கைத்தறி — இந்தியாவின் பாரம்பரியத்தை உலகளாவிய வளர்ச்சியுடன் இணைத்தல் - கிரிராஜ் சிங்

 இந்தியாவின் பழமையான கைத்தறி மரபுகள், நாட்டின் பாரம்பரியத்தை உலக அளவில் போட்டியிடக்கூடிய ஒரு ஆக்கப்பூர்வமான பொருளாதாரமாக மாற்றும் வல்லமை கொண்டவை.


ஒரு வளர்ந்த நாட்டை உருவாக்குவது என்பது தொழில்நுட்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை, நாட்டில் நீடித்திருக்கும் பலங்களை எதிர்கால வளர்ச்சியின் உந்துசக்திகளாக மாற்றும் திறனே அதை வடிவமைக்கிறது. 'வளர்ந்த இந்தியா-2047' (Viksit Bharat) இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில், அது அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யவும், உற்பத்தித் துறையை வலுப்படுத்தவும், உலக அளவில் போட்டியிடக்கூடிய தொழில்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.


இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகத் திகழ்வது அதன் கைத்தறி மரபுதான். நாட்டின் வரலாறு முழுவதும் இம்மரபு தொடர்ந்து பயணித்து வந்துள்ளது. ஆகஸ்ட் 7 அன்று இந்தியா தனது 12-வது தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடும் வேளையில், நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் உறுதியான விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இன்றைய உலகிற்கு, கைத்தறியை ஒரு முக்கிய உத்திசார் துறையாகப் பார்க்க வேண்டிய தருணம் இதுவாகும்.


பிரதமர் நரேந்திர மோடியின் 'வளர்ந்த இந்தியா-2047' (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வையானது வளங்கள், தன்னிறைவு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கலாச்சார நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மற்றும் புதுமை ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் கைத்தறித் துறையானது இத்தொலைநோக்குப் பார்வையைச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. அதேவேளையில், இது பெண்களின் தலைமையிலான வளர்ச்சி, கிராமப்புற தொழில்முனைவு, வாழ்வாதாரம் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது.

இந்தியாவின் பாரம்பரிய நூலிழைகள் (Threads)


கைத்தறியால் நெய்யப்பட்ட ஒவ்வொரு துணியும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான துணிச்சலையும், ஒவ்வொரு நூலிழையையும் செம்மைப்படுத்துவதற்கான பொறுமையையும், நேர்மையான கைவினைத்திறனையும், தலைமுறைகளாகக் கடத்தப்பட்ட ஞானத்தையும் பிரதிபலிக்கிறது. அதனால்தான் கைத்தறி என்பது வெறும் ஒரு கைவினைத் தொழில் மட்டுமல்ல, அது இந்தியாவின் மிகச்சிறந்த நாகரிக வலிமைகளில் ஒன்றாகும். பருத்தி முதன்முதலில் பயிரிடப்பட்டு நெய்யப்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் முதல், இந்தியத் துணிகள் உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய 18-ம் நூற்றாண்டு வரை, ஜவுளித் துறையின் சிறப்பம்சங்களில் இந்தியா உலகளாவிய அளவுகோல்களை அமைத்தது. 25 மீட்டர் நீளமுள்ள துணியை ஒரு மோதிரத்தின் வழியாகச் செலுத்தக்கூடிய அளவுக்கு மென்மையான வங்காளத்தின் புகழ்பெற்ற 'மஸ்லின்' (muslin) துணி முதல், பனாரஸ் பட்டு, காஞ்சிபுரம் நெசவுகள், போச்சம்பள்ளி இக்கத் (Ikat) மற்றும் எண்ணற்ற பிராந்திய மரபுகள் வரை அனைத்தும் இந்தியாவிற்கு உலகளாவிய பாராட்டைப் பெற்றுத் தந்தன.


இன்று, உலகம் நம்பகமான, நிலையான மற்றும் கையால் செய்யப்பட்ட தயாரிப்புகளை நோக்கித் திரும்பும் வேளையில், அந்தத் தலைமைத்துவத்தை மீண்டும் நிலைநாட்ட இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் அடுத்தகட்ட கைத்தறிப் புரட்சியானது வெறும் துணிகளை மட்டுமல்லாமல், கைவினைத்திறன், பாரம்பரியம், புதுமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றையும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கைத்தறித் தயாரிப்பும் 'பிராண்ட் இந்தியா'வின் (Brand India) தூதுவராகத் திகழ வேண்டும்.


கொள்கைரீதியான மாற்றம்


கைத்தறி என்பது இந்தியாவின் மிகப்பெரிய குடிசைத் தொழிலாகும். இது 35 லட்சத்திற்கும் அதிகமான நெசவாளர்கள் மற்றும் கைத்தறி சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது. இவர்களில் ஏறக்குறைய 72% பேர் பெண்கள் ஆவர். கடந்த பத்தாண்டுகளில், அரசாங்கம் மூலப்பொருள் விநியோகத் திட்டம், 797 கைத்தறித் தொகுப்புகள் (clusters), 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட தறிகள், ஏறக்குறைய 97,000 கைவினைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள், புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள், கைத்தறி முத்திரை, இந்தியா ஹேண்ட்மேட் சான்றிதழ், நகர்ப்புற சந்தைகள் மற்றும் வடிவமைப்பு வள மையங்கள் போன்ற முன்னெடுப்புகள் மூலம் இத்துறையை வலுப்படுத்தியுள்ளது.


இன்று, 29 நெசவாளர்கள் சேவை மையங்கள் பயிற்சி, திறன் மேம்பாடு, வடிவமைப்பு உருவாக்கம், மூலப்பொருள் உதவி மற்றும் சந்தை இணைப்புகள் மூலம் முழுமையான ஆதரவை வழங்குகின்றன. அதேநேரத்தில், மேம்பட்ட பயிற்சியை விரிவுபடுத்தவும், தனித்துவமான மற்றும் உயர் மதிப்புள்ள கைத்தறிப் பொருட்களை உருவாக்கவும் 11 இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் தேசிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் திட்டம், 500-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 1,800 தொகுப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் இந்த மாற்றத்தை விரைவுபடுத்தும். இது 65 லட்சம் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்குப் பயனளித்து, 'ஹேண்ட்மேட் இன் இந்தியா' (Handmade in India) என்பதை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வர்த்தக முத்திரையாக நிலைநிறுத்தும்.


மகாத்மா காந்தியின் அம்பர் சர்க்கா (Ambar Charkha), நூல் நூற்கும் பணியை எளிதாகவும், வேகமாகவும், அதிகத் திறன் கொண்டதாகவும் மாற்றி, தன்னிறைவு என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல உதவியது.


சமீபத்தில், அசாமின் மைனா தறியும் (Maina Loom), சிவசாகரில் உருவாக்கப்பட்ட சித்ரஞ்சன் கைத்தறியும் (Chitranjan Handloom), மேம்பட்ட தறி வடிவமைப்பு நெசவை எவ்வாறு எளிதாகவும் அதிக உற்பத்தித்திறனுடனும் மாற்றும் என்பதைக் காட்டியுள்ளன. இந்திய தொழில்நுட்பக் கழகங்களுடன் (Indian Institutes of Technology (IIT)) இணைந்து நிறுவப்பட்ட கைத்தறி தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையம், உடல் உழைப்பைக் குறைத்து, மாற்றுத்திறனாளிகள் உட்பட உற்பத்தித்திறனை மேம்படுத்தும் இலகுவான, வலிமையான மற்றும் பயன்படுத்த எளிதான தறிகளை உருவாக்கி வருகிறது. இந்த மையத்தின் கீழ், கைத்தறி-4.0 முன்முயற்சியானது, உற்பத்தித்திறன், தரம் மற்றும் பராமரிப்பைக் கண்காணிக்க டிஜிட்டல் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. மேலும், இது மாநிலங்கள் முழுவதும் விரிவுபடுத்துவதற்கு முன்பு 100 தறிகளில் சோதனை அடிப்படையில் முன்னோட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது.


தொழில்நுட்பம் கைவினைஞர்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, அவர்களை இடமாற்றம் செய்வதாக (அவர்களுக்குப் பதிலாக அமைவதாக) இருக்கக்கூடாது. விசியோஎன்எக்ஸ்டி (VisioNXT) போன்ற தளங்கள், சந்தை தேவையை முன்கூட்டியே கணிக்கவும், புதிய வடிவமைப்புப் போக்குகளைக் கண்டறியவும், உண்மையான கைத்தறிப் பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், நெசவாளர்களை உலகளாவிய சந்தைகளுடன் நேரடியாக இணைக்கவும் உதவும். அதே நேரத்தில், உயர்தர பட்டு, இயற்கை இழைகள், நீடித்த இழைகள் (sustainable fibres) மற்றும் புதுமையான கலவைகள் என தயாரிப்புகளை பல்வகைப்படுத்துவது, உயர் மதிப்புள்ள தயாரிப்புகளை உருவாக்கி புதிய சந்தைகளைத் திறக்கும். சிறந்த வர்த்தக முத்திரை, மதிப்புக்கூட்டல் மற்றும் நேரடி சந்தை அணுகல் ஆகியவற்றுடன் இணைந்த இந்த புதுமைகள், நெசவாளர்களின் வருமானத்தை கணிசமாக உயர்த்தும். வரும் ஆண்டுகளில் மாதம் ₹50,000 என்ற இலக்குடன், ஒவ்வொரு நெசவாளரும் கண்ணியமான மற்றும் விரும்பத்தக்க வருமானத்தை ஈட்ட வழிவகுப்பதே இதன் தொலைநோக்குப் பார்வையாகும்.


இந்தியாவின் அடையாளம்


இந்தியாவின் நெசவாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் தொழில்முனைவோர், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் மதிப்பை உருவாக்குபவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் சொந்த வணிக முத்திரைகளை (brands) உருவாக்கவும், மதிப்புச் சங்கிலியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், உலகளாவிய சந்தைகளை அடையவும் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், கைத்தறியை இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க படைப்பாற்றல் தொழில்களில் ஒன்றாக மாற்ற முடியும். இது, பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும், படைப்பாற்றலையும் தொழில்முனைவையும் ஒன்றிணைத்து, கைத்தறியின் அடுத்த அத்தியாயத்தை வடிவமைக்குமாறு இந்திய இளைஞர்களுக்கு விடுக்கப்படும் ஓர் அழைப்புமாகும்.



இந்த தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் நெசவாளர்களை நமது பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக மட்டுமல்லாமல், இந்தியாவின் முன்னேற்றத்தின் சிற்பிகளாகவும் கொண்டாடுவோம். நாம் வாங்கி அணியும் ஒவ்வொரு கைத்தறித் தயாரிப்பும் ஒரு நெசவாளரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துகிறது. காலத்தால் அழியாத பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது மற்றும் இந்தியாவின் கதையை உலகிற்கு எடுத்துச் செல்கிறது.


கிரிராஜ் சிங், இந்திய அரசின் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆவார்.


Original articles: Handloom — weaving India’s heritage into global growth -Giriraj Singh

Share: