கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஒரு பண மசோதாவாக (Money Bill) நிறைவேற்றப்பட்டது. 2019-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்டபோதும் இதே வழிமுறையே பின்பற்றப்பட்டது.
இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட "உச்ச நீதிமன்ற (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026"-க்கு மாநிலங்களவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
கடந்த திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா, ஒரு 'பண மசோதாவாக' (Money Bill) நிறைவேற்றப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்டபோது இதே வழிமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், 2018-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் வழங்கப்பட்ட முக்கியமான மாறுபட்ட கருத்தில், இந்த வழியைப் பயன்படுத்துவது "அரசியலமைப்புக்குச் செய்யப்படும் துரோகம்" என்று விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் பற்றிய அறிக்கையில் (Statement of Objects and Reasons), உச்சநீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்குவது, நீதிபதிகளின் ஊதியம், உதவி ஊழியர்கள், அதிகாரப்பூர்வ இல்லங்கள், பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளுக்கான செலவினங்களைச் சார்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக நான்கு உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடங்களை உருவாக்குவது, நீதிபதிகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணபலன்களுக்கான செலவை அதிகரிக்கும். ஒவ்வொரு நீதிபதிக்கும் வாடகை இல்லாத அரசு குடியிருப்பு, இல்லம் மற்றும் அலுவலகத்திற்கான தனிப்பட்ட பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும். ஊதியம், பணியாளர்கள், வாகன வசதி மற்றும் இதர செலவுகளுக்காக ஆண்டுதோறும் ஏற்படும் தொடர் செலவு ஏறக்குறைய 10.57 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கார் வாங்குதல், அரசு குடியிருப்புகளை அலங்கரித்தல் மற்றும் பிற இதர செலவுகளுக்காக ஒருமுறை மட்டுமே செய்யப்படும் செலவு 3.47 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நான்கு கூடுதல் நீதிபதி பணியிடங்களை உருவாக்குவதற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு ஏறக்குறைய 14.04 கோடி ரூபாய் ஆகும்.
ஒரு மசோதாவை பண மசோதா (Money Bill) என்று சான்றளிக்க முடியுமா என்ற கேள்வி, உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனையில் இன்னும் நிலுவையில் உள்ள ஒரு முக்கியமான பிரச்சினையாகும். 2023-ஆம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று கூறியிருந்தார். இருப்பினும், அது இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு-110 ஒரு பண மசோதா என்றால் என்ன என்பதை விளக்குகிறது. மக்களவை அவைத் தலைவரின் கருத்துப்படி, வரிகள் அமைப்பது அல்லது திருத்துவது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி அல்லது அவசரகால நிதியிலிருந்து பொது நிதியைப் பயன்படுத்துவது போன்ற விவகாரங்கள் தொடர்பானது எதுவோ, அதுவே ஒரு பண மசோதாவாகும்.
ஒரு பண மசோதாவை (Money Bill) மக்களவையில் (Lok Sabha) மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். ஒரு மசோதாவை அவைத் தலைவர் பண மசோதா என்று சான்றளித்துவிட்டால், அதற்கு மாநிலங்களவையின் (Rajya Sabha) ஒப்புதல் தேவையில்லை. உதாரணமாக, ஒன்றிய நிதிநிலைத் திட்ட அறிக்கை ஒரு பண மசோதாவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 110(1)(a) முதல் (f) வரை குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களோடு தொடர்புடைய எந்தவொரு விஷயத்தையும் பண மசோதாவாகக் கருதலாம் என்று சட்டப்பிரிவு 110(1)(g) விளக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது முந்தைய ஆட்சிக் காலங்களில் பல முக்கிய சட்டங்களைப் பண மசோதாக்களாக நிறைவேற்ற இந்த விதியைப் பயன்படுத்தியது. இருப்பினும், மாநிலங்களவையில் அந்தச் சட்டங்களை நிறைவேற்றுவதற்குப் போதிய ஆதரவு இல்லாததாலேயே அரசு இதுபோன்ற குறுக்கு வழியில் செய்தது என்று எதிர்க்கட்சிகள் வாதிட்டன.
பணமோசடி தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act (PMLA)) உட்பட மூன்று முக்கியமான சட்டங்களின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையை இன்னும் ஒரு பெரிய அரசியலமைப்பு அமர்வு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இச்சட்டங்கள் "பண மசோதாக்களாக" (Money Bills) முறைப்படி நிறைவேற்றப்பட்டனவா என்பதை இந்த அமர்வு தீர்மானிக்கும். மற்ற இரண்டு சட்டங்கள், ஆதார் சட்டம் (Aadhaar Act) மற்றும் தீர்ப்பாயங்களின் பணி நிபந்தனைகளை மாற்றிய 2017-ஆம் ஆண்டின் சட்டத் திருத்தங்கள் ஆகும்.
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் ஆதார் சட்டத்தை பெரும்பாலான அம்சங்களில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபோதிலும், 2017-ஆம் ஆண்டின் தீர்ப்பாயச் சட்டத் திருத்தங்களை அரசியலமைப்புக்கு முரணானது எனக்கூறி ரத்து செய்தது. இருப்பினும், இந்த இரண்டு வழக்குகளிலுமே, அவை பண மசோதாக்களாகச் செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட்டனவா என்ற கேள்வி அரசியலமைப்பு அமர்வின் முடிவிற்கு விடப்பட்டது.
2018-ஆம் ஆண்டு ஆதார் வழக்கு விசாரணையில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய ஒரே நீதிபதியான டி.ஒய். சந்திரசூட், ஆதார் சட்டத்தைப் பண மசோதாவாக (Money Bill) நிறைவேற்றியதற்காக ஒன்றிய அரசை விமர்சித்தார். அவர் இதை "அரசியலமைப்புக்குச் செய்யப்படும் துரோகம்" என்றும் "ஏமாற்று வேலை" என்றும் விமர்சித்தார். இருப்பினும், ஆதார் தொடர்பான மானியங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து வழங்கப்படுவதால், இந்தச் சட்டத்தைப் பண மசோதாவாக வகைப்படுத்தியது சரியே என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர், 2019-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தத் தீர்ப்பாயச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறியதோடு, இது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. அதேநேரத்தில், அந்தச் சட்டம் 'பண மசோதாவாக' (Money Bill) செல்லுபடியாகும் வகையில் நிறைவேற்றப்பட்டதா என்ற கேள்வியை, மேலும் அரசியலமைப்பு அமர்வின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும், பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆதார் சட்டத்தை செல்லுபடியாகும் என உறுதிசெய்த, 2018-ஆம் ஆண்டைய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சரியானதா என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
Original articles: Money Bill route pending before Supreme Court, Government chooses it to raise strength of judges. -Apurva Vishwanath