இந்தியாவில் சுமார் 56% வாகனங்களுக்குக் காப்பீடு இல்லை : 'கட்டாய' வாகனக் காப்பீடு (Mandatory Motor Insurance) குறித்து உச்சநீதிமன்றம் கூறியது என்ன? - வினீத் பல்லா

 மூன்றாம் தரப்பு மோட்டார் வாகனக் காப்பீட்டை (third-party motor insurance) கட்டாயமாக்கும் 'மோட்டார் வாகனச் சட்டம், 1988'-ன் (Motor Vehicles Act) பிரிவு 146-ஐ முறையாகப் பின்பற்றாதது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


இந்தியச் சாலைகளில் காப்பீடு இல்லாமல் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரும் நடைமுறையைச் சீரமைக்கவும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. டிசம்பர் 2024-ல் வெளியான நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் (Standing Committee on Finance) அறிக்கையின்படி, "இந்தியச் சாலைகளில் இயங்கும் சுமார் 56% வாகனங்கள் (அதாவது 16.54 கோடி வாகனங்கள்) காப்பீடு இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், போக்குவரத்து அமலாக்க நடவடிக்கைகளில் வாகனக் காப்பீட்டுத் தகவல்களைத் தொழில்நுட்பரீதியாக ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், குடிமக்களுக்கு வாகனக் காப்பீடு விற்பனை செய்யப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


மூன்றாம் தரப்பு மோட்டார் வாகனக் காப்பீட்டை (third-party motor insurance) கட்டாயமாக்கும் 'மோட்டார் வாகனச் சட்டம், 1988'-ன் பிரிவு 146-ஐ முறையாகப் பின்பற்றாதது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட சட்டப் போராட்டங்களுக்குள் தள்ளுகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்பது, விபத்தின்போது மற்றவர்களுக்கு ஏற்படும் காயம், உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் ஆகியவற்றிற்கான வாகன உரிமையாளரின் நிதிப் பொறுப்பை ஈடுசெய்கிறது. அதேவேளையில், உரிமையாளரின் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதத்தை இது உள்ளடக்காது.


"கட்டாயக் காப்பீட்டு முறையின் நோக்கம்... சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல, அவர்கள் நீண்ட சட்டப் போராட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும்," என்று நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி பி.கே. மிஷ்ரா ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் சார்பில் எழுதப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாகனங்களுக்குக் காப்பீடு இருப்பதன் முக்கியத்துவத்தை நீதிமன்றம் வலியுறுத்தியதுடன், வாகனங்களுக்குக் காப்பீடு இல்லாதபோது, ​​பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ நியாயமான காலத்திற்குள் போதுமான இழப்பீட்டைப் பெறுவதற்கான வழிமுறைகள் இல்லாமல் போகின்றன என்று அது கூறியது. "விபத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தாலோ அல்லது நிரந்தர ஊனத்திற்கு ஆளானாலோ, அக்குடும்பத்தின் மீதான நிதிச் சுமை கணிசமாக அதிகரிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் இன்னும் தீவிரமானதாக அமைகிறது."


"இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக நான்கு லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நிகழ்கின்றன" என்றும், அவற்றில் 22% விபத்துகளில் காப்பீடு இல்லாத வாகனங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்றும் அரசுத் தரவுகளை மேற்கோள் காட்டி நீதிமன்றம் குறிப்பிட்டது.



கட்டாய உத்தரவுகள்


இச்சட்டத்தின்கீழ் உள்ள விதிமுறைகளைச் சிறப்பாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய, நீதிமன்றம் பல கட்டாய உத்தரவுகளைப் பிறப்பித்தது. மாநிலக் காவல் துறையினருக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களின் இணையவழித் தரவுத்தளமான மத்திய 'வாகன்' (VAHAN) இணையதளம் மற்றும் காப்பீட்டுத் தகவல் பணியகத்துடன் (Insurance Information Bureau) இணைக்கப்பட்ட கையடக்கக் கருவிகள் அல்லது பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் வழங்கப்பட வேண்டும். இது, "வாகனங்களின் நிகழ்நேரக் காப்பீட்டு நிலையை அதிகாரிகள் கண்காணிக்கவும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கவும்" உதவும் என்று நீதிமன்றம் கூறியது.


மேலும், காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்குத் தானியங்கி மின்னணு அபராதங்களை வழங்குவதற்காக, நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரக் கேமராக்களை, காப்பீட்டுத் தரவுத்தளங்கள் மற்றும் 'வாகன்' இணையதளத்தின் தரவுகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டது.


புதிய வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீட்டு (third-party insurance) கட்டாயக் கால அளவையும் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவு கார்களுக்கு மூன்று ஆண்டுகளையும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளையும் நிர்ணயித்திருந்த நிலையில், புதிய கார்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும், புதிய இருசக்கர வாகனங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு வாங்கப்பட வேண்டும் என்று தற்போது அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தேவையான வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிடுமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நுகர்வோர் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு உதவும் வகையில், தனியார் வாகனக் காப்பீட்டிற்கு நான்கு அடுக்குகள் கொண்ட சீரான கட்டமைப்பை நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது. இதில் அடிப்படை கட்டாய மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு, வாகனத்தில் பயணிப்பவர்கள் அல்லது பின் இருக்கை பயணிகளுக்கான விருப்பத் தேர்வு பாதுகாப்பு (optional cover), தனிநபர் விபத்து பாதுகாப்பு மற்றும் வாகனத்தின் சொந்த சேதத்திற்கான பாதுகாப்பு (own-damage cover) ஆகியவை அடங்கும். காப்பீட்டு நிறுவனங்கள் இனி காப்பீட்டை வாங்கும் நேரத்தில் "வாடிக்கையாளர் விருப்பத் தேர்வு படிவம்" (customer option form) மற்றும் "நுகர்வோர்-நட்பு வாடிக்கையாளர் தகவல் தாள்" (consumer-friendly customer information sheet) ஆகியவற்றை வழங்க வேண்டும்.


விபத்து இழப்பீடு கோரிக்கைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களான 'மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயங்களில்' (Motor Accident Claims Tribunals) நிலுவையில் உள்ள பழைய விபத்து வழக்குகள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 2022 அல்லது அதற்கு முந்தைய காலத்திலிருந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர, விரிவான விபத்து அறிக்கைகளை "உடனடியாக தாக்கல் செய்யவும்", சாட்சிகளை ஆஜர்படுத்த உதவவும் மாநில காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


முன்மொழியப்பட்ட முன்னோடித் திட்டங்கள்


இந்தக் கட்டாய வழிகாட்டுதல்களுடன் சேர்த்து, உச்சநீதிமன்றம் இரண்டு முன்னோடித் திட்டங்களையும் முன்மொழிந்தது.


முதலாவதாக, வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை செல்லுபடியாகும் காப்பீட்டு நிலையுடன் (valid insurance status) இணைக்கும் வகையிலான ஒரு முன்னோடித் திட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்குமாறு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்திடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்த முன்மொழியப்பட்ட அமைப்பின்கீழ், செல்லுபடியாகும் காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு "பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் மறுக்கப்படும்", இத்தகைய நடவடிக்கை காப்பீடு பெறுவதை ஊக்குவிக்கும் ஒரு வலுவான காரணியாக அமையும் என்று நீதிமன்றம் கருதுகிறது.




இரண்டாவதாக, குடிமக்கள் தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் காப்பீட்டு நிலையைச் சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு முன்னோடித் திட்டத்தை நீதிமன்றம் பரிந்துரைத்தது. இது "காப்பீடு இல்லாத வாகனங்கள் குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க உதவும்".


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை அடைந்தது எப்படி?


இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட வழக்கு, 1996-ம் ஆண்டு நடந்த ஒரு சாலை விபத்து தொடர்பான தகராறிலிருந்து உருவானது. டி. ராமு (T Ramu) என்பவர் மாருதி 800 காரில் தனது கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​கவனக்குறைவாக ஓட்டப்பட்ட லாரி ஒன்று அவரது காரின் பின்புறத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். 2009-ம் ஆண்டில், கார் உரிமையாளரின் தனிப்பட்ட ஆபத்துக்கான பாதுகாப்பிற்கு கூடுதல் சந்தா (காப்பீட்டுக் கட்டணம்) எதுவும் செலுத்தப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி, தீர்ப்பாயம் இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது. அந்தக் குடும்பம் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அது 2024-ல் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது. அந்த வாகனத்தில், உரிமையாளர் பயணியாகப் பயணம் செய்வதையும் உள்ளடக்கிய ஒரு "விரிவான காப்பீட்டுத் திட்டம்" (comprehensive insurance policy) இருந்ததைக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், ரூ.10,00,500 இழப்பீடு வழங்கியது. காப்பீட்டு நிறுவனம் இதை உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்தது.


இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், "மோட்டார் வாகன விபத்து கோரிக்கைகள் தொடர்பான விஷயங்களில், நீதிமன்றங்கள் மிக நுட்பமான அணுகுமுறையைக் கையாளக்கூடாது" என்று செவ்வாயன்று தீர்ப்பளித்து, காப்பீட்டு நிறுவனத்தின் பொறுப்பை உறுதி செய்தது.


Original articles: Nearly 56% of Indian vehicles uninsured: What SC said about ‘mandatory’ motor insurance - Vineet Bhalla

Share: