கவனம் பெறும் காட்டு எருமை இனம் : தன் மாநில விலங்கைப் பாதுகாக்க சத்தீஸ்கர் மாநிலம் ஏன் தீவிரமாகச் செயல்படுகிறது? - ரோஷ்னி யாதவ்

 சத்தீஸ்கர் மாநிலம், காட்டு எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அசாமில் இருந்து காட்டு எருமைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், இது ஏன் தேவைப்படுகிறது? காட்டு எருமைகளின் பாதுகாப்பு நிலை (Conservation Status) என்ன? காட்டு எருமை மீட்புத் திட்டம் (Wild Buffalo Recovery Project) என்றால் என்ன? 


கடந்த சில  ஆண்டுகளாக காட்டு எருமைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதால், அசாமில் இருந்து காட்டு எருமைகளை இங்கு கொண்டுவந்து, பாமேத் வனவிலங்கு சரணாலயம் (Pamed Wildlife Sanctuary), உடந்தி சீதாநதி புலிகள் காப்பகம் (Udanti Sitanadi Tiger Reserve) மற்றும் இந்திராவதி புலிகள் காப்பகம் (Indravati Tiger Reserve) ஆகியவற்றில் உள்ள பாதுகாக்கப்பட்ட காப்பகங்களில் பராமரிக்க சத்தீஸ்கர் மாநில வனத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் பின்னணியில், காட்டு எருமைகளைப் பற்றியும், சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்ற பிற உயிரினங்களின் வெற்றிகரமான பாதுகாப்பு முயற்சிகள் பற்றியும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. காட்டு எருமை சத்தீஸ்கர் மாநிலத்தின் மாநில விலங்காகும். வேறு இடத்திற்கு கொண்டு சென்று பராமரிப்பது, அவற்றின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


2. ஆசியக் காட்டு எருமை உலகிலேயே மிகப்பெரிய காட்டு மாடு வகை (bovine) விலங்காகும். இது அதன் மெலிந்த உடலமைப்பு கொண்ட வீட்டு எருமை மாடுகளைவிட இருமடங்கு எடை கொண்டது. உலகின் மொத்த காட்டு நீர் எருமை தொகையில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை (சுமார் 3,500 முதல் 3,700 வரை) இந்தியாவில்தான் உள்ளன. இவை முக்கியமாக வடகிழக்கு இந்தியா மற்றும் மத்திய இந்தியா ஆகிய இரண்டு தனித்தனி பகுதிகளில் பரவியுள்ளன. இந்தியாவின் பெரும்பாலான காட்டு எருமைகள் அசாம் மாநிலத்தில் உள்ள பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாழ்கின்றன. இது தவிர, மேகாலயா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாமார்கா காடுகளிலும் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன.


3. மத்திய இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு காலத்தில்   பரவலாகக் காணப்பட்ட இவை, இன்று சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சிறிய கூட்டங்களாக மட்டுமே வாழக்கூடிய அளவுக்கு எண்ணிக்கை குறைந்துவிட்டன.


4. 2005-ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (Wildlife Trust of India (WTI)) வெளியிட்ட அறிக்கையின்படி, உடந்தி-சீதாநதி புலிகள் காப்பகம் (USTR), இந்திராவதி புலிகள் காப்பகம் (ITR) மற்றும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாமேடு (Pamed) ஆகிய பகுதிகளில் 39 முதல் 47 காட்டு எருமைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது அவற்றின் எண்ணிக்கை மேலும் குறைந்து, வெறும் 12 முதல் 16 வரை மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


5. காட்டு எருமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சத்திஸ்கர் மாநில வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 2015-ஆம் ஆண்டில், 'தீபாஷா' (Deepasha) என்ற மரபணு நகலாக்க (cloning) முறையில் உருவாக்கப்பட்ட பெண் காட்டு எருமையின் மீது வனத்துறை பெரும் நம்பிக்கை வைத்திருந்தது. எனினும், அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.


6. அசாமில் இருந்து காட்டு எருமைகளைக் கொண்டுவந்து, பாமேட் வனவிலங்கு சரணாலயம், உடந்தி சீதாநதி புலிகள் காப்பகம் (USTR) மற்றும் இந்திராவதி ஆகிய இடங்களில் உள்ள சரணாலயங்களின் பராமரிப்பதே புதிய திட்டம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், அசாமில் இருந்து பர்னவபாரா வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆறு காட்டு எருமைகள் கொண்டுவரப்பட்டன. 2020-ஆம் ஆண்டில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் எருமை, மேலும், 2023-ஆம் ஆண்டில் நான்கு பெண் எருமைகள் கொண்டுவரப்பட்டு, அங்குள்ள காட்டு எருமைகளின் எண்ணிக்கை 11-ஆக உயர்த்தப்பட்டது.


காட்டு எருமையின் பாதுகாப்பு நிலை


7. இந்தியாவில், 1972-ஆம் ஆண்டின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் (Wildlife (Protection) Act, 1972) அட்டவணை I-ன்கீழ் (Schedule I), காட்டு எருமைக்கு மிக உயர்ந்தபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

8. இவ்வகையான உயிரினங்களின் நிலையைத் தெரிவிக்கும் 2016-ஆம் ஆண்டின் 'சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்க' (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்புப் பட்டியல், இதனை "அழிவாய்ப்புள்ள உயிரினம்" (Endangered) என்ற பிரிவில் வைத்துள்ளது. 


காட்டு எருமை மீட்புத் திட்டம்


9. காட்டு எருமை மீட்புத் திட்டம் என்பது இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (Wildlife Trust of India (WTI)) மற்றும் சத்தீஸ்கர் வனத்துறை இணைந்து செயல்படும் ஒரு நீண்டகால வனவிலங்கு பாதுகாப்பு முயற்சியாகும்.


10. மத்திய இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள காட்டு எருமைகளின் எண்ணிக்கையை மீண்டும் பெருக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது, சத்தீஸ்கரில் உள்ள உடந்தி-சீதாநதி புலிகள் காப்பகத்தில், இயற்கையான வாழிடங்களிலும் அதற்கு வெளியிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


11. இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI), வனத்துறையுடன் இணைந்து ஐந்து ஆண்டுகளுக்கான பாதுகாப்புச் செயல்பாட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்கியது. காட்டு எருமைகளின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யப் பலமுனை அணுகுமுறைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஆட்சி மன்றக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஐந்து ஆண்டுத் திட்டம், மூன்று முதன்மை நோக்கங்களைக் கொண்டது, அவை: 


(i) எஞ்சியிருக்கும் காட்டு எருமைகளுக்கு இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்படும் இறப்புகளை முற்றிலுமாகத் தடுத்தல்.


(ii) வாழிடத்தை மேம்படுத்துதல்.


(iii) நெருங்கிய தொடர்புடைய இனங்களிலிருந்து (குறிப்பாக பெண் விலங்குகளை) கொண்டுவந்து சேர்ப்பதன் மூலமாகவோ அல்லது பாதுகாப்பு இனப்பெருக்க முறைகள் மூலமாகவோ அவற்றின் தொகையை அதிகரித்தல்.



இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை 


1. குஜராத் மாநிலத்தின் கிர் (Gir) காடுகளில் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு வெற்றிச் சாதனை அமைதியாக நிகழ்ந்துள்ளது. 1950-கள் மற்றும் 1960-களில் அப்பகுதியில் முற்றிலுமாக அழிந்துபோன "இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை" (Indian Grey Hornbill), பின்னர் அரசின் முயற்சியால் அங்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அது தன் வாழிடங்களை வெற்றிகரமாக அமைத்துக்கொண்டு, குஞ்சுகளையும் பொரித்து இனப்பெருக்கம் செய்துள்ளது.


2. இந்தியச் சாம்பல் இருவாச்சி (அறிவியல் பெயர்: Ocyceros birostris) தனது கொம்பு போன்ற விசித்திரமான அலகினால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. ஆண் பறவையின் மேல் அலகில் பெரிய, கூர்மையான கருமை நிறக் கொண்டை (Casque) இருக்கும். ஆனால், பெண் பறவைக்குச் சிறிய அளவு கொண்டையே இருக்கும். இதன் அலகு பழுப்பு-கருப்பு மற்றும் தந்த வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும்.


3. இந்தியச் சாம்பல் இருவாச்சி பறவைகள் (Indian Grey Hornbills) முக்கியமாகப் பழங்கள் மற்றும் சிறிய விதையுள்ள பழங்களையே உணவாகக் கொள்கின்றன. இது விதைகள் பல்வேறு பகுதிகளுக்குப் பரவவும், காடுகளின் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. குறிப்பாக, அத்தி மரங்களின் விதைகளைப் பரப்புவதில் இவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை தவிர, பூச்சிகள், பல்லிகள், நத்தைகள், எலிகள் மற்றும் பறவைக் குஞ்சுகளையும் இவை உணவாக உட்கொள்கின்றன.


4. இதன் பெயருக்கேற்ப, இந்தியச் சாம்பல் இருவாச்சிப் பறவை (Indian Grey Hornbill) சாம்பல் நிற உடலையும், கருப்பு நிற அடிப்பகுதியைக் கொண்ட மஞ்சள் நிற அலகையும், கருப்பு மற்றும் வெள்ளை நிற முனைகளைக் கொண்ட வாலையும், அலகின் மேல் ஒரு சிறிய முடிச்சு (casque) போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது. இது 50 சென்டிமீட்டர் நீளமும், சுமார் 370 முதல் 400 கிராம் எடையும் கொண்டது. மேலும், இது 10 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. இது 2 முதல் 4 முட்டைகள் வரை இடும்.




5. இவை பொதுவாக மரங்களின் மிக உயரமான நுனிக்கிளைகளில் அமர்ந்திருக்கும், அதனால் மரத்தின் அடியில் நின்று கொண்டு இவற்றைப் பார்ப்பது கடினம். சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் இவை 'குறைந்த கவலைக்குரியவை' (Least Concern) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்தியச் சாம்பல் நிற இருவாச்சிப் பறவை சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் மாநிலப் பறவை என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


6. உலகளவில் உள்ள 54 இருவாச்சிப் பறவை இனங்களில், 9 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. மேலும், இந்தியாவில் உள்ள 9 இருவாச்சிப் பறவை இனங்களில், வடகிழக்கு இந்தியப் பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான இருவாச்சி பறவை இனங்கள் வாழ்கின்றன.


Original articles:Wild Buffalo in focus: Why Chhattisgarh is racing to save its state animal. -Roshni Yadav

Share: