டேப் ஆகிய முக்கியமான கடல்வழிப் பாதைகளில் தனது கடற்படை மற்றும் பாதுகாப்புப் பங்களிப்பு நாடுகளை இந்தியா விரிவுபடுத்த வேண்டும். நட்பு நாடுகளான வளைகுடா நாடுகளுடன் இணைந்து கடல் ரோந்துச் செல்வது, தளவாடங்களைப் பகிர்ந்து கொள்வது, கண்காணிப்பு வலைப்பின்னல்களை அமைப்பது ஆகியவற்றின் மூலம், தனது அண்டை நாடுகளின் ஒரு முதன்மைப் பாதுகாப்பு சக்தியாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.


மேலும், தனது வளர்ந்து வரும் ராணுவத் தளவாட உற்பத்தித் துறையைப் பயன்படுத்தி, மேற்கு ஆசிய நாடுகளுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கி ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா மாற வேண்டும். வெறும் ஆயுதங்களைக் வாங்குவது அல்லது விற்பது பற்றி மட்டும் பேசாமல், கூட்டு ராணுவப் பயிற்சிகள், ஆழமான உளவுத் தகவல் பகிர்வு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுடன் வலுவான இருதரப்பு மற்றும் சிறு கூட்டமைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவது, தேவையற்ற கூட்டணிகளுக்குள் சிக்காமல், எதிரிநாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியாவுக்கு உதவும். பிற நாடுகளின் உள்நாட்டுப் போர்களில் இந்தியா தலையிடுவது இதன் நோக்கமல்ல; மாறாக, இந்தியாவின் நலன்களைப் பாதுகாத்து, பிராந்திய நட்பு நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதே முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.


மேற்கு ஆசியாவில் இந்தியாவின் செயலற்ற தலையீடு இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் பங்களிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றுசேர்ந்து உருவாகவே செய்யும் என்பதை 'மெக்கா ஒப்பந்தம்' தெளிவாகக் காட்டுகிறது. இந்தியா தனது பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், தனது எரிசக்தி தேவைகளை உறுதிப்படுத்தவும், உலகளாவிய வல்லரசாகத் தன்னை நிலைநிறுத்தவும் விரும்பினால், அது உடனடியாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும். மேற்கு ஆசியாவில் வழக்கமான ராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தாண்டி, பலம் வாய்ந்த பாதுகாப்பு கூட்டாண்மைகளை உருவாக்குவது என்பது இனி இந்தியாவின் விருப்பம் சார்ந்த விவாதம் அல்ல; அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கான முக்கியத் தேவையாகிறது. 


சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து தொடர்ந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் முப்பது ஆண்டுகள் பணியாற்றி, அதன் துணைப் பொதுச்செயலாளர் என்ற உயர்பொறுப்பு வரை உயர்ந்தவர். மேலும், இந்திய அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ள இவர், 'Pax Indica: India and the World of the 21st century' உட்பட 29 புத்தகங்களை எழுதியப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். தற்போது, இவர் நாடாளுமன்ற வெளியுறவுத் துறைக்கான நிலையான குழுவின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.


Original Link: The Gulf is calling and New Delhi must listen 


Share: