முக்கிய அம்சங்கள்:
• மத்திய வங்கி தனது கொள்கை நிலைப்பாட்டை நடுநிலையாக வைத்திருந்தாலும், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாகச் சற்றே உயர்த்தியுள்ளது. அதேவேளையில், பணவீக்கக் கணிப்பை 5.1 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைத்துள்ளது. குறுகிய கால அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டுக்குள் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது.
• ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான, 6 உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம், தற்போதைக்கு கடன் மற்றும் வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
• வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன் பெற்றிருப்பவர்களுக்கான மாதாந்திரத் தவணைத் தொகையில் மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. வங்கிகள் தாங்களாகவே முன்வந்து வட்டி விகிதங்களை மாற்றியமைக்கத் தீர்மானித்தாலே தவிர, நிலையான வைப்புநிதி (Fixed Deposit) மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களையும் தற்போதைக்கு மாற்றாமல் வைத்திருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
• உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்றத் தன்மை அதிகரித்து வரும் நேரத்தில் ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இது இந்தியாவுக்கு பணவீக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பாலானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. எரிபொருள் விலையானது போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கும், இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது மேலும் கடினமாகிறது.
• பணவியல் கொள்கையை (Monetary policy) அறிவிக்கும்போது, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைப் பாதித்து வருவதால், ரிசர்வ் வங்கி தனது தற்போதைய கொள்கையைத் தொடர முடிவு செய்துள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்தார். மேலும், மேற்கு ஆசிய மோதலின் தீவிரம் மற்றும் நிச்சயமற்றத் தன்மைக்கு ஏற்ப, நிதிச் சந்தைகள் தொடர்ந்து நிலையற்றதாகவே இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
• ஒட்டுமொத்தப் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் நடுத்தர கால இலக்கைவிட அதிகரித்துள்ள போதிலும், இந்த உயர்வுக்குப் பொதுவான ஒட்டுமொத்த நுகர்வோர் தேவையைவிட, உணவு மற்றும் எரிபொருளின் விலை உயர்வே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
• அளவுக்கு அதிகமான பணவீக்கம் குறித்த கவலைகள் நிலவுவதால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஜூலை மாதம் 29-ஆம் தேதி தனது வட்டி விகித இலக்கை 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் என்ற அளவிலேயே மாற்றமில்லாமல் தக்கவைத்துக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருந்தாலும் வட்டி விகிதங்களை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்கும் இந்த உலகளாவிய போக்கைப் பின்பற்றி, பிற முக்கிய மத்திய வங்கிகளும் தற்போதைக்கு ‘காத்திருந்து கவனிக்கும்’ (wait-and-watch) அணுகுமுறையையே கையாண்டு வருகின்றன. இந்தச் சூழலில்தான், இந்திய ரிசர்வ் வங்கியும் தனது எச்சரிக்கையான அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.
• பணவியல் கொள்கைக் குழு (MPC) என்பது ரிசர்வ் வங்கியின் ஆளுநரைத் தலைவராகக் கொண்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முக்கிய 'ரெப்போ வட்டி விகிதத்தை' (Repo Rate) தீர்மானிக்கிறது. 2016-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவில், ரிசர்வ் வங்கியின் மூன்று அதிகாரிகளும், அரசால் நியமிக்கப்பட்ட மூன்று வெளி உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.
• 5.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) என்பது, வணிக வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கு 5.25 சதவீத வட்டி வசூலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. இந்த வட்டி விகிதமே நாட்டின் நிதி அமைப்பிற்கான முதன்மை வழிகாட்டியாகச் செயல்படுகிறது. தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 5.25 சதவீதமாகத் தொடர்வதால், கடன்களுக்கான வட்டிச் செலவும் மாறாமல் ஒரே அளவாகவே இருக்கும். எனவே மாதாந்திர கடன் தவணைகளிலும் மற்றும் நிலையான வைப்புத்தொகைக்கான (Fixed Deposit) வட்டி வருவாயிலும் உடனடியாக எந்த மாற்றமும் இருக்காது.
Original articles: How repo rate affects economy? -Priya Kumari Shukla