இந்தியாவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். - ஹரித் கே. சதுர்வேதி

 இந்தியாவில், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னரே புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. அந்த நிலையை அடையும்போது, ​​நோயை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன.


இந்தியா முழுவதும் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்கள் (oncology clinics) தினமும் ஒரு வேதனையான யதார்த்தத்தை எதிர்கொள்கின்றன. 70%-க்கும் அதிகமான நோயாளிகள் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலைகளில் சிகிச்சை மிகவும் சிக்கலானதாகவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதே சமயம் நோயைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவும் உள்ளது. கடந்த இருபதாண்டுகளாக, உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்குவதிலும், நவீன அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சைகளை (systemic treatments) விரிவுபடுத்துவதிலும் இந்தியா கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. இருப்பினும், பெரும்பாலான நோயாளிகள் மிகத் தாமதமாகவே வருவதால், இந்த முன்னேற்றங்களால் முழுமையான பலனைப் பெற முடிவதில்லை.


இந்தச் சவாலுக்கான தீர்வு, நோயின் ஆரம்ப கட்டத்திலேயே (முன்கூட்டியே) கவனம் செலுத்துவதில் உள்ளது.


இந்தியாவில், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு அறிகுறிகள் தீவிரமடைந்த பின்னரே புற்றுநோய் பெரும்பாலும் கண்டறியப்படுகிறது. அந்த நிலையை அடையும்போது, ​​நோயை முழுமையாகக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்படுகின்றன. இதன் தாக்கம் உடல்நலம் சார்ந்த விஷயங்களைத் தாண்டிச் செல்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர், அதிகப்படியான மருத்துவச் செலவுகளை எதிர்கொள்கின்றனர். எனவே, நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் என்பது ஒரு மருத்துவப் பிரச்சனை மட்டுமல்ல, அது பல குடும்பங்களை வறுமைக்கும் தள்ளுகிறது.


மேலும், ஜப்பானில் நுரையீரல் புற்றுநோய்க்கான சாத்தியம், பொதுவாக ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் சுமார் 33%-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் அது வெறும் 4% மட்டுமே உள்ளது. பொதுவாகக் காணப்படும் பிற புற்றுநோய் வகைகளிலும் இதே போன்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த இடைவெளிகளுக்குச் சிகிச்சையின் தரத்தில் உள்ள வேறுபாடுகள் மட்டுமே காரணமல்ல; நோயாளிகள் எந்த நிலையில் மருத்துவச் சிகிச்சையை நாடுகிறார்கள் என்பதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, பல சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு மிகத் தாமதமாகவே நோயைக் கண்டறியப்படுவது அனைத்து வகையிலும் மோசமான விளைவையே ஏற்படுத்துகிறது.


அடிப்படை மாற்றத்தின் தேவை


இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான சவால்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 15.6 லட்சம் (1.56 மில்லியன்) புதிய புற்றுநோய் பாதிப்புகளும், 8,74,000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மரணங்களும் பதிவாகியுள்ளன. புற்றுநோய் வருவதற்கான வாழ்நாள் ஆபத்து தேசிய அளவில் சுமார் 11% ஆகவும், சில வடகிழக்கு மாநிலங்களில் 20%-க்கு அதிகமாகவும் உள்ளது. இந்தியாவில், மக்கள்தொகையின் முதுமை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் தேசிய புற்றுநோய் தடுப்பு உத்தியில் அடிப்படை மாற்றம் ஏற்படாத வரை, இந்தப் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.


இதற்கான முதல் படி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரங்களாக மட்டும் பார்க்காமல், வாழ்நாள் முழுவதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பொது சுகாதார நடவடிக்கையாக மறுவரையறை செய்வதாகும். ஏறக்குறைய பாதி அளவு புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்க முடியும். இருப்பினும், பெரியவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் போதிய பலனைத் தருவதில்லை. ஏனெனில், வாழ்க்கை முறை சார்ந்த பழக்கவழக்கங்கள் மிக இளம் வயதிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. ஒருமுறை பழக்கவழக்கங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டால், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் அவற்றைச் சரிசெய்வது மிகவும் கடினம். எனவே, சுகாதாரக் கல்வி பள்ளிகளிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். அங்கு கணிதம் அல்லது சமூக அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் 'வாழ்க்கைத் திறன்களுக்கும்' (life skills) அளிக்கப்பட வேண்டும். இத்தகைய வாழ்க்கைத் திறன்கள் புற்றுநோயைத் தடுப்பது மட்டுமின்றி, இதயம், நரம்பு மண்டலம், இரத்த நாளங்கள் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்ற பிற முக்கிய உடல்நலப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கும் உதவும். இக்கல்வியானது உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த நலம், போதைப் பழக்கங்கள், உணவுமுறை, தடுப்பூசிகள், நிதிசார் அறிவு மற்றும் குடும்பம், சமூகம் மற்றும் நாட்டின் மீதான பொறுப்புகள் என அனைத்து அம்சங்களையும் முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


இரண்டாவது படி, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதை உறுதிசெயவதாகும். மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு மருத்துவப் பரிசோதனை தேவை என்ற பொது விழிப்புணர்வு, நோயறிதலில் ஏற்படும் தாமதங்களைக் கணிசமாகக் குறைக்கும். இருப்பினும், அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு மட்டும் போதுமானதல்ல. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே புற்றுநோயைக் கண்டறிவதற்கான நமது மிக சக்திவாய்ந்த கருவியாகப் பரிசோதனையே விளங்குகிறது. சமீப காலம் வரை, ஒழுங்கமைக்கப்பட்ட பரிசோதனையானது பெரும்பாலும் கருப்பை வாய் (cervical), மார்பகம் (breast) மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் (prostate cancer) போன்ற புற்றுநோய்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. அறிவியல் முன்னேற்றங்கள் தற்போது புற்றுநோய் பரிசோதனையின் வரம்பை விரிவுபடுத்துகின்றன. இரத்த அடிப்படையிலான பல்வகை புற்றுநோய் ஆரம்பநிலைக் கண்டறிதல் (Multi-Cancer Early Detection (MCED)) சோதனைகள், ஒரே ஒரு இரத்த மாதிரியின் மூலம் பெருங்குடல், நுரையீரல், கல்லீரல், கணையம், கருப்பை, இரைப்பை, உணவுக்குழாய், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பைப் புற்றுநோய்கள் உட்பட பல வீரியம் மிக்க கட்டிகளிலிருந்து வரும் உயிரியல் சார்ந்த குறியீடுகளைக் கண்டறியும் திறனைக் கொண்டுள்ளன.




இந்தத் தொழில்நுட்பங்கள் மக்கள் மத்தியில் பரவலாகச் செயல்படுத்துவதற்கு இன்னும் கவனமான மதிப்பீடு தேவைப்பட்டாலும், அவை புற்றுநோய் ஆராய்ச்சியில் மிகவும் நம்பிக்கைக்குரிய எல்லைகளில் ஒன்றாக விளங்குகின்றன. மேலும், இவை இந்தியாவில் ஒருமுகப்படுத்தப்பட்ட அங்கீகாரத்திற்குத் தகுதியானவை.


இந்தியாவுக்கான எதிர்காலத் திட்டம்


இந்தியா தனது சொந்த சுகாதாரத் தேவைகளுக்கும் யதார்த்தங்களுக்கும் ஏற்ற தீர்வுகளை உருவாக்க வேண்டும். மிகப்பெரிய புவியியல் மற்றும் சமூகப் பொருளாதாரப் பன்முகத்தன்மை கொண்ட 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டிற்கு, ஒரே ஒரு மையப்படுத்தப்பட்ட பரிசோதனைத் திட்டத்தால் திறம்பட சேவை செய்ய முடியாது. மாறாக, சமூக சுகாதாரப் பணியாளர்கள், டிஜிட்டல் இடர் மதிப்பீடு, செயற்கை நுண்ணறிவு, மொபைல் நோயறிதல் சேவைகள் மற்றும் முதன்மை சிகிச்சையை புற்றுநோய் மையங்களுடன் இணைக்கும் வலுவான பரிந்துரை வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கட்டமைப்புச் சார்ந்த பரிசோதனை மாதிரி நமக்குத் தேவை.


ஊக்கமளிக்கும் விதமாக, முக்கியமான அடித்தளங்கள் ஏற்கனவே இடப்பட்டு வருகின்றன. 20,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளின் விவரங்களைக் கொண்ட ஒரு பெரிய இமேஜிங் பயோபேங்கின் (large imaging biobank) வளர்ச்சிக்கு நிதி-ஆயோக் ஆதரவளிக்கிறது. இத்தகைய தரவுத் தொகுப்புகள், சந்தேகத்திற்கிடமான கட்டிகளைக் கண்டறிவதிலும், சிறப்பு நிபுணர் மதிப்பீடு தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பதிலும் களப்பணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும்.


தேசிய சுகாதார ஆராய்ச்சிக் கொள்கை-2026-ன் (National Health Research Policy) வரைவு, இந்த மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவின் சுகாதாரச் சுமைக்கு அதிகம் பங்களிக்கும் நோய்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தக் கொள்கையானது வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியில் இருந்து செயலாக்க அறிவியலை நோக்கிய ஒரு வரவேற்கத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த அணுகுமுறை, மலிவு விலை பரிசோதனைத் தொழில்நுட்பங்கள், இடர் முன்கணிப்பு மாதிரிகள், டிஜிட்டல் சுகாதாரத் தளங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு சுகாதார அமைப்புகளில் புற்றுநோயைக் கண்டறிவதை மேம்படுத்தும் செயலாக்க ஆராய்ச்சி ஆகியவற்றில் புதுமைகளை ஊக்குவிக்க வேண்டும்.


புற்றுநோய் சிகிச்சையின் முன்னேற்றத்தை, நோயின் முற்றிய நிலைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளின் நுட்பத்தை மட்டும் கொண்டு இந்தியா அளவிடக்கூடாது. முற்றிய நிலையை அடைவதற்கு முன்பே கண்டறியப்படும் புற்றுநோய்களின் எண்ணிக்கையே வெற்றியின் உண்மையான அளவுகோலாகும். மேலும் அந்த வெற்றிக்கு, அரசு நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக சுகாதார வழங்குநர்கள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைந்த கூட்டாண்மை தேவைப்படும்.


டாக்டர் ஹரித் கே. சதுர்வேதி, அப்பல்லோ ஆன்காலஜி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மருத்துவத் தலைவர் ஆவார்.


Original articles: India’s cancer focus must shift to early detection -Harit K. Chaturvedi

Share: