உச்சநீதிமன்றத்தில் பண மசோதா தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு அதைத் தேர்வு செய்கிறது. -அபூர்வா விஸ்வநாத்

 கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு பண மசோதாவாக (Money Bill) நிறைவேற்றப்பட்டது. 2019-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்டபோதும் இதே வழிமுறையே பின்பற்றப்பட்டது.

இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட "உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026"-க்கு மாநிலங்களவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.


கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, ஒரு 'பண மசோதாவாக' (Money Bill) நிறைவேற்றப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்டபோது இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், 2018-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வழங்கப்பட்ட முக்கியமான மாறுபட்ட கருத்தில், இந்த வழியைப் பயன்படுத்துவது "அரசியலமைப்புக்குச் செய்யப்படும் துரோகம்" என்று விவரிக்கப்பட்டிருந்தது. 


இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கையில் (Statement of Objects and Reasons), உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்குவது, நீதிபதிகளின் ஊதியம், உதவி ஊழியர்கள், அதிகாரப்பூர்வ இல்லங்கள், பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளுக்கான செலவினங்களைச் சார்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக நான்கு உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உருவாக்குவது, நீதிபதிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணபலன்களுக்கான செலவை அதிகரிக்கும். ஒவ்வொரு நீதிபதிக்கும் வாடகை இல்லாத அரசு குடியிருப்பு, இல்லம் மற்றும் அலுவலகத்திற்கான தனிப்பட்ட பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும். ஊதியம், பணியாளர்கள், வாகன வசதி மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஏற்படும் தொடர் செலவு ஏறக்குறைய 10.57 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கார் வாங்குதல், அரசு குடியிருப்புகளை அலங்கரித்தல் மற்றும் பிற இதர செலவுகளுக்காக ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செலவு 3.47 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்குவதற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு ஏறக்குறைய 14.04 கோடி ரூபாய் ஆகும். 



ஒரு மசோதாவை பண மசோதா (Money Bill) என்று சான்றளிக்க முடியுமா என்ற கேள்வி, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனையில் இன்னும் நிலுவையில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினையாகும். 2023-ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், அது இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.


அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-110 ஒரு பண மசோதா என்றால் என்ன என்பதை விளக்குகிறது. மக்களவை அவைத் தலைவரின் கருத்துப்படி, வரிகள் அமைப்பது அல்லது திருத்துவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி அல்லது அவசரகால நிதியிலிருந்து பொது நிதியைப் பயன்படுத்துவது போன்ற விவகாரங்கள் தொடர்பானது எதுவோ, அதுவே ஒரு பண மசோதாவாகும்.


ஒரு பண மசோதாவை (Money Bill) மக்களவையில் (Lok Sabha) மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஒரு மசோதாவை அவைத் தலைவர் பண மசோதா என்று சான்றளித்துவிட்டால், அதற்கு மாநிலங்களவையின் (Rajya Sabha) ஒப்புதல் தேவையில்லை. உதாரணமாக, ஒன்றிய நிதிநிலைத் திட்ட அறிக்கை ஒரு பண மசோதாவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 110(1)(a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களோடு தொடர்புடைய எந்தவொரு விஷயத்தையும் பண மசோதாவாகக் கருதலாம் என்று சட்டப்பிரிவு 110(1)(g) விளக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது முந்தைய ஆட்சிக் காலங்களில் பல முக்கிய சட்டங்களைப் பண மசோதாக்களாக நிறைவேற்ற இந்த விதியைப் பயன்படுத்தியது. இருப்பினும், மாநிலங்களவையில் அந்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்குப் போதிய ஆதரவு இல்லாததாலேயே அரசு இதுபோன்ற குறுக்கு வழியில் செய்தது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன.


பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) உட்பட மூன்று முக்கியமான சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை இன்னும் ஒரு பெரிய அரசியலமைப்பு அமர்வு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இச்சட்டங்கள் "பண மசோதாக்களாக" (Money Bills) முறைப்படி நிறைவேற்றப்பட்டனவா என்பதை இந்த அமர்வு தீர்மானிக்கும். மற்ற இரண்டு சட்டங்கள், ஆதார் சட்டம் (Aadhaar Act) மற்றும் தீர்ப்பாயங்களின் பணி நிபந்தனைகளை மாற்றிய 2017-ஆம் ஆண்டின் சட்டத் திருத்தங்கள் ஆகும்.

பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் ஆதார் சட்டத்தை பெரும்பாலான அம்சங்களில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபோதிலும், 2017-ஆம் ஆண்டின் தீர்ப்பாயச் சட்டத் திருத்தங்களை அரசியலமைப்புக்கு முரணானது எனக்கூறி ரத்து செய்தது. இருப்பினும், இந்த இரண்டு வழக்குகளிலுமே, அவை பண மசோதாக்களாகச் செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட்டனவா என்ற கேள்வி அரசியலமைப்பு அமர்வின் முடிவிற்கு விடப்பட்டது.


2018-ஆம் ஆண்டு ஆதார் வழக்கு விசாரணையில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய ஒரே நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், ஆதார் சட்டத்தைப் பண மசோதாவாக (Money Bill) நிறைவேற்றியதற்காக ஒன்றிய அரசை விமர்சித்தார். அவர் இதை "அரசியலமைப்புக்குச் செய்யப்படும் துரோகம்" என்றும் "ஏமாற்று வேலை" என்றும் விமர்சித்தார். இருப்பினும், ஆதார் தொடர்பான மானியங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்படுவதால், இந்தச் சட்டத்தைப் பண மசோதாவாக வகைப்படுத்தியது சரியே என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


பின்னர், 2019-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தத் தீர்ப்பாயச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறியதோடு, இது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. அதேநேரத்தில், அந்தச் சட்டம் 'பண மசோதாவாக' (Money Bill) செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வியை, மேலும் அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.


மேலும், பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆதார் சட்டத்தை செல்லுபடியாகும் என உறுதிசெய்த, 2018-ஆம் ஆண்டைய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சரியானதா என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.


Original articles: Money Bill route pending before Supreme Court, Government chooses it to raise strength of judges. -Apurva Vishwanath

Share:

ஆர்க்டிக் சபை: இந்தியா ஏன் இதில் முக்கியத்துவம் பெற விரும்புகிறது? -ரவீணா பனேட்டா

 ஆர்க்டிக் சபையில் இந்தியா ஏன் ஒரு முக்கிய பங்கை வகிக்க விரும்புகிறது? ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள ஒரு பகுதி, இந்தியாவின் காலநிலை, பொருளாதாரம் மற்றும் உத்திசார் நலன்களில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மேலும், ஆர்க்டிக் பகுதி ஏன் உலகின் மிக முக்கியமான புவிசார் அரசியல் மண்டலங்களில் ஒன்றாக மாறி வருகிறது?


வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழு, இந்தியா ஒரு துருவப் பகுதிக்கான தூதரை (Polar Ambassador) நியமிக்க வேண்டும் என்றும், ஆர்க்டிக் சபையில் முழு உறுப்பினர் தகுதியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. இது, ஆர்க்டிக் சபையின் செயல்பாடுகளில் இந்தியா மேலும் திறம்படப் பங்கேற்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. ஆர்க்டிக் பிராந்தியத்தில் நிலப்பரப்பைக் கொண்டுள்ள 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆர்க்டிக் சபையில், இந்தியா தற்போது 13 பார்வையாளர் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த பார்வையாளர் நாடுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் கிடையாது. மேலும், இவற்றால் ஆர்க்டிக் பிராந்தியத்திற்கு நேரடியாக நிதிப் பங்களிப்பை வழங்கவோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவோ முடியாது.


2. "மற்ற நாடுகளைப் போலவே, துருவப் பகுதிகளுக்காகவே பிரத்யேகமாக இந்தியா ஓர் தூதரை நியமிப்பது மிகவும் அவசியமாகும். இத்தகைய ஒரு பதவி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் துருவப் பகுதிகளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு, துருவப் பிரச்சினைகளில் இந்தியாவின் கொள்கையை உலகிற்கு எடுத்துரைக்கவும், துருவப் பகுதி தொடர்பான உத்திகளை மேலும் திறம்பட மேற்கொள்ளவும் உதவும்." என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது. 


3. ஆர்க்டிக் பகுதியைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற, இந்தியா ரஷ்ய ஆர்க்டிக் பகுதியில் இணைந்து பணியாற்ற வேண்டும். வடகிழக்கு சைபீரியாவில் உள்ள 'சகா' (Sakha) பகுதியில் அமைந்துள்ள ‘செர்ஸ்கி’ (Chersky) ஆர்க்டிக் ஆராய்ச்சி நிலையம், உலகின் மூன்று மிகப்பெரிய ஆர்க்டிக் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் ஆர்க்டிக் உயிரியல், புவி இயற்பியல் மற்றும் வளிமண்டல இயற்பியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. மேலும், உறைந்த பிளீஸ்டோசீன் (Pleistocene) படிவுகளின்மீது அமைந்திருப்பதால், நிரந்தரப் பனிப்பகுதி பற்றிய ஆராய்ச்சிக்கு இது ஒரு சிறந்த இடமாகத் திகழ்கிறது என்று துருவ ஆராய்ச்சிக்கு பொறுப்பான புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


பிளீஸ்டோசீன் (Pleistocene) என்பது பூமியின் புவியியல் வரலாற்றில் ஏறக்குறைய 2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11,700 ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த ஒரு காலப்பகுதியாகும். இது பெரும் பனிப்பாறைகள் பூமியை மூடியிருந்த 'கடைசிப் பனிக்காலம்' (Ice Age) மற்றும் மனித இனம் வளர்ச்சி பெற்ற முக்கியமான காலகட்டத்தைக் குறிக்கிறது.


4. வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதியாக இந்தியாவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த, அரசாங்கம் பொருத்தமான ஒரு உத்தியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஆர்க்டிக் சபையில் பார்வையாளர்களாக இருக்கும் ஆசிய நாடுகளுக்கிடையே அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்த, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து ஒரு 'நான்கு முனை ஒப்பந்தத்தை' (Quadrilateral agreement) உருவாக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. 


5. மற்ற நாடுகள் செய்திருப்பதைப் போலவே, இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை வெறும் அறிவியல் ஆராய்ச்சியோடு நிறுத்திவிடாமல், புவிசார் அரசியல் மற்றும் உத்திசார் நலன்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும், மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், குளிரூட்டும் அமைப்பின் பாகங்கள் மற்றும் பிற முக்கியக் கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பான விஷயங்களும், அப்பகுதியில் நடைபெறும் தூதரக பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான பங்கைப் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


ஆர்க்டிக் சபை என்பது என்ன?


ஆர்க்டிக் சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி:


6. இது ஆர்க்டிக் நாடுகள், ஆர்க்டிக் பழங்குடியின மக்கள் மற்றும் பிற ஆர்க்டிக் பகுதியில் வாழும் மக்களுக்கு இடையே பொதுவான ஆர்க்டிக் பிரச்சனைகளில், குறிப்பாக நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்கும் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.


7. கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசுகள் 'ஒட்டாவா பிரகடனத்தில்' (Ottawa Declaration) 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி கையெழுத்திட்டதன் மூலம் ஆர்க்டிக் சபை நிறுவப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னதாக, ஆர்க்டிக் சூழலைப் பாதுகாப்பது தொடர்பான 'ஆர்க்டிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்திமுறை' (Arctic Environmental Protection Strategy  ஜூன் 1991) என்ற பிரகடனம் நடைமுறையில் இருந்தது.


8. ஆர்க்டிக் சபையின் அனைத்து முடிவுகளுக்கும் அறிக்கைகளுக்கும் இந்த எட்டு ஆர்க்டிக் நாடுகளின் ஒருமித்த கருத்தும் அவசியமாகும். இந்த எட்டு நாடுகளின் எல்லைகளும் ஆர்க்டிக் பகுதிக்குள் அமைந்திருப்பதால், அவை இப்பகுதியின் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றன. ஆர்க்டிக் பெருங்கடலையும் அதன் நீர்நிலைகளையும் சுற்றியுள்ள நிலப்பகுதிகள், அந்நாடுகளின் தேசியச் சட்டங்கள் மற்றும் சர்வதேசச் சட்டங்களின் எல்லைக்குட்பட்டவை ஆகும்.


9. ஆர்க்டிக் சபையில் பார்வையாளர் தகுதிநிலை பெற ஆர்க்டிக் அல்லாத பிற நாடுகளுக்கும், சர்வதேச அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள், உலகளாவிய மற்றும் பிராந்திய அரசு சாரா அமைப்புகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றுள் எந்த அமைப்புகள் சபையின் பணிகளுக்குப் பங்களிக்க முடியும் என்பதை இறுதியில் சபையே தீர்மானிக்கிறது. ஆர்க்டிக் சபையின் பார்வையாளர்கள் முக்கியமாக அதன் செயற்குழுக்கள் (Working Groups) நிலையில் மட்டுமே தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.


10. ஆர்க்டிக் பகுதியானது "பழங்குடியினர் உட்பட அனைத்து மக்களும், மகிழ்ச்சியாக, வளமாக, பாதுகாப்பாக மற்றும் நிலையாக வாழக்கூடிய ஒரு அமைதியான, உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான கூட்டுறவு மண்டலமாக மாற வேண்டும். மேலும், அவர்களின் உரிமைகளும் நலன்களும் மதிக்கப்பட வேண்டும்" என்பதை நோக்கியே ஆர்க்டிக் சபையின் 'உத்திசார் திட்டம் 2021-2030' (Strategic Plan 2021-2030) அதன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.


ஆர்க்டிக் பிராந்தியத்தின் இராஜதந்திர முக்கியத்துவம் என்ன?


11. ஆர்க்டிக் என்பது பூமியின் வடஎல்லைப் பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பில் சுமார் 4 சதவீத பகுதியை உள்ளடக்கியது. மேலும், இது மிகக் கடுமையான குளிர்காலம், மிகக் குறைந்த மக்கள்தொகை மற்றும் வரையறுக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இது வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்கள் சந்திக்கும் புள்ளியாகவும் உள்ளது.


12. ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகுவது உலகளாவிய காலநிலை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. அதேவேளையில், அது புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பரந்த இயற்கை வளங்களை எளிதில் கைப்பற்றும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கும். 1991-ஆம் ஆண்டின் 'மாட்ரிட் நெறிமுறை' (Madrid Protocol) மூலம் அண்டார்டிகாவின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆர்க்டிக் பகுதிக்கு அதுபோன்ற எவ்விதப் பாதுகாப்பும் இல்லை.


13. ஆர்க்டிக் பகுதியில் அதிகளவில் முக்கிய கனிமங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளன. பனி உருக உருக, இந்தப் பகுதியை அணுகுவது எளிதாகிறது; இதனால் அங்கிருந்து வளங்களை வெட்டி எடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. மேலும், கடல் பனி உருகுவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான கடல் வழிப்பாதை குறைகிறது. இது ஆர்டிக் பகுதியை பொருளாதாரரீதியாகவும், உத்திரீதியாகவும் மிக முக்கியமான இடமாக மாற்றுகிறது.

14. சிறந்த வழிகாட்டி அமைப்புகள் (navigation systems) மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகள், ஒரு காலத்தில் பனிப்பாறைகளால் அடைக்கப்பட்டிருந்த கடல் வழிகளை இப்போது திறந்துவிட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு வழிதான் 'வடக்கு கடல் வழி' (Northern Sea Route (NSR)). இது 'வடகிழக்கு பாதை' (Northeast Passage (NEP)) என்றும் அழைக்கப்படுகிறது. இது பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக கடல் பனியின் அடர்த்தியும் பரப்பளவும் குறைந்துள்ளதால், இந்த வழியைப் பயன்படுத்துவது மேலும் சாத்தியமாகி உள்ளது.


15. எரிசக்தி பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளும், முக்கிய  தனிமங்களுக்கான தேவையின் வளர்ச்சியும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் இதுவரை பெருமளவில் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்கள் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பல நாடுகளை ஊக்குவிக்கின்றன.


— உதாரணமாக, சீனா ஓர் ஆர்க்டிக் நாடு இல்லை என்றாலும், தன்னை ஆர்க்டிக்கிற்கு அருகில் உள்ள நாடு என்று அழைத்துக்கொள்கிறது. ஆர்க்டிக் கடல் வழிப்பாதைகளை மேம்படுத்துவதற்காக, 2018-ஆம் ஆண்டில் சீனா தனது 'Belt and Road' திட்டத்தின் (Belt and Road Initiative (BRI)) ஒரு பகுதியாக 'துருவ பட்டுப் பாதை' (Polar Silk Road) என்ற திட்டத்தைத் தொடங்கியது. ஆர்க்டிக் பகுதியில் அரசியல்ரீதியான பிளவுகளும் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து வரும் நிலையில்தான், சீனாவின் இந்த ஈடுபாடுகளும் வளர்ந்து வருகின்றன.



இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது?


16. ஆர்க்டிக் பிராந்தியத்துடனான இந்தியாவின் தொடர்பு, வெறும் பார்வையாளராகத் தொடங்கி, இன்று தீவிரமாகப் பங்கேற்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. வேகமாக மாற்றமடைந்து வரும் ஆர்க்டிக் பகுதியில், இந்தியாவின் அறிவியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்த ஆர்வங்கள் அதிகரித்து வருவதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி பாரிஸில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வால்பார்ட் ஒப்பந்தத்தில் (Svalbard Treaty) கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், ஆர்க்டிக் பகுதியுடன் இந்தியாவுக்கு மிக நீண்டகாலத் தொடர்பு உண்டு.


17. இருப்பினும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு 2007-ஆம் ஆண்டில்தான் தொடங்கியது. அப்போது இந்தியா தனது முதல் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை ஆர்க்டிக் பகுதிக்கு மேற்கொண்டது. பின்னர், 2008-ஆம் ஆண்டில் நார்வேயின் 'ஸ்வல்பார்ட்' தீவுக் கூட்டத்தில் 'இமாத்ரி' (Himadri) என்ற ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியது. 2013-ஆம் ஆண்டில் ஆர்க்டிக் சபையில் இந்தியா ஒரு பார்வையாளர் நாடாக இணைந்தது. தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் ஆறு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டு தனது அதிகாரப்பூர்வ ஆர்க்டிக் கொள்கையை இந்தியா வெளியிட்டது.


(1) இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.


(2) காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.


(3) பொருளாதார மற்றும் மனிதவள மேம்பாடு.


(4) போக்குவரத்து மற்றும் இணைப்புச் சேவைகள்.


(5) நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு.


(6) ஆர்க்டிக் பகுதியில் தேசியத் திறன் மேம்பாடு.



18. இந்தியாவின் தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையம்' (National Centre for Polar and Ocean Research (NCPOR)) 2024-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில், ஆர்க்டிக் பனி உருகுவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியான 'ராஸ்பி அலைகள்' (Rossby waves) மற்றும் 'ஜெட் காற்றோட்டங்களை' (jet streams) பாதிக்கிறது எனத் தெரியவந்துள்ளது. இதனால், இந்திய தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக மேலும் கணிக்க முடியாதபடி மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


19. எரிசக்தி வளங்கள் மற்றும் முக்கிய தனிமங்களின் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்காக, 2021-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் 'வடக்கு கடல் பாதை' (Northern Sea Route) உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2024-ஆம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வந்த 'சென்னை - விளாடிவோஸ்டோக்' (Chennai–Vladivostok) கடல்வழிப் பாதையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது. இந்தப் பாதை இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பயண நேரத்தை சுமார் இரண்டு வாரங்கள் வரை குறைக்கிறது.


ஆர்க்டிக் பெருக்கம் மற்றும் அட்லாண்டிக்மயமாதல்


1. ஆர்க்டிக் பிராந்தியம், உலகின் சராசரி வெப்ப உயர்வைவிட இரண்டு மடங்குக்கும் மேலாக மிக வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இந்நிகழ்வு 'ஆர்க்டிக் பெருக்கம்' (Arctic amplification) என்று அழைக்கப்படுகிறது. அதிக வெப்பநிலை காரணமாக நீராவியாதல் மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்பதுடன், 'வளிமண்டல ஆறுகளும்' பலமடைகின்றன. இவை வளிமண்டலத்தில் குறுகிய, நீண்ட நீராவிப் பட்டைகளாக அமைந்து, வானத்தில் பாயும் ஆறுகளைப் போலச் செயல்படுகின்றன.


2. அதிகரித்து வரும் வெப்பநிலையானது உறைபனியையும் (permafrost) உருக்குகிறது. இதனால் இரும்பு மற்றும் பிற நச்சு உலோகங்கள் வெளியேறுகின்றன. இது ஆறுகளை துருப்பிடித்தது போல் (சிவப்பு/ஆரஞ்சு நிறமாக) மாற்றுகிறது. இதனால் நீரின் தரம் குறைவதோடு, உயிரினங்களின் வாழிடங்களும் பல்லுயிர் பெருக்கமும் பாதிக்கப்படுகின்றன.


3. ஆர்க்டிக் பகுதி வழக்கமாக ஆண்டின் பெரும்பகுதியில், பனியால் மூடப்பட்டிருக்கும். 2025-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில், பனிப்பொழிவு சராசரியைவிட அதிகமாக இருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த வசந்த காலத்தில் வேகமாக உருகியது. ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டுக்குள், பனிப்பொழிவின் அளவு 1960-களில் இருந்த அளவில் பாதியாகக் குறைந்துவிட்டது. வசந்த காலத்தின் பிற்பகுதியிலும் கோடைகாலத்திலும் பனியளவு குறைவது, அதன் அடியில் உள்ள இருண்ட பரப்புகளை வெளியே காட்டுகிறது. இதனால் அப்பகுதியின் 'ஆல்படோ' (சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் திறன்) குறைகிறது. இதன் காரணமாக, அதிகளவு சூரிய ஒளி உறிஞ்சப்பட்டு, ஆர்க்டிக் பகுதியில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது.


4. கடல் பனி (Sea ice) முன்பு இருந்ததைவிட இப்போது அதிவேகமாக உருகி வருகிறது. பொதுவாக கடல் பனி மிக அதிக அளவில் பரவிக் காணப்படும் மாதமான மார்ச் மாதம் 2025-ஆம் ஆண்டில், ஆர்க்டிக் பகுதியானது தனது 47 ஆண்டுகால செயற்கைக்கோள் பதிவுகளிலேயே மிகக் குறைந்த அளவிலான கடல் பனிப் பரப்பளவைப் பதிவு செய்துள்ளது. 1980-களிலிருந்து, ஆர்க்டிக்கின் மிகவும் பழமையான மற்றும் அடர்த்தியான கடல் பனி 95 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது. இதன் விளைவாக, உருகி வரும் பனிப்பாறைகள், அதிகரித்து வரும் பெருங்கடல் வெப்பநிலை, தீவிரமான வானிலை மாற்றங்கள், அதிக அளவிலான வெப்பம் மற்றும் வரலாற்று அளவிலான குறைந்த கடல் பனி ஆகியவையே நிரந்தரமாகப் பனி உறைந்து கிடந்த இந்தப் பகுதியில், தற்போது இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் முதன்மையான காரணிகளாக இருக்கின்றன.


5. மற்றொரு குறிப்பிடத்தக்க விளைவு அட்லாண்டிக்மயமாக்கல் ஆகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் வெப்பமான நீர், ஆர்டிக் பெருங்கடலுக்குள் பரவும் ஒரு செயல்முறையாகும். முக்கியமாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இந்த நிகழ்வு, இப்போது மத்திய ஆர்டிக் பெருங்கடல் பகுதி வரை சென்றடைந்துள்ளது. இது கடல் நீர் வெப்பமடைதல், நீரின் வெவ்வேறு அடுக்குகள் ஒன்றோடொன்று கலத்தல், கடல் பனிக்கட்டிகள் உருகுதல், சுற்றுச்சூழல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் பெருங்கடல் நீரோட்ட சுழற்சி முறைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.


6. வெப்பமடைந்து வரும் ஆர்க்டிக் பகுதியில், தாவர நுண்ணுயிரிகளின் (Phytoplankton) வளர்ச்சியும் பச்சையத்தின் (Chlorophyll) அளவும் அதிகரித்து வருகின்றன. இவை மீன்வளத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கின்றன. இந்த இயற்கை மற்றும் சூழலியல் மாற்றங்கள், முக்கியமான புவிசார் அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.


Original articles: Arctic Council: Why India wants a bigger role? -Raveena Baneta

Share: