பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கான, UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏன் கட்டணம் விதிக்கப்படலாம்? - சித்தார்த் உபாசனி

 

UPI (Unified Payments Interface) என்பது ஒருமித்த செலுத்துகை இடைமுகம் அல்லது ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஆகும். இது வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாகப் பணத்தை அனுப்பவும் பெறவும் உதவும் ஒரு நவீன டிஜிட்டல் தொழில்நுட்பமாகும்.


ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) வாயிலாகச் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் உண்மையில் இலவசமானவை அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான செலவுகளை வங்கிகள் (banks), கட்டணச் சேவை வழங்குநர்கள் (payment service providers) மற்றும் அரசாங்கமே (government) ஏற்று வந்துள்ளன. நாடாளுமன்றத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதா, நிதித் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும்.


இந்தியாவில் பொருட்களை வாங்கும்போதோ அல்லது சேவைகளைப் பெறும்போதோ அதற்கான கட்டணத்தைச் செலுத்துவது முன்பைவிட எளிதாகவும் மலிவாகவும் மாறியுள்ளது. ஆனால், அந்தப் பணம் செலுத்தும் முறைக்கான செலவு என்பது ஒருபோதும் இலவசமாக இருந்ததில்லை.


உதாரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களை (currency notes) அச்சிட ஆண்டுதோறும் சுமார் ரூ. 5,000 கோடியைச் செலவிடுகிறது. அதேபோல, கட்டணம் செலுத்தும் அட்டைகளுக்கான (payment cards) செலவுகளை அவற்றை வழங்கும் நிறுவனங்களே ஏற்கின்றன. பின்னர், அந்தச் செலவு பயனர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகள், பற்று அட்டைகளின் (Debit Card) வருடாந்திர பராமரிப்புக்காக 2021-22-ல் ரூ. 3,905 கோடியை வசூலித்த நிலையில், 2025-26-ல் அந்தத் தொகை ரூ. 7,564 கோடியாக அதிகரித்துள்ளது.


யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான செலவுகளையும் வங்கிகள் மற்றும் பிற நிதிச் சேவை நிறுவனங்களே ஏற்கின்றன. ஆண்டுதோறும் ரூ. 20,000 கோடி வரைகூட இருக்கக்கூடிய இந்தச் செலவுக்கான ஈடுபாட்டைப் பெற பல ஆண்டுகளாக முயன்று வந்த நிலையில், இறுதியாக அவர்களின் கோரிக்கை நிறைவேறக்கூடும்.


செவ்வாய்க்கிழமையன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா-2026' ஐ (The Taxation and Other Laws (Amendment) Bill) அறிமுகப்படுத்தினார். 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம்-2007' இல் (Payment and Settlement Systems Act) முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள், யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களை அனுமதிக்கக்கூடும்.


சாத்தியமான யுபிஐ கட்டணங்கள்


குறிப்பிடத்தக்க வகையில், அனைத்து யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) பரிவர்த்தனைகளுக்கும் 'வணிகர் தள்ளுபடி விகிதம்' (Merchant Discount Rate (MDR)) விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பரிவர்த்தனை செயலாக்கம், தீர்வு மற்றும் உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்ட உதவும் வகையில், பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வங்கிகளால் வணிகர்களிடம் இந்த வணிகர் தள்ளுபடி விகிதக் (MDR) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


"பெரிய வணிகர்களுக்கு, குறிப்பாக ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் மொத்த வருவாய் (turnover) கொண்டவர்களுக்கு, யுபிஐ பரிவர்த்தனைகள் மீது 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) பரிசீலிப்பது ஒரு நியாயமான அணுகுமுறையாக இருக்கும்" என்று நிதித் தொழில்நுட்ப (fintech) உள்கட்டமைப்பு தளமான 'Decentro'-வின் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைப் பிரிவு துணைத் தலைவர் ஸ்ரீதர் குண்டுகு கூறினார்.


மேலும் குண்டுகுவின் கூற்றுப்படி, யுபிஐ பரிவர்த்தனைகள் மீதான 0.3-0.6% வணிகர் தள்ளுபடி விகிதமானது (MDR), "மதிப்பிடப்பட்ட ஒட்டுமொத்தச் செயல்பாட்டுச் செலவுடன் (ecosystem cost) ஏறக்குறைய ஒத்துப்போகிறது". அதனால், இது லாபத்தை ஈட்டுவதற்குப் பதிலாக செலவுகளை மீட்டெடுக்க மட்டுமே உதவும்.


வங்கி தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனமான ஸீட்டாவின் (Zeta) வாடிக்கையாளர் வெற்றி, உத்தி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் மூத்த துணைத் தலைவரான மெஹுல் மிஸ்ட்ரி போன்ற மற்ற நிறுவனர்கள், வேறுபட்ட புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளனர். மிஸ்ட்ரியின் கூற்றுப்படி, தற்போதைய விவாதங்கள் யுபிஐ (UPI) கட்டணங்களுக்கு 0.05-0.07% என்ற குறைந்தளவிலான வணிகர் தள்ளுபடி விகிதத்தைச் (MDR) சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இது ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ. 1 கோடி முதல் 1.5 கோடி வரை மொத்த விற்பனை (turnover) செய்யும் வணிகர்களுக்கானது, ரூ. 50 கோடிக்கு அல்ல, இது ஒரு சிறிய கட்டணம் என்றாலும், வணிகர் மொத்த விற்பனை (turnover) வரம்பு குறைவாக உள்ளது.


இப்புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், பற்று அட்டைகளுக்கு 1-3% வணிகர் தள்ளுபடி விகிதமும் (MDR), பற்று அட்டைகளுக்கு பரிவர்த்தனை மதிப்பில் 0.9% வரையும் விதிக்கப்படுகிறது. இந்த முரண்பாட்டையும் சரிசெய்ய வேண்டும்.


"அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற பெரிய வணிகர்கள் ஏற்கனவே விசா/மாஸ்டர்கார்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) செலுத்துகின்றனர். அதே வணிகர்களுக்கான காலவரையற்ற யுபிஐ விலக்கு என்பது, அதில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்குப் பதிலாக வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களால் (Payment Service Provider (PSP)) நிதியளிக்கப்படும், ஒரே வழித்தடத்திற்கான ஒரு கட்டமைப்பு மானியமாகும்," என்று டெசென்ட்ரோவின் குண்டுகு கூறினார்.


முக்கியமாக, யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) கட்டணங்கள் மீதான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) என்பது ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படலாம். இது ஒரு முக்கியமான அம்சம். ஏனெனில், 2025-26-ஆம் ஆண்டில், தனிநபரிலிருந்து வணிகருக்கு (P2M) மேற்கொள்ளப்பட்ட யுபிஐ கட்டணங்களில் 4% மட்டுமே ரூ. 2,000-க்கும் அதிகமாக இருந்தன. ஆனால், இந்த 4% பரிவர்த்தனைகள் மொத்த யுபிஐ கட்டண மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை வகித்தன.


2025-26 ஆம் ஆண்டில், ரூ. 314 லட்சம் கோடி மதிப்பிலான 24,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, பெரும்பான்மையான யுபிஐ கட்டணங்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்.


தற்போது, ​​'ரூபே பற்று அட்டைகள் (RuPay Debit Card) மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை (P2M) ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகைத் திட்டம்' மூலம், சிறிய வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ. 2,000 வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கி வருகிறது. வழங்கப்படும் ஊக்கத்தொகை பரிவர்த்தனை மதிப்பில் 0.15% வரை மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது வங்கிகள், கட்டணச் சேவை வழங்குநர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலி (app) வழங்குநர்கள் இடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரூ. 20,000 கோடி இடைவெளி


இந்தக் கட்டணங்கள் எந்தெந்த உள்கட்டமைப்புச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுகின்றன?


மொபைல் செயலி, அதை உருவாக்குதல் மற்றும் அதற்கான வாடிக்கையாளர் சேவை ஆகியவை இதில் அடங்கும்.  மற்றொரு செலவு பயனர்களுக்கான வாடிக்கையாளர் ஆதரவு சேவையாகும். இதில் பரிவர்த்தனைகளை அங்கீகரித்தல், கணக்குச் சரிபார்ப்பு (reconciliation) மற்றும் தீர்வு காணுதல் (settlement) ஆகியவை அடங்கும். பிற செலவுகளைப் புரிந்துகொள்வது எளிது. அதாவது, இணையப் பாதுகாப்பு (cybersecurity), வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு (KYC) நடைமுறைகள், கிளவுட் சேமிப்பு (cloud storage), பேரிடர் மீட்பு அமைப்பு (disaster recovery systems), மோசடி கண்டறிதல், தகராறு தீர்வு, தொடர்ச்சியான வலைப்பின்னல் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அறிக்கையிடல் போன்றவை இதில் அடங்கும்.


இதற்கெல்லாம் கட்டணச் சேவைத் துறை (payments industry) எவ்வளவு செலவிடுகிறது? இது குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லையென்றாலும், Zeta நிறுவனத்தைச் சேர்ந்த மிஸ்ட்ரி (Mistry), யுபிஐ (UPI) மற்றும் ரூபே பற்று அட்டை (RuPay Debit Card) உள்கட்டமைப்பை இயக்குவதற்கான ஆண்டுச் செலவு "குறைந்தது ரூ. 10,000 கோடியாக இருக்கலாம்" என்று துறைசார் மதிப்பீடுகள் தெரிவிப்பதாகக் கூறினார்.


மிஸ்ட்ரியின் இந்த மதிப்பீடு ஒரு குறைவான மதிப்பீடாக (conservative estimate) இருக்கலாம்.


நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் (Standing Committee on Finance) மார்ச் மாத அறிக்கையின்படி, 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் மேற்கூறிய அரசு ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மானியமானது, "டிஜிட்டல் கட்டணச் சேவைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே" ஆகும். குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளில் ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.8,730 கோடியை வழங்கியது. இத்தொகை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைத் துறைக்கு ஏற்பட்ட செலவில் 11% மட்டுமே என்றால், மொத்த ஆண்டுச் செலவு ரூ.20,000 கோடிக்கும் சற்று குறைவாகவே இருக்கும்.

இந்தக் கட்டணத்தை யார் செலுத்துவது?


பெரிய அளவிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், மக்களின் பணப்பரிவர்த்தனை முறைகள் மாறுமா? வணிகர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) சுமையை வாடிக்கையாளர்கள்மீது சுமத்தினால், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் முறையை மாற்றிக்கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.


'லோக்கல் சர்க்கிள்ஸ்' (LocalCircles) நடத்திய 20,000-க்கும் மேற்பட்டோருடனான கருத்துக்கணிப்பின்படி, பெரிய வணிகர்களிடம் ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டால், 12% பேர் மட்டுமே தொடர்ந்து யுபிஐ-ஐப் பயன்படுத்துவதாகக் கூறினர். ரூ. 3,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ​​இந்த விகிதம் மேலும் குறைந்து 2%-ஆக இருந்தது.


புதன்கிழமையன்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியது போல, அதற்கான செலவை யாராவது ஒருவர்தான் ஏற்க வேண்டும். "இறுதியில், ஏதோ ஒரு வகையில் நுகர்வோர் தான் அதற்கான கட்டணத்தைச் செலுத்துகிறார்கள். அது அதே நுகர்வோராக இல்லாமல் பரந்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம், அதனால் அது நேரடியாகத் தெரிவதில்லை... எப்படியாயினும், அந்தச் செலவு ஏற்கனவே மாற்றப்படுகிறது. அது 'பயன்படுத்துபவரே கட்டணம் செலுத்தும்' (user-pays) கொள்கையின் அடிப்படையில் நேரடியாக இல்லாமல் இருக்கலாம்."


Original articles: Why UPI payments to large retailers could attract a fee? -Siddharth Upasani

Share: