Showing posts with label economic. Show all posts
Showing posts with label economic. Show all posts

இந்திய ரூபாய் தாள்கள் தயாரிப்பதற்குப் பயன்படும் மூலப்பொருள் என்ன? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• ரிசர்வ் வங்கி ஆளுநர் மல்ஹோத்ரா, நெகிழி ரூபாய் தாள்களுக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருப்பதாகக் கூறினார். முதலாவதாக, அவை காகித தாள்களைவிட அதிக காலம் நீடித்து நிலைக்கக்கூடியவை ஆகும். குறிப்பாக, அடிக்கடி பயன்படுத்தப்படும் குறைந்த மதிப்புடைய தாள்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாடுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நெகிழி ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளன. மேலும், இவற்றின் ஆயுட்காலம் காகித தாள்களைவிட சுமார் 2 முதல் 4 மடங்கு அதிகம் ஆகும்.


Currency printing costs

• “பொருளாதாரத்தின் தேவைகள் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப நமது பணப்புழக்கத் திறனை விரிவாக்குவதே இதன் இரண்டாவது நோக்கமாகும்” என்று அவர் கூறினார்.


• புதிய ரூபாய் தாள்களைப் புழக்கத்திற்கு விடுவதற்கு முன், அவை எவ்வளவு காலம் நீடித்து நிலைக்கும் மற்றும் இந்திய சூழலுக்கு ஏற்றவையா என்பது குறித்து ரிசர்வ் வங்கி பரிசோதிக்கும்.


• இந்தியாவின் காலநிலை, மக்களின் பயன்பாட்டு முறைகள் மற்றும் தற்போதுள்ள பணத்தைக் கையாளும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்த ரூபாய் தாள்கள் எவ்வாறு தாக்குப் பிடிக்கின்றன என்பதை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்யும் என்று மல்ஹோத்ரா தெரிவித்தார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த புதிய தாள்கள் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் முதலில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் தாள்களுடன் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில், இந்த குறைந்த மதிப்புடைய தாள்கள் மக்களிடையே அதிகமாகக் கைமாறுவதால், விரைவில் சேதமடைய வாய்ப்புள்ளது.


• ரிசர்வ் வங்கியின் நெகிழித் தாள் ரூபாய் தாள் சோதனையில், மொத்தம் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கோடி 10 ரூபாய் தாள்களும், 100 கோடி 20 ரூபாய் தாள்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கடந்த மாதம், இதன் துணை Cash demandநிறுவனமான 'Bharatiya Reserve Bank Note Mudran Private Limited' (BRBNMPL), இந்த ரூபாய் தாள்களைத் தயாரிப்பதற்குத் தேவையான 3.4 கோடி நெகிழித் தாள்களுக்காகப் (Polymer sheets) சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது.


• இந்த ஒப்பந்தப்புள்ளியில் நெகிழித் தாள்கள் 'உடனடித் தேவை' என்று குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், களப் பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால், வெவ்வேறு மதிப்பிலான ரூபாய் தாள்களுக்கு அதிக அளவிலான நெகிழி மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


• காகிதப் பணத்தாள்களைவிட நெகிழிப் பணத்தாள்களின் மிகப்பெரிய நன்மையே அவை மிகவும் நீண்டகாலம் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதுதான். பணத்தின் மதிப்பைப் பொறுத்து (குறைந்த மதிப்புள்ள ரூபாய் தாள்கள் அதிக பயன்பாட்டில் இருப்பதால், அவை விரைவில் சேதமடைகின்றன), அவை காகித பணத்தாள்களைவிட இரண்டு முதல் ஆறு மடங்கு அதிக காலம் உழைக்கின்றன. நெகிழிப் பணத்தாள்கள் பயன்பாட்டால் கிடைக்கும் பெரும்பாலான நன்மைகளுக்கு இதுவே முதன்மையான காரணமாகும்.

• ஒவ்வொரு ஆண்டும் காகிதப் பணத்தாள்களை அச்சிடுவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய ரிசர்வ் வங்கி செலவிடுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், சுமார் 2,600 கோடி ரூபாய் பணத்தாள்களை அச்சிட 52,095 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதுவே ஒரு மிகப்பெரிய தொகையாக இருந்தாலும், எப்போதும் பெரிய தொகைகளைக் கையாளும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு இது மிக முக்கியமான செலவாகும். கடந்த 10 ஆண்டுகளில், ரிசர்வ் வங்கியின் மொத்த செலவில் காகிதப் பணத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு மட்டுமே 15 சதவீதம் முதல் 44 சதவீதம் வரை இருந்துள்ளது.


• இந்திய ரூபாய் தாளின் முக மதிப்பு (Face Value) என்பது அதில் அச்சிடப்பட்டுள்ள துல்லியமான பணத் தொகையாகும் (எ.கா., ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500). இட மதிப்பு (Place Value) என்பது அந்த ரூபாய் தாளின் தொடர் எண்ணில் (Serial Number) உள்ள ஒவ்வொரு இலக்கத்திற்கும், அது இருக்கும் இடத்தைப் பொறுத்து (ஒன்றுகள், பத்துகள், நூறுகள், ஆயிரங்கள் போன்றவை) அமையும் மதிப்பாகும்.


• Bharatiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு துணை நிறுவனமாகும். இது பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூபாய் தாள்களை பெருமளவில் அச்சடிப்பதும், அவற்றை வடிவமைப்பதுமே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும்.


Original articles: What is the raw material of Indian currency notes? -Priya Kumari Shukla

Share:

விஜய் அரசின் முதல் வரவு-செலவு அறிக்கை : தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிதிச் சவாலாக கடன் ஏன் உள்ளது? -உதித் மிஸ்ரா

 தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தனது வரவு-செலவு அறிக்கை உரையில், முந்தைய அரசுகள் தங்கள் வருவாயைவிட மிக அதிகமாகச் செலவிட்டதாகவும், அதன் விளைவாக, தாங்கள் நிலையான முறையில் திருப்பிச் செலுத்தக்கூடிய அளவைவிட மிக அதிகமான தொகையைக் கடனாகப் பெற்றதாகவும் குறிப்பிட்டார்.


முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் வரவு-செலவு அறிக்கையை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் என். மேரி வில்சன் புதன்கிழமை தாக்கல் செய்தார்.


நிதியமைச்சர், 2036-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அளவை $1.5 டிரில்லியன் ஆக உயர்த்துவதாக உறுதியளித்தார். தற்போதைய நிலையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross state domestic product (GSDP)) அந்நிய செலாவணி விகிதத்தைப் பொறுத்து $350 பில்லியன் முதல் $400 பில்லியன் வரை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் அளவை மூன்று மடங்கிற்கும் மேலாக உயர்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.


மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் சேர்ந்து, தமிழ்நாடும் நீண்டகாலமாக இந்தியாவின்  வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அனைத்து இந்திய மாநிலங்களிலும் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சிறிதளவு வளர்ந்த போதிலும், மாநிலத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது.


முக்கிய சவால்


தனது நிதிநிலை அறிக்கை உரையில், கடந்தகால அரசுகள் தாங்கள் ஈட்டிய வருவாயை விடப்  அதிகமாகச் செலவு செய்துள்ளன என்றும்,  நிலையான முறையில் திருப்பிச் செலுத்தும் திறனைவிட அதிகமாகக் கடன் வாங்கியுள்ளன என்றும் வில்சன் தெளிவுபடுத்தினார்.


மாநிலத்தின் நிதி நிலைமை பற்றாக்குறையில் உள்ளது. கடன் சுமை, போதிய வருவாய் இல்லாத நிலை மற்றும் நிதி இழப்பு போன்ற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட ஒரு கருவூலமே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இருப்பினும், நிதி நிர்வாகத்தை மீண்டும் நிதிசார்  முன்னேற்றமான பாதைக்குக் கொண்டுவர குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.


கீழே உள்ள இரண்டு வரைபடங்கள், தமிழ்நாடு எதிர்கொள்ளும் நிதிச் சவாலின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகின்றன.


வரைபடம் 1-ல், தமிழ்நாடு மற்றும் அதற்கு ஒப்பிடத்தக்க பொருளாதார அளவைக்கொண்ட சில மாநிலங்களின் மொத்த அரசுக் கடன், மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை காட்டுகிறது. இந்த விகிதம் கடந்த காலத்தில் பெரிதாக அதிகரிக்கவில்லை என்றாலும், பொருளாதார அளவைக்கொண்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி  (Debt-to-GSDP) விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருப்பதே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.


இதற்குக் காரணம், மாநிலத்தன் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யத் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிக அளவில் கடன் வாங்கி வருவதே ஆகும். அதிக அளவிலான கடன் சுமை இருப்பதன் விளைவாக, மாநிலம் தனது வருவாயை அதிகரிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ளாத பட்சத்தில், காலப்போக்கில் வட்டிச் சுமை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


இதைத்தான் வரைபடம் 2 காட்டுகிறது. தமிழ்நாட்டில், கடந்தகாலக் கடனுக்கான வட்டியை மட்டும் செலுத்துவதற்காகச் செலவிடப்படும் பணத்தின் சதவீதம் சீராக அதிகரித்து வருகிறது.


கடனுக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்துவதற்கே அரசின் வருவாயில் அதிகப் பணம் செலவிடப்படுவதால் ஏற்படும் உடனடி விளைவு, ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குதல் போன்ற நலத் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கக்கூடிய நிதி குறைந்து விடுகிறது அல்லது மூலதனச் செலவுகளுக்காக (Capital Expenditure) சாலைகள், துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் முதலீடுகளுக்காகவும் அரசிடம் குறைவான நிதியே மீதமிருக்கும். இது போன்ற உள்கட்டமைப்பு சொத்துகளே மாநிலத்தின் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் முக்கிய முதலீடுகளாகும்.


கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் (White Paper), அதிகரித்து வரும் வட்டிச் செலவுகள் மாநிலத்தின் நிதி நிலையை மிகக்கடுமையான கட்டத்திற்கு தள்ளியுள்ளது  என்பதை விளக்கியது.

அதிகரித்துவரும் வட்டிச்செலவுகளே கடன் வாங்க வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. ஏனெனில், வட்டித் தொகையைச் செலுத்துவதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது. வருவாய் வரவுகள் (Revenue Receipts) போதுமானதாக இல்லாவிட்டால், அந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவே 'கடன்–வட்டி சுழற்சி' (Debt-Interest Spiral) என்று அழைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு இந்தச்சுழற்சியின் ஆரம்ப நிலையிலேயே நுழைந்து கொண்டிருக்கிறது என்று வெள்ளை அறிக்கை குறிப்பிட்டது.


வரவு-செலவு அறிக்கையின் குறிப்பிடுகள் 


நிதிநிலை தொடர்பான கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு செலவுகளைக்குறைப்பதன் மூலம் கடன் வாங்குவதைக் குறைக்கவும், அதேவேளையில் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறியும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசு ஏற்கனவே  15,000 கோடி ரூபாய் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட 'வருவாய் அதிகரிப்பு குழு' (Revenue Augmentation Committee) அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.


2025-26 ஆம் ஆண்டில் 28%-ஆக இருந்த கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி விகிதமானது, 2027-28-ஆம் ஆண்டில் 26.57% ஆகவும், 2028-29-ஆம் ஆண்டில் 26.10%-ஆகவும் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்.


Original articles: First Vijay government budget: Why debt is Tamil Nadu’s biggest fiscal challenge. -Udit Misra

Share:

பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கான, UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏன் கட்டணம் விதிக்கப்படலாம்? - சித்தார்த் உபாசனி

 

UPI (Unified Payments Interface) என்பது ஒருமித்த செலுத்துகை இடைமுகம் அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஆகும். இது வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பமாகும்.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) வாயிலாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் உண்மையில் இலவசமானவை அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான செலவுகளை வங்கிகள் (banks), கட்டணச் சேவை வழங்குநர்கள் (payment service providers) மற்றும் அரசாங்கமே (government) ஏற்று வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா, நிதித் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும்.


இந்தியாவில் பொருட்களை வாங்கும்போதோ அல்லது சேவைகளைப் பெறும்போதோ அதற்கான கட்டணத்தைச் செலுத்துவது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் மாறியுள்ளது. ஆனால், அந்தப் பணம் செலுத்தும் முறைக்கான செலவு என்பது ஒருபோதும் இலவசமாக இருந்ததில்லை.


உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களை (currency notes) அச்சிட ஆண்டுதோறும் சுமார் ரூ. 5,000 கோடியைச் செலவிடுகிறது. அதேபோல, கட்டணம் செலுத்தும் அட்டைகளுக்கான (payment cards) செலவுகளை அவற்றை வழங்கும் நிறுவனங்களே ஏற்கின்றன. பின்னர், அந்தச் செலவு பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள், பற்று அட்டைகளின் (Debit Card) வருடாந்திர பராமரிப்புக்காக 2021-22-ல் ரூ. 3,905 கோடியை வசூலித்த நிலையில், 2025-26-ல் அந்தத் தொகை ரூ. 7,564 கோடியாக அதிகரித்துள்ளது.


யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான செலவுகளையும் வங்கிகள் மற்றும் பிற நிதிச் சேவை நிறுவனங்களே ஏற்கின்றன. ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரைகூட இருக்கக்கூடிய இந்தச் செலவுக்கான ஈடுபாட்டைப் பெற பல ஆண்டுகளாக முயன்று வந்த நிலையில், இறுதியாக அவர்களின் கோரிக்கை நிறைவேறக்கூடும்.


செவ்வாய்க்கிழமையன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா-2026' ஐ (The Taxation and Other Laws (Amendment) Bill) அறிமுகப்படுத்தினார். 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்-2007' இல் (Payment and Settlement Systems Act) முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள், யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களை அனுமதிக்கக்கூடும்.


சாத்தியமான யுபிஐ கட்டணங்கள்


குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்கும் 'வணிகர் தள்ளுபடி விகிதம்' (Merchant Discount Rate (MDR)) விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பரிவர்த்தனை செயலாக்கம், தீர்வு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில், பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வங்கிகளால் வணிகர்களிடம் இந்த வணிகர் தள்ளுபடி விகிதக் (MDR) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


"பெரிய வணிகர்களுக்கு, குறிப்பாக ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் மொத்த வருவாய் (turnover) கொண்டவர்களுக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் மீது 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) பரிசீலிப்பது ஒரு நியாயமான அணுகுமுறையாக இருக்கும்" என்று நிதித் தொழில்நுட்ப (fintech) உள்கட்டமைப்பு தளமான 'Decentro'-வின் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைப் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர் குண்டுகு கூறினார்.


மேலும் குண்டுகுவின் கூற்றுப்படி, யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதமானது (MDR), "மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுடன் (ecosystem cost) ஏறக்குறைய ஒத்துப்போகிறது". அதனால், இது லாபத்தை ஈட்டுவதற்குப் பதிலாக செலவுகளை மீட்டெடுக்க மட்டுமே உதவும்.


வங்கி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனமான ஸீட்டாவின் (Zeta) வாடிக்கையாளர் வெற்றி, உத்தி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவரான மெஹுல் மிஸ்ட்ரி போன்ற மற்ற நிறுவனர்கள், வேறுபட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளனர். மிஸ்ட்ரியின் கூற்றுப்படி, தற்போதைய விவாதங்கள் யுபிஐ (UPI) கட்டணங்களுக்கு 0.05-0.07% என்ற குறைந்தளவிலான வணிகர் தள்ளுபடி விகிதத்தைச் (MDR) சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இது ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 1 கோடி முதல் 1.5 கோடி வரை மொத்த விற்பனை (turnover) செய்யும் வணிகர்களுக்கானது, ரூ. 50 கோடிக்கு அல்ல, இது ஒரு சிறிய கட்டணம் என்றாலும், வணிகர் மொத்த விற்பனை (turnover) வரம்பு குறைவாக உள்ளது.


இப்புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பற்று அட்டைகளுக்கு 1-3% வணிகர் தள்ளுபடி விகிதமும் (MDR), பற்று அட்டைகளுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 0.9% வரையும் விதிக்கப்படுகிறது. இந்த முரண்பாட்டையும் சரிசெய்ய வேண்டும்.


"அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய வணிகர்கள் ஏற்கனவே விசா/மாஸ்டர்கார்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) செலுத்துகின்றனர். அதே வணிகர்களுக்கான காலவரையற்ற யுபிஐ விலக்கு என்பது, அதில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்குப் பதிலாக வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களால் (Payment Service Provider (PSP)) நிதியளிக்கப்படும், ஒரே வழித்தடத்திற்கான ஒரு கட்டமைப்பு மானியமாகும்," என்று டெசென்ட்ரோவின் குண்டுகு கூறினார்.


முக்கியமாக, யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) கட்டணங்கள் மீதான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படலாம். இது ஒரு முக்கியமான அம்சம். ஏனெனில், 2025-26-ஆம் ஆண்டில், தனிநபரிலிருந்து வணிகருக்கு (P2M) மேற்கொள்ளப்பட்ட யுபிஐ கட்டணங்களில் 4% மட்டுமே ரூ. 2,000-க்கும் அதிகமாக இருந்தன. ஆனால், இந்த 4% பரிவர்த்தனைகள் மொத்த யுபிஐ கட்டண மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை வகித்தன.


2025-26 ஆம் ஆண்டில், ரூ. 314 லட்சம் கோடி மதிப்பிலான 24,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பெரும்பான்மையான யுபிஐ கட்டணங்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.


தற்போது, ​​'ரூபே பற்று அட்டைகள் (RuPay Debit Card) மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை (P2M) ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகைத் திட்டம்' மூலம், சிறிய வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ. 2,000 வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கி வருகிறது. வழங்கப்படும் ஊக்கத்தொகை பரிவர்த்தனை மதிப்பில் 0.15% வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், கட்டணச் சேவை வழங்குநர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி (app) வழங்குநர்கள் இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரூ. 20,000 கோடி இடைவெளி


இந்தக் கட்டணங்கள் எந்தெந்த உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுகின்றன?


மொபைல் செயலி, அதை உருவாக்குதல் மற்றும் அதற்கான வாடிக்கையாளர் சேவை ஆகியவை இதில் அடங்கும்.  மற்றொரு செலவு பயனர்களுக்கான வாடிக்கையாளர் ஆதரவு சேவையாகும். இதில் பரிவர்த்தனைகளை அங்கீகரித்தல், கணக்குச் சரிபார்ப்பு (reconciliation) மற்றும் தீர்வு காணுதல் (settlement) ஆகியவை அடங்கும். பிற செலவுகளைப் புரிந்துகொள்வது எளிது. அதாவது, இணையப் பாதுகாப்பு (cybersecurity), வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு (KYC) நடைமுறைகள், கிளவுட் சேமிப்பு (cloud storage), பேரிடர் மீட்பு அமைப்பு (disaster recovery systems), மோசடி கண்டறிதல், தகராறு தீர்வு, தொடர்ச்சியான வலைப்பின்னல் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அறிக்கையிடல் போன்றவை இதில் அடங்கும்.


இதற்கெல்லாம் கட்டணச் சேவைத் துறை (payments industry) எவ்வளவு செலவிடுகிறது? இது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லையென்றாலும், Zeta நிறுவனத்தைச் சேர்ந்த மிஸ்ட்ரி (Mistry), யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) உள்கட்டமைப்பை இயக்குவதற்கான ஆண்டுச் செலவு "குறைந்தது ரூ. 10,000 கோடியாக இருக்கலாம்" என்று துறைசார் மதிப்பீடுகள் தெரிவிப்பதாகக் கூறினார்.


மிஸ்ட்ரியின் இந்த மதிப்பீடு ஒரு குறைவான மதிப்பீடாக (conservative estimate) இருக்கலாம்.


நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் (Standing Committee on Finance) மார்ச் மாத அறிக்கையின்படி, 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் மேற்கூறிய அரசு ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானியமானது, "டிஜிட்டல் கட்டணச் சேவைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே" ஆகும். குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளில் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.8,730 கோடியை வழங்கியது. இத்தொகை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே என்றால், மொத்த ஆண்டுச் செலவு ரூ.20,000 கோடிக்கும் சற்று குறைவாகவே இருக்கும்.

இந்தக் கட்டணத்தை யார் செலுத்துவது?


பெரிய அளவிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், மக்களின் பணப்பரிவர்த்தனை முறைகள் மாறுமா? வணிகர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) சுமையை வாடிக்கையாளர்கள்மீது சுமத்தினால், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் முறையை மாற்றிக்கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.


'லோக்கல் சர்க்கிள்ஸ்' (LocalCircles) நடத்திய 20,000-க்கும் மேற்பட்டோருடனான கருத்துக்கணிப்பின்படி, பெரிய வணிகர்களிடம் ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், 12% பேர் மட்டுமே தொடர்ந்து யுபிஐ-ஐப் பயன்படுத்துவதாகக் கூறினர். ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ​​இந்த விகிதம் மேலும் குறைந்து 2%-ஆக இருந்தது.


புதன்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியது போல, அதற்கான செலவை யாராவது ஒருவர்தான் ஏற்க வேண்டும். "இறுதியில், ஏதோ ஒரு வகையில் நுகர்வோர் தான் அதற்கான கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். அது அதே நுகர்வோராக இல்லாமல் பரந்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், அதனால் அது நேரடியாகத் தெரிவதில்லை... எப்படியாயினும், அந்தச் செலவு ஏற்கனவே மாற்றப்படுகிறது. அது 'பயன்படுத்துபவரே கட்டணம் செலுத்தும்' (user-pays) கொள்கையின் அடிப்படையில் நேரடியாக இல்லாமல் இருக்கலாம்."


Original articles: Why UPI payments to large retailers could attract a fee? -Siddharth Upasani

Share:

இந்தியா-ஆஸ்திரேலியா யுரேனிய ஒப்பந்தம் : இந்தியாவின் அணுசக்தி லட்சியங்களுக்கு உள்நாட்டு இருப்பு ஏன் போதுமானதாக இல்லை? -பிரத்யுஷ் தீப்

2047-ம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரம் (GWe) அளவிற்கு விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியா ஆஸ்திரேலியா முதல் கஜகஸ்தான் வரையிலான நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்தியா யுரேனியத்தைப் பெற்று வருகிறது.


இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா தனது சிவில் அணுசக்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக, ஆஸ்திரேலியாவுடன் ஒரு நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (India-Australia Civil Nuclear Cooperation Agreement) கையெழுத்திடப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


வழங்கப்படவுள்ள யுரேனியம் ஆக்சைடு அல்லது யெல்லோகேக்கின் (yellowcake) அளவு மற்றும் ஒப்பந்தத்தின் கால அளவு வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடா மற்றும் கஜகஸ்தானுடன் கையெழுத்திடப்பட்ட இதேபோன்ற நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, இந்தியா தனது திட்டமிடப்பட்ட அணுமின் உற்பத்தி விரிவாக்கத்திற்காக எரிபொருள் விநியோகத்தைப் பன்முகப்படுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


2047-ம் ஆண்டுக்குள் தனது சிவில் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரமாக (GWe) விரிவுபடுத்தும் லட்சிய இலக்கை இந்தியா பின்பற்றி வரும் வேளையிலும், கடந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த சிவில் அணுசக்தித் துறையை அதிக தனியார் பங்கேற்புக்குத் திறந்துவிட்ட நிலையிலும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் பொதுவாகக் காணப்படும் ஒரு தனிமமான யுரேனியம், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல செயலாக்க நிலைகளைக் கடக்க வேண்டும். சுரங்கத் தொழில் மற்றும் அரைத்தல் (mining and milling), உருமாற்றம் (conversion), செறிவூட்டல் (enrichment-தேவைப்படும் இடங்களில்), மற்றும் எரிபொருள் தயாரிப்பு (fuel fabrication) ஆகியவை இவற்றில் அடங்கும்.


இந்தியாவின் அணுமின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் தற்போது எங்கிருந்து கிடைக்கிறது? நாட்டின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்நாட்டு யுரேனியம் இருப்புக்களின் பங்கு என்ன?


இந்தியாவுக்கு கூடுதல் யுரேனியம் தேவை


இயற்கை யுரேனியத்தில் இயங்கும் நாட்டின் உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுக்கான (Pressurised Heavy Water Reactors (PHWR)) எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவையின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இலகுநீர் அணு உலை (Light Water Reactors (LWRs)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகிறது.


ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேகாலயா, இராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 47 யுரேனியம் படிவங்களில், உள்நாட்டு யுரேனியம் ஆக்சைடு இருப்பு தற்போது சுமார் 4.3 லட்சம் டன்களாக உள்ளது. நாட்டில் யுரேனியம் தாதுவை அகழ்ந்தெடுத்துப் பதப்படுத்தும் பொறுப்பை யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) கொண்டுள்ளது. மேலும், இது ஜார்க்கண்டில் உள்ள ஜடுகூடா மற்றும் துராம்டிஹ், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளி ஆகிய இடங்களில் முக்கியச் சுரங்கங்களை இயக்குகிறது.


இருப்பினும், நாட்டின் மொத்த 8.7 ஜிகாவாட் அணுசக்தித் திறனில், 2.4 ஜிகாவாட் திறனுக்கான யுரேனியம் தேவை மட்டுமே தற்போது உள்நாட்டு மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது என்றும், மீதமுள்ளவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக மின்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, ஜூன் 2025-ல் குறிப்பிட்டது.


"எனவே, 2047-ம் ஆண்டில் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறன் என்ற இலக்கை அடைய, இந்தியா தனது யுரேனியம் விநியோகத்தை அதிகரிப்பதோடு, அதற்கு இணையான பதப்படுத்தும் மற்றும் உற்பத்தித் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும்," என்று அது கூறியது. 2047-ம் ஆண்டில், நாட்டிற்கு ஆண்டுதோறும் கூடுதலாக 8,029 டன் இயற்கை யுரேனியமும், 1,045 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் தேவைப்படும் என்று அக்குழு மதிப்பிட்டுள்ளது.


அணுசக்தி விநியோகர்கள் குழு (Nuclear Suppliers Group (NSG)) விலக்கு, உலகளாவிய யுரேனியம் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துகிறது



2008-ம் ஆண்டில், அணுசக்தி விநியோகர்கள் குழு (NSG) அந்நாட்டிற்கு ஒரு 'முழுமையான' விலக்கை வழங்கியபோது, ​​அதன் சிவில் அணுசக்தி உலைகளுக்காக யுரேனியத்தை இறக்குமதி செய்யும் நாட்டின் திறனை இந்தியா பெற்றது. இதன்மூலம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) கையெழுத்திடாத நாடுகளில், இத்தகைய வர்த்தகச் சலுகைகளை அனுபவிக்கும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது.


சர்வதேச அணுசக்தி முகமையின் (International Atomic Energy Agency (IAEA)) பாதுகாப்புகளின் கீழ் இயங்கும் அணு உலைகளுக்காக, 2008-09 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், இந்தியா மொத்தம் 18,842.60 மெட்ரிக் டன் (mt) யுரேனியத்தை யுரேனியம் தாதுச் செறிவூட்டி (uranium ore concentrate), இயற்கையான யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் (pellets) மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் வடிவில் இறக்குமதி செய்துள்ளது என்று அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.


அரசுத் தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில், அணுமின் நிலையங்கள் 56,631.48 மில்லியன் யூனிட் (mu) மின்சாரத்தை உற்பத்தி செய்தன. அதில் 39,180 மில்லியன் யூனிட் (mu) இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. 2025-2033 காலகட்டத்தில், செயல்பாட்டில் உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளை (safeguarded Pressurised Heavy Water Reactors (PHWR)) இறக்குமதி செய்யப்படும் இயற்கை யுரேனியத்தின் மதிப்பிடப்பட்ட தேவை சுமார் 9,000 மெட்ரிக் டன் யுரேனியம் (mtu) ஆகும்.


இந்தியா தற்போது ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தானிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்கிறது. மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான விநியோக ஒப்பந்தத்தின்கீழ், கனடா சுரங்க நிறுவனமான கேமெகோ நிறுவனங்களிடமிருந்து (Cameco Corp.) வரும் சரக்குகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய யுரேனியம் உற்பத்தியாளரான கஸாடோம்பிராம்(Kazatomprom), இந்தியாவிற்கு கணிசமான அளவு யுரேனியத்தை விற்க பிப்ரவரியில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கஜகஸ்தானும் இந்தியாவின் மிக முக்கியமான யுரேனியம் வழங்குநர்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டு வரை கேமெகோ மற்றும் கஸாடோம்பிராம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் முக்கிய யுரேனியம் விநியோகர்களாகத் திகழ்ந்தன.


வர்த்தகத் தரவுகளின்படி, இந்த நாடுகளைத் தவிர, 2025-26-ஆம் ஆண்டில் பிரான்ஸ் இந்தியாவிற்கு யுரேனியம் தாதுக்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் வழங்கியது. அதேநேரத்தில், 2024-25-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இதேபோன்ற இறக்குமதிகள் பெறப்பட்டன.


இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருப்பதற்கான காரணம் : அதிக செலவுகள், குறைந்த தரத்திலான யுரேனியம் தாது ஆகும்.

இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் சார்ந்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பொருளாதாரம் ஆகும்.


மின்சார அமைச்சகக் குழுவின்படி, உள்நாட்டில் யுரேனியத்தை அகழ்ந்தெடுத்து யுரேனியத் தாதுச் செறிவூட்டப்பட்ட பொருளாக (uranium ore concentrate) மாற்றுவதற்கு, சர்வதேச சந்தைகளில் இருந்து அதைப் பெறுவதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக செலவாகிறது. இந்தியாவில் காணப்படும் யுரேனியத் தாதுவின் தரம் குறைவாக இருப்பதே இந்த அதிக செலவுக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும், அணுசக்தியை நோக்கிய தற்போதைய உலகளாவிய நகர்வு, வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவில் யுரேனியத்தின் விலையை உயர்த்தக்கூடும்.


மேலும், சிறந்த தரத்திலான தாதுவைக் கொண்ட சுரங்கங்களைக் கண்டறியும் சாத்தியம் அல்லது கொடுக்கப்பட்ட தரமான தாதுவுடன் புதிய பிரித்தெடுப்பு தொழில்நுட்பம் உருவாவதால், உள்நாட்டு யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இது செலவு மிக்கதாக இருந்தாலும், ஓரளவிற்கு எரிசக்தி பாதுகாப்பைப் பெற உதவும். இதை எளிதாக்குவதற்காக, விரிவாக்கத்தை எளிதாக்கும் வகையில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் கூடுதல் பங்கு மூலதனத்தை அரசு செலுத்த பரிசீலிக்கலாம்,” என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது.


Original Link: India-Australia uranium deal: Why domestic reserves are not enough to fuel India’s nuclear ambitions.

Share:

இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத் தொழில்நுட்ப உறவுகள் - பெரிய லட்சியங்கள், சிறிய செயல்பாடு -ராகுல் பேடி

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அர்த்தமுள்ள பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவு ஒத்துழைப்பு தொடர்ந்து கைக்கு எட்டாமல் உள்ளது.


இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, லட்சியமிக்க அரசியல் அறிவிப்புகளை வெளியிட்டு, அவை தொழில்துறை விளைவுகளாக மாறத் தவறுவதால், இராஜதந்திர வட்டாரங்களில் ஒரு விரும்பத்தகாத பெயரைப் பெற்றுள்ளது. கடந்த இருபதாண்டுகளாக, புது தில்லி மற்றும் வாஷிங்டனில் அடுத்தடுத்து வந்த நிர்வாகங்கள், இருதரப்பு இராணுவ உறவுகளை மாற்றியமைக்கும் என்று உறுதியளித்து பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டமைப்புகளையும் தொழில்துறை ஒத்துழைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால் அவை நீடித்த பேச்சுவார்த்தைகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், தொழில்நுட்பப் பரிமாற்றத் தகராறுகள் மற்றும் மாறுபட்ட வர்த்தக எதிர்பார்ப்புகளில் சிக்கித் தவிக்கின்றன.


இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒட்டுமொத்த உறவு கணிசமாக விரிவடைந்துள்ளது. 2002-ம் ஆண்டு முதல், இந்தியா 22 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பாதுகாப்பு கருவிகளை வாங்கியுள்ளது. இதில் அப்பாச்சி (Apache) மற்றும் சினூக் (Chinook) ஹெலிகாப்டர்கள், C-17 மற்றும் C-130J சரக்கு போக்குவரத்து விமானங்கள், P-8I கடல்சார் ரோந்து விமானங்கள் மற்றும் M777 ஹோவிட்சர் பீரங்கிகள் ஆகியவை அடங்கும். அமெரிக்கா ஒரு முக்கிய பாதுகாப்பு விநியோகராக மாறியிருந்தாலும், அர்த்தமுள்ள கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை எட்டாக்கனியாகவே உள்ளன.


ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric’s (GE)) இன்ஜின் விவகாரம்


ஒரு காலத்தில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் மையப் புள்ளியாகப் போற்றப்பட்ட ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric’s (GE)) நிறுவனத்தின் F414 போர் விமான இன்ஜின் தொடர்பான சமீபத்திய கட்டுப்பாடானது, அரசியல் அறிவிப்புகளுக்கும் தொழில்சார் விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளியின் மிகச் சமீபத்திய மற்றும் மிக முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும். ஒவ்வொரு F414 இன்ஜினின் மதிப்பிடப்பட்ட விலையானது, சுமார் ₹70 கோடி முதல் ₹80 கோடி என்ற நிலையிலிருந்து ₹200 கோடிக்கும் மேலாக, கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பிரத்யேக உற்பத்தி வரிசையை நிறுவுவதற்காக, ஜிஇ நிறுவனம் சுமார் $800 மில்லியன் (₹7,576 கோடி) இந்திய முதலீட்டையும் கோரியுள்ளது.


தொழில்நுட்பப் பரிமாற்றம், அறிவுசார் சொத்துரிமை மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன. தேஜஸ் மார்க்-II விமானத்திற்கான F414 இன்ஜினை கொள்முதல் செய்வதற்கும், உரிமம் பெற்று உற்பத்தி செய்வதற்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் (Hindustan Aeronautics Limited (HAL)) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே சமயம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) மற்றும் வானூர்தி மேம்பாட்டு முகமை (Aeronautical Development Agency (ADA)) ஆகியவை, முன்மொழியப்பட்ட மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (Advanced Medium Combat Aircraft (AMCA)) மற்றும் இந்திய கடற்படையின் இரட்டை இன்ஜின் தள அடிப்படையிலான போர் விமானம் ஆகியவற்றுக்காக அதே இன்ஜின் குறித்து ஜி.இ (GE) நிறுவனத்துடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதன் விளைவாக, ஒரே நேரத்தில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால், இவற்றில் ஒரு முடிவை எட்டுவது சவாலாக மாறியுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடியின் 2023 வாஷிங்டன் பயணத்தின்போது, முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மீதான முன்முயற்சியின் (Initiative on Critical and Emerging Technologies (iCET)) முதன்மைச் சாதனையாக F414 திட்டம் வெளியிடப்பட்டது. இது வாங்குபவர்-விற்பவர் உறவிலிருந்து உண்மையான பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்பை நோக்கிய ஒரு மாற்றத்தை அடையாளப்படுத்தும் நோக்கம் கொண்டது. மாறாக, இது அரசியல் லட்சியத்திற்கும் தொழில்துறை யதார்த்தத்திற்கும் இடையிலான நீடித்த இடைவெளியின் மற்றொரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வும் அல்ல.


தொலைநோக்குப் பார்வையிலிருந்து தேக்க நிலை வரை


பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதற்கான முதல் தீவிர முயற்சி 2012-ல் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி (Defence Technology and Trade Initiative (DTTI)) மூலம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டு மேம்பாடு மற்றும் கூட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இது, பல ஆண்டுகால சந்திப்புகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும், அது எந்தவொரு குறிப்பிடத்தக்க இராணுவத் திறனையும் வழங்கவில்லை. காலப்போக்கில், அது தனது முக்கியத்துவத்தை இழந்தது.




அதன் தொடர்ச்சியான iCET (2022), குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், தொலைத்தொடர்பு, விண்வெளி, உயிரி தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள் வரை அதன் செயல்திட்டத்தை விரிவுபடுத்தியது. அதன் முக்கிய பாதுகாப்பு முன்னெடுப்புகளில் ஒன்றான ஜிஇ எஃப்414 திட்டத்தின் தீர்க்கப்படாத பேச்சுவார்த்தைகள், அரசியல் லட்சியங்களை தொழில்துறை விளைவுகளாக மாற்றுவதில் உள்ள பரந்த சிரமத்திற்கு ஒரு அடையாளமாக மாறியுள்ளன.


பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் தொழில்துறையை இணைப்பதற்காக 2023-ல் தொடங்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு முடுக்கச் சூழலமைப்பு (India-United States Defence Acceleration Ecosystem (INDUS-X)) திட்டமும் இதேபோல் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஆனால் குறிப்பிடத்தக்க கூட்டு மேம்பாட்டு விளைவுகளை இன்னும் உருவாக்கவில்லை. மற்ற வருங்கால ஒத்துழைப்புகளின் நிலையும் இதைவிடச் சிறப்பாக இல்லை. ஜாவலின் டாங்கெதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணையை (Javelin anti-tank guided missile) இணைந்து தயாரிப்பது குறித்த விவாதங்கள் ஒரு பத்தாண்டிற்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. அதே நேரத்தில், ஜெனரல் டைனமிக்ஸ் ஸ்ட்ரைக்கர் காலாட்படைப் போர் வாகனம் (General Dynamics Stryker infantry combat vehicle) குறித்த முன்மொழியப்பட்ட ஒத்துழைப்பும் இதேபோன்ற தாமதங்களைச் சந்தித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் தற்போது யாருக்கும் தெரியாமல் கைவிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.


அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு இராணுவ விற்பனை வழிமுறையின் மூலம், ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பில் 31 MQ-9B ஸ்கைகார்டியன் (SkyGuardian) மற்றும் சீகார்டியன் (SeaGuardian) தொலைவிலிருந்து இயக்கப்படும் விமானங்களை இந்தியா 2024-ல் வாங்கியது கூட, முதலில் திட்டமிடப்பட்ட தொழில்துறை ஒத்துழைப்பைப் போலன்றி, ஒரு கொள்முதல் போலவே அமைந்துள்ளது. உள்ளூர் ஒருங்கிணைப்பு, பகுதி உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் முழுமையான சீரமைப்புச் சூழலமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக உறுதியளிக்கப்பட்ட அதன் தொகுப்பு இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.


ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் புறக்கணிக்க முடியாத ஒரு போக்கைக் காட்டுகின்றன. அடுத்தடுத்து வரும் இந்தியா-அமெரிக்கப் பாதுகாப்பு முயற்சிகள் "வரலாற்றுச் சிறப்புமிக்கவை", "மாற்றத்தை ஏற்படுத்துபவை" அல்லது "ஆட்டத்தையே மாற்றக்கூடியவை" என்று போற்றப்பட்டாலும், அவற்றின் செயலாக்கம் தொடர்ந்து சொல்லப்பட்ட அளவிற்கு வெகு தொலைவில் பின்தங்கியே உள்ளது.


தொழில்நுட்பப் பரிமாற்றப் பிளவு


இந்த இடைவெளியின் மையத்தில், இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு அடிப்படையாக உள்ள முற்றிலும் மாறுபட்ட தத்துவங்களே அமைந்துள்ளன. மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதற்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சார்பைக் குறைப்பதற்கும் ஒரு வழியாகவே இந்தியா பாதுகாப்புக் கூட்டாண்மைகளைக் கருதுகிறது.


இதற்கு மாறாக, அமெரிக்கா மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை, கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், குறிப்பாக சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகளால் (International Traffic in Arms Regulations (ITAR)) நிர்வகிக்கப்படும் இராஜதந்திர வளங்களாகக் கருதுகிறது. இந்த விதிமுறைகளின் கீழ், தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் உற்பத்தித் திறன்களை வெளியிடுவது பரந்த பாதுகாப்பு நோக்கங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே உள்ளது.


F414 தொடர்பான இன்னும் முடிவாகாத பேச்சுவார்த்தைகள், அணுகுமுறையில் உள்ள இந்த வேறுபாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன. நீண்டகால உள்நாட்டுத் திறனை வளர்ப்பதற்காக இந்தியா உற்பத்தி சார்ந்த நிபுணத்துவத்தையும் அறிவுசார் சொத்துரிமையையும் நாடியுள்ளது. அதேசமயம் வாஷிங்டனின் பரந்த இராஜதந்திரமுறையில் பரந்த நோக்கங்களைப் பொருட்படுத்தாமல், அமெரிக்கா ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டே உள்ளது. இதன் விளைவாக, பாதுகாப்பு உறவானது ஒரு கொள்முதல் சார்ந்த கூட்டாண்மையாகவே வளர்ந்துள்ளது. ஆனால், திறனைப் பரிமாற்றம் செய்வதற்கும் இந்தியாவின் 'ஆத்மநிர்பர்தா' (சுயசார்பு) நிலையை வலுப்படுத்துவதற்குமான ஒரு செயல்முறையாக மிகக் குறைவாகவே உள்ளது.

மேலும் தொடர்ந்து அதிநவீன இராணுவப் பயிற்சிகள், தளவாட ஒப்பந்தங்கள் மற்றும் மேம்பட்ட ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவற்றால் குறிக்கப்படும் இந்தியா-அமெரிக்க இராஜதந்திர உறவுகளின் மறுக்க முடியாத விரிவாக்கம் இருந்தபோதிலும், இந்த உறவின் தொழில்துறைப் பரிமாணம் இன்னும் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கவில்லை. பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முன்முயற்சி(DTTI), முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான முன்முயற்சி (iCET) மற்றும் இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு முடுக்கச் சூழலமைப்பு (INDUS-X) போன்ற முன்முயற்சிகள் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன் விளைவாக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முன்மொழியப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை (Reciprocal Defence Procurement Agreement (RDPA)) தொழில்துறை ஒத்துழைப்பின் அடுத்த சோதனையாகக் கருதுகின்றனர்.


இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் சந்தைகளுக்கு பரஸ்பர அணுகலை வழங்குவதன் மூலம், முன்மொழியப்பட்ட பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம் (RDPA) இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகத்தை மறுவடிவமைக்க முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இருப்பினும், அந்தப் பரஸ்பரத்தன்மை, இந்தியாவின் இன்னும் வளரும் நிலையில் உள்ள பாதுகாப்பு உற்பத்தியாளர்களை, அமெரிக்காவின் பெரிய, செல்வந்த மற்றும் தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுடன் நேரடிப் போட்டிக்கு உள்ளாக்கக்கூடும். இது உண்மையான சமநிலையை உருவாக்குகிறதா அல்லது சமமற்ற போட்டியை நிறுவனமயமாக்குகிறதா என்பது முற்றிலும் வேறொரு விஷயம்.


ராகுல் பேடி, புது தில்லி மற்றும் சண்டிகரைச் சேர்ந்த ஒரு பாதுகாப்புத் துறை செய்தியாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.


Original Link : India-U.S. defence technology ties — big ambitions, little delivery 


Share:

பெண்களின் வருமானத்தையும், சுகாதாரப் பராமரிப்பையும் இணைத்தல் - சிரந்தன் சாட்டர்ஜி

 பெண்கள் தங்களின் கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் சுகாதாரப் பராமரிப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் குடும்ப முன்னுரிமைகளை மறுசீரமைக்கக்கூடும்.


இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு புரட்சிகளை சந்தித்து வருகிறது. முதலாவது பொருளாதாரப் புரட்சி (economic revolution) ஆகும். இது கடந்த சில ஆண்டுகளில், பணியிடங்களில் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு, பொருளாதாரத்தின் முறைசார்மயமாக்கல் (formalisation), டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் ஆகியவை இந்த வளர்ச்சிக்குத் துணைபுரிந்துள்ளன.


இரண்டாவது நோய்ப்பரவல் சார்ந்த புரட்சி (epidemiological revolution) ஆகும். இந்தியா இனி தொற்றுநோய்களை மட்டுமே எதிர்கொள்ளவில்லை; நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் மனநலக் கோளாறுகள் ஆகியவை இப்போது வரையறுக்கும் பொது சுகாதார சவால்களாக மாறி வருகின்றன. இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த நாள்பட்ட நோய்களே காரணமாக உள்ளன. மேலும், இவை குடும்பங்கள் மற்றும் பொது நிதிகள் இரண்டின் மீதும் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.


பெரும்பாலான கொள்கை விவாதங்கள், இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றே கருதுகின்றன. இருப்பினும், ஆக்ஸ்போர்டு ஓபன் எகனாமிக்ஸ் (Oxford Open Economics) இதழில் விரைவில் வெளியாகவுள்ள புதிய ஆய்வு ஒன்று, இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.


மருத்துவமனைகளுக்கு அப்பால் ஒரு பார்வை


இந்தியா பாரம்பரியமாக, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விரிவான காப்பீட்டு வசதி மற்றும் சுகாதாரத் துறைக்கான அதிக செலவினம் போன்ற நன்கு அறியப்பட்ட குறியீடுகள் மூலம் சுகாதாரப் பராமரிப்பில் முன்னேற்றத்தை அளவிடுகிறது. இந்த முதலீடுகள் இன்றியமையாதவையாகவே இருக்கின்றன. ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) போன்ற திட்டங்கள் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளன. அதேநேரத்தில், ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் தொடர்ந்து உயிர்களைக் காப்பாற்றி வருகின்றன. ஆனால், சுகாதாரச் செலவினம் (healthcare spending) என்பது ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி மட்டுமே. ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் பல முக்கியக் காரணிகள் மருத்துவமனைகளுக்கு வெளியேதான் உள்ளன. சிறந்த ஊட்டச்சத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பங்களுக்குள் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுடன் கூடிய முடிவெடுத்தல் ஆகியவை இதில் அடங்கும். குடும்பங்கள் இந்தச் செயல்பாடுகளில் அதிகமாக முதலீடு செய்யத் தொடங்கினால், மக்களின் ஆரோக்கியம் மோசமடைவதால் அல்ல, மாறாக ஆரோக்கியம் மேம்படுவதால் சுகாதாரச் செலவினம் குறையக்கூடும்.


மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வில், இந்தியாவின் 2018-ம் ஆண்டு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சீர்திருத்தத்தால் உருவாக்கப்பட்ட ஒரு இயல்பான பரிசோதனை ஆய்வு செய்யப்பட்டது. இந்தச் சீர்திருத்தம், முறைசார் துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்த பெண்களுக்கான கட்டாய வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பை, அவர்களின் முதல் மூன்று வருடப் பணிக்காலத்தில் 12%-லிருந்து 8%-ஆகக் குறைத்தது. இதன் விளைவாக, பெண்கள் தங்கள் மொத்த ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், பெண்கள் கையில் பெறும் சம்பளம் அதிகரித்தது. இது, பெண்கள் கூடுதல் வருமானத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்ய இது ஒரு தெளிவான வாய்ப்பை உருவாக்கியது.


தேசிய அளவிலான பிரதிநிதித்துவக் குடும்பக் குழுத் தரவுகளைப் பயன்படுத்தி, இந்தக் கொள்கையால் பயனடைந்த பெண் தலைமையிலான குடும்பங்கள், ஒட்டுமொத்த சுகாதாரச் செலவினங்களை சுமார் 11.6% குறைத்துள்ளன என்பது கண்டறியப்பட்டது. மருந்துகள் மற்றும் மருத்துவர் ஆலோசனைகளுக்கான செலவுகள் குறைந்த அதேவேளையில், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தொடர்புடைய செயல்பாடுகளுக்கான (ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி உட்பட) செலவுகள் அதிகரித்துள்ளன.


இந்த ஆய்வு, இந்தியாவின் மிகப்பெரிய கண் மருத்துவமனை அமைப்புகளில் ஒன்றின் மின்னணு மருத்துவப் பதிவுகளையும் பகுப்பாய்வு செய்தது. ஏற்கனவே சுகாதார சேவைகளைப் பெற்று வந்த பெண்களைக் கணக்கில் கொண்டபிறகும், கூடுதல் வருமானம் பெற்ற பெண்களிடையே செலவினங்கள் குறைவாகவே இருந்தன.


இதன் பொருள் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பிற்கு குறைந்த மதிப்பளிக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, பெண்கள் தங்கள் கூடுதல் வருமானத்தைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் சுகாதாரச் சேவைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் குடும்ப முன்னுரிமைகளை மறுசீரமைக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.


வருமானத்தை யார் ஈட்டுகிறார்கள் என்பது முக்கியம் என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் நீண்டகாலமாகவே உணர்ந்துள்ளனர். எஸ்தர் டுஃப்லோ (Esther Duflo) மற்றும் அபிஜித் பானர்ஜி (Abhijit Banerjee) ஆகியோரின் ஆய்வுகள், பெண்களுக்கு வளங்களை ஒதுக்குவது குடும்பங்கள் பணத்தைச் செலவழிக்கும் விதத்தை மாற்றுகிறது என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டியுள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள், கல்வி, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வு ஆகியவற்றில் அதிக முதலீடுகளை உருவாக்குகின்றன. இதேபோல், வருமானம் பெறுபவரின் அடையாளம், குடும்பங்கள் வளங்களை எவ்வாறு ஒதுக்கீடு செய்கின்றன என்பதில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை பானர்ஜி மற்றும் நீஹாஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இந்த புதிய கண்டுபிடிப்புகள், இந்த நுண்ணறிவை சுகாதாரத் துறைக்கும் விரிவுபடுத்துகின்றன. பெண்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீண்டகால நோக்கில் சிந்திப்பதாகத் தெரிகிறது. ஒருவர் நோய்வாய்ப்படும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, உடல்நல அபாயங்கள் அதிக செலவு பிடிக்கும் மருத்துவப் பிரச்சனைகளாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் குறைப்பதில் முதலீடு செய்ய அவர்கள் அதிக வாய்ப்புள்ளது. மொத்த சுகாதார நிதி ஒதுக்கீட்டில், சொந்தப் பணச் செலவினங்கள் இன்னும் கணிசமான பங்கைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு, இந்த நடத்தை மாற்றம் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.


இது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?


இந்தியாவின் மக்கள்தொகைப் பலன் (demographic dividend) என்பது, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக, அதிக பொருளாதாரப் பங்களிப்பு ஆரோக்கியமான குடும்பங்களாக மாறுவதை உறுதி செய்வதையும் சார்ந்துள்ளது. பெண்களின் வருமானத்தை அதிகரிப்பது, ஊட்டச்சத்து, தடுப்புப் பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் குடும்பங்களின் முதலீடுகளை மாற்றினால், வேலைவாய்ப்புக் கொள்கை என்பது சுகாதாரக் கொள்கையாக மாறும். பெண்களின் பொருளாதாரச் செயல்பாட்டை மேம்படுத்தும் கொள்கைகள், தொழிலாளர் சந்தைகளுக்கு அப்பாற்பட்ட பலன்களை உருவாக்கக்கூடும். அவை ஏற்கனவே நெருக்கடியில் உள்ள இந்தியாவின் சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தையும் குறைக்கக்கூடும்.


பல ஆண்டுகளாக, சுகாதாரம் என்பது ஒரு அத்தியாவசியமா அல்லது ஆடம்பரமா என்பது குறித்துப் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர். குடும்பங்கள் சுகாதாரத்திற்காக மட்டும் பணம் செலுத்துவதற்குப் பதிலாக, நல்ல ஆரோக்கியத்தை உருவாக்குவதில் முதலீடு செய்கின்றனவா என்பதே மிகவும் பொருத்தமான கேள்வியாக இருக்கலாம். இந்த வேறுபாடு முக்கியமானது, ஏனெனில் சுகாதாரச் செலவினங்கள் ஆரோக்கியத்தின் ஒரு முழுமையான அளவுகோல் அல்ல. மருந்துகள் அல்லது ஆலோசனைகளுக்கான குறைந்த செலவு என்பது தானாகவே புறக்கணிப்பின் அறிகுறியாகிவிடாது. சில சமயங்களில், அது சிகிச்சை தேவைப்படும் நோய்கள் குறைவாக இருப்பதையும் பிரதிபலிக்கிறது. மற்ற நேரங்களில் இது சிறந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.


இந்தியாவின் வளர்ச்சி உத்தியானது, நோய்த்தடுப்பு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துகிறது. இந்த அணுகுமுறையில் மற்றொரு முக்கிய அம்சம் இடம்பெற வேண்டும் என்பதை இந்தப் புதிய சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அது பெண்களின் பொருளாதார மேம்பாடு (economic empowerment) ஆகும். பெண்கள் அதிகம் சம்பாதிக்கும்போது, ​​அவர்கள் பொதுவாக அதிகமாகச் செலவு செய்வதோடு நின்றுவிடுவதில்லை, அவர்கள் அதை வெவ்வேறு வழிகளில் செலவிடக்கூடும். அந்த மாறுபட்ட செலவின முடிவுகள், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் மிக முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக அமைதியாக மாறக்கூடும்.


சிரந்தன் சாட்டர்ஜி, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரம், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய சுகாதாரம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார்.


Original article : Linking women’s incomes and healthcare -Chirantan Chatterjee

Share: