இயற்கை சார்ந்த தீர்வுகள் எவ்வாறு வேளாண்மையை காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அதிகத்திறன் கொண்டதாக மாற்றக்கூடும். -அபினவ் ராய்

 காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மை ஆகியவை, வேளாண் அமைப்புகளின் மீள்திறனை மேம்படுத்தும் நிலைத்தன்மை கொண்ட அணுகுமுறைகளாக உருவெடுத்துள்ளன. காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக இந்தியா தொடங்கியுள்ள முக்கிய முன்னெடுப்புகள் யாவை? இது போன்ற நடவடிக்கைகள் எவ்வாறு காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறனை வலுப்படுத்துவதோடு, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன?


அதிகரித்து வரும் வெப்பநிலை, சீரற்ற பருவமழை மற்றும் அடிக்கடி ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகியவற்றின் காரணமாக பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், வேளாண்த்துறை இரண்டு வகையான சவாலை எதிர்கொள்கிறது. முதலாவதாக, அறுவடைத்திட்டங்கள் மற்றும் பயிர் விளைச்சலைப் பாதிப்பதன் மூலம், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு வேளாண்மை மிகவும் உணர்திறன் கொண்டதாக உள்ளது. இரண்டாவதாக, பசுமை இல்ல வாயு வெளியேற்றம், பயிர் கழிவுகளை எரித்தல் மற்றும் வனப்பகுதிகளை அழித்தல்  ஆகியவற்றின் மூலம் வேளாண் துறையே பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.


இந்த சவால்களை எதிர்கொள்ள, இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions (NbS)) மற்றும் காலநிலை மாற்றத்தைத்தாங்கும் வேளாண்மை (Climate Resilient Agriculture (CRA)) ஆகியவை, வேளாண் அமைப்புகளின் மீள்திறனை மேம்படுத்தி, எதிர்கால சந்ததியினரின் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், மண் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும் ஒரு நிலையான அணுகுமுறையாக உருவெடுத்துள்ளன.


காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய  வேளாண்மையை உருவாக்குதல்


காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு, ஒளிச்சேர்க்கை (Photosynthesis) செயல்முறையைப் பாதிப்பதன் மூலமும், பூச்சிகளின் பரவல் மற்றும் எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமும், பயிர்களின் செயல்திறனை குறைக்கக்கூடும். உரப்பயன்பாட்டுத்திறன் (Fertiliser Use Efficiency (FUE)), மண் வளம் மற்றும் பயிர் மகசூல் போன்றவற்றையும் பாதிக்கிறது.


அதிக வெப்பநிலை மற்றும் கார்பன்-டை-ஆக்சைடின் (CO₂) அதிகரிப்பது, தாவர வளர்ச்சியைப் பாதிக்கலாம், பூச்சிகளின் பரவல் மற்றும் வாழ்க்கைச் சுழற்சிகளை விரிவுபடுத்தலாம், ஊட்டச்சத்துக்களை விளைச்சலாக மாற்றும் தாவரங்களின் திறனைக் குறைக்கலாம். மேலும், மண்ணின் ஈரப்பதத் தன்மை மற்றும் ஊட்டச்சத்து சமநிலையின்மையை மோசமாக்கலாம்.


காலநிலை தொடர்பான இது போன்ற அபாயங்களைக் குறைப்பதற்கு, காலநிலையைத் தாங்கக்கூடிய வேளாண் நடைமுறைகள் தேவைப்படுகின்றன. காலநிலையைத் தாங்கக்கூடிய வேளாண்மை (Climate-resilient agriculture) நடைமுறை என்பது, மாறிவரும் காலநிலை நிலைகளுக்கு ஏற்ப வேளாண் அமைப்பைத் தகவமைத்துக்கொள்ளவும், காலநிலையால்  ஏற்ப்படும் சிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும் வேளாண் நடைமுறைகளைக் குறிக்கிறது.


இந்த நடைமுறைகள், தேவையான பயிர்கள் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற வகைகளைத் தேர்வு செய்தல், விதைப்புக்காலம் மற்றும் பயிர்க்கால அளவை மாற்றியமைத்தல், சரியான நடவு முறைகளைக் கையாளுதல், வேளாண் காடு வளர்ப்பு, ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) பயன்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் திறமையான பயன்பாடு, அதனுடன் மேம்படுத்தப்பட்ட நீர் மற்றும் மண் மேலாண்மை போன்ற நடவடிக்கைகள் அடங்கும்.


மேலும், பருவநிலை மாற்றங்களைத் தாங்கக்கூடிய வேளாண்மையானது, குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் மாநிலங்கள் போன்ற சமூக அமைப்புகளின் மீள்திறனையும், அரசு மற்றும் அமைப்புகளால் வழங்கப்படும் தொழில்நுட்ப அறிவு மற்றும் சேவைகளைப்பயன்படுத்திக்கொள்ளும்  திறனும் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.


மேலும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண்மையை ஆதரிக்கும் பல்வேறு அணுகுமுறைகளில், காலநிலை தகவமைப்பு, காலநிலை மாற்றத்தணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மீட்டமைப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையாள்வதற்கான ஒரு முக்கிய உத்தியாக இயற்கை சார்ந்த தீர்வுகள் (nature-based solutions) உருவெடுத்துள்ளன.


காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக இயற்கையைப் பயன்படுத்துதல்


வேளாண்மையில் இயற்கை சார்ந்த தீர்வுகள் என்பது பல்வேறு   நடைமுறைகளை  கொண்டுள்ளது. இவற்றின் மூன்று முக்கிய நோக்கங்கள்: காலநிலை மாற்றத்திற்குத் தகவமைத்து, உணவு உற்பத்தியைத் தாங்கும் திறனுடன் மேம்படுத்துதல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் இயற்கை வளங்களையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாத்து மேம்படுத்துதல் ஆகும். இயற்கை சார்ந்த தீர்வுகளுக்கான எடுத்துக்காட்டுகளில், மீளுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு வேளாண்மை, குறைந்த உழவு அல்லது உழவு பணிகள் இல்லாத சாகுபடி மற்றும் வேளாண் வனவியல் முறைகள் (Agroforestry), ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) போன்ற நடைமுறைகள் உள்ளன

பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, குறைந்தபட்சம் 102 நாடுகளின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் (Nationally Determined Contributions (NDCs)) உமிழ்வுக்குறைப்புத் திட்டங்களில், இயற்கை சார்ந்த தீர்வுகள் தற்போது ஒரு முக்கியப்பகுதியாக உள்ளன. 2030-ஆம் ஆண்டிற்குள் உலக வெப்பநிலை உயர்வை 2°C-க்குக் கீழ் குறைக்கத் தேவையான, செலவு குறைந்த காலநிலையில் 37 சதவீதத்தை இயற்கை சார்ந்த தீர்வுகள் வழங்கக்கூடும் என்று Proceedings of the National Academy of Sciences இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.


இதனால், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய உணவுப்பாதுகாப்பு ஆகிய ஒன்றோடொன்று இணைந்த சவால்களை எதிர்கொள்ள முற்படும் உத்திகளில், இயற்கை சார்ந்த தீர்வுகள் ஒரு முக்கியமான ஒன்றாக உருவாகின்றன.


காலநிலை மாற்றம் மற்றும் உணவுப்பாதுகாப்பு


உலக மக்கள் தொகை அதிகரித்து வருவதால், 2050-ஆம் ஆண்டிற்குள் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக 60 சதவீத உணவு தேவைப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பின்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் அல்லது பிராந்தியங்கள் காலநிலை மாற்றத்தால் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உதாரணமாக, ஆசிய-பசிபிக் பிராந்தியமானது அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் முக்கிய உணவு உற்பத்தி செய்யும் ஒரு பகுதியாகும். இந்த பிராந்தியத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் (220 கோடி பேர்) தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையே நம்பியுள்ளனர். வெப்பநிலை உயர்வு இதே வேகத்தில் தொடர்ந்தால், 2100-ஆம் ஆண்டிற்குள் தென்கிழக்கு ஆசியா தனது பயிர் உற்பத்தியில் 50 சதவீதத்தை இழக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல், தெற்கு ஐரோப்பாவில் மக்காச்சோளம் மற்றும் கோதுமை விளைச்சல் 2050-ஆம் ஆண்டிற்குள் 49 சதவீதம் வரை குறையக்கூடும். அதே, நேரத்தில் சகாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்காவில் பயிர் விளைச்சல் 2050-ஆம் ஆண்டிற்குள் 5 முதல் 17 சதவீதம் வரை குறையக்கூடும்.


எனவே, நாடுகள் இயற்கை சார்ந்த தீர்வுகளையும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண்மை  தீர்வுகளையும் அதிகளவில் செயல்படுத்தி வருகின்றன. ஐரோப்பா, ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தகவமைப்பு உத்தி, தேசிய தகவமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு கார்பன் அகற்றும் கொள்கைகள் உள்ளிட்ட கொள்கைகளின் மூலம், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வேளாண் நடைமுறைகளைச் செயல்படுத்தி வருகிறது.


அதேபோல், சீனா 2014 முதல் 2019 வரை உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு Global Environment Facility (GEF) மற்றும் உலக வங்கியின் ஆதரவுடன் காலநிலைக்கேற்ற முக்கியப்பயிர் உற்பத்தித்திட்டத்தை (Climate-Smart Staple Crops Production Project (CSSCP)) வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.


காலநிலை மாற்றத்தால் இந்திய வேளாண்மை எதிர்கொள்ளும் பாதிப்புகள்


வேளாண்மைத்துறை இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருந்து வருகிறது. வேளாண்மைத்துறை நாட்டின்  58% மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக இருப்பதுடன், 46.1% வேளாண் பணிகளை செய்துவரும் தொழிலாளர் படைக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. மேலும், நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added  (GVA)) வேளாண்மைத் துறையின் பங்கு 18% ஆகும்.


இருப்பினும், கட்டமைப்பு சார்ந்த சில காரணிகளாலும், வானிலை மற்றும் காலநிலையை அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், இந்திய வேளாண்மை காலநிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சிறிய மற்றும் சிதறிக் காணப்படும் நில உடைமைகள் இந்தப் பாதிப்பை அதிகரிக்கின்றன. இந்தியாவில் சராசரி நில உடைமை அளவு 1.08 ஹெக்டேர் மட்டுமே. மேலும், 89.4% குறு மற்றும் சிறு உழவர்கள் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர்.


மேலும், இந்தியா வேளாண்மை 60 சதவீதம் பருவமழையைச் சார்ந்ததுள்ளது. இது மொத்த உணவு உற்பத்தியில் 40 சதவீதப் பங்களிக்கிறது. எனவே, வானிலை நிகழ்வுகளை அதிகமாகச் சார்ந்திருப்பதால், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படும் துறைகளில் வேளாண்மை ஒன்றாக உள்ளது.


புவி அறிவியல் அமைச்சகம் (Ministry of Earth Sciences) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1950-களிலிருந்து இந்தியாவில் சராசரி வெப்பநிலை உயர்வு, பருவமழை அளவு குறைவு, தீவிர வெப்பநிலை மற்றும் அதிக மழை தரும் நிகழ்வுகளின் அதிகரிப்பு, வறட்சி, கடல்மட்ட உயர்வு மற்றும் கடுமையான புயல்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. இவ்வாறு மாறிவரும் காலநிலைச் சூழலில், ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருள் (biochar) ஒரு நம்பிக்கைக்குரிய இயற்கை சார்ந்த தீர்வாக கருதப்படுகிறது.


காலநிலை மாற்றத் தணிப்பு உத்தியாக ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளை (biochar) பயன்படுத்துவதற்கான வாதம்


இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம் (Indian Council of Agricultural Research (ICAR)) கூற்றுப்படி, பயோசார் என்பது பயிர் எச்சங்கள், மரக்கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களை ஆக்சிஜன் இல்லாத சூழலில், 300–500 டிகிரி செல்சியஸ் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் மெதுவாக வெப்பப்படுத்தும் (Slow Pyrolysis) முறையில் உருவாகும் கருக்கிய உயிரித்திரள் (Charred Biomass) ஆகும்.


இந்தியாவில் ஆண்டுதோறும் 350 மில்லியன் டன் வேளாண் கழிவுகள் உருவாகின்றன. இவற்றை முறையாகப் பயன்படுத்தினால், ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், ஆண்டுக்கு 18,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் முடியும்.


ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளில் அதிக அளவு கார்பன் இருப்பதால், அதை வேளாண்மையில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், மண்ணில் உள்ள நீரைத் தக்கவைக்கும் திறனை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து பயன்பாட்டுத்திறனை அதிகரிக்கவும், கார்பன் சேமிப்பை (Carbon Sequestration) அதிகரிக்க மற்றும் காலநிலை மாற்றத்தைத் குறைக்க முடியும்.


மேலும், பயிர்க் கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பதைவிட, ஆக்சிஜன் குறைவாக உள்ள சூழலில் உயிரிக் கழிவுகளை வெப்பப்படுத்தி தயாரிக்கப்படும் கார்பன் நிறைந்த கரிமப் பொருளின் (biochar) மூலம் தயாரிப்பது மிகவும் பயனுள்ள மற்றும் நிலைத்தன்மை கொண்ட மாற்று முறையாகும். இது காற்று மாசுபாடு, காற்றின் நச்சுத்தன்மை மற்றும் துகள்மாசு வெளியேற்றத்தைக் குறைக்க உதவுகிறது.   டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, பயோசார் இந்திய மண்ணில் சராசரியாக 376.11 மெகா டன் CO₂-சமமான கார்பனை சேமிக்கக்கூடியது. இதன் மூலம் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஏற்படும் பசுங்குடில் வாயு உமிழ்வில் 41–63% வரை குறைப்பு ஏற்படுத்த முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இது போன்ற காலநிலைத் தாங்குதிறன் கொண்ட மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த வேளாண் நடைமுறைகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசு, வேளாண்த் துறையில் தகவமைப்பு (Adaptation) மற்றும் தணிப்பு (Mitigation) நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு கொள்கைரீதியான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மைக்கான இந்தியாவின் கொள்கை நடவடிக்கைகள்


2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய காலநிலை மாற்ற செயல் திட்டம் (National Action Plan on Climate Change (NAPCC)), இந்தியாவின் காலநிலை மாற்றக் கொள்கைகளுக்கான விரிவான மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்குகிறது.


தேசிய காலநிலை மாற்ற செயல் திட்டத்தின்கீழ், 2014–15-ஆம் ஆண்டில் தேசிய நிலைத்த வேளாண்மை இயக்கம் (National Mission for Sustainable Agriculture  (NMSA)) தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம், மண் வளத்தை மேம்படுத்துதல், நீரை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் நிலைத்தன்மை கொண்ட வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண்மையை ஊக்குவிப்பதாகும்.


இந்த திட்டத்தின்கீழ் ஒரு சொட்டு அதிக பயிர், மானாவாரி பகுதி வளர்ச்சி, மண் ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுக்கான திட்டம் (Mission for Integrated Development of Horticulture (MIDH)), வேளாண் காடுகள் மற்றும் தேசிய மூங்கில் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மேலும், 2014-ஆம் ஆண்டு தேசிய வேளாண் வனவியல் கொள்கையை (National Agroforestry Policy) ஏற்றுக்கொண்ட முதல் நாடு இந்தியா ஆகும். இதைத்தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு தேசிய இயற்கை வேளாண்மை திட்டம் (National Mission on Natural Farming) தொடங்கப்பட்டது.


2011-ஆம் ஆண்டு, வேளாண்மை மற்றும் உழவர்கள் நல அமைச்சகம், தேசிய காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் புதுமைகள் திட்டத்தை (National Innovations in Climate Resilient Agriculture (NICRA)) என்ற முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத்திட்டம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Agricultural Research (ICAR)) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


சமீபத்தில், தேசிய காலநிலைத் தாங்குதிறன் கொண்ட வேளாண் புதுமைகள் திட்டதிட்டத்தை மேற்கொண்ட 651 வேளாண் மாவட்டங்களின் காலநிலை பாதிப்பு மதிப்பீட்டில், 310 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 109 மாவட்டங்கள் "மிக அதிக பாதிப்புக்குள்ளானவை" (Very High Vulnerability) என்றும், 201 மாவட்டங்கள் "அதிக பாதிப்புக்குள்ளானவை" (Highly Vulnerable) என்றும் வகைப்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில், அனைத்து 651 வேளாண் மாவட்டங்களுக்கும் மாவட்ட வேளாண் அவசரகாலத்திட்டங்கள் (District Agriculture Contingency Plans (DACPs)) அரசால் தயாரிக்கப்பட்டுள்ளன.


NICRA-வின் கணிப்பின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் மழை சார்ந்த நெல் மகசூல் 20%, கோதுமை மகசூல் 19.3%, கரீப் மக்காச்சோள மகசூல் 18% வரை குறையக்கூடும். அதேவேளையில், 2030-ஆம் ஆண்டுக்குள் சோயாபீன் மகசூல் 3% முதல் 10% வரை அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


2014 முதல் 2024 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் (Indian Council of Agricultural Research  (ICAR))  மொத்தம் 2,900 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் 2,661 ரகங்கள், பூச்சிகள் மற்றும் நோய்கள் போன்ற உயிரியல் அழுத்தங்கள் (Biotic Stresses) மற்றும் நீர், வெப்பநிலை, ஈரப்பதம், மண் போன்ற உயிரற்ற அழுத்தங்கள் (Abiotic Stresses) ஆகியவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தாங்கும் திறன் கொண்டவையாகும்.


சவால்கள் மற்றும் முன்னேற்றப்பாதை


இருப்பினும், அரசின் கொள்கை நோக்கங்களை களத்தில் (On-ground) திறம்பட நடைமுறைப்படுத்துவது இன்னும் சவாலாகவே உள்ளது.


காலநிலையைத்தாங்கும் பயிர் ரகங்கள், மரபணுத் திருத்தம் செய்யப்பட்ட பயிர்கள் (Genome-edited Crops), உயிர் உரங்கள் (Biofertilisers), உயிர் பூச்சிக்கொல்லிகள் (Biopesticides) மற்றும் நீர் சிக்கனமான தொழில்நுட்பங்கள்   போன்ற மேம்படுதப்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைந்த விழிப்புணர்வு, கடன் வசதிக்கான அணுகல் குறைவு, தரமான பொருட்கள் கிடைக்காத சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் ஆரம்ப கால முதலீட்டுச் செலவுகள் தடையாக உள்ளன.


இந்தக்கட்டுப்பாடுகள் குறிப்பாக குறு மற்றும் சிறு உழவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, அவர்களின் வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன்களை மேம்படுத்த அரசு நிதி ஆதரவு மற்றும் ஆரம்பகட்ட வழிகாட்டுதல் (Hand-holding Support) வழங்குவது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.


எனவே, இயற்கை சார்ந்த தீர்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரக்கூடிய வேளாண் முறைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என்பது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்துப் பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதிலும் இருந்து தொடங்குகிறது.


இதற்கு உழவர்கள், அரசு, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு இடையே கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. இது போன்ற முயற்சிகள் இந்தியாவின் 140 கோடி மக்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும், உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனை வலுப்படுத்தவும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் உதவும்.


Original articles: How nature-based solutions can make agriculture more resilient to climate change. -Abhinav Rai

Share: